குறுந்தொகையில் நிலா

முனைவர் இரா.மோகன்

‘காதலைப் பாடாத கவிஞன் இல்லை; காதலைப் பாடாதான் கவிஞன் இல்லை’ என்பார்கள். அதுபோல, ‘நிலவைப் பாடாத கவிஞன் இல்லை; நிலவைப் பாடாதான் கவிஞன் இல்லை’ எனலாம். வாழையடி வாழை எனக் காலந்தொறும் தோன்றிய கவிஞர்கள் யாவரும் குளிர்நிலவு தரும் கொள்ளை இன்பத்தை அது உள்ளத்தே ஏற்படுத்தும் உணர்வு அலைகளையும் பாடியும் வந்துள்ளனர். இவ் வகையில் குறுந்தொகையில் நிலவு குறித்து இடம்பெற்றுள்ள சில சொல்லோவியங்களை ஈண்டுக் காணலாம்.

1. கன்னிப் பெண்கள் தொழும் மூன்றாம் பிறை

குறுந்தொகையில் நெடும்பல்லியத்தனார், நெடும் பல்லியத்தை என்ற பெயர்களில் இரு புலவர்கள் காணப்படு கின்றனர். பல்லியம் என்பது பல வாத்தியங்களைக் குறிக்கும். நெடிய பல வாத்தியங்களை உடைமையின் ‘நெடும்பல்லியத்தனார்’ என்ற பெயர் அவருக்கு வந்தது எனக் கருத இடம் உள்ளது. இப்பெயருக்கு ஏற்ப இவர் புறநானூற்றில் பாடிய ஒரு பாடலில் ‘நல்யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கிச் செல்லா மோதில் சில்வளை விறலி’
(64) எனக் கூறியிருப்பது நோக்கத்தக்கது. நெடும் பல்லியத்தை ஒரு பெண்பாற் புலவர். ‘இவர் நெடும் பல்லியத்தனாரின் உடன்பிறந்தாரோ என்று ஊகிக்கப் படுகிறார்’ (பாடினோர் வரலாறு, குறுந்தொகை மூலமும் உரையும், ஜீ.நீஜ்றீu) என்பது ‘பதிப்பு வேந்தர்’ உ.வே.சா.வின் கருத்து.

தலைவனும் தலைவியும் மணம் புரிந்து கொண்டு இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்ற தோழி தலைவியோடு அளவளாவுதலில் தலைவனுக்கு இருக்கும் விரைவைக் கண்டு, “கற்புக் காலத்தில் இப்படி தலைவியோடு இணைந்தும் பிணைந்தும் இருக்கின்ற நீர், களவுக் காலத்தில் தலைவியைச் சந்தித்து அளவளாவ வேண்டும் என்ற நும் விரைவை வெளிப்படுத்த இயலாமல் மிக வருந்தி இருத்தல் வேண்டும்; பொறுமை காத்திருக்க வேண்டும். நீர் தலைவிபால் கொண்ட அன்பின் திறத்தினை யான் முன்பு அறிந்திலேன்; இப்போது அதனை அறிந்து வருந்துகிறேன்” என்று கூறி இரங்குகிறாள்:

“தொழுதுகாண் பிறையின் தோன்றி யா(ம்)நுமக்கு
அரியம் ஆகிய காலை
பெரிய நோன்றனிர் நோகோ யானே”
(178)

பிறை-மூன்றாம் நாள் சந்திரன். அது திங்களுக்கு ஒரு முறையே தோன்றுவது. ஆதலின் தலைவி, தலைவனுக்குக் களவுக் காலத்தில் காண்பதற்கு அரியளாய் இருப்பதற்கு, மூன்றாம் பிறை கண்டு தொழுவதற்கு அரிதாய் இருத்தலை உவமை கூறியுள்ளார் நெடும்பல்லியத்தை.

