அருட்செல்வரின் ஒரு நூல்: 'அருட்கவியும் மகாகவியும்'

முனைவர் இரா.மோகன்


ரே மொழியில் தோன்றிய இரு கவிஞர்களை ஒப்பிட்டு ஆராய்வது ஒப்பீட்டு முறையில் (Comparative method) அடங்கும்;  வெவ்வேறு  மொழியில் தோன்றிய - ஒப்புமைப் பண்பு கொண்ட - இரு கவிஞர்களை ஆய்வுக்கு உட்படுத்துவது ஒப்பீட்டுத் துறை (Discipline) சார்ந்தது ஆகும். அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களின் 'அருட்கவியும் மகாகவியும்' என்னும நூல் ஒப்பீட்டு முறையில் அமைந்த ஓர் அற்புதமான ஆய்வு நூல் ஆகும். நூலின் தலைப்பில் இடம்பெற்றுள்ள 'அருட்கவி' என்னும் சிறப்புப் பெயர், இராமலிங்க சுவாமிகளைக் குறிக்கும்; 'மகாகவி' என்னும் சிறப்புப் பெயர், சுப்பிரமணிய பாரதியாரைச் சுட்டும். முன்னவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த அருட்கவி (1823-1974); 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடிய இரக்க நெஞ்சினர். பின்னவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் விடியலிலும் வாழ்ந்த மகாகவி (1882-1921); 'எமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராது இருத்தல்' என முழங்கிய ஆற்றலாளர். இருவரையும் ஒப்பீட்டு நோக்கில் பல்வேறு கோணங்களில் நுண்ணிதின் ஆராய்ந்து அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்கள் எழுதியுள்ள நூல் 'அருட்கவியும் மகாகவியும்'. இந் நூல் 11 இயல்களால் ஆனது; 180 பக்க அளவில் அமைந்தது; நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில் அவர்களின் அணிந்துரையைப் பெற்றது.

காலச் சூழலும் வாழ்க்கைப் பின்னணியும்

'அருட்கவியின் காலமும் மகாகவியின் சூழலும்' என்னும் நூலின் முதல் கட்டுரை அழகிய தோரண வாயிலாக அமைந்து, ஆசிரியரின் ஆய்வுலகம் நோக்கி நம்மை ஆற்றுப்படுத்துகின்றது. 'கல் நெஞ்சம் தொண்டவர்களின் இருதயத்தில் கூட, இரக்கம் சுரக்கும் படி கவி பாடுவதில் தலைசிறந்தவர் வள்ளற் பெருமான்' (அருட்-கவியும் மகாகவியும், ப.9) என்றும், 'தமிழ்க் கவிதையின் போக்கை வள்ளற் பெருமான் தான், முதன்முதலில் எளிமைப்படுத்தினார்' (ப.30) என்றும் சுவாமி இராமலிங்கருக்குப் புகழாரம் சூட்டும் அருட்செல்வர், 'தமது கருத்துக்களுக்காக நிறுவனங்களை உருவாக்கிய முதல் தமிழர் வள்ளற் பெருமான் தான்' (ப.10) என்று இராமலிங்கரின் தனிப்பெருந் தகைமையினை எடுத்துக்காட்டுவது குறிப்பிடத்தக்கது. புள்ளிவிவர அடிப்படையில் வள்ளலாரின் காலச் சூழலை இவ்வியலின் தொடக்கத்தில் பதிவு செய்துள்ள அருட்செல்வர், 19-ஆம் நூற்றாண்டில் இந்தியச் சமுதாயத்தில் தோன்றிய நாராயண குரு, கந்துகூறி வீரேசலிங்கம் முதலான சீர்;திருத்தவாதிகளையும் மறு-மலர்ச்சியாளர்களையும் அவர்களது சிந்தனைகளையும் ஒப்பீட்டு நோக்கில் மேற்கோள் காட்டிச் செல்வது அருட்செல்வரின் பரந்துபட்ட புலமையைப் பறைசாற்றுகின்றது. சாதி வேறுபாடுகளைச் சாடியும் சமுதாயச் சீர்கேடுகளைக் கண்டித்தும் வட இந்தியாவில் தோன்றிய பிரம்ம சமாஜம் (ராஜாராம் மோகன் ராய்), பிரார்த்தனா சமாஜம் (ஆத்மராம் பாண்டுரங்கா), ஆரிய சமாஜம் (தயானந்த சரஸ்வதி), இராமகிருஷ்ண மடம் (சுவாமி விவேகானந்தர்), பிரம்ம ஞான சபை (பிளாவட்ஸ்கி ரூ கர்னல் ஆல்காட்) ஆகியவற்றைப் போலத் தென்னிந்தியாவில் - குறிப்பாகத் தமிழ்நாட்டில் - வள்ளலார் தோற்றுவித்தது சன்மார்க்க இயக்கம் என இவற்றிற்கு இடையே விளங்கும் ஒற்றுமைப் பண்பினைச் சுட்டிக்காட்டும் அருட்செல்வர், 'ராஜாராம், தயானந்தர், இராமகிருஷ்ணர் இம் மூவரும் இந்திய வைதீக சமயத்தில் சீர்திருத்தம் செய்தவர்கள். இராமலிங்கரோ சீர்திருத்தம் செய்வதற்குப் பதிலாக புதிய மார்க்கத்தையே உருவாக்கினார்' (ப.33) என இராமலிங்கரின் தனித்தன்மையினையும் அடையாளம் காட்டி இருப்பது நோக்கத்தக்கது. அருட்செல்வரின் நோக்கில் வள்ளலார் காண விரும்பியது ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை மலர்ந்த மாபெரும் புதிய சன்மார்க்க உலகத்தையே ஆகும். அந்த உலகம்,

'ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமை உளர்ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்'


என்னும் புதிய உலகம் ஆகும்.

'வள்ளற் பெருமான் சித்தி பெற்ற
8 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதியார் தோன்றுகிறார்' (ப.36) என மகாகவி பாரதியின் உதயத்தைப் பற்றிக் குறிப்பிடும் அருட்செல்வர், 'வள்ளற்பெருமான் பல வகையிலும் மகாகவி பாரதிக்கு முன்னோடியாக இருந்திருக்கின்றார்' (ப.35) என்பதைக் தக்க சான்றுகள் காட்டி நிறுவியுள்ளார்; மேலும் அவர், பாரதியார் தமது சொற்களில், 'தமிழ்நாட்டின் புதிய விழிப்புக்கு ஆதிகர்த்தா' (ப.36) என இராமலிங்க சுவாமிகளைப் பற்றிக் கூறியிருப்பதையும் எடுத்துக்காட்டி-யுள்ளார். நிறைவாக, 'குடும்பச் சூழலைப் பொறுத்த வரை வள்ளலாரும் பாரதியாரும் தாயில்லாதவர்களாகத் தான் இருந்திருக்கின்றார்கள்' (ப.37); 'இவ்விருவரின் இறுதிப் பகுதிக் காலகட்டம் துயரம் மிக்கதாகத் தான் இருந்தது' (பக்.42-43) என்றாற் போல் தனிவாழ்வில் இருவருக்கும் இடையே காணப்பெற்ற எளிய ஒப்புமைகளையும் அருட்செல்வர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

அன்பை ஆராதிக்கும் அருட்கவியும் மகாகவியும்

'கவிதை என்பது ஒரு தகவலைத் தருகின்ற துணுக்கு அல்ல. நினைந்து நினைந்து மகிழும் இன்ப ஊற்று. தொட்டனைத்து ஊறும் கேணி' (ப.45) எனக் கவிதைக்கு வரைவிலக்கணம் வகுக்கும் அருட்செல்வர், இயற்கைக் கவிஞர்கள் அழகுக் கவிஞர்கள், புரட்சிக் கவிஞர்கள், தத்துவக் கவிஞர்கள், குழந்தைக் கவிஞர்கள், காவியக் கவிஞர்கள், தேசியக் கவிஞர்கள், பகுத்தறிவுக் கவிஞர்கள், பக்திக் கவிஞர்கள் எனக் கவிஞர்களைப் பல்வேறு பெயர்களால் வகைப்படுத்து-கின்றார்; 'இவர்களில் மகாகவியாகத் திகழும் மதிப்பும் சிறப்பும் அருட்கவிகளுக்கே உரியதாகின்றது. அருட்கவிகள் தான் மகாகவிளாக எண்ணப்படுகிறார்கள். அதுவும் தெய்வத்துள் ஒருவராக வைத்து எண்ணப்படுகிறார்கள்' (ப.46) எனவும் கருத்துரைக்கின்றார்.

'ஆருயிர்களுக்கு எல்லாம் நான் அன்பு செய்ய வேண்டும்' என இறைவனிடம் வரம் கேட்ட வள்ளற் பெருமான் அருட்கவியாகவே தோன்றி வளர்ந்து மலர்ந்து மணம் வீசுகின்றார்; 'அன்பு எனும் பிடியுள் அகப்படும் மலையே' என இறைவனை விளித்துத் தொடங்கும் வள்ளற் பெருமான், 'அன்பு உருவாம் பரசிவமே!' என அன்பின் உருவமாகவே இறைவனைக் காண்கின்றார். 'திருஅருட்பாவை ஈடுபாட்டோடு படிக்கின்ற ஒருவரின் உள்ளம் நிச்சயமாக அன்பு மயமான உள்ளமாகவே இருந்திருக்கும் என்பதில் எவருக்கும் ஐயப்பாடு தேவை இல்லை' (ப.51) என்பது அருட்செல்வரின் முடிந்த முடிபு.

