குடும்பவிளக்கு சித்தரிக்கும் எண்ண ஓட்டங்கள் - ஓர் பார்வை

முனைவர் பூ.மு.அன்புசிவா


விஞர் கனகசுப்புரத்தினம் என்கிற பாரதிதாசன் புரட்சிக்கவிஞர் என்றே அறியப்படுகிறார். அதில் எனக்கு எவ்விதமான கருத்து வேறுபாடும் இல்லைதான். பாவேந்தரின் படைப்புகளில் தனிச்சிறப்புடையது குடும்பவிளக்கு. இக்காப்பியத் தலைவி தங்கம். தலைவர் மணவழகர். இவர்கள் வாயிலாகப் பாவேந்தர் புலப்படுத்தும் மகளிர் எண்ணங்களை இக்கட்டுரையில் தொகுத்துக் காணலாம்.

வாழ்க்கையில் உயர் குறிக்கோள்கள் வேண்டும் என்பதை இந்தப்பகுதி எடுத்துரைக்கின்றது என்றும் குடும்பவிளக்கில் ரும் தங்கம் அறிவு நிறைந்த பெண்ணாக மட்டுமன்றிச் செயல்திறன் வாய்ந்தவளாகவும் அமைகிறாள். வானூர்தியைப் பெண் செலுத்த வேண்டும்; மாக்கடலிடையே கலம் (கப்பல்) ஓட்ட வேண்டும்; ஒருகையால் தனக்கென்று அமைந்த பணி இயற்றும்போதே மறுகையில் பெண் உலகு விடுதலை எய்துதற்குரியன செய்ய வேண்டும் என்று எண்ணுகிறாள் என்று போற்றுவார்கள். மணவழகரின் பெற்றோர், மணவழகர், தங்கம், இவர்தம் மக்கள் வேடப்பன், வெற்றிவேல், வேடப்பன் மனைவி நகைமுத்து, இவர்தம் மக்கள் அமிழ்து, சேரன் என நான்கு தலைமுறை இலக்கியமாகத் திகழ்வது குடும்பவிளக்கு.

'பெண்ணடிமை தீரும் மட்டும் பேசும் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்துவரல் முயற்கொம்பே
(சஞ்.ப.சாரல். தொ.
1)
மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!'
(பாரதிதாசன் கவிதைகள்)

என்றெல்லாம் பெண் விடுதலையைப் பேசியவர்தான் பாரதிதாசன்.
ஆனால் அது என்னவொ தெரியவில்லை, . பாரதிதாசனின் குடும்பவிளக்கு குவிதை வரிகளை வாசித்தப் பின் முதல் முதலாக எனக்கு ஏற்பட்ட ஓர் உணர்வு இதோ இதை எழுதும் இந்த நிமிடம் வரை நேற்றைய என் மறுவாசிப்பு வரை அப்படியே மாறாமல் இருப்பது மட்டுமல்ல, சில நெருடல்களையும் ஏற்படுத்தவே செய்கிறது.
பாரதிதாசனின் இலட்சியப் பெண், குடும்பவிளக்கு எப்படி சித்தரிக்கப்படுகிறாள்
என்பதைக் காண்போம்.

'யாழின் உரையினை எடுத்தாள்:
இசையில் 'வாழிய வையம் வாழிய' என்று
பாவலர் தமிழில் பழச்சுவை சேர்த்தாள்;.
தீங்கிலாத் தமிழில் தேனினைக் கலவை போய்த்
தூங்கிய பிள்ளைகள் தூங்கிய கணவனின்
காதின் வழியே கருத்தில் கலக்கவே
மாதின் எதிர்அவர் வந்துட் கார்ந்தனர்
அமைதி தழுவிய இளம்பகல்
கமழக் கமழத் தமிழிசை பாடினாள்'


அதிகாலையில் எழுந்திருக்கிறாள்.

பாரதிதாசன் மகளிர் வாழ்வில் மறுமலர்ச்சியை எதிர் நோக்கினார். முதலில் பெண் பள்ளிக்குச் செல்ல வேண்டும். சிறுபருவத்திலேயே பெண்ணுக்குக் கல்வி அறிவு தரப்பட வேண்டும்.

'தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன்அன்னை!
சிலைபோல ஏனங்கு நின்றாய்? - நீ
சிந்தாத கண்ணீரை ஏன்சிந்து கின்றாய்?'
(இசையமுது)

என்று தந்தை கேட்பதாகக் கவிஞர் பாடுகின்றார்.

