சங்கச் சான்றோரின் மொழி ஆளுமை

முனைவர் இரா.மோகன்


வியரசர் பாரதியார் 16.10.1916 நாளிட்ட ‘சுதேசமித்திரன்’ இதழில் ‘ஜப்பானியக் கவிதை’ என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் தெரிவித்திருக்கும் கருத்து வருமாறு:

“ஸமீபத்தில் ‘மாடர்ன் ரிவியூ’ என்ற கல்கத்தா பத்திரிகையிலே ‘உயோநே நோகுச்சி’ என்ற ஜப்பானியப் புலவர் ஒரு லிகிதம் எழுதியிருக்கிறார். அதிலே அவர்  சொல்வதென்னவென்றால்:-

மேற்குக் கவிதையில் சொல் மிகுதி. எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கையில்லாமல் சொல்லும் வழக்கம் ஐரோப்பியக் கவிதையிலே யில்லை. எதுகை சந்தம் முதலியவற்றைக் கருதியும், சோம்பற் குணத்தாலும், தெளிவில்லாமையாலும் பல சொற்களைச் சேர்த்து வெறுமே பாட்டை அது போகிற வழியெல்லாம் வளர்த்துக் கொண்டு போகும் வழக்கம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிகமிருக்கிறது…

ஜப்பானில் அப்படியில்லை. வேண்டாத சொல் ஒன்று கூடச் சேர்ப்பது கிடையாது. ‘கூடை கூடையாகப் பாட்டெழுதி அச்சிட வேண்டும்’ என்று ஒரே ஆவலுடன் எப்போதும் துடித்துக் கொண்டிருப்பவன் புலவனாக மாட்டான். கவிதை யெழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையையே கவிதையாகச் செய்தோன் – அவனே கவி…

‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் ஜப்பானியக் கவிதையின் விசேஷசத் தன்மை’ என்று நோகுச்சிப் புலவர் சொல்லுவதுடன் ஆங்கிலேயரின் கவிதை இதற்கு நேர்மாறாக நிற்கிறதென்றும் சொல்லுகிறார். நமக்குள்ளே திருக்குறள் இருக்கிறது; ‘கடுகைத் தொளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்’. கிழக்குத் திசையின் கவிதையிலே இவ்விதமான ரஸம் அதிகந்தான். தமிழ்நாட்டில் முற்காலத்தில் இது மிகவும் மதிப்பெய்தி நின்றது” (பாரதியார் கட்டுரைகள், பக்.260-261).

இங்கே உயோநே நோகுச்சி கிழக்குக் கவிதை பற்றி – குறிப்பாக, ஜப்பானியக் கவிதை குறித்து – கூறியிருக்கும் கருத்து, நம் சங்கக் கவிதைக்கு நூற்றுக்கு நூறு பொருந்தி வருவதாகும். பண்டிதமணி மு.கதிரேசனாரின் சொற்களில் கூறுவது என்றால், “ஒரு சிறு சொல்லேனும் வறிதே விரவாமல் உய்த்துணருந்தோறும் ‘நவில்தோறும் நூல் நயம் போலும்’ என்னும் முதுமொழிக்கிணங்க, இன்பஞ் செய்வன சங்கப் பாடல்களேயாகும்” (உரைநடைக் கோவை: இரண்டாம் பாகம், ப.96). இவ் வரைவிலக்கணத்திற்கு ஏற்ப அமைந்த சங்கப் பாடல் ஒன்றின் திறத்தினையும் நலத்தினையும் ஈண்டுக் காண்போம்.

சங்க கால அரசப் புலவருள் தலை சான்ற பாலை பாடிய பெருங்கடுங்கோ படைத்துள்ள குறுந்தொகைப் பாடல் ஒன்று இவ் வகையில் கருதத்தக்கது. அப்பாடல் வருமாறு:

"வினையே ஆடவர்க்கு உயிரே; வாணுதல்
            மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்என
            நமக்குஉரைத் தோரும் தாமே;

            அழாஅல் தோழி அழுங்குவர் செலவே” 
(135)

தலைவன் பிரிய எண்ணி இருப்பதை அறிந்து வேறுபட்ட தலைவியை நோக்கித் தோழி ஆறுதல் கூறுவதாக அமைந்த பாடல் இது. “தோழி! வினையே ஆண் மக்களுக்கு உயிர் ஆகும்; ஒளி பொருந்திய நெற்றியை உடைய, இல்லில் இருந்து கடமையை ஆற்றி வரும் மகளிர்க்குக் கணவன்மாரே உயிர் ஆவர் என்று நமக்கு எடுத்துக் கூறியவரும் அத் தலைவரே; ஆதலால், தலைவி நீ அழாதே! அவர், தாம் பிரிந்து செல்லுதலை நீக்கிக் கொள்வார்!” என்று திறம்பட ஆறுதல் கூறுகின்றாள் தோழி.

“தலைவன், ‘ஆடவர்க்கு வினை உயிர்’ என்று கூற அதனால், ‘இவன் வினைமேற் பிரியக் கருதினான்’ என்று எண்ணித் தலைமகள் வேறுபட்டாள். அது கண்ட தோழி, ‘வினையே ஆடவர்க்கு உயிரென்றதன்றி, மகளிர்க்கு ஆடவரே உயிரென்றும் அவர் கூறியுள்ளார்; ஆதலின் அவர் உடலாகிய நின்னை விட்டுப் பிரியார்; நீ வருந்தாதே’ என்று கூறி ஆற்றுவித்தாள். இது கற்புக் காலத்தது” (குறுந்தொகை மூலமும் உரையும், ப.262) என இப் பாடலுக்கு வரைந்த உரை விளக்கத்தில் நோக்கு நெறி நின்று நுண்ணிதின் நயம் காண்பர் ‘பதிப்பு வேந்தர்’ உ.வே.சா.

