ஆய்வு: கனடாவில் தமிழ் இலக்கியம்

அகில்

ழத்து இலக்கியப் பரம்பலின் முக்கிய வகிபாகமாக விளங்குவது புலம்பெயர் இலக்கியம். அதன் வகை தொகையற்ற பெருக்கம்; அவற்றை நாடுகள் ரீதியாகப் பிரித்துப் பார்க்கவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. புலம்பெயர் இலக்கியத்தின் ஆழ்ந்தகன்ற வெளிப்பாடு மட்டுமன்றி அவற்றின் களம், பேசுபொருள் ஆகியவையும் அவை பற்றிய தனித்தனியான பார்வையின் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்தவகையில் கனடா தமிழ் இலக்கியம், அவுஸ்ரேலியா தமிழ் இலக்கியம், நோர்வே தமிழ் இலக்கியம், இங்கிலாந்து தமிழ் இலக்கியம், பிரான்ஸ் தமிழ் இலக்கியம்; என நாடுகளை எல்லையாகக் கொண்டு புலம்பெயர் படைப்பிலக்கியம் வகுக்கப்படுகிறது.

கனடா புலம்பெயர் படைப்பிலக்கியத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் கனடாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களுடன் புதிய இளம் எழுத்தாளர்களும் கைகோர்த்து பெரும் படைப்பிலக்கியத் துறையாக கனடா தமிழ் இலக்கியம் விரிவுகண்டிருக்கிறது. சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை, நாடகம், கூத்து, திரைப்படம், சிறுவர் இலக்கியம், பத்தி எழுத்து என பல்வேறு வடிவங்களில் படைப்பாளிகள் தமது பங்களிப்பை வழங்கிவருகிறார்கள்.

கனடா தமிழ் இலக்கியம் பற்றிய ஆரம்பக் கட்டுரையாக, என்னால் முடிந்தவரை கனடாவில் படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டிருக்கின்ற சகலரையும், சகல படைப்புக்களையும் பதிவுசெய்யும் ஒரு முயற்சியாக இக்கட்டுரை அமைகிறது.

கவிதை:
மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீனகவிதை, ஹைக்கூகவிதை எனப் பல பரிணாமங்கள் கண்ட கவிதை வரலாறு புகலிடக் கவிதை என்னும் புதியகவிதைக் களத்தில் சர்வதேசத் தன்மையோடு முற்றிலும் மாறுபட்ட புத்துலகக்கவிதையாய் இன்று நெடிதுயர்ந்து நிற்கிறது. இழப்புக்கள், வேதனைகள், விசும்பல்கள், விரக்தி, பெருமூச்சுக்கள், பொருமல்கள், காணாமல்போதல்கள், அகதிப்பயணம், கடத்தல்கள், எல்லைதாண்டிய பதுங்கல்கள், அந்நியதேசம், புரியாதமொழி, புதுக்கலாச்சாரம், பழக்கப்படாத காலநிலை என்று புலம்பெயர் ஈழத்தமிழனின் வாழ்வின் பல்வேறு அனுபவ அங்கங்களும் அவனுடைய இலக்கியத்தின் கச்சாப்பொருளாகவும் வெளிப்படுகின்றன. கவிதை அதற்கு அனுசரணையான வடிவமாக பெரும்பாலும் கையாளப்பட்டிருக்கிறது. மதுக்கோப்பையில் மிதந்தோடும் மதுவைப் போல புலம்பெயர் படைப்பாளிகளின் கவிதைகளின் உணர்வுகளும் பொங்கிப் பிரவாகிப்பன.

கனடாவின் இலக்கிய, சமய விழாக்களில் பெரிதும் களைகட்டி நிற்பது கவியரங்க நிகழ்வுகள்தான். புலம்பெயர் வாழ்வின் அவதியில் கிடைக்கின்ற சிறுபொழுதுக்குள் கவியரங்கக் கவிதைகள் படைப்பதும் இலகுவாகவே இருக்கிறது. கவிதையின்பால் ஈடுபாடு கொண்டவர்கள் இணைந்து கவிதை வகுப்புக்கள், கவிதை எழுதுவது எப்படி என்பது தொடர்பான கருத்தரங்குகள் என்பனவும் அவ்வப்போது நடாத்துவார்கள். வானொலி நிகழ்வுகளிலும் கவிதைக்குத் தனியிடம் இருக்கிறது. கனடாவில் வாழும் கவிஞர்களின் தொகையும் அதிகம்தான். அந்தவகையில் கவிஞர் வி.கந்தவனம், தீவகம் வே.இராஜலிங்கம், அனலை ஆறு இராசேந்திரம், சேரன், செழியன், திருமாவளவன், சக்கரவர்த்தி, இரா. சம்பந்தன், இராஜமீரா இராசையா, சபா அருள்சுப்பிரமணியம், மா.சித்திவினாயகம், வீணைமைந்தன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

இவர்களில் வி.கந்தவனம், தீவகம் வே.இராஜலிங்கம், அனலை ஆறு. இராசேந்திரம், இரா.சம்பந்தன் ஆகியோர் மரபுக்கவிதையை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்கள். வி.கந்தவனம் கனடிய தேசியகீதத்தை தமிழில் மொழிபெயர்ந்தவர். தமிழிலும், ஆங்கிலத்திலுமாக பல கவிதைத்தொகுப்புக்கள் உட்பட ஐப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்ட கனடாவாழ் மூர்த்த கவிஞர். இலக்கிய உலகம், ஏன் இந்தப் பெருமூச்சு? , கீரிமலையினிலே! , நல்லூர் நாற்பது , பாடு மனமே, உய்யும் வழி, கவியரங்கில் கந்தவனம் ,
Hail, The Tamil Tigers!,  விநாயகப்பா, ஒன்று பட்டால், மணிக்கவிகள், இயற்கைத் தமிழ் , ஆறுமுகம், Lasting Light,  ஓ கனடா!, வரிக்கவிகள், பொங்கு தமிழ் என்பன இவரது கவிதைத் தொகுப்புகள். கூனியின் சாதனை, நுணாவிலூர், எழுத்தாளன், முத்தான தொண்டர், கவிதை மரபு, தென்னகத்தில் என்னகத்தார் என்பன இவரது கட்டுரைத்தொகுப்புகள். இவர் சில சிறுகதைத் தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார். 12 Shortstories,  அது வேறுவிதமான காதல் என்பன அவையாகும். 1 1/2 ரூபாய் என்னும் பெயரில் ஒரு நாவலும் எழுதியுள்ளார்.

தீவகம் வே.இராஜலிங்கம் மரபுக்கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர். சமயம் சார்ந்த சில நூல்களையும் எழுதியுள்ளார். அகவைப்பா, நிலப்பூக்கள் என்பன இவரது கவிதைத் தொகுப்புக்கள். கவிதா நிகழ்வுகள், வானொலி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கவிபாடி வருகிறார். இவர் பத்திரிகை, சஞ்சிகைகளில் கட்டுரைகளும் எழுதிவருகிறார். இவர் நம்நாடு என்ற பத்திரிகையை சிலகாலங்கள் நடத்தினார். இப்போது அதன் வரவு நின்றுவிட்டது.

அனலை ஆறு இராசேந்திரம் அனலைதீவு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கவிதை, இலக்கியக் கட்டுரை என தனது எழுத்துப்பணியைத் தொடர்கிறார். பூமழை இவரது கவிதைத் தொகுப்பாகும். இவர் கட்டுரைத் தொகுப்பொன்றும் வெளியிட்டுள்ளார். கனடாவில் அடிக்கடி நடைபெறும் கவியரங்குகளில் கவிபாடுவதோடு, இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொள்பவர்.

புதுக்கவிதை, நவீன கவிதை புனைவதில் தம்மை ஈடுபடுத்திகொண்டு வருபவர்களாக சேரன், செழியன், திருமாவளவன், சக்கரவர்த்தி ஆகியோரைக் குறிப்பிடலாம். சேரன் ஈழத்தின் நவீன கவிதையின் முதல்வரான மஹாகவியின் புதன்வன். சர்வதேசரீதியில் நன்கறியப்பட்ட தமிழ்க் கவிஞர்களில் ஒருவர். வின்சர் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகச் சமூகவியல், மானுடவியல் மற்றும் குற்றவியல் துறைகளை உள்ளடக்கிய பிரிவில் பணிபுரிபவர். இரண்டாவது சூரிய உதயம், யமன், கானல்வரி, எலும்புக்கூடுகளின் ஊர்வலம், எரிந்துகொண்டிருக்கும் நேரம், நீ இப்பொழுது இறங்கும் ஆறு, மீண்டும் கடலுக்கு, காடாற்று, உயிர் கொல்லும் வார்த்தைகள் ஆகிய கவிதை நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். இவற்றுள் இரு கவிதைத் தொகுப்புகளை, எரிந்து கொண்டிருக்கும் நேரம் -
In a time of burning என்ற பெயரிலும், இரண்டாவது சு10ரிய உதயம் - A second sunrise  என்ற பெயரிலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். பேராசிரியர் செல்வா கனகநாயகத்தால் மொழிபெயர்க்கப்பட்ட இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பது கவிதைகளின் தொகுதி You cannot turn away  என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. சேரன் கவிதை மட்டுமன்றி சிறுகதைத் துறையிலும் ஈடுபாட்டுடன் செயற்படுபவர். இவரது கவிதைகள் ஆங்கிலத்தில் மட்டுமல்லாது சிங்களம், ஜேர்மன், டச்சு ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கபட்டுள்ளன. உயிர் கொல்லும் வார்த்தைகள் என்ற கட்டுரைத்தொகுப்பையும் இவர் வெளியிட்டுள்ளார்.

