சங்ககாலப் பரத்தையரின் வாழ்வியலும் சிக்கலும்

முனைவர் பூ.மு.அன்புசிவா


ங்ககாலத் தமிழர்கள் மிக உயரிய ஒழுக்க நியதிகளுடன் கூடிய வாழ்க்கை முறையை மேற்கொண்டனர் என்ற கருத்தோடும், சங்ககாலம் ஒரு பொற்காலம் என்ற கருத்தோடும் உடன்பட விரும்பாதோர் 'பால் வேறுபாடு கருதாது கள்ளுண்டு கழித்த நிலையையும், பரத்தையர் பிரிவையும்' தேவையற்ற புனைந்துரைகளையும் முரண்படிகளாகச் சுட்டுவர். இங்ஙனம் உரைக்கப்பட்ட இம்முரண்களில் பரத்தையர் பிரிவே பெரிதும் விரித்துரைக்கப்பட்டு விவாதிக்கப்படுவது. மருதத்திணையின் உரிப்பொருளுக்கு உரிய பொருளான பரத்தையரே, தலைவன், தலைவியின் வாழ்வியல் சிக்கலாவர். ஆனால், பரத்தையரின் வாழ்வியல் சிக்கலை ஆயுங்கால் அச்சிக்கலின் இருமுனையும் தலைவனும், தலைவியும் ஆகின்றார். சற்றேறக்குறைய ஒரு அகவாழ்க்கை சங்கிலி போல் அமையும் இம்மூவருள் பரத்தையரின் வாழ்வியல் சிக்கலிலுள்ள ஆளுமை நிலைப்பாட்டை அவர்களது உணர்வுகள், மனவெழுச்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் சங்க அகக்கிளைகளான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு மற்றும் அகப்புறக் கிளையான பரிபாடல் ஆகிய நூல்கள் வழி ஆய்ந்து உரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

தொல்காப்பியர், 'பரத்தையரைக் 'காமக்கிழத்தியர்' என்ற பெயரால் குறிப்பிடுகின்றார். இப்பரத்தையர் குறித்து இளம்பூரணர், 'பரத்தையராவார் யாரெனின் அவர் ஆடலும் பாடலும் வல்லவராகி அழகும் இளமையும் காட்டி இன்பமும் பொருளும் வெஃகி ஒருவர் மாட்டும் தங்காதார்' என்னுரைப்பர்.

'யாரையும் நயவா இயல்பிற் சிறந்த
சேரிப்பரத்தையர் மகளீ ராகிக்
காதலிற் புணர்வோர் காதற் பரத்தையர்'


என்று பரத்தையரைப் பற்றி அகப்பொருள் விளக்கம் குறிப்பிடுகின்றது.

'கொண்டாள் மனையகத்திருக்க ஊனுடல் இன்பம் பேணல் வேண்டி மானென நோக்குடைய பலபெண்டீரோடு கூடி இன்புறும் கூடா ஒழுக்கமே பரத்தமையாகும். பொருள் மேல் படர்ந்த...... வரைவில் மகளீர் உள்ளம் அதனை உடையார் பலர்பாலும் பரந்து இயங்கு வதாயிற்று. அதனால் அவர்கள் பரத்தையர் எனப்பட்டனர்'

காமக்கிழத்தியர் குறித்து இளம்பூரணர் 'காமக் கிழத்தியராவார் பின்முறை ஆக்கிய கிழத்தியர். அவர் மூவகைப்படுவர். ஒத்த கிழத்தியரும், இழிந்த கிழத்தியரும், வரையப ; பட்டாரும் என. ஒத்த கிழத்தியர் முந்துற்ற மனையாளன்றிக் காமம் பொருளாகக் பின்னுந் தன்குலத்துள்ளாள் ஒருத்தியை வரைதல், இழிந்தாராவார் அந்தணர்க்கு அரசகுலத்தினும், வணிக குலத்தினும், வேளாண் குலத்தினும் கொடுக்கப்பட்டாரும், அரசர்க்கு ஏனை இரண்டு குலத்தினும் கொடுக்கப்பட்டாரும், வணிகர்க்கு வேளாண் குலத்தில் கொடுக்கப்பட்டாரும். வரையப்பட்டார் செல்வராயினார் கணிகை குலத்தினுள்ளார்க்கும் இற்கிழமை கொடுத்து வரைந்துகோடல். அவர் கன்னியில் வரையப்பட்டாரும். அதன்பின்பு வரையப்பட்டாரும் என இருவகையர். அவ்விருவரும் உரிமை பூண்டமையாற் காமக்கிழத்தியர் பாற்பட்டனர்'5 என்று கூறுகிறார்.

