இராம.குருநாதனின் கவிதை உலகு

முனைவர் இரா.மோகன்

‘உறங்கா நகரம்’ எனச் சிறப்பிக்கப் பெறும் மதுரை மாநகரில் அமைந்துள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளி ‘பாரதியார் பணியாற்றிய பெருமை உடையது!’ அது போல, சென்னை பச்சையப்பன் கல்லூரி ‘முன்னேற்ற வரலாறு’ எனப் போற்றப்படும் மு.வரதராசனார் பணியாற்றிய சிறப்பினைப் பெற்றது ‘படிக்கட்டும் தமிழ் பாடும்’ அக் கல்லூரியில் 34 ஆண்டுக் காலம் பணியாற்றும் நல்வாய்ப்பினைப் பெற்றவர் இராம.குருநாதன். தமிழுக்கு ஞான பீட விருதினை முதன்முதலாகப் பெற்றுத் தந்த ‘அகிலனின் புதினங்களில் புனைகதை மாந்தர்கள்’ என்னும் பொருளில் ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர் அவர். மானிடவியல், உயர்கல்வியியல், நாட்டுப்புறவியல், இதழியல், உருசிய மொழி ஆகியவற்றில் சான்றிதழும் நிறைசான்றிதழும் பெற்றுள்ள இராம.குருநாதன், புதுதில்லி சாகித்திய அகாதெமி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், கொல்கத்தா இராசாராம் மோகன்ராம் நூலக நிதி நல்கைக் குழு, தமிழக அரசின் பொது நூலக ஆணைத் தேர்வுக் குழு, அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களின் உயர்பொறுப்புக்களில் வீற்றிருந்து அருந்-தொண்டுகள் பலவற்றை ஆற்றிய பெருமைக்கு உரியவர். ‘ஒப்பிலக்கிய மாமணி’, ‘சங்க இலக்கியச் செம்மல்’, ‘மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் விருது’ முதலான பல்வேறு விருது-களுக்குச் சொந்தக்காரரான பேராசிரியர் இராம.குருநாதன், ஆய்வு, கட்டுரை, சிறுகதை, புதினம், வாழ்க்கை வரலாறு, தொகுப்பு, பதிப்பு, உரை, மொழிபெயர்ப்பு என்றாற் போல் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஏறத்தாழ 40 நூல்களை வெளியிட்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கிய உலகில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இமைப்பொழுதும் சோராது உயிர்ப்புடன் இயங்கி வரும் தகைசால் ஆளுமையாளர் இராம.குருநாதன். அவரது எழுதுகோல் புறநானூற்றைப் புதிய பார்வைக்கு உட்படுத்தும்; சங்கப் பாடல்களை ஜப்பானியக் கவிதைகளுடன் ஒப்பிடும்; இன்றைய ஹைகூ கவிதைகளையும் அலசி ஆராயும். பேராசிரியர் அ.சிதம்பரநாதனாரின் முனைவர் பட்ட ஆய்வினை இராம.குருநாதன், ‘தமிழ் யாப்பியல் உயராய்வு’ எனத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். இங்ஙனம் படைப்பிலக்கியம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு என்னும் முத்துறைகளில் முத்திரை பதித்து வரும் இராம.குருநாதன், தம் கவிதைகளைத் தொகுத்து ‘இராம.குருநாதன் கவிதைகள்’ என்னும் பெயரில் 2015-ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். சென்னை விழிகள் பதிப்பகத்தின் சார்பில் இக் கவிதைத் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது. இனி, கவிதைகளில் வெளிப்பட்டிருக்கும் இராம.குருநாதனின் படைப்பாளுமை குறித்துக் காண்போம்.

