கம்பதாசன்: பாட்டுலகின் இராஜாளிப் பறவை !

பேராசிரியர் இரா.மோகன்

கம்பதாசன் நூற்றாண்டு: சிறப்புக் கட்டுரை


“சின்னஞ் சிறு கவிதை – மலர்மேல்
சிந்தும் பனித்துளி போல்
சின்னஞ் சிறுகவிதை – உழவன்
சிந்தும் விதைநெல் போல்
சின்னஞ் சிறுகவிதை – அகலின்
தீப ஒளியது போல்
சின்னஞ் சிறுகவிதை – குழந்தை
செவ்விதழ் முத்தம் போல்”

                                     (கவிஞர் வாக்கு, கம்பதாசன் கவிதைகள், ப
.5)

என நெஞ்சை அள்ளும் அழகிய, ஆற்றல் சான்ற நான்கு உவமைகளைக் கையாண்டு தமது கவிதைகளின் சிறப்பினையும் சீரினையும் செவ்வியையும் செழுமையையும் வெளிப்படுத்திக் காட்டியவர் கம்பதாசன் (1916-
1973). “காளிதாசன் (அசல்), காளிதாசன் (பாரதியார்), பாரதிதாசன் (சுப்புரத்தினம்), கம்பதாசன் (ராஜப்பா) இவர்கள் நம் நாட்டு முதல் தரக் கவிஞர்கள். இவர்கள் பிறவிக் கவிஞர்கள்; பயிற்சிக் கவிஞர்கள் அல்ல” (மேற்கோள்: அறுபதாண்டுக் காலத் திரைப் பாடல்களும் பாடலாசிரியர்களும், ப.85) என ‘அக்கிரகாரத்து அதிசய மனிதர்’ வ.ரா.வினால் தமிழ் கூறு நல்லுலகிற்கு அடையாளம் காட்டப் பெற்றவர் கம்பதாசன். தென்னார்க்காடு மாவட்டத்தைச் சார்ந்த உலகாபுரம் அவர் பிறந்த ஊர். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் ‘அப்பாவு’ என்பது; பள்ளிப் படிப்பில் மனம் பற்றிடாமல் அதனை விடுத்து, நடிப்புலகில் தடம் பதிக்கப் புறப்பட்ட போது அவர் தமக்குப் புனைந்து கொண்ட பெயர் ‘சி.எஸ்.ராஜப்பா’ என்பது. நாடகக் துறையிலும் திரைப்படத் துறையிலும் கால் பதித்த போதிலும் அவரைக் கவிதை உலகமே ‘கம்பதாசன்’ என்று நிலைநிறுத்திக் கொண்டது. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைக்குப் புதுநெறி காட்டிய புலவர் பாரதியாரையும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனையும் தமது முன்னோடிகளாகவும் வழிகாட்டிகளாகவும் வரித்துக் கொண்ட கம்பதாசன், கவிதையில் மட்டுமன்றி, குறுங்காவியம், சிறுகதை, நாவல், நாடகம், குழந்தைப் பாடல் முதலான இலக்கிய வடிவங்களிலும் தமது படைப்புத் திறத்தினை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்துள்ளார். ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் கதை, வசனம், பாடல்களின் உருவாக்கத்தில் பங்கு கொண்ட கம்பதாசனின் தனிவாழ்க்கை ஐம்பத்தேழு வயதில் முடிவுக்கு வந்தது. ‘சமத்துவச் சிந்தனைகளைத் தமது உயிரினும் மேலாகக் கருதிய ஆற்றல் மிக்க கவிஞர்’ என்றும், ‘பாட்டாளிகளின் பாங்கான கூட்டாளி’ என்றும் அறியப் பெற்றிருந்த கம்பதாசன், வாழ்நாளின் இறுதிக் காலத்தில் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி, துயருற்று மரணம் எய்தியது என்பது மனித வாழ்க்கையின் விசித்திரமான முரண்பாடுகளில் ஒன்றே எனலாம்.

“மின்னல் போல் ஆகும் இந்த வாழ்க்கையே வான்
வில் போலுமே இளமை ஆனதே;
ஆம்! துன்பக் கதை உனதே!”

