வெண்பாவில் மருத்துவம்

கலாநிதி பால.சிவகடாட்சம்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா


வாத்தியாரின் கட்டாயத்தின்பேரில் நான் முதன் முதலில் பாடமாக்கிய தமிழ்க்கவிதை இதுதான்.

இது ஒரு நேரிசை வெண்பா என்றெல்லாம் அப்போது எனக்குச் சொல்லித்தரப்படவில்லை. மனப்பாடம் செய்ய இலகுவானது என்பதற்காக வாத்தியார் அதனை தெரிவு செய்திருக்கலாம்.

வெண்பா இருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையா லெழுதானைப் - பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாளென்
றெற்றோமற் றெற்றோமற் றெற்று

என்று ஒரு வெண்பா ஔவையார் பாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பாடலில் 'வெண்பா இருகாலிற் கல்லானை' என்பதற்கு நாலுகாலில் தவழ்ந்து கொண்டிருந்த பிள்ளை எழுந்து இருகாலில் நடக்கத் தொடங்கும் பொழுதே வெண்பாவைக் கற்றுக்கொள்ளத் தொடங்கி விடவேண்டும் என்று ஔவையார் கூறுவதாக நாம் பொருள்கொள்ளமுடியும்.

இதே ஔவையார்தான் இலகுவாக மனப்பாடம் செய்யக்கூடிய வெண்பா பாடுவது புலவர்களுக்குக் கடினமான விடயம் என்பதையும் சொல்லி வைத்துள்ளார்.

காசினியிற் பிள்ளைக் கவிக்கம் புலி புலியாம்
பேசும் உலாவிற் பெதும்பை புலி - ஆசு
வலவற்கு வண்ணம் புலியாம்மற் எல்லாப்
புலவர்க்கும் வெண்பாப் புலி


இங்கே புலி என்பது கடுமையானது என்ற பொருளில் வருகின்றது. பிள்ளைத்தமிழ் பாடுவோர்க்கு அம்புலிப் பருவத்தைப் பாடுவது கடினம். உலா பாடுவோர்க்குப் பெதும்பை பருவத்தை பாடுவது கடினம். பொதுவாக புலவர்களுக்கு வெண்பா பாடுவது கடினம் என்கிறார் ஔவையார். வெண்பா பாடுவது கடினம் என்றால் வெண்பாவில் மருத்துவக் கருத்துக்களைப் பாடுவது அதைவிடக் கடினம். எனினும் மருத்துவம் கூறும் வெண்பாக்கள் ஏராளமாக உள்ளன. முழுவதும் வெண்பாவால் ஆக்கப்பெற்ற மருத்துவ நூல்களும் உள்ளன.

வெண்பாக்களுள் பலவகை உள்ளன. இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, ப.றொடை வெண்பா, இன்னிசை சிந்தியல் வெண்பா, சவலை வெண்பா, குறள் வெண்பா என்று வெண்பாவில் எத்தனை வகை உள்ளதோ அத்தனை வகையான வெண்பாக்களையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ஆசாரக்கோவையில் கண்டுகொள்ளமுடியும்.

உடலையும் உள்ளத்தையும் எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்பது பற்றித் தான் இந்த ஆசாரக்கோவை பேசுகின்றது இந்நூலில் பெரும்பாலும் இன்னிசை வெண்பாவும் இன்னிசைச் சிந்தியல் வெண்பாவுமே கூடுதாலாக இடம்பெற்றுள்ளன. உதாரணத்துக்கு ஒன்றிரண்டை இங்கு தருகின்றேன்.

வைகறை யாமம் துயிலெழுந்து தான் செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்டமுறை


                                                       -  இது ஒரு இன்னிசை வெண்பா.

அதிகாலையில் துயில் எழுந்து அன்று செய்யவேண்டிய தர்மங்கள் குறித்தும் பொருள்தேடுதல் குறித்தும் சிந்தித்து விடியற்பொழுதில் தாய் தந்தையரை வணங்குவது என்பது எமது முன்னோர் கூறிவைத்த முறையாகும்.