பெண் ஓவியம் கற்க வேண்டும்; காவியம் கற்க வேண்டும்; கவிதை எழுதி உலக அமைதியை அதன்வழி உருவாக்க வேண்டும். கவிஞர் இவற்றோடு நிற்கவில்லை. மங்கைப்பருவம் அவள் எய்தும்போது தனக்குரிய மணமகனைக் காட்டித் 'தேவை இவன்' எனக் கூற வேண்டுமாம்! கல்வி கற்றவளாக, காதல் தலைவியாக மட்டும் இருந்தால் போதுமா? வீரத்தாயாக விளங்குதல் வேண்டும்; குடும்ப விளக்காக ஒளிவிட வேண்டும்.

'அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்
அழகிய தமிழ்நாட்டின் கண்கள்!'
(இசையமுது)

என்று பாரதிதாசன் பெண்ணுக்கு இன்றியமையாத பண்புகள் என்று கூறப்பெற்ற அச்சம் மடமை ஆகியவற்றை உதறித் தள்ள வேண்டுகிறார். பெண் அச்சம் மடம் கொண்டவளாக இருந்தால், நாடாளவும், விண்வெளியில் பறக்கவும் இயலுமா? கவிஞர் கண்ட மகளிர் வாழ்வியலில் மூன்று நிலைகளை வரும் பகுதிகளில் காண்போமா?

வீரத்தாய்காட்சி

தாய்மார்கள் வீரமுடையவர்களாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் வீரமிக்க பிள்ளைகள் நாட்டில் தோன்றுவர். பண்டைக்கால மகளிரிடையே, தந்தையையும் கணவனையும் போரிலே பறிகொடுத்த தையல் (பெண்) ஒருத்தி தன் இளம் மகனைத் தலைவாரி வெள்ளை உடை உடுத்தி வேலைக் கையில் கொடுத்துப் போருக்கு அனுப்பினாள் என அறிகிறோம். மற்றொருத்தி தன்மகன் போரில் புறமுதுகு காட்டினான் என்று கேட்டு அவ்வாறாயின் அவனுக்குப் பால் கொடுத்த என் மார்பை அறுத்து எறிவேன் எனச் சூளுரைத்துப் போர்க்களத்தில் பிணமெல்லாம் புரட்டித் தன்மகன் மார்பிலே புண்பட்டு வீரச்சாவு கொண்டதறிந்து அவனைப் பெற்ற பொழுதை விட அப்பொழுது மகிழ்கிறாள் எனப் படிக்கிறோம். பாரதிதாசன் இந்தப் பரம்பரையை மறுபடியும் உயிர்ப்பிக்க விரும்புகிறார். கவிஞர் படைப்புகளில் 'வீரத்தாய்' என்ற ஒரு சிறிய காவியம் உள்ளது. நெருக்கடியான சூழ்நிலையில் இராணி விஜயா பொய்த்தாடி அணிந்து முதியவராய் மாறுவேடம் பூண்டு மகன் சுதர்சனுக்குப் போர்த்தொழில் கற்பிக்கிறாள். வஞ்சக நெஞ்சம் கொண்ட சேனைத்தலைவன் இளவரசனைக் கொல்வதற்கு ஓங்கிய வாளைத் தன் வாளால் துண்டாடுகின்றாள். தக்க சமயத்தில் தன் மாறுவேடம் களைந்து தான் யாரென்று காட்டுகின்றாள்.

'தாடியும் பொய்! என்றன் தலைப்பாகையும் பொய்யே!
கூடியுள்ள அங்கியும் பொய்! கொண்ட முதுமையும் பொய்!
நான் விஜயராணி!'
(வீரத்தாய் தொகுதி :
1)

என்று அரசி தன் முன்னே கூடியுள்ள மன்னர்களின் முன்னிலையில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள். பாரதிதாசனின் 'பாண்டியன் பரிசு' காவியத்திலும் அரசி வாளேந்தி வருபவளாகச் சித்தரிக்கப்படுகின்றாள்! கதிர்நாட்டின் அரசியான அவள் வஞ்சகம் புரிந்த தன் உடன்பிறந்தான் நரிக்கண்ணனை வாள் கொண்டு மாய்க்க வருகின்றாள். நரிக்கண்ணன் தன் உடன்பிறந்தாளின் கணவனை மறைந்து நின்று வேலெறிந்து கொன்று விடுகின்றான். அரசி களத்துக்கு வருகின்றாள். மன்னன் இறந்து கிடப்பது அறிந்து துயரப்படுகின்றாள். இறந்த கணவனின் உடம்பைத் தடவிப் பார்க்கிறாள்.