                                                 (கம்பதாசன் திரைப்பாடல்கள், ப.46)

எனக் கம்பதாசன் எழுதிய திரைப்பாடல் வரிகளே ஒரு வகையில் அவருக்குப் பொருந்தி வரும் கல்லறை வாசகங்கள் ஆகிவிட்டன!


வையத் தலைவன் மனிதன்

மனிதனின் மாண்பினைப் போற்றிக் கம்பதாசன் படைத்துள்ள பாடல் அவரது முத்திரைப் பாடல் ஆகும். அதில் மனிதனை வாழ்த்தி வணங்கிப் புகழ்ந்து அவர் உரைப்பன வருமாறு:

“வையத் தலைவன் மனிதனடா – அவனை
வாழ்த்தி வணங்கிப் புகழ்ந்திடுவோம்...
தனிமை வென்ற சமுதாயம் – தன்னை
சமைத்த அறிவே மனிதனடா.
விதியை வெல்ல அணுகுண்டை
விளைப்பான் அந்த மனிதனடா.
மேவும் மேன்மை விதி வென்று – இங்கு
மேவும் அன்பே மனிதனடா.
குரங்கின் குணத்தால் நடை நடந்து – இங்கு
குலவிய இலட்சியம் மனிதனடா.
பரவும் தீயின் கல்கண்டு – இங்குப்
பரவும் பாட்டோன் மனிதனடா.
தழைகள் தம்மை உடல் போர்த்து – மானம்
தனையே காத்தான் குகை மனிதன்.
இழைகள் கண்டான் நெய்தொழில் – அவனின்
இலட்சியம் புதுமை மானமடா.
தங்கும் உயிரைத் தனைக்காக்க – எண்ணிச்
சாவை வெல்வோன் மனிதனடா.”


                                              (கம்பதாசன் கவிதைகள், பக்.226-227)

“மனிதன்!” – எத்தனை கம்பீரமாக ஒலிக்கிறது இச்சொல் என்று வியந்தார்கள் மேதைகள். ‘மன்னும் இந்த உலகினிலே, மனிதன் தன்னைத் தேடுகின்றேன்’ என்று பட்டப் பகலிலும் கையினில் விளக்கை ஏந்தித் தேடினார் கிரேக்க நாட்டுத் தத்துவஞானி டாயோஜினிஸ்.

‘வையத் தலைவன் மனிதனடா’ என்னும் கவிதையின் தொடக்க வரியிலேயே கம்பதாசன் மனிதனுக்குச் சூட்டியுள்ள புகழாரம் சிறப்பு மிக்கது.

மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியையும்
(Evolution), பல்வேறு பரிமாணங்களையும் (Dimensions) இக் கவிதையில் கம்பதாசன் வெளிப்படுத்தி இருக்கும் பாங்கு நனி நன்று. தழைகளை ஆடையாக உடுத்திக் குகையில் வாழ்ந்த முற்கால மனிதன் - அணுகுண்டைக் கண்டுபிடித்து, விண்வெளிச் சோதனையில் சாதனை படைத்து, விதியையே வெல்லும் வல்லமை பெற்று, சிந்தனைத் திறனும் இலட்சிய நோக்கும் நினைவாற்றலும் கொண்டு வாழும் இந்நூற்றாண்டு மனிதன் ஆகிய இருவரது இயல்புகளையும் இக்கவிதையில் கவிஞர் நயமுறச் சித்திரித்துள்ளார்.

‘இங்கு மேவும் அன்பே மனிதனடா!’, ‘இங்குக் குலவிய இலட்சியம் மனிதனடா!’, ‘இங்குப் பாடே பட்டோன் மனிதனடா!’, ‘சாவை வெல்வோன் மனிதனடா!’ என்னும் அடிகளில் மனிதனின் மாண்புகளைச் சிறப்பாகப் புலப்படுத்தியுள்ளார் கவிஞர்.