களவுக் காலத்தில் தலைவன் தலைவியைக் காண்பது என்பது மிகவும் அரிதாக இருந்தது. மகளிர் தொழுது காணும் பிறை வானில் காண்பதற்கு அரிதாகத் தோன்றி சற்று நேரத்தில் மறைவது போல, தலைவியும் எப்போதோ ஒருமுறை எதிர்ப்பட்டு விரைந்து நீங்குபவளாக இருந்தாள்.

‘தொழுதுகாண் பிறை’ என்னும் தொடர் சங்க காலத்தில் மகளிர் திங்களுக்கு ஒருமுறை அரிதாகத் தோன்றும் மூன்றாம் பிறையை வணங்கும் வழக்கத்தினை மேற்கொண்டிருந்தமையைப் புலப்படுத்துகின்றது.

கடம்பனூர்ச் சாண்டிலியன் என்னும் புலவர் பாடிய பிறிதொரு குறுந்தொகைப் பாடலில் வரும் தலைவி, தலைவன் தன்னைப் பிரிந்திருக்கும் காலத்திலும் தனக்குத் துன்பத்தைத் தரும் வகையில், ‘வளையை உடைத்தது போல, கன்னி மகளிர் பலரும் தொழத் தோன்றியது பிறை’ என நினைந்து வருந்துகின்றான்.

“வளைஉடைத் தனையது ஆகிப் பலர்தொழச்
செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே”
(307)

“ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழூஉம்
புல்லென் மாலை”


என அகநானூற்றுப் பாடல் ஒன்றும்
(239) இவ் வழக்கத்தினைச் சுட்டுவது குறிப்பிடத்தக்கது.

2. மகளிர் நெற்றிக்கு உவமையாகும் எட்டாள் நாள் திங்கள்

குறுந்தொகை
129-ஆம் பாடல் கோப்பெருஞ் சோழன் இயற்றியது; ‘தலைமகன் பாங்கற்கு உரைத்தது’ என்னும் துறையில் அமைந்தது. தலைவியோடு அளவளாவி மீண்ட தலைவனது வாட்டத்தைக் கண்ட பாங்கன், “உனக்கு இவ்வாட்டம் உண்டானதற்குக் காரணம் யாது?” என வினவுகிறான். “ஒரு மங்கையின் சிறிய நெற்றி என் உள்ளத்தைப் பிணித்தது” என்று அவனுக்கு மறுமொழி கூறுகிறான் தலைவன். அவனது கூற்றினைத் தன்னகத்தே கொண்ட குறுந்தொகைப் பாடல் வருமாறு:

“மாக்கடல் நடுவண் எண்ணாள் பக்கத்துப்
பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்
கதுப்புஅயல் விளங்கும் சிறுநுதல்...
... ... பிணித்தற்றால் எம்மே”


எண்ணாள் பக்கம் - எட்டாவது திதி; அட்டமி. பசுமை - இளமை. மகளிர் கூந்தலுக்குக் கடலும் கடல் நடுவே எழுந்த நெற்றிக்கு எண்ணாள் பக்கத்துத் திங்களும் உவமைகள். கருநிறக் கூந்தலை அடுத்து விளங்கும் சிறுநெற்றி, கரிய கடலில் தோன்றும் எட்டாம் பிறைத் திங்களைப் போல உள்ளது.

‘கதுப்பு அயல் விளங்கும் சிறுநுதல்’ என்றது அளகம் ஆகிய முன்னுச்சி மயிருக்கு அருகில் விளங்கும் நெற்றி என்றபடி. ‘குழவிப் பருவத்து ஒரு கலையுடைத்தாய்ப் பின்பு இளமைப் பருவத்திற் நின்ற பிறை, மகளிர் நெற்றிக்கு உவமை’ என்னும் நச்சினார்க்கினியரின் உரைக்குறிப்பு ஈண்டு நினைவு கூரத்தக்கதாகும்.

