புறநானூறு ஒரு வரலாற்றுப் பெட்டகம்

திருமதி செல்லையா யோகரத்தினம் MA

மிழ்நாட்டின் பண்டைய வரலாற்றினையும் தமிழர் தம் நாகரீகத்தையும் உணர்த்தும் எழுத்து வடிவிலான ஓர் உன்னத ஆவணம் புறநானூறு. இன்று கிடைக்கும் இலக்கண இலக்கிய நூல்களில் மிகப் பழமையான நூல் தொல்காப்பியம். இது இலக்கணவடிவிலான ஓர் இலக்கியம். இதிலிருந்து தமிழர் தம் பண்பாடு, வரலாறு, தொன்மை ஆகியவற்றை நாம் அறிந்து கொள்ளலாம். இத்தொல்காப்பியத்திற்கு முன்னே தோன்றிய செய்யுட்களும் பின்னே தோன்றிய செய்யுட்களும் தன்னகத்தே ஒருங்கே கொண்ட நூல் புறநானூறு.

புறப்பொருளைப் பற்றிப் புகலும் நானூறு பாடல்களைக் கொண்டது புறநானூறு. கண்ணால் பார்த்தறியும்படி, வாயினால் கூறும்படி வெளிப்படையாக நிகழும் நிகழ்ச்சிகளெல்லாம் புறப்பொருள். அரசியல் வாணிகம், வரலாறு, அறவுரை, போர்நிகழ்ச்சி, சமுதாயப் பழக்க வழக்கங்கள்; ஆகிய பலவற்றையும் உரைப்புது புறப்பொருளாகும்.

மூவேந்தர் குறுநில மன்னர்கள், கடையெழு வள்ளல்கள், படைத் தலைவர்கள், வீரர்கள் ஏனையோர் இங்கே பாடப்பட்டுள்ளனர். இவர்கள் காலத்தால், இடத்தால், குலத்தால். சாதியால் வேறுபட்டவர்கள். பாடியோரும் இத்தன்மையரே. முதல், இடை, கடை ஆகிய முச்சங்கத்துப் புலவர்கள் பலருடைய பாடல்கள் இங்கே இடம் பெற்றுள்ளன.

அக்கால தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதாரம், கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, கல்வி, வீரம், கொடை, ஆடை அணிகலன்கள், பழக்கவழக்கங்கள், வாணிபம் போன்ற பல செய்திகளை புறநானூற்றுவழி அறியலாம். அக்கால வரலாற்றுக் குறிப்புகள், சமூக நிலை ஆகியவற்றைக் காட்டும் காலக் கண்ணாடியாகப் பறநானூறு விளங்குகிறது. பெண்களின் வீரத்தைச் சொல்கிறது. பெண்கள் மங்கல அணி அணிதல், இறந்தவரைத் தாழியில் கவித்தல். நடுகல் நடுதல், நட்டகல்லைச் சுற்றி மயிற்பீலி அணிவித்து மது வார்த்தல், கணவனை இழந்த பெண்கள் அணிகளைக் களைந்து கைமை நோன்பு நோற்றல், உடன்கட்டை ஏறுதல் போன்ற பழக்க வழக்கங்களையும், ஆடை அணிகலன்களையும், படைக்கலக் கருவிகளையும், உணவு வகைகளையும், எடுத்து இயம்புகின்றது புறநானூறு. இந்நூல் தமிழலக்கியத்தின் அணையா விளக்கு. பழங்காலக் கருவூலம். பண்டைத் தமிழர்களின் பண்பாட்டுச் சேமிப்பு.