தமிழிசையின் தனிப்பெருந் தகைமை

‘தென்றலில் உள்ள குளிர்ச்சி, தேனிலே உள்ள இனிமை, மின்னலில் உள்ள உணர்ச்சி ஆகிய மூன்றையும் தன்னகத்தே ஒருங்கே கொண்டது மேன்மை பொருந்திய தமிழிசை! குழந்தை பேசும் மழலையின் இன்பம், குளிர்ந்த நிலவின் மயக்கம், நெருப்பின் தூய தன்மை என்னும் மூன்று தன்மைகளும் ஒருசேரக் குடிகொண்டிருப்பது ஆய்ந்த தமிழிசை! காயைக் கனியாகச் செய்யவல்ல காலமும், கவிதைக் கடலின் ஆழமும், மாயையைத் தவிர்த்திடும் உயர்ஞானமும் ஒன்றிணையப் பெற்றது மதுரத் தமிழிசை! ‘ஓம்’ என்னும் மந்திர ஒலியில் மலர்ந்திடும் உண்மைப் பொருளை உலகம் மேல் காம்பெனத் தாங்கிடும் சக்தியும் பெற்றது கன்னித் தமிழிசை!’ என்பது கம்பதாசன் தமிழிசைக்குக் கவிதை வடிவில் சூட்டியுள்ள கவின்மிகு புகழாரம்.

“தென்றலில் உள்ள குளுமையும்
தேனிலே யுள்ள இனிமையும்
மின்னலில் உள்ள உணர்ச்சியும்
மேன்மைத் தமிழிசை பெற்றதே!

குழந்தை மழலையின் இன்பமும்
குளிரும் மதியின் மயக்கமும்
அழலின் தூயதாம் தன்மையும்
ஆய்ந்த தமிழிசை பெற்றதே!

காயைக் கனிசெயும் காலமும்
கவிதைக் கடலதன் ஆழமும்
மாயை தவிர்க்கும் ஞானமும்
மதுரத் தமிழிசை பெற்றதே!

ஓம் என்னும் ஒலியில் மலர்ந்திடும்
உண்மைப் பொருளை உலகமேல்
காம்பெனத் தாங்கிடும் சக்தியும்
கன்னித் தமிழிசை பெற்றதே!”     
(கம்பதாசன், ப.213)

‘தமிழென்றால் அமுதத்தின் ஊற்று’ என்றும், ‘தமிழென்றால் இனிய கற்கண்டு’ என்றும், ‘தமிழென்றால் மாசற்ற தங்கம்’ என்றும், ‘தமிழென்றால் குழந்தையின் உள்ளம்’ என்றும் ‘தமிழ் அமுதம்’ (கம்பதாசன் கவிதைகள், ப.209) என்னும் கவிதையில் தமிழ் மொழியின் மாண்பினை நெஞ்சாரப் போற்றிப் பாடிய கம்பதாசன், இக் கவிதையில் தமிழிசையின் தனிப்பெரும் பண்புகளைத் திட்பமும் நுட்பமும் விளங்கப் புலப்படுத்தியுள்ளார். தென்றல், தேன், மின்னல், குழந்தையின் மழலை, நிலவு, நெருப்பு, ஓம் என்னும் ஒலி ஆகியவற்றை ஒப்புமை காட்டித் தமிழிசையின் மேன்மையையும் இனிமையையும் கவிஞர் இக்கவிதையில் எடுத்துக்காட்டி இருக்கும் பாங்கு படிப்பவர் நெஞ்சை அள்ளுவதாகும்.

‘மேன்மைத் தமிழிசை’, ‘ஆய்ந்த தமிழிசை’, ‘மதுரத் தமிழிசை’, ‘கன்னித் தமிழிசை’ எனத் தமிழிசைக்குக் கவிஞர் இக்கவிதையில் கையாண்டிருக்கும் அடைமொழிகளும் பொருள் பொதிந்தவை.