ஆழ்ந்திருக்கும் கவியுளம்

‘வெற்றுமொழிக் கவிதையன்று என் கவிதை’ என உரைத்திடும் இராம.குருநாதன், ‘மண்ணை உற்றுநோக்கிச் சமுதாயம் சிறப்பதற்கு ஓர் வாயில் உருவாக்கும் எண்ணத்தில் எழுதுகின்றேன் நானும்’ என ‘எழுத நினைத்த கவிதை’ என்னும் கவிதையில் ஒப்புதல் வாக்குமூலம் வழங்குகின்றார்; ‘நாளும் கடமைகளைப் பின்பற்ற நற்கவிதை’ வடிக்கின்றார்.

“துள்ளிவரும் கருத்தெல்லாம் சுடரொளியாய் வீசித்
       தொடர்ந்து வரும் சமூகத்தை நல்லபடி மாற்றிக்
கள்ளமற்ற என்கவிதை கரைசேர்க்கும் நாளைக்
       கனிவுடனே விதைத்து இங்கே தாய்த்தமிழைக் காப்பேன்!”


எனச் சூளுரைக்கும் கவிஞர்,

“விழுதாகத் தாங்கிநிற்கும் தாய்மொழியைப் போற்றி
       விழிப்புணர்ச்சி கொண்டு இங்கே விடியலைக் காணப்
பழுதில்லா நற்கருத்தை மண்மீதில் நல்ல
       பாட்டாக்கிச் சமூகத்தைத் திருத்திவிட வேண்டும்”
(ப.13)

என்னும் உயிர்ப்பான வரிகளின் வாயிலாக ஆழ்ந்திருக்கும் தம் கவியுளத்தினைத் திறந்து காட்டுகின்றார். சுருங்கக் கூறின், சமூகத்தைத் திருத்திட வேண்டும், நல்லபடி மாற்றிக் காட்ட வேண்டும், சமுதாயம் சிறப்பதற்கான வாயிலை உருவாக்கிட வேண்டும், எப்பாடு பட்டேனும் தாய்த் தமிழைக் காத்திட வேண்டும் என்னும் உயர்நோக்கங்களுடனேயே இராம.குருநாதன் கவிதை எழுதும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளார்.

கவிஞரின் மொழிக் கொள்கை

இராம.குருநாதனின் மொழிக் கொள்கை அழுத்தமானது; திருத்தமானது. ‘பழகுதமிழ் மொழியறிவைப் பெற்ற பின்னர்ப் பிற மொழியில் உள்ளவற்றை அறிக’ (ப.15) என்பதே அவரது திண்ணிய கருத்து. வள்ளுவரின் மொழியினைக் கையாண்டு,

“‘எற்றுக்கு உரியர் கயவர் எனில்’
       இத்தரை மீது தமிழ்மறந்தார்!”
(ப.17)

எனக் கடுமையாகச் சாடுவார் கவிஞர், மேலும் அவர்,

“அமிழ்தனைய நம்மொழி மேல் காதல் கொள்ளா
       அறிவிலிகள் உண்டு என்றால் திருத்து வோமே!”
(ப.15)

எனவும் வெடிப்புறப் பேசுவார்.

“என்ன இல்லை நம்மொழியில்
     எண்ணிப் பார்க்க வேண்டாமா?”
(ப.17)

என வினவும் கவிஞர்,

“நறுந்தமிழில் உள்ளவற்றை நாளும் போற்றி
       நானிலத்தைப் புதிதாக ஆக்கு வோம்வா!”
(ப.15)

எனத் தமிழர்க்கு அறைகூவல் விடுப்பார்.

‘அழிந்துவரும் மொழிகளிலே தமிழும் ஒன்றாம்’
       ஐ.நா.வின் இக்கூற்றைச் செவிமடுப்பீர்!”
(ப.18)

என எச்சரிக்கும் கவிஞர், “மூத்த மொழியாம் தாய்த் தமிழைக் காக்க, இயக்கப் போர் செய்தற்கு விரைவீர் இன்றே!” எனத் தமிழரை முடுக்கின்றார்;

