மரபுவழி அறிவின் மேம்பாடு

பேராசிரியர் கலாநிதி என் சண்முகலிங்கன்

 

மேம்பாடு பற்றிய மிகப்பிந்திய சொல்லாடல்கள், பின்னை - மேம்பாடு          (Post–Development) கோட்பாடாக முன்னிலைப்படுத்துகின்றன. உலகப் பண்பாடுகளின் நிலம் சார்ந்த வாழ்வைஉரிமைகளைதனித்துவங்களை புறந்தள்ளி 'எல்லாம் ஒன்றாதல்' எனும் உலகமயமாக்கலுக்கு எதிரான குரலாக லத்தின் அமெரிக்க ஆபிரிக்க புலங்களில் பின்னை மேம்பாட்டுச்சிந்தனைகள் வலுப்பெற்றுவரக் காணலாம். எமக்கும் அவை பெரிதும் துணையாவன.

உலகளாவிய மனித சமூகங்கள் யாவும் தத்தம் சூழமைவில் செழுமையான அனுபவங்களை பெற்றுக்கொள்கின்றன. இந்த அனுபவங்களின் வெளிப்பாடாக சுதேச அறிவுத் திரளமைப்பு திகழ்கின்றது.   உள்ளுர் அறிவு, நாட்டார் அறிவு, மக்கள் அறிவு, மரபுவழி ஞானம், மரபுவழி விஞ்ஞானம், எனவும் சுதேச அறிவு அறியப்படுகின்றது இந்த அறிவானது தலைமுறை தலைமுறையாக கடத்தப்படு கின்றது. வாய்மொழியாகவும் பண்பாட்டுச் சடங்குகளினடியாகவும் இவை கையளிக்கப்படுகின்றன. விவசாயம், கால்நடை வளர்ப்பு, வேட்டை, மீன்பிடி போன்ற வாழ்வாதார செயற்பாடுகளிலும் நோய்களுக்கு எதிரான மருத்தும், கல்வி, சூழல் காப்பு போன்ற பரந்த செயற்பாடுகளின் வழியாகவும் நிலைபேற்றுக்கான வழி வகைகளை இவை வெளிப் படுத்துகின்றன.

சுதேச அறிவுத் திரளானது முழுதளாவியது. இன்றைய நவீன அறிவுமுறையின் துண்டாடல்கள் இங்கு இல்லை. இவ்வறிவானது இம் மக்களின் ஆத்மீக நலம், பண்பாடு, மொழி என்பவற்றில் வேர்விட்டுள்ளது. இது அவர்களின் வாழ்க்கை முறையாகவே உள்ளது. சுதேச வாழ்வினை ஆளுகின்ற விதிகளின் தொகுப்பாகவும், சூழல் வளங்களை காக்கின்ற முறைமையாகவும் கூட அது விளங்குகின்றது. இந்த அறிவினைக் காப்பதும் பகிர்ந்து கொள்வதும் ஒரு கடமையாகவே மேற்கொள்ளப்பட்டது. இதன் வழி இவ்வறிவானது இயங்கியல் தன்மை கண்டது. சுதேச வாழ்வியலில் நல்லதொரு வாழ்வுக்கான ஞானமாகவும் இவ்வறிவானது போற்றப்பட்டது. இதயத்தையும் முளையையும் ஒருங்கிணைக்கும் அறிவாக இதனை குறிப்பிடலாம். சுதேச அறிவின் மூலங்களான  சமுதாயங்களைப் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனங்கள் நம் கவனத்திற்குரியன.

சுதேச     அறிவானது பெருமளவிற்கு பகிர்ந்து கொள்ளப்படுகின்ற அறிவாக உள்ளது. இதனால் தான் மக்கள் விஞ்ஞானம் என்ற அடைமொழி சுதேச அறிவிற்கு வழங்கப்படுவதைக் காணலாம்.

