கனவை நனவாக்கும் காதல் வாழ்க

முனைவர் அ.கோவிந்தராஜூ


காதலும் வீரமும் பண்டைத் தமிழருக்கு இரு கண்களைப் போன்றவை. காதலுக்கு மரியாதை இருந்த காலம் இருந்தது. நூறு விழுக்காடு காதல் திருமணங்கள் நடந்த காலம் இருந்தது. ஆம் தமிழ் மண்ணில் சங்க காலத்தில் இவை இருந்தன.

ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே

என்று காதலுக்கு இலக்கணம் வகுக்கிறது தொல்காப்பியம்.

எதிர்பாராத சூழலில் ஒத்த நற்பண்புகள் உடைய இளைஞனும் இளம்பெண்ணும் சந்தித்துக் காதல் வயப்படுவார்கள். பிறகு பெற்றோர் உற்றோர் வாழ்த்தி மகிழ, களவுக் காதல் திருமணத்தில் முடியும். ஒருகால் பெற்றோர் மறுப்பினும் காதலர் இருவரும் காத்திருப்பர். தொடர்ந்து பெற்றோர் இசையாதிருப்பின் உடன்போக்கு நிகழ்த்தி மணம் செய்து கொள்வர். பிறகென்ன களவுக் காதல் கற்புக் காதலாக மாறி காலமெல்லாம் நிலைத்து நிற்கும்.

ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. கோலமும் மாறிவிட்டது. காணாக் காதல் எங்கும் பெருகி விட்டதோ என மனம் மயங்கித் தவிக்கிறது. நேரில் பார்க்காமலே காதல் செய்ய முகநூலும், வாட்ஸப்பும், அலைப்பேசியும் வரிந்துகட்டிக் கொண்டு உதவுகின்றன.

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற அறிஞர் அண்ணாவின் பொன்மொழியைத் தவறாகப் புரிந்துகொண்டு மாற்றான் மனைவியாகி விட்டாள் எனத் தெரிந்தும் முன்னாள் காதலியுடன் மல்லுக்கட்டும் இளைஞர்களும் இருக்கின்றார்கள்.

காதலில் தோல்வியுற்ற ஆண் தன் காதலியின் திருமண வாழ்விலும் குடும்பச் சிக்கலை ஏற்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. அமிலத்தை வீசுகிறான் அல்லது அவளைக் கொல்லவும் துணிகிறான்.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காதலானது திருமணத்தில் முடியாத நிலையில், நட்பாக மலர்வது அக் காதலர் இருவரின் மன நலத்திற்கு நல்லது என உளவியல் உரைக்கிறது. .

நட்பு காதலாக மாறும்போது காதலும் நட்பாக மாறலாமே. மனத்துக்குக் கடிவாளம் போடும் திறனுடையவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும்.

பள்ளி செல்லும் பருவத்தில் சிலர் காதல் வலையில் விழுகிறார்கள். பதினெட்டு வயதுக்கு முன் ஒருபோதும் காதல் நிகழாது. அது வெறும் எதிர்பாலின ஈர்ப்பே யாகும்.

பள்ளி வயதில் கொள்ளும் காதல்
பாலினக் கவர்ச்சி; பிறிதொன்றில்லை
பள்ளி வயதில் காதல் கொள்ளல்
கொள்ளியால் தலை வாரல் ஒக்குமே

                                                (கவிஞர் இனியன்/ கவிதைத்தேன் ப.182)

வண்ணக் கனவுகளோடு கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் காலத்தில், காதல் என்னும் மாய வலையில் சிக்கி, தங்கள் கனவுகள் நனவாக முடியாமல் முடங்கிக் கிடக்கும் இளைஞர்களையும் இளம்பெண்களையும் நான் அறிவேன்.

இதற்கு மாறாக, “நாம் இருவரும் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற பின்னரே திருமணம் செய்வோம்” என்று உறுதிமொழி ஏற்று, அந்த இலக்கை அடைந்து திருமணம் செய்த கொண்ட காதலரையும் நான் அறிவேன்.

காதல் மணம் புரிந்த ஜெயபிரகாஷ் நாராயணனும் பிரபாவதியும் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர்தான் மணவாழ்வில் ஈடுபடுவது என்னும் மன உறுதியோடு இருந்தவர்கள் என்பது பலருக்குத் தெரியாது.

“காதலியர் கடைக்கண் பார்வை பட்டுவிட்டால் மண்ணில் இளைஞர்க்கு மாமலையும் ஓர் சிறு கடுகு” என்பார் பாரதிதாசன். பெரிய இலக்குகளை எளிதாய் அடைவதற்குக் காதல் என்பது ஓர் உந்து சக்தியாய் இருக்க வேண்டும் என்பதைத்தான் இப்பாடல் வரி உணர்த்துகிறது.

காதல் என்பது முன்னேற்றத்திற்கான படிக்கல்லாக இருக்க வேண்டும். ஒருபோதும் தடைக்கல்லாய் இருத்தல் கூடாது.

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்து நாளை காய்ந்து விடும் காளான் போன்றதல்ல காதல். உண்மையான காதல் என்பது உள்ளத்தில் மலர்வது. பார்த்த மாத்திரத்தில் ஐம்புல உணர்வால் உந்தப்பட்டு உருவாவது பொய்க்காதல் ஆகும்.

இன்று சிலர் அவசர கதியில் காதலிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அவசர கதியில் நடக்கக் கூடாதவை எல்லாம் நடந்து விடுகின்றன.

இன்றைக்குக் காதலிலும் வன்முறை தலை விரித்தாடுகின்றது. காதல் என்னும் சொல்லுக்குக் கொல்லுதல் என்று ஒரு பொருளும் உண்டு. இப்போதெல்லாம் இந்தப் பொருளில்தான் சிலரது காதல் இருக்கின்றது. காதலிக்க மறுக்கும் பெண்களைக் கொன்றுவிடும் கோரக்காட்சிகள் அரங்கேறுகின்றனவே!

காதல் என்பது செம்புலப் பெயல் நீரைப்போல் இருமனங்களும் கலத்தல் ஆகும். உடற் கவர்ச்சியால், உடைக் கவர்ச்சியால், உரைக் கவர்ச்சியால் பெண்களைக் கவர முடியாது என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் மணக்கொடையைக் குறிவைத்துக் காதலிக்க முன்வரும் இளைஞர்களையும் இன்றைய இளம்பெண்கள் புறந்தள்ளுவார்கள்.

முதலில் காதலர் அனைவரும் திருக்குறளில் உள்ள காமத்துப் பாலைப் படிக்க வேண்டும். மலரினும் மெல்லியது காதல் என்பார் திருவள்ளுவர். கணவன் மனைவி உறவை உடம்புக்கும் உயிருக்கும் உள்ள நட்பு எனச் சொன்ன முதல் நல்லாசான் அவர்தான்.

வள்ளுவர் வகுத்துக் காட்டும் காதல் கனவை நனவாக்கும் காதல். அது ஒருபோதும் தோல்வி அடையாது. மேலும் சாதி, மதம், இனம், மொழி போன்ற தடைகளையும் தாண்டி அது வெற்றியடையும்.
 


 


 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்