இளையோர்க்கான எழுச்சிப் பாடல்

‘பூமிக்குள் இல்லை புதையல்!’ என்னும் ஒரு கவிதை போதும், இராம.குருநாதனின் படைப்புத் திறத்தினைப் பறைசாற்றிட. அக் கவிதை ‘வெறும் கற்றைக் காகிதக் கனவுகளில் – நீ காலம் முழுதும் கழிப்பதும் ஏன்?’ என்றும், ‘காலைப் பொழுது உனக்கு இல்லையா? – உன் கண்ணைத் திறக்க வழி இல்லயா?’ என்றும், ‘தினம் தீயாய்க் கவலை பெரிதாகி – உன்னைத் தின்னும் படிக்கு விடலாமா?’ என்றும், ‘இமைகளைக் கொஞ்சம் உயர்த்திப் பார் – உன் அருகில் இமயம் தெரிகிறதா?’ என்றும் அடுக்கடுக்கான கேள்விக் கணைகளைத் தொடுத்து, முகாரி பாடியே மூலையில் முடங்கிக் கிடக்கும் இளைய தலைமுறையைத் தட்டி எழுப்புகின்றது; ‘வாழ்வில் சோதனை இன்றிச் சுகம் இல்லை’ என்னும் உண்மையை உணர்த்தி, ‘புகழ் வெற்றிக் கொடியை நாட்டிடவே – மண்ணில் வீரப் பரணி பாடி எழு’மாறு அறிவுறுத்துகின்றது.

“கடமை என்பது கடலலளவு – அதில்நீ
     கடந்து வந்தது காலளவு – உண்மை.
உடைமை என்பது உள்ளளவு – மனிதம்
      உயர்ந்திட அன்புதான் கொள்ளளவு”
(ப.97)

என்பது இளைய பாரதத்திற்கு இராம.குருநாதன் முன்மொழியும் வாழ்வியல் பாடம்.

வீணே வருந்திக் கிடப்பதில் பொருள் இல்லை; நல்ல வேளை வரும் என்று காத்திருந்து, வெட்டியாய்ப் பொழுதைக் கழிப்பதிலும் பயன் இல்லை. பின் என்னதான் செய்வதாம் என வினைவும் இளைஞனுக்கு, வாசலில் நம்பிக்கை வளர விடுமாறும், மனத்தைத் திருத்தப் பயிற்சி எடுக்குமாறும் வழிகாட்டுகின்றார் கவிஞர். அவரது அகராதியில் ‘மூளைத் தனமே மூலதனம் - அது முடங்கிப் போனால் ஏது தடம்?’ முத்தாய்ப்பாக, ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்திற்கு இராம.குருநாதன் விடுக்கும் செய்தி இதுதான்.

“மனத்தைத் தோண்டிப் புதையல்எடு – நல்ல
      மானுடம் போற்றும் புகழைப் பெறு – மனித
இனத்தை உயர்த்தப் பாடுபடு – அதற்கு
     இன்றே உழைக்கப் பயிற்சி எடு!
பூமியில் இல்லை புதையலடா – மனப்
     புன்னகை ஒன்றே விடியலடா – இங்கு
நாமும் வாழ்வது உண்மையடா – நாளும்
       நல்லதை நினைத்தே உயர்ந்திடடா!”
(ப.98)

‘நாளை பார்த்துக் கொள்ளலாம்!’ என்று இல்லாமல், ‘இன்றே உழைக்கப் பயிற்சி எடு!’ என்றும், ‘வாழ்வில் எப்படி உயர்வது?’ என்று கனவு கண்டு கொண்டே காலத்தைக் கழிக்காமல், ‘நாளும் நல்லதை நினைத்து உயர்ந்திடு’ என்றும் நறுக்கான மொழியில் இளையோர்க்கு வலியுறுத்துகின்றார் கவிஞர்.