தலையுரைத்த எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டார்
பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார் செருப்புக்
குறையெனினும் கொள்ளார் இரந்து


                                                                        - இது இன்னிசைச் சிந்தியல் வெண்பா.

தலையிலே தேய்த்துக்கொண்ட எண்ணெயை பிற உறுப்புக்களில் தேய்த்தல் கூடாது. பிறர் அணிந்த அழுக்கு உடைகளைத் தான் அணிந்துகொள்ளக் கூடாது. செருப்பு இல்லாவிட்டாலும்கூடப் பிறிதொருவர் அணிந்த செருப்பை அணியக்கூடாது.

தமிழ் மருத்துவ நூல்களுட் பெரும்பாலானவற்றில் நேரிசை வெண்பாவே பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது. இந்தவகை வெண்பாக்கள் இலகுவாக மனப்பாடம் செய்துகொள்வதற்கு ஏற்றவை என்பதே இதற்கான காரணமாக இருக்கலாம்.
அதே சமயம் பெரும்பாலான மருத்துவ நூல்கள் விருத்தப்பாவினால் அமைந்துள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இற்றைக்கு
500 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஆக்கப்பெற்ற பரராசசேகரம் என்னும் பன்னிரண்டு பாகங்களைக்கொண்ட பெருநூலில் ஒரே ஒரு வெண்பாவைத்தான் என்னால் காணமுடிந்தது. அதுவும் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலாக இருந்தது.

எண்ணுங் கருவி இருபத்தா றென்றுலகில்
நண்ணிய வாகடத்தை நாட்டினான் - மண்ணில்
இனிய தமிழால் உரைக்க எந்நாளு நன்முக்
கனியருந்தும் கற்பகமே காப்பு

                                                                            - பரராசசேகரம்

'அறுவைச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் எண்ணிக்கை இருபத்து ஆறு என்று வாகடத்தில் (வாகடரின் நூலில்) கூறப்பட்டுள்ளது. இந்தச் சிகிச்சை பற்றி வாகடத்தில் கூறப்பட்டுள்ளதைத் தமிழில் தருவதற்கு தினமும் முக்கனிகள் அருந்தும் வினாயகப் பெருமான் துணைபுரிவராக'

தமிழ் மருத்துவ நூல்களுள் வெண்பாவில் ஆக்கப்பெற்ற நூல்களே காலத்தால் முந்தியவை என்பது எனது ஊகமாகும். மருத்துவம் என்னும் பொழுது அது நோய்அணுகாவிதி, நோயை இனம் கண்டறிதல், நோயின் குறிகுணங்கள, நோய்க்கான மருந்துஇ பத்தியம், பதார்த்த குணம் என்னும் பல பிரிவுகளை உள்ளடக்கியது. முதலாவதாக நோய்அணுகாவிதியை எடுத்துக்கொள்வோம்.

திண்ணமிரண் டுள்ளே சிக்க அடக்காமற்
பெண்ணின்பால் ஒன்றைப் பெருக்காமல் - உண்ணுங்கால்
நீர்கருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி யுண்பவர்தம்
பேர் உரைக்கிற் போமே பிணி


                                                                         - தேரையர்

மலசலத்தை உள்ளே அடக்கி வைத்திருக்காமல், அளவுக்கு மீறிய தாம்பத்திய உறவில் ஈடுபடாமல், உண்ணும்போது நீரைக் கொதிக்கவைத்தும் மோரைக் கூடுதலாகச் சேர்த்தும், நெய்யை உருக்கியும் உண்பவர்களின் பெயரைக்கேட்டாலே நோயானது ஓடிவிடும் (நோய் அவர்களை அணுக முடியாது) என்பது இவ்வெண்பாவில் அறிவுறுத்தப்படுகின்றது.