பாரதியாரின் அடிச்சுவட்டில் நடை பயிலும் கவிஞர்

‘காணி நிலம் வேண்டும்’ எனத் தொடங்கிப் பராசக்தியிடம் தமது தேவைகளைப் பட்டியல் இடும் பாரதியார் முத்தாய்ப்பாக, “பாட்டுக் கலந்திடவே – அங்கே ஒரு, பத்தினிப் பெண் வேணும் – எங்கள் கூட்டுக் களியினிலே – கவிதைகள் கொண்டு தர வேணும்... என்றன் பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப் பாலித்திட வேணும்” (பாரதியார் கவிதைகள், பக்.72-73) என வேண்டுகோள் விடுப்பார். இப் பாடலின் சாயலில் ‘தேவை’ என்னும் தலைப்பில் கம்பதாசனும் ஓர் அருமையான கவிதையைப் படைத்துள்ளார். கவிஞரின் சொற்களில் அக் கவிதை வருமாறு:

“ஆற்றோரம் ஐந்து காணி, மோட்டார் வண்டி,
அறுபதடி அழகுமனை, பசுக்கள் நான்கு,
காற்றாட மலர்த்தோட்டம், வாழை தெங்கு,
கண்போலக் காக்கின்ற உண்மைத் தோழன்,
மாற்றங்கொள் உலகறிய வானொலி, மக்கள்
மனம் படிந்த செய்தி நூல், கவிதை நன்னூல்,
ஊற்றான கவிசிறக்க ஒயிலாய் இல்லாள்,
உயர்வடைய ஆண், பெண் இருசேயர் தாமே!”

                                                 (கம்பதாசன் கவிதைகள், ப.249)

‘காணி நிலம் வேண்டும்’ எனப் பராசக்தியிடம் பாரதியார் குறிப்பாகக் கேட்டதையே சற்று விரிவாக்கி, கூர்மைப்படுத்தி ‘ஆற்றோரம் ஐந்து காணி’யும் ‘அறுபதடி அழகு மனையும்’ தமது தேவைகள் எனத் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார் கம்பதாசன். அவரது தேவைகளின் பட்டியலில் பாரதியார் கேட்காத ‘மோட்டார் வண்டி’, ‘வானொலி’, ‘செய்தி நூல்’ ஆகியன இடம் பெற்றுள்ளன. ‘பாட்டுக் கலந்திடவே ஒரு பத்தினிப் பெண் வேணும்’ எனப் பாரதியார் வேண்ட, ‘ஊற்றான கவிசிறக்க ஒயிலாய் இல்லா’ளை வேண்டுகிறார் கம்பதாசன். ‘எங்கள் கூட்டுக் களியினிலே – கவிதைகள் கொண்டு தர வேணும்’ எனப் பாரதியார் கேட்க, ‘உயர்வடைய ஆண், பெண் இரு சேயரைத்’ தமது வேண்டுதலாக முன் வைக்கின்றார் கம்பதாசன். கம்பதாசனின் தேவைப் பட்டியலில் ‘கண் போலக் காக்கின்ற உண்மைத் தோழன்’ இடம்பெற்றிருப்பது நட்பு எனும் விழுமியத்திற்கு அவர் தரும் முதன்மையைப் புலப்படுத்துகின்றது ‘பத்துப் பன்னிரண்டு தென்னை மரம்’ எனப் பாரதியார் கேட்க, கம்பதாசன் காற்றாட மலர்த் தோட்டமும், வாழை தெங்கும், கூடவே பசுக்கள் நான்கும் வேண்டுகின்றார். பாரதியார் ஒரு மாளிகை கட்டித் தருமாறு பராசக்தியிடம் கேட்க, கம்பதாசன் ‘அறுபதடி அழகு மனை’யினைத் தமது தேவையாகக் குறிப்பிடுகின்றார். கவிஞர் நகுலனும் ‘சுருதி’ என்னும் தலைப்பில் ஒரு கவிதை (சுருதி,ப.23) படைத்துள்ளார். இங்ஙனம் கவிஞர்கள் தமது தேவைகளை இறைவனிடமோ பொது நிலையிலோ பட்டியல் இட்டுக் கேட்பது என்பது இருபதாம் நூற்றாண்டுக் கவிதை உலகில் ஓர் அடிக்கருத்தாகவே ஆளப் பெற்றிருக்கின்றது.

