காந்தியத்தின் கவிக்குரல்

முனைவர் இரா.மோகன்

எட்டாவது குழந்தை (நாமக்கல் கவிஞர் பிறந்த நாள்: 19.10.1888)

மோகனூர் என்பது, சேலம் மாவட்டத்தின் தென் கோடியில், காவேரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள ஒரு கிராமம். தமிழ் கூறு நல்லுலகால் 'நாமக்கல் கவிஞர்', 'தேசீயக் கவிஞர்', 'காந்தீயக் கவிஞர்', 'காங்கிரஸ் புலவர்', 'அரசவைக் கவிஞர்' என்றெல்லாம் போற்றிப் புகழப் பெற்ற வெ.இராமலிங்கம் பிள்ளை பிறந்ததால் பெருமை பெற்ற கிராமம் அது. அங்கே 1888-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ஆம் நாளன்று வெங்கட்ராம பிள்ளை – அம்மணி அம்மாள் இணையர்க்கு எட்டாவது ஆண் குழந்தையாகப் பிறந்தவர் இராமலிங்கம்.

அன்னை ஊட்டிய அமுதம்

நாமக்கல் கவிஞரின் அன்னையார் அம்மணி அம்மாள், ஊருக்குள் 'நல்ல புண்ணியவதி' என்று பேர் எடுத்தவர். தர்மம் தலைகாக்கும் என்ற நம்பிக்கை நிறைந்தவர். பின்னாளில் 'என் கதை' என்னும் பெயரில் எழுதிய 'சுய சரிதை'யில் கவிஞர் தம் தாயாரிடம் குடிகொண்டிருந்த சிறப்புப் பண்புகளையும் அவரது செயல் திறன்களையும் குறித்துப் பதிவு செய்துள்ளார்.

'முதலில் என் நினைவிற்கு வருவது என் தாயார் உருவமும், எனக்கு அவர் இளமையில் பழக்கிவிட்ட வழக்கங்களுந்தாம். என்னுடைய பிற்கால வாழ்க்கையில் எனக்கு உதவிய ஒழுக்கங்கள் அனைத்தும் என் அன்னை ஊட்டிய அமுதம் என்று அடிக்கடி நான் நினைப்பதுண்டு. என் சிறுபிராயத்திலேயே என் தாயார் செய்த உபதேசங்கள் இன்னும் என் காதில் ஒலிக்கின்றன' என்னும் கவிஞரது 'தன்வரலாற்றுக் குறிப்பு' மனங்கொளத் தக்கதாகும்.

'அன்னைக்குப் பதில் பின்னையொருவர் கிடைப்பாரா? எத்தனையோ நண்பர்கள் கிடைக்கலாம்? எத்தனையோ நண்பர்கள் கிடைக்கலாம்; எத்தனையோ கலியாணங்களைச் செய்து கொள்ளலாம்; எத்தனையோ பேருடன் உறவாடலாம்; ஆனால், அன்னை ஒருத்தி தான். அவன் அன்பும் அலாதிதான்' எனத் தாயன்பின் தனிப் பெருமையைக் கவிஞர் புலப்படுத்தியிருக்கும் பாங்கு பயில்வார் நெஞ்சை அள்ளுவதாகும்.

'கை மேல்' கிடைத்த பலன்

கவிஞரின் மனத்தில் பசுமரத்தாணி போல் பதிந்து விட்ட ஒரு நிகழ்ச்சி: கோயமுத்தூரில் உள்ள ஓர் உயர்நிலைப்பள்ளியில் ('பிராஞ்சு ஸ்கூல்') படித்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்தது. அப்போது அந்தப் பள்ளிக்கூடத்திற்குத் தலைமை ஆசிரியராக இருந்தவர் எஸ்.பி.ராமகிருஷ்ணையர் என்பவர். அவர் தம் வகுப்பில் ஒரு நாள் பெரிய கணக்கைக் கொடுத்து மாணவர்களைப் போடச் சொல்லிவிட்டு, நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஒரு புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்; மற்ற மாணவர்கள் எல்லாம் கணக்கைப் போட, கவிஞரோ எஸ்.பி.ராமகிருஷ்ணை-யருடைய முகவெட்டைக் கேலிப்படமாக வரைய முற்பட்டார். இங்ஙனம் கணக்குப் போடாமல் கேலிப் படம் வரைந்ததன் பலன் கடைசியில் 'கை மேல்' கிடைத்தது. ஆம், கவிஞரின் ஒவ்வொரு கைக்கும் மூன்று அடிகள் வீதம் கிடைத்தன!

