சிங்கப்பூர்த் தேசியக் கவிஞர் அமலதாசன்

முனைவர் இரா.மோகன்

'தன்னினப் பற்றில் வாழை;
    தாய்மொழிப் பற்றில் தென்னை;
முன்னணி வகிப்பில் மோனை;
    முனைப்பினில் பெரியார் - அண்ணர்
நன்னிலம் சிங்கப் பூரின்
    நலமெலாம் போற்று கின்ற
இன்னொரு தமிழ வேளாய்
    இருக்கின்றார் அமல தாசன்!'  
(புல்லாங்குழல், ப
.4).

என்பது அமலதாசனைப் பற்றிய சிங்கைக் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமியின் அழகிய சொல்லோவியம்; ஆற்றல்சால் ஆளுமைப் பண்புகளின் அருமையான பதிவு. கவிப்பேரரசு வைரமுத்துவின் சொற்களில் சுட்டுவது என்றால், 'பாவேந்தர் பாரதிதாசன் பரம்பரையில் இனமொழி அடையாளங்களோடு விளங்கும் முன்னணிக் கவிஞர்களில் அமலதாசன் குறிப்பிடத்தக்கவர்' ('கடல் கடந்த நெருப்பு', புல்லாங்குழல், ப.10).

'கவிஞரேறு', 'இனமான் பாவலர்', 'தமிழவேள் கொண்டான்', 'சிங்கப்பூர்த் தேசியக் கவிஞர்', 'கவிப்பேரொளி' முதலான பட்டங்களாலும், 'தமிழவேள் விருது', 'பாரதி-பாரதிதாசன் விருது', 'கணையாழி விருது', 'பெரியார் விருது' உள்ளிட்ட பல்வேறு விருதுகளாலும் சிறப்பிக்கப் பெறுபவர் அமலதாசன். சிங்கப்பூரில் நான்கு தேசிய மொழிகளுக்குமான பாடல் போட்டியில் 'சிங்கப்பூர் என்று சொல்லும் போதிலே, சிந்தைக்குள் இன்பம் பொங்கிப் பாயுதே!' எனத் தொடங்கும் அவரது பாடல் முதல் பரிசும் தேசிய விருதும் பெற்ற பெருமைக்கு உரியதாகும். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வளர்ச்சியிலும் கவிஞர் அமலதாசனுக்குப் பெரும்பங்கு உண்டு; 1982-ஆம் ஆண்டில் அதில் ஓர் உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டு, பின்னர் செயலவை உறுப்பினராக வளர்ந்து, அதன் பின்னர் துணைத்தலைவராகத் தேர்வு பெற்று, 1987-ஆம் ஆண்டில் தலைவராக உயர்வடைந்தவர் அவர்.
1960-ஆம் ஆண்டில் ஒரு நிறுவனத்தில் சாதாரண பணியாளராகத் தம் வாழ்வியல் பணியைத் தொடங்கிய அமலதாசன், நிறைவாகப் பிறிதொரு நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டு மேலாளராகப் பணியில் வீற்றிருந்து 1998-இல் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

1958-ஆம் ஆண்டில் இருந்தே அமலதாசன் தமது எழுத்துப் பணியைத் தொடங்கி இருந்தாலும் அவரது படைப்புக்கள் 2004-ஆம் ஆண்டில்தான் நூல் வடிவம் பெற்றிருக்கின்றன என்பது வியப்பையும் வேதனையையும் ஒருங்கே அளிக்கும் தகவல் ஆகும்; எனினும், 'தமிழர் தலைவர் தமிழவேள்' என்னும் வரலாற்றுப் படைப்பும், 'புல்லாங்குழல்' என்னும் இசைப் பாடல்களின் தொகுப்பும் ஆங்கில மொழியாக்கங்களுடன் உலகத் தமிழர் பதிப்பகத்தின் வாயிலாகப் பயில்வோர் கண்ணையும் கருத்தையும் கவரும் அழகிய வடிவங்களில் வெளிவந்துள்ளன என்பது கவிதை ஆர்வலர்களின் நெஞ்சங்களின் இன்பத் தேனைப் பாய்ச்சுவதாகும்.

