ஒடுக்கப்பட்டோருக்காக உரத்த குரலில் வெடிப்புறப் பேசும் மக்கள் கவிஞர்

முனைவர் இரா.மோகன்


“மகத்தான சிந்தனை! வளமான கற்பனை!
        மாண்புயர் கொள்கை நெறி!
மனங்கவர் வண்ணத்தில் மலர்கின்ற எண்ணத்தில்
         மணக்கின்ற கவிதை வரி!
தகத்தகா யம்என மின்னிடும் இவருடைய
         தமிழ்பசும் பொன்மாதிரி!
தரமான கவிதை படைப்பதில் எவர்க்கும்நம்
         தாஜுபால் முன்மாதிரி!”


என்பது வல்லம் தாஜுபாலின் படைப்பாளுமை பற்றிய கவிச்சுடர் கவிதைப்பித்தனின் அழகிய சொல்லோவியம்; துல்லியமான மதிப்பீடு. கவிஞரின் இயற்பெயர் தா.முகமது இக்பால்; ‘தஞ்சை தாமு’, ‘வல்லம் தாஜுபால்’ என்பன அவரது புனைபெயர்கள்.
1987-ஆம் ஆண்டில் ‘மார்கழி வீதி’ என்னும் தமது முதல் கவிதைத் தொகுப்பின் வாயிலாகத் தொடங்கிய வல்லம் தாஜுபாலின் எழுத்துப் பயணம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொய்வின்றித் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. ‘செம்மண் சிறகுகள்’ (1992), ‘சூரியச் சுவடுகள்’ (1999), ‘மன வாசனை’ (2001), ‘சூடாக சில பனித்-துளிகள்’ (2007), ‘மௌனம் நம் எதிரி’ (2017) ஆகியன கவிஞரது ஏனைய ஐந்து கவிதைத் தொகுப்புக்கள் ஆகும். ‘கடலைத் தேடிச் சங்கமிக்கும் நதிகள்’ (2010) என்ற வாழ்க்கை வரலாற்று நூலையும் அவர் இணையாசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார்.

வல்லம் தாஜுபால் தம் கவிதைப் பணிகளுக்காகப் பெற்றிருக்கும் பட்டங்களும் பரிசுகளும் விருதுகளும் பலவாகும். ‘கவியருவி’, ‘எழுச்சிக் கவிஞர்’, ‘வண்டமிழ்க் கவிமழை’, ‘கவிக்குரிசில்’, ‘தஞ்சைக் கலைவாணர்’ என்பன இவர் பெற்றுள்ள சில பட்டங்கள் ஆகும். கவிஞரின் ‘சூடாக சில மணித்துளிகள்’ என்னும் கவிதைத் தொகுப்பிற்குக் ‘கவிதை உறவு’ பரிசு, ‘மெய்யறிவு’ பரிசு என இரண்டு பரிசுகள் கிடைத்துள்ளன.
16.01.2004-இல் பெங்களூரில் நடைபெற்ற ‘தேசியக் கவிஞர் சம்மேளன’த்தில் (National Symposium of Poets) தமிழின் சார்பாக இவர் வாசித்த கவிதை, இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பெற்று 25.01.2004 அன்று அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. விகடன் குழுமத்தின் சார்பில் ‘டைம் பாஸ்’ வார இதழ் (17.12.2013) நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசினை வென்ற கவிஞர், பாங்காக் நகருக்குச் சுற்றுலா செல்லும் (16.04.2014-21.04.2014) நல்வாய்ப்பினைப் பெற்றார் என்பது சிறப்புத் தகவல் ஆகும். கவிஞர் தமது 15-ஆம் வயதிலேயே தமிழக அரசின் ‘தமிழரசு’ இதழ் நடத்திய வெண்பாப் போட்டியில் முதல் பரிசும், 2015-ஆம் ஆண்டில் ‘உரத்த சிந்தனை’ இதழின் ‘வெண்பா வேந்தர்’ விருதினையும் பெற்றுள்ளார். எல்லாவற்றிருக்கும் மணிமகுடமாக, கவிஞர் எழுதிய ‘மண்வாசனை’ கவிதைத் தொகுதியைப் படித்த முன்னைக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம், பாராட்டு மடல் எழுதிக் கவிஞரைப் பெருமைப்படுத்தியுள்ளார் இனி, ஒரு பறவைப் பார்வையில் வல்லம் தாஜுபாலின் படைப்பாளுமை குறித்து இக் கட்டுரையில் காண்போம்.