இளமைப் பருவ நிகழ்ச்சி

நாமக்கல் கவிஞரின் இளமைப் பருவத்தில் நிகழ்ந்த ஒரு சுவையான நிகழ்ச்சி: ஒருமுறை கவிஞரின் தமக்கையாரான பழநியம்மாளும், அவருக்கு நாத்தி முறையுள்ள ஒரு பெண்ணும் கடுமையாகச் சண்டையிட்டுக் கொண்டனர்; சண்டையோ தீர்ந்த பாடில்லை; நேரம் நேரம் ஆக ஆக வலுத்துக் கொண்டிருந்தது; இரைச்சலும் கூடிக் கொண்டிருந்தது. அப்போது கவிஞர், தர்க்கம் செய்து கொண்டிருந்த பெண்கள் இருவருக்கும் நடுவில் நின்று கொண்டு தெருக்கூத்தில் 'கூத்துப் பார்க்க வந்தீர்களா? இங்கே குசலம் பேச வந்தீர்களா?' என்று கோமாளி, பேசிக் கொண்டிருக்கும் அவையோரைப் பார்த்து ஆடிக் கொண்டே பாடுவது போல,

'சாதம் போட வந்தீர்களா? /
இங்கே சண்டை போட வந்தீர்களா?:'

என ஆடிக்கொண்டே பாடினார். எல்லோரும் ஏக காலத்தில் அங்கே இதுவரை நிகழ்ந்த சண்டையையும் சச்சரவையும் மறந்து சிரித்து மகிழ்ந்தனர்.

கவிஞரைத் தமிழகத்திற்கு அறிமுகம் செய்துவைத்த பாடல்

'கத்தி யின்றி ரத்த மின்றி / யுத்தம் ஒன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை / நம்பும் யாரும் சேருவீர்!...
காந்தி என்ற சாந்த மூர்த்தி / தேர்ந்து காட்டும் செந்நெறி
மாந்த ருக்குள் தீமை குன்ற / வாய்ந்த தெய்வ மார்க்கமே'


என்னும் புகழ் பெற்ற பாடலே நாமக்கல் கவிஞரைத் தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது. இப்பாடல், காந்தியடிகளின் உப்புச் சத்தியாக்கிரகத்தின் போது வழிநடையாகப் பாடுவதற்கு என்று கவிஞர் இயற்றிய பாடலாகும். இன்றளவும் 'நாமக்கல் கவிஞர்' என்ற உடனே எவருடைய நினைவுக்கும் முதலில் வரும் பாடல் இதுவே எனலாம்.

'காந்தீயக் கவிஞர்'

இருபதாம் நூற்றாண்டின் விடியலில் தமிழ்க் கவிதை உலகை அணிசெய்த கவிஞர்கள் நால்வர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மை பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். பாரதியார், 'புதுமைக் கவிஞ'ராக விளங்க, பாரதிதாசன் 'புரட்சிக் கவிஞ'ராக விளங்கினார்; தேசிக விநாயகம் பிள்ளை 'குழந்தைக் கவிஞ'ராகத் திகழ, வெ.இராமலிங்கம் பிள்ளை 'காந்தீயக் கவிஞ'ராகத் திகழ்ந்தார்.
நாமக்கல் கவிஞரின் பாடல்களில் காந்தீயக் தாக்கம் மிகுந்து காணப்படுவதை அறிஞர்கள் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர். 'திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது. காந்தி தூவிய விதை நாமக்கல் கவிஞராகத் தோன்றியது' என்பது மூதறிஞர் ராஜாஜியின் இரத்தினச் சுருக்கமான மதிப்பீடு.

'தமிழன் என்று சொல்லடா!'
     தமிழன் என்றோர் இனமுண்டு;
தனியே அவற்கொரு குணமுண்டு;
    அமிழ்தம் அவனுடை வழியாகும்;
அன்பே அவனுடை மொழியாகும்'


என எடுப்பாகவும் எழுச்சியோடும் தொடங்குகின்றது நாமக்கல் கவிஞரின் 'தமிழன் இதயம்' என்ற புகழ் பெற்ற பாடல். அப்பாடலில் கவிஞர், தமிழனின் உயர் பண்புகளைத் தொகுத்துச் சொல்லியிருக்கும் அழகே அழகு:

'மானம் பெரிதென உயிர்விடுவான்;
    மற்றவர்க் காகத் துயர்ப்படுவான்;
தானம் வாங்கிடக் கூசிடுவான்;
    தருவது மேல்' எனப் பேசிடுவான்'


'தமிழன் பாட்டு' என்ற பெயரிலேயே நாமக்கல் கவிஞர் ஒரு பாடலைப் புனைந்துள்ளார். அப் பாடல்,

'தமிழன் என்று சொல்லடா! / தலைநி மிர்ந்து நில்லடா!'