அருட்கவி இராமலிங்க சுவாமிகளின் அடிச்சுவட்டில் மகாகவி பாரதியும் அன்பைப் பற்றி மிக ஆழமாகச் சிந்தித்துள்ள இடங்களை அருட்செல்வர் பட்டியல் இட்டுள்ளார். புரட்சிக் கவி, தேவிய கவி, பக்திக் கவி என்றாற் போல் பல்வேறு பரிமாணங்களைப் பாரதி பெற்றிருந்தாலும், 'அவன் கவிதைகள் அனைத்திற்குள் அன்பையே ஆணிவேராக வைத்து வளர்த்தெடுத்துள்ளான்' (ப.49) என அழுத்தம் திருத்தமாக உரைக்கின்றார் அருட்செல்வர்.

'பாட்டினில் அன்பு செய்'


எனத் தமது 'புதிய ஆத்திசூடி'யில் கூறும் பாரதி, 'பாப்பாப் பாட்'டிலும் 'முரசு'ப் பாட்டிலும், 'அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்' என்றும், 'உயிர்களிடத்தில் அன்பு வேணும்' என்றும், 'அன்பு என்று கொட்டு முரசே!' என்றும் மீண்டும் மீண்டும் பாப்பாவுக்கு அன்பையே வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.

'பாரதியை மிகச் சரியாக நாம் உலகுக்கு அறிமுகம் செய்ய வேண்டுமானால், அதற்குப் பாரதியைப் பன்முகமாக நாம் ஆய்வு செய்ய வேண்டும்' (ப.53) எனக் கருத்துரைப்பதோடு நின்று விடாமல், 'உதாரணமாக, பாரதிக்கு வழகாட்டி போல் அமைந்துள்ள வள்ளலார் அருட்பாவோடு ஒப்பிட்டுப் பரப்ப வேண்டும்' (ப.53) எனக் குறிப்பாக ஒப்பாய்வுக் களத்தையும் அருட்செல்வர் சுட்டி இருப்பது சிறப்பு. முத்தாய்ப்பாக, அருட்செல்வர் குறிப்பிடுவது போல், 'பாரதியை நன்கு பரிசீலித்து ஆராய்ந்தால் பாரதிக்குப் பல வகையிலும் முன்னோடியாக வள்ளற் பெருமான் இருந்தார் என்பதை அறிய முடியும்' (ப.54)

சாதிக் கொடுமையைச் சாடும் அருட்கவியும் மகாகவியும்

சாதிக் கொடுமையைக் கடுமையாகச் சாடுவதில் அருட்கவியும் மகாகவியும் பெரிதும் ஒன்றுபடுகின்றனர். 'பகுத்தறிவுப் பகலவன்' எனப் போற்றப்படும் தந்தை பெரியார் ஜ'அவருடைய எழுத்துக்களையும், பேச்சுக்களையும் நான் என் பதிமூன்று வயதில் இருந்தே கேட்டுக் கொண்டும் படித்துக் கொண்டும் வந்திருக்கிறேன்' (ப.57) என அருட்செல்வரே இந்நூலில் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்ஸஇ தமிழ்த் தென்றல் திரு.வி.க. ஆகியோர் இந் நூற்றாண்டில் சாதிக் கொடுமைக்கு எதிராக உரத்துக் குரல் கொடுத்த பெருமக்கள் ஆவர். 'வள்ளற் பெருமானோ தாம் வாழ்ந்த காலத்தில் ஜாதிகளை அவரைப் போலக் கண்டித்தவர் எவரும் இல்லை' (ப.64) எனக் குறிப்பிடும் அருட்செல்வர், ஆறாம் திருமுறையில் வள்ளற் பெருமான் சாதி ஆசாரங்களை மிகக் கடுமையாகச் சாடி இருக்கும் இடங்களை எடுத்துக்காட்டியுள்ளார். 'வள்ளற் பெருமான் தான் தமிழ்நாட்டில் ஜாதி சமய சங்கற்ப விகற்பங்களுக்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர்' (பக்.70-71) எனப் பதிவு செய்யும் அருட்செல்வர், 'பெருமான் பாதை போட்டுக் கொடுத்து விட்டதால், அதற்குப் பிறகு வந்த பாரதி அப்பாதையில் மிகத் தீவிரமாகச் செல்கின்றான்' (ப.71) என வள்ளலார் வழியில் பாரதி நடை பயில்வதைத் தக்க சான்றுகளுடன் சுட்டிக்காட்டுகின்றார்; இன்னும் ஒரு படி மேலே சென்று, 'வள்ளலார் எத்தனை ஆணித்தரமாக ஜாதி சமய ஆதிக்கங்களை எதிர்க்கின்றாரோ அவைகளை எல்லாம் நன்றாக நெஞ்சில் வாங்கிக் கொண்டு அவரையும் விடத் தீவிரமாக எதிர்க்கின்றான் பாரதி' (ப.73) என நிறுவுகின்றார் அருட்செல்வர்.