கவிதைக்கான வரைவிலக்கணம்

வல்லம் தாஜுபால் கவிதைக்கு வகுத்துத் தரும் வரைவிலக்கணம் வருமாறு:

“புதிய யுகந்திறக்கும் பொன்சாவி; நல மரத்தின்
விதைகள்; குருடர்களின் விழிதிறக்கும் மந்திரங்கள்;
உதய ஒளிக்கான உபவாசம்; மகரந்தப்
புதையல்; ஆற்றலுக்குப் பதவுரைதான் நம் கவிதை!”
(மார்கழி வீதி, ப
.3)

கவிஞரின் கண்ணோட்டத்தில் அல்லற்பட்டு ஆற்றாது அழும் விழிகளுக்கு ஆறுதல் தருவது கவிதை; கொடிய வஞ்சகத்திற்கு எதிராக ஆத்திரத்தோடு அனலாகப் பொங்கி எழுவது கவிதை; நீலக் குயிலாய் நெஞ்செல்லாம் இசைப்பது கவிதை; எண்ணத்தில் ஒளி பூசி, கற்பவர் இயத்துள் தித்திக்கும் தேனினைப் பொழிவது கவிதை, சுருங்கக் கூறின், ‘கனல் போல் கவியெழுதி கடைகோடி மக்களின் கண்ணீரைத் துடைப்போம்!’ என்பது கவிஞரின் கொள்கை முழக்கம்.

வல்லம் தாஜுபாலைப் பொறுத்த வரையில், கவிதை என்பது ‘அழகின் சிரிப்பு’ மட்டுமன்று; அது ‘அபூர்வ தரிசனம்’. தினமும் நீரூற்றினாலும் என்றோ ஒரு நாள் தான் பூக்கும் வெள்ளை ரோஜா; ஜன்னல் எப்போதும் திறந்தே இருந்தாலும் எப்போதோ ஒரு பொழுது தான் வந்து அமரும் இளமஞ்சள் குருவி; தொடர்ந்து துரத்திச் சென்றாலும் எக்கணமோ தான் சிக்கும் வண்ணத்துப் பூச்சி. அது போல,

“நாளெல்லாம் எழுதியும்
ஏதோ ஒரு வரியில்தான் தெறிக்கும் கவிதை”
(மௌனம் நம் எதிரி, ப
.111)

எனத் தெளிவுபடுத்துகின்றார் கவிஞர்.

கவிதைகளின் நோக்கும் போக்கும்

“ஓசை ஒழுங்கு, சந்த நயம், மோனை எதுகை நயம், இயைபுத் தொடை போன்ற மரபுக் கவிதையின் பண்புகளையும் – வீண் வார்த்தைகள் இல்லாத சொற்சிக்கனம், படிமம், பாதி சொல்லி மீதியை வாசகர் உணர வைத்தல், உரிச்சொற்களும் அசைச் சொற்களும் சேர்க்காத தங்கு தடையற்ற நடை, இருண்மையின்றிப் பொருள் புரிய வைத்தல் போன்ற புதுக்கவிதைப் பண்புகளையும் – இரு பிரிவுகளுக்கும் அவசியத் தேவையான கவித்துவத்தையும் கொண்ட ஒரு சில படைப்புகளின் தொகுப்பு இது” (நுழைவாயில், மௌனம் நம் எதிரி, ப.
18) என்னும் கவிஞரின் கூற்று அவரது கவிதைகளின் நோக்கையும் போக்கையும் தெளிவுபடுத்தும்.

“இக் கவிதைத் தொகுப்பில் இரு வேறு கூறுகளின் சங்கமத்தைப் பார்க்கிறேன். மரபு-புதுமை, ஏட்டிலக்கியம்-வாய்மொழி இலக்கியம், படிக்கும் மரபு-பாடும் மரபு என எல்லாமே தம்முள் ஒன்றினுள் ஒன்றாக ஊடாடி நிற்கின்றன. தம்முள் இணங்கியும் தேவைப்படும் நிலையில் பிணங்கியும் புதுமரபைத் தோற்றுவிக்கின்றன. எல்லாவற்றின் கலவை நிலையே இங்குக் கவிதைகளாய் ஆற்றலோடு வெளிப்படுகிறது” (‘கடைக்கோடி மக்களைச் சேரட்டும்’, மௌனம் நம் எதிரி, பக்
.5-6) என்னும் பேராசிரியர் எழில்-முதல்வனின் மதிப்பீடு இங்கே மனங்கொளத் தக்கதாகும். இம் மதிப்பீட்டின் அடிப்படையில், வல்லம் தாஜுபாலின் படைப்பாளுமை சிறந்து விளங்கும் சில இடங்களைக் காண்போம்.

