இருபத்தியோராம் நூற்றாண்டுக் தமிழ்க் காப்பிய உலகிற்குப் புதுவரவு

பேராசிரியர் இரா.மோகன்


“அவ்வையார் – சிறுவயதில் இருந்தே என் மனத்தில் ஆழமாகப் பதிந்து விட்ட பெண்மையின் பிம்பம்” (‘என் மன வெளியில்…’, அவ்வையார், ப.81) என மொழியும் நிர்மலா, ‘அவ்வை நிர்மலா’வாகப் பரிணாம வளர்ச்சியைப் பெற்றது ஒரு சுவையான வரலாறு. மாநகராட்சிப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த போது முதன்முதலாக மாறுவேடப் போட்டியில் கலந்து கொண்டு அவ்வையார் வேடம் தரித்தமை, பின்னாளில் தமிழ் முதுகலை படித்து முடித்து முனைவர் பட்டத்தோடு வெளிவந்த போது காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் இருபத்தைந்து ஆண்டுகள் (1991-2015) பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றமை, திருவையாறு தமிழய்யா அவ்வைக் தோட்டம் ‘அவ்வை விருது’ நல்கிச் சிறப்பித்தமை ஆகிய எல்லாமாகச் சேர்ந்து பெற்றோர் இட்ட பெயரோடு ‘அவ்வை’ என்ற அருந்தமிழ்ப் பெயரையும் இணைத்துக் கொண்டு ‘அவ்வை நிர்மலா’ என்ற பெயரில் ஒரு படைப்பாளியாகப் பிறப்பெடுக்கும் நல்ல தருணம் வாய்த்தது. மேலும், புதுவை அரசின் காரைக்கால் கலை பண்பாட்டுத் துறை ஆண்டுதோறும் நிகழ்த்தும் அவ்வையார் பயிலரங்கில் பலமுறை பங்குபெற்றுத் தலைமை ஏற்றமை அவ்வையாரைக் குறித்துத் தொடர்ந்து சிந்திக்கும் வாய்ப்பினை நிர்மலாவுக்குத் தந்தது. இவற்றின் விளைவாக, அவ்வையார் குறித்த கவிதை நாடகம் ஒன்றைப் படைக்க வேண்டும் என்ற வேணவா நிர்மலாவின் உள்ளத்தில் அரும்பியது. எழுதத் தொடங்கிப் பல்வேறு காரணங்களால் பல்லாண்டுகளாகத் தொடரப்படாமல் கிடப்பில் போடப் பெற்றிருந்த இப் படைப்பாக்க முயற்சி, 2016-ஆம் ஆண்டில் ‘அவ்வையார்’ என்ற தலைப்பில் நல்லதொரு வரலாற்று நாடகக் காப்பியமாக உருப்பெற்றது. முனைவர் நிர்மலா சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, தொகுப்பு என்றாற் போல் பல்வெறு துறைகளைச் சார்ந்த இருபதுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருந்தாலும், அவரது ஆகச் சிறந்த படைப்பாக அறிஞர் பெருமக்களால் ஒருமனதாக இவ் வரலாற்று நாடகக் காப்பியமே மதிப்பிடப் பெறுகின்றது. இனி, இக் காப்பியத்தின் அமைப்பும் அழகும் குறித்து ஈண்டு சுருங்கக் காண்போம்.

நாடகத்தின் அமைப்பும் அழகும்

ஐந்து அங்கங்கள் – ஒவ்வொன்றிலும் எட்டுக் காட்சிகள் என மொத்தம் 40 காட்சிகள் – 12,345 அடிகள் – அறுபத்தொரு நாடகக் கதைமாந்தர்கள் – என விரிந்த களமும் தளமுமாய் ‘அவ்வையார்’ காப்பியம் படைக்கப் பெற்றிருப்பது சிறப்பு. மூத்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் தொடங்கி, முனைவர் மு.கலைவேந்தன் வரையிலான அறிஞர் பெருமக்கள் பதின்மரது அணிந்துரைகள் எழுபது பக்கங்களின் அளவில் அமைந்து வாசகர்களைக் காப்பியத்தை நோக்கி ஆற்றுப்படுத்துகின்றன; காப்பியத்திற்கு வண்ணமும் வனப்பும் சேர்க்கின்றன. “மிகமிகப் பெரிய ஆளுமையோடு நிர்மலா அவர்கள் இக் கவிதை நாடகத்தை எழுதித் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கு உரிய இடத்தைப் பதிவு செய்து வைத்துள்ளார்… அரிய உழைப்பு, ஆழ்ந்த படிப்பு, ஆற்றல் மிக்க படைப்புத் திறன் – இவை இல்லாமல் இப் பெரிய நாடகப் பனுவலை இவர் இயற்றி இருக்க முடியாது” (‘திரைக்கு முன்…’, அவ்வையார், ப.6) என மூத்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் நிர்மலாவுக்குப் புகழாரம் சூட்டி இருப்பது குறிப்பிடத் தக்கது.