முப்பத்தியிரண்டு கவிஞர்களின் கவிதைத்தொகுப்பாக வெளிவந்த மரணத்துள் வாழ்வோம் கவிதைத் தொகுப்பில் தனது கவிதைகள் இடம்பெற்றதைத்தொடர்ந்து கவிஞராக அடையாளப்படுத்தப்பட்டவர் செழியன். இதுவரை ஐந்து கவிதைத்தொகுதிகளும், இரண்டு நாடகத் தொகுப்புகளும், ஒரு மனிதனின் நாட்குறிப்புகள் என்ற சுயவரலாறும், வானத்தைப் பிளந்த கதை என்ற நாவலையும் தந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வருத்தலைவிளானைப் பிறப்பிடமாகக் கொண்டவர் கனகசிங்கம் கருணாகரன். இவர் திருமாவளவன் என்ற புனைபெயரில் கவிதைகள் படைத்துவருகிறார். மூன்று கவிஞர்கள் சேர்ந்து வெளியிட்ட யுத்தத்தை தின்போம்; என்ற கவிதைத்தொகுப்பில் இவரது கவிதை இடம்பெற்றதோடு பனிவயல் உழவு, அஃதே இரவு அஃதே பகல், இருள் யாழி ஆகிய மூன்று கவிதைத்தொகுப்புகளை இவர் வெளிக்கொண்டுவந்துள்ளார். கனடா இலக்கியத்தோட்டம்; இவரது இருள் யாழி கவிதைத்தொகுப்புக்கு 2010ஆம் ஆண்டு விருது கொடுத்து கௌரவித்துள்ளது.

நிலா குகதாசன் இளம்வயதிலேயே அமராகிவிட்டார். எனினும் கனடா தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடப்படவேண்டிய முக்கியமான படைப்பாளி. சிறுகதை, கவிதை, நாடகம், நடிப்பு, விமர்சனம் என பலதுறைகளிலும் தடம்பதித்தவர். இவர் இன்னொரு நாளில் உயிர்ப்பேன் என்ற தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

சக்கரவர்த்தி யுத்த சன்னியாசம் என்ற கவிதைத்தொகுப்பையும், யுத்தத்தின் இரண்டாம் பாகம் என்ற சிறுகதைத்தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். மூன்று கவிஞர்கள் சேர்ந்து வெளிக்கொண்டுவந்த யுத்தத்;தைத் தின்போம் என்ற கவிதைத்தொகுப்பிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கவிதை மட்டுமன்றி கட்டுரை, சிறுகதைகளும் எழுதுபவர்.

மா.சித்திவினாயகம் கவிதை மட்டுமன்றி கலை, இலக்கியக் கட்டுரைகளும் எழுதுபவர். கனடாவின் ஆரம்பகாலக் கவிஞர்களுள் ஒருவர். தீ, அஞ்சுவது அஞ்சாமை பேதமை ஆகிய இரண்டு கவிதைத்தொகுப்புகளையும், காலிமண்டபமும் கடவுள்களும் என்ற சிறுகதைத்தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். இவர் இப்போது எழுத்துத் துறையிலிருந்து ஒதுங்கியிருப்பதாகத் தெரிகிறது.

கவிஞர் ஆனந்த பிரசாத்
1975 இல் எழுத்துலகில் பிரவேசித்தவர். மொன்றியலில் வசிக்கிறார். கவிதைகள், இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதுபவர். இவர் ஒரு மிருதங்க வித்துவானும் கூட. நிருத்தியா என்ற அமைப்பில் மிருதங்க வகுப்புகளை நடத்திவருகிறார். பாடகரும் ஆவார். சுயதரிசனம் இவரது கவிதைத் தொகுப்பு. தற்போது எழுத்துப்பணியிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்.

எழுத்தாளர் வ.ந.கிரிதரன் எழுக அதிமானுடா என்ற கவிதைத்தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

இவர்கள் தவிர சி.சண்முகராஜா (புனைபெயர் - மாவிலிமைந்தன்) - வைகறை வானம், வல்வை கமலாபெரியதம்பி - வல்வை கமலா கவிதைகள்;, வீணைமைந்தன் - தமிழன் கனவு, குறமகள் - மாலை சூட்டும் நாள், கந்தசாமி முத்துராஜா – சுனாமி, குரும்பசிட்டி ஐயாத்துரை ஜெகதீசன் - மாணிக்கப்பரல்கள் என்ற கவிதைதொகுப்புகளை வெளியிட்டுள்ளனர்.

கனடா எழுத்தாளர் இணையத்தால் வெளியிடப்பட்ட பொதிகைப் புதுமலர் என்ற கவிதைத் தொகுப்பில் பல கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. மாவிலி மைந்தன், ஞானகணேசன், அகணி சுரேஸ், கனி விமலநாதன், இராஜமீரா இராசையா, பவாணி தர்மகுலசிங்கம், கார்த்திகேசு காந்தரூபன், ஸ்ரீ பஞ்சநாதன் ஆகிய கவிஞர்களின் கவிதைகளே அவை.

ஈழநாடு பத்திரிகை புதுநானூற்றின் பரணி என்றொரு கவிதைத் தொகுப்பை 2005 இல் வெளியிட்டிருந்தது. தமிழீழ தேசியத் தலைவரின் 50ஆவது அகவையையொட்டி கனடாவில் மட்டுமன்றி பல்வேறு புலம்பெயர் நாடுகளிலும் வாழும் கவிஞர்களதும் கவிதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

தம்பிஐயா ஞானகணேசன் ஞான அமுதம் என்ற ஒலித்தட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார். அகணி சுரேஸ் கவிச்சாரல் என்ற கவிதைத்தொகுப்பையும் நினைவாற்றல் என்ற கட்டுரைத்தொகுப்பையும், பல ஒலித்தட்டுகளையும் வெளிக்கொண்டுவந்துள்ளார். முஹமத் ஹன்ஸீர் திருவள்ளுவர் திருக்காவியம், சாமி அப்பாத்துரை ஆகிய இரண்டு கவிதைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அ.கந்தசாமி கானல் நீர்க் கனவுகள் என்ற கவிதைத்தொகுப்பை வெளியிட்டதோடு இவரது கவிதைகள்; காலத்தின் பதிவுகள் என்ற கவிதைத்தொகுப்பிலும்; இடம்பெற்றுள்ளன.

சிறுகதை:
கனடாவைப் பொறுத்தவரை கோடைகாலம் ஆரம்பித்ததும் குடும்ப விழாக்களைப் போலவே நூல் வெளியீடுகளும் களைகட்டத் தொடங்கிவிடும். விழாக்களுக்கு மண்டபங்களை ஒழுங்குசெய்வதும், நேரத்தை திட்டமிடுவதும் கடினமான விடயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு இலக்கிய நிகழ்வுகள், அரங்கேற்றங்கள், கேளிக்கை நிகழ்வுகள் கோடைகாலத்தின் நேரத்தை விழுங்கிக்கொண்டிருக்கின்றன.

சிறுகதைகள் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியாவது மட்டுமன்றி நூல்களாகவும் வெளிவந்தவண்ணம் இருக்கிறது. கனடாவைப் பொறுத்தவரை சிறுகதைத்துறையில் பெயர் குறிப்பிட்டுக் கூறுமளவிற்கு எண்ணிறைந்த எழுத்தாளர்கள் தமது பங்களிப்பை வழங்கிவருகிறார்கள். அ.முத்துலிங்கம், தேவகாந்தன், இரா.சம்பந்தன், அகில், குரு அரவிந்தன், வ.ந.கிரிதரன், க.நவம், சுமதிரூபன், வி.ஸ்ரீரஞ்சனி, பொன்.குலேந்திரன், குமார்மூர்த்தி, மெலிஞ்சி முத்தன், த.அகிலன், சக்கரவர்த்தி, க.ரவீந்திரன், சங்கையூர் ஜெகன் என சிறுகதை எழுத்தாளர்களுடைய பட்டியல் நீண்டது.

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பேராசிரியர் க.கைலாசபதியால் அறிமுகப்படுத்தப்பட்டவர். கனடாவில் வாழ்ந்து வந்தாலும் சர்வதேச எழுத்தாளராக கணிக்கப்படுபவர். இவருடைய கதைகளின் களம், பொருள், கரு, கதைசொல்லும் பாங்கு எழுத்துலகிற்கு புதியவை. தாய்நாடு, புலம்பெயர்நாடு என்ற எல்லைகளுக்கு அப்பால் சர்வதேசம் சார்ந்தது. இவரது கதைகள் தான் பணியாற்றிய பல்வேறு தென்னாபிரிக்க நாடுகள் மற்றும் வட அமெரிக்காவைக் களமாகக் கொண்டவை. தமிழ் சிறுகதைப் பாதையை புதிய தளத்திற்கு இட்டுச் செல்வன இவரது கதைகள். எள்ளல் நடையுடன் கைகோர்த்து நடப்பவை. தமிழ்ச் சிறுகதை உலகில் அறுபதுகளிருந்து இன்றுவரை சளைக்காமல் எழுதிவரும் அ.முத்துலிங்கம் அக்கா, திகடசக்கரம், வடக்குவீதி, மகாராஜாவின் ரயில் வண்டி, அ.முத்துலிங்கம் கதைகள், அமெரிக்ககாரி ஆகிய சிறுகதைப் தொகுப்புகளை இதுவரை வெளியிட்டுள்ளார். உண்மை கலந்த நாட்குறிப்புக்கள் இவரது நாவல். இதுதவிர சில கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். இவருடைய அக்கா சிறுகதை தினகரனின் முதல் பரிசைப்; பெற்றது. மேலும் இலங்கை சாகித்திய விருது, ஆனந்தவிகடன் விருது, தமிழ்நாடு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக விருது என பல விருதுகளை தனதாக்கிக்கொண்டவர். கனடாவில் இலக்கியத்தோட்டம் என்ற அமைப்பினை நிறுவி அதனூடாக உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கிவருகிறார்.