பழந்தமிழர் பண்பாடு மிக உயர்ந்தது. உலகமெலாம் பாராட்டிப் பின்பற்றக்கூடியது. தமிழ் மக்கள் உலகத்தை ஒன்றென்று கருதினர். .உலக மக்களை ஒரே குலத்தவராக எண்ணினர். இத்தகைய வான் உயர்ந்த பரந்த நோக்கம் தமிழர்களின் ஒப்பற்ற சிறந்த பண்பாட்டிற்கு ஓர் உன்னத எடுத்துக்காட்டாகும்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்.....' 192 எனும் கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடல் இதனை விளக்குகிறது. எல்லா ஊர்களும் எம்முடைய சொந்த ஊர்களே, எல்லா மக்களும் எம்முடைய உறவினர்களே, எம்முடைய நன்மையும் தீமையும் பிறரால் வருவன அல்ல, நாம் இன்புறுவதும் துன்புறுவதும் கூட அவை போன்றனவே, சாவு ஓர் அதிசயமானதல்ல. இயற்கையானது. ஆகையால் இவ்வுலக வாழ்வு இனிமையானது என்று மகிழவும் மாட்டோம், வெஞ்சினத்தால் இவ்வாழ்வு துன்பமுடையது என்று வெறுக்கவும் மாட்டோம். இந்தப் பாடலின் உண்மைக் கருத்தை உலக மக்கள் பின்பற்றி ஒழுகுவார்களானால் இவ்வுலகில் எவ்வித குழப்பமும் ஏற்படாது.

உலகத்தை உருக்குலைக்கும் போர்வெறி ஒழிய வேண்டுமானால், இன வெறி மறைய வேண்டுமானால், சாதிவெறி சாக வேண்டுமானால், மத வெறி மாள வேண்டுமானால் ' யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பொன்மொழி உலகமுழுவதும் பரவ வேண்டும். உலக மொழியாக ஆக வேண்டும். உலக சமாதானத்தை நிலைநாட்டும் ஒப்பற்ற குறிக் கோளுடைய உயர்ந்த மொழியாக நிலைநாட்டப்பட வேண்டும். இது போன்ற சிறந்த கருத்துள்ள செந்தமிழ்ச் செய்யுளைப்போல் வேறு எந்த மொழி நூலிலும் காண முடியாது.

எந்த நாட்டிலும் நல்ல அரசியல் இல்லாவிட்டால் நாடு சீரழியும், நாடு நாசமாய்ப் போய்விடும். நல்ல அரசியல் அமைப்பு உள்ள நாட்டில் மக்கள் ஒன்றுபட்டு வாழ்வார்கள். மக்களுடைய வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கும். வாழ்வுக்குத் தேவையான பண்டங்களும் விளையும் உன்னத நாடாகத் திகழும். மக்கள் சாதி, மத, இன, வெறிகளினால் மாறுபட்டுப் போராட மாட்டார்கள். நாடு செல்வம் கொழிக்கும் சிறந்த நாடாக விளங்கும். மனிதத்தன்மையுடன் ஒன்றுபட்டு வாழ்வார்கள். இவ் வுண்மையை 2000 ஆண்டுகட்கு முன்பே தமிழர்கள் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தனர்.

புறநானூற்றுப்பாடல்களைக் கொண்டு தமிழர்களுடைய வரலாறு பற்றித் தெரிந்து கொள்ளலாம். அரசர்கள், வள்ளல்கள், புலவர்கள் போன்றவர்களின் வரலாறுகளைத் தெரிந்து கொள்ளலாம். இதன் விளைவாக பல கர்ண பரம்பரைக் கதைகளும் உருவாகியுள்ளன. குமணனின் கதை, சோழன் பிசிராந்தையர் நட்பு போன்றவற்றிற்கு பாடல்கள் உள்ளன.

பிசிராந்தையரும் கோப்பெருஞ் சோழனும் இனிய நண்பர்கள். இத்தனைக்கும் அவர்கள் வாழ்நாளில் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை. ஆனால் நட்பென்றால் இதுதான் நட்பு. இவர் பெயரைச் சொன்னால் அவரும் அவர் பெயரைச் சொன்னால் இவரும் உருகி விடுவார்கள். இந்த நட்பு இறுதியில் சோழன் வடக்கிருந்து இறந்த பொழுது பிசிராந்தையரை அவன் இறந்த இடத்திற்குச் சென்று அவரையும் உயிர் விடச்செய்தது. பிசிராந்தையருக்கெனவே இடம் ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடப்பட வேண்டியது. என்னே நட்பின் ஆருயிர்த் தன்மை.

'புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதாம்
நட்பாம் கிழமை தரும்.'
( குறள் 785) என்ற வள்ளுவரின்; குறளுக்கு எடுத்துக் காட்டாக இவர்களுடைய நட்பு இருந்துள்ளது எனலாம்.

இதற்குச் சான்றாக மன்னனே பாடிய பாடல் 'பிசிரோ னென்பவென் னுயிரோம்.....' 215 சான்று பகரும். மேலும் இத்தனைக்கும் சான்றாக நேரில் பார்த்த பொத்தியார் எனும் புலவர் 'இசைமரபு ஆகநட்பு கந்தாக....'.217 எனும் பாடலைப் பாடியுள்ளார். கண் கொண்டு காணாத இருவரின் நெஞ்சார்ந்த நட்பின் ஆழத்தை பொத்தியார் துயரம் சொரியப் பாடியுள்ளார். மேலும் இதே பொத்தியார் அரசனுடன் தானும் வடக்கிருக்கத் துணிந்த போது அரசன் தடுத்துள்ளான் 'புதல்வன் பிறந்தபின் வா....' என்ற பாடல்; 222, 'கல்லாகியும் இடம் கொடுத்தான்...... 223 இவற்றைக் கூறுகின்றன. நட்பின் பெருமையையும் ஆழத்தையும் அறிந்து வியப்படையாது இருக்க முடியமா?

அரசியல் அறிஞரான பிசிராந்தையரால் பாடப்பெற்ற பாடல் ஒன்று ஒரு சிறந்த ஆட்சி எவ்வாறு செயற்படவேண்டும் என்பதைக் கூறுகிறது. குடும்பத்தின் சிறப்பைக் கூறுகிறது. பிசிராந்தையர் மிகவும் வயது முதிர்ந்தவர். நரை திரை விழுந்த ஒரு முதியவரையே எதிர்பார்க்க வேண்டும். ஆனால் அப்படியல்ல. அவரே அதற்கு விளக்கம் கூறுகிறார். அவர் பாடல் 'யாண்டு பலவாகி நரையில வாதல்.......' (191) அதனை விளக்குகிறது. சிறந்த ஆட்சி எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தெரிகிறது. என் மனைவி சிறந்த குணங்களையுடையவள், என் மக்கள் அறிவு நிரம்பியவர்கள், என் மேற்பார்வையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் என் உள்ளம் போல் ஒத்துழைக்கின்றனர், என்நாட்டு மன்னனும் குடிகளுக்குக் கொடுமை செய்யாது காப்பாற்றுகிறான், நான் வாழும் ஊரிலே அறிவும் அடக்கமும் உள்ள ஆன்றோர்கள் பலர் வாழ்கின்றனர். அவர்கள் சிறந்த கொள்கையை உடையவர்கள். இதனால்த்தான் நான் நரை திரையின்றி நன்றாக வாழ்கிறேன் என்று பாடல் மூலம் பதில் கூறுகின்றார்.

உயர்ந்த நாடென்றால் அந்த நாட்டில் உறைவோர் அனைவரும் கல்வி கற்றிருக்க வேண்டும். தொழிலாளி முதலாளி சச்சரவுகள் தோன்றுவதற்கு இடமில்லாது இருக்க வேண்டும். நாட்டை பசி, பட்டினி, நோய் நொடி சூழ்ந்து பயமுறுத்தாமல் இருக்க வேண்டும். இத்தகைய நாட்டில் இருப்பவர்கள்தான் உள்ளத்தில் கவலையின்றி உடல் உரத்துடன் நரை திரையின்றி நீண்ட நாள் உயிர் வாழ்வார்கள் என்ற உண்மையைப் பாடல் வலியுறுத்துகிறது. இதுவே ஒரு எடுத்துக்காட்டான அரசினைக் கொண்ட நாடாகும். இங்கே ஓர் அரசின் ஆட்சித்திறனைப் பார்க்க முடிகிறது.