நச்சினார்க்கினியர் 'காமக்கிழத்தியராவார் கடனறியும் வாழ்க்கையுடையராகிக் காமக்கிழமை பூண்டு இல்லறம் நிகழ்த்தும் பரத்தையர். அவர் பலராதலிற் பன்மையாற் கூறினர். அவர் தலைவனது இளமைப் பருவத்திற்கூடி முதிர்ந்தோரும் அவன்தலை நின்று ஒழுகப்படும். இளமைப் பருவத்தோரும், இடைநிலைப் பருவத்தோரும், காமஞ்சாலா இளமையோரும் எனப்பல பகுதியினராம். இவரைக் கண்ணிய 'காமக்கிழத்தியர்' எனவே, 'கண்ணாத காமக்கிழத்தியரும் உளராயிற்று. அவர் கூத்தும், பாட்டும் உடையவராகி வரும் சேரிப்பரத்தையரும் குலத்தின்கண் இழிந்தொரும் அடியரும் வினைவல பாங்கினரும் பிறருமாம்' என்று உரைப்பர்.

சங்க இலக்கியத்தில் 'பரத்தையர் எனப் பொதுவாக நிற்றலினும் காதல் பரத்தையர் ஆவதற்கும் அதன்மேல் காமக்கிர்த்தியராக, இற்கிழத்தியராக வரைந்து கொள்ளும் நிலை மேவற்கும் இடம் அமைத்துச் செல்கின்றனர். பரத்தையர் என்பார், பலருக்கும் உரியர் எனும் நிலையில் கூறப்பெறினும் அங்ஙனம் நின்றவழி ஒரு காலத்தே ஒரு பரத்தையை நாடும் ஆடவர் தமக்குள் மேவ வல்ல பகைமைக் கொடுமைகளைக் குறிக்கும் கூற்றுக்கள் அகத்திணையின்றிப் புறத்திணையிலும் காண்டற்கில்லை. இப்பரத்தையர் கூட்டுறவினால் தலைவன் தலைவியர் மாட்டு ஊடல் நிகழ்வதே நூல்களில் காணப்பெறுதலின் அகப்பொருளில் காணும் பரத்தையர்கள் எல்லாம் காதற் பரத்தையர் முதலியோராகி ஒவ்வோர் தலைவனையே பற்றி நின்றவர் என்று கொள்ளலாம்' என்ற கருத்து பரத்தையர் காமக்கிழத்தியர் என்போர் ஒருவரே என்றும், அவர்கள் ஒருதலைவனுடனேயே உரிமைபூண்டு வாழ்ந்தார்கள் என்றும் அறியத்தருகிறது.

பரத்தை கூற்று

தலைவியும் அயற் பரத்தையும் தன்னைப் புறங்கூறியது கேட்ட பரத்தை அவர்தம் பாங்காயினர் கேட்கும் படிக்கூறுவது பரத்தை கூற்றில் முதல் களனாக அமைகிறது. தலைவனுக்கும் பரத்தைக்கும் உள்ள தொடர்பை அறிந்த தலைவி அவளைப் பழித்துப் பேசுகிறாள். இதை அறிந்த பரத்;தை தலைவன் அவளை நாடிவரும்போது,

'ஊர நீ, என்னை நயந்தனென் என்றி நின்
மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே'
(ஐங்.81:3.5)

என்று தலைவிக்குப் பாங்காயினர் கேட்கும்படிக்; கூறுகின்றாள்.

தலைவி புலந்ததை அறிந்த பரத்தை தலைவனிடம் 'புது வருவாயை உடைய ஊர்த்தலைவனே நின் மனைவி எத்தகையோரையும் வெறுத்துக்கூறும் இயல்புடையவள் எனக் கேட்டுள்ளேன். அவ்வாறிருக்க எம்மோடு புலத்தலில் வியப்பு இல்லை' என்று தலைவியின் தோழியர் கேட்கக் கூறுகின்றாள்.