‘வினையே ஆடவர்க்கு உயிரே’ எனப் பெருங்கடுங்கோ இரண்டு ஏகாரங்களைக் கையாண்டிருப்பது, ஓர் ஆண்மகன் தன் வாழ்வில் சோம்பி  இராமல் – முன்னோர் ஈட்டி வைத்த செல்வத்திலேயே வாழ்நாளைக் கழித்து விடலாம் என்று எண்ணிச் சும்மா இருந்த விடாமல் – தொழில் முயற்சிக்கு முதன்மை தர வேண்டும் என்ற கருத்தினை அழுத்தமாகப் புலப்படுத்துகின்றது. ‘மனையுறை ஆடவர்’ என்னாமல், மகளிரை ‘மனையுறை மகளிர்’ என்றமையால் அவர் இல்லில் இருந்து கற்பொழுக்கம் தவறாமல் கடமை ஆற்றுவதற்கு உரியவர் என்பது தெளிவாகின்றது.

‘மகளிர்க்கு ஆடவரே உயிர் என்றால், மகளிர் ஆடவர்க்கு உடம்பு போன்றவராகின்றார். உடம்பு தனியே கிடக்கும்படி தலைவர் பிரிந்து விடுவாரா? மேலும், உடம்போடு கூடிய உயிரே ஏதும் முயற்சி செய்வதற்குரியது. உடம்பினின்றுந் தனித்துச் சென்ற உயிர்க்கு முயற்சியொன்றும் நடவாதே’ என்று அளவையறிவோடு வல்லமையாய் விளக்கிச் சொன்ன படியாயிற்று. அகப்பொருள் நூல்களில் தோழியின் அறிவுத் திறங்களாய் வருவன மிகவும் கவர்ச்சியானவை” (சங்க இலக்கிய இன்கவித் திரட்டு, ப.11) என்னும் மூதறிஞர் இளவழகனாரின் கருத்து ஈண்டு மனங்கொளத் தக்கது.

‘நமக்கு உரைத்தோரும் தாமே’ என்னும் பாடலின் மூன்றாம் அடி, தலைவர் ‘நின்ற சொல்லர்; எனவே. தன் வாக்குத் தவற மாட்டார்’ என்பதைக் குறிப்பால் உணர்த்துவது.

‘அழாஅல் தோழி அழுங்குவர் செலவே’ என்னும் பாடலின் ஈற்றடி பொருள் பொதிந்தது; ‘செலவழுங்குதல்’ என்னும் நுண்ணிய சங்க அகத் துறையின் உண்மைப் பொருளைப் புலப்படுத்துவது.

“செலவிடை அழுங்கல் செல்லாமை அன்றே
            வன்புறை குறித்த தவிர்ச்சி ஆகும்”     
    (1131)

என்னும் தொல்காப்பியக் கற்பியல் நூற்பா ஈண்டு கருத்தில் கொள்ளத் தக்கது. ‘செலவிடை அழுங்கல்’ என்பதன் பொருள் பிரிந்து செல்லாமல் இல்லிலேயே இருத்தல் என்பதன்று; பிரிந்து செல்வதற்கு இடையே தலைவன் சிலநாள் அதைத் தவிர்த்து இருத்தல், இல்லில் தங்கி அன்பு தோன்ற அளவளாவி, ஆறுதல் அளித்து, வற்புறுத்திப் பிரிதல் ஆகும்.

‘அழாஅல் தோழி’ என்பதில் இடம்பெற்றிருக்கும் அளபெடையின் ஆட்சி, தலைவன் ‘நீடுதோறும் இனியர்’ என்பதை நினைந்து அழுவதைத் தவிர்க்குமாறு தோழி தலைவியிடம் வலியுறுத்திக் கூறுவதைப் புலப்படுத்தி நிற்கின்றது. ‘வினையே’, ‘உயிரே’, ‘தாமே’, ‘செலவே’ என இப் பாடலில் நான்கு ஏகாரங்கள் பிரிநிலை ஆகவும், அசைநிலை ஆகவும், தேற்றப் பொருளிலும் கையாளப்-பட்டிருப்பது நோக்கத்தக்கதாகும்.

கவிக்கோ அப்துல் ரகுமான், “ஹைகூவின் மொழி ஊளைச் சதையற்ற மொழி. தந்தி மொழியைப் போல், அவசியமற்ற இணைப்புச் சொற்களை அது விட்டுவிடும். உயிர்நாடியான ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப் பெயர்ச் சொல்லையே பயன்படுத்தும்” (சோதிமிகு நவகவிதை, ப.86) என ஜப்பானிய ஹைகூ கவிதையின் மொழி அமைப்பு பற்றிக் குறிப்பிடுவார். ஒரு வகையில், இக் கூற்று, காலத்தால் முற்பட்ட நம் சங்க இலக்கியத்திற்கும் அப்படியே பொருந்துவதாகும்.


 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

மதுரை - 625 021.