தகைசான்ற தமிழ்த்தாய் வாழ்த்து

‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்னும் பழமொழிக்கு ஏற்ப, அவ்வை நிர்மலா படைத்திருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தே, காப்பியத்தின் மேன்மைக்குக் கட்டியம் கூறி நிற்கக் காண்கிறோம். ‘சின்ன வடிவின் துளிப்பாக் கவிதை, தின்னக் கிடைத்த நொறுக்குத் தீனி’யாம்; ‘எண்ணப் பின்னலின் வசன கவிதையோ, எளிதில் சிதையும் சிலந்தியின் பாணி’யாம்; ‘எளிமை உருவில் எதார்த்த நடையில், எவரும் எழுதும் புதிய கவிதை, வலிமையான வடிவம் எனினும், வரப்படுத்திடவே இயலாது ஆகு’மாம்! எனவே, இம் மூன்று வடிவங்களையும் விடுத்து, காப்பியத்தைப் பாடுவதற்கு நிர்மலா மரபுக் கவிதை வடிவத்தினைத் தெரிவு செய்தாராம்.

“இலக்கண வரம்புடன் இயற்றுவ தாலே
ஈரா யிரமாம் ஆண்டு களாக
நிலையாய் உளத்தில் ஊன்றுத லாலே
நின்றேன் மரபுக் கவிதையின் பக்கம்!”
(ப.92)

என்னும் கவிஞரின் ஒப்புதல் வாக்குமூலம் இவ்வகையில் மனங்கொளத் தக்கதாகும்.

“ ‘மாத்திரை’ கூட அளந்தே உண்பாய்
வாத்தியம் கூடின் ‘அளபெடை’ மடுப்பாய்
‘அசை’ந்து ‘அசை’ந்து நடந்து வருகையில்
அத்தனை ‘தளை’களும் இசைவாய் ஆகும்
‘அடி’தனை வைப்பினும் ‘சீரு’டன் வைப்பதால்
அழகிய ‘தொடை’யில் அகிலமும் மயங்கும்
‘யாப்பே’ உன்னைக் காக்கும் வேலி
பூக்கும் அதிலே ‘அணி’நலம் கோலி!”
(ப.93)

என யாப்பிலக்கணக் கலைச்சொற்களைக் கொண்டே கவிஞர் நிர்மலா தன்னேரில்லாத் தனசால் தமிழைப் போற்றிப் பாடி இருக்கும் திறம் நனிநன்று.