குழந்தைகளுக்குப் பாட்டு எழுதிய போது பல கவிஞர்கள், 'நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடிவா', என்றும், 'தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு, துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி' என்றும், 'கிளியே, கிளியே - உன் கழுத்துக்கு வண்ண மாலை இப்படிப் போட்டது யார்?' என்றும் எழுதிக் கொண்டிருந்த போது,

'சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்'


என்று பாரதி பாப்பாவுக்குப் பாடிய போது கூறியிருப்பது நோக்கத்தக்கது. 'எத்தனை பெரிய கருத்தைப் பிஞ்சு நெஞ்சங்களில் அவன் (பாரதி) விதைக்கிறான் என்பதைப் பாருங்கள்' (ப.71) என இங்கே பாரதியை உளமாரப் போற்றும் அருட்செல்வர், 'அவனுடைய பாட்டு நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்' (ப.73) எனப் புகழாரம் சூட்டுகின்றார். மேலும், அருட்செல்வரின் கருத்தில், 'சாதிப் பேய் தலை விரித்து ஆடியதைச் சாடியதில் வள்ளற் பெருமானை அடியொற்றி மேலும் உரமும் ஊக்கமும் பெற்று உரத்த குரலில் பாரதி பேசுகின்றான்... வள்ளற் பெருமானும் பாரதியும் தந்தையைப் பின்பற்றிய தனயனைப் போல சாதி சமய வழக்கை ஒழிப்பதில் ஈடுபட்டிருந்தனர்' (ப.78) என்பதே உண்மை.

இரக்கமும் வீரமும்

பெரும்பாலான உயிர்களின் துன்பங்களுக்கு மனிதர்களின் இரக்கம் இன்மை தான் - கல் நெஞ்சம் தான் - காரணம். எனவே தான் உயிர்க் கொலையும் புலைப்புசிப்பும் தவிர்ப்பதைத் தமது சன்மார்க்க இலட்சியத்தின் அடிப்படைக் கொள்கைகள் ஆக்கினார் வள்ளற் பெருமான். அவரது கனிந்த மனம் உலகில் மனிதர்கள் மட்டும் அல்ல, அனைத்து உயிர்களும் படும் துன்பங்களைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கசிந்து உருகியது;

'மண்ணுலகதிலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறிது எனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன்'


என மொழிந்தது. 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்றாற்போல் கருணை, தயவு, ஈரம், இரக்கம், அன்பு, உறவு ஆகியவற்றை எதிரொலிக்கக் கூடிய பாடல்கள் பலவற்றை வள்ளற் பெருமான் பாடியுள்ளார்.

'வள்ளற் பெருமானின் பெரும்பாலான பாடங்களில் இரக்க உணர்வு ததும்புவதை நாம் பார்க்கலாம்' எனக் குறிப்பிடும் அருட்செல்வர் ஒப்பீட்டு நோக்கில், 'இதே போல பாரதியின் பெரும்பாலான பாடல்களில் வீர உணர்வு விரவிக் கிடப்பதை நாம் காணலாம். மனிதனின் ஆன்ம விடுதலைக்கு இரக்கமே முதல் தேவை என்றார் வள்ளலார். மனிதனின் அரசியல் விடுதலைக்கு வீரமே முதல் தேவை என்றான் பாரதி' (ப.89) எனக் கருத்துரைப்பது மனங்கொளத் தக்கது.

வள்ளற் பெருமான் 'சமய சன்மார்க்கம்' என்னும் புதிய மார்க்கத்தினைக் கண்டார். அது போல, பாரதி 'தேசியம்' என்னும் புதிய சமயத்தை உருவாக்கினார்; 'நாட்டைத் தாயாகவும் தந்தையாகவும் உருவகித்துப் பேசி வந்த மக்களிடையே அதைத் தெய்வம் என்று உயர்த்திக் கூறிய முதல் கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்' (ப.91) எனக் குறிப்பிடும் அருட்செல்வர், 'பாரதி, சக்தியையும், சிவனையும், கணபதிராயனையும், கந்தனையும், கண்ணனையும் பாடுவதோடு மட்டுமின்றிப் பாரத தேவியையும் பாடி இந்திய நாட்டைத் தெய்வமாக உயர்த்தித் தேசியத்தைப் புதியதொரு சமயமாக உருவாக்கிக் கொடுக்கிறார். இது மகாகவி பாரதியாரின் சாதனைகளுக்குள் எல்லாம் பெரும் சாதனை என்றால் மிகப் பொருத்தமாக இருக்கும்' (ப.93) எனத் 'தேசமே தெய்வம்' என்னும் பாரதியின் கருத்தியலை மேலும் விளக்கிக் கூறுகின்றார்.