சுருங்கக் கூறின், ' எத்தனை கோடி / இன்னல் வந்தாலும் / வரட்டும் பார்க்கின்றேன்!' (ப.273) என்னும் வைர நெஞ்சுடனும் விழுமிய குறிக்கோளுடனும் தமது 76-ஆம் வயதிலும் இலக்கிய உலகில் பீடுநடை பயின்று வருகின்றார் அமலதாசன் எனலாம்.

கவிஞர் போற்றும் சிங்கைத் திருநாட்டின் மாண்பு

'சிறியதுதான் சிங்கப்பூர்; / கீர்த்தியிலோ மிகப் பெரிதே!
அரியணையில் தமிழையுமே / அமர்த்தியநன் னாடு இதுவே!'

(தமிழர் தலைவர் தமிழவேள், ப.111)

எனச் சிங்கப்பூர் நாட்டின் மாண்பினைப் போற்றும் கவிஞர் அமலதாசன்,

'இயற்கை வளம் அற்றதுஎன / ஏங்கிமனம் துவளாமல்
வியக்கவே பாடுபட்டு / வியர்வைமுகம் காட்டிடுவாள்!'
(ப.119)

எனச் சிங்கப்பூர் நாட்டின் தனித்தன்மையினையும் - அந்நாட்டு மக்களின் உழைப்புத் திறத்தினையும் ஒற்றுமைப் பண்பினையும் - சுட்டிக்காட்டுவது குறிப்பிடத்தக்கது. 'பஞ்சம் எனும் சொல்லுக்குப் பஞ்சம் உள்ள பொன்னாடு!' (ப.113) என்றும், 'மண் மீதில் சிங்கப்பூர் மனங்கவரும் பொன்னிலவு!' (ப.115) என்றும் சிங்கப்பூரின் பெருமையினைச் சிந்தை குளிர எடுத்துரைக்கும் கவிஞர்,

'இருக்கின்ற நாடுகளில் / இன ஒருமை வரலாறு
பெருக்கி வரும் புகழ்ப்பேறு / பெற்றநாடு வேறு ஏது?'
(ப.115)

எனச் சிங்கப்பூர் நாட்டின் ஒருமைப்பாட்டு உணர்வினையும் வானளாவப் புகழ்கின்றார்.
பிறிதொரு பாடலிலும்,

'அலைபாடும் கடலும் / அணியாடும் கலமும் / அரசோச்சும் எழில்தங்கத் தீவு!
நிலையான வளமும் / நேரான வாழ்வும் / நிறையாகும் - எம் சிங்கை நாடு!'
(ப.107)

எனச் சிங்கை நாட்டின் சீரினையும் சிறப்பினையும் பெருமிதத்தோடு போற்றிப் பாடுவார் கவிஞர் அமலதாசன். மேலும் அவர்,

'சின்னஞ் சிறிய உருவத்தாள்! / செழுமை கொண்ட பருவத்தாள்!
எண்ண இனிக்கும் நேயத்தாள்! / எம்மை ஈன்ற தாய்த்தாள்!'
(ப.115)

எனச் சிங்கை மகளின் எழிலையும் ஏற்றத்தையும் அழகுத் தமிழில் புனைந்து உரைப்பார்.

'எங்கள் தாயகம் சிங்கப்பூரகம்! நாங்கள் சிங்கப்பூரர்கள்!' எனப் பறைசாற்றும் கவிஞர்,

'எங்கள் வளமும் / எங்கள் நலமும் / நாங்கள் பேணும் / ஒற்றுமை'
(ப.127)

என விதந்து கூறுவது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரைச் செதுக்கிய சிற்பி மாண்புமிகு லீ குவான் யூ அவர்களின் பெருமையைப் பறைசாற்றும் விதத்தில் கவிஞர் அமலதாசன் புனைந்துள்ள பாடல் 'தலைமகன் லீ!' என்பது.