சங்க காலத்துச் ‘செம்புலப் பெயல்நீர்க் காதல்’ எல்லாம் இன்று காணாமல் போய்விட்டது; காதல் என்பது விலைப்பொருள் ஆகி விட்டது; ‘இரண்டு உள்ளங்களின் சங்கமம்’ – ‘இரண்டு உயிர்களின் இனிப்பு ஒப்பந்தம்’ என்பது தடம் மாறி ஒருதலைக் காதலும் தறுதலைக் காதலும் இன்று எண்ணிக்கையில் பெருகி வரக் காண்கிறோம். ‘பருவப் பாசாங்கு’ என்னும் தலைப்பில் பேச்சுச் சந்தம் விளங்கக் கவிஞர் படைத்துள்ள கவிதை இங்கே நினைவு கூரத்தக்கது.

“நீயின்றி என்னால் / வாழ முடியாது’ – அவன்
‘நீங்களின்றி என் / உயிர் நிலைக்காது’ – அவள்
திருமணம்
அவளுக்குத் திண்டுக்கல்லில் / அவனுக்கு நாமக்கல்லில்
வாழ்கிறார் குத்துக்கல்லாய்.”
(மௌனம் நம் எதிரி, ப.
83)

திண்டுக்கல் – நாமக்கல் – குத்துக்கல்; சுவையான சொல் விளையாட்டு! ஊர்ப் பெயர்களிலும் மெல்லிய நகைச்சுவை உணர்வு வெளிப்படுவது குறிப்பிடத்-தக்கது.

இயைபுத் தொடை துலங்கக் கவிஞர் படைத்திருக்கும் அருமையான கவிதை ‘தேச மாளிகை’. ‘தேசம் அழகிய நந்தவனம் – அதில் திரியும் தும்பிகள் மனித இனம்’ எனத் தொடங்கும் அக் கவிதை, ‘இணைந்த கரங்களும் புன்னகையும் – நம் இந்தியத் தாய்க்குப் பொன்னகையாம்’ என வளர்ந்து,

“இடரும் தடைகள் வந்தாலும் / தொடரும் எங்கள் யாத்திரையாம்
வேற்றுமைக்குள்ளும் ஒற்றுமையே / வீரியம் தருகிற மாத்திரையாம்”

(மௌனம் நம் எதிரி, ப.
105)

என இயைபு நலம் பொலிய நிறைவு பெறுவது சிறப்பு.

ஒருமுறை மனம் கலந்து, பொருள் உணர்ந்து படித்தாலே, படிப்பவர் மனத்தில் கல்வெட்டுப் போலப் பதிந்து விடும் கவிதைகளைப் படைக்கும் வல்லமை கைவரப் பெற்றவராக விளங்குகின்றார் வல்லம் தாஜுபால். காட்டாக,

“திசையைத் தெரிந்து / தெளிவாய் நடந்தால்
தேதிகள் நம்மைத் / துதிக்கும்
விதியென்று எண்ணி / விலகி இருந்தால்
தேதிகளை நம்மைக் / கிழிக்கும்”
(மௌனம் நம் எதிரி, ப.
66)

என்னும் கவிஞரின் வரிகள் படித்தவுடனே பொன்மொழி போல் நம் உள்ளத்தில் ஒட்டிக் கொள்கின்றன.

சாதிக் கொடுமைக்கு எதிரான தெறிப்பான சாடல்களையும் சாட்டை-யடிகளையும் கவிஞரிடம் சிறப்பாகக் காண முடிகின்றது.

“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்’
நீதி தவறி நித்திரை வேளையிலே
பறித்தார் மேல்சாதி பறிகொடுத்தோர் கீழ்சாதி
உரைத்தோம் நாம் உள்ளபடி”
(மௌனம் நம் எதிரி, ப.
51)

என்பது கவிஞர் வகுக்கும் காலத்திற்கு ஏற்ற புதிய சாதிப் பாகுபாடு.

புதுக்கவிதையில் வீண் வார்த்தைகளுக்கும் வெற்று முழக்கங்களுக்கும் இடம் இல்லை; உரிச்சொற்களுக்கும் அசைச் சொற்களுக்கும் வாய்ப்பு இல்லை. சொற் சிக்கனமும் பொருட் செறிவுமே இந்நூற்றாண்டுப் புதுக்கவிதையின் உயிர்ப் பண்புகள். பதச் சோறாக, வல்லம் தாஜுபாலின் குறுங்கவிதை ஒன்று:

“பதவிப் பசி
புல் தின்றது புலி”
(மௌனம் நம் எதிரி, ப.
93)

இக் கவிதைக்குக் கவிஞர் தந்திருக்கும் தலைப்பு ‘கூட்டணி’.