காலனித்துவ ஆக்கிரமிப்புகளுக்கு முன்னதாக தத்தம் பண்பாட்டுப் புலங்களில் சுதேச சமுதாயங்கள் கண்ட இவ்வறி வானது, அவர்களின் இனத்துவ அடையாளமாகவும்  பண்பாட்டு உரிமையாகவும் கூட விளங்கியது. சுதேச மக்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பிரகடனங்கள் இதனை தெளிவாகவே புலப்படுத்துகின்றன. தத்தம் நிலங்களோடு சுதேச மக்கள் கொண்டுள்ள ஆத்மீக ரீதியான ஈடுபாட்டின் அறுவடையாக விளங்கும் இவ்வறிவுத் திரளை காக்கின்ற உணர்வு விழிப்பு என்பது இம் மக்களின் பண்பாட்டு அடையாளங்களை பாரம்பரிய மேன்மைகளை காக்கும் செயற்பாடாகவும் அர்த்தம் பெறும்.

உலக இனக்குழுமங்களின் சிந்தனை வளர்ச்சியின் அடிப்படையாக அமைந்த முன்னை உலகாயதம்
(Proto-Materialism) பற்றிய இன்றைய ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகள் எம் கவனத்திற்குரியன. உலகை அறியும் மனித செயல்முறையாக அறிவின் வளர்ச்சி உலகப்பண்பாடுகள் பலவற்றிலும் அழகாகவே வெளிப்பட்டது. தமிழர் சிந்தனை மரபுபற்றிய தரிசனங்களும் இதனையே உணர்த்துவன.

புலன்கள் மூலமான அறிதலையும் அறிவின் மூலமான அறிவினையும் மிகத்தெளிவாகவே வரையறுக்கும் தொல்காப்பியம்.

ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே
அதனொடு நாவே
மூன்றறிவதுவே
அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே
அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே
அவற்றொடு செவியே
ஆறறிவதுவே
அவற்றொடு மனமே
நேரிதின்
உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.        

எனும் தொல்காப்பியச் சூத்திரம் புலனறிவோடு மனம் எனும் அறிவினை ஆறாவது அறிவாக குறிப்பிடும். இன்றைய புலனறி வாதமும் ஏனைய அகவய அறிதல் முறைகளும் உணர்த்தும் அறிவு பற்றிய உண்மைகளை தமிழ் சிந்தனை மரபில் தெளிவாகவே காணமுடியும். காட்சி , கருத்து, உவமை, ஒப்புமை, உத்தியுணர்வு என்றவாறு அறிதலுக்கான அடிப்படைகளை தமிழ் இலக்கண நூல்களும் இலக்கிய நூல்களும் சைவசித்தாந்த ஆராச்சி நூல்களும் குறிப்பிடுவதனையும் இங்கு மனதில் கொள்ளலாம்.

தமிழர் சிந்தனை மரபில் சித்தர்கள் வெளிப்படுத்திய அறிவு மரபும் இங்கு எம் கவனத்திற்குரியதாகும். 'சித்' என்றால் அறிவு. சித்தர்கள் தமிழ் சிந்தனை மரபின் விஞ்ஞானிகள் என பேராசிரியர் கைலாசபதி, சாமிசிதம்பரனார் போன்றோர் எழுத்துக்கள் வெளிப்படுத்திய உண்மைகள் சுதேச அறிவின் முக்கியத்துவத்தினை உணர்த்தி நிற்பன. சித்தர்களின் மருத்துவம், ரசவாதம் பற்றிய நூல்களினைப் பற்றிய பகுப்பாய்வு எங்களது சுதேச அறிவின் வரலாற்றினை மீட்டுத்தரும் என்பார் தேவி பிரசாத் சட்டோ பார்த்தியாயா. (n.)

தெரியாது என்றலைந்தால் தெரியுமோதான்
தேடியல்லோ
ஆராய்ந்து பார்க்கவேணும்
அறியாத
மூடருக்கு அறியப்போமோ
அன்னத்தை
திரட்டி மெல்ல வாய்க்கீந்தாலும்
குறியாக
முழுங்குதற்கும் மாட்டார் மூடர்
குறிப்பாக
இதுவல்லால் என்னசொல்வேன்
மறைவான
அறிவொன்றும் இல்லை| இல்லை
மட்டாத
மூடருக்கு அறிவுதானே

எனும் அகத்தியர் ஞானம்   உணர்த்தும் தமிழரின் அறிதல் முறைபற்றிய ஞானம், அறிவைப் போற்றும், கல்விவழி உண்மையான அறிதலை வலியுறுத்தும் மேன்மைகள் எமக்கானவை.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள்
காண்பது அறிவு
 

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய
ரேனும் இலர்

எனும் திருவள்ளுவரின் கருத்தியல் உணர்த்தும் உண்மைகள் இன்றைய அறிவின் சமூகவியல் பற்றிய கருத்தாக்கங்கள் தோன்று வதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே சுதேச அறிவுச் செல்வமாக எமக்கு வாய்த்திருந்தது.