'பாரதியின் வீரமானது தேசியத்தில் விடுதலை உணர்வாக விளங்கியது. தெய்வீகத்தில் அச்சமின்மையாகத் திகழ்கிறது. வீரமும் ஈரமும் வேறு வேறு என்ற நிலை மாறி இரண்டும் ஒன்றாகி விடுவதைப் பார்க்கும் போது, வள்ளற் பெருமானும் பாரதியும் ஒரே குரலில் பேசுவதாக உணர முடியும்' (ப.98) என வள்ளற் பெருமானின் இரக்க உணர்வும் பாரதியின் வீர உணர்வும் ஒன்றுபடும் மையப் புள்ளியை அருட்செல்வர் சுட்டிக்காட்டுவது கருத்தில் கொள்ளத் தக்கது.

பசித் துயரத்தைப் பாடுவதில் ஒற்றுமை

'பசித் துயரத்தைபப் பற்றி வள்ளற் பெருமானின் திருஅருட்பாவைப் போல உலக இலக்கியம் எதிலும் இல்லை என்றே கூற வேண்டும்' (ப.110) எனக் குறிப்பிடும் அருட்செல்வர், பசியின் கொடுமையைக் குறித்து வள்ளற் பொருமான் திருவருட்பாவில் கூறியுள்ள இடங்களை எல்லாம் நன்கு பட்டியல் இட்டுள்ளார். 'இவ்வுலகில் பசி எனில் எந்தாய்! என் உளம் நடுங்குவது இயல்பே' எனக் கூறும் வள்ளற் பெருமான், 'பசி எனும் ஓர் பெரும்பாவிப் பயலே!' என வசை பாடுகின்றார். 'பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்' என்பது எல்லோருக்கும் தெரிந்த பழந்தமிழ்ப் பாடல். வள்ளற் பெருமானோ பசியினால் ஏற்படும் 35 வகையான துயரங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். இவற்றுள் 18-ஆவதாக வள்ளற் பெருமான் குறிப்பிட்டுள்ள 'கைகால் சோர்ந்து துவளுகின்றன' என்ற வரியை, பாரதி 'கரும்புத் தோட்டத்திலே' என்ற கவிதையில் அப்படியே கையாண்டிருப்பதை - பிஜித் தீவில் நமது பாரதப் பெண்கள் பட்ட துன்பத்தை வருணிக்கும் அந்தக் கவிதையில்,

'கரும்புத் தோட்டத்திலே – அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும் படி
வருந்துகின்றனரே'


எனக் குறிப்பிட்டிருப்பதை அருட்செல்வர் துல்லியமாக எடுத்துக்காட்டி இருப்பது (பக்.111-112), அவர் எந்த அளவிற்கு வள்ளற் பெருமானையும் பாரதியையும் எழுத்தெண்ணிப் பயின்றிருக்கிறார் என்பதைப் புலப்படுத்துகின்றது. மேலும், பசித் துயரத்தைப் பற்றி உணர்ச்சி வசப்பட்டவராக வள்ளற் பெருமான் பாடியது போல பாரதியும் உணர்ச்சி வயப்பட்டு,

'தனி ஒருவனுக்கு உணவிலை யெனில் - இந்த
ஜகத்தினை அழித்திடுவோம்'


எனப் பாடி இருப்பதையும் அருட்செல்வர் ஒப்பீட்டு நோக்கில் சுட்டிக் காட்டுகின்றார்.

'பசியினால் வருந்துகின்றவர்கள் எந்தக் தேசத்தாராயினும் எந்தச் சமயத்-தாராயினும் எந்தச் சாதியாராயினும் எந்தச் செய்கையாராயினும் அவர்கள்;; தேச ஒழுக்கம், சமய ஒழுக்கம், சாதி ஒழுக்கம், செய்கை ஒழுக்கம் முதலானவைகளைப் பேதித்து விசாரியாமல், எல்லாச் சீவர்களிடத்தும் கடவுள் விளக்கம் பொதுவாக விளங்குவதை அறிந்து பொதுவாகப் பார்த்து அவரவர் ஒழுக்கத்திற்குத் தக்கபடி அவர்கள் பசியை நிவர்த்தி செய்வதே சீவகாருண்யம்' என்னும் வள்ளற் பெருமானின் வைர வரிகளை மேற்கோள் காட்டுவதோடு, அனைத்து உயிர்களின் பசித் துயரத்தைப் போக்குவது தலையாய இலட்சியம் என்று கருதியே சீவகாருண்யத்தை 'மோட்ச வீட்டின் திறவுகோல்' என்று வள்ளற் பெருமான் கூறியிருப்பதையும் அருட்செல்வர் சுட்டிக்காட்டி இருப்பது நோக்கத்தக்கது.