க.நவம் சிறுகதை, கட்டுரை, நாடகம், விமர்சனம் என தனது ஆளுமையை மெய்பித்துக்கொண்டிருப்பவர். ஈழத்தின் பிரபலமான எழுத்தாளர் தெணியானின் சகோதரர். இவர் உள்ளும் புறமும் என்ற சிறுகதைத்தொகுப்பை வெளியிட்டுள்ளார். உண்மைகளின் மௌன ஊர்வலங்கள் என்பது இவரது கட்டுரைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது. இவர் சிறந்த நாடக நடிகரும், நாடகாசிரியரும் ஆவார். பல நாடகங்களை நெறிப்படுத்தி மேடையேற்றியுள்ளார். நவீன இலக்கியம் சார்ந்து பேசுவதிலும் படிப்பதிலும் தனது கவனத்தை செலுத்திவருகிறார்.

அகில் திசைமாறிய தென்றல் என்ற நாவல் மூலம் இலக்கிய உலகத்துள் நுளைந்தவர். சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என இலக்கியப் பரப்பில் தனது கவனத்தை செலுத்திவருகிறார். இவர் கூடுகள் சிதைந்தபோது என்ற சிறுகதைத்தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் அயலகப் படைப்பிலக்கியத்திற்கான விருது உட்பட மேலும் சில விருதுகளையும் இந்நூல் தனதாக்கிக்கொண்டது.

குரு அரவிந்தன் நாவல், சிறுகதை, சிறுவர் இலக்கியம், திரைத்துறை என்ற பல்வேறு தளங்களில் இயங்குபவர். இது தான் பாசம் என்பதா, என் காதலி ஒரு கண்ணகி, நின்னையே நிழல் என்று என்ற மூன்று சிறுகதைத்தொகுப்புகளை இவர் வெளியிட்டுள்ளார். ஒலிப்புத்தகங்களாக மலரே காதல் மலரே, நதியே காதல் நதியே, இங்கேயும் ஒரு நிலா என்பவை வெளிவந்துள்ளன. உதயன் சிறுகதைப்போட்டி தங்கப்பதக்கம் உட்பட பல பரிசுகள் இவரது படைப்புக்களுக்கு கிட்டியுள்ளன.

பொன் குலேந்திரன் ஆன்மிக விஞ்ஞான அரசியல் கட்டுரைகள், கவிதை, சிறுகதை என எழுதிவருபவர். தமிழில் மட்டுமல்லாது, ஆங்கிலத்திலும் எழுதும் வல்லமையுடையவர்.
shorts stories from sri lanka, sufferings of innocent souls என்ற இரண்டு  சிறுகதைத்தொகுப்புகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். தமிழில் விசித்திர உறவு, அழகு என்ற சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

குமார் மூர்த்தி குறுகிய காலத்துக்குள் எழுதத்தொடங்கி வாசகர்கள் மனதில் தனியிடம் பிடித்தவர். இவர் இன்று காலமாகிவிட்டாலும் முகம் தேடும் மனிதர்கள் என்ற தலைப்பில் இவருடைய சிறுகதைத்தொகுப்பு ஒன்று வெளிவந்துள்ளது.

இணுவில் ஆர்.எம் கிருபாகரன் சிறுகதை, நாவல், கவிதை, அரசியல் ஆய்வுக் கட்டுரை எழுதிவருகிறார். இவர் நீருக்குள் நெருப்பு என்ற சிறுகதைத் தொகுப்பொன்றையும், சில நாவல்களையும் படைத்துள்ளார்.

பிரண்டையாறு என்ற சிறுகதைத்தொகுப்பையும், அத்தாங்கு, வேருலகு ஆகிய இரண்டு நாவல்களையும் வெளிக்கொண்டுவந்துள்ளார் மெலிஞ்சி முத்தன். சிதையும் என்னுள் - என் தேசக்கரையோரம், முட்களின் இடுக்கில் ஆகிய இரண்டு கவிதைத் தொகுதிகளையும் இவர் வெளியிட்டுள்ளார். இவர் ஊர்காவற்றுறையில் மெலிஞ்சிமுனை என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்.

வ.ந.கிரிதரன் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருபவர். அமெரிக்கா இவர் எழுதிய குறுநாவல் மற்றும் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பாகும். இவை தவிர நாவல், கவிதை, கட்டுரைத் தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார்.

அளவெட்டி ஸ்ரீஸ்கந்தராசா என்பவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம் என்பவற்றில் ஈடுபாடுடையவர். சிறிசுவின் சில கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பையும், சிறிசுவின் சில கவிதைகள் - என்ற கவிதைத் தொகுப்பு ஒன்றையும் இவர் வெளியிட்டுள்ளார். இவர் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல் பெற்றவர். இவர் ஆரம்பகாலங்களில் இந்தியாவிலிருந்து நூல்களைப் பெற்று நாளும் தமிழ் என்ற தலைப்பில் புத்தகக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார். தற்போது எழுத்துப்பணியிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்.

மரணத்தின் வாசனை சிறுகதைத்தொகுப்பையும், தனிமையின் நிழல் குடை என்ற கவிதைத்தொகுப்பையும் வெளியிட்டுள்ளார் த.அகிலன். இவர் வடலி பதிப்பத்தின் உரிமையாளர். இலங்கையிலிருந்து அகதியாக இந்தியாவில் பல காலங்கள் வாழ்ந்தவர். கிளிநொச்சியைச் சொந்த இடமாகக் கொண்டவர். தற்போது கனடாவில் வசிக்கிறார். தாயத்தின் போர் அவலங்களை தனது படைப்புக்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

குரும்பசிட்டி ஐயாத்துரை ஜெகதீசன் கவிதை, சிறுகதை, கட்டுரைகள் எழுதுபவர். இவர் ஒரு வரலாற்றுநூல், ஒரு கவிதைத் தொகுப்பு உட்பட இங்கேயும் மனிதர்கள் என்று ஒரு சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

ரவீந்திரன் இடைக்கால உறவுகள் என்ற சிறுகதைத் தொகுப்பையும், சங்கையூர் ஜெகன் ‘என் கணவரை கைது செய்யுங்கள்’ என்ற சிறுகதைத்தொகுப்பையும் வெளியிட்டுள்ளனர்.

கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பெண் எழுத்தாளர்களாக குறமகள், சுமதிரூபன், வி.ஸ்ரீரஞ்சனி, லீலா சிவானந்தன், சிவவதனி பிரபாகரன், சிவநயனி முகுந்தன், இராகவி, வல்வை கமலாபெரியதம்பி ஆகியோரைக் குறிப்பிடலாம். காங்கேசன்துறை யாழ்ப்;பாணத்தைப் பிறப்பிடமாக கொண்டவர் திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம். குறமகள் என்ற புனைபெயரில் படைப்புக்களை படைத்து வருகிறார். கனடாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர். ஈழத்தில் இருக்கும்போதே எழுத்துலகில் பிரவேசித்தவர். பெண்ணியவாதி. சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என பல்வேறு துறைகளில் கால்பதித்தவர். குறமகள் கதைகள், உள்ளக்கமலமடி என்ற சிறுகதைநூல்களை இவர் எழுதியுள்ளார். மாலை சூட்டும் நாள் என்பது இவரது கவிதைத் தொகுப்பு. இதுதவிர பல ஆய்வுக்கட்டுரைகள், தொகுப்பு நூல்கள் எழுதியுள்ளார்.

சுமதி ரூபன் உறையும் பனிப் பெண்கள், யாதுமாகி நின்றாய் ஆகிய இரண்டு சிறுகதைத்தொகுப்புகளை வெளிக்கொண்டுவந்துள்ளார். புலம்பெயர் வாழ்வின் பல்வேறு பிரச்சினைகளையும் பேசுவன இவரது கதைகள். பெண்ணியம் சார்ந்து செயற்பட்டுவருபவர். இவர் சிறுகதை எழுதுவது மட்டுமல்லாது குறும்பட இயக்குனராக, நாடகநெறியாளராக, நடிகையாக தன் பன்முகப்பட்ட ஆற்றலை வெளிப்படுத்துபவர். மனுஷி இவர் எழுதி, இயக்கி, நடித்த குறுந்திரைப்படம். இவர் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.

எழுத்தாளர் வல்வை கமலாபெரியதம்பி மாங்கல்யம் என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இவர் ஈழத்தில் இருக்கும்போதே, தனது பதினாறு வயதிலேயே வீரகேசரிப் பத்திரிகையில் தனது முதல் சிறுகதையை எழுதியுள்ளார். பருத்தித்துறை வடஇந்து மகளிர் கல்லூரியின் கல்லூரி கீதத்தை எழுதி, இசையமைத்தவர் இவர். அந்நாளில் இலங்கை வானொலியில் பாடகராகவும் விளங்கினார். சிறந்த இசைஞானம் உடையவர். சிறுகதை மட்டுமல்லாது கவிதை, நாவல், கட்டுரை என்பவற்றிலும் தனது பங்களிப்பைச் செய்துள்ளார். நாடகம் நடிப்பதிலும், ஓவியம் வரைவதிலும் கூட ஈடுபாடு உடையவர். நம் தாயர் தந்த தனம் என்ற நாவலையும், மூன்று கட்டுரைத்தொகுதிகளையும், அருளும் ஒளியும் என்ற ஒரு பாமலரையும் வெளியிட்டுள்ளார். வயது முதிர்வின் காரணமாக தற்போது தனது எழுத்துப்பணியை நிறுத்திவிட்டார். கனடா தமிழர் தகவலின் சிறந்த எழுத்தாளருக்கான விருது 1997 இல் இவருக்கு வழங்கப்பட்டது.