அறிவியல் வரலாற்றில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் 16ம், 17ம் நூற்றாண்டு காலத்திலேயே கண்டுகொள்ளாத பலவற்றை கீழைத்தேயத்து விஞ்ஞானம் கண்டுகொண்டமை இன்று அறியப்படாத வரலாறாகவே உள்ளமையும் இங்குநம் கவனத் திற்குரியது. எடுத்துக்காட்டாக ஐரோப்பிய விஞ்ஞானத்தில் காய்ச்சிவடித்தல் என்பதற்கு ஆவியை வசமாக்கி குடிப்பது என்றே அர்த்தம் தரப்பட்டது. சாராயம் காய்ச்சும் தொட்டியில் இருப்பது மிக மூர்க்கத்தனம்கொண்ட எளிதில் அடக்கமுடியாத ஆவிகளில் ஒன்று எனவே விளக்கப்பட்டது. இந்த விளக்கத்தின் அடியாகவே மதுவகைகளுக்கு Spirit என ஆங்கிலமொழியில் வழங்கப்பட்டது. ஆனால் காய்ச்சிவடிக்கும் இச்செயன்முறையை ஆவிபற்றிய கருத்தாக்கம் எதுவும் இல்லாமலேயே ஆதி இந்திய அறிவியல் முன்வைத்திருந்தமை இங்கு நம் கருத்துக்குரியது. அறிவியலின் வரலாறுபற்றிய பேர்ணல் (1969) அவர்களின் நூல் இதனைத் தெளிவாகவே விளக்கிடக் காணலாம். எனினும் இந்த அறிவியல் முறைகளை வளர்த்தெடுக்கும் ஏற்பாடுகள் இல்லாத நிலையில் இன்று அவை மறக்கப்பட்ட அறிவாகவும் சிலவேளைகளில் மறைக்கப்பட்ட வரலாறாகவும் கூட முடிந்துபோய் உள்ளன.

சுதேச மக்களின் அறிவுச்செல்வமாக, வாழ்வாதாரமாக, வறிய மக்களின் சமூக மூலதனமாக விளங்கிய சுதேச அறிவின் மீது காலனித்துவ காலம் முதலாக ஏற்பட்ட தாக்கங்கள் துயரம் தருபவை. குறுகிய கால நலன்கள், பிரச்சினைகளுக்கான தீர்வுகளி னடியாக பாரம்பரிய அறிவின் நிலைபேறான மேன்மைகள் புறந்தள்ளப்பட்டன. மேலை உலகின் சமூக பொருளாதார அரசியல் நோக்கங்களின் அடியாக அறிவியல், உலகம் தழுவியது என்ற வாய்ப்பாடு முன்வைக்கப் பட்டது. காலனித்துவ சூழலில் இத்தகைய கருத்தாக்கங்களை சுதேச பண்பாடுகளும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுகொள்வதற்கு வாய்ப்பாக அமைந்தது எனலாம். இதேவேளையில் உற்பத்தி அதிகரிப்பு, மிகை லாபம் என்ற முதலாளித்துவ தத்துவ மேலாண்மையும் இணைந்து கொண்டது. மக்களுக்கான உற்பத்தி என்ற நிலைபோய் உற்பத்திகளுக்காக மக்கள் என்றானது. இந்த வணிக முதன்மை பண்பாட்டில், அறிவை மிஞ்சிய மதிப்பை தொழில்நுட்பம் பெற்றுக்கொண்டமையும் இங்கு நம் கவனத்திற் குரியது. இயற்கையை அறிவியல் வென்றிட வேண்டும் என்பது இலக்காக அறம் பிழைத்த அறிவியல் தொழில்நுட்ப பயணம் தொடர்ந்தது.