'லீ எனும் நாயகன் / தோன்றினான்
இலட்சிய விதைகளைத் / தூவினான் ...
வைரமாய் ஒளிவிட / உழைத்தவன்
வையத்தில் தகுதியால் / உயர்ந்தவன்...
நால்வகை இனத்தையும் / கூட்டினான்
தோழமைத் தேரினை / ஓட்டினான்
சோலையாய்ச் சிங்கையை / மாற்றினான்...'
(பக்.243 245)

எனச் சிங்கப்பூரின் ஈடு இணையற்ற தலைமகனான லீ குவான் யூவுக்குப் புகழாரம் சூட்டுகின்றார் கவிஞர்.

'தமிழவேள்' பற்றிய கவிஞரின் சொல்லோவியம்

தமிழ்நாட்டின் திருவாரூர் தனில் பிறந்தவர் 'தமிழவேள்' எனச் சிறப்பிக்கப் பெறும் கோ.சாரங்கபாணி. அவர் தமது 'இமை மூடாத் தொண்டறத்தால் - சலியாத உழைப்பால் - எழில் சிங்கை நாட்டின் நலம் வளர்த்த' பெருமகனார்; தனக்கென்று வாழாமல் தாய் சிங்கை நாட்டுக்கும் இனத்திற்கும் ஓயாது பாடுபட்ட நாயகர்; கல்வியினால் அனைவரையும் கரை சேர்க்க முனைந்திட்ட பெற்றி மிகு தலைவர்; ஒற்றுமைக்குப் பாலம் இட்ட தமிழர் திருநாளைப் பற்றுடனே கொண்டாடித் தடம் பதித்த தகைமையர்; தொலைநோக்குச் சிந்தனையால் நாட்டு மக்களின் நெஞ்சங்களிலே விழிப்புணர்வை விதைத்தவர்.

''நாம் எழுந்தால் ஊழ் ஒடுங்கும் / நாம் நடந்தால் கீழ்நடுங்கும்
ஆம், எழுவீர்!' என முழங்கி / தமிழவேள் அணிவகுத்தார்'


                  (தமிழர் தலைவர் தமிழவேள், ப.173)

என அவரது ஆளுமைத் திறத்திற்கு மகுடம் சூட்டுவார் அமலதாசன்.

'எப்படியோ போகட்டும் / இறந்த காலம்!
எழுச்சியுடன் வரைந்திடுவோம் / புதுமைக் கோலம்!'
(ப.159)

என்னும் உயரிய கொள்கை முழக்கத்துடன், 'இனம் வாழ, மொழி வாழ, கலைகள் வாழ எம் தமிழர் விழிப்பாக இயங்கல் வேண்டும்' (ப.147) என வழிகாட்டி. தமிழினத்தை முன்னேற்றப் பாதையில் வழி நடத்திய தன்மானத் தலைவர் தமிழவேள்.

'தோற்றத்தில் அவர் ஏறு; / தொண்டுணர்வில் செம்பரிதி;
ஆற்றலிலே பாய் ஆறு; / அன்பினிலே அருமைத்தாய்!'
(ப.141)

என்பது தமிழவேள் குறித்துக் கவிஞர் தீட்டி இருக்கும் அற்புதமான சொல்லோவியம் ஆகும்.

கவிஞரின் குருதியில் கமழ்கின்ற நறுந்தமிழ்

'இருந்தமிழே உன்னால் இருந்தேன்' என மொழிவார் 'தமிழ் விடு தூது' ஆசிரியர். கவிஞர் அமலதாசனோ 'பாலூறும் தமிழ்' என்னும் கவிதையில்,

'அவளின்றி நானில்லை / அருஞ்செல்வம் வேறில்லை;
எவருக்கும் அவளைப்போல் / என் நெஞ்சில் இடமில்லை'
(ப.77)

என அறுதியிட்டு உரைக்கின்றார்.

'எம் குருதியில் கமழ்கின்ற நறுந்தமிழ்' என்றும், 'திருக்குறள் என்னும் செல்வத்தால் உலகினில் சிறந்தது' என்றும், 'அமிழ்தினும் மேலான அருட்கொடை' என்றும் அன்னைத் தமிழுக்குப் புகழாரம் சூட்டும் கவிஞர்,

' ... ... இந்தத் / தரணியில் பிறிதொன்று / தமிழினும் வல்லதோ?' (ப.81)
என வினவுகின்றார். கவிஞரின் கருத்தில், 'கன்னல் எனும் குணத்தோடும், கருணைமிகும் மனத்தோடும், இன்னமுதாய் எந்நாளும், இளமையுடன் இருந்தொளிரும்' தமிழ், 'உயிரான தமிழ்' (ப.83) ஆகும்.