இவர்கள் தவிர வி.ஸ்ரீரஞ்சனி நான் நிழலானால் என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். இராகவி மண்ணுக்கேற்ற பொண்ணு என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். சிவநயனி முகுந்தன் மாறுமோ நெஞ்சம் என்ற சிறுகதைத்;தொகுப்பை வெளியிட்டுள்ளார். லீலா சிவானந்தன் நவீன அம்பை என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். இவர்களது கதைகளின் பேசுபொருளாக தாயக நினைவுகள் மற்றும் புலம்பெயர் சூழலில் பெண்கள், சிறுவர் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், புதிய சூழலில் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள், விசனங்கள் பற்றியதாக இருக்கிறது.

சிறுகதை நூல் வெளியீடுகள் மட்டுமல்லாமல் அவ்வப்போது எழுத்தாளர்கள் குழுக்களாகச் சேர்ந்து பிரான்ஸ், ஜேர்மன், லண்டன் போன்ற ஏனைய புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் எழுத்தாளர்களுடைய புதிய, பழைய நூல்களை அறிமுகம் செய்து, அவை சார்ந்த கருத்துப் பகிர்வுகள், விமர்சனங்கள் நடத்திவருகிறார்கள். சிறுகதைகள் பற்றிய மாறுபட்ட சிந்தனைகளுக்கும், நவீன சிறுகதைகளின் அறிமுகத்திற்கும் இதுபோன்ற கருத்தரங்குகள், விமர்சனக் கூட்டங்கள் வகைசெய்கின்றன.

நாவல்:
சிறுகதை, கவிதை, படைப்பவர்களுடன் ஒப்பிடும்போது நாவல் எழுதுபவர்களின் தொகை குறைவாகவே இருக்கிறது. பெரும்பாலும் தாயக நினைவுகள் சார்ந்தும், தனிமனித உணர்வுகள், புலம்பெயர் சூழலின் வாழ்வியல் அனுபவங்கள் சார்ந்தும், தாயக விடுதலை – போராட்டங்கள் சார்ந்தும் இவற்றோடு சுயசரிதை வடிவ நாவல்கள் மற்றும் மறுவாசிப்புசார் நாவல்களும் கனடாவைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க வகையில் எழுந்துள்ள நாவல்களாகக் குறிப்பிடலாம். சிலர் வரலாற்று நாவல்களும் எழுதியிருக்கிறார்கள். நாவலாசிரியர்கள் என்றவகையில் தேவகாந்தன், குரு அரவிந்தன், கே.எஸ்.பாலச்சந்திரன், குறமகள், அ.முத்துலிங்கம், செழியன், வ.ந.கிரிதரன், அகில், மெலிஞ்சி முத்தன், சிவநயனி முகுந்தன், இரா.சம்மந்தன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராக தேவகாந்தன் இருக்கிறார். சிறுகதை, நாவல் எழுத்தாளாராக, சஞ்சிகையாளராகவும் இவர் விளங்குகிறார். ஈழப்பிரச்சினையை மையமாகக் கொண்ட கனவுச்சிறை என்ற இவரது நாவல் 1981ஆம் ஆண்டு தொடக்கம் 2001ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. திருப்படையாட்சி, வினாக்காலம், அக்னிதிரவம், உதிர்வின் ஓசை, ஒரு புதிய காலம் எனும் ஐந்து பாகங்களைக் கொண்ட நீண்ட நாவல் இது. இந்நாவல் பற்றி தனது ஆய்வுகள் - பார்வைகள் - பதிவுகள் என்ற நூலில் பேராசிரியர் நா.சுப்பிரமணியன்

“ஈழத்துத்தமிழர் தம் சொந்த மண்ணிலும், புகலிட நாடுகளிலும் எய்திய அநுபவங்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்நாவலின் கதையம்சம் உருப்பெற்றுள்ளது”

என்று குறிப்பிடுகிறார். தேவகாந்தனின் யுத்தத்தின் முதலாம் அத்தியாயம் என்ற நாவல் 1981ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியைச் சொல்வதாக இருக்கிறது. கனடா தமிழ் படைப்புலகில் அதிக புனைவுக்கதைகளைப் படைத்துள்ள ஒருவராக தேவகாந்தன் விளங்குகிறார். இவர் மகாபாரதக்கதையை மறுவாசிப்பு முறையில் கதாகாலம் என்ற நாவலாக எழுதியுள்ளார். இராமாயணத்தின் மறுவாசிப்பாக லங்காபுரம் என்ற இவரது நாவல் குறிப்பிடப்படுகிறது. விதி என்னும் தலைப்பிலும் ஒரு நாவலை வெளியிட்டுள்ளார்.

கே.எஸ்.பாலச்சந்திரன் நடிப்புத்துறையிலும், இலக்கியத்துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். வானொலி, தொலைக்காட்சிக் கலைஞர். இலங்கையில் இருந்தபோது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பல நாடகங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தணியாத தாகம் என்ற நாடகத்தில் சோமு என்ற பாத்திரத்தில் நடித்தவர். இலங்கை ரூபவாகினி தொலைக்காட்சியிலும் பல நாடகங்களில் நடித்து பெயர் பெற்றவர். மேடை நாடகங்கள், திரைப்படங்களிலும்; நடித்துள்ளார். கனடாவிலும் ஈழத்திலும் பல வானொலி நாடகங்களை, நகைச்சுவைத்தொடர்களை எழுதி, இயக்கி, தயாரித்தும் உள்ளார். இவரது கரையைத் தேடும் கட்டுமரங்கள் என்ற நாவலுக்கு தமிழகத்தின் சிறந்த இலக்கிய விருதான அமுதன் அடிகள் இலக்கிய விருது கிடைத்துள்ளது.

சிறுவயது தொடக்கம் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் என பல்வேறு இலக்கியப் பரப்பில் கால் பதித்து எழுதிவருபவர் வ.ந.கிரிதரன். 1970 களில் எழுதத் தொடங்கியவர். ஒரு சிறுகதைத் தொகுப்பு உட்பட குடிவரவாளன் என்ற நாவலையும், நல்லூர் ராஜதானி நகர அமைப்பு என்ற வரலாற்றுத் தொகுப்பையும், எழுக அதிமானுடா என்ற கவிதைத்தொகுப்பையும் இவர் வெளியிட்டுள்ளார். மண்ணின் குரல் என்ற தலைப்பில் நான்கு நாவல்களின் தொகுப்பொன்றையும் வெளியிட்டுள்ளார். இவர் பதிவுகள் என்ற இணையத்தளத்தை நடத்திவருகின்றார்.

குரு அரவிந்தன் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறுகதை, நாவல், கட்டுரை, திரைவசனம், நாடகம், சிறுவர் இலக்கியம் எனப் பல துறைகளில் தனது பங்களிப்பை வழங்கிவருகிறார். ஜனரஞ்சக எழுத்தாளராக கணிக்கப்படுபவர். காதல், குடும்ப உறவுகள் சார்ந்து பல சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார். உறங்குமோ காதல் நெஞ்சம், உன்னருகே நான் இருந்தால், எங்கே அந்த வெண்ணிலா?, நீர்மூழ்கி நீரில் மூழ்கி ஆகிய நான்கு நாவல்களையும், சில சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். அத்தோடு சிறுவர் இலக்கியத்துக்கும் தனது தங்களிப்பைச் செய்து வருகிறார். சுகம் சுகமே, வேலி, சிவரஞ்சனி ஆகிய திரைப்படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார்.

சிவநயனி முகுந்தன் மாறுமோ நெஞ்சம் என்ற சிறுகதைத்;தொகுப்பையும், வேல்விழியாள் மறவன் என்ற நாவலையும் எழுதியுள்ளார். ஈழத்து பெண் எழுத்தாளரால் எழுத்தப்பட்ட முதல் வரலாற்று நீள்கதையாக இது பார்க்கப்படுகிறது. வேல்விழியாள் மறவன் 620 பக்கங்கள் கொண்ட நாவலாகும்.

அகில் சிறுகதைகளோடு நாவல்களும் எழுதியுள்ளார். திசைமாறிய தென்றல், கண்ணின் மணி நீயெனக்கு என்ற இரு நாவல்களையும், மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு என்ற குறுநாவலையும் இவர் எழுதியுள்ளார்.

இணுவில் ஆர்.எம்.கிருபாகரன் சிறுகதை, நாவல்கள் எழுதுபவர். இவர்கள் எப்பொழுதும் விழுதுகள், வசந்தம் வரவேண்டும், கல்யாணிபுரத்துக் காவலன் ஆகிய நாவல்களை இவர் எழுதியுள்ளார். இவற்றுள் கல்யாணிபுரத்துக் காவலன் சரித்திரநாவல்.

இவர்கள் தவிர வல்வை கமலாபெரியதம்பி நம் தாயர் தந்த தனம்;, பசுந்தீவு கோவிந்தன் கூதிர் காலம், சங்கையூர் ஜெகன் கடமையில் நின்றான் காதலிலும் வென்றான், புலவர் ஈழத்துச்சிவானந்தன் இதயங்கள், மனுவல் ஜேசுதாசன்
90நாட்களுள்.., அ.முத்துலிங்கம் உண்மை கலந்த நாட்குறிப்புகள், பொன் குலேந்திரன் The Down  (ஆங்கில நாவல்), குறமகள் மிதுனம் ஆகிய நாவல்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை என தனது கவனத்தைச் செலுத்திவருபவர்; இரா.சம்பந்தன். இவர் வித்தும் நிலமும் என்ற ஒரு சிறுகதைத்தொகுப்புகளையும், பாய்மரக்காக்கைகள், வளவர்கோன்பாவை என்ற இரு நாவல்களையும் வெளியிட்டுள்ளார். வளவர்கோன்பாவை சரித்திரநாவலாகும்.