என்னும் புகழ்பெற்ற வரிகளுடன் தொடங்குகின்றது. இவ்வரிகளை உணர்ச்சியோடு சொல்லும் எந்தத் தமிழனும் தலைநிமிர்ந்து நிற்பான் என்பது உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை.

குடியரசுத் தலைவர் பரிசைப் பெற்றுத் தந்த முதல் நாவல்

சிறைவாசத்தில் மலர்ந்த 'மலைக்கள்ளன்' என்னும் முதல் நாவலே நாமக்கல்லாரிடம் குடிகொண்டிருந்த படைப்புத் திறனை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. 'அடுத்து என்ன நிகழுமோ' என்ற ஆர்வநிலையைப் (ளுரளிநளெந) படிப்பவர் நெஞ்சில் ஏற்படுத்தி, சுவை குன்றாத வகையில் யாரும் எதிர்பாராத திருப்பு-முனைகளோடு கதையை நகர்த்திக் கொண்டு செல்லும் கலையில் நாமக்கல் கவிஞர் தனித்திறன் பெற்றவராக விளங்குகிறார். இக் கலைத்திறனின் முழுவீச்சையும் வெளிப்பாட்டையும் அவரது 'மலைக்கள்ளன்' நாவலில் காணலாம். விஜயபுரி வட்டாரத்தில் இருபது ஆண்டுக் காலமாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த மலைக்கள்ளனின் வாழ்க்கை வரலாற்றை அவர் ஒரு சுவையான நாவலாக்கியுள்ள பாங்கு உண்மையிலேயே மிகவும் பாராட்டத்தக்கதாகும். நாவலின் கதைப் பின்னலில் அவ்வப்போது விழும் முடிச்சுக்களைத் திறம்பட அவிழ்த்துக் கொண்டே வந்து, முடிவில் படிப்படியாக, மெல்ல மெல்ல மலைக்கள்ளன் யார், அவனது வாழ்க்கைப் பின்னணி யாது, அவனது உண்மையான இயல்பு எத்தகையது என்பதை வாசகருக்கு உணர்த்தியுள்ளமைக்காக நாமக்கல்லாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பிற்காலத்தில், 'மலைக்கள்ளன்' என்னும் பெயரிலேயே இந்நாவல் திரைப்படமாக வெளிவந்து, இமாலய வெற்றியைப் பெற்றமை, தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க ஒரு செய்தியாகும். மேலும், இத் திரைப்படமே 1954-ஆம் ஆண்டில் கவிஞருக்குக் குடியரசுத் தலைவர் பரிசைப் பெற்றுத் தந்தது; எம்.ஜி.ஆரின் கலையுலகப் பயணத்திலும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

பாரதி தரிசனம்

பாரதியாரைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற விருப்பம் நாமக்கல் கவிஞரின் உள்ளத்தில் நீண்ட காலமாக இருந்து வந்தது. ஒருநாள் அந்த நல்ல வாய்ப்பு கவிஞருக்குக் கைகூடியது. வெங்கட கிருஷ்ணய்யர் என்பவருடன் சேர்ந்து பாரதியாரைப் பார்க்கக் கானாடுகாத்தானுக்குச் சென்றார் கவிஞர். வெங்கட-கிருஷ்ணையர், கவிஞரைப் பாரதியாரிடம் அறிமுகம் செய்தார். 'இவர் ராமலிங்கம் பிள்ளை. நல்ல 'ஆர்டிஸ்ட்!' உங்களைப் பார்க்க வேண்டும் என்று...' முடிக்கு முன் பாரதியார், 'ஓ! ஓவியக் கலைஞரா! வருக கலைஞரே! தமிழ்நாட்டின் அழகே கலையழகுதான்' என்றார்; வணக்கம் செய்யக் கீழே குனிந்த கவிஞரின் கையைப் பிடித்து இழுத்து அருகில் அமர்த்தி, 'பிள்ளைவாள், நீர் நம்மை ஓவியத்தில் தீட்டும், நாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம்!' என்று சொல்லிவிட்டுக் கலகலவென்று சிரித்தார். வெங்கடகிருஷ்ணையர் சும்மா இருக்காமல் பாரதியாரிடம், 'ராமலிங்கம் பிள்ளை கூடப் பாட்டுக்கள் செய்வார்' என்றார். உடனே பாரதியார் ஆர்வத்தோடு, 'அப்படியா? ஓவியக் கலைஞர், காவியக் கலைஞருமா? எதைப் பற்றிப் பாடியிருக்கிறீர்? எங்கே ஒன்று பாடும், கேட்போம்' என்றார்.

