சுகிர்தராணி கவிதைகளில் உடல் மொழியும் பெண் அரசியலும்

முனைவர் பூ.மு.அன்புசிவா


புதுக்கவிதை தமிழக இலக்கியக் களத்தில் கால்கொண்டபோது எண்ணற்ற விமர்சனங்களைச் சந்தித்தது. ஆனால் கல்விகற்றோர்களால் வாசகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்பு புதுக்கவிதைத்துறை பல்நோக்கில் வளர்ந்தது. வட்டார நோக்கிலும், புதிய புதிய உத்திமுறைகளைக் கொண்டும் இன்றைக்கும் குறிப்பிடத்தக்கதொரு வளர்ச்சி நிலையை எட்டியிருக்கின்றது. புதுக்கவிதைத் துறையில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கவிஞர்களும் மிகச் சிறந்த கவிதைத் தொகுப்புகளைப் படைத்திருக்கிறார்கள். தமிழ்க்; கலாச்சாரத்தையும் சமூக மரபையும் இன்று பெண் சமுதாயம் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளன. ஆண் மொழியால் வரையறுக்கப்பட்ட பெண் இருப்பை, எதிர் அரசியலால் சிதைத்தல், பெண் மொழியைக் கையாளுதல், பெண்ணின் வாழ்வை, வெளியை, மொழியை, காதலை, காமத்தை நவீன வாழ்க்கையின் நெருக்கடி காரணமாக மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அளவற்றவை. எல்லாக் கேள்விகளுக்கும் விடை அறிந்தது போன்ற நிலையிலும், ஒவ்வொரு தடவையும் ஆரம்பத்திலிருந்து புதிதாகத் தொடங்க வேண்டியுள்ளது. வாழ்வின் வினோதங்களையும் புதிர்களையும் அவிழ்த்து, எளிய விடைகளைக் கவித்துவமாகச் சொல்லிவிடத் துடிக்கும் கவிஞன், மின்னல் கீற்றெனத் தெறிக்கும் சொற்களைத் தேடி அலைய நேரிடுகிறது. நேற்றைய மொழியின் பழமையும் சொற்பொருளின் இருண்மையும் வழக்கிழந்த கற்பனைகளும் கவிஞனின் இருப்பினைக் கேள்விக்குட்படுத்துகின்றன.

வாழ்க்கையை எளிமையாக மதிப்பிடும் மனம் காலத்தினால் மிகவும் பின்தங்கியது. எனவேதான் நவீன கவிஞனின் பாய்ச்சல், இதுவரையிலான மதிப்பீடுகளின் போலித்தனங்களை மறுதலிக்கிறது. இத்தகு சூழலில் பெண் மொழியின் உக்கிரமான குரலினைக் கவிதையாக்கத்திற்குத் தளமாகக்கொண்ட பெண் கவிஞர்கள், நவீன கவிதையில் பெரும் வீச்சினை உருவாக்கிக்கொண்டிருக்கின்றனர். இதுவரையிலும் மரபு என்ற பின்புலத்தில் தமிழ் அடையாளத்தை நிறுவிட முயலும் பொதுப் புத்தியைச் சவாலுக்கு அழைக்கின்றன நவீனப் பெண் கவிதைகள். இத்தகைய போக்கினால் சுகிர்தராணியின் கவிதை மொழி தனித்திருக்கின்றது, என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

சுகிர்தராணி அறிமுகம்

சுகிர்தராணி
(1973) தமிழில் இளம் முனைவர் பட்டம் பெற்றவர். வேலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவரின் கவிதைகள் பெண் அரசியலையும், பெண் உடல் மொழியையும், மிக ஆழமான சிந்தனையோடு வீறுநடை போடுகின்றன. தமிழ்ச் சமூகத்தில் பெண் என்றால் பால் நிலையில் இரண்டாம் தரமாகவும் தலித் என்றால் தீண்டாமையைக் கற்பித்தும் ஒதுக்கப்படும் சூழலில் சுகிர்தராணி வீரியமான மொழியில் அழுத்தமான மனப் பதிவுகளைக் கவிதைகளாக வெளிப்படுத்தியுள்ளார்.

சுகிர்தராணியின் கவிதை நூல்கள்

  • கைப்பற்றி என் கனவுகேள் (2000),

  • இரவு மிருகம் (2004),

  • அவளை மொழிபெயர்த்தல் (2006),

  • திண்டப்படாத முத்தம் (2010),

  • காமத்திப்பூ (2012),

  • இப்படிக்கு ஏவாள் (2016).

