இலங்கைத் தமிழரின் இரண்டு வரலாற்று நூல்கள்

கலாநிதி பால.சிவகடாட்சம்


ரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே சிங்களபௌத்தர்கள் தங்கள் வரலாற்றை எழுத ஆரம்பித்துவிட்டார்கள். இலங்கைக்குப் பௌத்தம் வந்த வரலாற்றை நிகழ் சகாப்தம் (current era)  நான்காம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து இலங்கைவந்த இரண்டு பிக்குணிகள் 'தீபவம்சம்' என்ற பெயரில் எழுதி வைத்தார்கள். இதனை ஆரம்பமாகக்கொண்டு ஐந்தாம் நூற்றாண்டில் மகாநாம என்னும் பெயருடைய ஒரு பௌத்தபிக்கு இலங்கை பௌத்தர்களின் வரலாற்றைக் கூறும் உலகப்புகழ்பெற்ற 'மகாவம்சம்'என்னும் நூலை எழுதினார். இதன் தொடர்ச்சியாகச் சூளவம்சம் என்னும் வரலாற்று நூல் எழுதப்பட்டது. தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம் ஆகிய மூன்றுமே பாளி மொழியில் எழுதப்பட்ட நூல்கள். இவற்றுக்குப்பின் பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பூஜாவலிய என்னும் நூலும் பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ராஜாவலிய என்னும் நூலும் சிங்களமொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூல்களாக இன்று கிடைக்கப்பெறுகின்றன.

இவற்றைத்தவிர புத்தரின் புனிதப்பல்லின் வரலாற்றைக்கூறும் தலதா சிரித, தம்பதெனிய இராச்சியத்தின் வரலாறு கூறும் குருணாகல விஸ்தாரய என்று எத்தனையோநூல்கள் இலங்கையில் சிங்கள பௌத்தரின்
2500 ஆண்டுகாலத் தொடர்ச்சியான வரலாற்றைக் கூறுவனவாக உள்ளன.

கோட்டை உள்ளிட்ட இலங்கையின் கரையோரப்பகுதிகளைப் போர்த்துக்கேயர் ஆண்டுகொண்டிருந்த காலமாகிய
1636 இல் சிங்கள மக்கள் போர்த்துக்கேயருக்கு ஒரு முறையீட்டுக்கடிதம் அனுப்பியிருந்தார்கள். 'உங்களுடைய நிர்வாகத்திலும் எங்களுடைய மன்னர்களின் ஆட்சிக்காலத்து நிர்வாகம் மிகச்சிறப்பானது. இலங்கை மக்களாகிய எங்களுடைய வரலாற்றுப் பாரம்பரியம் மிகத் தொன்மையானது. எங்களது வரலாற்றைக் கூறும் நூல்கள் ஏராளமாக உள்ளன. அவை இன்றும் உள்ளன. நீங்கள் அவற்றை வாசித்தால் எங்கள் சிறப்பு உங்களுக்கும் விளங்கும்' என்பதுதான் அந்தக்கடிதத்தின் சாராம்சம்.

இப்படி ஒருகடிதத்தை அன்று தமிழர்களால் போர்த்துகேயருக்கோ ஒல்லாந்தருக்கோ எழுதியிருக்கமுடியுமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். சிங்களமக்கள் தமது வரலாற்றுப் பாரம்பரியம் குறித்துப் பெருமைப்பட்டுக் கொள்வதையிட்டு நாம் பொறாமை கொள்வதில் அர்த்தம் இல்லை. தமிழர்களின் வரலாற்றுணர்வின் பற்றாக்குறையைப் பலரும் சுட்டிக்காட்டுவதுண்டு.

இற்றைக்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் (நிகழ் சகாப்தம்
1310இல்) சிங்கள பௌத்த மன்னன் ஒருவன் கேட்டுக்கொண்டதன்பேரில் வைணவப்பிராமணர் ஒருவர் சரசோதிமாலை என்னும் பெயர்கொண்ட சோதிடநூல் ஒன்றை முதன்முதலாகத் தமிழில் எழுதினார். இந்தநூல் எழுதப்பட்டு 200 ஆண்டுகளுக்குப்பின் யாழ்ப்பாணத்தில் எழுதப்பட்ட தமிழ்நூல்களும் வைத்தியம் சோதிடம் பற்றியதாகவே இருந்தன.

