முல்லைக் கலியில் வரும் ஆயர் குல மகளின் இன்றைய வழித்தோன்றல்

முனைவர் இரா.மோகன்

ன்பில் ஐந்திணை வரிசையில் முதலாவதாக இடம் பெறுவது முல்லை. காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை நிலம் என அழைக்கப் பெறும். அந் நிலத்து மக்கள் ஆயர், இடையர், கோவலர், பொதுவர் எனச் சுட்டப் பெறுவர். காதலித்த பெண்ணின் கரம் பற்றிட அவர் குலமுறைப்படி காதலன் ஏறு தழுவுவதும், காதலன் வருகையை எதிர்நோக்கிக் காதலி காத்திருத்தலும் முல்லை நில ஒழுக்கங்கள் ஆகும்.

ஆயர் வாழ்க்கைச் சித்திரிப்பு

‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ எனச் சிறப்பிக்கப் பெறும் கலித்தொகையில் நான்காவதாக இடம்பெற்றுள்ள முல்லைக் கலியைப் பாடியவர் நல்லுருத்திரன் என்னும் பெயர் தாங்கிய சோழ மன்னன் ஆவான். இவன் பாடியனவாகக் கலித்தொகையில் முல்லைத் திணையைச் சார்ந்த பதினேழு பாடல்களும், புறநானூற்றில் ஒரு பாடலும் ஆகப் பதினெட்டுப் பாடல்கள் கிடைத்துள்ளன.

“எழுந்தது துகள்,
ஏற்றனர் மார்பு,
கவிழ்ந்தன மருப்பு,
கலங்கினர் பலர்!”
(முல்லைக் கலி,
2)

என ஆயர் வாழ்க்கையை - அவரது வாழ்வில் சிறப்பிடம் பெறும் ஏறு தழுவலை - நான்கே நான்கு சின்னஞ்சிறு அடிகளில் - எட்டே எட்டு இரத்தினச் சுருக்கமான சொற்களில் சொல்லோவியமாக்கியுள்ளார் நல்லுருத்திரன். ஆயர் குல வழக்கமான ஏறு தழுவுதல் குறித்து ஒரு நாடாளும் மன்னன் – சோழன் நல்லுருத்திரன் – பாடல் புனைய முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அயல்நாடுகளில் எல்லாம் ‘காளைப் போர்’ (Bull-fight) எனக் குறிக்கப் பெற்றிருக்க, நம் பண்டைத் தமிழ் இலக்கியத்தில் ‘ஏறு தழுவல்’ என ஜல்லிக்கட்டு என்னும் இவ்வீர விளையாட்டு நயத்தகு முறையில் சுட்டப் பெற்றிருப்பது கூர்ந்து நோக்கத்தக்கது.

ஏறு தழுவல் நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பு

முல்லைக் கலியின் மூன்றாம் பாடல் ‘காதல் கொண்டவன் விரைந்து வந்து தன்னை மணந்து கொள்ளவில்லையே’ எனக் கலங்கிய ஒரு கன்னிப் பெண்ணுக்கு அவளது தோழி, ‘ஊரில் நடந்த ஏறு தழுவல் காட்சிகளைக் காட்டி விட்டு, ஆயர்கள் குரவைக் கூத்து ஆடுகின்றனர்; அதைக் காண வந்திருக்கும் காதலனுக்கு அறிவு வரும்படி செய்ய நாமும் அக்கூத்தில் கலந்து கொண்டு பாடுவோம் வா!’ என்று அழைப்பதாக அமைந்தது.

‘ஆயர்குல இளைஞர்கள் மலைச் சாரலிலும் மரம் செறிந்த காட்டிலும் மலர்ந்த கொன்றை, காயா, வெட்சி. பிடவம், முல்லை, கஞ்சங்குல்லை, குருந்தம், காந்தள், பாங்கர் என்னும் பல்வகையான மலர்களால் தொடுக்கப் பெற்ற தலைமாலையைச் சூடி, ஏறு தழுவுவதைக் காணும் பொருட்டு, ஆயர்குல மகளிர் ஒன்று சேர்ந்து வந்து பரணில் ஏறி அமர்ந்தனர். அவர்கள் முல்லை அரும்பையும் மயிற் பீலியின் அடிப்பகுதியையும் வரிசைப் படுத்தி வைத்தாற் போன்ற பற்களை உடையவர்கள்; குளிர்ந்த கண்களையும் மடப்பம் பொருந்திய சொற்களையும் கொண்டவர்கள்; மகரக் குழை அணிந்து ஒளிரும் காதினர்.