நிர்மலாவின் கண்ணோட்டத்தில் அவ்வையார்

“‘தமிழ்நாட்டின் மற்றச் செல்வங்களை யெல்லாம் இழந்து விடப் பிரியமா? ஔவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமா?’ என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின், ‘மற்றச் செல்வங்களை யெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மீட்டும் சமைத்துக் கொள்ள வல்லது. ஒளவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதப்பட மாட்டோம். அது மீட்டும் சமைத்துக் கொள்ள முடியாத தனிப்பெருஞ் செல்வம்’ என்று நாம் மறுமொழி உரைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்” (பாரதியார் கட்டுரைகள், பக்.160-161) என்னும் கவியரசர் பாரதியாரின் கூற்று, தமிழ் கூறு நல்லுலகில் – தமிழ் மக்களின் உள்ளங்களில் – ஔவையார் பெற்றிருந்த தனிப்பெருஞ் செல்வாக்கினைப் பறைசாற்றும். தமிழ் இலக்கிய வரலாறு கி.பி.2-ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.18-ஆம் நூற்றாண்டு வரையிலான கால கட்டங்களில் அவ்வையார் என்ற பெயரில் ஆறு பெண்பாற் புலவர்கள் இருந்தமையைப் பதிவு செய்துள்ளது. அவ்வையாரின் வாழ்வும் வாக்கும் குறித்து இதுவரை ஏறத்தாழ நாற்பது நூல்கள் வெளிவந்திருப்பதும் ஈண்டு கருத்தில் கொள்ளத் தக்கதாகும். கவிஞர் ஈரோடு தமிழன்பன் குறிப்பிடுவது போல், “எல்லாவற்றையும் தொகுத்துப் பகுத்துப் பார்த்தால் அவ்வையார் என்பது தமிழர்களைப் பொறுத்த வரை மானுடத் தன்மையும் தெய்வத் தன்மையும் இணைந்த ஒரு தொன்மப் பாத்திரம். கவிஞர் நிர்மலா அவ்வையார் பலரையும் திறம்பட ஒருங்கிணைத்து ஒரு மானுட அக்கறையுள்ள, மதிநலம் மிக்க, கவிவளம் சிறந்த, பகுத்தறிவுப் பார்வை படைத்த, பெண்ணியம் பேசும் பெருமாட்டியை உருவாக்கியுள்ளார்” (‘திரைக்கு முன்…’, அவ்வையார், ப.10). இக் கருத்திற்கு அரணாகக் காப்பியத்தில் காணப்பெறும் அடிப்படையான அகச் சான்றுகள் சிலவற்றை இங்கே சுட்டிக்காட்டலாம்.

“விளைச்சல் பெருக்கு, நீர்வளம் நாட்டு
மண்வளம் காக்கும் வழிகளைத் தீட்டு
கலைகளை வளர்த்து இன்பம் ஈட்டு
கல்வியை வளர்த்து அறிவை ஊட்டு
நாடுகள் இடையில் பகைமை ஓட்டு
ஆள்பவர்க்கு இடையில் அன்பைக் கூட்டு!”
(ப.222)

என அவ்வையார், நாட்டை உயர்த்துவதற்கான வழிவகைகளாக மலையமான் திருமுடிக்காரிக்குக் கூறும் அறிவுரை, அவரை மதிநலம் மிக்க ஓர் அறிஞராக நமக்கு அடையாளம் காட்டுகின்றது.

நாடறிந்த ஒரு பழந் தமிழ்ப் புலமையாட்டியைப் பற்றிய காப்பியமே ஆயினும், இடையிடையே சம காலக் கண் கொண்டு நாட்டு நடப்பினைச் சுட்டிக் காட்டவும் – சில சமயங்களில் கடுமையாகச் சாடவும் – நிர்மலாவின் எழுதுகோல் தவறவில்லை. ஓர் எடுத்துக்காட்டு:

“இப்படித் தானே இலவசம் அளித்து
தப்பிதம் செய்வீர்; தாழ்வு உமக்கே!...
உருப்படி யாக உழைக்கும் வழியைத்
தரும்இல வசத்தால் தடுத்துக் குலைத்தீர்!...
மீனைப் பிடித்துத் தருவதைக் காட்டிலும்
மீனைப் பிடிக்கத் தூண்டில் தருவதே
நாளை அவர்தம் வாழ்வை நிமிர்த்தும்
தோளில் குடும்ப பாரம் அமர்த்தும்!”
(ப.408)

எனத் தொண்டைமான் இளந்திரையனுக்கு அவ்வையார் கூறும் அறிவுரை இவ்வகையில் கருத்தில் கொள்ளத்தக்கதாகும். இங்கே மானுட அக்கறையுள்ள ஒரு கவிஞராக அவ்வையார் வெளிப்பட்டிருக்கக் காணலாம்.

“விரும்பிய வாழ்வை யான்தேர்ந் தெடுக்கும்
உரிமை பெண் எனக்கு இலையோ சொல்வீர்!”
(ப.128)

எனத் திமிலனிடம் கேள்விக் கணை தொடுக்கும் அவ்வையார்,

“குழந்தை இல்லாக் குறையைச் சொல்லி
மற்றொரு பெண்ணை மணந்து கொள்ளும்
ஆடவன், குழந்தை பெறஇய லாது எனில்
மனைவியும் அப்படிச் செய்திட விடுவனோ?”
(ப.361)

என வினவுவது பெண்ணியச் சிந்தனையின் தெறிப்பான வெளிப்பாடு ஆகும். பெண்ணினத்தை ‘மெல்லியல்’ என்று சொல்லிச் சொல்லிப் ‘புல்லியள்’ ஆகக் கீழிடும் கொடுமைக்கு எதிராக இக் காப்பியத்தில் பல இடங்களில் அழுத்தமாகக் குரல் கொடுத்துள்ளார் கவிஞர் நிர்மலா. இங்ஙனம் பெண்ணியம் பேசும் பெருமாட்டியாக ஔவையார் முகம் காட்டும் இடங்கள் காப்பியத்தில் நிரம்ப உள்ளன.