பிசிராந்தையரின் இன்னொரு பாடல் ;காய்நெல் அறுத்து.....' (184); அரசியல் ஆழம் நிறைந்தது. வரி விதிப்பது பற்றியது. அறிவுடைய அரசன் அளவாக வரி விதித்தால் நாடு தழைக்கும். ஆரவாரமாக முறை அறியாது வரியைத் திரட்டினால் நாடு 'யானை புகுந்த நிலம் போல' பயனடையாது கெட்டுவிடும். யானை புகுந்த நிலம் சிறந்த உதாரணம். விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவு கூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல் யானைக்கு பல நாட்களுக்கு உணவாகும். ஆனால் நூறு வயல்கள் இருந்தாலும் யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் யானை தின்பதை விட அதன் கால்களால் மிதிபட்டு அழியும் நெல்லின் அளவு அதிகமாகும். அரசன் எப்படிப் புத்திசாலித் தனமாக ஆட்சி செலுத்த வேண்டும் என்பதை எத்தனை அழகாகக் கூறியுள்ளார். அக்காலம் மட்டுமல்ல எக்காலத்தும் பொருந்துவதாக உள்ளது.

மோசிக்கீரனாரின் 'நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே'. (186) எனும் புறநானூற்றுப் பாடல் இதனைத் தெளிவு படுத்துகிறது. அரசன் நாட்டு நன்மைக்காக வாழ்பவன். குடிமக்களின் குறைகளைப் போக்கு வதற்காக வாழ்பவன். இதனை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தெரிந்து வைத்திருந்தனர், வலியுறுத்தியுள்ளனர். அரசனின் முதன்மையையும் கடமையையும் கூறுகிறது. உலகத்தின் உயிர் அரசுதான் என்பதை வலியுறுத்துகிறது. நாட்டின் முன்னேற்றத்தை மக்களின் நல்வாழ்வை நோக்கி அரசன் ஆட்சி இருக்க வேண்டும். உணவுப் பொருள் ஏராளமாகக் கிடைக்க வேண்டும். வாழ்க்கைக்குத் தேவையான கைத்தொழில் பெருகுவதில் கவனம் செலுத்தவேண்டும். இவை நல்லதொரு அரசாட்சியால்தான் ஆற்றமுடியும். இவ்வுண்மையை உள்ளடக்கியதே இப்பாடல். நாட்டின் முன்னேற்றத்தையும் மக்களின் நல்வாழ்வினையும் கருத்தில் கொண்டதே இப்பாடல். அரசனுடன் நெல்லும் நீரும் ஒப்பு நோக்கப்பட்டுள்ளமை காணலாம்.

புறநானூற்றுப் பாடல்கள் 164,165 பெருந்தலைச் சாத்தனாரால் பாடப்பெற்றவை. 'ஆடு நனி மறந்த கோடு....164' எனும் பாடல் தன் குடும்பத்தின் வறுமையையும் தன் மனைவி படும் துயரத்தையும் எடுத்துரைக்கின்றார். குடும்பம் மனைவி மக்கள் எவ்வளவுக்கு முக்கியமானவை என்பது தெளிவாகிறது. இதற்;கு அடுத்த பாடல் 165 'மன்ன உலகத்து மன்னுதல்..........' குமணனின் தம்பி நாட்டைக் கைப்பற்றி குமணனை விரட்டி விட்டான். குமணன் காட்டில் இருந்தபோது புலவர் பெருந்தலைச் சாத்தனார் குமணனைப் பரிசுக்காக அணுகிய பொழுது தன்னிடம் கொடுக்க ஒன்றுமில்லாததால் தன் தலையைக் கொய்து தன் தம்பியிடம் கொடுத்து, தன் தம்பியிடம் பரிசு வாங்கும் பொருட்டு குமணன் தன் வாளை அவரிடம் கொடுத்தான். இதனை புலவர் சென்று தம்பியிடம் கூறினார். தம்பி இளங்குமணன் தன் செயலுக்கு மனம் மிக வருந்தி அண்ணனை அழைத்து வந்து நாட்டை அண்ணனிடம் கொடுத்தான், இந்த மாபெரும் திருப்பம் பெருந்தலைச் சாத்தனாரின் வன்மையால் நிகழ்ந்தது. சாதனை என்றே சொல்லலாம்.