ஆதிச் சமூகங்களில் தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடு என்பது மனிதத் தேவைகளின் அடியாகவே அமைந்தது. கருவிகள் மிகச் சிலவாகவும் அக் கருவிகளை கையாளுதல் என்பது மனித திறன்களின் வெளிப்பாடாகவும் காணப்பட்டது. இன்றோ தலைகீழ் மாற்றமாக கருவிகள் கையாளும் மனிதனை கட்டுப்படுத்துவனவாக மாற்றங்கட்டுள்ளன. எந்தவித நியமங்களுமற்ற தொழில்நுட்ப நோக்கிடை மனித மதிப்பீடுகள் பொருள் இழந்து போயின. தனிமனித ஆக்கத்திறன் சுயம் என்பவற்றனைப் புறம் தள்ளி மனிதனை தொழில்நுட்ப பிராணியாக்கும் நிலைமாற்றம் விளைந்துள்ளது

மரபு-நவீனத்துவம் என்ற இரட்டை நிலைக் கருத்தாக்கங் களின் அடியாகவே இந்த புறந்தள்ளுதல் அமைந்திடக் காணலாம். 'மரபைத் தவிர்க்க வேண்டும், நவீனத்துவத்தைத் தழுவ வேண்டும்' எனும் இந்த விழுமிய நோக்கிலான கருத்தாக்கம் ஒரு புலமை மரபாகவே வளர்க்கப்படுகின்றமை இங்கு நம் கவனத்திற்குரியது. படிமலர்ச்சிக் கோட்பாடு, அதனடியான மேம்பாடு தொடர்பான கருத்தாக்கங்கள் யாவும் நவீனமயமாக்கத்தையே மேம்பாடாக வரித்து நிற்கின்றன. இது சார்ந்த புலமையாளர்கள் மரபுக்கும் நவீனத்துவத்திற்கும் இடையில் நிகழுகின்ற ஒரு போராட்டமாக மேம்பாட்டினை சித்திரிக்கவும் செய்கிறார்கள். தேசங்களை வகைப்பாடு செய்வதற்கும் இந்த வாய்பாடுகளை பயன்படுத்த இவர்கள் தவறவில்லை. வளர்ந்த நாடுகள் - வளர்ந்து வரும் நாடுகள் அல்லது குறைவிருத்தி நாடுகள் என்ற அடையாளங்களின் விளக்க உரைகளாக நவீனமயப்பட்ட நாடுகள், நவீனமயமாகிவரும் நாடுகள், குறைந்தளவிற்கு நவீனமயப்பட்ட நாடுகள் என இவர்கள் முன்மொழிகின்றனர். இதனடியாக நவீனமயமாக்கத்தின் மேலை மாதிரிகளை இவர்கள் வரப்பிரசாதங்களாக குறிப்பிடுகின்றனர்.

சுதேச அறிவியல் தொடர்பான கவனிப்புகளோ, பகுப்பாய் வுகளோ இல்லாமலேயே நவீனத்துவத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் நிலைமை பெரும்பாலான நாடுகளின் அனுபவம் ஆனது. காலனித்துவகால மேலை ஆட்சியாளர்களின் கருத்தியல் ஆதிக்கம், கல்வி முறைவழியான சமூகமயமாக்கம் போன்றவற்றின் ஊடாக மேலைமயமாக்கம் என்பது ஒரு விழுமியமாக, உளச்சார் பாகவே பல புலங்களிலும் வளர்க்கப்பட்டன. மேற்கண்ட இந்த சிந்தனை போக்கினை கேள்விக்குள்ளாக்கிய மாக்சிய வாதிகளின் மேம்பாட்டுச் சிந்தனைகள் நம் கவனத்திற்குரியனநவீனமயமாக்க, தொழில்மயமாக்க சமூகங்களில் இயற்கை மனிதனுக்கு அந்நியப் பட்டு போனமையும் சமூக ஒழுங்கமைவின்மையும் தனிமனிதக் குழப்பங்களும் அதிகரித்துப் போனமையும் மரபார்ந்த அறிவியல் வாழ்க்கை முறைகள் பற்றிய அவசியத்தினை உணர்த்தி நிற்கின்றன. நவீன அறிவும் அவ்வறிவின் வழியான மனிதரைத் தேடும் ஆராய்ச்சியும் வெறும் சந்தை ஆராய்ச்சியாக, சந்தையை மையமாகக் கொண்ட நுகர்வோரைத் தேடும் முயற்சிகளாகவும் முடிந்து போனமை இன்றைய வரலாறாகும்.