'மொழிதனை விழியெனக் கொள்க!' எனக வலியுறுத்தும் கவிஞர்.

'தமிழிலே பாடினால் பாடு – நீ
     தமிழ்தெரி யாவிடில் தலைகுனிந்து ஓடு!'
(ப.87)

எனக் கடுமையாகச் சாடுகின்றார்.

'எனக்கென்ன குறைச்சல்?' என்னும் கவிதை அமலதாசனின் ஆழ்ந்திருக்கும் கவியுளத்தைத் திறந்து காட்ட வல்ல அற்புதமான கவிதை ஆகும். பைந்தமிழ் அமுதம் பொங்கி வருவதால் கவிஞருக்குப் பசி என்னும் துன்பம் அறவே இல்லையாம்; நைந்திடா மனத்தில் பாட்டுச் செழிப்பதால் நலந்தராக் கவலை அவருக்கு மருந்துக்கும் இல்லையாம்; ஐம்பெரும் காப்பிய நூல்கள் மணப்பதால் அவருக்கு வேறு ஆசைகளும் கிடையாதாம்; எம்பெருமான், எழில் செவ்வேள் அவரது நெஞ்சில் குடிகொண்டிருப்பதால் எதற்கும் அச்சம் என்பதும் அவரிடம் இல்லையாம்; மரம் செடி கொடிகள், மயில் குயில் கிளிகள், சுரந்திடும் அருவி, சுடர்விடும் பரிதி, உரம் தரும் செந்தேன், உலவிடும் தென்றல் எனச் சுற்றுமுற்றும் இயற்கை அன்னை சூழ்ந்திருக்கும் வரைக்கும் 'எனக்கென்ன குறைச்சல்?' (ப.93) எனப் பெருமிதமும் பேருவகையும் ததும்பக் கேட்கின்றார் கவிஞர் அமலதாசன்.

இந்தியப் பேரரசு தமிழ் மொழியைச் செம்மொழியாக முன் மொழிந்திருப்பதை அறிந்து ஏற்பட்ட மகிழ்ச்சியில் மலர்ந்த பாடலில்,

'தமிழ்மொழியும் செம்மொழியாய்த் / தலைநிமிர்ந்து நின்றதடா!' (ப.99)

எனச் செம்மாந்து முழங்கியுள்ளார் கவிஞர்.

பெரியார் பாசறையைச் சேர்ந்த முற்போக்குக் கவிஞர்

கவிஞர் அமலதாசனின் சமூக உணர்வுக்கும் முற்போக்குச் சிந்தனைக்கும் கட்டியம் கூறி நிற்கும் கவிதை 'பேதைமை'. அதில் அவர் தமிழினத்தைக் காலங்காலமாகப் பாழ்படுத்தி வரும் சாதிக் கொடுமையையும், எதற்கு எடுத்தாலும் சகுனம் பார்க்கும் மூடப் பழக்கத்தினையும், தமிழரிடையே நிலவி வரும் ஒற்றுமைக் குறைவினையும் கடுமையாகச் சாடியுள்ளார்.

' எத்தனை சாதியடா? - அதனால் / எத்தனை சண்டையடா?'

எனக் அக் கவிதையின் தொடக்கத்தில் தமிழினத்தை நோக்கிக் கேள்விக் கணை தொடுக்கும் கவிஞர், 'யானைப் படை நடத்தி - வெற்றி ஈட்டிய குடி'யில் வந்த மறத்தமிழன், இன்று மடத் தமிழனாக மாறி பல்லியின் ஒலி கேட்டு நெஞ்சம் பதறி ஓடுவதையும், பூனை குறுக்கிட்டால் சகுனப் பொருத்தம் இல்லை எனக் கூறிப் பின்வாங்குவதையும், தமக்குள் உயர்வு தாழ்வு உரைத்து ஒருவரோடு ஒருவர் சண்டை இட்டுக் கொள்வதையும், அச்சம் என்னும் மடமையில் சிக்கித் தவிப்பதையும் தோலுரித்துக் காட்டியுள்ளார்.

