பாரதியாரின் பன்முக ஆளுமை

முனைவர் நிர்மலா மோகன்

சிந்தனையாளர் எமர்ஸனின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி:
எமர்ஸனைப் பார்த்து ஒருவர் கேட்டார்: 'உங்கள் வயது என்ன?'
எமர்ஸன் சொன்னார்:
'360 ஆண்டுகள்!'
இதை நம்ப முடியாமல் அந்த மனிதர் மீண்டும் கேட்டார்:

'மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் சொல்லியதை நான் சரியாகக் கேட்கவில்லை. திரும்பவும் உங்கள் வயதைச் சொல்லுங்கள்!'

எமர்ஸன் சத்தமாகக் கூறினார்:
'360 ஆண்டுகள்!'

அந்த மனிதர் சொன்னார்: 'என்னால் இதை நம்ப முடியவில்லையே? இது முடியாத காரியம். நீங்கள் 60 வயதுக்கு மேல் இருக்க மாட்டீர்கள்!'

இப்போது எமர்ஸன் அமைதியாக – ஆனால் அழுத்தம் திருத்தமாக – இப்படிச் சொன்னார்:

'நீங்கள் சொல்வது சரிதான். என்னுடைய உண்மையான வயது அறுபதுதான். ஆனால், நான் ஆறு மடங்கு அதிகமாக வாழ்ந்திருக்கிறேன்.
360 ஆண்டுகளில் எப்படி வாழ முடியுமோ அப்படி இந்த 60 ஆண்டுகளைப் பயன்படுத்தி வாழ்ந்திருக்கிறேன்!'

எமர்ஸனைப் போலத் தான் பாரதியாரும். அவர் இந்த உலகில் வாழ்ந்தது என்னவோ முப்பத்தொன்பது ஆண்டுகள் தான்; ஆனால் இந்த முப்பத்தொன்பது ஆண்டுகளை அவர் நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்; ஆறு மடங்கு அதிகமாக தம் வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியையும் - ஏன் ஒவ்வொரு நொடியையும் என்று கூடச் சொல்லலாம் - அவர் வாழ்ந்து காட்டியிருக்கின்றார்.

'இறைவன் படைப்பில் யாவும் இனியதே!'

பாரதியார் கடையத்தில் குடியிருந்த வீட்டில் நாலு புறமும் விசாலமான வெளி உண்டு. சுற்றடைப்புச் சுவர் மண்ணினால் ஆனது. புளியமரமும், வேப்பமரமும் உண்டு. ஏழைக் குடியானச் சிறுவர்கள், தினந்தோறும் அதிகாலையில் வந்து, வேப்பம் பழம் பொறுக்கிக் கொண்டும், அடுப்பெரிக்கப் புளிய இலைச் சருகுகளை அரித்துக் கொண்டும் செல்லுவார்கள்.

ஒரு நாள் பாரதியார் அவர்களிடம் சென்று, 'சிறுவர்களே! எதற்காக வேப்பம்பழம் பொறுக்குகிறீர்கள்?' என்று கேட்டார். 'சாமி, வயிற்றுக்கு இல்லாததால் வேப்பம் பழத்தைத் தின்கிறோம்' என்றார்கள். அவர்களுடன் தாமும் சேர்ந்து வேப்பங்காயையும், புளியங்காயையும் பறித்துத் தின்றார் பாரதியார்.

'பகவானது சிருஷ்டிப் பொருள்கள் யாவும் அமிர்தம் நிறைந்தவை. 'வேப்பங்காய் கசக்கும்' என்று மனத்தில் எண்ணுவதனால் தான் கசக்கிறது. 'அமிர்தம்' என்ற நினைத்தால் தித்திக்கிறது!' என்று சொல்லி, அன்று முதல் நாவின்பத்தைத் துறந்தார் பாரதியார்.

'இளமையில் கல் என்றால் முதுமையில் மண்'

வீதியில் நடந்துகொண்டே இருக்கும் போதும் பாரதியாரின் மனம் அருமையான விஷயங்களில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும். திடீர் திடீரென்று நெருப்புப் பொறி பறப்பது போல் அவரது மூளையில் இருந்து அற்புதமான கருத்துக்கள் தெறித்து வரும். ஒரு சமயம் பாரதியாரும் வ.ரா.வும் காலை வேளையிலே சீனிவாஸாச்சாரியாரின் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தனர். வீட்டுத் திண்ணையிலிருந்து ஒரு பையன் 'இளமையில் கல்' என்று படித்த குரல் கேட்டது. உடனே பாரதியார், 'முதுமையில் மண்' என்றார்.