படிம அழகு கொலுவிருப்பது நல்ல புதுக்கவிதையின் அடையாளம். உரையாசிரியர்களின் மொழியில் குறிப்பிடுவது என்றால், ‘சொல் கேட்டார்க்குப் பொருள் கண்கூடாக’ ஓடி வருவது படிமத்தின் இலக்கணம். உள்ளங்கவர் உதாரணம் ஒன்று:

“நதி -
மண்ணின் குருதி / நிலத்தின் நேசத் துணை
தாவரங்களின் தாய்ப்பால் / தலையில் ஓடும் அமுதம்”


                                                          (மௌனம் நம் எதிரி, ப.
21)

ஒரு சிறந்த கவிதை சிதறு தேங்காயைப் போல எல்லாவற்றையும் போட்டு உடைத்து விடாது; உரத்த குரலில் ஓங்கி உரைக்கவும் செய்யாது. பல சொல்லக் காமுறாது, மாசற்ற சில சொல்லுவதே – அதையும் சொல்லாமல் சொல்லுவதே – கற்பவர் உள்ளம் கொள்ளும் வகையில் கூறுவதே – சிறந்த கவிதையின் இயல்பு. இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு கவிஞரின் ‘துச்சாதனம்’ என்னும் கவிதை.

“எத்தனை மணிக்கு? / எந்த இடத்தில்?
எத்தனை பேர்? / எவ்வளவு நேரம்?...
கூண்டில் நின்றவள் / குறுக்கு விசாரணையால்
மீண்டும் மீண்டும் / துகிலுரியப்பட்டாள்”
(மௌனம் நம் எதிரி, ப.
56)

கவிதையின் ஈற்றடி முத்தாய்ப்பானது; தலைப்பு ஆழ்ந்த குறிப்புப் பொருளைத் தன்னகத்தே கொண்டது.

சுருங்கச் சொல்லவும் வேண்டும்; அதே நேரத்தில் வாசகருக்கு விளங்காமலும் போய் விடக்கூடாது. ஒரு சிறந்த கவிதைக்குச் ‘சுருங்கச் சொல்லல்’ எத்தனை முக்கியமோ, ‘விளங்க வைத்தலும்’ அத்தனை முக்கியமே. கவிதையின் கருத்துப் புலப்பாட்டில் இருண்மைப் பண்பு இருத்தல் கூடாது; சொல்ல வந்த கருத்தைத் தங்கு தடை இல்லாத மொழியில் வாசகருக்கு நேரடியாகச் சென்று சேரும் விதத்தில் தான் கவிதையின் வெற்றியே அடங்கியுள்ளது. ‘ஜனநாயகப் பற்று’ என்னும் தலைப்பில் கவிஞர் படைத்துள்ள கவிதை இவ் வகையில் குறிப்பிடத்தக்கது:

“ஆறடிக் குழியில் புதைத்தென்ன?
மின் மயானத்தில் எரித்தென்ன?
வாக்களிக்க வந்தது பிணம்”
(மௌனம் நம் எதிரி, ப.
98)

முத்திரைக் கவிதை

கனவில் மூன்று வகைகள் உண்டு:
1. வேடிக்கை மனிதர் காணும் பகற்கனவு, 2. தூக்கத்தில் மனிதர் காணும் சாதாரணக் கனவு, 3. வாழ்வில் சாதிக்க நினைப்போர் காணும் இலட்சியக் கனவு.

பாரத மணித்திரு நாட்டின் முன்னைக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் தம் எழுத்திலும் பேச்சிலும் ‘கனவு காணுங்கள்’ என அடிக்கடி வலியுறுத்தி வந்தது மூன்றாவது வகைக் கனவையே ஆகும்.

‘கனவுகளின் அர்த்தம்’ என்னும் தலைப்பில் வல்லம் தாஜுபால் படைத்துள்ள கவிதை அவரது முத்திரைக் கவிதை ஆகும். ‘கனவுக்கும் அர்த்தம் உண்டு’ எனத் தொடங்கும் கவிதை, தொடர்ந்து எந்த எந்தக் கனவுக்கு என்ன என்ன பயன் – பொருள் – என எடுத்துரைக்கின்றது. கவிஞரின் சொற்களில் அக் கவிதை வருமாறு:

“அல்வாக் கடைகளே / கனவில் வருகிறதா?
நிதி நிறுவனத்தில் ஏமாறப் போகிறாய்.

ஜவ்வு மிட்டாய் / கனவில் வருகிறதா?
நெடுந்தொடர் இயக்குனர் ஆகப் போகிறாய்.

‘இன்னோவா மகிழுந்து’ உன் / கனவில் வருகிறதா?
நிச்சயம் நாளை நீ கட்சி மாறுவாய்.