ஆகிய ஆறு தொகுதிகளாக வெளியாகியுள்ளன. பிறப்பினால் தலித்தாக அறியப்படும் சுகிர்தராணியின் கவிதைகள் இன்று பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளன. பெண்களுக்கான பிரத்யேகமான பிரச்சனைகளே இன்றைய பெண் கவிஞர்களின் முக்கிய பாடுபொருட்களாக உள்ளன. நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடந்த பெண்கள் விழிப்புணர்வு பெற்றுத் தங்களுக்கான மொழியைக் கட்டமைத்து வருகின்றனர். மொழி வழியே கவிதையினுள் செயல்படுகையில் தங்களின் எல்லை விரிவடைவதாக உணர்கிறார்கள். தங்கள் வலிகளை, வேதனைகளை, அறைகூவல்களை, ஏக்கங்களை பதிவு செய்யும் ஊடகமாகக் கவிதையைக் கையாள்கின்றனர்.

நவீன தமிழ்க் கவிதை வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு பதிவாகியிருப்பது 60 களுக்குப் பின்னர்தான் என்றாலும், சமகாலப் பிரச்சனைகளைப் பெண் உணர்வுடன் அணுகவும் வெளிப்படுத்தவும் இதன் வழி ஒரு பெரும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. கலாச்சார மனதைப் பெரும் அதிர்வுகளுடன் ஆக்கிரமித்து புதிய விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது பெண் கவிதைகள்.

மனிதனின் இயல்பூக்கம் சார்ந்த அடிப்படைப் பண்பாகப் பாலியலும் வன்முறையும் அமைந்துள்ளன. சமூக இயக்கம் அல்லது வளர்ச்சி என்பது காலங்காலமாக வன்முறையின் மூலமாகத்தான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புறநிலையில் நிலத்தைத் துய்ப்பதும் அக நிலையில் பெண்ணுடலைத் துய்ப்பதும் ஆணின் அதிகாரமாகக் குவிந்திட்ட நிலையில் வரலாறு முழுக்க ரத்தம் தோய்ந்துள்ளது. இரண்டாயிரமாண்டுப் பாரம்பரியமுடைய தமிழ்ச் சூழலில் இந்நிலைக்கு எதிராகக் காமத்தை முன்னிறுத்திப் பாலியல் தொடர்பாகப் பெண்ணுடலை மறுவாசிப்புச் செய்திடும் சுகிர்தராணியின் கவிதைகள் தனித்த போக்குடையன.

'பருவங்கள் வாய்த்த என்னுடல்
காளானைப் போலக் கனிந்து குவிகிறது
அதன் முன்னும் பின்னும்
கவனமாய் நெய்த ரகசிய உறுப்புகள்
மயிர்க் கால்கள் சிலிர்த்த தோல் முழுவதும்
காம நெய்யின் உருகிய வாசனை
மலர்ந்த இடையைச் சுற்றி
வெதுவெதுப்பான புணர்கதுப்புகளும்
கவிழ்த்துப் போட்ட ஆயுத எழுத்தாய்
காமத்தின் சோழிகளும்
உடலினுள் பொதிந்து மிதக்கின்றன
..............................................................
இனியென் ஆளுகைப் பிரதேசத்தில்
பதாகையை உயர்த்திப் பிடிக்கும்
இளகாத ஸ்தனங்களை
விதையின் அடியிலிருந்து உரக்கப்பாடு
முலைகள் விருட்சங்களாகி வெகுகாலமாயிற்று'


கருத்து ரீதியில் பெண்ணுடலை வெறும் யோனியும் முலைகளுமாகக் குறுக்குவதும் நடைமுறையில் துய்க்கப்பட்ட உடல்களைத் தூக்கியெறிந்துவிட்டுப் போவதுமான ஆண் மைய நுகர்வுப் பண்பாட்டிற்கு எதிராகப் பெண்ணின் காம வேட்கையை முன்னிறுத்திப் பெண் விடுதலையை மையப்படுத்தும் கவிதைகள் தமிழுக்குப் புதியன. மேலும், பாலியல் மூலம் இயற்கையை அவதானிக்க முயல்வதும் பெண்ணுடலை அடையாளப்படுத்துவதும் கவிதைகளின் வழியே தொடர்ந்து முயலப்பட்டுள்ளது.

இரவுகளைப் புணர்தல் கவிதை, ஆண் - பெண் பாலுறவினை வேறு தளத்திற்கு மாற்றியமைத்துப் புதிய சொல்லாடலுக்கு வழிவகுக்கிறது.