‘பாவம் புண்ணியம் மூடர் நினைப்பாம்’ (ப.241) என்றும், ‘பாவம் புண்ணியம் என்பன வெல்லாம், பழங்கதை யாளர் கட்டிய புரட்டு!’ (ப.478) என்றும் முழக்கம் இடும் கவிஞர் நிர்மலா,

“நல்லதும் கெட்டதும் நாம்செய் வினையால்
தொடருவ தன்றித் தொல்வினை யன்று!
புண்ணியம் செய்தவன் ஆள்கிறான் என்றும்
பாவம் செய்தவன் ஏழையன் என்றும்
நாவும் கூறினால் நறுக்கிட வேண்டும்!”
(பக்.241-242)

என வெடிப்புற மொழிவது பகுத்தறிவுச் சிந்தனையின் மணி மகுடம் ஆகும். ‘வருந்திட வேண்டாம் வருவது வரட்டும், ஒரு கதவு அடைத்தால் அடுத்தது திறக்கும், ஓடும் வாழ்வில் அனைத்தும் இயல்பாம்’ என்பதே கவிஞர் நிர்மலா வலியுறுத்தும் விழுமிய வாழ்க்கை நெறி ஆகும்.

“வசதிகள் நிறைதல் வாழ்க்கை அல்ல,
மனநிறைவு என்பதே மகிழுறு வாழ்க்கை!
படுத்ததும் உடனே தூங்கிடு வோரே
செல்வம் படைத்தோர் என்று கூறலாம்!
எத்தனைத் துன்பம் வாழ்வில் இருப்பினும்
உதடுகள் மட்டும் புன்னகை பூக்க!”
(பக்.479-480)

எனப் பொகுட்டெழினியிடம் மகிழ்ச்சியான வாழ்க்கையின் அடிப்படையைத் தெளிவுபடுத்தும் ஒளவையார்,

“அடுத்த வேளை உணவும் இன்றி
உடுத்த மாற்று உடையும் இன்றித்
துடிக்கும் ஏழையும் கல்வியைக் கற்றால்
படிப்படி யாக அறிவில் உயர்வான்!”
(ப.480)

என அறுதியிட்டு உரைப்பது இளைய தலைமுறையினர் மனங்கொள வேண்டிய ஓர் இன்றியமையாத ஆளுமை வளர்ச்சிச் சிந்தனை ஆகும்.

‘பேச்சில் உள்ள உரைநடைத் தன்மையில், வேண்டாச் சொற்களை வெட்டிவிட்டால் கவிதை தானாய் வந்திடும்’ எனக் குறிப்பிடும் நிர்மலா, இளங்கவிஞர்களுக்கு உணர்த்தும் படைப்பாக்க நெறி இதுதான்:

“பெயர்ச்சொல் வினைச்சொல் முதன்மைப் படுத்து!
இணைப்புச் சொற்களுக்கு இடமும் தராதே!...
தேவை யில்லாச் சொற்களைத் தூக்கு!
இடைச்சொல் தேவை இன்றேல் நீக்கு!
வேற்றுமை உருபு தேவையேல் ஊக்கு!
விகுதிகள் சுருக்கு, சாரியை போக்கு!
விகாரம் தேவைப் பட்டால் ஆக்கு!
கற்பனை யதிலே கடுகாய்த் தேக்கு!
கவிதை வந்திடும்!”
(ப.453)

உரையாடல் திறன்

ஒரு சிறந்த நாடகத்திற்கு உயிர்நாடி அனையது உரையாடல் திறன். காப்பியத்தில் இத் திறன் பளிச்சிடும் ஓர் இடம்: அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை அந்தப்புரம். அதியனின் மனைவி வண்டார் குழலி ஒரு மகனைப் பெற்றெடுத்த தருணம். அதியன் தன் மகனைக் கண்டு மகிழ்கிறான். வண்டார் குழலி, ‘நமது மகனைக் காணீர்’ என்று இருவரையும் ஒருமுகப்படுத்திப் பேசிட, அப்போது அதியன் சொல்கிறான்:

என்றன் தந்தையின் எழிலார் மூக்கு
உதடுகள் நோக்கின் அன்னையை நிகர்க்கும்
கைகள் இரண்டும்… என்னைப் போன்று…”

இந்நிலையில் குறுக்கிட்டு வண்டார் குழலி பேசுகிறாள்:

“பிறந்தது மட்டும் என்றன் வயிற்றில்
உறுப்புகள் அனைத்தும் மற்றவர் போலே!”

அதற்கு அதியன்,

“அடடா, குழலி! வருந்தினை ஏனோ?
இதோபார் மகனும் கண்கள் திறக்கிறான்
உன்றன் விழியே அவனுடை விழிகள்
குறுகுறு வென்று பார்க்கிறான்!...”

அதியன் முடிக்காத நான்காவது சீரைக் குழலி திறம்படக் கைப்பற்றி,

“ … … … உக்கும்!
போதும் உங்கள் ஒப்புமை ஆய்வு!”
(ப.274)

என முடித்து வைக்கிறாள். இங்கே கவிஞர் நிர்மலா கையாண்டிருக்கும் ‘உக்கும்!’ என்ற அழகிய சொல்லாட்சி பெண்ணினத்திற்கே உரியதாகும். காப்பியத்தின் பிறிதோர் இடத்திலும் ‘அப்பா! என்னே சமத்து!’ என அதியன் கூற, ‘உக்கும்!’ (ப.188) எனக் குழலி சிணுங்குவதாகப் படைத்துக் காட்டியுள்ளார் நிர்மலா,

பெண்ணின(ய)த்தின் ஒளிக்கீற்று

“மொத்தத்தில் பெண்ணியத்தின் ஒளிக்கீற்றாய்த் திகழும் அவ்வையை மக்கள் கவிஞராக, பெண்களின் வீறுணர்வாக, பகுத்தறிவுச் சிந்தனையாளராக முன்வைப்பதில் பெருமை அடைகிறேன்” (‘என் மன வெளியில்…’, அவ்வையார், ப.85) என்னும் கவிஞரின் பெருமித மொழி, பகுத்தறிவுக் கண் கொண்டு அவ்வையை அவர் தம் காப்பியத்தில் மீட்டுருவாக்கம் செய்திருக்கும் பான்மையைத் தெளிவுபடுத்தும்.

“பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்
பெரும்பீழை இருக்குதடி தங்கமே தங்கம்”

என்னும் கவியரசர் பாரதியாரின் பாடல் வரிகளை நினைவுபடுத்துவது போல்,

“ஆடவர் அடையும் துன்பம் தன்னிலும்
மகளிர்க்கு உள்ள நெருக்கடி கணக்கிடில்
கூந்தலின் மயிரைக் கணக்கிடல் மேலாம்!
பெண்ணாய் நானும் பிறந்தத னாலே
கண்ட துன்பம் கணக்கில் அடங்குமோ?”
(ப.550)

என அவ்வையின் கூற்றாகப் பெண்ணாய்ப் பிறந்தனால் அனுபவிக்க நேர்ந்த துன்பங்களைப் பதிவு செய்துள்ளார் கவிஞர் நிர்மலா.

“பெண்களுக் கெல்லாம் உரிமை தந்தால்
ஆண்களை விடவும் ஆற்றல் காட்டுவார்!”
(ப.253)

என உப்பையின் கூற்றாகக் கவிஞர் வெளிப்படுத்தி இருக்கும் பெண்ணியச் சிந்தனையும் இங்கே கருத்தில் கொள்ளத் தக்கதாகும்.