இதுவரை இங்கு வெளியாகியுள்ள படைப்பிலக்கியங்களின் முக்கிய பேசுபொருளாக தாயக நினைவுகள் அசைபோடப்படுகின்றன. கருவையும் களத்தையும் வைத்துப் பார்க்கும்போது சில தவிர்க்கமுடியாமல் கனடா படைப்பாளிகளால் எழுதப்பட்ட ஈழத்துப் படைப்புக்களாகவே உள்ளன. முன்னர் தாயகத்தில் வாழ்ந்த பழைய வாழ்வை, உறவுகளை கதை மாந்தராகக் கொண்டு பலரும் படைப்புக்களை எழுதியுள்ளனர். இதுதவிர ஈழப்போரும் அதன் வலியும் சில எழுத்தாளர்களின் படைப்புகளில் முக்கிய இடம்பெறுகிறது. போரின் கொடூர கரங்களில் அநியாயமாக நசுக்கப்பட்ட அப்பாவி மக்களின் கதைகளை உலகத்திற்கு எடுத்துச் சொல்லும் தார்மீகக் கடமைக்கு தமது கதைகளை ஆயுதமாக்கி உள்ளனர் சில படைப்பாளிகள். ஈழத்தில் போர்ப்பிடியில், யுத்த சூழலில் பேச முடியாத விடயங்களை துணிந்து சொல்ல கனடா போன்ற புலம்பெயர் நாடுகளில் வாழும் படைப்பாளிகளாலேயே சாத்தியமாகிறது என்பதும் உண்மையே.

புலம்பெயர் வாழ்வின் வலியும், அவர்கள் எதிர்நோக்கும் சவால்களும் பல படைப்புக்களில் பேசப்படுகின்றன. பெண்ணியம், பெண் விடுதலை, புலம்பெயர் நாடுகளில் பெண்களின் உளவியல் சார் பிரச்சினைகள் சார்ந்தும் பெண்களால் நிறையவே எழுதப்படுகின்றமை இலக்கியத்தின் புதிய செல்நெறியாகவே தோன்றுகிறது. ஆரம்ப காலங்களில் ஈழ விடுதலை சார்ந்த படைப்புக்கள் ஏறாளமாக வெளிவந்தன. அவற்றுக்கு இருந்த ஆதரவு மாற்றுக்கருத்துடைய படைப்புக்களை முடங்கச் செய்தன. சில திட்டமிட்டும் முடக்கப்பட்டன. ஆனால் முள்ளியவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் மாற்றுக்கருத்துடைய படைப்புக்கள் முனைப்புடன் வெளியாகத் தொடங்கியுள்ளன. கட்டுக்கள் எதுவுமற்று துணிந்து எதையும் எழுதக்கூடிய வசதியும் வாய்ப்பும் புலம்பெயர் எழுத்தாளர்களுக்கு கிட்டியுள்ளது. அது ஈழப்போர் சார்ந்தோ அதன் மாற்றுக்கருத்துக்கள் சார்ந்தோ அன்றி குடும்ப உறவுகள் சார்ந்தோ அன்றி தேசம், வர்க்கம், நிறம், சாதிபோதம் கடந்தோ எழுதும் தன்மையை எழுத்தாளர்களுக்கு வழங்கியுள்ளது. இதுவரை காலமும் கட்டிக்காக்கப்பட்ட குடும்பம், ஆண் - பெண் உறவு, கற்பு, சமய விழுமியங்களை கேள்விக்குள்ளாக்கும் படைப்புக்கள் புதிய வீச்சுடன் கனடாவில் ஒருசிலரால் படைக்கப்பட்டு வருகின்றன. பேசாப்பொருள்கள் பேசப்படுகின்றன.

கட்டுரை:
கனடாவில் நிறைய பத்திரிகைகள், சஞ்சிகைகள் வெளிவருகின்றன. கனடாவில் வாழும் பல்வேறு எழுத்தாளர்களும் இவற்றில் அரசியல்கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், சமூகக்கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள் என தொடர்ந்து எழுதிவருகிறார்கள். பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவராமல் தனியே நூல்களாகவும் சிலர் தமது கட்டுரைகளை வெளியிட்டுவருகின்றனர். இணைய இதழ்களில் எழுதிவருகிறார்கள். பேராசிரியர்கள், பண்டிதர்கள், புலவர்கள் அடங்கலாக பெருந்தொகையானோர் கட்டுரையாளர்களாக விளங்குகின்றனர். அந்தவகையில் இலங்கையில் பேராசிரியர்களாக விளங்கிய நா.சுப்பிரமணியன், இ.பாலசுந்தரம் மற்றும் பண்டிதர்கள் வித்துவான்கள் வரிசையில் வித்துவான் க.செபரெத்தினம், பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம், புலவர் ஈழத்துச்சிவானந்தன் ஆகியோர் உட்பட ஓய்வுபெற்ற அதிபர் பொ.கனகசபாபதி, குறமகள், பொன்.குலேந்திரன், சின்னையா சிவநேசன், கே.எஸ்.பாலச்சந்திரன், எஸ்.பத்மநாதன், அனலை ஆறு.இராசேந்திரம், சாமி அப்பாத்துரை, எஸ்.சந்திரபோஸ் போன்றவர்கள் கட்டுரையாளர்களாக குறிப்பிடத்தக்கவர்கள்.

ஈழத்தில் பேராசிரியர்களாக விளங்கியவர்கள், புலவர்கள் வித்துவான்களாக இருந்தவர்கள் கனடாவில் தமிழின், தமிழனின் வளர்ச்சிக்கு ஏதோவொரு வகையில் தமது பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி குறிப்பிடாவிட்டால் இக்கட்டுரை முழுமைபெறாது என்றே கருதுகிறேன். அந்தளவிற்கு இலக்கிய நிகழ்வுகளை தலைமையேற்று நடத்துதல், நூல்கள் பற்றிய தமது விமர்சனங்களை முன்வைத்தல், தமது துறைசார் அறிவினை எழுத்தாளர்கள், வாசகர்களுக்கு ஊட்டுதல், இளையவர்களை வழிநடத்துதல் என்ற வகையில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் அவர்களது ஊடாட்டத்தை குறிப்பிடாமல் இருக்கமுடியாது.

பேராசிரியர் நா.சுப்பிரமணியன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர். அங்கு தமிழ்த்துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் விளங்கியவர். இவர் இலக்கிய வரலாறு, திறனாய்வு, தத்துவம் சார் துறைகளில் புலமையுடன் சிறுகதை, கவிதை உள்ளிட்ட படைப்புப்பணியிலும் ஈடுபாடு கொண்டவர். ஈழத்திலும் கனடாவிலுமாக இவர் வெளியிட்ட நூல்கள் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம், தமிழ் ஆய்வியலில் கலாநிதி க.கைலாசபதி, நால்வர் வாழ்வும் வாக்கும், கலாநிதி நா.சுப்பிரமணியனின் ஆய்வுகள் - பார்வைகள் - பதிவுகள் (தொகுதி 1, 2), கந்தபுராணம் - ஒரு பண்பாட்டுக் களஞ்சியம், இந்திய சிந்தனை மரபு. பேராசிரியர் விமர்சனம் திறனாய்வு மற்றும் கவிதை தொடர்பான கலந்துரையாடல்கள், இலக்கிய நிகழ்வுகளை தொடர்ந்து நடத்திவருகிறார்.

காரைதீவு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர் பேராசிரியர் கலாநிதி இ.பாலசுந்தரம். யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் விரிவுரையாளராக, பேராசிரியராகப் பணியாற்றியவர். கல்விசார், உளவியல்சார் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஈழத்தில் இருந்தபோதும், பின்பு கனடா வந்தபின்பும் நூல்கள் வெளியிட்டுள்ளார். அந்தவகையில் நாட்டார் இலக்கியம் ஆய்வும் மதிப்பீடும், காத்தவராயன் நாடகம், இடப்பெயராய்வு – காங்கேயன் கல்வி வட்டாரம், இடப்பெயராய்வு வடமராட்சி தென்மராட்சி, தமிழ் இலக்கியத்தில் மருத்துவம், ஒப்பனைக்கலை, நாட்டாரிசை, ஈழத்து இடப்பெயர் ஆய்வு, தமிழர் திருமண மரபுகள், விபுலானந்தம், பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பு, நுஒpடழசயவழைn in ளுசi டுயமெயn வுயஅடை குழடமடழசந ஆகிய நூல்களை குறிப்பிடலாம்.

வித்துவான் க.செபரத்தினம் தம்பிலுவில் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கட்டுரைகள், சிறுகதைகள் எழுதுபவர். வாழையடி வாழை (புலவர் சரிதம்), விபுலானந்தர் அடிகளார் வாழ்வும் வளமும், நயனங்கள் பேசுகின்றன (சிறுகதைத் தொகுப்பு), ஈழத்துத் தமிழ்ச் சான்றோர், தமிழ்நாடும் ஈழத்துத் தமிழ்ச் சான்றோரும் முதலிய நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். கிழக்கிலங்கை மண்ணில் புகழ்பூத்த மைந்தர்கள் (பகுதி1, 2) என்ற மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கல்விமான்கள் பற்றிய இரண்டு தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். மிக அண்மையில் இவர் காலமாகிவிட்டார்.

பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் இணுவிலைச் சேர்ந்த இலக்கியப் படைப்பாளி. குறிப்பிடத்தக்க கவிஞர். சிறுகதை, நாவல், கட்டுரைகளும் எழுதுபவர். சிறந்த மேடைப்பேச்சாளர். நாடகத்தின் மீதும் அதீத ஈடுபாடு கொண்டவர். நாற்பதுக்கும் மேற்பட்ட ஈழத்துக் கோயில்கள் மீது பிரபந்தங்கள் பாடியுள்ளார். அவைதவிர எழிலி என்ற காவியம், தண்டலை (கவியரங்கக் கவிதைகள்), நாடும் வீடும் (கவியரங்கக் கவிதைகள்), இன்பவானில் (அகத்துறைக் கவிதைகள்), வேள்வி நெருப்பு (சின்னஞ் சிறு கதைகள்), தமிழ் இலக்கணப் பூங்கா (இலக்கண நூல்), கூலிக்கு வந்தவன் (சமூகநாவல்), பூகம்பப் பூக்கள் (100 குறும்புப் பாக்கள்), அன்னை மண்(51 சிறுகதைகள்), ச.வே.பஞ்சாட்சரம் கவிதைகள் தொகுதி–1, பஞ்சாட்சரம் பாநாடகங்கள் என்பன இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள்.

புலவர் ஈழத்துச் சிவானந்;தன் சிறந்த ஆன்மீகவாதி. சொற்பொழிவாளர். சிறுகதை, கட்டுரை, கவிதை, நாவல், நாடகம் என பல்துறைகளிலும் கால்பதித்த தமிழ்ப்புலவர். ஒரு நாவல் உட்பட அடிகளார் பாதையிலே, ஈழத்துச் சொற்பொழிவுகள், ஈழத்தில் யான்கண்ட சொற் செல்வர்கள், சீதனக்கொடுமை ஒழிக, காலனை காலால் உதைத்த கடவுள், கண்ணதாசனைக் கண்டேன், திருமுருகனின் திருக்கல்யாணம் உட்பட பல கட்டுரை நூல்களையும், இறுவெட்டுக்களையும் வெளியிட்டுள்ளார்.

இவர்கள் தவிர கட்டுரைகள் எழுதுவதில் தனக்கென்று தனியிடத்தை பெற்றவர் பொ.கனகசபாபதி. கனடாவில் வெளிவருகின்ற பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவரது கட்டுரைகள் தொடர்ந்தும் வெளிவருகின்றன. இவர் சிறுவர் கதைகள் உட்பட பல உளவியல் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எம்மை வாழவைத்தவர்கள், மரம் - மாந்தர் - மிருகம், ஒரு அதிபரின் கூரிய பார்வையில், பெற்றார் பிள்ளை உளவியல், திறவுகோள், மனம் எங்கே போகிறது என்பன இவர் எழுதிய கட்டுரை நூல்கள்.

பொன்.குலேந்திரன் அறிவியல், விஞ்ஞான கட்டுரைகள் எழுதிவருபவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இவரது படைப்புக்கள் வெளியாகின்றன. அறிவிக்கோர் ஆவணம்,
வளரும் வணிகம் என்பன இவரது கட்டுரைத் தொகுப்புகளாகும்.

துறையூரான் என்ற பெயரில் எழுதிவரும் சின்னையா சிவனேசன் கவிதை, கட்டுரை, நாடகம் என்பவற்றில் தனது கவனத்தைச் செலுத்திவருபவர். வானொலி நாடகங்களை எழுதுவதிலும், நடிப்பதிலும் ஆர்வம் உடையவர். இவர் ஈழத்தில் எழுதி நெறிப்படுத்திய நாடங்களில் ‘தங்கச்சி கொழும்புக்கோ போகிறாய்?’, நினைத்தது நடந்ததா?, நரி மாப்பிள்ளை ஆகியன பிரபலமானவை. நரி மாப்பிள்ளை, தங்கச்சி கொழும்புக்கோ போகிறாய்? ஓன்றுபட்டால் முதலிய இவரது நாடகங்களை நூல்களாக வெளியிட்டுள்ளார். நாடும் நடப்பும் என்பது இவரது கட்டுரை நூலாகும். இவர் சிறுவர் நூல்களும் எழுதியுள்ளார்.

கே.எஸ்.பாலச்சந்திரன் நாடகம், புனைகதை, கட்டுரை என பல்துறைகளிலும் கால்பதித்தவர். பத்திரிகைகளில் தொடராக இவரது வாழ்வியல், அனுபவம் மற்றும் திரை, விளையாட்டுத்துறை சார் கட்டுரைகளை எழுதிவருகிறார். நேற்றுப் போல இருக்கிறது என்பது இவரது கட்டுரைத் தொகுப்பாகும்.

உளவியல், சமூகவியல், வாழ்வியல் விடயங்களை உள்ளடக்கி தனது கட்டுரைகளை தொடர்ந்து படைத்து வருபவர் எஸ்.பத்மநாதன். இவர் தனது கட்டுரைகளை சிந்தனைப்பூக்கள் என்ற தலைப்பின் கீழ் மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார்.

சாமி அப்பாத்துரை பல்துறை சார்ந்தும் தனது கட்டுரைகளை பத்திரிகைகளில் வெளியிட்டு வருபவர். வானொலியிலும் இவரது பல்துறை சார் பேச்சுக்கள் தொடர்ந்து ஒலிபரப்பாகி வருகின்றன. ஆங்கிலப் புலமையும் மிக்கவர். தரணியெங்கும் தமிழ்வளர்ப்போம், புலம்பெயந்த தமிழன், சங்கானைப்பட்டினம், உரிமைக்குரல்,
Canada: The Meat of the World sandwich என்பன இவரது கட்டுரை நூல்கள்.

சிறந்த சிறுகதையாளரான அ.முத்துலிங்கம் கட்டுரை எழுதுவதிலும் தேர்ந்தவர். கட்டுரைகள் அவரது சிறுகதைகளைப் போலவே சம்பவங்களின் பின்னல்களுடன் சொற்சிலம்பாடுபவை. சமீபத்தில் சங்க இலக்கியத்தின்மீது இவரது கவனம் திரும்பியுள்ளது. அங்க இப்ப என்ன நேரம்?, பூமியின் பாதி வயது, கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது, வியத்தலும் இலமே (நேர்காணல்கள்), அமெரிக்க உளவாளி, ஒன்றுக்கும் உதவாதவன் என்பன இவரது கட்டுரைத் தொகுப்புகளாக குறிப்பிடப்படுகின்றன.

லலிதா புரூடி அரியாலை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கவிதை, உளவியல், ஆன்மீகம்சார் கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதுபவர். கனடாவில் சேவையை வழங்கும் பல்வேறு வானொலிகளிலும் தனது நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார்;. கனடாவில் உளவளத்துறை ஆலோசகராகப் பணியாற்றியவர். ஆளுமை வளர்ச்சிக்குப் பிரார்த்தனைகள் என்பது இவரது ஆளுமை பற்றிய நூல். ஆங்கிலத்தில் Pநயஉந றiவா துரளவiஉந என்று ஒரு நூலையும் வெளியிட்டுள்ளார்.

அனலை ஆறு இராசேந்திரம் கவிஞர் மட்டுமல்ல நல்ல இலக்கியக்கட்டுரையாளரும் கூட. தனது இலக்கியக் கட்டுரைகளைத் தொகுத்து பூவும் புல்லிதழும் என்ற நூலாக வெளியிட்டுள்ளார். இணைய இதழ்களில் இவரது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

எஸ்.சந்திரபோஸ் கவிதை, சிறுகதை, நாடகம் போன்றவற்றில் ஈடுபாடுகொண்டிருந்தாலும் கட்டுரை எழுதுவதிலும் ஆற்றல் மிக்கவர். இவர் எம்.சி. ஒரு சமூக விடுதலைப் போராளி, எண்ணமும் எழுத்தும், எண்ணக் கோலங்கள், தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி முதலான கட்டுரை நூல்களை வெளியிட்டுள்ளார்.

எஸ்.சிவவிநாயகமூர்த்தி நெடுந்தீவு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கட்டுரை, நூலாய்வுகள் செய்வதில் ஆர்வமுடையவர். உளவியல் கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் எழுதுபவர். நெடுந்தீவு மக்களும் வரலாறும், பெற்றோர் அறிய வேண்டியவையும் மாணவர் பிரச்சினைகளும் என்பன இவரது நூல்கள். இவர் தமிழர் தகவல் தங்கப்பதக்கமும் விருதும் பெற்றவர்.

குரும்பசிட்டி ஐயாத்துரை ஜெகதீசன் சிறுகதை, கட்டுரைகள், கவிதைகள் எழுதுபவர். சமய, சமூக, சீர்திருத்தச் சிந்தனையாளர். கொலுவீற்றிருந்த குரும்பைநகர் என்பது இவர் எழுதிய வரலாற்றுநூல். தான் பிறந்து வளர்ந்த ஊரின் வரலாற்றுப் பதிவாக, ஆய்வு நோக்கில் இந்நூலை எழுதியுள்ளார். இது தவிர ஒரு சிறுகதைத் தொகுப்பையும், ஒரு கவிதைத் தொகுப்பையும் இவர் வெளியிட்டுள்ளார்.

புனைகதைத் துறையில் தனக்கென ஒரு இடம்பிடித்தவர் குறமகள். இவர் இராமாயணம், மற்றும் யாழ்;பாணம் பெண் கல்வி வரலாறு முதலான கட்டுரை நூல்களை வெளியிட்டுள்ளார். கனடாவில் வெளிவருகின்ற பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதிவருபவர் இவர்.