பல வகையான நம்பிக்கைகள் பண்டைத் தமிழர்களிடையே குடி கொண்டிருந்ததாகத் தெரிகிறது. தமிழ்ப்புலவர்களை மன்னர்களும் செல்வர்களும் மதித்து வந்தனர். அவர்களும் அரசர்களுக்கும் பொது மக்களுக்கும் அறிவுரை கூறி வந்தனர். தவறு செய்யத் தொடங்கினால் தமிழ்ப்புலவர்கள் அதனைத்தடுப்பார்கள். அவர்களை நன்னெறியிலே நடக்கும்படி செய்வார்கள். இவர்கள் சிறந்த அரசியல் அறிவு படைத்தவர்களாக இருந்தனர்.

'இரும்பனை வெண்தோடு....' 45 எனும் புறநானூற்றுப் பாடல், ஒரே அரச பரம்பரையைச் சேர்ந்த சோழன் நலங்கிள்ளியும், சோழன் நெடுங்கிள்ளியும் போரிடுவதற்கு முற்றுகையிட்ட போது கோவூர் கிழார் என்னும் புலவர் அப்போரை நிறுத்தியமையை இப்பாடல் சொல்கிறது.

போரென்றால் ஒருவர் தோற்பதும் ஒருவர் வெல்வதும் தான் நடக்கப் போகிறது ஆனால் யார் தோற்றாலும் வென்றாலும் நடக்கப் போவது ஒன்றுதான். 'நும்' குடிக்கே இழுக்கு என்று கூறுகிறார். எத்தனை அருமையான தத்துவம். ஒரே உறவுகள் தம்முள்ளே சண்டை இட்டுக் கொள்வது எவ்வளவு தப்பு என்பது புரிய வைக்கப் படுகிறது. எக்காலத்தும் பொருந்தும் ஒரு உண்மை.

புறநானூற்றுப்பாடல் 'ஈன்று புறம்தருதல் ....312' எனும் பாடல் பொன்முடியார் எனும் பெண்பாற் புலவரால் பாடப் பெற்றது. தற்காலத்தில் பெண்ணியம் பேசும் சமூகம் வளர்ந்து கொண்டே போகிறது. பெண்கள் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள், வன்முறைகள் என்று எல்லாம் போர் தொடுக்கிறார்கள், அதற்கெல்லாம் ஆணி அடிப்பது போல பாடியுள்ளார் பொன்முடியார். குழந்தை பெற்றெடுப்பதைவிட அப்பிள்ளையைப் பேணிப்பாதுகாத்து வளர்ப்பதே தாய்மாரின் பெரிய பொறுப்பாகும். அதிலும் கன்னியரையும் காளையரையும் சமுதாய நலம் பேணுபவராக வளர்த்து எடுத்து ஆளாக்கிச் சமூகத்திற்கு கொடுப்பதே மிக மிகக் கடுமையான செயலாகும். கடமையுமாகும். அந்தக்கடினமான செயலைச் சங்ககாலத் தாய்மார் தத்தம் பண்புகளுக்கு ஏற்ப மிக நன்றாகவே செய்திருக்கிறார்கள் என்பதை இச்சங்கப்பாடல் காட்டுகிறது. சங்ககாலத் தாய்மார் அப்படி வளர்த்திராவிட்டால் சங்கப்பாடல்களையும்,சங்க இலக்கியங்களையும் சங்கச் சான்றோர்களையும் நாம் கண்டிப்பாகக் கண்டிருக்க முடியாது. இப்பாடலில் இச் சமூகத்தில் ஒவ்வொருத்தருக்கும் உள்ள கடமைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தல் ஒரு தாயின் கடமை, அவனைச் சான்றோன் ஆக்குவது தந்தையின் கடமை, கூரிய வேல் வடித்துக் கொடுப்பது கொல்லனின் கடமை, நல் ஒழுக்கத்தைக் கற்பிப்பது அரசனின் கடமை, போர் செய்து எதிரியை முறியடிப்பது காளையின் கடமை என்கிறார். ஒவ்வொருத்தரும் தம்தம் கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும். என்பது வலியுற்த்தப்படுகிறது. ஒவ்வொருத்தரும் தம் தம் கடமையை ஒழுங்காகச் செய்தால் பிள்ளை தன் கடமையைச் சிரிவரச் செய்வான். ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்து ஆளாக்குவது என்பது ஒன்றும் சுலபமான காரியமல்ல என்பது வலியுறுத்தப்படுகிறது.