இவற்றிற்கு அப்பால் உலகளாவிய மனிதன், உலக மயமாக்கம் என்ற நவீன கருத்தாக்கங்ளும் கூட சந்தையை மையமாகக் கொண்ட லாப கணக்குகளாகவே அமைந்துள்ள மையும் நம் கவனத்திற்குரியது. சுதேச அறிவை, சுதேச வாழ்க்கை முறையை புறந்தள்ளுகின்ற இந் நடைமுறைகள் நவீனத்துவத்தின் பெயரால் நடக்கின்ற வணிகங்களாகவே அமைந்த ஆபத்து இன்று பெரிதும் உணரப்படுகின்றது. நவீனத்துவத்தின் வழியான மேம்பாடு என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் வாழ்வின் அனைத்து தளங்களையும், அனைத்து தரப்பினரையும் சென்றடையவில்லை. குறிப்பாக சமூக-பொருளாதார நீதி, பொருளாதாரச் செழிப்பு, அரசியல் சுதந்திரம், சுகாதாரம், கல்வி என்பற்றில் தமக்குரிய பங்கினை பெறமுடியாதவாறு மறுக்கப்பட்ட மக்கள் எந்தளவிற்கு அவற்றினைக் கேட்கவும் பெறவும் முடிகின்றது என்பதனைப் பொறுத்தே உண்மையான அறிவின் பயனைத் துணிந்திடமுடியும்.

நவீனத்துவத்தின் வழியாக வந்த இந்த ஒருபக்கச் சார்பான மேம்பாடு பற்றிய தன் விமர்சனங்களிடை 'சுதேச அடையாளங் களை-மரபுகளை மீள உறுதிசெய்தல், மேட்டுக்குடி-பொதுமக்கள் என்ற வேறுபாடுகள் அகன்ற புதியதொரு சுய பிரதிமையை வளர்த்தல், 'நாம் யார்க்கும் குடியல்லோம்', நாம் இரண்டாம் தரப்பிரஜைகள் அல்ல எனும் நிலையினை எய்துதல் எனும் பண்பாட்டு உருமாற்றச் செயன்முறைகளை வலியுறுத்தும் போட்சின் கருத்தியல் நம் கவனத்திற்குரியது. (Portes, 1976) மரபுகளை உறுதிசெய்தல், மேட்டுக்குடியினரின் அறிவாதிக் கத்திலிருந்து விடுபட்ட பொதுமக்கள் வாழ்வியலை உறுதிசெய்தல் எனும் இவ்விலக்குகளினடியாகவே இன்று மீளவும் சுதேச அறிவிற்குத் திரும்புதல், சுதேச வாழ்க்கை முறைகளை அங்கீகரித்தல் எனும் சிந்தனை இன்றைய சமுதாய மேம்பாட்டுப் புலங்களில் முதன்மை பெறக்காணலாம். சுதேச அறிவை, அதன்வழியான வாழ்க்கை முறைகளை பற்றிய அனுபவங்களை நேரடியாகவே அம்மக்களிடம் சென்று கற்றுக் கொள்ளுதல் என்பது இன்று சமுதாய மேம்பாட்டு முறையிலாகவே வளர்க்கப் பட்டுள்ளமை எம் கவனத்திற்குரியது.

இந்நிலையில்; சுதேச அறிவிற்கும் பண்பாட்டுப் பல் வகைமைக்கும் இடையிலான உறவுபற்றிய மானிடவியல், சமூகவியல் சார்ந்த ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகள் பயனானவை. பல்வேறு பண்பாடுகளிடையான சுதேச அறிவின் முறைமைகளை புரிந்து கொள்வதற்கும் ஒப்பிடுவதற்குமான நான்கு பிரதான வழிமுறைகளை இக்கல்விப் புலங்கள் எமதாக்குகின்றன.