இளமையிலே கல்லாய் இருப்பவன் முதுமையில் கவனிப்பாரற்ற மண்ணாவது நிச்சயம். 'இளமையிலே தகதகவென்று மின்னும் கோடி சூரியப் பிரகாசத்துடன் நமது குழந்தைகள் ஜ்வலிக்க வேண்டும். அப்படி ஜ்வலித்தால், அவர்கள் முதுமையில் மண்ணாக மாட்டார்கள். உலகத்தார்கள் அவர்களை மதிப்பார்கள்; பின்சந்ததியார்கள் போற்றுவார்கள். இல்லாவிட்டால் நாம் இப்பொழுது நம் முன்னவர்களைப் பழி சுமத்துவது போல, நம்மைப் பின்சந்ததியார்கள் தூற்றுவார்கள்' எனத் தொடர்ந்தார் பாரதியார்.

பாரதியாரின் தன்மான உணர்வு!

தம் வாழ்நாள் முழுவதும் ஒரு சிட்டுக்குருவியைப் போலே விடுதலை உணர்வுடன் வாழ்ந்து காட்டியவர் பாரதியார். அவருக்கு எட்டயபுர அரண்மனையின் கைகட்டிச் சேவகம் பிடிக்கவில்லை.

ஒரு சமயம் மன்னர் தெருவில் போன போது பாரதியார் எழுந்து நிற்காமல் உட்கார்ந்திருந்தார். இதனால் அரண்மனையில் அவருக்கு வேலை போய்விட்டது. மன்னிப்புக் கேட்டுக் கொண்டு மறுபடி வேலைக்குப் போகலாம் என்றனர். 'எட்டயபுர அரசர் சுண்டைக்காய் அளவு பூமி வைத்திருக்கிறார். உலகம் பெரிது. அதிலே எனக்கு இடம் இருக்கிறது' என்று கூறி மறுத்துவிட்டார் பாரதியார்.

புறநானூற்றுத் தாயும் ஜப்பானியத் தாயும்

'தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையர் மதுரைச் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தின் போது ஆற்றிய உரையில் புறநானூற்றில் இருந்து வீரத்தாய் ஒருத்தியின் உணர்வினைத் சித்திரிக்கும் ஒரு பாடலை மேற்கோள் காட்டிப் பேசினார். அவரது பேச்சைக் கேட்ட பாரதியார் 1906-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் நாள் 'இந்தியா' பத்திரிகையில் 'அழியாப் புகழ் கொண்ட பழங்காலத் தமிழ் மாது' என்று ஒரு தலையங்கம் எழுதினார். அதன் முடிவில் 'ஓர் ஒப்பு'
(A Parallel) என்று தலைப்பிட்டு அவர் ஒரு ஜப்பானியத் தாய் பற்றிய உள்ளத்தை உருக்கும் உண்மை நிகழ்ச்சி ஒன்றை எடுத்துக்காட்டி இருந்தார்:

'மேலே கூறப்பட்ட தமிழ் மாதைப் பற்றிப் பேசுமிடத்து சென்ற ரஷ்ய – ஜப்பானிய யுத்தத்தின் போது நிகழ்ந்த ஒரு செய்தி ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு ஜப்பானியத் தாய் தனது பல குமாரர்;களைப் போர்க்களத்தில் இறக்கக் கொடுத்து விட்டுப் பிறகு ஒரு நாள் அழுது கொண்டிருந்தாள். அவளிடம் சென்று ஒருவர் 'அம்மா, ஏன் அழுகிறீர்கள்? உமது பிள்ளைகள் மஹாகீர்த்திகரமான மரணத்தையல்லவோ அடைந்திருக்கிறார்கள்?' என்று ஆறுதல் கூறினார். அதற்கு அத்தாய் 'ஐயா, நான் இறந்து போன மக்களின் பொருட்டாக அழவில்லையே? எனது தாய்நாட்டிற்கு கீர்த்தி வரும் பொருட்டாகப் பலியிடுவதற்கு இன்னும் பிள்ளைகள் இல்லாமல் போய் விட்டது என்று வருத்தம் அடைகிறேன்' என மறுமொழி தந்தாளாம்'.