கோவூர்க்கிழாரின் புறநானூற்றுப் பாடல் 'நீயோ புறவின் அல்லல்...'46 எனும் பாடல், சோழ மன்னன் கிள்ளிவளவன் தன்பகைவனான மலையமான் திருமுடிக்காரியின் குழந்தைகளை யானையின் காலின் கீழே இட்டுக்கொலை செய்ய முற்பட்ட போது அவனது மனதை மாற்ற முயன்று பாடிய பாடல். 'புறாவின் துன்பத்தை நீக்கிய சிபிச்சக்கரவர்த்தியின் மரபில் வந்த நீ இப்படிக் கொடியசெயலைச் செய்யலாமா?' என்பதாகும். ஒருவன் செய்யும் செயல் தன் வம்சத்திற்கே இழுக்கை ஏற்படுத்தும் என்பது விளக்கப்படுகிறது. இன்றும் என்றும் கைக்கொள்ள வேண்டிய ஓர் அருமையான தத்துவம்.

'மடத்தகை மாமயில்... 145'எனும் பாடல் பரணரால் பாடப்பபெற்றது. கடையெழு வள்ளல்களுள் ஒருவரான பேகன் தன் மனைவியைப் பிரிந்திருந்தான். அந்த நேரத்தில் பரணர் அங்குச் சென்றிருந்தார். அவருக்கு பேகன் பரிசில் தர முன் வந்தான்;, அதற்குப் பரணர் 'நான் பசியால் இங்கு வரவில்லை. எனக்கு சுற்றத்தைக் காக்கும் பொறுப்பும் இல்லை. நான் வேண்டும் பரிசு நீ இன்று இரவே உன் தேரில் புறப்பட்டு உன் மனைவியிடம் சென்று அவள் துன்பத்தைத் தீர்ப்பதுதான்' என்றான். குடும்பம் பிரிந்திருப்பது எவ்வளவு துன்பமான செயல் என்பதை எத்தனை அழகாக விளக்கியுள்ளார்.

இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் பொழுது. நாம் எல்லாம் அத்தனை கொடுப்பனவு இல்லாதவர்களாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. நாட்டிலே எப்பொழுதும் அன்பும் அறனும் அருளும் அமைதியும் நிலவ வேண்டும் என்பதே குறிக்கோளாக வாழ்ந்துள்ளனர் நம் முன்னோர்கள். இவைபோன்ற இன்னும் பல சிறந்த இனிய செய்திகள் இந்நூலிலே கொட்டிக் கிடப்பதைக் காணலாம். எனவே புறநானூற்றைப் பெட்டகம் என்று கூறலாமா அல்லது பேளை என்று வர்ணிக்கலாமா அல்லது பொக்கிசம் என்று காப்பாற்றலாமா?.



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்