3. வெண்ணிலவைப் பாடியதால் சிறப்புப் பெயர் பெற்ற புலவர்

குறுந்தொகையில் சிறப்புப் பெயர்களால் அறியப் பெறும் புலவர்களாக
18 பேரைப் பட்டியல் இட்டுள்ளார் ‘பதிப்பு வேந்தர்’ உ.வே.சா. (நூலாராய்ச்சி, குறுந்தொகை மூலமும் உரையும், pp.cii.civ). அவர்களுள் நிலவைப் பாடியதால் பெயர் பெற்ற ஒருவர் நெடுவெண்ணிலவினார் ஆவார். களவுக் காலத்தில் இரவுக் குறியில் தலைவியைச் சந்திக்க வரும் தலைவனுக்கு இடையூறாக இருக்கும் நிலவை ‘நெடுவெண்ணிலவே’ என்று விளித்து வெறுப்புக் குறிப்புப் புலப்படப் பேசுகிறாள் தோழி. அவளது கூற்றாக அமைந்த குறுந்தொகைப் பாடல் வருமாறு:

“ ... ... ... காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை நெடுவெண் ணிலவே”
(47)

“நெடுவெண்ணிலவு - நெடுநேரம் எறிக்கும் வெண்ணிலவு; இயல்பாகத் தனக்கமைந்த பொழுதின் மாத்திரம் எறிக்கும் நிலவாயினும், விரைவில் மறைய வேண்டுமென்னும் விருப்பினளாதலின், அவளுக்கு அருமை உடையதாகத் தோன்றியது; தம்மால் விரும்பப்படாத நிலவை, ‘நெடு வெண்ணிலவு’ என்று கூறுவதாக அமைந்த சிறப்பால் இச்செய்யுளை இயற்றிய நல்லிசைப் புலவர் ‘நெடு வெண்ணிலவினார்’ என்னும் பெயர் பெற்றார்” (குறுந்தொகை மூலமும் உரையும், ப.
105) என்பர் உ.வே.சா.

தலைவன் இரவில் தலைவியிடம் வந்து பழகும் காலத்தில் அவனை விரைந்து மணம் செய்து கொள்ளும் படி தூண்ட எண்ணிய தோழி, இங்ஙனம் முன்னிலைப் புறமொழியாக நிலவிற்கு உரைப்பது போலப் பேசுகிறாள்; ‘நிலவே, நீ இரவில் வந்தொழுகும் தலைவரது களவொழுக்கத்திற்கு நன்மை செய்வாய் அல்லை’ என்று கூறி இரவுக்குறியை மறுக்கிறாள். கூறப்படும் செய்தியைக் கேட்டு அறிவதற்கு உரியவர் முன்னே இருக்கவும் அவரை விளித்துக் கூறாமல், வேறு ஒருவரையேனும் பிறிதொரு பொருளையேனும் விளித்துக் கூறுவது முன்னிலைப் புறமொழி ஆகும்.

களவுக் காலத்தில் நெடிய வெண்ணிலாவில் தலைவியின் நீண்ட தோள்களைத் தழுவிடும் தலைவன் பற்றிய குறிப்பு பிறிதொரு குறுந்தொகைப் பாடலிலும் (193) காணப்படுகின்றது. ‘நெடுவெண்ணிலவு’ என்ற தொடராட்சி இப்பாடலிலும் இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது.

‘வளர்பிறை போல வழிவழிப் பெருகி’ எனவரும் குறுந்தொகைப் பாடல் ஒன்றின்
(289) முதல் அடியும் இங்கே மனங்கொளத் தக்கதாகும்.

இங்ஙனம் செவ்வானத்தில் அரிதாக முகம் காட்டும்- உடைந்த வளையைப் போலக் காட்சி அளிக்கும் - மூன்றாம் பிறையும், மகளிரின் நெற்றியைப் போலத் தோன்றுகின்ற எட்டாம் நாள் திங்களும், குளிர் வடிகின்ற வட்ட நிலாவும் குறுந்தொகைப் புலவர்களால் நெஞ்சை அள்ளும் அழகிய சொல்லோவியங்களாக வடிக்கப் பெற்றுள்ளன.

 

முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
- 625 021.


 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்