தெள்ளிய வாழ்வியல் சிந்தனை

வாழ்க்கை பற்றிய தத்துவச் சிந்தனைகள் தமிழ் இலக்கியத்தில் காலந்தோறும் பதிவாகி வந்துள்ளன. ‘வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே’ (புறநானூறு, 192) – ‘வாழ்தலை இனிது என மகிழ்வதும் இல்லேம்; வெறுப்பால் வாழ்வு இனியதன்று என்று இருப்பதும் இல்லேம்’ என்பது சங்கச் சான்றோர் கணியன் பூங்குன்றனாரின் வாக்கு. ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும், தெய்வத்துள் வைக்கப் படும்’ (50) என்பது வான்புகழ் வள்ளுவரின் மந்திர மொழி. ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும், எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவிலை’ என நம்பிக்கை ஊட்டுவார் திருஞானசம்பந்தர். ‘வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்?’ என வினவுவார் கவியரசர் கண்ணதாசன். இவர்களின் வரிசையில் இராம.குருநாதனும் இணைந்து ‘தத்துவச் சாளரங்கள்’ என்னும் பகுதியில் வாழ்க்கை பற்றிய தமது ஆழ்ந்த தத்துவ சிந்தனைகளை வெளியிட்டுள்ளார். ‘வாழ்க்கையை வெல்வோம்’ என்னும் கவிதை இவ்வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

“இனிய கீதை / இந்துக்களையும்
 கீர்த்திமிகு பைபிள் / கிறித்துவர்களையும்
முதிர்ந்த குர்ஆன் / முஸ்லீம்களையும்
உற்பத்தி செய்யாமல் / மனிதர்களை உருவாக்கும்”


                 (நேயர் விருப்பம், ப.88)

என ‘ஒப்பிலாத சமுதாயம்’ என்னும் தம் முத்திரைக் கவிதையில் மொழிவார் கவிக்கோ அப்துல் ரகுமான். அவரது வைர வரிகளை நினைவுபடுத்தவது போல்,

“மதங்களை உருவாக்கி / மரத்துப் போனோம்
மனிதர்களை உருவாக்க / மறந்து போனோம்”


என்கிறார் இராம.குருநாதன். ‘நிழல்களை உருவாக்கி, நிசம் மறந்து போனாம்’ என்றும், ‘நேயத்தை மறந்து விட்டு, நித்தம் நடிக்கின்றோம்’ என்றும் கவிதையை வளர்த்துக் கொண்டே செல்லும் கவிஞர்,

“வாழும் வகை யறிந்து / வாழ்ந்துவிடப் பார்ப்போம்
தாழும் நிலை வந்தாலும் / தனித்து நின்று வெல்வோம்!”
(ப.83)

எனக் கவிதையை முடிப்பது சிறப்பு.

இராம.குருநாதனின் கருத்தில் வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதோடு நின்றுவிடக் கூடாது; வாழ்க்கையில் வென்று காட்ட வேண்டும்! ‘வாழ்க்கையை வெல்வோம்!’ என்னும் அவரது கொள்கை முழக்கம் பொருள் பொதிந்தது. பிரிதொரு கவிதையிலும்,

“வாளை மீனாநீ நழுவுதற்கு – உன்
      வாழ்க்கை என்ன அழுவதற்கா?
காளை வீரம் உனதல்லவா! - உன்
     கடமை உணர்வது சிறப்பல்லவா?”
(ப.82)

என வெட்டிப் பொழுதை விரட்டியடித்து, விதி என்னும் சொல்லை மாற்றிக் காட்டி, விட்டில் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இலட்சியத்தோடு இடைவிடாது முயன்று வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்குமறு இளைய தலைமுறையினருக்கு அறிவுறுத்துகின்றார் கவிஞர்.

மண்ணின் மைந்தர்களைப் பற்றிய படப்பிடிப்புகள்

இராம.குருநாதன் வித்தியாசமான சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர் என்பதற்குக் கட்டியம் கூறி நிற்கும் பகுதி ‘இவர்களும் மண்ணின் மைந்தர்கள்’ என்பது. இதில் இடம்பெற்றிருக்கும் கவிதைகளில் கண்ணற்றவர், கிளி சோதிடன், குடுகுடுப்பாண்டி, பைத்தியங்கள், தொழுநோயாளி, உள்ளத்தில் அழுக்குப் படிந்த பாசி மனிதர்கள், குடிகேடன் ஆகியோரது வாழ்க்கை நிலைகள் இயல்பான முறையில் படம்பிடித்துக் காட்டப் பெற்றுள்ளன.