'இந்தியா' பத்திரிகையின் சந்தா விவரம்

'இந்தியா' என்ற வார இதழைப் பாரதியார் 1906-ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கினார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் அதனுடைய இலட்சியம். தனிப்பிரதி விலை அணா ஒன்று. பாரதியார் அதற்கு ஆண்டுச் சந்தா நிர்ணயித்த முறையே அவரது தனித்தன்மைக்குப் பதச்சோறு:

' நமது பத்திரிகையின் சந்தா விவரம்:

எல்லா கவர்மெண்டாருக்கும் ரூ.
50.00
ஜமீந்தார்கள், ராஜாக்கள் முதலியவர்களுக்கு ரூ.
30.00
மாதம் ரூ.
200க்கு மேற்பட்ட வருமானம் உடையவர்களுக்கு ரூ.15.00
மற்றவர்களுக்கு ரூ
.03.00'

'பெண்கள் இரண்டு வீட்டிற்கும் விளக்கைப் போல் பிரகாசிக்க வேண்டும்!'

பாரதியாருக்கு அவ்வப்போது உதவிகள் புரிவதைத் தம் கடமையாகக் கொண்டு வாழ்ந்தவர் மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார். ஒருமுறை அவரது குடும்பத்தைச் சார்ந்த யதுகிரி அம்மையாருக்குப் பாரதியார் தனிப்பட்ட முறையில் சில அறிவுரைகள் சொன்னார். அவை எல்லாப் பெண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய வேத வாக்கியங்கள் ஆகும்.

'யதுகிரி, நான் சில புத்திமதிகள் சொல்கிறேன். மறக்காதே! பெண்களுக்கு மிக முக்கியமானது கற்பு. அதை உயிரைக் காட்டிலும் ஜாக்கிரதையாகக் காப்பாற்றுவது முதல் கடமை. அதற்காகக் கூண்டுக் கிளி போல் அடைப்பட்டுக் கிடக்க வேண்டாம். உலகத்தில் கணவன் ஒருவன் தவிர பாக்கிப் புருஷர்கள் எல்லாம் அண்ணன் தம்பிமார்கள்.

நீ புக்ககத்திற்குப் போனாலும் தைரியமாக இரு. பயப்படாதே. மனத்தில் உள்ளதை நேரில் சொல்லி விடு. மனத்தில் வைத்து உருகுவதை விட வாயினால் சொல்லி விடுவது நல்லது.

நீ இரண்டு வீட்டிற்கும் விளக்கைப் போல் பிரகாசிக்க வேண்டும். இரண்டு குடும்ப வாழ்க்கை கலப்பது முதலில் கஷ்டமாக இருக்கும். பழகியபின் வழக்கமாய் விடும்... தலைநிமிர்ந்து நட. உன் இரு புறமும் உள்ள இயற்கையைக் கண் குளிரப் பார். நேர்ப் பார்வையில் பார். கடைக்கண் பார்வையில் பார்க்கத் தக்கவன் கணவன் ஒருவனே. தந்தை, சகோதரர்கள், பிள்ளைகள் முதலியோரை நேராக நிமிர்ந்து பார்'.

பாரதியாரின் சங்கற்பங்கள்

'சில சங்கற்பங்கள்' என்ற தலைப்பில் பாரதியார் எழுதி இருப்பன:

  • 1. 'இயன்ற வரை தமிழே பேசுவேன், தமிழே எழுதுவேன். சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன். எப்போதும் பராசக்தி – முழு உலகின் முதற்பொருள். அதனையே தியானஞ் செய்து கொண்டிருக்க முயல்வேன். அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக் கொண்டிருக்க முயல்வேன்.

  • 2. பொழுது வீணே கழிய இடங்கொடேன். லௌகிக காரியங்களை ஊக்கத்துடனும், மகிழ்ச்சியுடனும், அவை தோன்றும் பொழுதே பிழையறச் செய்து முடிக்கப் பழகுவேன்.

  • 3. உடலை நல்ல காற்றாலும், இயன்ற வரை சலிப்பதாலும் தூய்மையுறச் செய்வேன்.

  • 4. மறைத்தும் தற்புகழ்ச்சி பாராட்டுதல் விரும்பேன்.

  • 5. மூடரின் உள்ளத்தில் என்னைப் பற்றிய பொய் மதிப்பு உண்டாக இடங்கொடேன்.