'பல்லியின் ஒலிகேட்டு - நெஞ்சம் / பதறியே ஓடுகின்றாய்;
தொல்லைகள் சூழும்என்று - நீயே / துன்பத்தில் வீழுகின்றாய்.
பூனை குறுக்கிட்டால் - சகுனப் / பொருத்தங்கள் இல்லை என்பாய்;
யானைப் படை நடத்தி - வெற்றி / ஈட்டிய குடி நீயோ?
உயர்வு தாழ்வுரைத்தே - இனத்தின் / ஒற்றுமை வீழ்ந்ததடா!'


எனத் தமிழினத்தின் வீழ்ச்சிக்காக மனம் வெதும்பும் கவிஞர், இன்று சமூகத்தில் நிலவி வரும் அத்தனை பேதைமைகளுக்கும் மடமைகளுக்கும் சாவு மணி அடிக்க வேண்டும் என்றால்,

'பெரியார் / பாசறை போய்ப் படிடா!' (பக்.308-309)
எனத் தமிழனுக்கு அறிவுறுத்தவும் தவறவில்லை.

'சரியாகச் சிந்தித்துச் சரியாமல் சமூகத்தைக் காத்தவர்' - 'படியாதார் வாழ்க்கை பாழாகும் எனப் புதுப்பாடங்கள் சொன்னவர்' - 'முடியாது என்பது முட்டாளின் சொல், அதை முயன்று இங்கு வென்றவர்' - 'இல்லாத சாதியை இருக்கின்றது என்றாரைத் தீப்பொறியாய் நின்று எரித்தவர்' - 'ஒழுக்கமே நெறி, உண்மையை அறி!' என்றவர் - 'உரிமைக்குப் போராடியவர்' (பக்.316-317) எனப் 'பகுத்தறிவுப் பகலவன்' தந்தை பெரியாருக்குக் கவிஞர் சூட்டியுள்ள புகழாரம் இங்கே மனங்கொளத் தக்கதாகும்.

பறவைகள் உணர்த்தும் வாழ்க்கைப் பாடம்

பறவை மற்றும் விலங்குகளின் அன்பு வாழ்க்கையை எடுத்துக்காட்டி அதன் மூலம் மனித குலத்திற்கு நல்ல செய்திகளை வழங்குவது என்பது தமிழ் இலக்கிய உலகில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த ஒரு மரபு ஆகும். சங்க இலக்கிய மரபில் சிறப்பிடம் பெறும் இறைச்சி இவ் வகையில் குறிப்பிடத்தக்கதாகும். 'அன்புறு தகுந இறைச்சியில் சுட்டலும்' எனத் தொல்காப்பியரும் இம் மரபினைச் சுட்டுவார். பாவேந்தர் பாரதிதாசன் தம் 'அழகின் சிரிப்பு' தொகுப்பில் புறாக்களிடம் இருந்து மனித குலம் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்வியல் பாடத்தினை எடுத்துரைப்பார்.

வாழையடி வாழை எனத் தொடர்ந்து வரும் இவ் வரிசையில் கவிஞர் அமலதாசனும் சேர்ந்துள்ளார்; 'பறவைகள்' என்னும் தலைப்பில் பாடிய கவிதையில் அவை ஒற்றுமையின் சின்னமாக விளங்குவதை எடுத்துக்காட்டியுள்ளார்.

'காய்ச்சல் இல்லை; கள்ளம் இல்லை / கன்னம்இடும் உள்ளம் இல்லை...
சட்டதிட்டம் கற்றதில்லை / சரியாக எண்ணுதடா!
பட்டங்களும் பெற்றதில்லை / பகிர்ந்தேதான் உண்ணுதடா!'