அவ்வையாரின் பாடல்கள் மறுஆக்கம் செய்யப் பெறல்

அவ்வையார் இயற்றியனவாகக் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு என்னும் எட்டுத்தொகை நூல்களில் 59 பாடல்கள் காணப்-படுகின்றன. இவற்றுள் 57 பாடல்களை (குறுந்தொகை 15; நற்றிணை 7; அகநானூறு 5; புறநானூறு 30) கவிஞர் அவ்வை நிர்மலா தம் காப்பியத்தில் ஆங்காங்கே மறுஆக்கம் செய்துள்ளார். இவை நிர்மலாவின் படைப்புத் திறத்திற்குக் கட்டியம் கூறி நிற்பதோடு, ஔவையாரின் சங்கக் கவிதைகளுடன் ஒப்புநோக்கி ஆராயத் தக்கனவாகவும் விளங்குகின்றன. பதச்சோறாக, ‘முட்டுவேன்கொல்’ எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடலை நிர்மலா எங்ஙனம் இன்றைய மரபுக் கவிதை வடிவில் படைத்துத் தந்துள்ளார் எனக் காணலாம்.

“முட்டு வேன்கொல்? தாக்கு வேன்கொல்?
ஓரேன் யானும்ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்?
அலமரல் அசைவளி அலைப்பஎன்
உயவுநோய் அறியாது தூஞ்சும் ஊர்க்கே.”
(28)

ஔவையாரின் இக் குறுந்தொகைப் பாடல் கவிஞர் நிர்மலாவின் கை வண்ணத்தில் பின்வரும் புதுக்கோலத்தினைப் பூண்டுள்ளது.

“மூட்டிய கோபம் முனிந்து வளர
முட்டி எழுப்பவோ உறங்கிடு வாரை?
திட்டி உலுக்கவோ தூங்கிடு வாரை?
நல்லதோர் காரணம் சொல்லக் கிடைத்தால்
திடுமெனக் கூக்குரல் இட்டுஇவ் ஊரை
நடுக்குற்று எழுந்திட நானும் செய்வேன்!
என்துயர் அறியா ஊரின் மாக்களை
எப்படி எழுப்ப?”
(ப.104)

‘காதலன் பிரிய ஆற்றா நெஞ்சுடன், தூக்கம் துறந்த காதலி ஒருத்தி’யின் அவலம் இங்கே உணர்ச்சிமிகு சொல்லோவியமாகக் கவிஞரால் வடிக்கப்-பெற்றுள்ளது.

பழுத்த தமிழ்ப் புலமை

நிர்மலா தமிழில் இளமுனைவர் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றவர்; தமிழில் மட்டுமன்றி, ஆங்கிலம், இந்தி, மொழியியல், மொழிபெயர்ப்பு ஆகிய-வற்றிலும் முதுகலைப் பட்டம் வாங்கியவர்; மொழியியலிலும் தெலுங்கிலும் நிறைசான்றிதழும், நாட்டுப்புறவியல், பிரஞ்சு, மராட்டி, கணினியியல் ஆகிய-வற்றில் சான்றிதழும் வைத்திருப்பவர். எனவே, பழுத்த தமிழ்ப் புலமையும் பன்மொழி அறிவும் வாய்க்கப் பெற்ற ஓர் ஆற்றல்சால் படைப்பாளியாக அவர் திகழ்வது இயல்பினும் இயல்பே. சங்கப் பனுவல்கள் தொடங்கி இன்றைய புதுக்கவிதை வரையிலான இலக்கியங்களின் தாக்கம் இக் காப்பியத்தில் அழகுறப் படிந்திருப்பதைக் காண முடிகின்றது. ஒரு சில சான்றுகள் கொண்டு இக் கருத்தினை நாம் மெய்ப்பிக்கலாம்.

சங்கச் சான்றோர் நக்கீரரின் புறநானூற்றுப் பாடலை அடியொற்றி,

“உண்பது நாழி உடுப்பவை இரண்டு
என்பது என் வாழ்க்கை; எனக்கு ஏன் பெருநிதி?”
(ப.414)

என வினவுகின்றார் அவ்வையார்.

“எண்ணிக் கருமம் துணிந்திட வேண்டும்!
அதனால் நீயும் நன்றாய் யோசி
உன்னுளப் பாங்கைத் தெள்ளிதின் வாசி
துணிந்தால் உனக்குத் துயரெலாம் தூசி!”
(ப.198)

எனப் புலவர் சேந்தனார், அவ்வைக்குக் கூறும் அறிவுரையில்,

“எண்ணித் துணிக கருமம்” (467)

என்னும் திருக்குறளின் தாக்கம் இடம்பெற்றிருக்கக் காணலாம்.
கம்பர் படைக்கும் இராமன்,

“இந்தஇப் பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன்!”