தணல்போலும் புண்பட்ட முதுகு கண்டாள்
தலைகுனிந்தாள்! அப்பிணத்தை நிலத்திற்போட்டாள்


அதோடு மட்டுமா? ஐயகோ! முதுகு காட்டத் துணிந்ததுவோ தமிழா நின் தமிழ் நெஞ்சம் என்கின்றாள். தாய்மாரைச் சித்தரிப்பதில் பாரதிதாசன் இவ்வாறு தனித்தன்மை காட்டுகிறார். பாரதிதாசனின் வீரத்தாய்மார்கள்

  • போரிடுவார்கள்.

  • புகழுக்காக உயிர் கொடுப்பார்கள்.

  • முதுகிற் புண்பட்டுச் சாவதைப் பொறுக்க மாட்டார்கள்.

  • ஆண்களைவிட அறிவுக் கூர்மையும் வீர உணர்வும் மிக்கவர்களாகத் திகழ்வார்கள்.

காதல் தலைவி

பாரதிதாசனின் படைப்பில் இளம்பெண்கள் உரிமை மிக்கவர்கள். சமுதாயக் கட்டுகளை, ஆடவர்களைத் தாண்டிவந்து உடைப்பவர்கள். குறத்தி ஒருத்தி தன் காதலனிடம் பேசுகிறாள் பாருங்கள்!

மோதவரும் ஆணழகே வாவா வாவா
முத்தம்வை இன்னொன்று வை இன்னொன்ற
(காதல் நினைவுகள்)

இப்படிப்பட்ட காதல் தலைவியை எந்தக் கவிஞனும் காட்டவில்லை. பெண்களை ஊமையாகவும் செயலற்றவளாகவும், அழகுப் பதுமையாகவும், அச்சம், நாணம் என்ற பண்புகளின் இருப்பிடங்களாகவும் உருவாக்கும் மரபைக் கவிஞர் உடைத்தெறிந்தார். உன் காதலன் என்ன சாதி என்று கேட்டனராம் பெற்றோர். அதற்கு அவள் தன் தோழியிடம் கூறும் விடையைக் கேளுங்கள்!

'இந்தாடி அன்புள்ள தோழி - எனக்கு
எப்போது அடங்கும் சிரிப்பு
வந்தவன் ஆண்சாதி என்றால் - அவனை
மணந்தவள் பெண்சாதி தானே!'
(தொகுதி :
4 காதல் கவிதைகள்)

என்கின்றாள். சாதிப் பாகுபாட்டைப் பாரதிதாசன் தலைவியர் பொருட்படுத்துவதே இல்லை. 'எதிர்பாராத முத்தம்' என்ற காதல் காவியம் கவிஞரால் இயற்றப்பட்டது. அதில் தலைவன் பொன்முடி; தலைவி பூங்கோதை. தலைவி பூங்கோதை தன் காதலனுக்கு எழுதும்

பழத்தோட்டம் அங்கே; தீராப்
பசிகாரி இவ்வி டத்தில்!
(எதிர்பாராத முத்தம்)

கடிதத்தில் என்று எழுதுகிறாள். பெண் தன் மனத்தில் உள்ள காதலை இப்படியெல்லாம் வெளிப்படுத்தலாம் என்று காட்டியவர் பாரதிதாசன். 'புரட்சிக்கவி' என்ற குறுங்காவியத்தில் இளவரசி அமுதவல்லி கவிஞன் உதாரனிடம் காதல் கொள்கிறாள். அவன் தயங்குகிறான்; நாடாளும் வேந்தன் மகளை நாம் காதலிக்கவில்லை என்று தயங்குகிறான். அமுதவல்லி அவனுக்குத் துணிவூட்டுகிறாள்; காதலிக்கத் தூண்டுகிறாள். வருணம், சாதி, செல்வம் என்றெல்லாம் பாராமல் பாரதிதாசன் தலைவியர் காதல் பயிர் வளர்க்கின்றார்கள்.