மூப்புள கா யந் தணிந்து மோகம் பிறக்கு மிள
மாப்பிளை போலே யழகு வாய்க்குமே - சேப்பு வருங்
கோமய மு றுங்கறியை கொள்ள வி ரண்டு பங்கா
யாமலக முண்ண முறை யால்

ஆமலகம் என்றால் நெல்லி. நெல்லிக்காயை முறைப்படி உண்டுவந்தால். மூப்பு அடைந்த உடம்பு தெளிந்து கவர்ச்சி உண்டாகும். இளம் மாப்பிள்ளை போல் அழகு உண்டாகும்.

இற்றைக்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னரேயே பற்களைப் பாதுகாப்பதற்கு 'மௌத்வாஷ்' எனப்படும் வாய்கழுவியைப் பரிந்துரை செய்துள்ளார்கள் தமிழ் மருத்துவர்கள்.

மருக்காரை சுக்கு மருதந்தோல் வெள்வேல்
எருக்காவிரை பிரம்போடேழும் - நருக்கிட்டு
நாலொன்றாய்க் காய்ச்சி நாலுநாள் கொப்பளிக்கப்
பாலன் பல்லாம் கிழவன் பல்


மருக்காரை, சுக்கு, மருதம்பட்டை, வெள்வேலம்பட்டை, எருக்கு, ஆவரசு, பிரம்பு என்னும் ஏழு மூலிகைகளுடன் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து நாலொன்றாக வற்றும் வரை கொதிக்கவைத்து அக்கஷாயத்தை நான்கு நாட்களுக்குக் கொப்பளித்துவர கிழவனின் பல்கூட சிறுவனின் பல் போல் ஆகிவிடும் என்று இந்த வெண்பாவில் கூறப்படுகின்றது.

நீரிழிவுக்கான மருந்தை எடுத்துரைக்கும் ஒரு வெண்பாவை நோக்குவோம்

தேற்றான்விதை கடுக்காய் செப்பும் ஆ வாரைவித்து
ஏற்ற விளாம்பிசினோ டித்தனையும் - கோற்றொடியே
பங்கொன்று காலாய் பசுவின் மோ ரில்பருகப்
பொங்கிவரு நீரிழிவு போம்


                                                                                     - தேரையர்

தேற்றான் விதை, கடுக்காய், ஆவாரை வித்து, விளாம்பிசின் என்னும் நான்கையும் சம அளவில் சேர்த்துப் பசுமோரில் கரைத்துக் குடிக்க நீரிழிவு நோய் தீரும்.

சீழ்பிடித்த புண்ணைச் சுத்தம் செய்து அதற்குக் காரம் என்னும் மருந்து வைத்துக் கட்டுவது வழக்கம். இந்தக் காரம் செய்யும் முறை ஒரு வெண்பாவில் கூறப்படுகின்றது.

மஞ்சள்அரிதாரந் துருசு மனோசிலை வெண்பாசாணம்
மிஞ்சுதுத்தம் புங்கம் பால் வேப்பெண்ணெய் - அஞ்சாமல்
அரைத்து வழித்தெடுத்து ஆறாத புண்ணில் இடத்
துரத்திவிடும் கள்ளமெனச் சொல்


மஞ்சள் அரிதாரம்
(yellow Arsenic), துரிசு (Copper sulphate) மனோசிலை (realgar), துத்தம் (Zinc oxide), வெண்பாஷாணம் (white arsenic), புங்கமரப்பால், வேப்பெண்ணெய் என்பவற்றைச் சேர்த்து அரைத்துத் தயக்கம் இன்றிப் புண்ணை நன்கு சுத்தம் செய்து அதில் காரம் வைக்க மறைந்திருக்கும் நோய்க்காரணி தூர ஓடிவிடும்.

இரசவர்க்கம், பதார்த்த குணம் என்னும் நூல்கள் நாம் உணவாகவும் மருந்தாகவும் கொள்ளும் பதார்த்தங்களின் குணங்கள் பற்றிக்கூறுகின்றன.