புனைகதைத் துறையில் கவனம் செலுத்திவந்த வல்வை கமலாபெரியதம்பி பல கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். நீதிக்கதைகளில் ஆத்திசூடி, தமிழ் கவிக் காவினிலே, அருளும் ஒளியும் என்பன இவரது கட்டுரை நூல்கள்.

இவைதவிர சிவவதனி பிரபாகரன் வாழ்வெனும் வரம், க.நவம் உண்மைகளின் மௌன ஊர்வலங்கள், முத்துராஜா ஆழியவளை, நக்கீரன் என்ற புனைபெயரில் எழுதிவரும் வே.தங்கவேலு சோதிடப் புரட்டு, பிரேம்ஜியின் பிரேம்ஜி கட்டுரைகள், த.சிவபாலு வைதீக திருமணமும் தமிழர் திருமணமும் ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார்கள். சு.இராசரத்தினம்; தமிழீழம் நாடும் அரசம், பண்பாடு: வேரும் விழுதும் ஆகிய இரண்டு நூல்களை எழுதியுள்ளார். கனடா உதயன் பத்திரிகையின் ஆசிரியர் ஆர்.என்.லோகேந்திரலிங்கம் போலிகள் என்ற கவிதைத்தொகுப்பையும், காலத்தின் பதிவுகள் என்ற கவிதைத்தொகுப்பை எழுத்தாளர் க.கந்தசாமியுடன் சேர்ந்தும் வெளிக்கொண்டுவந்துள்ளார். இவர் அண்மையில் பத்திரிகையில் தான் எழுதிய பத்திரிகைத் தலையங்கங்களைத் தொகுத்து எதுவரை என்ற தலைப்பில் கட்டுரைத்தொகுப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

கட்டுரைகளைப் பொறுத்தவரை பத்திரிகைகளில் வெளிவருகின்ற பெரும்பாலான அரசியல் ஆய்வுக்கட்டுரைகள் ஈழத்துப் பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் இருந்து பதிவிறக்கப்பட்டவையாக உள்ளன. இன்றுவரை காத்திரமான அரசியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதுபவராக யாரும் அறியப்படவில்லை. பெரும்பாலான கட்டுரையாளர்கள் ஆன்மீகம் மற்றும் உளவியல் சார்ந்து எழுதுகிறார்கள். இதுதவிர இளையோரை நெறிப்படுத்துதல் தொடர்பாகவும், கல்வி வழிகாட்டுதல் மற்றும் அறிவியல் சார்ந்தும் எழுதுகிறார்கள். தாயகம் தொடர்பாக அசைபோடப்படும் பல்வேறு விடயங்களும் கட்டுரைகளாகின்றன.

சிறுவர் இலக்கியம்:
கவிதை, சிறுகதை, நாவல் போன்றே சிறுவர் இலக்கியமும் பேசப்பட வேண்டிய முக்கியதுறைகளுள் ஒன்றாகும். அதுவும் கனடா போன்ற புலம்பெயர் நாடுகளில் அடுத்த தலைமுறையினரிடத்தில் தமிழைக் கொண்டு சேர்க்கும் அரியபணியில் சிறுவர் இலக்கியத்தின் பணி தலையாயது. சிறுவர்களுக்கான பல பாடநூல்கள் எழுந்துகொண்டிருக்கின்ற இன்றைய சூழ்நிலையில் அவர்களின் இரசனைக்கும், தமிழறிவுக்கும் விருந்தாய் சிறுவர் பாடல்கள், சிறுவர் கதைகள் என்பன ஓரிருவரால் மட்டுமே கனடாவில் படைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் குரு அரவிந்தன், சபா அருள்சுப்பிரமணியம், பொ.கனகசபாபதி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

குரு அரவிந்தன் சிறுவர்களுக்கான ஒளித்தட்டு, சிறுவர் பாடல்கள் ஒலித்தட்டு, தமிழ் ஆரம் பயிற்சி நூல்கள் என சிறுவர் இலக்கியத்துக்கு தனது பங்களிப்பைச் செய்துள்ளார். சிறுவர் நாடகங்கள் தொடர்பாகவும் தனது கவனத்தைச் செலுத்திவருகிறார்.

ஓய்வுபெற்ற அதிபர் பொ.கனகசபாபதி கட்டுரைகள் எழுதுவதோடு சிறுவர்
இலக்கியத்திற்கும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். மாரன் மணிக்கதைகள் - ஒன்று, மாரன் மணிக்கதைகள் - இரண்டு என்பது இவரது சிறுவர் கதைகள் அடங்கிய இரு தொகுப்புகள்.

சின்னையா சிவநேசன் நாடகங்கள், கட்டுரைகள் எழுதுவதோடு சிறுவர் இலக்கியத்திலும் ஈடுபாடுகொண்டவர். சின்னையா சிவநேசனின் சிறுவர் பாடல்கள் என தமிழிலும், ஆங்கிலத்திலுமாக சிறுவர் பாடல்கள் அடங்கிய இரண்டு நூல்களை இவர் வெளியிட்டுள்ளார்.

சபா அருள்சுப்பிரமணியம் கவிதை புனைவதோடு சிறுவர் இலக்கியத்திலும் கவனம் செலுத்திவருகின்றார். தமிழ்மலர், சிறுவர்பாடல்கள் ஒலித்தட்டு வடிவத்திலும், புத்தகமாகவும். சிறுவர் நாடகங்கள், குட்டி நாடகங்கள் நூல் வடிவத்திலும், தங்கக் கலசம் (சிறுவர் பாடல்கள்) நூல் வடித்திலும் என பல படைப்புகளை வெளிக்கொண்டுவந்துள்ளார்.

கனடாவின் தமிழ் இலக்கியத்துறைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு துறையாக சிறுவர் இலக்கியம் காணப்படுகிறது.

மொழிபெயர்ப்பு முயற்சிகள்:
வாசிப்பின் விசாலமும், மொழியறிவின் விரிவும் நாடுகள் கண்டங்கள் தாண்டி நல்ல இலக்கியங்களை வாசித்தறிய வேண்டும் என்ற தேடலையும், உந்துதலையும் ஏற்படுத்துகிறது. புதிய மொழியின் பரிச்சயம் மட்டுமன்றி அதன் கலாச்சாரத்தை, பண்பாட்டை அந்த நாட்டில் வாழ்ந்து நுகர்கின்ற வாய்ப்பு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்குக் கிட்டியுள்ளது. மொழியறிவு மட்டுமன்றி அதன் சமூகத்தையும் நன்கு புரிந்துகொண்டு மொழிபெயர்க்கும்;போது இலக்கியத்தின் சுவையும், உண்மையும் வலுக்கிறது.

கனடாவைப் பொறுத்தவரை ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து பெரும்பாலும் ரொறன்ரோ பெரும்பாகத்திலும், மிகுதியில் ஒரு பகுதியினர் மொன்றியாலிலும், ஒரு பகுதியினர் வன்கூவரிலும் வசிக்கின்றனர். மொன்றியலில் பிரெஞ்சு மொழி முக்கியமாகப் பேசப்படுகிறது. ஏனைய பிரதேசங்களில் ஆங்கிலமே பிரதான மொழி. இந்நிலையில் ஆங்கிலம் - தமிழ், தமிழ் - ஆங்கிலம், பிரெஞ்சு – தமிழ், தமிழ் - பிரெஞ்சு என்ற வகையில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் முக்கிய மொழிபெயர்ப்பாளர்களாக என்.கே.மகாலிங்கம், மணி வேலுப்பிள்ளை, பேராசிரியர்.கனக.செல்வநாயகம், பொன் குலேந்திரன், சேரன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்;ப்பென இலக்கியத்தின் பல்வேறு துறைகளில் கால்பதித்த முக்கியமான படைப்பாளியாக என்.கே.மகாலிங்கம் விளங்குன்றார். இவர் ‘தியானம்’ என்ற சிறுகதைத்தொகுதியையும், ‘உள்ளொளி’ என்ற கவிதைத்தொகுப்பையும் வெளிக்கொண்டுவந்துள்ளார். இவை தவிர மூன்று மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். நைஜீரிய எழுத்தாளரான சினுவா அசுபேயின் வுhiபௌ குயடட யுpயசவ என்னும் நாவலை தமிழில் ‘சிதைவுகள்’ என்னும் பெயரில் மொழிபெயர்த்துள்ளார். ‘இரவில் நான் உன் குதிரை’ என்ற நூல் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. மற்றுமொரு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு ‘ஆடும் குதிரை’. இது உலக இலக்கிய ஆளுமைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு.

மணி வேலுப்பிள்ளை மொழியெர்ப்பாளராகப் பணியாற்றுபவர். இவர் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் சில ஆக்கங்களை மொழிமாற்றம் செய்துள்ளார். மிலான் குந்தேரா பிரெஞ்சு மொழியில் எழுதிய ஆங்கில மொழிபெயர்ப்பான ஐபழெசயnஉந என்ற நாவலை மணி வேலுப்பிள்ளை தமிழில் மாயமீட்சி என்ற பெயரில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்.

கவிஞர் சேரன் தனது இரண்டு கவிதைத் தொகுப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். தனது கவிதைத் தொகுப்புகளான எரிந்து கொண்டிருக்கும் நேரம் -
In a time of burnig  என்ற பெயரிலும், இரண்டாவது சூரிய உதயம்   - A second sunrise  என்ற பெயரிலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

பேராசிரியர் செல்வா கனகநாயகம் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறைப் பேராசியராகவும், தென்கிழக்காசியக் கல்வித்துறை மைய இயக்குனராகவும் உள்ளார். இவர் கவிஞர் சேரனது தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பது கவிதைகளை மொழிபெயர்த்து
You cannot turn away  என்ற பெயரில் ஆங்கிலத்தில் ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். ஈழத்து எழுத்தாளர்களின் 13 கதைகள், 22 கவிதைகள் உள்ளடங்கிய - Lutesong and Lament An anthology of tamil writing from Srilanka  என்ற நூலின் தொகுப்பாசிரியராகவும் இவர் விளங்குகிறார். இந்நூலை ஏழு மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்கள். இதுதவிர ஐn ழரச வசயளெடயவநன றழசடன என்ற கவிதைத் தொகுப்பு நூலையும் இவர் தொகுத்துள்ளார்.