கவிஞர் தயங்கிக்கொண்டும் நாணிக்கொண்டும் நடுங்கிய குரலில்,

'தம் அரசைப் பிறர்ஆள விட்டுவிட்டுத்
    தாம்வணங்கிக் கைகட்டி நின்ற பேரும்'


என்ற முதல் அடியைச் சொல்லி முடிப்பதற்குள் பாரதியார் துள்ளிக் குதித்துத் துடிக்கத் தொடங்கிவிட்டார். கவிஞர் பாட்டைப் பாடி முடித்தாரோ இல்லையோ. 'பலே பாண்டியா! பிள்ளை! நீர் ஒரு புலவன், ஐயமில்லை! 'தம் அரசை – பிறர் ஆள – விட்டுவிட்டு – தாம் வணங்கி – கைகட்டி – நின்ற பேர்கள்' – பலே! பலே! இந்த ஓர் அடியே போதும்' என்று சொல்லி அவரைத் தட்டிக் கொடுத்தார் பாரதியார்.

தேடி வந்த பதவிகளும் விருதுகளும்

வாழ்நாளின் பிற்பகுதியில் கவிஞரின் பணியினைப் பாராட்டும் வகையில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் வெளிமாநிலங்களிலும் பல்வேறு பாராட்டு விழாக்களும், வரவேற்பு விழாக்களும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டன் கவிஞருக்கு உயரிய பரிசுகளும் விருதுகளும் வழங்கப் பெற்றன.

1949-ஆம் ஆண்டில் தமிழக அரசு நாமக்கல்லாருக்கு 'அரசவைக் கவிஞர்' என்ற உயரிய பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது; இப்பட்டம் குமாரசாமி ராஜா முதலமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் கவிஞருக்கு வழங்கப்பெற்றது.

1956-ஆம் ஆண்டில் தமிழக அரசு கவிஞரைச் சட்ட மேலவை உறுப்பினராக
(M.L.C)  நியமனம் செய்தது; அப்போது காமராசர் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தார். பக்தவத்சலம் தமிழக முதல்வரான போது, கவிஞர் மீண்டும் ஒருமுறை சட்ட மேலவை உறுப்பினராக நியமனம் பெற்றார்.

முத்தாய்ப்பாக, 1971-ஆம் ஆண்டில் மைய அரசு கவிஞருக்குப் 'பத்ம பூஷண்' என்ற உயரிய விருதை வழங்கிச் சிறப்பித்தது.

மூச்சுத் தொடருக்கு முற்றுப்புள்ளி

எண்பத்து நான்கு ஆண்டுகள் காந்தீய வழியில் நாட்டு நலமே மூச்சாகக் கொண்டு முறையோடும் முனைப்போடும் உழைத்து வந்த கவிஞரின் தவ வாழ்வு இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தது;
1972-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி ஒரு முழுநிலா நாளின் பின்னிரவுப் பொழுதில் கடுமையான மாரடைப்பின் காரணமாகக் கவிஞரின் மூச்சுத் தொடருக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பெற்றது.

'என்றும் இருப்பவரே ஆவார்!'

கவிதை மட்டுமன்றி, காப்பியம், தன்வரலாறு, திறனாய்வு, உரை, உரைநடை, கட்டுரை, புதினம், நாடகம், மொழிபெயர்ப்பு எனப் பலவகைத் திறன்களும் நாமக்கல் கவிஞரிடம் களிநடம் புரிந்து நின்றன. காவியக் கலைஞராக மட்டுமன்றி, ஓவியக் கலைஞராகவும் அவர் திகழ்ந்தார்.

'பிறந்தவர் சாவது உண்மை / பெற்றபொன் நாட்டிற் காக
அறந்தரும் சிந்தை யோடு / அன்புசேர் பணிகள் ஆற்றி
இறந்தவர் அன்றோ என்றும் / இருப்பவர் ஆவார்!'


என்னும் அவரது மணிமொழிக்கு இணங்க, இந்திய நாட்டுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் சமுதாயத்திற்காகவும் அறம் தரும் சிந்தையோடு அன்புசேர் பணிகள் பல ஆற்றியுள்ள நாமக்கல் கவிஞர், 'என்றும் இருப்பவரே ஆவார்!'.


முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.