ஒருசில வரலாற்றுத் தகவல்களைத்தரும் நூல்களாக கோணேசர் கல்வெட்டு, வையாபாடல், கைலாயமாலை, கைலாசபுராணம் என்பவை இன்று எமக்குக் கிடைக்கக்கூடியனவாக உள்ளன. இவையும்
400 அல்லது 500 வருடங்களுக்குள் எழுதப்பட்டனவாகவே உள்ளன. இவற்றுக்கும் பல ஆண்டுகள் கழித்தே வரலாற்று நூல்கள் என்ற அங்கீகாரத்தைப் பெறக்கூடிய யாழ்ப்பாண வைபவமாலை, மட்டக்களப்பு மான்மியம் என்னும் நூல்கள் தோன்றின. இவ்விரண்டு நூல்களும் முறையே யாழ்ப்பாணம் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் வாழும் தமிழ்மக்களின் வரலாற்றைப் பிரதானமாக எடுத்தாண்டுள்ளன.

யாழ்ப்பாணவைபவமாலை, மட்டக்களப்பு மான்மியம் ஆகிய இருநூல்களுமே ஒல்லாந்தர் இலங்கையின் கரையோரப்பகுதிகளை ஆட்சிசெய்த
1736 ஆம் ஆண்டுக்கும் 1796 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தோன்றியனவாகக் காணப்படுகின்றன.

ஒல்லாந்து அதிகாரி ஜான் மக்கரே
(Jan Macare) கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே தாம் யாழ்ப்பாண வைபவமாலையை எழுதியதாக மயில்வாகனப்புலவர் கூறுகின்றார்.

ஒண்ணலங் கொண்மேக்கெறூ உனென்றோது
பெயர்பெற்ற விறல் உலாந்து தேசண்ணல்
பண்ணலங்கொள் யாழ்ப்பாணப் பதிவரலாறு
உரைத்தமிழால் பரிந்துகேட்கத்
திண்ணிலங்கு வேற்படைக் கைச் செகராச
சேகரன் றொல் அவையில் சேர்ந்தோன்
மண்ணிலங்கு கீர்த்தி வையாமரபின் மயில்
வாகனவேள் வகுத்திட்டானே.


1732 ஆம் ஆண்டில் ஒல்லாந்தரின் கைவசம் இருந்த காலியில் கமாண்டராக இருந்த ஜான் மக்கரே என்பார் 1736 ஜூன் ஏழாம் தியதி முதல் 1736 ஜூலை வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் தற்காலிக ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார். இந்தக் குறுகிய கால இடைவெளியிலே யாழ்ப்பாணச் சரித்திரத்தை எழுதும்படி ஜான் மக்கரே மாதகல் மயில்வாகனப்புலவரைக் கேட்டிருக்கமுடியும்.

யாழ்ப்பாணத்தை டச்சுக்காரர் ஆட்சிசெய்தகாலத்தில் இடம்பெற்ற சம்பவங்களாக மயில்வாகனப்புலவர் குறிப்பிடும் வரலாற்றுச்செய்திகள் நம்பகத்தன்மை கூடியனவாக உள்ளன. ஒல்லாந்தர் காலத்தில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வுகளை யாழ்ப்பாணத்து வாக்கிய பஞ்சாங்கமுறைப்படி நின்ற சக ஆண்டு குறிப்பிட்டு மிகச் சரியாகவே மயில்வாகனப்புலவர் தந்துள்ளார். உதாரணமாக நின்ற சக ஆண்டு
1581 விளம்பிவருடம் (1658 C.E.) ஒல்லாந்தர் யாழ்ப்பாணக் கோட்டையைப் போர்த்துக்கேயரிடம் இருந்து கைப்பற்றியதை மயில்வாகனப்புலவர் பதிவு செய்திருப்பதைக் காணமுடியும். எனினும் இதற்கு முந்தைய வரலாற்று நிகழ்வுகளின் கால ஒழுங்கைக் குறிப்பிடுவதில் இவர் போதுமான அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்பது வரலாற்று ஆசிரியர்கள் பலரும் ஏற்றுக்கொண்ட உண்மையாகும்.

