வெள்ளை நிற எழுத்துக்காரர்

டாக்டர் ஆர்.கார்த்திகேயன்


நான் கடும் சுரத்தில் படுக்கையில் கிடக்கையில, தன் இயல்புக்கு மாறாய் என் மனைவி பதட்டத்துடன் சொன்ன செய்தி: 'அசோகமித்திரன் போயிட்டாராம்!'.

மோசமாக எடிட்டிங்க் செய்த படமாய் மனதில் முன்னுக்கு முன் பிம்பங்கள் ஓடின. 1994ல் ஜிஎன்.செட்டி சாலையில் எதிர்பாராமல் நடந்தது எங்கள் முதல் சந்திப்பு. ' நீங்கள் அசோகமித்திரனா?' என்று கேட்ட ஒரு அரை வேக்காட்டு இளைஞனை மதித்து அரை மணி நேரம் வெயிலில் நின்று பேசுவார் என்று நினைக்கவில்லை. மானசரோவர் படித்து முடித்த நேரம். எனக்கு லாகிரியான சினிமா உலகம் பற்றிய நாவல். கொஞ்சம் அசந்து ஒரு வரி விட்டால் கூட கதையின் முக்கிய இழை தவறிவிடும். அப்படி ஒரு நடை. 'அந்த ஹீரோ நடிகர் திலீப்குமார் தானே?' என்று கேட்க நினைத்து கடைசி வரை கேட்கவில்லை. மற்ற கதைகளை விட அன்று மானசரோவரையே சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தேன். என் பி.ஹெச்.டி ஆராய்ச்சி பற்றியெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். நானும் எழுதுவேன் என்றேன். அந்த ஒரு வருடத்தில் என் சில கதைகள் பிரசுரமாகியிருந்தன. வாருங்கள் என வீட்டுக்கு அழைத்தார். விலாசம் தந்தார்.

தினமணி கதிரில் வந்த என் கதையை படித்துவிட்டு ஒரு போஸ்ட் காரட் நிறையப் பாராட்டி எழுதியிருந்தார். அதற்குப் பிறகு நான் கதைகள் எழுதவில்லை என்பது வேறு விஷயம். அவர் மகனின் கல்யாணப் பத்திரிகையை அனுப்பியிருந்தார்- அவசியம் வாருங்கள் என்று குறிப்புடன். ஏனோ போக முடியவில்லை. மறு வாரமே இன்னொரு காரட் வந்தது. ஆங்கிலத்தில் இரண்டே வரிகள். 'உங்களை எதிர்பார்த்தேன். ஏன் வரவில்லை?'

அதன் பிறகு, அவரை சந்திக்கும் மனத் திடத்தை முற்றிலும் இழந்திருந்தேன்.

பிறகு சந்தித்தது
2000ல். இடையில் ஆராய்ச்சி முடிந்து, துறை மாறி கார் கம்பெனியில் வேலை பார்த்து, பின் ராஜினாமா செய்து நண்பர் ஒருவருடன் சேர்ந்து புது கம்பெனி ஆரம்பித்திருந்தேன். இரு குறும்படங்கள் எடுத்த தைரியத்தில், அப்போதிருந்த விஜய் டி.விக்கு 'சினிமாவில் பெண்கள்' என்ற பெயரில் பிரபலங்களை நான் நேர்காணல் செய்யும் தொடர் நிகழ்ச்சியைத் தயாரிக்க ஆரம்பித்தோம். ஒரே நாளில் 8 எபிசோட் சுட்டால் தான் கரையேற முடியும் என்ற வினோத கணக்கில் பல வி.ஐ.பிக்களை வரிசையாகக் காக்க வைத்திருந்தோம். அதில் மூன்றாமவர் அசோகமித்திரன். செட்டில் உட்கார்ந்த பின் தான் என்னைப் பார்க்கிறார். கடைசி முறை பார்த்தபோது புரிந்த அதே மெலிதான புன்னகையில் மாற்றமில்லை.