  • 6. ஸர்வ சக்தியுடைய பரம்பொருளைத் தியானத்தால் என்னுள்ளே புகச் செய்து எனது தொழில்கள் எல்லாம் தேவர்களின் தொழில் போல் இயலுமாறு சூழ்வேன்.

  • 7. பொய்மை, இரட்டுற மொழிதல், நயவஞ்சனை, நடிப்பு இவற்றால் பொருள் ஈட்டிப் பிழைத்தல் நாய்ப் பிழைப்பு என்று கொள்வேன்.

  • 8. இடையறாத தொழில் புரிந்து இவ்வுலகப் பெருமைகள் பெற முயல்வேன். இல்லாவிடின் விதி வசமென்று மகிழ்ச்சியோடு இருப்பேன்.

  • 9. எப்போதும் மலர்ந்த முகம், இனிய சொல், தெளிந்த சித்தம். இவற்றோடு இருப்பேன். ஓம்.'

இந்த ஒன்பது சங்கற்பங்களையும் பின்பற்றி ஒருவன் வாழ்ந்தான் என்றால் போதும்; உறுதியாக அவன் மாமனிதனாக விளங்குவான். அவனுக்கு இந்த மண்ணுலகு மட்டுமன்றி, வானமும் வசப்படும். பாரதியாரின் மொழியிலேயே சுட்ட வேண்டும் என்றால், அவன் இங்கேயே 'அமரத்தன்மை' எய்தி வாழ்வான்.

பாரதியாரின் நன்னெஞ்சம்

'பகைவனுக்கு அருள்வாய் – நன்னெஞ்சே' என்று தொடங்கிப் பாடிய வேதாந்தப் பாடலின் முடிவில்,

'தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையில் போற்றிடுவாய் - நன்னெஞ்சே!'


எனத் தம் நெஞ்சிற்கு அறிவுறுத்துவார் பாரதியார். அவர் இங்ஙனம் பாடியதோடு நின்றுவிடவில்லை; தனி வாழ்க்கையிலும் தம் கருத்திற்கும் கொள்கைக்கும் குறிக்கோளுக்கும் ஏற்ப நடந்து காட்டினார். அவர் தம்மைக் கீழே தள்ளிய கோவில் யானையைப் பற்றி 'சுதேசமித்திரன்' இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்தது வருமாறு:

'யானை இன்னார் என்று தெரியாமல் தள்ளிவிட்டது; தெரிந்திருந்தால் தள்ளியிருக்காது. துன்புறுத்தும் எண்ணமிருந்தால் கீழே விழுந்ததும் தூக்கி எறிந்திருக்காதா? அல்லது கால்களில் துவைத்திராதா? அப்படியே நின்றதன் அர்த்தம் என்ன? என்னிடம் அதற்கு உள்ள அன்பே காரணம்'.

இங்ஙனம் தம்மைக் கீழே தள்ளிய கோவில் யானையையும் அன்போடு சிந்தையில் நினைத்துப் போற்றியுள்ளார் பாரதியார்.

பரலி சு.நெல்லையப்பரின் கணிப்பு

பாரதியாரால் 'தம்பி' என்று தனியன்போடும் மிகுந்த உரிமையோடும் அழைக்கப் பெற்றவர் பரலி சு.நெல்லையப்பர். பாரதியாரைப் பற்றிய அவரது கருத்துக் கணிப்பு: 'இவர் தமிழ்நாட்டு 'ரவீந்திர நாதர்'. இவர் எனது தமிழ்நாட்டின் தவப்பயன்'.

பாரதியார் உள்ளும் புறமும் ஒத்த – தூய – ஒரு மாமனிதராக வாழ்ந்தார். தம் வாழ்விலும் வாக்கிலும் விடுதலை உணர்வையே அவர் பெரிதும் போற்றினார். என்றும் ஏழை எளிய மக்களின் கவிஞராக விளங்கவே அவர் மிகவும் விரும்பினார். தமது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ஆறு மடங்கு அதிகமாக வாழ்ந்து காட்டினார், அவரது ஆளுமையில் ஒரு குழந்தை – ஒரு வீரர் – ஒரு ஞானி என்னும் மூவரே எப்போதும் குடிகொண்டிருந்தனர்.
 

முனைவர் நிர்மலா மோகன்
தகைசால் பேராசிரியர்
தமிழ்த்துறை
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்
காந்திகிராமம்