பண்பாட்டு பன்மையை மறுக்கும் நவீன அறிவு முறைமையானது, மிக எளிதான ஒரு சூத்திரத்திற்குள் பாரம்பரிய அறிவை மூடி நிற்கின்றது. இலகுவானது, உடனடியானது, லாபகரமானது என்ற இந்த சூத்திரத்திற்குள் நிலைபேறான வாழ்வினைக் காத்து நிற்கும் சுதேச அறிவின் மகத்துவம் உணரப்படாமையின் விலைகளை இன்றைய உலகம் பெருமளவில் கொடுத்துள்ளது. அறிவியலின் வளர்ச்சி என்பது அழிவின் வளர்ச்சி எனும் படியான அனுபவங்களையே அதிகளவில் தருகின்ற நிலையில், மனித இருப்பை காப்பது முதல் மனித வாழ்வுக்கான சூழலை இயற்கை வளங்களை காப்பது வரை மீளவும் சுதேச அறிவே தஞ்சம் எனும் நிலைமைகள் இன்று மேலெழக்காணலாம். எடுத்துக்காட்டாக விவசாயப் புலங்களில் நவீன வணிக விவசாய தொழில் நுட்பத்தின் வழி ஒரே பயிர் என்ற நிலையில் இழக்கப்பட்ட நிலவளத்தை, போசாக்குக் உதவாத பயிரின பெருக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் பல ஆய்வனுபவங்களை இன்று காணமுடிகின்றது.

உண்மையில் பிரச்சினை அறிவியலிலா அல்லது நியாயம் மறந்த தொழில்நுட்ப ஆதிக்கத்திலா என்பதனை ஆழ நோக்குவது அவசியமாகும். அறிவியல் என்பது பல்வேறு மாற்று அறிவு மூலங்களைக் கொண்டது| பன்மைத் தன்மையானது என்ற உண்மையினடியாகவே இன்றைய விழிப்புணர்வுச் செயல்திட்டங் கள் அமைகின்றன. வளர்முக நாடுகள் என்றும், குறைவிருத்தி நாடுகள் என்றும் பட்டி கட்டப்பட்ட நாடுகள் பலவற்றினதும் உணவு உற்பத்தி, சுகாதாரமான வாழ்க்கை முறைகள், நலமான பண்பாட்டு கோலங்கள் என்பன சுதேச அறிவின் மேன்மைக்கான சான்றுகளாக விளங்குவன.

இந்தவகையில் லெவி ஸ்ரோஸ் போன்ற சமூக-மானிட வியலாளர்களின் ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகள் நம் கவனத்திற்குரியன. பல்வேறு இனக்குழு மனிதர்களோடும் உடனிருந்து அவன் பசியையும் நோயையும் தன்னதாக உணர்ந்து கொண்டு ,அவனை பயிலும் மனிதநேய நெறியாக மானிடவியல் போற்றப்படும். இந்தவகையில் செவ்விந்தியர்கள் பற்றிய தன்னுடைய ஆய்வொன்றின் முடிவுரையாக லெவிஸ்ரோஸ் குறிப்பிடும் கருத்துக்கள் சுதேச அறிவின் பெறுமதியை வெளிப் படுத்தி நிற்கக் காணலாம் (Levi-Strauss, 1970-1981).  இன்றைய மனிதனின் கொந்தளிப்பான வாழ்வுக்கான ஒரு மாற்று வாய்ப்பாக சுதேச மக்களின் வாழ்க்கை முறையை, மனிதத் தன்மை கொண்ட அவர்களுடைய பண்பாட்டுக் கோலங்களை ஓர் அழகிய கண்ணாடிப் படிவம் போல பாதுகாத்துக் கொள்வது நம் கடமை என்பார் லெவி ஸ்ரோஸ். லெவி ஸ்ரோசின் இந்தக் கருத்தாக்கம் அமைப்பியலின் கற்பனாவாதமாக கருதப்பட்டாலும் சுதேச பண்பாட்டு வாழ்வின் பெறுமதியை வெளிப்படுத்தும் வாசகங்கள் என்பதனை மறுக்கமுடியாது.

பண்பாட்டு பல்வகைமையுடனான அறிவுத் திரளமைப்பின் வளர்ச்சியிலேயே நிலைபேறான மேம்பாடு தங்கியுள்ளது என்ற இன்றைய விழிப்பின் பயனாய் அறிவைத் தேடி, அறிவின் மூலங்களைத் தேடி மக்களிடம் செல்லும் ஆய்வுப் பயணங்கள் இன்று சமூதாய பங்கேற்புடனான ஆய்வு, தீர்மானங்களை எடுத்தல் என்றவாறு வளர்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுதேச மக்கள், நிலைபேறான வாழ்வுக்கான பரந்த பொது நிலைப்பட்ட அறிவினைக் கொண்டிருக்கின்றார்கள். ஆயினும் இன்று நிலவும் நியம கல்வி அமைப்புக்கள், சுதேச அறிவுத் திரளினை அவ்வறிவின் கற்றல் முறைமைகளை ஏற்றுக்கொள்வதில்லை. இன்றைய கல்வி மரபின் புறந்தள்ளலினால் பெருமளவான சுதேச அறிவுத்திரளை நாம் இழந்துவிட்டோம்.