குடும்பவிளக்கு

பெண்ணே குடும்பவிளக்கு எனக் கூறத்தக்கவள். ஏனெனில் அவளே கல்வியும் அறிவும் சிந்தனையும், திட்டமிட்டுச் செயலாற்றும் திறமும் படைத்தவள் என்று பாரதிதாசன் கருதினார். 'குடும்பவிளக்கு' படித்தவர் யாரையும் விடாது பிணிக்கும் தேன்தமிழ் ஏடு. குடும்பவிளக்கான தலைவி தங்கத்திற்கு என்ன பணிதான் தெரியவில்லை! அவள்

  • பாத்திரம் துலக்குகிறாள்

  • பால் கறக்கிறாள்

  • வீட்டைத் தூய்மை செய்கிறாள்

  • வீணையில் தமிழ் இசைக்கிறாள்

  • குழந்தை வளர்க்கிறாள்

  • கணவனைப் பேணுகிறாள்

  • கடையில் வணிகம் செய்கிறாள்

  • துணி தைக்கிறாள்

  • தமிழ்ப்பணி செய்கிறாள்

  • கல்வி கற்பிக்கிறாள்

  • தச்சு வேலைகள் புரிகிறாள்

பற்பல பணிகளைப் புரியும் அவள் பல கலைகளும் அறிந்தவளாக இருக்கிறாள். தங்கத்தின் மகன் வேடப்பன்; மருமகள் நகைமுத்து. இருவரும் இனிய இல்லறம் நடத்துகின்றனர். ஓர் இரவில் நகைமுத்து தன் குழந்தையைப் பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டு தூங்குகிறாள். வலக்கை அவளுக்குத் தலையணை ஆயிற்று. இடக்கை குழந்தையின் மேலே வில்லைப்போல் வளைந்து பாதுகாப்பாய் இருக்க அவள் தூங்குகின்றாள். வேடப்பன் நள்ளிரவில் எழுந்தான். நகைமுத்து அருகே குழந்தை தூங்கக் காண்கிறான். அவள் இடக்கை கூடாரமாய்க் குழந்தையை வளைத்திருப்பதைப் பார்க்கிறான். 'என்ன இது! ஒருநூல் புரண்டால் கூடப் போதுமே! குழந்தை நசுங்கிவிடுமே!' என்று கருதி அவளை எழுப்ப நினைக்கின்றான்.

நகைமுத்து தன் கூந்தலிலிருந்து அகற்றிய ஒரு மலர்ச்சரத்தை எடுத்து வேடப்பன் அவளுடைய முகத்தில் போடுகிறான். அவள் கண் விழிக்கவில்லை மலர்ச்சரத்திலிருந்து ஒரே ஒரு மலர் இதழை எடுத்துக் குழந்தையின் மீது போடுகின்றான். தூங்கிக் கொண்டிருக்கும் நகைமுகத்தின் கை மலர் இதழை நீக்கி விட்டு மறுபடியும் கூடாரமாய் வளைகிறது. குழந்தையைப் பாதுகாக்கும் தாய்மை ஆற்றலைக் கண்டு தாய்மையை வணங்குகின்றான். இவ்வாறு குடும்பவிளக்குப் பெண்ணின் பெருமையைப் போற்றுகின்றது.

தமிழ்மொழியில் கற்க வேண்டும். தமிழ்மொழி வாழ்ந்தால் தமிழ்ச் சமூகம் வாழும் என்றெல்லாம் அவள் பேசுவதாகக் காட்டிவிட்டு, அவளுக்கான வீட்டு வேலைகள் அனைத்தையும் அவர் பட்டியலிடும் போது இயல்பாகவே வாசகன் 'தங்கம் போல ஒரு பெண் இருந்தால் தான் குடும்பவிளக்கு' என்று எண்ணத் தொடங்கிவிடுகிறான். இந்த எண்ணத்தின் வளர்ச்சி தான் இன்று பெண் எந்த நிலைக்கு கல்வி பொருளாதரத்தில் உயர்ந்தாலும் வீட்டுப் பொறுப்புகள் எதையும் அவள் விலக்கி வைக்க இயலாத அவல நிலையைப் பார்க்கிறோம். வீட்டுப் பொறுப்பு என்பது எப்போதுமே பெண்ணுக்கு மட்டுமே உரியதாக இருக்கிறது. ஆணுக்கு நிகராகவோ பல வீடுகளில் அதிகமாகவோ பெண் சம்பாதித்தாலும் கூட வீட்டுப் பொறுப்புகளையும் அவளே முழுமையாகச் சுமந்தாக வேண்டி இருக்கிறது. வீட்டு பொறுப்புகளைச் சரியாக கவனிக்க முடியாத நிலை ஏற்படும் போது அதுவே ஒரு குற்ற உணர்வாகி பெண்களை அலைக்கழிக்கிறது.
 


முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத் தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி, கோயம்புத்தூர் -
641 035


 


 


 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்