சேலைகளும் சுடிதாரும் / கனவில் வருகிறதா?
போலிச் சாமியாராய் ஆவது உறுதி.

சிறுத்தையும் சிங்கமும் உன் / கனவில் வருகிறதா?
நாளை உனக்கு ‘நீட்’ தேர்வு.


முதியோர் இல்லம் / கனவில் வருகிறதா?
மகனுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

மேகங்கள், அணைகள் / கனவில் வருகிறதா?
தாகத்தால் பயிர் தவித்துக் கொண்டிருக்கிறது”
(மௌனம் நம் எதிரி, ப.
64)

பொதுமக்களை நம்ப வைத்து இறுதியில் நட்டாற்றில் கைவிடும் நிதி நிறுவன மோசடிகள், மக்களின் சிந்தனையை மழுங்கச் செய்து இழுக்க இழுக்க இறுதிவரை துயரமே தரும் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள், அரசியல் உலகில் அடிக்கடி அரங்கேறும் கட்சித் தாவல்கள், பசுத்தோல் போர்த்திய புலியாய் நடித்து இளம் பெண்களை வஞ்சிக்கும் போலிச் சாமியார்களின் பெருக்கம், ‘நீட்’ தேர்வு என்னும் அச்சுறுத்தல், முதியோர் இல்லம் என்னும் இந்நூற்றாண்டின் கொடுமை, தண்ணீர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் பயிர்கள் என இன்றைய நாட்டு நடப்பை உள்ளது உள்ளபடி அங்கதச் சுவை மிளிர இக் கவிதை சித்திரித்துக் காட்டி இருக்கும் பாங்கு நனி நன்று.

மொழிக் கொள்கை

‘அந்நிய மொழி கற்க ஆர்வம் இருக்கலாம், அதிலே தவறில்லை’ என மொழியும் கவிஞர்,

“அன்னை மொழியை அலட்சியம் செய்தால்
அதுபோல் பிழையில்லை!”


என்பதையும் தெளிவுபடுத்துகின்றார்.

‘எந்த மொழியையும் தேவைக்காகக் கற்றுக் கொள்ளுங்கள்’ என இளைய தலைமுறைக்கு அறிவுறுத்தும் கவிஞர்,

“சொந்த மொழிதான் அறிவை வளர்க்கும்
மனதில் வையுங்கள்!”
(மௌனம் நம் எதிரி, ப.
45)

என்பதையும் வலியுறுத்துகின்றார். அவரது கருத்தில் ‘புறக்கருவியல்ல தாய்-மொழி; அது நம் அகக் கரு’. தாய்மொழி என்பது தாய்ப்பால்; முதன்மைப் பயிர்; கண் பார்வை. அயல்மொழி என்பது புட்டிப்பால்; ஊடுபயிர்; கை விளக்கு. ‘மொழியழிந்தால் இனமும் அழியும்’ என்னும் வரலாற்று உண்மையையும் அவர் இக் கவிதையில் உணர்த்தத் தவறவில்லை.

‘நீதி மன்றத்தில் தமிழ்’ என்னும் கவிதையில் ‘தமிழுக்கு நீதி வேண்டும், தமிழிலே நீதி வேண்டும்’ என அறுதியிட்டு உரைக்கும் கவிஞர், ‘புரியும் மொழியில் – வாதம், புரியும் நிலை வேண்டும்’ என வலியுறுத்துகின்றார்.

“இரண்டு தமிழர்கள் இடையே வழக்கு - அதை
இன்னொரு மொழியில் நடத்துதல் இழுக்கு”
(மொழி நம் எதிரி, ப.
48)

என்பது கவிஞரின் ஆணித்தரமான கருத்து.

குழந்தைத் தொழிலாளர் அவலம்

முன்னைய மரபுக் கவிதை குழந்தைச் செல்வம் தரும் கொள்ளை இன்பத்தை விதந்து பேசியது. மாறாக, இன்றைய புதுக்கவிதையோ குழந்தைத் தொழிலாளரின் அவலத்தை உருக்கமான மொழியில் பதிவு செய்துள்ளது. வல்லம் தாஜுபாலின் ‘சிறகுகளில் சிலுவைகளா?’, ‘குருவி தலையில் பாறைகள்’ என்னும் இரு கவிதைகள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.

“படம்பார்த்துக் கதைசொல்லும் / பருவத்தில், வாழ்க்கைத் தேர்
வடம்பிடிக்கச் சொல்லி / வற்புறுத்தாதீர்!

பால்மணம் மாறாப் / பாசக் கொழுந்துகளைக்
கந்தக நெடியில் / கருக விடாதீர்!