'பாரதியிடம் தேசபக்தி சுடர் வீசியது என்றால் வள்ளற் பெருமானிடம் ஆன்ம பக்தி (நேயம்) ஒளி வீசுகின்றது' (ப.117) என்பது இருபெருங்கவிகளைப் பற்றிய அருட்செல்வரின் இரத்தினச் சுருக்க மதிப்பீடு ஆகும்.

மொழிக் கொள்கையில் வள்ளலாரும் பாரதியும்

தமிழின் அருமையை உயர்த்திப் பிடிப்பதில் - தமிழின் உயர்வினைப் பறைசாற்றுவதில் - வள்ளற் பெருமானும் பாரதியும் ஒத்த கருத்தினராக விளங்கு-கின்றனர். இருவரும் பன்மொழிப் புலமை படைத்தவர்களாகவும் விளங்கியது குறிப்பிடத்-தக்கது. தமிழ்நாட்டில் தமிழ்மொழி தலைமை பெற்றுத் தழைத்திட வேண்டும், சிறந்திட வேண்டும் என்பதே இருவரது மொழிக் கொள்கையாகவும் இருந்தது. இன்னமும் குறிப்பாகக் கூற வேண்டும் என்றால், இந்திய நாகரிகத்திற்குத் தமிழும் வடமொழியும், உலக உறவுக்கு ஆங்கிலமும் என்றே இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களில் பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தவர் அருட்பிரகாச வள்ளலார். அடிகள் சென்னையில் வாழ்ந்த காலத்தில் ஒருமுறை சங்கராசாரிய சுவாமிகளுடன் அளவளாவ நேரிட்டதாம். அப்போது அச் சுவாமிகள் 'சமஸ்கிருதமே மாத்ரு பாஷை' (சமஸ்கிருதம்-தாய்மொழி) எனக் கூறி சமஸ்கிருதத்தைச் சிறப்பித்துப் பேசினாராம். அப்படியாயின் 'தமிழ் பித்ரு பாஷை' (தமிழ்-தந்தை மொழி) என வள்ளற் பெருமான் கூறித் தமிழின் ஞானச் சிறப்பை விளக்கி ஓர் உரையும் ஆற்றி சங்கராசாரியர்க்குத் தமிழின் அருமையை விளக்கினாராம் (ப.118). இவ்வரிய வாழ்க்கை நிகழ்ச்சிக் குறிப்பினை அருட்செல்வர் தம் நூலில் உரிய இடத்தில் பதிவு செய்துள்ளார்.

பாரதியின் வாழ்வில் இருந்தும் இதுபோன்ற ஓர் அரிய நிகழ்ச்சியை எடுத்துக்-காட்டியுள்ளார் அருட்செல்வர்.
‘The Fox with the Golden Tail’ என்ற ஆங்கிலப் புத்தகம் ஒன்றைப் பாரதியார் எழுதி வெளியிட்டார். இந்த ஆங்கில நூலில் 500 படிகள் உடனே அனுப்பும்படி ஒருவர் பாரதிக்குக் கடிதம் எழுதினார். அந்தத் தமிழரின் ஆங்கில மோகத்தைப் பார்த்த பாரதிக்குக் கோபம் வந்துவிட்டது. அதைப் பற்றி அவர் தம் நண்பரிடம் கடும்சொற்களைக் கொட்டினார்: 'போகச் சொல்லு விதவைப் பசங்களை, நான் என் சொந்த பாஷையில் என் முழு மூளையைக் கசக்கிப் பிழிந்து 'பாஞ்சாலி சபதம்' எழுதி இருக்கிறேன். அது நன்றாக இருக்கிறது என்று ஒருவனும் ஒரு கடிதமும் எழுதவில்லை. ஆங்கிலத்தில் எழுதிய இந்தப் 'பொன் வால் நரி'க்கு 500 பிரதிகள் உடனே வேண்டுமாம்!'

ஆங்கில மோகம் கொண்ட தமிழர்களை 'விதவைப் பசங்கள்' என்று பாரதி கடுமையாகச் சாடி இருப்பது குறிப்பிடத் தக்கது (பக்.129-130).

'பாரதியார் இன்று வாழ்ந்திருப்பாரானால் தமிழ்நாட்டுச் சின்னஞ்சிறு குழந்தைகளின் தலையில் ஆங்கில மொழியைத் திணிக்கும் கொடிய எல்.கே.ஜி., யு.கே.ஜி. பள்ளிக் கூடங்களை அழிப்பதற்குக் கொதித்து எழுந்திருப்பார். அவைகளை அடியோடு ஒழிப்பதற்கு மிகப் பெரிய போராட்டமே ஆரம்பித்திருப்பார்... மக்களை ஒன்று திரட்டி இருப்பார்' (ப.130) என்கிறார் அருட்செல்வர்.