உருவினிலே சிறியவையாக இருந்தாலும் பண்பினிலே பறவைகள் உயர்ந்து விளங்குவதையும், ஒற்றுமையாக விளங்குதல், பகிர்ந்து உண்ணுதல் முதலான நல்ல பழக்கங்கள் அவற்றிடம் காணப்படுவதையும் கவிஞர் தம் கவிதையில் நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

தமிழ்ச் சமுதாயம் தலைநிமிரப் பாடுபடும் கவிஞர்

எதற்கு எடுத்தாலும் முணுமுணுத்த படி தொட்டாற் சுருங்கி போல் சிணுங்குவதில் கவிஞர் அமலதாசனுக்கு உடன்பாடு இல்லை.

'தமிழ்ச் சமுதாயம் / தலைநிமிர வேண்டும்;
தகத் தகாயமாய்த் // தமிழ் ஒளிர யாண்டும!;'
(ப.323)

-'இது தான் யாம் கொண்ட குறிக்கோள்; இது தான் எமது உயிர்க் கொள்கை' என முழங்கும் கவிஞர்,

'நாளைக்குப் பார்ப்போம் / என்றுதள் ளாமல்
நன்மையை இன்றே / நாடுவோம்!
வேளைகள் தோறும் / முயல்பவ ருக்கே
வெற்றிகள் குவியும் / அறிவோம்!'
(ப.145)

என 'நாளைப் போவாராக' எதையும் ஒத்திப் போடாமல் - தள்ளி வைக்காமல் - நன்மையை இன்றே - இக் கணமே - ந(h)டுவோராக, இடைவிடாமல் எப்போதும் முயற்சியை மேற்கொள்பவராக இருப்பவர்க்கே வெற்றி மீது வெற்றி முகவரி தேடிக் கொண்டு - வழி கேட்டுக் கொண்டு - வந்து சேரும் என முடிந்த முடிபாக மொழிகின்றார்.

இளைய தலைமுறைக்குக் கவிஞர் வழங்கும் விழுமியக் கல்வி

கவிஞர் அமலதாசன் ஆளுமை வளர்ச்சியில் கல்விக்குத் தரும் இடம் முதன்மையானது. 'தேடக் கிடைக்காத செல்வம்' என்றும், 'செல்வத்துள் சிறந்தது' என்றும், 'நல்கினும் குறையாது கல்வி' என்றும், 'உலகமே போற்றிடச் செய்யும்' என்றும் கல்விக்குப் புகழாரம் சூட்டும் கவிஞர்,

'கல்விக்குக் கரைஎங்கும் / இல்லை ...
கல்விக்குக் கல்வியே / எல்லை - தம்பி
கவனமாய்க் கேள் என்றன் / சொல்லை!'
(ப.139)

என இளைய தலைமுறைக்குக் கல்வியின் இன்றியமையாமையை உணர்த்துகின்றார்; நாளும் பயின்றால் குறை எல்லாம் தீருவதோடு, நலமெலாம் வாழ்வில் மழை எனப் பெய்யச் செய்யும் வல்லமை படைத்தது என்றும் கல்வியின் பெருமையை இசைக்கின்றார். நிறைவாக, 'கல்வி அறிவில் தெளிவூட்டி, என்றும் உனக்குப் புகழ் நாட்டும்!' (ப.162) என மொழிகின்றார்.

இளையோர் சொல்வதோடு நின்று விடாமல், சொன்னதைச் செய்து முடிக்கும் செயல் வீரராக வாழ்வில் உயர்தல் வேண்டும் என வலியுறுத்தும் விதத்தில்,

' சொன்னது போதும், செய்வோம்' (ப.143)

என இரத்தினச் சுருக்கமாக அறிவுறுத்துகின்றார் கவிஞர். மேலும் அவர்,

'சின்னஞ் சிறிய / எறும்புகள் போலே
சேர்ந்தே உழைப்போம் / உய்வோம்!'
(ப.143)

என்று வாழும் முறைமையைப் புலப்படுத்துகின்றார்.

'வேலையை முடிப்போம் . விழிப்போடு!
வெற்றியைத் தொடுவோம் . களிப்போடு!'
(ப.157)

என்பது கவிஞர் இளைய தலைமுறைக்கு வலியுறுத்தும் வெற்றி மந்திரம் ஆகும்.