“விட்டகுறை தொட்டகுறை
      இறைவன் படைப்பிலே – வாழ்க்கை
விதியை மாற்றி அவனும் இங்கே
      வெற்றி காண்கின்றான்”
(ப.53)

எனப் பார்வையில்லாக் கண்ணிரண்டால் உலகில் கவனமாகப் பவனி வரும் எளிய மனிதர் ஒருவரை நம் மனக்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் கவிஞர், பிறிதொரு கவிதையில்,

“கரியநிற அணில்வால் மீசை; கன்னம்
     கறுப்புநிற மச்சத்தை எடுப்பாய்க் காட்டும்;
உரியநிற மஞ்சளிலே வண்ண ஆடை
     உற்றுநோக்கப் பலவிடத்தில் பொத்தல்; பார்வை
விரியவரும் ஆந்தைபோல் விழிகள்; காலம்
     விடிவதற்கு வழிசொல்லும் மொழிகள்; தோளில்
பெரிதாகத் தொங்குகின்ற மூட்டை; நெஞ்சில்
     பிறருக்காய்ச் சேர்த்துவைத்த பொய்ம்மை மூட்டை”
(ப.57)

என நடப்பியல் பாங்கில் ஒரு குடுகுடுப்பாண்டியின் புறத் தோற்றத்தினைச் சொல்லோவியம் ஆக்கியுள்ளார்.

“உலகம் ஒரு சத்திரமாம் – அதில்
ஒவ்வொருவரும் ஒருவகைப் பைத்தியமாம்!
பலவிதமான பைத்தியத்தை நாமும்
பார்க்கின்ற விதத்தில் பைத்தியமே!”
(ப.58)

என்பது ‘பைத்தியங்கள்’ என்னும் கவிதையின் சுவையான தொடக்கம் ஆகும்.

‘கருக்கிருட்டு சுள்ளி போன்ற கைகள் – காட்டுக் காயாம்பூ ஒத்திருக்கும் மேனி – கண்கள் சுருக்கென்று கூசி நிற்கும் இமைகள் – சுள்ளெனவே உடம்பை மொய்க்கும் ஈக்கள் – கறுப்புநிற மெழுகு ஒத்த விரல்கள் – ஒழுகி வரும் கசிவு நீரைத் துடைக்கும் கைகள்’என ஒரு தொழுநோயளியின் அவல நிலையினை உள்ளது உள்ளபடி வரைந்து காட்டும் கவிஞர்,

“தொடக்கூட கூசும் படிக்கு ஆளாகித்
தொழக்கூட முடியாமல் இருப்பவரைத்
தொழுநோ யாளிஎன்று
சொல்வது தகுமோ சொல்வீர்!”
(ப.59)

என மென்மையான நகைச்சுவை உணர்வு தோன்ற வினவுவது குறிப்பிடத்-தக்கது.

“ஊரும் குடிக்கத் தான் குடிப்பான்
உயிர்தான் தன்னைக் குடிப்பதறியான்”
(ப.61)

எனக் குடிகேடனின் உண்மை நிலையினைக் கவிஞர் இலக்கியச் சுவையொடு வெளிப்படுத்தி இருக்கும் திறம் நனிநன்று.

மயானமான மகாமக நகரம்!