நிகழ்ச்சியில் என்னுடன் இருந்த தொகுப்பாளினிக்கு தமிழ் வரவில்லை. நானும் அவருக்கு அதிகம் சந்தர்ப்பம் தராமல் ஒப்பேற்றிக் கொண்டிருந்தேன். நிகழ்ச்சியில் நான் எதிர்பாராத நேரத்தில் 'நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இதைப் பற்றி?' என்று அந்த பெண்ணைப் பார்த்துக் கேட்டார் அ.மி. ஊடகத்தில் பெண்களின் பங்கு என்ற பெயரில் நடத்தும் நிகழ்ச்சியிலேயே பெண்ணிற்கு சரியான பங்கில்லை என்ற விமர்சனத்தைச் செய்யாமல் செய்தார் அவர்.

உணவு இடைவெளியில் படங்கள் பற்றிப் பேசினோம். ' அபூர்வ சகோதரர்கள் மாதிரி ஒரு படத்துல கூடக் கமல் ஏன் இவ்வளவு வன்முறையை காமிக்கிறார்?' என்று வதை பட்ட முகத்துடன் கேட்டார். ' நீங்கள் ஏன் படம் எடுக்கவில்லை?' என்று குழந்தைத் தனமாய்க் கேட்டேன். ஒரு குற்றச்சாட்டே இல்லாத தொனியில் சொன்னார்: ' சினிமாவில் மனிதர்களை நடத்தும் முறை எனக்கு ஒத்து வரலை. இங்க வந்து காத்திருக்கும் போது அதையே தான் பார்த்தேன்.'

மீண்டும் தொடர்பை புதுப்பித்துக் கொள்ளவில்லை. வாசகனாய் தள்ளி நின்று பார்க்க பழகிக் கொண்டேன். இரு ஆண்டுகள் முன் எழுத்தாளர் ஜெயமோகனின் கோலாகல விழாவிற்கு அழைப்பு வந்து சென்றேன். செல்வேந்திரன் தயவால் மூன்றாம் வரிசையில் சீட. பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், இளையராஜா, கமலஹாசன் என்று நட்சத்திரக் கூட்டம். அசோகமித்திரன் சற்று பலகீனமாய் காணப்பட்டார். தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வை கனமான பேச்சில் வெளிப்படுத்தினார்.

'அஷ்வத்தாமாவுக்கு மரணமே இல்லை. யார் கண்டா இந்த கூட்டத்துல கூட உக்காந்து கேட்டுட்டு இருக்கலாம்!'

பிறகு பார்க்கவேயில்லை. என் புத்தகங்களை தி இந்து வெளியிட்ட போது அவரை நேரில் பார்த்து கொடுக்கனும் என நினைத்தேன். பிறகு ஒரு எண்ணம். ஒரு புனைவு எழுதி புத்தகமான பின் பார்க்கலாம். படிக்கக் கொடுத்து அணிந்துரை கேட்கலாம். அதற்குள் போய் விட்டார். அல்லது அவ்வளவு தாமதப் படுத்திவிட்டேன்.

என் பயணமும் அசோகமித்திரனின் உலகமும் நெருக்கமானவை. ஜே.என்.யூ நூலகத்தில் ஐ.ஏ.எஸ் க்கு தயார் செய்பவர் மத்தியில் இடம் பிடித்து உட்கார்ந்து இரவு பகலாய் படித்த நாவல் 'தண்ணீர்'. ரகுவரன் இந்த பாஸ்கர் கேரக்டர் பண்ணலாம் என்று சுவராசியமில்லாத நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். இது
1989ல். என் சித்திப்பா மகள் மீரா தான் ஆரம்ப காலத்தில் அசோகமித்திரன் புத்தகங்களை இரவலாகத் தந்தவள். அடையார் காந்தி நகர் கிளை நூலகத்திற்குத் தவறாமல் சென்று எடுத்து வருவாள். நியூ கேசல் பல்கலைக்கழகத்தில் செட்டில் ஆனவள் சென்ற ஏப்ரலில் வந்து ராயப்பேட்டை ஓய்.எம்.சி.ஏ புத்தகக் கண்காட்சிக்கு வந்து அவரின் கிளாசிக் சீரிஸ் எனப் பத்தை அள்ளிக்கொண்டு வந்தாள்.