பழந்தமிழ் மரபின் தொடர்ச்சி

“நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆரள வின்றே; சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே”


என்பது புகழ் பெற்ற குறுந்தொகைப் பாடல் (3). தேவகுலத்தார் என்னும் சங்கச் சான்றோர் இயற்றியது; தலைவி தலைவனோடு கொண்ட உறவின் மேன்மையைக் கூறுவதாக அமைந்தது. நிலம், வானம், கடல் என்ற மூன்றும் பெருமைக்கு எல்லையாகக் கூறப்படுவதைத் திருக்குறளிலும் காணலாம் (குறள் 102, 103, 272). பழந்தமிழ் இலக்கியத்தில் சிறப்பிடம் பெறும் இம் மரபின் தொடர்ச்சி விளங்கும் வகையில் கம்பதாசனும் ஒரு திரைப்பாடலை இயற்றியுள்ளார். ‘கண்ணின் மணிகள்’ என்னும் திரைப்படத்தில் இடம் பெறும் அப் பாடலின் பல்லவி வருமாறு:

“காதல்! காதல்! காதல்!
கண்டு கொண்டேன் நானே
காதல் என்னவென்று தானே!”


பாடலில் அடுத்து வரும் அடிகள் காதலின் உயர்வினை அழகுற எடுத்துரைக்கின்றன.

“விண்ணின் விரிவிலுமே பெரிது – ஆல
வித்ததிலுமே சிறிது
தண்ணீர் அதிலும் மெலிது – உயர்
ஜகம் அதிலுமே பெரிது.”


மலரினும் மெல்லிய காதல் உணர்வு இளையோர் உள்ளங்களில் எப்படி எல்லாம் ஆட்சி செய்யும் அவர்களை என்ன எல்லாம் செய்யும் என்பதைக் கம்பதாசன் இப் பாடலில் புலப்படுத்தி இருக்கும் பாங்கே தனி. காணாத போது ஒரு மாதிரியும், நேரில் காணும் போது பிறிதொரு மாதிரியும் காதல் உணர்வு இளையோரை ஆட்டிப் படைக்குமாம்.

“கண்டிடாப் போது கலங்கும் – நேரில்
காண்கையில் கர்வத்தால் குலுங்கும்;
பெண்மையை ஆண்மையால் மாற்றும் – ஆண்மையைப்
பேச்சற மயக்கினில் ஏற்றும்”

என்னும்,

“வண்டு போல மலர்தனில் தாவும் – புது
வாழ்க்கையின் ருசி எனக் கூவும்;
மண்டல விதிதனைத் தாண்டும் – அது
மனதினில் இன்பக் கனவே தூண்டும்”


                                     (கம்பதாசன் திரைப்பாடல்கள், ப.41)

என்றும் காதலின் உயர்வினையும் உறுதிப்பாட்டினையும், மென்மையையும் மேன்மையையும் இந்தப் பாடலில் நயமாக எடுத்துரைத்துள்ளார் கவிஞர்.

சங்கச் சான்றோர் ‘நிலத்தினும் பெரிதே’ எனக் கூறியதை ‘உயர் ஜகமதிலுமே பெரிது’ என்றும், ‘வானினும் உயர்ந்தன்று’ என்றதை ‘விண்ணின் விரிவிலுமே பெரிது’ என்றும், ‘நீரினும் ஆரளவின்றே’ என்றதைத் ‘தண்ணீர் அதிலுமே மெலிது’ என்றும் கம்பதாசன் தம் திரைப் பாடலில் கையாண்டிருப்பது நோக்கத்தக்கது.

“சங்கக் கவிஞர் சொல்லாத ஒன்றையும் காதலின் பெருமையை விளக்கக் கம்பதாசன் சொல்கிறார். அது காதல் ‘ஆல வித்ததிலுமே சிறிது’ என்பதாகும். தெள்ளிய ஆலின் சிறு பழத்தொரு விதைக்குள் ஒரு பேரால மரம் உறங்கியிருப்பது போல காதல் தனக்குள் ஒரு விசுவ வெளியையே மறைத்து வைத்திருக்கிறது என்ற அரும் பொருள் விளங்கக் கம்பதாசன் உவமித்திருப்பது மிக ஆழ்ந்த சிந்தனையைப் புலப்படுத்துகின்றது” (கம்பதாசன், ப.81) என வானம்பாடி இயக்கத்தின் மூத்த கவிஞர் சிற்பி குறிப்பிடுவது இவ் வகையில் மனங்கொளத் தக்கதாகும்.