வளமார் தமிழாய் இனித்திட்ட வாழ்க்கைத் துணைநலம்

'என் உயிரில் கலந்து உறவான என் மனைவி, என் கவிதைகள் நூலாக வேண்டும் என ஆயிரம் முறை சொல்லி என்னிடம் அழுதிருக்கிறாள். பட்டுப் புடவையோ - தங்க நகையோ அவள் என்னைக் கேட்டதே இல்லை - கேட்டதெல்லாம் இந்தக் கவிதை நூல்களைத் தான். இன்று அவள் விருப்பம் நிறைவேறியிருக்கிறது. ஆனால் அதைப் பார்க்க அவள் இல்லையே என எண்ணும் போது...' (நூலாசிரியரின் அகவுரை, புல்லாங்குழல், பக்.65-66) எனத் தம் வாழ்க்கைத் துணை நலமான திரேசாளைப் பற்றிய ஈர நினைவுகளைப் பதிவு செய்தள்ள அமலதாசன், 'மஞ்சளாய்க் குங்குமமாய் மணந்தவள் எங்கே?' என்னும் தலைப்பில் உருக்கமான கையறு நிலைக் கவிதை ஒன்றினையும் படைத்துள்ளார்.

'பிள்ளைபோல் எனைப் பேணிக் / காத்தாளே பூவை!
பெருமையே வடிவாகப் / பூத்தாளே பாவை! ...
நெஞ்சுக்குள் உயிர்மூச்சாய்க் / கொண்டாளே என்னை!
நினைவெல்லாம் நானாகக் / கண்டாளே நங்கை!
மஞ்சளாய்க் குங்குமமாய் / மணந்தவள் எங்கே?
மணியாய்க் குணங்கள் / அணிந்தவள் எங்கே?'
(பக்.200-201)

என்னும் கவிஞரின் உயிர்ப்பான வரிகள் படிப்பவர் கண்களைக் குளமாக்கி, நெஞ்சங்களைப் பாகாய் உருக்க வல்லவை ஆகும். 'வள்ளுவன் குறள் போல அணைத்தவள் - வளமார் தமழிhய் இனித்தவள்' எனப் பெண்ணின் நல்லாளின் பேரன்பினைப் பேசும் போதும் கவிஞரின் உள்ளத்தில் திருக்குறளும் தமிழும் கொலுவிருப்பது நோக்கத்தக்கது. இல்லறமாம் நல்லறத்தைச் சுட்டும் வகையில் 'பண்பான அந்தப் பால்வண்ண உறவு' எனக் கவிஞர் கையாண்டுள்ள அடிகள் அவரது கைவண்ணத்தைக் காட்டுவனவாகும்.

கவிஞரின் கனவு

'புதுமைக்கும் பழமைக்கும் / பொற்பாலம் அமைப்பேன்!' (ப.327)

என்பது கவிஞர் அமலதாசனின் தாரக மந்திரம்.

' தவறில்லாத் தனியுலகம் / படைக்க வேண்டும்!' (ப.283)

என்பது அவரது விழுமிய கனவு

'அந்த வானகமும் / இந்த வையகமும் - என்றன் / பாடல்களில் அடக்கம்!
எந்தச் சூழலிலும் / நல்ல காரியங்கள் - அன்னை / தூண்டுதலில் நடக்கும்!'
(ப.253)

என்னும் கவிஞரின் வாக்கு நடைமுறைக்கு வரும் நாள் நீண்ட தொலைவில் இல்லை.

'தூய வாழ்க்கை இவள் வாழ்க்கை / தொண்டு நெஞ்சம் இவள் நெஞ்சம்
நேயம் கொண்டு நிறைவாக / நீடுவாழ்வாள் சிங்கை மகள்!'
(ப.119)

என்னும் கவிஞரின் சொற்களைக் கொண்டே நாமும் அவரை - தூய வாழ்க்கையும் தொண்டு நெஞ்கமும் நேய உணர்வும் கொண்ட சிங்கை மைந்தரான அவரை - நிறைவாக, நீடு வாழுமாறு வாழ்த்தி மகிழலாம்; வணங்கி நெகிழலாம்!
 


முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.