ஏறு தழுவும் களத்தில், நீல மணி போல் தோன்றும் மலைச்சாரலில், கொட்டும் அருவி போல் வெண்ணிறக் கால்கள் படைத்த கரிய நிறக் காளை, கதிரவன் மறைய உள்ள அந்திச் செவ்வானத்தில் விண்மீன்கள் கண் சிமிட்டி விளங்குவது போலச் சிவந்த உடலில் வெண்ணிறப் புள்ளிகளுடன் விளங்கும் செவலைக் காளை; அழித்தற் கடவுளாகிய உருத்திரன் சூடிய இளம்பிறையைப் போல் வளைந்து தோன்றும் கொம்புகளை உடைய செவலைக் காளை ஆகியவை உள்ளிட்ட காளைகள் பலவற்றையும் கொண்டு வந்து ஒன்றாக நிறுத்தினர். அந்தக் களம் அப்பொழுது சிங்கமும், குதிரையும், யானையும், முதலையும் ஒன்றுகூடி இருந்த மலைச்சாரல் போல் ஆரவாரத்துடன் காட்சி அளித்தது.

தொழுவின் உள்ளே ஆயர் குல இளைஞர்கள் பலரும் ஏறு தழுவும் விருப்புடன் புகுந்தனர். தம் மீது பாய்ந்து வரும் அவர்களைக் காளைகள் கொம்புகளால் குத்தின. அவ்வாறு குத்தியதால் அவற்றின் கொம்புகள், மழு ஆயுதத்தை உடைய சிவபெருமானின் தலையில் சூடிய பிறைச் சந்திரனிடத்துச் செந்நிற மாலை சூழ்ந்து கிடப்பது போல், இரத்தம் சொட்டும் குடல்களால் பிணிப்புண்டு காணப்பெற்றன.
வீரன் ஒருவன் குடல் சுற்றிய கொம்பினைக் கொண்ட காளையின் முன்னே நின்று, தனது குடலைக் காளையின் கொம்பில் இருந்து எடுத்து, மீண்டும் தன் வயிற்றில் இடும் பெருமிதத் தோற்றத்தைப் பார்! சிவப்பு நூல் சுற்றிய ஒரு கழியை ஒருவன் தன் இரு கைகளாலும் சேர்த்துப் பிடித்துக் கொள்ள, அந்த நூலை மற்றொருவன் மூன்று புரிகள் கொண்ட நூலாகக் கழற்றி எடுத்துக் கொள்வது போல் காட்சி அளிக்கின்றது அது!

தோழி! இதோ இவனைப் பாரேன்; போரினை விரும்பும் காளையின் கழுத்தில் தாவிப் பாய்ந்து, அதற்குச் சூட்டிய மாலையைப் போல் தனது கையால் தழுவி, தழுவியதை விடாமல் பிடித்திருக்கும் இவன் எருமைக் கூட்டத்தை உடைய ஆயர் குடும்பத்தான் அல்லனோ?

தோழி! இதோ இவன் ஒருவனைப் பாரேன்; மச்சத்தை உடைய காளையின் மேல் ஏறி அமர்ந்து, வெற்றிக் களிப்பால் ஆடியவாறு, ஆற்றில் உள்ள நீர்த்துறையில் தெப்பத்தில் அமர்ந்து அதைச் செலுத்திச் செல்பவன் போல், காளையை விடாமல் ஊர்ந்து செல்லும் இவன் பசுக்கூட்டத்தை உடைய ஆயர் குடி இளைஞன் அன்றோ? அவன் வீரம் இருந்தவாறு என்னே!