‘குழந்தைகளை விழுங்கிய குடந்தை’ என்பது இத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கவிஞரின் ஆகச் சிறந்த கவிதை ஆகும். பாடல் பெற்ற திருத்தலம் என்றும், மகாமக நகரம் என்றும், ‘பதிப்பு வேந்தர்’ உ.வே.சா. புகழோடு தோன்றிய மாநகர் என்றும் இதுவரை சிறப்பித்துப் பேசப்பட்டு வந்த குடந்தை மாநகர் இப்போது எப்படி ஆகிவிட்டது தெரியுமா? இதோ, கவிஞரின் சொற்களில் குடந்தை மாநகர் பற்றிய படப்பிடிப்பு; பதிவு:

“குடந்தை மாநகர்
கோயில் நகரமா?
கொடிய நரகமா?
நீரும் நெருப்பும்
தாண்டவ மாடிய
திருத்தலமா அது?”


பன்னிரு ஆண்டுகளுக்கு முன், இங்கே நிகழ்ந்தது நீரின் கைவரிசை: குளக்கரை நெரிசலில் நீராட வந்தவர் மாண்டு போயினர்; பாவம் போக்கக் குடந்தைக்கு வந்தவர் பாடை இன்றியே பரம பதத்திற்குப் பயணம் ஆனார்கள்!

மீண்டும் ஓர் நிகழ்வு: ஒரு வேறுபாடு – இம்முறை நெருப்பின் கைவரிசை! ஆடி மாதத்தின் முதல் வெள்ளியில் வாடிய அரும்புகள் தீயின் பசிக்கு விருந்தாயின. தீயின் விரல்களால் தீய்ந்தன மொட்டுகள். படிக்கட்டே பிஞ்சுக் குழந்தைகளுக்குப் பாடை ஆனது. கல்வியறைக் கண்மணிகள் கல்லறையில் அடங்கினர்.

“மழலை அரும்புகளால்
மயானமானது
மகாமக நகரம்!...
குழந்தைகள் மாண்ட
குடந்தை நகர்தான்
மகாமக நகரா?
மகாபாவ நகரா?”
(பக். 49-50)

என்னும் கந்தக வரிகளுடன் நிறைவு பெறுகிறது கவிதை.

புகழ் பெற்ற குழந்தைப் பாடலின் புதுக்கோலம்

‘மழலை அரும்புகள்’ என்னும் தலைப்பில் இத் தொகுப்பில் கவிஞரின் ஆறு குழந்தைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ‘அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா’ என்னும் புகழ் பெற்ற குழந்தைப் பாடல், இராம.குருநாதனின் கைவண்ணத்தில் காலத்திற்கு ஏற்ற புதுக்கோலத்தினைப் பூண்டுள்ளது. ‘அம்மா திட்டாதே’ எனக் குழந்தை தனது அம்மாவை நோக்கிக் கூறுவதாக அமைந்த அப்பாடல் இதோ:

“அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் வேண்டாம்
சும்மா நீயும் என்னைத்
திட்டித் தீர்க்க வேண்டாம்
பள்ளிக் கூடப் பாடம்
பாங்காய் நானே படிப்பேன்
வீட்டில் வந்து கணக்கை
விளங்கிக் கொண்டு
செய்வேன் நானே!
ஐயம் ஏதும் வந்தால்
அக்கா இருக்கா கேட்பேன்
சும்மா நீயும் என்னைத்
திட்டித் தீர்க்க வேண்டாம்!”
(ப.110)

எப்போதும் பள்ளிக்கூடப் பாடத்தைச் செய்யச் சொல்லியே திட்டித் தீர்க்கும் – நச்சரிக்கும் - தாயையும், தாயிடம் தன் உணர்வைப் பாங்காக வெளியிடும் குழந்தையையும் இப் பாடலில் இயல்பான பாங்கில் சித்திரித்துள்ளார் கவிஞர்.