எனச் சீதைக்குத் தந்த செவ்வரத்தினை வழிமொழிவது போல்,

“மனைவியை அன்றி மற்றொரு பெண்ணைச்
சிந்தையில் நினையா ஆண்மையன்”
(ப.323)

எனக் கபிலரின் கூற்றில் பாரியின் பேராண்மைக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் நிர்மலா.

“வாடிய பயிரைக் கண்டதும் வாடும்

பீடுடை மாந்தரே புண்ணியர் ஆவர்!” (ப.242)

என்னும் அவ்வையாரின் கருத்து,

“வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன்”

என்ற வள்ளலார் வாக்கின் எதிரொலியே ஆகும்.

“நாங்கள்
சேற்றில் கால் வைத்தால் தான்
நீங்கள்
சோற்றில் கை வைக்க முடியும்”

என்ற புதுக்கவிதையே,

“சேற்றில் அவர் (உழவர்)கால் வைப்பதால் தானே
சோற்றில் நாம்கை வைத்து உண்கிறோம்?”
(ப.214)

என நிர்மலாவின் கை வண்ணத்தில் மறுகோலம் கொண்டுள்ளது.

காப்பியத்தில் ஒளிரும் நயங்கள்

“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவு படாமலும் நடத்துதல் வேண்டும்” எனப் ‘பாஞ்சாலி சபத’த்திற்கு எழுதிய முகவுரையில் குறிப்பிடுவார் கவியரசர் பாரதியார். அவர் வகுத்துத் தந்துள்ள இக் காப்பிய வரைவிலக்கணத்திற்குப் பொருந்தி வரும் பான்மையில் கவிஞர் நிர்மலா ‘அவ்வையார்’ என்னும் தம் வரலாற்று நாடகக் காப்பியத்தை யாத்துள்ளார். வழக்குச் சொற்கள் மற்றும் சொற்றொடர்கள், பழமொழிகள், இயைபுத் தொடைகள், விளங்கு உதாரணங்கள், ஒருமுறை படித்தாலே நெஞ்சில் கல்வெட்டுப் போல் பதிந்து விடும் பொன்மொழிகள் ஆகியவற்றைக் கையாண்டு அவர் தம் காப்பிய மாந்தர்களுக்கும் மொழிநடைக்கும் உயிர்க்களையும் தனித்தன்மையும் சேர்த்துள்ளார்.

மக்களின் பேச்சு வழக்கில் பயின்று வரும் சொற்களையும் தொடர்களையும் கையாண்டு காப்பியத்தில் நிர்மலா எழுதிச் சென்றிருக்கும் சில உயிரோட்டமான பகுதிகள்:

“ விறலி : வறுமை கழுத்தைப் பிடித்துத் தள்ள
பொறுமை இழந்து வேனிலில் வந்தோம்!”
(ப.514)

“அவ்வை : பெண்களுக் குள்ளே சண்டை வளர்த்து
நன்றாய் ஆடவர் குளிர்காய் வார்கள்!”
(ப.378)

“வண்டார் குழலி : நேரே செய்தியைச் சொல்லுவீர் அரசே!
ஊரெலாம் சுற்றி வளைப்பது ஏனோ?”
(ப.380)

“தொண்டைமான் : துண்டைக் காணோம் துணியைக் காணோம்
இளந்திரையன் என்றே அவர் இனி பறந்தே ஏகுவார்!”
(ப.394)

“அமைச்சர் : எந்தச் சூழலில் பாடிய போதும்
அவ்வையின் பாட்டு அதிரடி வேட்டு!”
(ப.514)

காப்பியத்தில் இயைபுத் தொடை சிறந்து விளங்கும் ஓர் இடம்:

“ திமிலன் : அல்லி! உன் மேல் எனக்கிலை வெறுப்பு
எனினும் மனத்தில் எழவிலை விருப்பு!
அல்லி : இதற்குக் காரணம் என்நிறம் கறுப்பு
அதுவும் வாய்த்திட நானோ பொறுப்பு?
திமிலன் : சேச்சே! இதற்குச் சொல்வேன் மறுப்பு
கறுப்பே தமிழர் இனத்தின் சிறப்பு!”
(ப.100)

வெறுப்பு-விறுப்பு; கறுப்பு-பொறுப்பு; மறுப்பு-சிறப்பு; இயைபுத் தொடைகளின் அழகிய அணிவகுப்பு!