‘தொழிலாளர் ஓங்கிடத் தொண்டாற்றல் நமது தொழில்!’

தொழிலாளர் மாண்பினை உயர்த்திப் பிடிப்பதிலும், அவர்களின் நலம் பேணும் கருத்துக்களை எடுத்துரைப்பதிலும் பாரதியாரும் பாரதிதாசனும் கம்பதாசனுக்கு நல்லதொரு முன்மாதிரிகளாக விளங்குகின்றனர். ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!’ என முழங்கிய பாரதியார், ‘தொழில்’ என்னும் தலைப்பில் பாடிய கவிதையில், ‘பிரமதேவன் கலை இங்கு நீரே!’ என்றும், ‘மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே!’ என்றும், ‘தேட்டமின்றி விழி எதிர் காணும், தெய்வமாக விளங்குவிர் நீரே!’ (பாரதியார் கவிதைகள், ப.495) என்றும் தொழிலாளர்களின் பெரும் புகழினை உளமாரப் போற்றி இசைப்பார். அவரது அடிச்சுவட்டில் கம்பதாசனும்,

“சூரியனும் ஓர் தொழிலாளி – தினம்
சுற்றும் உலகும் தொழிலாளி
வாரி அலையும் தொழிலாளி – எதிர்
வந்திடும் காற்றும் தொழிலாளி
மாரி நதியும் தொழிலாளி – இருள்
மலரும் உடுவும் தொழிலாளி
பாரை நடத்தும் தொழிலாளி – இனிப்
பரமனடா கலைப் பிரமனடா”                
(கம்பதாசன் கவிதைகள், ப.159)

எனத் தொழிலாளர்களின் மாண்பினை உயர்த்திப் பாடியுள்ளார். சூரியனையும் சுற்றும் உலகினையும் கடல் அலையையும் வீசும் காற்றையும் மழையையும் நதியையும் விண்மீன்களையும் தொழிலாளியாகவே காணும் கம்பதாசன், முடிவில் பாரை நடத்தும் தொழிலாளியைப் ‘பரமனடா கலைப் பிரமனடா!’ என்று கடவுளுக்குச் சரிநிகர் சமானமாக வைத்துப் பாடியுள்ளார்.

சிலோன் விஜயேந்திரன் குறிப்பிடுவது போல், “எந்தத் தமிழ்க் கவிஞனுமே பார்க்காத புதிய கோணத்தில் தொழிலாளியைப் பார்க்கிறார் கம்பதாசன்” (கம்பதாசன் திரைப் பாடல்கள், ப.19).

கம்பதாசன் கவிதைகளில் செம்படவன், சொல்லன், வண்ணான், ரிக்ஷாக்காரன், படகோட்டி, நடிகன், உழவன், வளையற்காரன், பாணன், குலாலன், மோட்டார்த் தொழிலாளி, நெல் குத்தும் பெண், மாடு மேய்க்கும் பையன், கூடை முடைபவன் என்றாற் போல் சமுதாயத்தில் பல வகையான தொழில்களை ஆற்றி வருவோரும் வலம் வருகின்றனர். அவர்கள் எந் நிலையில் நின்றாலும் – எக்கோலம் கொண்டாலும் எத்தொழிலை மேற்கொண்டாலும், எவருக்கும் தாழ்ந்து போவதில்லை; தன்மான உணர்வைச் சற்றும் விட்டுக் கொடுப்பதில்லை.

“ஒருவருக்கும் தாழோம் – நாம்
ஒருவருக்கும் தாழோம்!
உள்ள வேலையைத் தெளிவுடன் செய்தே
ஊதியந்தான் கேட்போம்.
உற்ற கூலியைத் தட்டிப் பறித்தால்
உயிர் ஈந்தும் பெறுவோம் – நாம்
உயிர் ஈந்தும் பெறுவோம்!”            
(கம்பதாசன் திரைப்பாடல்கள், ப.25)

என்பது கம்பதாசன் இசைக்கும் தொழிலாளர் இனத்தின் போர்க் குரல் ஆகும்.