பரத்தை தலைவனை மயக்கித் தன்பால் இருக்கும்படி செய்துவிட்டு அதில் விருப்பமில்லாதவள் போல் நடிக்கிறாள் என்று தலைவி புறங்கூறியதை அறிந்த பரத்தை இனி அவ்வாறே செய்யப் போவதாகத் தலைவிக்குப் பாங்காயினர் கேட்பத் தலைவனிடம் கூறுகின்றாள்.' தலைவி தன்னைப் புறனுரைத்தாள் எனக்கேட்ட காமக்கிழத்தி 'தலைவனுடன் தான் புனலாடுவது கண்டு அஞ்சுவாளாயின் எழினியின் பகைப்புலத்தில் உள்ள பசுக்கூட்டங்களைப்போலத் தன் கணவன் மார்பினைத் தன் சுற்றத்தோடு சேர்ந்து பாதுகாக்கட்டும்' என்கிறாள். தலைவனைத் தன்னிடமிருந்து பிரித்து விட்டதாகத் தலைவி கூறியதை அறிந்த பரத்தை 'தலைவியின் கோபத்திற்கு அவளின் அறியாமையே காரணமாகும். அவள் சொல்வது போல புறம் போகாதவாறு பிரித்திருந்தால் கீழைக்கடல் எம்மை வருத்தட்டும';11 என்று சூளுரைக்கின்றாள்.

ஆடல் பாடலால் தலைவனை மயக்கிவிட்டாள் எனத் தலைவி தன்னைத் தூற்றியதை அறிந்த பரத்தை 'தலைவன் கூத்துக்காண வந்ததற்கே என்னைத் தலைவி பழி தூற்றினாள், இனி ஆட்டனத்தியைப் பிரிந்து ஆதிமந்தி வருந்தியதைப் போலத் தலைவி வருந்தும்படி சூளினை மேற்கொண்டு ஊரனைக் கைப்பற்றிக் கொள்ளப் போகிறேன்' என்கின்றாள். 'தலைவனைத் தம்முடன் தொடர்பு படுத்திப்பேசிய தலைவி தன் வயிற்றிலே அடித்துக்கொள்ளுமாறு வளையல்கள் ஒலிக்க அவள்வாழும் வீட்டருகே உலவி வருவோம்' என்றும், 'தலைவனது ஊர்ப்பெண்டீர் தாங்கள் விரும்பியபடியெல்லாம் பழிதூற்றுகின்றனர். இனி என்ன நிழந்தாலும் நிகழட்டும். அவர்கள் வாழும் சேரிக்குச் செல்வோம். மார்பில் வேல் பாய்ச்சப்பட்ட களிறுபோல் அவர்கள் துன்பம் அடையட்டும்' என்றும் தம் தோழியரை அழைக்கின்றாள்.

தலைவி பரத்தையைப் பழித்தபோது 'தலைவனுக்கும் தனக்கும் உள்ள தொடர்பு அவனுடன் புனலாடியதுடன் முழந்துவிட்டது. தற்போது அவன் வேறொரு பரத்தையின் வீட்டில் உள்ளான். எனவே நான் தலைவிக்குப் பகையுடையவள் அல்ல. அவள் கணவனே அவளுக்குப் பகையாவான்' என்று கூறுகின்றாள். மேலும் தலைவி தன்னைப் பழி தூற்றுவதைக் கேட்ட பரத்தை 'தலைவன் எம் சேரிக்கு வந்தால் அவள் பெண்டீர் காணுமாறு அவன் சூடியுள்ள மாலையைப் பற்றுவேன். அவன் தப்பிப்போகாதபடி அவனது ஆடையைப் பற்றிக்கொள்வேன். என் தோளையே கட்டும் தறியாகக்கொண்டு எம் கூந்தலாகிய கயிற்றால் கட்டி அவன் மார்பினைச் சிறைபிடிப்பேன்' என்று சூளுரைக்கின்றாள். மேற்சுட்டிய பரத்தை கூற்றுப் பாடல்களில் தலைவி புறங்கூறியதை அறிந்த பரத்தையர் அவள் புறங்கூறியது போலவே தாம் தலைவனைத் தன்வசப்படுத்திக்கொள்ளப் போவதாகக் கூறுகின்றனர். தமக்கும், தலைவனுக்குமுண்டான உறவை அவர்கள் மறுத்துப் பொய்யுரைக்கவில்லை. இதைத் தலைவியைப் பற்றிக் கவலைப்படாது அவள் இருக்கும் சேரிக்கே செல்லத் தம் தோழியை அழைப்பதன்வழி அறிய இயலும். சில நேரங்களில் மட்டும் தலைவியின் ஏச்சுக்குப் பரத்தை வருந்தவதும் காணப்பெறுகின்றது.