ஈரம் சுமக்கும் / இளைய மலர்களில்
பாரம் சுமத்திப் படுத்தாதீர்!

புல்லாங்குழல் தரும் கையில் / மாடோட்டும் கோல்தந்து
பொல்லாங்கு புரியாதீர், / பூக்களைக் கசக்காதீர்!

சிட்டின் சிறகுகளில் / சிலுவைகளை அறையாதீர்!
மொட்டின் முதுகுகளில் / மூட்டைகளை ஏற்றாதீர்!

சிரிப்பைக் காட்டிப் / புத்தகப் பை தூக்குவோர்
செருப்பைத் துடைப்பதோ / சில்லறைக்காக?
பொறுப்பை மறந்து உங்கள் / இரைப்பை நிரப்ப
நெருப்பை வைக்காதீர் / பிஞ்சுக் கனவுகளில்”
(மௌனம் நம் எதிரி, ப
.91)

எனக் குழந்தைத் தொழிலாளர்ககள் இன்று கந்தகக் கிடங்குகளில் – உணவுக் கூடங்களில் – சமுதாய வீதிகளில் – நடைபாதைக் கடைகளில் படும் பாட்டினை நெகிழ்வான மொழியில் எடுத்துரைக்கும் கவிஞர், அவர்களது ‘பிஞ்சுக் கனவுகளில் நெருப்பை வைக்காதீர்’ என்றும், ‘முதுகுகளில் பாரம் சுமத்திப் படுத்தாதீர்!’ என்றும், ‘பொறுப்பை மறந்து பொல்லாங்கு புரியாதீர்!’ என்றும், ‘சில்லறைக்காக வேலை செய்யுமாறு வற்புறுத்தாதீர்!’ என்றும் பெற்றோர்களைக் கேட்டுக் கொள்கின்றார்.

‘குருவி தலையில் பாறைகள்’ என்னும் பிறிதொரு கவிதையில்,

‘குழந்தைகள் முதுகில் குடும்பச் சுமையா? குருவியின் தலையில் பாறையா?’ என வினவும் கவிஞர்,

“கற்பது குழந்தைகள் உரிமையே! / முடக்காதீர் அவர் திறமையை!
எதிர்காலத்தின் அப்துல் கலாம்களை / இருட்டில் தள்ளுதல் மடமையே!’


                                                                             (மௌனம் நம் எதிரி, ப.
92)

என அறியாமையில் உழலும் குழந்தைத் தொழிலாளர்களின் பெற்றோர்களைச் கடுமையாகச் சாடுகின்றார்.

உழவரைக் கொண்டாடும் கவிஞர்

“நான் சாயி பக்தன் -
விவசாயி பக்தன்”


என்னும் ஒப்புதல் வாக்குமூலம், உழவர்கள்மீது கவிஞர் கொண்டிருக்கும் ஆழ்ந்த பற்றினைப் பறைசாற்றும், ‘ஆடைகள் சாயம் வெளுப்பதுண்டு – சில அன்பர்கள் சாயம் வெளுப்பதுண்டு; அணிகலன் சாயம் வெளுப்பதுண்டு; ஆகாய சாயமும் வெளுப்பதுண்டு. அகிலத்தில் வெளுக்காத ஒரே சாயம் – அன்னம் தருகின்ற விவசாயம் தான்!’ (மெளனம் நம் எதிரி, ப.31) என முடிந்த முடிபாகக் கூறுகின்றார் கவிஞர்.

கவிஞர் உழவனைப் போற்றிப் பாடுவதற்கும் கொண்டாடுவதற்கும் காரணங்கள் பல உண்டு. அவற்றுள் மிகவும் முக்கியமானவையாகக் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை இரண்டு. அவையாவன:

1. ‘ உழவனைப் போற்றுவது -
சம்பா குறுவை / நட்டு வருபவன் என்பதால் அல்ல – அன்று
கம்ப நாட்டாழ்வார்க்கே / மெட்டு தந்தவன் என்பதால்.’


2. ‘ உழவைப் பாடுவது –
வேட்டைச் சமூகத்தை / வேளாண்மைச் சமூகமாய்
மாற்றி அமைத்ததால்.
பூமியை வெறும் / மண்ணாகக் கருதாமல்
அன்னை மடியாய் / எண்ண வைப்பதால்…’
(மௌனம் நம் எதிரி, ப.
33)

உழவனின் அவல நிலையைச் சுட்டுவதற்கு இன்று பரவலாக எடுக்கப்படும் ‘சுயபடம்’ (Selfie) என்னும் கலைச்சொல்லாக்கத்தினைத் திறம்படப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் கவிஞர். புலவர் சுயபடம் எடுத்தால், அவரோடு இலக்கிய ஏடு தெரியுமாம்; ‘உழவர் சுயபடம் எடுத்தால், அவரோடு தெரியும் வறுமைக் கோடு’ என்கிறார் கவிஞர்.