இலங்கைத்தமிழர் வரலாற்றில் சம்பவங்கள் இடம்பெற்ற காலப்பகுதியை ஆண்டு குறிப்பிட்டுச் சொல்லும் நூலாக மட்டக்களப்பு மான்மியம் உள்ளது. இந்தவகையில் இந்நூல் யாழ்ப்பாண வைபவமாலையுடன் ஒப்பிடுகையில் நம்பகத்தன்மை கூடிய ஒரு வரலாற்று நூலாக அங்கீகாரம் பெறும் தகுதியைப் பெறுகின்றது.

ஒல்லாந்தர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி மட்டக்களப்பில் அறுமக்குட்டி என்பவரைப் போடியாராக நியமித்த விபரம் மட்டக்களப்பு மான்மியத்தில் இடம்பெற்றுள்ளதோடு மேற்படி நூலின் இறுதியில் அறுமக்குட்டியின் போடி நியமனத்தை உறுதிப்படுத்துமுகமாக
1766 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 6 ஆம் தியதி ஆளுநர் இமான் வில்லெம் பால்க் (Iman Willem Falck)   கையெழுத்திட்ட பத்திரத்தின் பிரதி ஒன்றும் அநுபந்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மான்மியம் நூலின் இறுதியில் அனுபந்தமாக இணைக்கப்பட்டிருக்கும் அறுமக்குட்டியின் போடிநியமனக்கடிதம்.

அனுபந்தம்:அ

அறுமக்குட்டி சாதி முக்குவன் எங்களிடத்திலே மண்முனைப்பகுதிக்குப் போடியாய் இருக்கக் கேட்டபடியால் அதற்கு நாங்கள் நிர்ணயித்துப் பார்த்துத் தன்னுடைய நல்ல நடவடிக்கையைக் கேட்டுத் தீர்மானித்து முன்சொல்லப்பட்ட மண்முனைப் பகுதிக்குப் போடியாகக் கற்பிக்கிறோம். அது கூடக் கொடுக்கப்பட்டது தமது தொழிலுக்கடுத்த சங்கையும் புரோசனமும் பெரியவர்களுக்கு நடக்கும் பூச்சியமும் போது கிடைத்திருந்த படிக்கு இப்போவும் அந்தப் பிரகாரந்தான் இதிற் கட்டளை பண்ணுகிறோம். இதிலடங்கிய சகலமான பேரும் இந்த அறுமக்குட்டியைப் போடியாக அறிந்து உண்டான படிக்குக் சங்கிக்கவேணும். இதற்கு அடையாளம் திட்டப்படுத்தி வளமையான முத்திரையும் வைத்துக் கையொப்பம் போட்டுக்கொடுத்தோம்.

இப்படிக்கு இலங்கைத் தீவிற் கொழும்புக்கோட்டையிலே
(1)766 ஆ. கார்த்திகை மீ 6 கையொப்பம் வைத்தது இமான் வெல்லம் பல்க்.

மேலான சங்கைபோந்த யுத்தமகத்தனாகிய கொலாண் மகாராசா மெஸ்தர் இமான் வெல்லம்பல்க் அவர்களை கட்டளைப்படிக்கு இலங்கையில் முத்திரை சிவத்த லாகிரியாலே வைத்தது கீழே கையொப்பம் வைத்தது யொகான் கொஸ்தன் அங்கலவெக் சக்கடத்தார். சரிவரக்கண்டது அத்திரியானிஸ் பிறான்ஸ்கெ. தொலுக்கரித்தது கணக்கன்.

இலங்கையின் ஒல்லாந்து ஆளுநராக
1765 ஆகஸ்ட் 7ஆம் தியதி பதவியேற்று 1785 பெப்ரவரி 5 ஆம் தியதிவரை பணியாற்றியவர் இமான் வில்லெம் பால்க். இவர் அப்போது கண்டி அரசனாகவிருந்த கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனுடன் 1766 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் தியதி ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார். இந்த உடன்படிக்கையின்படி கண்டி இராச்சியத்தின் உரிமையுள்ள அரசனாக கீர்த்தி ஸ்ரீ ராஜ்சிங்கன் ஒல்லாந்தரால் ஏற்றுக்கொள்ளப்பட்டான். இதற்குப்பதிலாக இலங்கையின் கரையோரப்பகுதிகளை ஆளும் உரிமை ஒல்லாந்தருக்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தே மட்டக்களப்பைச் சேர்ந்த அறுமக்குட்டியின் போடி நியமனம் இடம்பெற்றது.