பொன்.குலேந்திரன் ஒரு சிறுகதையாளர். கட்டுரையாளராகவும் அறியப்படுபவர். தனது ஆக்கங்கள், சிறுகதைகள் சிலவற்றை இவர் மொழிமாற்றம் செய்துள்ளார்.

மொழிபெயர்ப்புக்கள் எனும்போது அதன் தேவை கனடாவைப் பொறுத்தவரை இன்னும் போதாத ஒரு நிலையே காணப்படுகிறது. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் இன்னும் நிறைய நூல்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

பதிப்பு முயற்சிகள்:
மறந்து அழிந்துபோகும் நிலையில் இருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்களை தேடி அச்சிட்டுப் பதித்த தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையரைப் போல் கனடாவாழ் வல்வை ந.நகுலசிகாமணி பழைய நூல்களைத் தேடிப்பிடித்து மீள்பதிபித்துவருகின்றார். இவர் பதினைந்;துக்கும் மேற்பட்ட நூல்களை இதுவரை பதிபித்துள்ளார். ‘வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்’ முதலாம் பதிப்பு
1997, ‘கந்தர் அலங்காரம்’ - வல்வை வைத்திலிங்கப் புலவர் - 1912, ‘யாழ்ப்பாண வைபவ கௌமுதி’ – வசாவிளான் கல்லடி வேலுப்பிள்ளை – 1918, ‘யாழ்ப்பாண வைபவ மாலை’ – மைல்வாகனப்புலவர் - 1884, ‘சேர்.பொன். அருணாசலத்தின் வாழ்க்கை வரலாறு’, “வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்” - இரண்டாம் பதிப்பு – 2006, நீச்சல் வீரன் நவரத்தினசாமி - லியோன்பிள்ளை 1954, ‘தொண்டமானாறு செல்வச்சந்நிதியும் வரலாறும்’ - செ.நாகலிங்கம் 1974, ‘சிவராத்திரி புராணம் வைத்திலிங்கபிள்ளை உரை’ – 1881, ‘S.J.V.  செல்வநாயகம்;A TRIBUTE ‘– 1978> ‘RE –OPENING OF NORTu; CEYLON PORT’ – 1951, கந்தபுராணத்தில் வள்ளியம்மை திருமணப்படலம் - வைத்திலிங்கப் புலவர்-1889, ‘தெய்வானையம்மை’ - வைத்திலிங்கப் புலவர் - 1889, ‘திருக்குறள் அதிகாரச் சாரமாகிய திருத்தாலாட்டு’ - வல்வை கணேச பண்டிதர் - 1919, ‘திருமுருகாற்றுப்படை உரை’ - ஆறுமுகநாவலர் - 1853, ‘மறைசையந்தாதி’ - நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் - 1913, ‘மாரியம்மன் மான்மியம்’ – 1972, ‘உடுப்பிட்டி சிவசம்புப்புலவர் வரலாறும் ஆக்கங்களும் - வல்வை ந.நகுலசிகாமணி-2010, ‘கல்வளையந்தாதி மூலமும் உரையும்’ (பழைய) - நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் - 2012 முதலான நூல்களை தனிமனிதராக நின்று மீள்பதிப்பு செய்துள்ளார். அதுமட்டுமல்லாது இவர் பல அரிய நூல்களை சேகரித்து ‘வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்’ என்ற பெயரில் நடத்திவருகின்றார்.

சஞ்சிகைகள்:
தமிழ் எழில் என்ற கைகெழுத்து சஞ்சிகையுடன் கனடிய சஞ்சிகை வரலாறு ஆரம்பமாகிறது. 1985ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கையெழுத்து சஞ்சிகையாக ஆரம்பித்த இவ்விதழ் அதே ஆண்டு மார்கழி மாதம் தட்டச்சில் அச்சாகியது. கணனியில் தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்தி ரொறொன்ரோவில் வெளிவந்த நிழல் எனும் சஞ்சிகை, கனடியத் தமிழ் இதழியற் துறையில் ஒரு மைல் கல்லாக இடம்பெறுகின்றது.

ஐப்பதுக்கும் மேற்பட்ட சஞ்சிகை வெளிவந்த கனடா நாட்டில் தற்சமயம் விரல் விட்டு எண்ணக்கூடியவகையில் ஒரு சில சஞ்சிகைகளே வெளிவருகின்றது. அந்தவகையில் தூறல், காலம் சஞ்சிகைகளைக் குறிப்பிடலாம்.

பத்திரிகைகள்:
கனடாவில் தமிழர்களால் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல பத்திரிகைகள் வெளியிடப்படுகின்றன. ரொறன்ரோவில் தமிழ் பத்திரிகைளின் வரலாற்றை நோக்கும்போது,
1980க்குப் பின்னர் செந்தில்வேல் அவர்களால் ‘செந்தாமரை’ என்ற பெயரில் வெளியிடப்பட்டதே முதல்முதலில் வெளிவந்த தமிழ்ப் பத்திரிகை என அறியப்படுகிறது. கனடா உதயன், செந்தாமரை, ஈழநாடு, தாய்வீடு, விளம்பரம், சுதந்திரன், உலகத்தமிழர், சிறகு, உறவு, தமிழர் தகவல், நெற்றிக்கண், தங்கதீபம், புலத்தில், ஈகுருவி முதலானவை தமிழில் வெளிவருகின்ற பத்திரிகைகள். தமிழ் மீரர், மொன்சூன் ஜேனல், சிலோன் எக்ஸ்பிரஸ் ஆகியவை ஆங்கிலத்தில் வெளிவருகின்ற பத்திரிகைகள்.
இவ்வாறு நிறைய பத்திரிகைகள், சஞ்சிகைகள் கனடாவில் வெளிவந்தாலும் பெரும்பாலானவை அற்ப ஆயுசுடன் நின்றுபோகின்றன. பத்திரிகைகள் வெறும் விளம்பரங்களாலேயே நிறைந்துவிடுகின்றன. காத்திரமான இலக்கியப்படைப்புக்களை, கட்டுரைகளைத் தாங்கிவருகின்றவை மிகக் குறைவே. பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கான வாசகர்கள் தொகையும் குறைவாகவே காணப்படுகிறது. இவற்றின் நிரந்தர வாசகர்கள் என்று இருப்பவர்கள் மிக அரிதே.

இவைதவிர கனடாவில் நாடகத்துறை, சினிமாத்துறை என்பனவும் வளர்ச்சி கண்டுவரும் துறையாக விளங்குகிறது. கணிசமான திரைப்படங்கள் எம்மவர்களால் தயாரிக்கப்பட்டு, நடித்து வெளிவந்துள்ளன. ஒரு சில குறும்படங்களும் வெளியாகியுள்ளன. நாடகக் குழுக்கள் இணைந்து ஆண்டுதோறும் காத்திரமான நாடகங்களை மேடையேற்றி வருகிறார்கள். இளந்தலைமுறையினரும் ஆர்வமுடன் பங்குகொள்ளும் ஒரு இலக்கியத்துறையாக இதனைக் குறிப்பிடலாம். இத்துறை சார்ந்தவர்களாக கணபதி ரவீந்திரன், ரூபி யோகதாசன், கே.எஸ்.பாலச்சந்திரன், க.நவம், இராஜமீரா இராசையா, திவ்வியராஐன், எஸ்.ஸ்ரீமுருகன், ரவி அச்சுதன், கலகலப்பு தீசன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

கனடா தமிழ் இலக்கியம் பரந்தது. பல படைப்புக்களை, படைப்பாளிகளைக் கொண்டது. பல்துறைகள் சார்ந்தது. அவற்றையெல்லாம் இந்த சிறு கட்டுரைக்குள் என்னால் முடிந்தவரை தொட்டுக்காட்ட முற்பட்டிருக்கிறேன். கனடா எழுத்துலகில் படைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ள எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புக்களையும் முடிந்தவரை இங்கு பதிவாக்கியுள்ளேன். இவற்றுள் சில கருவும், அவை எழுந்த காலமும், சூழலும் கருதி ஈழத்துப் படைப்புக்களாகவும் உள்ளன. எனினும் கனடாவாழ் எழுத்தாளரால் படைக்கப்பட்டது என்ற நோக்கில் இக்கட்டுரையில் இணைத்துள்ளேன். படைப்பின் ஆழ, அகலங்களை ஆய்வுக்குட்படுத்தும்போது கனடா புலம்பெயர் இலக்கியத்தின் தனித்தன்மைகளை காணமுடியும். ஓவ்வொரு துறையும் தமக்கென தனித்தன்மையுடன் வளர்ச்சிகண்டு அவற்றை தனித்தனியே ஆழமாக நோக்க வேண்டிய விசாலம் கொண்டதாக இருக்கிறது.

உசாத்துணை நூல்கள்:
1. ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் - கலாநிதி நா.சுப்பிரமணியன்
2. ஆய்வுகள் பார்வைகள் பதிவுகள் - தொகுதி 2 – கலாநிதி நா.சுப்பிரமணியன்
3. பதிவுகள் - இணையத்தளம்
4. தமிழ்ஆதர்ஸ்.கொம் - இணையத்தளம்
5. விக்கிபீடியா
 

நன்றி: ஞானம் சஞ்சிகை (ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழ்)