குறுந்தொகையில் இறைச்சி என்னும் பொருட் குறிப்பு உத்தி


முனைவர் இரா.மோகன்

ரு கவிஞர் தாம் எழுதிய பொருளை வெளிப்படையாக உணர்த்து-வதற்குக் கையாளும் உத்தி வகைகள் உவமை, உருவகம் போல்வன ஆகும். பல்வேறு நுண்ணிய காரணங்களால் வெளிப்படையாக உணர்த்த இயலாதன- வற்றை உணர்த்தக் கையாளும் உத்தி வகையைப் பொருட் குறிப்பு (Suggestion) எனக் கூறலாம். கவிஞரின் கருத்து வெளிப்பாட்டுத் திறத்திற்கு உரைகல்லாக இவ்வுத்தி பயன்படுகின்றது. இப் பொருட் குறிப்பினை உள்ளுறை உவமம், இறைச்சி என இரு வகைப்படுத்தி நமது பண்டைய உரையாசிரியர்கள் கூறியுள்ளனர். பெரும்பான்மையும் அகப்பொருள் பாடல்களில் தான் இவை பயின்று வருவதைக் காண்கிறோம். உள்ளுறை, இறைச்சி ஆகியவற்றின் இடையே உள்ள வேறுபாட்டை அறிவது அருமையே எனினும், பாடல்களின் பொருள் உணர்ச்சித் திறத்திற்கு இவ்விரு வகை உத்திகளும் குறிப்பாகப் பயன்படுகின்றன எனப் பொதுப்படக் கூறலாம்.

“உள்ளத்து நிகழும் உணர்வுக் குறிப்புக்களை / குமுறல்களை வெளிப்படுத்துவதில் நாகரிக நோக்கும் கவிதை மரபும் பிறமொழி இலக்கியங்-களிலும் காணப்படுகின்றன. ஆங்கில இலக்கியத் திறனாய்வாளர்கள் இவ்வுத்தியைச் ‘சஜ்ஜஸ்சன்’ (Suggestion) என்ற சொல்லால் சுட்டுகின்றனர். உளவியல் முறைப்படி ஆய்ந்து இதனை ‘அப்ஜக்டிவ் காரிலடிவ்’ (Objective Correlative) எனக் கூறினார் டி.எஸ்.எலியட். எலியட் கூறும் தொடர் மிகவும் பொருத்தமானது. நம் மரபினதாய ‘இறைச்சி’ என்னும் உத்தியும் எலியட்டின் தொடரும் ஏறக்குறைய ஒரு பொருளன. தமிழ்ப் புலவர்களின் நுண்மைக்கும் பொருளுணர்த்தும் திறனுக்கும் இவ்வுத்தி நல்லதொரு சான்றாகும்” (இலக்கிய ஒப்பாய்வு: சங்க இலக்கியம், ப.59) என்பர் பேராசிரியர் அ.அ.மணவாளன்.

பதச் சோறாக, குறுந்தொகையில் பொருட் குறிப்பு உத்தி சிறப்பாக அமைந்த ஒரு பாடலை இங்கே காணலாம். குறுந்தொகையின் 69-ஆம் பாடல்; இதனைப் பாடியவர் கடுந்தோட் கரவீரன். ‘தோழி, இரவுக் குறி மறுத்தது’ என்பது இப் பாடலின் துறைக் குறிப்பு. இரவுக் குறியில் தலைவியைச் சந்திக்க விரும்பிய தலைவனை நோக்கி, “நீ இரவில் வருவாயானால், உனக்கு ஏதேனும் தீங்கு உண்டாகுமோ என்று எண்ணி யாம் வருந்துவோம்; ஆதலின் நீ வரவேண்டா” என்று தோழி மறுத்துக் கூறுகிறாள். தோழியின் கூற்றினைத் தன்னகத்தே கொண்ட குறுந்தொகைப் பாடல் வருமாறு:

“கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துஉயிர் செகுக்கும்
சாரல் நாட! நடுநாள்

வாரல்; வாழியோ! வருந்துதும் யாமே”

“கருமையான கண்களை உடைய, தாவுதலில் வல்ல ஆண் குரங்கு இறந்ததாக, கைம்மைத் துயரினைத் தாங்க இயலாத, பாசம் மிக்க பெண் குரங்கு, மரம் ஏறுதல், தாவுதல் முதலிய தன் தொழிலை இன்னும் கல்லாத வலிய தன் குட்டியைச் சுற்றத்திடம் ஒப்படைத்து விட்டு, உயர்ந்த மலைப் பக்கத்தின் மேலே ஏறிக் கீழே குதித்துத் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் படியான மலைச்சாரலை உடைய நாட்டுக்குத் தலைவனே! நள்ளிரவில் தலைவியைச் சந்திக்க இனி நீ வர வேண்டாம். அங்ஙனம் நீ வந்தால் உனக்குத் தீங்கு எதுவும் நேருமோ என நாங்கள் கவலையுறுவோம். நீ தீங்கின்றி வாழ்வாயாக!” என்பது இப்பாடலின் தெளிவுரை.

தலைவனது மலைநாட்டைச் சார்ந்த குரங்குகளுக்கே இத்தகைய குடும்பப் பாசம் உண்டு என்பதைத் தோழி தலைவனுக்கு நினைவூட்டுகின்றாள். காரணம், தலைவனுக்கு ஏதும் தீங்கு நேர்ந்தது என்றால், தலைவியின் நிலை என்னவாகும் எனக் குறிப்பாகப் புலப்படுத்த இந் நிகழ்ச்சி உதவுகிறது. கருப்பொருளின் அன்பு வாழ்க்கையைச் சுட்டிக்காட்டும் இது இறைச்சியின்பாற் படும். “‘கலை இறந்ததாக மந்தியும் உயிர் செகுக்கும் நாட’ என்றது, பெண் விலங்கினங்களும் தம் துணைக்குத் துன்பம் நேர்ந்த காலத்தில் உயிர் தரியாமையை நின்னாட்டில் அறிந்தனையாதலின், நினக்கு ஏதம் வருமேல் இவள் உயிர் வாழ்தலின்மையும் அறிதியென்று உணர்த்தியவாறு” (குறுந்-தொகை மூலமும் உரையும், பக்.143-144) என்னும் ‘பதிப்பு வேந்தர்’ உ.வே.சாமிநாதையரின் உரை விளக்கம் இங்கே நினைவு கூரத் தக்கதாகும்.

“இங்ஙனம் ஏதம் நினைந்து யாம் வருந்தாமல் விரைந்து வரைந்து வாழியோ என்றாள்; நின்னை வாரல் என்று சொல்லும் வண்ணம் இன்னும் வரையாது வருதற்கு வருந்துதும் என்றாளெனினும் அமையும்” (குறுந்தொகை விளக்கம், ப.126) எனத் தோழியின் கூற்றில் ஆழ்ந்திருக்கும் குறிப்புப் பொருளை எடுத்துக்காட்டுவார் மகாவித்துவான் ரா.இராகவையங்கார்.

இங்ஙனம் இறைச்சி என்னும் பொருட் குறிப்பு உத்தி சிறப்பாக அமைந்த பாடல்கள் குறுந்தொகையில் பயின்று வரக் காணலாம்.


 


முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
625 021.

 

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்