‘காலத்தால் களங்கமுறா கற்புத் தொழிலே’ என அறுதியிட்டு உரைக்கும் கவிஞர்,

“தொழிலாளர் ஓங்கிடுக, அவர்பசி துடைக்கத்
தொண்டாற்றல் நமது தொழில், கவிதைத் தொழிலே”


                                       (கம்பதாசன் கவிதைகள், ப.165)

என முழங்குவது தொழிலாளர்பால் கவிஞர் கொண்டிருக்கும் இமாலயப் பற்றுக்குக் கட்டியம் கூறுவதாகும்.

சான்றோர் நோக்கில் கம்பதாசனின் கவி ஆளுமை

“கவியமைக்கும் ஆற்றல் இந்நூலாசிரியர்க்கு (கம்பதாசனுக்கு) இயல்பாக அமைந்திருக்கிறது” எனக் கம்பதாசனின் கவிதைத் திறத்தினை மதிப்பிடுவார் பேராசிரியர் கா.சுப்பிரமணிய பிள்ளை.

“உண்மையில், கம்பதாசன் எண்ணம் நன்று, கவிதையுள்ளம் நன்று. நல்ல கற்பனையை, புதுமையை வரவேற்கும் தன்மையை, அதைப் போற்றும் ஆற்றலைக் காணுகின்றேன்” என்பது பாவேந்தர் பாரதிதாசன் கம்பதாசனுக்குச் சூட்டியுள்ள புகழாரம்.

“வறுமையூடும் செல்வத்தூடும் மனங்கலங்காது குலுங்காது அநாயசமாகப் பறந்து செல்லும் வானம்பாடி அவர் (கம்பதாசன்)” என்பது பாலபாரதி ச.து.சு.யோகியாரின் பாராட்டு.

“புதுக்கவிதையின் கூறுகளும், வியக்கத் தக்க கற்பனைகளும், புதிய புதிய உவமைகள் உருவகங்களும், ஆழ்ந்த சிந்தனைகளுமாக விளங்கிய ஓர் ஆளுமை கம்பதாசன்” என இருபதாம் நூற்றாண்டுக் கவிதை உலகில் கம்பதாசன் பெறும் இடம் குறித்து எடுத்துரைப்பார் கவிஞர் சிற்பி.

“இயற்கைக் கவிஞரான அவர் (கம்பதாசன்) புதிய கோணத்தில் சிந்தித்து தமிழன்னைக்கு வாடாக் கவிமலர்களைச் சூட்டியவர்” என மொழிவார் ‘கம்பதாசன் திறனி’ என்று இலக்கிய உலகால் ஆராதிக்கப் பெறும் சிலோன் விஜயேந்திரன்.

கம்பதாசனைக் குறித்து இலக்கிய ஆளுமைகள் வெளியிட்டுள்ள இக் கருத்துக்களின் ஒளியில் கம்பதாசனின் கவிதைகளில் நயமும் நளினமும் நயத்தக்க நாகரிகமும் நுட்பமும் மிளிரும் ஒருசில இடங்களை ஈண்டுக் காண்போம்.

“பாரதி! பாரதி! என்று பகர்-தேச / பக்தி பிறக்கும் – வீர
சக்தி சிறக்கும்... அவன் / பாட்டுக்கு ஈடு – இன்று
காட்டுமோ நாடு?”

                                       (கம்பதாசன் கவிதைகள், ப.221)

எனக் கவி பாரதியின் ஆளுமையைச் சொல்லோவியமாக்கிக் காட்டும் கம்பதாசன்,

“பாரதிதாசனாம் அன்னவர் பேர் – அவர்
பாடும் கவிகளோ பச்சை ரத்தம்!...
நஞ்சு தரினும் தமிழுக்கென்று – அதை
நல்லமுதாக உண்ணும் திறத்தார்”

                                        (கம்பதாசன் கவிதைகள், பக்.222-223)

எனக் பாரதிதாசனின் தனிப்பெருந் தகைமையினையும் அடையாளம் காட்டி இருப்பது நனி நன்று.