“இறைக்கிறார் வயற்காட்டில் ஏற்றம் - வாழ்வில்
எப்போது பெற்றிடுவார் ஏற்றம்?”
(மௌனம் நம் எதிரி, ப.
29)

என்பது கவிஞரின் எதிர்பார்ப்பு, ‘ஏர் எழுதுகோலால் இதிகாசம் தருகின்ற’ உழவனைக் கேவலம் ஒரு துணுக்கு மாதிரி மதிப்பதில் – சிறு துரும்பைப் போலவே கருதுவதில் கவிஞருக்குச் சற்றும் உடன்பாடு இல்லை.

“உழக்கல்ல – உழுதவன்
கணக்குப் பார்த்தால்
கிழக்கே அவனை அடையட்டும் – வீண்
வழக்குகள் யாவும் முடியட்டும்!”
(மௌனம் நம் எதிரி, ப.
30)

என நம்பிக்கையுடன் முழங்குகின்றார் கவிஞர்.

பெண்ணியச் சிந்தனைகள்

தந்தை பெரியார், நீதியரசர் வேதநாயகர், தமிழ்த் தென்றல் திரு.வி.க., கவியரசர் பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முதலான கொள்கைச் சான்றோர்கள் ‘பெண்மை வாழ்க!’ என்றும் ‘பெண்மை வெல்க!’ என்றும் எவ்வளவோ உயர்த்திப் பிடித்தாலும் – உரத்து முழங்கினாலும் – நடைமுறையில் என்னவோ பெண்ணுக்கு எதிரான நிலைமைதான் இன்னமும் நீடிக்கிறது! இதனை ‘அவரும் அறிவார்’ என்னும் கவிதையில் வல்லம் தாஜுபால் அப்பட்டமான மொழியில் அம்பலப்படுத்தியுள்ளார்:

“என் கணவருக்கும் / சமைக்கத் தெரியும்
அவர் மிளகாய் அரைக்க / ஐந்தரை அடி அம்மியாய் / என் தந்தை
மாமியார் மருமகள் சண்டையில் / சமரசம் செய்ய அஞ்சுவார்;
செய்யத் தெரிந்தது சிருங்கார ரசம்.
பேச்சுக்குப் பேச்சு / ‘டீ’ போடுவார்.
மாமியார் நாத்தனார் மத்தியில் / ‘குழம்பு’வார்.
கோபத்தில் கொதித்துப் / ‘பொங்கு’வார்.
அப்பளமாய் உள்ளத்தைச் / ‘சுடுவார்’;
வார்த்தைகளால் ‘வறுப்பார்’.
என்றேனும் எரிப்பார் / என்னையும் விறகாக.”
(மௌனம் நம் எதிரி, ப.
55)

இன்றைய சூழலில் பெரும்பாலான பெண்களுக்குப் புகுந்த வீடு ‘புதிர் வீடு’ ஆகக் காட்சி அளிக்கின்றதாம்! புகுந்த வீட்டிற்குச் செல்லும் புதுமணப் பெண் முன்னே அணிவகுத்து நிற்கும் ஐய வினாக்கள் பின்வருபவையாம்:

“புகுந்த வீடு / பிருந்தாவனமா? சஹாராவா?
பற்றிய கரம் / பாதுகாப்பு அரணா? படுகுழியா?
மாலையிட்ட தோள் / அடைக்கலமா? போர்க்களமா?
கேட்டதைத் தந்து ஏற்ற தாலி / சுகமா? சுமையா”

இந்த வினாக்களுக்கான ஒட்டுமொத்த விடையாகப் பெண்ணினத்தின் சார்பில் கவிஞர் கூறுவது இதுதான்:

“வலக் காலை வைத்து நுழைகிறேன்
இடப்பக்க இதயமே எதையும் தாங்குக.”
(மௌனம் நம் எதிரி, ப.59)

மனித குலத்தை நோக்கிக் கவிஞர் தொடுக்கும் அடிப்படையான கேள்வி இதுதான்: ‘நாட்டின் ஜனநாயகம், வீட்டில் இருக்கிறதா?’ தொடர்ந்து கவிஞர் விடுக்கும் வினாக் கணைகள் எவரும் எளிதில் மறுக்க இயலாதவை:

1. ‘ சம்பாதிக்கிற திமிராடீ?’ / சொல்லைக் கடக்காத
பணிசெல் மகளிர் உண்டா?