எப்போதும் தின்ன இதங்கொடுக்கும் தீவனமாம்
தப்பாது நோய் தணிக்கும் தாகமறும்-வெப்பமுடன்
ஏதுகனி யானாலும் ஈடு இதற்கில்லை
தீதகலும் விளாங்கனியைத் தின்

                                                                                   - இரசவர்க்கம்


பாடபேதம்:

எப்போதும் மெய்க்கிதமாம் ஈளையிருமல்கபமும்
வெப்பாகும் தாகமும்போ மெய்ப்பசியாம்-இப்புவியில்
என்றாகிலும் கனிமேல் இச்சைவைத்துத் தின்னவெண்ணித்
தின்றால் விளாங்கனியைத் தின்


                                                                              - பதார்த்த குணசிந்தாமணி

சாதாரண மக்களால் விளங்கிகொள்ளமுடியாத, புலவர்களால் மாத்திரமே பொருளுணர்ந்து கொள்ளக்கூடிய பாடல்களையும் தமிழ் மருத்துவ நூல்களில் காணமுடியும். அடுத்து வருவது மருத்துவம் பற்றிய பாடல் இல்லாவிடினும் இது போன்ற பாடல்கள் மருத்துவ நூல்களிலும் உள்ளன.

காளமேகப் புலவருக்கு ஒரு அத்தை மகள். மச்சான் வந்திருக்கிறாரே என்று ஆசை ஆசையாய் சமைத்து அவருக்கு விருந்து வைத்தாள். சாப்பிட்டுவிட்டு அதற்கும் ஒரு வெண்பா பாடிவைத்தார் காளமேகம்.

கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காயைத் தீய்த்தாள்
பரிக்காயைப் பச்சடியாப் பண்ணினாள்- உருக்கம்உள்ள
அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள் அத்தைமகள்
உப்புக்காண் சீச்சி உமி.


கரி என்பதை ஒத்த சொற்கள் யானை, அத்தி என்பன. கரிக்காய் என்பது அத்திக்காய். கன்னிக்காய் என்பது வாழைக்காய். பரி என்பது குதிரை. குதிரையைக்குறிக்கும் மற்றுமொரு சொல் மா. எனவே பரிக்காய் என்பது மாங்காய். அப்பைக்காய் என்பது கத்தரிக்காய்.

'உருக்கம் உள்ள அத்தைமகள் எனக்காக அத்திக்காய் பொரித்தாள். வாழைக்காயைத் தீயில் வாட்டினாள். மாங்காயில் பச்சடி செய்தாள். கத்தரிக்காயில் எண்ணெய்த் துவட்டல் செய்தாள். என்ன பிரயோசனம். ஒரே உப்பு. துப்பத்தான் வேண்டி இருந்தது.' என்கிறார் கவி காளமேகம்.

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரு வேறு பொருள்களைத் தரும் வெண்பாக்களும் உள்ளன.

மொத்த விற்பனை செய்யும் செட்டியாரிடம் சில்லறை மளிகைக் கடைக்காரர் பலசரக்குப் பொருள்கள் வாங்கப் போகின்றார். செட்டியாரிடம் உள்ள வெங்காயம் செத்தலாகிவிட்டது. 'வெங்காயம் இல்லாமல் வெந்தயத்தை வாங்கி ஒரு பிரயோசனமும் இல்லை. ரசம் வைப்பதற்குச் சீரகம் இருந்தால் போதும். சீரகத்தைத் தருவீரேல் பெருங்காயம்கூட வேண்டியதில்லை' என்று செட்டியாரிடம் கூறுகின்றார் சில்லறை வியாபாரி. இது ஒரு பொருள்.

வெங்காயம் சுக்கானால்வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத,
சீரகத்தை தந்தீரேல்வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே..

