தாயின் மடியைப் போன்ற பழமொழிகள்

பேராசிரியர்; இரா.மோகன்

லகப் பழமொழிகளிலே எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் பழமொழிகளின் தொகுப்பு நூலினைப் புரட்டுவேன்ளூ என் உள்ளத்தில் ஊக்கமும் உற்சாகமும் ஓடோடி வந்து இடம்பிடித்துக் கொள்ளும். அதே போல் துன்பமோ தோல்வியோ என்னைத் தாக்கும் போதும் உலகப் பழமொழிகளிடம் அடைக்கலம் புகுவேன்ளூ அவை எனக்குத் தாயின் மடியில் தலை வைத்துப் படுத்திருப்பது போன்ற இனிமையான ஆறுதலையும் இதமான சுகத்தையும் தரும். பழமொழிகள் அறிவுக் களஞ்சியங்கள்ளூ அனுபவத்தின் எதிரொலிகள்ளூ உண்மையின் குழந்தைகள்ளூ கருத்துப் பெட்டகங்கள்ளூ சிந்தனையின் திறவுகோல்கள்ளூ மக்களின் குரல்கள். இங்கே எனக்கு மிகவும் பிடித்த பத்துப் பழமொழிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

1. ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கான அடையாளங்கள்

'வந்தான் வாழ்ந்தான் போனான்' என்று சொல்லும் அளவில் இந்த உலகத்திற்கு வந்து, ஏதோ பெயருக்கு வாழ்ந்து. ஒரு நாள் தனது மூச்சுத் தொடருக்கு முற்றுப்புள்ளி வைப்பவன் மனிதன் அல்லன். 'ஏதோ மனிதன் பிறந்து விட்டான், அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்' எனக் கூறத்தக்க விதத்தில் வாழ்பவனும் மனிதன் அல்லன். பின் உயர்ந்த மனிதன் - முழு மனிதன் - என்பவன் எப்படி எல்லாம் இருப்பான், அவன் என்ன எல்லாம் செய்வான் என்று கேட்கிறீர்களா? இதோ உங்களுக்குப் பதில் சொல்ல வருகின்றது ஓர் இத்தாலியப் பழமொழி.

'ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு, அவன் ஒரு வீடாவது கட்டியிருக்க வேண்டும் அல்லது ஒரு மகனையாவது பெற்றிருக்க வேண்டும்ளூ அல்லது ஒரு நூலாவது எழுதியிருக்க வேண்டும்'.

2. முயற்சிக்கு மணிமகுடம்

மனித முயற்சிக்கு மணிமகுடம் சூட்டும் சீனப் பழமொழி ஒன்று: 'சோகம் என்ற பறவைகள் உன் தலைக்கு மேல் பறப்பதை நீ தடுக்க முடியாது. ஆனால் அவை உன் தலையில் அமர்ந்;து கூடு கட்டி வசிப்பதை நீ தடுக்கலாம்'. முடிவில் 'முயன்றால்' என்ற சொல்லைச் சேர்த்து மீண்டும் இந்தப் பழமொழியை ஒருமுறை படீத்துப் பாருங்கள்ளூ பழமொழி உணர்த்தும் அனுபவப் பொருள் உங்களுக்கு விளங்கும்.

3. பணத்தின் ஆட்சி

'ஒரு சமுதாயத்தின் மனப்போக்கைப் பழமொழிகளை விட வேறு எதுவும் எடுத்துக் காட்டுவதில்லை' என்னும் இங்கிலாந்துப் பழமொழிக்கு ஒரு நல்ல உதாரணம் வேண்டுமா? இதோ, ஒரு ஜெர்மன் நாட்டுப் பழமொழி, இல்லை 'பணமொழி':

'இறைவன் வானத்தை ஆள்கிறான், பணம் உலகத்தை ஆள்கின்றது'. ஆம்ளூ 'கருவறை முதல் கல்லறை வரை சில்லறை தேவை' என்பது நாம் அறிந்தது தானே! இல்லாவிட்டால், கவியரசர் கண்ணதாசன், 'படித்தவன் கருத்தெல்லாம் சபை ஏறுமா? பணம் படைத்தவன் கருத்தென்றால் சபை மீறுமா?' என்று பாடி இருப்பாரா?

4. மறுக்க முடியாது

பழமொழியை எதுவும் வெல்ல முடியாதுளூ எவரும் மறுக்க முடியாது. எங்கே மறுத்துத்தான் பாருங்களேன் இந்த பிரான்ஸ் நாட்டுப் பழமொழியை:
'எந்தக் கண்ணாடியும் ஒரு பெண் அழகி இல்லை என்று சொல்லியதில்லை'.
அது மட்டும் அல்லளூ 'ஒரு பெண் எதையும் பொறுத்துக் கொள்வாள். அவளால் பொறுத்துக் கொள்ள முடியாதது ஒன்று உண்டு என்றால். அது, இன்னொரு பெண்ணின் அழகு தான்'.

5. உலகில் எதுவும் நடைபெறும்!