தமிழ்ச் சிறுவர் சிறுமியர் தலையில் ஆங்கில மொழி திணிக்கப் படுவதில் அருட்செல்வருக்குச் சற்றும் உடன்பாடு இல்லை. 'இன்று தமிழ்நாட்டில் தமிழுக்குச் சமாதி கட்டும் சூழ்நிலை வெகு வேகமாகப் பரவி வருகிறது' என எச்சரிக்கும் அருட்செல்வர், 'மூன்று வயதே நிரம்பிய தமிழ்க் குழந்தைகளுக்கு ஆங்கில மொழியைத் திணிப்பது போலக் கொடுமை வேறு எதுவும் கிடையாது. அந்தக் குழந்தைகள் வீட்டில் உள்ள பெற்றோர்களை 'மம்மி' என்றும் 'டாடி' என்றும் அழைத்து வருகின்றனர். இது என்ன தமிழ் நாடா? இல்லை, வெள்ளைப் பரங்கியர் நாடா? 'மம்மி' என்றால் ஆங்கில மொழியில் 'பதப்படுத்தப்பட்ட பிணம்' என்று ஒரு பொருள் இருக்கிறது. பெற்ற தாயைப் பிணமே என்று கூப்பிடும் தமிழ்க் குழந்தைகள் பெற்ற தாயையும், தாய்;த் தமிழ்நாட்டையும் எப்படி நேசிக்கப் போகிறார்கள்?' எனக் காரசாரமாகக் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறார். தொடர்ந்து, ''பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும், நற்றவ வானினும் நனிசிறந் தனவே' என்றல்லவா பாடுகிறார் மகாகவி பாரதியார்?' (ப.125) என்ற பாரதியின் பொருத்தமான வரிகளை மேற்கோள் காட்டுகிறார் அருட்செல்வர்.

'தமிழை அரியணையில் ஏற்ற புதிய இயக்கத்தை ஆரம்பிப்போம்' எனச் சூளுரைக்கும் அருட்செல்வர், 'தமிழ்நாட்டில் எங்கும், எதிலும் தமிழ் என்ற நிலை உண்டாகியே தீர வேண்டும்' என வலியுறுத்துகின்றார். மேலும், அவர் 'தமிழ்நாட்டில் தமிழ்க் குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் 13 வயது வரையில், தமிழ் மொழியில் தான் போதிக்க வேண்டும் என்பதில் என்ன கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அதைத் தைரியத்துடன் ஏற்றுக்கொண்டு செயலாற்றத் தமிழ் மக்களும் தமிழக அரசும் முன்வர வேண்டும். இதுதான் திருஅருட் பிரகாச வள்ளலாரும், மகாகவி பாரதியாரும், மகாத்மா காந்தியும் நமக்குக் காட்டி இருக்கும் உன்னதமான வழிகள்' (ப.129) என அறிவுறுத்து-கின்றார்.

இரு கவிகளின் கடவுள் கொள்கை

கடவுள் கொள்கையைப் பொறுத்த வரையில் வள்ளற் பெருமானுக்கும் பாரதிக்கும் இடையே ஒத்த சிந்தனை காணப்படுகின்றது. இருவரும் தெய்வம் என்பது ஒன்றே ஒன்று தான் என்பதில் - ஒரே தெய்வக் கொள்கையில் - அழுத்தமான நம்பிக்கை கொண்டவர்களாக விளங்குகின்றனர்.

'எவ்வகை சார்மதங்களிலே பொய்வகைச் சாத்திரங்கள்
எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று
கைவகையே கதறுகின்றீர் தெய்வம் என்றுஎன்று அறிவீர்'


என்னும் வள்ளற் பெருமானின் கருத்தை எதிரொலிக்கும் வகையில் மகாகவி பாரதியாரும்,

'தெய்வம் பலப்பல சொல்லி - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வது அனைத்திலும் ஒன்றாய் - எங்கும்
ஓர் பொருள் ஆனது தெய்வம்'


என அறுதியிட்டு உரைக்கின்றார். மேலும் அவர்,

'யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்'


என்று மதம் கடந்து, எல்லா மக்களையும் தாயன்போடு தழுவி ஒன்றுபடுத்துகின்றார்.
'பாரதியார் சொன்ன சுத்த அறிவாகிய சிவம் எனும் செம்பொருளை, வள்ளலாரின் ஜோதி வழிபாட்டில்தான் காண முடியும்' (ப.157) என இரு கவிகளின் கடவுள் கொள்கைகளையும்
ஒன்றிணைத்து அருட்செல்வர் கூறி இருக்கும் கருத்து ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.