'உன்னோடு பகிரவென்றே
செதுக்கப்பட்டிருக்கிறது
என் கற்படுக்கை என்றாலுங்கூட
வளர்ந்துகொண்டுதானிருக்கின்றன
என் யோனி மயிர்கள்'

புறவுலகு பெண்ணுடல்மீது தொடர்ந்து அத்துமீறல்களைக் கட்டமைத்திடும் சூழலில், பெண்ணுக்கு ஆணுடனான உறவு ஒற்றைத் தன்மையாய் இறுகிப்போவதால் படுக்கையும் கல்லாகிப் போகின்றது. பெண்ணுக்கெனத் தனிப்பட்ட மனம் இருக்கிறது; அவளுடைய உடலின் பரவசக் கொண்டாட்டத்திற்கென கிளிட்டேரிஸ் இருக்கிறது என்ற புரிதலற்ற ஆணுடன் கூடி வாழ நேர்ந்தாலும், பெண் இன்னொரு உயிரினை உற்பத்தி செய்யக் கூடியவள் என்ற செருக்கினை 'வளர்ந்திடும் யோனி மயிர்கள்' குறியீடாக உணர்த்துகின்றன.

கடல் ஆழத்தைக் கண்டாலும் பெண்ணின் மனத்தைப் புரிந்துகொள்ள முடியாது என்று பெண் பற்றிய புதிர்களைக் கட்டமைத்துப் பெண்ணை மர்மப்படுத்திக்கொண்டிருக்கும் ஆண் மேலாதிக்கச் சமுதாயத்தின் மீது உடைப்பினை ஏற்படுத்த முயல்கின்றன சுகிர்தராணியின் கவிதை வரிகள். இதுவரை ஆண் மூலம் தன்னையும் தன் உடலையும் தன் பாலியல் வேட்கையையும் கண்டறிவதாகக் கட்டமைக்கப்பட்டிருந்த பெண் பிம்பம் தகர்ந்துபோய், பெண் தனது சுயேச்சையான தேர்வின் மூலம் வீறுகொள்கிறாள். உடலைப் பேசுவதன் மூலம் உடல் அரசியலை முதன்மைப்படுத்தும் சுகிர்தராணியின் கவிதைகள், பெண்ணுக்கான அசலான கொண்டாட்டத்தினைச் சாத்தியப்படுத்தியுள்ளன. இவ்வடிப்படையில் பெண்ணின் சுயபுணர்ச்சி குறித்துப் பேசும் கவிதைகள் முக்கியமானவை. பண்பாடு என்ற நிலையில் பெண் தன்னுடைய காம உணர்வை வெளிப்படையாகக் கூறமாட்டாள் என்ற பொதுப்புத்தியைச் சிதைத்துப் பாலியல் தேவையை விடுதலைக்கான முன்மொழிவாகச் சித்திரிப்பது நவீன அறம் சார்ந்தது.

சுகிர்தராணியின் கவிதை மொழி வீரியம் மிக்கது. சில இடங்களில் நீர்த்துப் போய், கூறியது கூறலாக இருப்பினும் கவிதை மொழியில் பாசாங்கு எதுவுமில்லை. அழகியல்ரீதியில் புதிய வகைப்பட்ட மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ள கவிதைகள், கருத்தியலுக்கு முதன் மையிடம் தந்திருப்பதனால் வடிவம், வெளிப்பாடு குறித்துப் பெரிதும் அக்கறை கொள்ளவில்லை. இயற்கையுடன் பெண்ணுடலைப் பொருத்தும் என்னுடல் கவிதை இவருடைய மொழி ஆளுமைக்குச் சான்றாக உள்ளது.

'குறுஞ்செடிகள் மண்டிய மலையில்
பெருகுகிறது ஒரு நதி
அதன் கரைகளில் வளைந்து
நீர்ப் பரப்பினைத் தொட்டோடுகின்றன
பால்வழியும் மரத்தின் கிளைகள்
இஞ்சியின் சுவைகூடிய பழங்கள்
மெல்லிய தோல் பிரித்து
விதைகளை வெளித்தள்ளுகின்றன
பாறைகளில் பள்ளம் பறித்தெஞ்சிய நீர்
முனைகளில் வழுக்கி விழுகிறது அருவியாய்
நீர்த்தாரைகளின் அழுத்தத்தில்
குருதி படர்ந்த வாயை நனைக்கிறது
வேட்டையில் திருப்தியுற்ற புலி
கீழிறங்குகையில்
எரிமலையின் பிளந்த வாயிலிருந்து
தெறிக்கிறது சிவப்புச் சாம்பல்
வானம் நிறமிழக்க
வலஞ்சுழிப் புயல் நிலத்தை அசைக்கிறது
குளிர்ந்த இரவில் வெம்மை
தன்னைக் கரைத்துக்கொள்கிறது
இறுதியில் இயற்கை
என் உடலாகிக் கிடக்கிறது'

இக்கவிதையை வாசித்ததும் எனக்குச் சங்கப் பெண் கவிஞரான வெள்ளிவீதியாரின் பாடல் நினைவுக்கு வந்தது.