தோழி! காற்றுப் போல் பாய்ந்து வந்த கரிய எருதை அதன் ஆற்றல் அடங்கத் தழுவிக் கொண்டு அதன் மேல் அமர்ந்து காட்சி அளிக்கும் இவனைப் பார்! எருமை ஊர்தியோன் ஆகிய யமனைக் காலால் உதைத்து அவன் உயிரைக் கைக்கொண்ட ஞான்று, சிவபெருமான் இவன் போலவே காட்சி அளித்தான் போலும் என்று எண்ணி நடுங்கின்றது என் நெஞ்சு!

தோழி! இதோ இவனைப் பாரேன்! கரும்புள்ளியும் செம்புள்ளியும் கலந்து பெற்ற வெள்ளைக் காளையை அடக்கி அதன் மீது, மதியிடையே தோன்றும் மறுவைப் போல் காட்சி அளிக்கும் இவன் ஆயர் குடும்பத்து இளைஞன் அன்றோ!

வேகமாக வந்து தாக்கிய எருதின் கொம்புகளைப் பிடித்து, அதன் ஆற்றலை அழித்து நிற்கும் காயாம்பூவால் ஆன கண்ணியைச் சூடி நிற்கும் இவன் அழகைப் பார்! பகைவர்கள் தன்னைக் கொல்லுமாறு விடுத்த குதிரை அரக்கனை, அதன் வாயைப் பிளந்து கொன்று அழித்த போது, திருமால் இவன் போலவே தோன்றினான் போலும் என்று எண்ணி நடுங்குகின்றது என் நெஞ்சு.

புலிக்கூட்டமும் யானைத் தொகுதியும் ஒன்றோடு ஒன்று எதிர்த்துப் போரிட்டது போல் காளைகளும் காளை நிகர் ஆயர்களும் போரிட்டு ஓய்ந்தனர். தாம்தாம் தழுவிய ஏறுகளைக் கைக்கொண்டு ஆயர்கள் வெளியேறிய அத்தொழு, மயில் இறகு சிந்திக் கிடக்கும் மலை நிலம் போல, மகளிர் சூடிய மலர்கள் சிந்திக் காட்சி அளித்தது.

ஆயர் குல ஆடவரும் மகளிரும் மன்றில் குரவை ஆடி மகிழத் தொடங்கினர்.

கொல்கின்ற காளையின் கொம்புக்கு அஞ்சும் இளைஞனை ஆயர் குல மங்கை மறுமையிலும் கணவனாகக் கொள்ள விரும்ப மாட்டாள்.

“கொல்லேற்றுக் தோடுஅஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்”


அஞ்சாமல் சென்று கொல்லேற்றை அடக்கிக் கொள்பவர் அல்லது, உள்ளத்தில் உரம் இல்லாதவர்க்கு, ஆயர் குல மங்கையின் தோள் அணைத்தற்கு இயலாதாம்.

உயிரைக் ‘காற்றுப் போலப் போய்விடுவது’ என்று உணராமல், அரிய பொருள் என்று மதித்துக் காவல் காக்கும், கொல்லேற்றின் கொம்பினைக் கண்டு அஞ்சுவார்க்கு ஆயர் மகள் தோளைத் தழுவுதல் எளிதாகுமோ?

“அஞ்சார் கொலையேறு கொள்பவர் அல்லதை
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து
நைவாரா ஆயமகள் தோள்?
வளியா, அறிவா, உயிர் காவல் கொண்டு,
நளிவாய் மருப்பஞ்சும் நெஞ்சினார், தோய்தற்கு
எளியவோ, ஆயமகள் தோள்?”


காதலிக்கும் காதலியின் மார்பில் மகிழ்ந்து தலை வைத்தல் போல், கொல்லேற்றின் கொம்புகளுக்கு இடையே புகுந்து பாய வல்லவர் இடத்தில், ஆயர் மகளிர் பரிசப் பொருள் எதுவும் கேளார்.

“விலைவேண்டார் எம்இனத்து ஆயர்மகளிர்
கொலையேற்றுக் கோட்டிடைத் தாம்வீழ்வார் மார்பின்
முலையிடைப் போலப் புகின்”
(முல்லைக் கலி,
3)

-என்றெல்லாம் பாடி, குரவை ஆடி, தெய்வத்தை வழிபடுவோமாக! கடல் சூழ்ந்த இவ்வுலகை உரிமையால் ஆளும் எம் பாண்டிய மன்னர் இவ்வுலகில் பல்லாண்டு வாழ்வாராக!”