'மனிதனது உடலையே கோயிலாக அமைத்து வழிபட்டவன் தமிழன்' (ப.159) என்னும் அருட்செல்வரின் கருத்தும் இங்கே மனங்கொளத் தக்கது. அவரது நோக்கில் ஆலயம் தொழுவது என்பது கூட ஒரு வைகயில் உடம்பைப் பேணிக் காப்பது என்று பொருள்படுவதாகும். வள்ளற் பெருமானின் நோக்கில் உடம்பு என்பது அருட்ஜோதியின் வீடு; வீட்டினைக் காத்திட விடாது முயற்சி செய்து வர வேண்டும். வள்ளற் பெருமானைப் போலவே பாரதியாரும் உடல் ஓம்புதலில் மிக்க அக்கறை உள்ளவராக விளங்கினார். 'அரிவாளைக் கொண்டு பிளந்தாலும், கட்டுமாறா உடல் உறுதி வேண்டும்' என்று பராசக்தியிடம் வரம் கேட்டவர் பாரதியார்.

வள்ளலாரிடம் பாரதியார் கொண்டிருந்த ஈடுபாடு

வள்ளற் பெருமானைப் பாரதி தமது கட்டுரை ஒன்றில் 'மகான்' என்று குறிப்பிட்டுள்ளார்; அவர் தமது கவிதைகளிலும் வள்ளற் பெருமானைப் பல இடங்களில் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் பின்பற்றியுள்ளார். இரு கவிகளுக்கும் இடையே காணலாகும் ஒப்புமைப் பகுதிகள் பலவற்றை அருட்செல்வர் தம் கட்டுரை ஒன்றில் எடுத்துக்காட்டியுள்ளார். இப் பகுதிகளைப் பயில்வோர், 'பாரதியின் மனதில் வள்ளற் பெருமான் எப்படி தமது வழித்தடத்தினைப் பதிப்பித்துள்ளார்' என்பதை உணர்ந்து இன்புறலாம். இவ் வகையில் அருட்செல்வர் சுட்டிக்காட்டும் ஓர் அழகிய ஒப்புமைப் பகுதி வருமாறு:

'ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமையுளராகி உலகியல் நடத்த வேண்டும்'


என்று வள்ளற் பெருமான் கூறுவதையும்,

'எல்லாரும் ஓர் குலம் / எல்லாரும் ஓர் இனம்
எல்லாரும் ஓர் நிறை / எல்லாரும் ஓர் விலை'


என்கிற பாரதி வரிகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். பாரதிக்குள் வள்ளலார் பட்டொளி வீசிப் பறப்பதைக் காணலாம்' (ப.173).

திருப்பள்ளி எழுச்சி, நெஞ்சோடு நெகிழ்தல், அன்பு செயல், வேண்டும் கவிதை, சொர்க்கமும் பூவுலகும், வேதம் புதுமை, சாகா வாழ்வு ஆகிய கருத்தியல்களிலும் நேருக்கு நேர் வள்ளற் பெருமானைப் பாரதியார் வரிக்கு வரி எதிரொலிப்பதைத் தக்க சான்றுகள் காட்டி நிறுவியுள்ளார் அருட்செல்வர்.

ஒப்பியல் அறிஞர் கைலாசபதியின் கருத்து

'ஒப்பியல் ஆய்வு என்பது கேவலம் பொழுதுபோக்கான ஆய்வு முறையன்று; ஒப்பியல் ஆய்வின் மூலமாகவே ஒரு பொருளின் தனிப்பண்புகளைத் திடமாகக் கூறலாம். ஒற்றுமைகளுக்கு மத்தியிலும் நுண்ணிய வேறுபாடுகள் காணப்படும். அவற்றினை ஆதாரமாகக் கொண்டே ஒரு பொருளின் தனிச்சிறப்புக்களை அறிதல் கூடும்' (ஒப்பியல் இலக்கியம், ப.47) என மொழிவார் ஒப்பியல் அறிஞர் க.கைலாசபதி. இக் கருத்தியலுக்கு ஏற்ப நுண்ணிய தமது ஒப்பியல் ஆய்வின் மூலம் இரு கவிகளுக்கும் இடையே காணலாகும் ஒற்றுமைப் பண்புகளையும் தனித்திறன்களையும் 'அருட்கவியும் மகாகவியும்' என்னும் இந்நூலில் அலசி ஆராய்ந்துள்ளார் அருட்செல்வர் நா.மகாலிங்கம். ஒப்புக்காக இல்லாமல், பொறுப்பும் முதிர்ச்சியும் மிக்க ஓர் ஒப்பியல் ஆய்வாளராக - தேர்ந்த அறிஞராக - அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டிருப்பதை இந்நூலின் பக்கந்தோறும் உய்த்துணர முடிகின்றது. சுருங்கக் கூறின், தமிழில் வளர்ந்து வரும் ஒப்பியல் துறைக்கு இந்நூல் ஒப்பற்ற ஒரு தனிப்பெருங் கொடை - நிலையான பங்களிப்பு - எனலாம்.
 


 




முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.