இன்றே சென்று வருவது நாளை

அனலை ஆறு இராசேந்திரம்

பிரிவு என்னும் ஒன்று உளது என்பது உணராதாராய்த் தலைவனும் தலைவியும் காதலின்பத்தில் மூழ்கிக் கிடந்தனர். கரும்பும் இனிமையும், மலரும் மணமும், தமிழும் சுவையுமென்ன அவர்கள் இருவரும் ஒன்றியிருந்த அந்நேரம் வேந்தனிடத்திருந்து தலைவனுக்குக் கட்டளை ஒன்று கிடைத்தது. அதன்படி, நாட்டுக் கடமைக்காக அவன் நீண்ட தூரம் செல்லவேண்டியிருந்தது.

பிரிந்து போகவிருக்கும் செய்தியைத் தலைவிக்குச் சொல்ல அஞ்சினான் தலைவன்.

''பிரியாமை உண்டாயின் அதனை எனக்குச் சொல் அதுவிட்டு, பிரிந்துபோய்
விரைந்து வருதல் சொல்வையாயின் அச்செய்தியினை அப்போது உயிர் வாழ்வார்க்குச் சொல்'' என முன்னொருகாற் கூறிய தலைவியன்றோ அவள்!.

செய்வதறியாது திகைத்து நின்றான் அவன். அவ்வேளை அவனருகே தேர் ஒன்று வந்து நின்றது. தேரைக் கண்டதும் தலைவன் பிரிவை உய்ந்துணர்ந்தாள் தலைவி.

ஒருபுறத்தே நின்ற தலைவி கேட்குமாறு தலைவன் பாகற்குப் பின்வருமாறு சொல்வானாயினான்.

''பாகனே, இப்போதே நாம் புறப்பட்டுச் சென்று நாளை இவ்விடம் திரும்பி வந்துவிடுவோம்''

'நீண்ட தூரத்தை இன்றே கடந்து செல்லுதலும், நாளை மீண்டும் கடந்து வருதலும் எவ்வாறு இயலும்!'' என அறியத் துடித்தது தலைவியின் நெஞ்சம்.

அதற்குப் பதிலிறுப்பான் போல் 'மலையினின்று வீழும் அருவியைப்போல் தேர் விரைந்து செல்லட்டும்' என்று பாகற்குக் கட்டளையிட்டான் தலைவன்.

''சக்கரங்கள் புதையத் தக்கதும், புல் மண்டிக் கிடப்பதுமான வீதிவழி தேர் விரைந்து செல்வது பொருந்துவதோ?'' என முகபாவனையிற் கேட்டுநின்றாள் தலைவி.

''மண்ணிற் புதையுங்கால் இளம்பிறை வடிவினதாகத் தோன்றும் ஒளிமிக்க சக்கரங்கள், வான்கொள்ளி பயிர்களை எரித்தழித்தாற் 
போல் வழியிடத்துள்ள புற்களை வெட்டிச்  சிகைக்கக்  காற்றின் வேகத்தின்  (நாளை) மாலை இங்கு வந்துவிடுவோம்!.

இத்தோடு தலைவன் பாகனுடன் பேச்சை முடித்துக்கொண்டான் அல்லன்.

தலைவிபால்  தான்  கொண்டிருக்கும் காதலின் மிகுதியை வெளிக்காட்டும் விதத்தில் ''(வந்து சேர்ந்ததும்) சில வரிசைகளே ஒளிபொருந்திய வளையல்களை அணிந்த தலைவியின் பல் சிறப்புக்கள் கொண்ட மேனியைத் தழுவி மகிழ்வோமாக!" என்று சொல்லி முடித்தான். அவளுடன் தான்கொண்ட காதல் ''அன்பில் விளைந்தது மட்டுமன்றி, அவள் அழகு பற்றியதுமாகும்' என்றான் தலைவன். வேட்ட பொழுதின் அவைஅவை போலும் இன்பம் அளிக்கும் தோட்டார் கதுப்பினாள் ஆகத்தை 'பன்மாணாகம்'' எனச் சுட்டுகிறான் தலைவன்.

இன்றே சென்று வருவது நாளைக்
குன்றிழி அருவியின் வெண்டேர் முடுக,
இளம்பிறை அன்ன விளங்குசுடர் நேமி
விசும்புவீழ் கொள்ளியிற் பைம்பயிர் துமிப்பக்
காலியற் செலவின் மாலை எய்திச்
சின்னிரை வால்வளைக் குறுமகள்
பன்மா ணாகம் மணந்துவக் குவமே.

                                                              குறுந்தொகை -189

தலைவன் தன் பிரிவை நுண்ணிய முறையில் தலைவிக்கு வெளிப்படுத்தும் பாங்கில் அமைந்த இக்கவியோவியத்தை தீட்டியவர் நம் புலவர்  ஈழத்துப் பூதந்தேவனார் என்பதை எண்ணுந்தோறும்
நெஞ்சில்   உவகைத் தேன்அன்றோ பெருகுகிறது.