'இந்த உடம்பு முதிர்ந்து சருகாகிப்போனால் அயச் செந்தூரத்தால் (இரும்பு மாத்திரையால்) என்ன பயன். திருவேரகத்தில் உள்ள முருகப்பெருமானே எனக்கு நல்ல மனதைக்கொடும். இந்த உடம்பைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை' என்பது இப்பாடலுக்குத் தரப்படும் மற்றுமொரு விளக்கம்..

(யமக வெண்பா பற்றிய விளக்கம் தமிழ்க் குயிலி என்னும் இணைய தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது)

யமக வெண்பா

யமக வெண்பா என்பது நேரிசை வெண்பாவில் ஒரு வகை.
யமகம் என்பது மடக்கு என்னும் பொருளில் அமையும்.

இது, செய்யுளில் சீர், சொல், அடி மடங்கி வந்து, வேறுவேறு பொருளைக் குறிப்பதாக அமையும், அணிவகையான அலங்காரமாகும்.

இவ் வகையான வெண்பாக்கள் பெரும்பாலும் பயிலப்படுவதில்லை. மருத்துவ நூலில் யமக வெண்பாக்கள் இயற்றப் பெற்றிருப்பது சிறப்பிற்குரியது.

பத்தியத்தை நோயை யனு பானத்தை லங்கணத்தைப்           (பட்டினி)
பத்தியத்தை முன்மருகன் பண்ணிலிற் கேள் - பத்தியத்த

யேகமா யார்த்தாலு மேறாச் செவிபோல
யேகமா யார்த்தாலு மெய்   
                         தேரையர்


இந்த வெண்பாவில், பத்தியத்தை என்னுஞ் சொல் மூன்று இடங்களில் அமைந்திருக்கிறது. யேகமாயார்த்தாலும் என்னுஞ் சொல் இரண்டிடங் களில் அமைந்திருக்கிறது.

முதலாமடியில் வரும் பத்தியத்தை என்பது, பிணி நீங்கும் வரை கடைப்பிடிக்க வேண்டிய உணவுமுறையான பத்தியத்தயும்,

இரண்டாமடியில் வரும் பத்தியத்தை என்பது, பத்தி
+இயம்+அத்த எனப் பிரிந்து, பத்திய முறையைப் பற்றி அத்தையிடம் என்றும்,

தனிச் சொல்லில் வரும் பத்தியத்தை
பத்து+இயம்+அத்து+ எனப் பிரிந்து, பத்து விதமான இசைக் கருவிகள் சேர்த்து இசைக்கும் இசையை என்றும் பொருளமைகிறது.

ஏகமாயார்த்தாலும் என்பது, ஏகமாய்
+ஆர்த்து, ஒரு முகமாக முழங்குகின்ற போது என்றும், ஏக+மாய்+ஆர்த்தஎனப் பிரிந்து போய்விட, கெட்டு, ஆரவாரம் செய்து என்னும் பொருளில் மாறி மாறி நின்று பொருளமைக்கும்.

பிணி நீங்குகின்ற வரைக்கும் கடைப்பிடிக்க வேண்டிய பத்தியமும், பிணியினுடைய வகையும், துணை மருந்தான அனுபானத்தையும், நோய் நீங்கத் துணைபுரியும் பட்டினியைப் பற்றியும், மருமகன் மாமியாருக்குச் செய்யும் மரியாதையை ஏற்றுக் கொள்ளும் மாமியாரைப் போல நோயாளி பத்திய முறைகளை ஏற்றக் கொள்ளவும். பலவிதமான சத்தத்துடன் கூடிய முழக்கத்தின் போது சொல்லுகின்ற சொல் காதில் நுழையாததைப் போல இருந்தால், நோய்கள் ஆரவாரம் செய்து கொண்டு உடலைக் கெட்டுப்போய்விடச் செய்யும் என்பதால், பத்தியம் முக்கியம் என்பதை உணர்க என்னும் பொருளை உரைக்கிறது.


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்