“கண்ணன் இருந்தானாம் – திரௌபதி
கட்டத் துகில் தந்தானாம்;
உண்மையாய் அவன் இருந்தா – எனக்கே
ஓர் கந்தை தாரானோ?”            
(கம்பதாசன் கவிதைகள், ப்.219)

என ‘உண்மைக் கவி’யின் கூற்று வடிவில் கம்பதாசன் தொடுத்திருக்கும் கேள்விக் கணை படிப்பவர் உள்ளத்தை உலுக்கும் பெற்றியது.

“அதிகம் குடித்தவர் நாவினிலே
அளவின்றி வந்திடும் வார்த்தையைப் போல்
முதிர்ந்த அறிவின் கடலினிலே
முத்தென முளைத்தல் கவிதையடா!”


                          (கம்பதாசன் கவிதைகள், ப.218)

எனக் கவிதைக்குக் கம்பதாசன் வகுக்கும் வரைவிலக்கணம் வித்தியாசமான ஒன்று; ஒரு வகையில் அது அவருக்கே உரித்தானதும் கூட.

• ‘இரத்த ஓவியம்’ என்னும் குறுங்காவியத்தின் எடுப்பான தொடக்க வரிகள் இவை:

“ முதம் என்னும் அழகுப் பெயராள்;
கன்னிப் பருவம் கனிந்த வனமலர்” (கம்பதாசன் கவிதைகள், ப.24)

• மழைத் தாரை:

“ஏன்எனக் கேட்பாரற்ற உழவர் – நிலைக்கு
ஈசன் உகுக்கும்கண் ணீர்த்துளியோ?”
(ப.77)

• பெண் யார்?

“கண்காணாக் காற்று / கடல்காணா ஆழம்
மென்மலர் வெந்தீ / மிதந்து செல் படகு
மேக நிழல் வானவில்...
கண்ணீரின் ஊற்று / கனவதனின் இனிமை
உண்மையும் பொய்யும் / உறவாடும் மேடை
உயர்நிலாச் சிரிப்பு”
(ப.106)

• தாஜ்மஹால்:

“வட்டநிலா புவி வீழ்ந்ததுவோ? – ஷாஜஹான்
வடித்த கண்ணீரின் முதல் துளியோ?
திட்டமிட்டுப் பூத்த சொப்பனமோ? – மும்தாஜ்
ஜீவதீபந்தான் சிரிக்கின் றதோ?”
(ப.150)

• நவராத்திரி கொலு:

“உழவுத் தொழிலாளி – நுதலினில்
உதிர்ந்த வேர்வைத் துளி
கொழுத்த முதலாளி – அணியினில்
கொலுவாச்சு வைரமாய்!”
(ப.169)

• தூக்கம்:

“அரசன் ஆண்டியையும் – சமமாய்
ஆளும் அரசிதுவோ?

மரண மேடையின் முன் – விளங்கும்
மௌனத் திரை இதுவோ? ...

அன்னையின் மடியினிலே – குழந்தை
அழாதிருக் கின்றதோ?”
(ப.251)

இங்ஙனம் உவமை நயமும் உருவக நலமும் உணர்ச்சி வெளிப்பாடும் கற்பனை வளமும் கருத்து ஆழமும் சிந்தனைத் தெறிப்பும் தத்துவச் செறிவும் படிம அழகும் புதுமைப் பெற்றியும் பளிச்சிடும் இடங்கள் கம்பதாசன் கவிதைகளிலும் திரைப் பாடல்களிலும் மண்டிக் கிடக்கின்றன.

‘பாட்டு முடியுமுன்னே மீட்டிய வீணையை, பக்கம் வைத்தே நடந்தாய்’ (கம்பதாசன் திரைப்பாடல்கள், ப.42) எனத் திரைப்பாடல் ஒன்றில் பாடியது போலவே கம்பதாசனின் வாழ்வும் அமைந்தது. முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியன் குறிப்பிடுவது போல், “சிகரங்களைத் தொடச் சிறகுகள் விரித்த கம்பதாசனின் கவிப்பறவை அடிவாரத்து மரக்கிளையிலேயே ஓய்வெடுத்துக் கொண்டது. எனினும் அது சின்னஞ்சிறு குருவியல்ல – இராஜாளிப் பறவை” (இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை, ப.64).





முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.