'நினைவில் உள்ள நல்ல பழமொழி பெட்டியில் உள்ள தங்க நாணயம் போன்றது' என்கிறது ஒரு ஸ்வீடன் நாட்டுப் பழமொழி. இதோ உங்களுக்கு ஒரு தங்க நாணயப் பரிசுளூ சும்மா சொல்லக் கூடாது, நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்:

'எதுவும் உலகில் நடைபெறும் - செல்வம் மிகுந்தவனும் ஓர் ஏழையின் வீட்டை நாடிச் சென்று தட்ட நேரலாம்'.

எனவே, வாழ்வில் எப்போதும் அளவோடும், இயல்பாகவும், பணிவாகவும், பொறுமையாகவும் இருப்பது நல்லது. சரி தானே?

6. இனிப்பும் கசப்பும்

'வானம் இடிந்து வீழ்வதில்லை, பழமொழியும் பொய்ப்பதில்லை' என்னும் கூற்றை மெய்ப்பிக்கும் ஒரு போலந்துப் பழமொழி இதோ:

'நீ இனிமையாய் இருந்தால், உன்னை விழுங்கி விடுவார்கள்ளூ கசப்பாய் இருந்தால், உன்னை வெளியே துப்பிவிடுவார்கள்!'

நண்பனே, உனக்கு வாழ்வில் வெற்றி பெறத் தேவைப்படுவது விழிப்புணர்வேளூ எப்படி என்றால், 32 பற்களுக்கு இடையே எப்போதும் கவனமாக இருந்து வரும் உனது நாக்கைப் போல.

7. தேட வேண்டிய செல்வம்

'உணவுக்கு உப்பு எப்படியோ, அப்படிப் பேச்சுக்குப் பழமொழி' என்பார்கள். உங்கள் பேச்சுக்குப் பயன்படும் ஒரு எகிப்து நாட்டுப் பழமொழியைப் பார்ப்போமா?

'நீ இறக்கும் பொழுது உனக்காக அழக்கூடியவர்களை, உயிருள்ள போதே நீ தேடி வைத்துக் கொள்ள வேண்டும்'.

ஒரு மனிதன் பாடுபட்டுத் தேடி வைத்துக் கொள்ள வேண்டிய அரிய செல்வம் என்பது வங்கிக் கையிருப்பு அன்று, வாழ்வின் இறுதி நாளில் அவனுக்காகத் கண்ணீர் சிந்தக் கூடிய ஒரு சில மனிதர்களே எனலாம்.

8. சிரித்து வாழ வேண்டும்

'அனுபவத்தின் குழந்தைகள் பழமொழிகள்' என்பது நூற்றுக்கு நூறு உண்மைதான். ஓர் உதாரணம் இதோ:

'நாம் அழுது கொண்டே பிறக்கிறோம், குறை சொல்லிக் கொண்டே வாழ்கிறோம், ஏமாற்றம் அடைந்து இறக்கிறோம்' (இங்கிலாந்துப் பழமொழி).

ஒரு மணித்துளி எண்ணிப் பாருங்கள்: பிறக்கும் பொழுது அழுது கொண்டு வந்த நாம், போகும் பொழுதாவது சிரித்துக் கொண்டு செல்லும் படி வாழ வேண்டாமா? 'எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை' என்று வாழும் முறையை நாம் எப்போது மாற்றிக் கொள்ளப் போகிறோம்?

9. பயன் தரும் பழமொழி

நல்ல பழமொழி எந்த நேரமும் பயன் அளிக்குமாம். பின்வரும் லத்தீன் பழமொழியை இந்த ரகத்தில் சேர்க்கலாம் தானே?

'உழைப்புத் தான் வாழ்க்கை என்று உணர்ந்து வேலை செய். உன் கால் பட்ட இடமெல்லாம் ரோஜாச் செடிகள் முளைக்கும்.'

நினைவில் கொள்ளுங்கள்ளூ 'வாழ நினைத்தால் வாழலாம்' என்பது நேற்றைய பழமொழிளூ 'உழைத்தால் வாழலாம்' என்பதே இன்றைய கணினி யுகத்திற்கு வேண்டிய வெற்றி பழமொழி.

10. பொறுமையின் பெருமை

நம்புங்கள். பழமொழியில் உமி கிடையாது. நம்பாவிட்டால், பிடித்துக் கொள்ளுங்கள் இந்த ஆப்பிரிக்கப் பழமொழியை:

'பொறுமைக்கு அழகான குழந்தையே பிறப்பது வழக்கம்.'

பழமொழிகளைப் பற்றிய 'என் பார்வை'யை ஒரு பழமொழியோடு முடிக்கலாமா?
'பழமொழிகள் வண்ணத்துப் பூச்சிகள்ளூ சிலவற்றைப் பிடித்துக் கொள்கிறோம், சில பறந்தோடி விடுகின்றன' (ஜெர்மனி).

எங்கே மனம் திறந்து சொல்லுங்கள், இதுவரை படித்தவற்றுள் நீங்கள் எத்தனை பழமொழிகளைப் பிடித்துக்கொண்டீர்கள்? வாழ்க்கையில் பின்பற்றப் போகிறீர்கள்?.




முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.