பல்லாவரத்தைப் பார்த்தால் 'பாவம் டல்பதேடோ' நினைவுக்கு வரும். வெளி மாநிலம் போனாலும் ஒரு 'புலிக்கலைஞன்' காதர் கண்ணில் படுவான். கிளப் செல்லும் இரவெல்லாம் 'ஆகாயத் தாமரை' மின்னும். மண்டிக் கிடக்கும் காபி டம்ளர் 'காந்தி'யை நினைவுபடுத்தும். மெஹர் பாபா பற்றி எங்கெல்லாமோ தேடினேன். கடைசியில் தி இந்துவில் ஒரு கட்டுரையில் முகம் பார்த்தேன். அதை மானசரோவர் படிக்கையில் உருவகித்த முகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். எல்லா ரயிலைப் பிடிக்கும் அவசரத்திலும் மனம் காலமும் ஐந்து குழந்தைகளையும் நினைத்துக் கொள்ளும். நடேசன் பூங்கா முதல் ஹைதராபாத் வரை எல்லா வெளியிலும் நிறைந்திருப்பவர்கள் அசோகமிதரனின் மனிதர்கள்.

புதிதாகப் படிப்பவர்க்கு சாதாரண எழுத்தாகத் தெரியும். ஆனால் வார்த்தைகள் செலவில்லாமல் சிக்கலான உணர்வுகளை எழுத்தாளன் மனதிலிருந்து வாசகர் மனதுக்குக் கடத்தும் வித்தைத் தெரிந்தவர். பிறர் கண்களுக்கு அவர் எளிமையாகத் தெரியலாம். ஆனால் என் கண்களுக்கு அவர் நுட்பமாகத் தான் தெரிவார். தன்னை முழுவதும் அறிந்த ஒரு மனிதனுக்குத் தான் அந்த நுட்பமான அமைதி வரும்.

வாழ்க்கையின் மகா அவலங்களையும், குமட்டல் உணர்வையும், பெருத்த அநீதிகளையும் மிகச் சொற்பமான ஆடம்பரமில்லாத வார்த்தைகளில் சொல்வது அவரால் மட்டும் தான் முடியும். அரசியல் முதல் ஆன்மீகம் வரை எல்லாம் இருக்கும். பூமிக்குள் ஓடும் நீரைப் போல கூடவே வரும். காந்தி இறந்த செய்தியை அவர் தந்தை சொல்லக்கேட்டு இவரும் இவர் சகோதரியும் உள் வாங்கும் மன ஓட்டத்தை அத்தனை வலிமையாக – ஆனால் வழக்கம் போல ஆராவாரமில்லாத குரலில்- யாரும் சொல்ல முடியாது. அவர் கட்டுரைகள், மதிப்புரைகள், பேச்சுக்கள், கதைகள் எல்லாமே எனக்கு ஒரே தரிசனத்தைத் தான் தந்தன.

வெள்ளை நிறம் எளிமையாகத் தோற்றமளிக்கும். சொல்லப்போனால் வெள்ளை நிறமேயல்ல. ஆனால் எல்லா நிறங்களையும் உள்ளடக்கிய செழுமை ஆதனுடையது. அது போலத் தான் அவரும் அவர் எழுத்தும்.

என்ன சொல்ல? 'கடைசியில் பெசன்ட் நகர் க்ரிமடோரியத்துக்காவது (சுடுகாடு), வருவீங்கன்னு பார்த்தேன். கடைசி வரை வந்து பாக்கல்லையே?' என்று அவர் கேட்பது போலத் தோன்றுகிறது.



gemba.karthikeyan@gmail.com