சுகிர்தராணியின் கவிதைகளில் வெளிப்படும் இன்னொரு முக்கியமான அம்சம், தலித்திய நோக்கிலான சமூக விமர்சனமாகும். வைதீக சமயம் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்துத் தீண்டாமையைக் கற்பித்திருப்பது, இந்திய சமூகத்தைப் பிடித்துள்ள பெரும்சாபக்கேடு. அதிலும் தலித்தாகப் பிறந்த பெண்ணின் பிரச்சினைகள் ஒப்பீட்டளவில் தலித் ஆணைவிடக் கூடுதலானவை. அவளுடைய உடலின் மீது கணவன் மட்டுமின்றி, ஆதிக்க சமுதாயமும் தொடர்ந்து வன்முறையைச் செலுத்துகின்றது. இன்னொரு புறம் பொருளியல் சுரண்டலின் ஆதிக்கம் வலுவாக உள்ளது. பால் ரீதியில் தலித் பெண்ணின் குரல் சமூக அடித்தளத்தில் பலவீனமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

தலித்திய வெளிப்பாடு

தலித் பெண்கள் பிறப்பு ரீதியாகவும், உடலியலட ரீதியாவும், பாலியல் ரீதியாவும், பொருளாதார ரீதியாவும் பிற பெண்களை விட மிகுந்த இன்னல்களை எதிர்கொள்கிறார்கள்.

கிராமத்தில் சமூகச் செயற்பாட்டில் கடைசி ஆளாக ஒதுக்கப்படும் தலித்துகள் முதல் ஆளாக இழவுக்குப் பறையடிக்க அழைக்கப்படுவது குறித்து அமைப்பு கவிதையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஊருக்கு ஒதுக்குப் புறமானதாகக் கருதப்படும் பறையர் தெருவை ஊருக்கு முதலில் இருப்பதாகக் கவிஞர் மாற்றியமைக்கின்றார். தலித் உடல்களைக் கடின உழைப்பில் ஈடுபடுத்திப் பொருளாதார வளம் பெறும் ஆதிக்கச் சாதியினர் மேல் கீழ், சுத்தம் அசுத்தம், கடைசி முதல் போன்ற சொல்லாடல்கள் மூலம் தொடர்ந்து தீண்டாமையைத் தக்கவைத்திருப்பதும் அதற்கெதிரான ஆவேசமான குரலும் உக்கிரமாகக் கவிதையில் வெளிப்பட்டுள்ளன.

'செத்துப்போன மாட்டைத்
தோலுரிக்கும்போது
காகம் விரட்டுவேன்
வெகு நேரம் நின்று வாங்கிய
ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு
சுடுசோறெனப் பெருமை பேசுவேன்
தப்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் மறைத்துக் கடந்துவிடுவேன்
அப்பாவின் தொழிலும் ஆண்டு வருமானமும்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடி வாங்குவேன்
தோழிகளற்ற
பின் வரிசையிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்
இப்போது
யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்
பறச்சி என்று'

சாதிரீதியான ஏற்றத் தாழ்வு குறித்து ஆவேசமான மனநிலையைக் கவிதை பதிவுசெய்துள்ளது. 'பறச்சியே தடா பனத்தியேதடா' என்ற சித்தரின் கலகக் குரல் சுகிர்தராணியிடம் வேறு தொனியில் வெளிப்பட்டுள்ளது.

இன்று கவிதை எழுதிக்கொண்டிருக்கும் பெண் கவிஞர்களில் பலருடைய கவிதைகளை ஆண் கவிஞர்களால் எழுதிட முடியும்; பெரிய அளவில் பால் வேறுபாடுகள் இல்லை. தலித்துகள் பற்றிய சுகிர்தராணியின் கவிதையை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், பெண்ணுக்கே உரித்தான துக்கங்களையும் உடல்ரீதியான வேட்கையையும் கவிதையாக்கியதில் பெண் என்ற நிலையில் தனித்த அடையாளத்துடன் சுகிர்தராணியின் கவிதைகள் விளங்குகின்றன. அவை பெண் மொழியின் மூலம் ஆண் - பெண் உறவில் நிலவும் சமத்துவமின்மை அரசியலைப் புதிய வடிவில் முன்வைக்கின்றன் மரபு வழிப்பட்ட தமிழ்ப் பெண் பிம்பத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. காலங்காலமாக ஒடுக்கப்பட்டுள்ள பெண்களின் வேதனையையும் சீற்றத்தையும் வெளிப்படுத்திடப் பெண்ணுடலையும் உடல் வேட்கையையும் முன்னிறுத்திடும் சுகிர்தராணியின் கவிதைகள், நவீனப் பெண்ணின் விடுதலைக் குரல்களாக வெளிப்பட்டுள்ளன என்பதை அறிய முடிகின்றன.
 

 

முனைவர் பூ.மு.அன்புசிவா
149, ஹரிஸ்ரீகாடர்ன்ஸ்
சுண்டப்பாளையம்(அ)
கோயம்புத்தூர்
- 641 007
பேச
:098438 74545.

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்