சின்ன அழகு மூக்காலே நெல்மணிகளைக் கொறிக்கும் குருவியையும், வண்ண மயில் தோகை காட்டி ஆட்டம் காட்டும் மயிலையும், கறுப்புச் சட்டை போட்டிருக்கும் காக்கையாரையும், தண்ணீர் உள்ள குட்டையில் தவம் இருக்கும் யோகி போல் நீண்ட நேரம் கிடக்கும் தவளையாரையும் குழந்தைகளுக்கு விளங்கும் வண்ணம் எளிய சொற்களில் தமது பாடல்களில் அறிமுகப்படுத்தி-யுள்ளார் கவிஞர். ‘நாட்டைக் காக்கும் வீரர், நமது சொந்தக்காரர்’ என இரவு பகலாய் மழையிலும் வெயிலிலும் உயிரைப் பணயம் வைத்து அலைந்தும் உழந்தும் நாட்டு எல்லையைக் காத்து வரும் வீரர்களைக் குறித்துக் கவிஞர் படைத்திருக்கும் குழந்தைப் பாடல் குறிப்பிடத்தக்கது.

கவிஞர் போற்றும் வாழ்க்கைத் துணை நலம்

‘இல்லது என் இல்லவள் மாண்பானால்ட?’ என வினவிய வள்ளுவரின் வழியில் வாழ்க்கைத் துணைவியின் நலத்தினை இராம.குருநாதன் தம் கவிதை ஒன்றில் அழகுறச் சித்திரித்துள்ளார்.

“விண்ணில் நிலவாய்ப் பூத்திருந்தாள்
கண்ணில் ஒளியாய் நிறைந்திருந்தாள்…
மருளும் வாழ்க்கைச் சூழலிலே – வாழ்க்கை
மகிழ வைக்க ஒருத்தி வந்தாள்…
பொதிகைத் தென்றலாய் அவள் இருந்தாள் - புதுப்
பொலிவில் பூத்துக் கனிந்திருந்தாள்…
தேவதைபோல எனக்கு அமைந்தாள் – என்
தேவைகள் அனைத்தும் புரிந்திருந்தாள் – தமிழ்
ஆவியாய் நெஞ்சில் குடிபுகுந்தாள் - குடும்ப
அக்கறை தன்னில் சிறந்திருப்பாள்”


தற்கொண்டானையும் குடும்பத்தையும் ஆர்வத்தோடும் அக்கறையோடும் பேணி வரும் தகைசான்ற பெண்ணின் பெருமையை இக் கவிதையில் உருக்கமாகவும் உயிரோட்டமாகவும் பதிவு செய்துள்ளார் கவிஞர். ‘என் தேவையை யார் அறிவார் – உனைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்’ என்னும் கவியரசர் கண்ணதாசனின் வைர வரிகளும் கவிஞர் வைரமுத்துவின் ‘என் வீட்டு தேவதை’ என்னும் கவிதையும் ஈண்டு ஒப்புநோக்கத் தக்கன.

உத்தம மனிதர்களைப் பற்றிய உயரிய பதிவுகள்

“மண்ணுக்குள் மறைந்து வெளித்தெரியா வேரினைப்போல்
கண்ணுக்குள் தெரியாமல் கடமைபல ஆற்றிவந்த
உண்மையின் மறுபிறப்பாம் உத்தம மனிதர்கள்”


என விதந்து போற்றும் இராம.குருநாதன், அத்தகைய பெருந்தகையோரை ‘மண்ணுக்குள் மறைந்தாலும் மாபெரும் தத்துவங்கள்!’ என்றும், ‘விண்ணுலகு சென்றாலும் விலையிலா முத்துக்கள்!’ என்றும், ‘மும்மைக் காலத்திற்கும் முகவரி தந்தவர்கள்’ என்றும் புகழாரம் சூட்டுகின்றார். ‘காந்தி நாளில் மட்டுமே வருகிறாயே, காந்தி!’, ‘தமிழ்த் தென்றல்’, ‘விடுதலைச் சித்தன்’, ‘புரட்சியின் விளைச்சல்’, ‘விண்ணில் ஒரு விடிவெள்ளி’ என்னும் கவிதைகள் இவ்வகையில் மனங்கொளத் தக்கவை.