புதிய விழிப்புணர்வின் பயனாய் உள்ளுர் பண்பாட்டின் வழியான அறிவை மதிக்கவும், அதனை இன்றைய கல்வி முறைமையில் பொருத்தமான முறையில் இணைக்கவும் வேண்டிய இன்று மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள் நம்பிக்கை தருவன.

19ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில் பெரும்பாலான வளர்முக நாடுகளில் காலனித்துவ அரசுகளினால் அறிமுகப்படுத்தப்பட்ட நியம கல்விமுறையானது அரச நிர்வாகிகளை, எழுதுவினையர்களை, ஆசிரியர்களை இன்னோரன்ன தேவை களுக்கான பயிற்சியாளர்களை உருவாக்கும் கல்வியாக மட்டுப் பட்டுப்போனது. மேலை முதலாளித்துவ தொழில்மயமாக்க உலகின் இலக்குடனான கருத்துருவ அறிவு முறைமையே இங்கு வழங்கப்பட்டது. சுதேச அறிவிற்கோ அல்லது சுதேச கல்வி முறைமைக்கோ மிகச் சிறிய இடமே இருந்தது. பல சந்தர்ப்பங்களில் சுதேச அறிவானது பொருத்தமற்றது, அறிவுபூர்வமற்றது, காலாவதியானது என்ற கருத்தாக்கமும் ஆதிக்கம் பெற்றிருந்தது.

சுதேச அறிவானது ஏற்கனவே நாம் குறித்தவாறு பண்பாட்டின் பொக்கிஷமாக உள்ளது. மரபுகள், வழக்காறுகள், நாட்டார் கதைகள், நாட்டார் பாடல்கள், நாட்டுக் கூத்துகள், புராணங்கள், பழமொழிகள், தொன்மங்கள் எனும் பல்வேறு வடிவங்களில் இவை காக்கப்பட்டுள்ளன. இப் பண்பாட்டுக் கூறுகளை பாடசாலைக் கலைத்திட்டத்தின் மூலங்களாக ஆக்குவதன் மூலம் சுதேச அறிவினை இன்றைய தலைமுறை மாணவர்களின் வாழும் அறிவுத் திரளாக்கமுடியும். இதன் வழியாக மாணவர்களின் எண்ணக்கருவாக்க எல்லைகள் விரியும். சுதேச புலங்களையும் கடந்து புதிய அனுபவங்களில் பண்பாட்டு அறிவினை பயன்படுத்தும் வாய்ப்புகளும் ஏற்படும். எங்கள் கல்வி அமைப்பில் இவ்வாறான பண்பாட்டு அம்சங்கள் ஆங்காங்கே தலைகாட்டிய போதும் அவை வெறுமனே ரசனை சார்ந்த அல்லது மனனப்பாடங்களாக முடிந்து போகின்றமை யும் இங்கு கவனம் பெற வேண்டும். இந்த பண்பாட்டு செல்வங்களுக்குள் இருக்கின்ற அறிவின் கூறுகளை இனங் கண்டு, இனங்காட்;டும் வல்லமை கொண்டவர்களாக எங்கள் ஆசிரிய வல்லமைகள் வளர்க்கப்படுவதும் அவர்களின் ஈடுபாடும் பங்கேற்பும் இன்றியமையாதன. இவ்வாறாக சுதேச அறிவுக் கல்வியில் ஏற்படும் மேம்பாடானது குறித்ததொரு பண்பாட்டுப் புலத்திற்கு மட்டுமன்றி உலகளாவிய மனித சமுதாயத்திற்கும் பயன் தருவதாக அமையும்.

 

பேராசிரியர் கலாநிதி என் சண்முகலிங்கன்
முன்னாள்
துணைவேந்தர் - சமூகவியல் சிரேஷ்ட
பேராசிரியர்
யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்