எளிய, பொருத்தமான, வித்தியாசமான, விளங்குகின்ற உதாரணங்களை ஆளுவதில் கைதேர்ந்தவர் கவிஞர் நிர்மலா என்பதற்கு முத்தான மூன்று சான்றுகள்:

“உடலில் குத்திய பச்சை போன்று
உடலுடன் தோன்றிய மச்சம் போன்று
அழியா நினைவுகள் அகமனத் துள்ளே”
(ப.125)

“படைக்கலம் எல்லாம் பார்த்தேன்; வியந்தேன்!
புதுப்பணக் காரரின் புதுப்பொலி வோடு
விதுப்புறப் பீலியைச் சூட்டி மகிழ்ந்தனை!”
(ப.391)

“மூக்குத்தி(ப்) போல் பொடிப்பொடிப் பூக்களை…” (ப.446)

பொன்மொழி வடிவில் அமைந்து பயில்வோர் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் வாசகங்கள் சில:

“ஆண்மையில் வெளிப்படும் தாய்மையும் சிலிர்ப்பே!” (ப.208)

“கல்வி ஒன்றே கண்களைத் திறக்கும்!” (ப.210)

“எளிமையே உலகை வெல்லும் ஆற்றலாம்!” (ப.273)

“மக்கள் பிறப்பில் சிரிப்பே சிறப்பு!” (ப.292)

“இறப்பும் மூப்பும் இல்லா உலகம்
சொர்க்கம் அல்ல; நரகமே ஆகும்!”
(ப.545)

தமிழக மக்களின் நாவில் தொன்றுதொட்டு வழங்கி வரும் நூற்றுக்-கணக்கான பொருள் பொதிந்த பழமொழிகளை நிர்மலா தம் காப்பியத்தில் ஆங்காங்கே கையாண்டுள்ளார். இவ் வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க சில பழமொழிகள்:

“உறுவை : நீயும் அண்ணனும் இன்புற் றிருக்கையில்
இடையில் கரடியாய் இங்கெழுந் தேனோ”
(ப.106)

“அவ்வை : இனியும் விருப்பை வளர்த்தால்
இலவு காத்த கிளியாய் ஆவீர்!”
(ப.127)

“வண்டார் குழலி : கேழ்வர கில் நெய் வடியுது என்றால்
கேட்பவர் தமக்கு மதியா இல்லை?”
(ப.180)

“படைத்தலைவன்: எத்தனை முறையோ எடுத்துச் சொன்னேன்
கரியன் ஏழையின் சொல்தான் அம்பலம் ஏறுமோ?
(ப.238)

“மறவன் 4 : வேலியில் கிடக்கும் ஓணான் எடுத்து
வேட்டியில் விட்டுத் துடிப்பது எதற்காக?”
(ப.398)

“நாகையார் : கற்பூ ரத்தின் நறுமணம் தன்னை
அற்பக் கழுதை அறிந்திடு மோதான்?”
(ப.452)

அவ்வை நிர்மலாவின் எழுத்து

காப்பியத்தில் ஓர் இடத்தில் (அங்கம் ஒன்று: காட்சி மூன்று) அல்லியின் தோழி உறுவையின் கூற்றாக,

சொன்மை நுண்மை திண்மை மென்மை
சீர்மை ஓர்மை கூர்மை நேர்மை
நீர்மை உண்மை எளிமை தெளிமை
இனிமை புதுமை பயன்மை அனைத்தும்
அழகுற அமையும் அவ்வையின் செய்யுளில்!
சொன்ன செய்தியில் முழுமை மிளிரும்
உவமையின் உட்பொருள் கதிர்போல் ஒளிரும்
பாடலின் காட்சி கண்முன் விரியும்!”
(ப.144)

என அவ்வையின் எழுத்தில் மிளிரும் பன்முகப் பரிமாணங்களைப் நிரந்தினிது கூறுகிறார் கவிஞர் நிர்மலா. ‘அவ்வையார்’ என்னும் இவ் வரலாற்று நாடகக் காப்பியத்தினை மனம் கலந்து, பொருள் உணர்ந்து பயில்வோரும் ‘உண்மை! உண்மை! உணர்ந்தேன் நானும்!’ (ப.144) என்னும் அல்லியின் கருத்தினையே வழிமொழிவர் என்பது உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை.


‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 


 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்