அறுமக்குட்டியின் போடிநியமனக் கடிதத்தில் ஒல்லாந்தரின் கொழும்பு அலுவலகத்தில் அப்போதைய சக்கடத்தாராக
(Secretary) இருந்த ஜொஹான் அங்கெல்பீக் (Johan van Angelbeek)என்பவரும் கையெழுத்திட்டுள்ளார். இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதிக்காலத்தில் பதவி உயர்வு பெற்றுக் கொழும்பில் ஆளுநராக (1794-1796) இருந்தவரும் இவரேயாவர். இவர் ஆளுநராக இருந்தபோதுதான் 1796 பெப்ரவரியில் கொழும்பை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்துவிட்டு ஒல்லாந்தர் சரண் அடைந்தனர். ஆங்கிலேயர் ஆட்சியின் போதும் தொடர்ந்து இலங்கையில் வாழ்ந்த ஜொஹான் அங்கெல்பீக் 1799 செப்டம்பர் இரண்டாம் தியதி கொழும்பில் காலமானார்.

மயில்வாகனப்புலவர் யாழ்ப்பாணவரலாற்றை எழுதும்படி தம்மை ஊக்குவித்தவர் ஓர் ஒல்லாந்து அதிகாரி என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளார். மட்டக்களப்பு மான்மியம் வரலாற்றுநூலை எழுதியவர் யார்? எழுத ஊக்குவித்தவர் யார்? என்பது போன்ற விபரங்கள் அந்நூலில் தரப்படவில்லை. எனினும் இந்நூலில் தரப்பட்டுள்ள போடி நியமனம் தொடர்பான தரவுகளை நோக்குமிடத்து மட்டக்களப்பு மான்மியமும் இலங்கையின் கரையொரப்பகுதிகளை ஒல்லாந்தர் தம்வசம் வைத்திருந்த
1766க்கும் 1796க்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றியதாகவே காணப்படுகின்றது. இதனை மேலும் உறுதிப்படுத்துவதுபோல் 'மதிநுதல் ஒல்லாந்த மன்னனே கேளும்' என்று மட்டக்களப்பின் வரலாற்றை ஒல்லாந்து மன்னனுக்குக் (ஆளுநருக்குக்) கூறுவதுபோல் வரும் பாடல் வரிகளை மேற்படி நூலின் 'பெரிய கல்வெட்டு'ப் பகுதியின் இறுதியில் காணமுடிகின்றது. இந்தப்பின்னணியில் வரலாற்று நூல்களை எழுதுவதற்கு இலங்கைத் தமிழர்களை ஊக்குவித்தவர்கள் ஒல்லாந்தர்தானோ என்ற ஐயம் தோன்றுவதைத் தவிர்க்கமுடியவில்லை.



இமான் வெல்லம் பல்க் (
Iman Willem Falck )     

                        

 

 

 

 

 



ஜொஹான் அங்கெல்பீக்
(Johan van Angelbeek)

 

 


 

 

 


 




கண்டி அரசனின் தூதுவர்கள் வருடம் ஒருமுறை இலங்கையின் கரையோரப் பிரதேசங்களின் ஒல்லாந்து ஆளுநர் இமான் வில்லெம் பல்க்கை கொழும்பில் உத்தியோகபூர்வமாகச் சந்தித்து வந்தார்கள்.
1772 ஆம் ஆண்டு இடம்பெற்ற இத்தகைய சந்திப்பு ஒன்றில் கண்டி அரசனின் தூதுவர்களாக மகா முதலியார் தொடன்வல ரலஹாமி முகாந்திரம் இனியகம ரலஹாமி முகாந்திரம் மிட்டெனிய ரலஹாமி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பைச் சித்தரிக்கும் ஓவியம் ஒன்று நெதெர்லாந்தின் ஹேக் அரும்பொருட் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.