சிறப்புக் குறிப்பு

இக் கலித்தொகைப் பாடலில் ஏறு தழுவும் நிகழ்ச்சி நடப்பியல் பாங்கில் நயத்தகு முறையில் படம்பிடித்துக் காட்டப் பெற்றுள்ளது; ஏற்றினைத் தழுவுகின்ற இளையோரின் வீரம் சிறப்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. தன் வயிற்றினின்றும் சரிந்த குடலைத் தாங்கித் தன் வயிற்றினுள் இட்டுக் கொண்டு மீண்டும் ஏறு தழுவினான் என்பது ஆயர்குல இளைஞனின் பெருவீரத்தினைப் புலப்படுத்துகின்றது. ஏறு தழுவி வெற்றி பெற்றவர் செயலுக்குச் சிவபெருமான், திருமால் ஆகியோரது செயல்கள் உவமைகளாகக் காட்டப் பெற்றுள்ளன.

சங்க கால மகளிர் வீரத்தைப் பெரிதாக மதித்துள்ளனர். ஏறு தழுவும் ஆண்மை இல்லாத ஆயனை – சொல்லேற்றின் கொம்பினைக் கண்டு அஞ்சுபவனை – ஓர் ஆயமகள் விரும்ப மாட்டாள், மறுமையிலும் மணந்து கொள்ளாள் என்பதை இக் கலித்தொகைப் பாடல் மூன்று தாழிசைகளில் வலியுறுத்திக் கூறுகின்றது. கொல்லேற்றின் கோட்டிடை வீழ்பவனிடம் ஆயர் முலைவிலை – பரிசப்பொருள் – எதுவும் வேண்டார் என்பதும் இப் பாடலில் இடம்பெற்றுள்ள ஓர் இன்றியமையாத தகவல் ஆகும்.

ஓர் ஒப்புநோக்கு

22.1.2017 நாளிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழில் வெளிவந்த உண்மைச் செய்தி ஒன்று இங்கே ஒப்புநோக்கத் தக்கது.

“சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. ‘ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கு’, ‘பீட்டா அமைப்பைத் தடை செய்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவர் – இளைஞர்கள் போராடி வருகின்றனர்.

போராட்டத்தில் எல்லோருடைய கவனத்தையும் ஒரு சிறுமி ஈர்க்கும் விதமாக நூதனப் பதாகையை ஏந்தி வருகிறாள் ‘காளையை அடக்குகிற தமிழனைத் தான் கல்யாணம் முடிப்பேன்… இப்படிக்கு, பச்சைத் தமிழச்சிடா…’ என்ற பதாகையை ஏந்தியும், கருப்புச் சட்டையுடனும் தனது பெற்றோருடன் மெரினா கடற்கரை முழுவதும் வலம் வருகிறாள்.

அந்தச் சிறுமி பெயர் கனிஷ்கா. அவரது பெற்றோர் கண்ணன் –பாரதி. மதுரையை பூர்வீகமாகக் கொண்ட சிறுமி கனிஷ்கா சென்னை நங்கநல்லூரில் சில ஆண்டுகளாகப் பெற்றோருடன் வசித்து வருகிறாள். அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1-ஆம் வகுப்பு படிக்கும் இந்தச் சிறுமியின் நூதனப் போராட்டம் அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கிறது.

இது குறித்துச் சிறுமி கனிஷ்கா கூறும் போது, ‘ஜல்லிக்கட்டு விளையாட்டின் பெருமை பற்றி என் பெற்றோர் கூறியிருக்கின்றனர். பதாகையில் உள்ளபடியே நான் உறுதியாக இருப்பேன். ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும்’ என்றாள்.”

இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட முல்லைக் கலியில் வரும் ஆயர்குல மங்கையின் வழித்தோன்றலாக இந் நூற்றாண்டின் சிறுமி கனிஷ்கா வலம் வருவது குறிப்பிடத்தக்கது; இது பண்டைத் தமிழர் பண்பாட்டு மரபின் தொடர்ச்சி என்பது மனங்கொளத்தக்கது.
 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
- 625 021.