2. ‘ நான் ஆம்பளைடீ’ / திமிர் ஒலிக்காதா இல்லம் உண்டா?

3. ‘ ஆணின் தொணதொணப்பும் / பெண்ணின் முணுமுணுப்பும்
இல்லாத வீடு எது?”
(மெளனம் நம் எதிரி, ப.53)

வெளிப்படையாகக் கூறுவது என்றால், இன்று கூண்டுகள் கொஞ்சம் அகலமாகியுள்ளன; அவ்வளவு தான். ஆனால் அவை முழுவதுமாகத் திறக்கப்-படவில்லை. கோடுகள் சற்றுத் தள்ளப்பட்டுள்ளன; அவ்வளவு தான். ஆனால் அவை முற்றிலுமாக அழிக்கப்படவில்லை. கடிவாளங்களில் கவர்ச்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது உண்மைதான்; ஆனால் அவை கழற்றப்பட வில்லை. பெண்ணின் வாழ்வு என்பது என்றுமே துன்பங்களின் தொடர்கதை தான்!

“வீட்டுக்குள்ளே இருந்தோம் / செக்கு மாடாக
வேலைக்குச் செல்கிறோம் / வண்டி மாடாக
செக்கிலோ வண்டியிலோ / பூட்டப்படுவதும்
சாட்டை அடிகளும் தொடர்கின்றன…”
(மௌனம் நம் எதிரி, ப.
59)

எனப் பெண்ணின் கூற்றாகக் கவிஞர் பாடி இருப்பது உண்மையே.

கவிதை உள்ளத்தின் ஆற்றாமை

வல்லம் தாஜுபால் பேச்சு வழக்கில் எழுதிய ஒரு கவிதையில் ஆற்றாமை உணர்வை அழகுறப் பதிவு செய்துள்ளார்.

“அலமாரியில் இலக்கியங்கள் / அலுவல் மேஜையில் கோப்புகள்
அவை தொட முடியாமல் / இவை விட முடியாமல்
பட்டாம்பூச்சி மேலே இழுக்க / பட்ட கடன்கள் கீழே இழுக்க
என்னத்த நான் வாழ்ந்து கிழிக்க?”
(மௌனம் நம் எதிரி, ப.
60)

‘இழுபடல்’ என்னும் தலைப்பில் அமைந்த இக் கவிதையின் ஈற்றடியில் வெளிப்படும் அவலம் ஆழமானது; ‘எல்லாந்தான் படிச்சீங்க, என்ன பண்ணிக் கிழிச்சீங்க?’ என்னும் பட்டுக்கோட்டையாரின் வரிகள் ஈண்டு நினைவு கூரத்தக்கன. புதுமைப்பித்தனின் ‘ஒருநாள் கழிந்தது’ என்னும் முத்திரைச் சிறுகதையின் வாமன வடிவமே இக் கவிதை எனலாம்.

இளைய தலைமுறைக்குக் கவிஞரின் செய்தி

“வீசும் வரை காற்று / ஓடும் வரை ஆறு
கொட்டும் வரை அருவி / கொதிக்கும் வரை நெருப்பு
இயங்கும் வரை இளமை”
(மௌனம் நம் எதிரி, ப.
81)

என இளமை உணர்வுக்குக் கட்டியம் கூறும் வல்லம் தாஜுபால்,

“புல்லாய் இருந்தால் / சிதைப்பார்கள்!
பொம்மை என்றாலோ / உதைப்பார்கள்!
புழுவாய்க் கிடந்தால் / மிதிப்பார்கள்!
புயலாய்க் கிளம்பு / துதிப்பார்கள்!”
(மன வாசனை, ப.
31)

என இளைய தலைமுறையினரை நோக்கி எழுச்சிப் பண் இசைக்கின்றார்.

“நம்பிக்கைத் தேருக்கு வடம் பிடிப்போம்!
நாளைய வரலாற்றில் இடம் பிடிப்போம்”
(மன வாசனை, ப.
12)

என்பதே கவிஞர் இளையோர்க்கு விடுக்கும் செய்தி ஆகும்.

நிறைவாக, வல்லம் தாஜுபாலின் படைப்பாளுமை குறித்து இப்படி மதிப்பிடுவது சரியாக இருக்கும்: வல்லம் தாஜுபால் ஒரு மக்கள் கவிஞர்; ஒடுக்கப்பட்டோருக்காக உரத்த குரலில் வெடிப்புறப் பேசும் முற்போக்குக் கவிஞர். அவரது கவிதைகள் கடைக்கோடி மக்களையும் சென்று சேருமானால் எதிர்காலத்தில் புதிய விடியல் பிறப்பது என்பது உறுதி.

 

 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
- 625 021.


 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்