“மறுபடி மண்ணில் நீ / எப்போது மலர்கின்றாயோ
அப்போது மட்டுமே / எங்கள் ஆன்மா புனிதமாகும்”
(ப.137)

எனக் காந்தியடிகளைப் போற்றும் கவிஞர்,

“சாதிக்கலாம் எனச் சொல்லிச் / சரித்திரம் படைக்க
விண்வெளிக்கு / ஒரு விடிவெள்ளி / கிடைத்தது.
அதற்குப் பெயரிடுவோம் / கலாம் என்றே!”
(ப.141)

என அப்துல் கலாமுக்குப் புகழாரம் சூட்டுகின்றார்.

கவிஞரின் மொழி ஆளுமை

“மொழியை மறந்தால் விழிப்பு ஏது? – இதைநீ
     முதலில் உணர்ந்தால் பழிப்பு ஏது?”
(ப.14)

எனது தமிழ் மொழியின் உயர்வினை உணர்த்தும் போதும்,

“நாழி கைப்போதில் இயற்கை / நடத்திய கோர நாடகமா?
பாழும் நீர் அரக்கி நடத்திய / படுகளத் தின்போர்க் களமா?”
(ப.53)

என ஆழிப் பேரலையால் விளைந்த அவலத்தினைப் பதிவு செய்யும் போதும்,

“உண்பது எலியுணவு / உடுப்பது ஒரு கிழிசல்
உழல்வது வறுமையில் / உழவனின் நிலை இன்று”
(ப.66)

என உழவனின் இன்றைய வாழ்க்கை அவலத்தினைச் சித்திரிக்கும் போதும்,

“இயற்கை யாவும் பொதுவுடைமை
      எதற்கு மண்ணில் தனியுடைமை?”
(ப.74)

எனப் பொருள் பொதிந்த கேள்விக் கணையை மானிடத்தை நோக்கித் தொடுக்கும் போதும்,

“மண்ணிடையே மறுமணத்தை மறுப்போர் தம்மை
       மாண்புடனே எடுத்துரைத்துத் திருத்தி வைப்போம்!”
(ப.116)

என முற்போக்கான சிந்தனையை முன் மொழியும் போதும்,

“நந்தமிழில் இவர்போலக் கவிவ டித்தோர்
நானிலத்தில் யாண்டும்இல்லை என்று உரைப்பேன்!”
(ப.140)

எனத் திங்கள் போல் குளிர்நடையின் மென்மையோடும் செழுந்தீயாய் எரிகின்ற கருத்தினோடும் பாட்டிசைத்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைப் போற்றிப் பாடும் போதும் கவிஞரின் மொழியில் அருமையும் எளிமையும் அழகும் ஆற்றலும் கொலுவிருக்கக் காண்கிறோம்.

நிறைவாக, ‘கவிதைக்கு அழிவில்லை’ என்னும் கவிதையில், ‘என் கவிதைக் கனலுக்கு அழிவில்லை’ என்றும், ‘என்னுள் விரியும் கவிதைக்கு அழிவில்லை’ என்றும் பறைசாற்றும் இராம.குருநாதன்.

“கொட்டிக் கிடக்கும் எனது உணர்ச்சி - என்றும்
கூர்மை வாளாய்க் களம் இறங்கும் …
சொல்லும் பொருளும் உள்ள வரை - என்னுள்
தொடரும் சமூகச் சிந்தனைகள்…
செல்லும் வழியைச் சீராக்க - நான்
சீறிப் பாய்வேன் தமிழாலே!”
(ப.21)

எனவும் அறுதியிட்டு உரைக்கின்றார். அவர் தம்முள் கொட்டிக் கிடக்கும் தமது உணர்வுகளையும், கனன்று கொண்டிருக்கும் உரத்த சிந்தனைகளையும் தொடர்ந்து கவிதை வடிவில் வெடிப்புறத் தந்து சமூகத்தில் நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்திட வேண்டும் என்றே தமிழ் கூறு நல்லுலகம் எதிர்நோக்குகின்றது.

 


முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
- 625 021.