அயற்பரத்தை புறங்கூறியது கேட்ட பரத்தை கூறியது

நீண்டகாலம் ஒரு பரத்தையின் இல்லத்தில் இருந்த தலைவன் ஒரு நாள் தன் இல்லம் சென்றான். அதுகண்ட பிற பரத்தையர்கள் தலைவன் இப்பரத்தையைக் கைவிட்டுவிட்டுத் தன் வீட்டிலேயே தங்கிவிட்டான் எனக்கூறினர். இதுகேட்ட காதற் பரத்தை அப்பரத்தையர்க்கு நட்புடையவர் காதில் விழும்படித் தன் தோழியிடம், 'மகிழ்நன் நாம் வருந்தி அழுமாறு பிரிந்து தன் கிழத்தியர் இருக்கும் ஊரிலேயே தங்கிவிட்டான் என்கின்றனர். கெண்டை மீன்கள் பாய்வதால் மலர்ந்து வண்டுகளைப் பிடித்துக் கொள்ளும் ஆம்பல் மலர்கள் நிறைந்த நாட்டின் தலைவன் அவன் என்பதை அறியவில்லை போலும்' என்று கூறுகின்றாள். இதில் தேன் மிகுந்த மலர்கள் வண்டுகளைப் பிறபக்கம் போகவிடாமல் தடுத்தது போல இற்கிழத்தியர் தடுத்துவிட்டனர். என்பதை நயம்பட உரைக்கின்றாள். வேறு ஒரு பரத்தை புறங்கூறினாள் எனக் கேட்ட இற்பரத்தை 'துணங்கை விழா நடைபெறும் காலத்தில் நான் அவ்விடத்திற்கு வந்தால் என் கண்கள் ஊரனொடு பொருத அளவில் அப்பரத்தை களரிக் களத்தில் தலைவகைக் காணாது தன் கண்களை அகலவிரித்து நோக்குவாள்' என்று கூறுகிறாள். தலைவனைக் கண்ட மாத்திரத்திலேயே அவனைப் பிணிந்துவிட முடியும் என்ற அவளின் தன்னம்பிக்கை இதில் புலனாகிறது.

தலைவன் புதிய பரத்தையை விரும்பி அவளுடன் உறைந்தான். அப்பரத்தை பழைய பரத்தையான இற்பரத்தையைப் பழித்தாள் எனக் கேள்வியுற்று 'அப்பரத்தை என்னை ஏசியவாறு தலைவனுடன் செல்வதற்கு, தலைவன் காண குரவையாடும் காலத்தில் நான் அங்கு செல்லாததே காரணமாகும். நானும் என் அழகு காட்டி அங்கு சென்றேனாயின் நான் செல்லும் இடமெல்லாம் என்னையே சுற்றிச்சுழலுமாறு தலைவனைச் செய்திடுவேன். அவ்வாறு செய்யவில்லை எனில் சோழனை எதிர்த்த ஆரியப்படை தோற்று ஓடியது போல எனது வளையல்கள் உடைந்து சிதறட்டும்' என்று அவளின் தோழியர் கேட்கும்படி சூளுரைக்கின்றாள். இப்பாடல்களில் பரத்தை தான் பேசுவதை மற்றைய பரத்தையர்களும் அறிந்துகொள்ள வேண்டம் என்பதற்காகப் பேசுவதால் படர்க்கை எனும் களன் அமைந்துள்ளது. பரத்தை தன் அழகின் பெருமையை விதந்து கூறிச் சூளுரைக்கும் நிலையில் முன்னிலை என்னும் களன் அமைந்துள்ளது.

தலைவன் பிரிவுகண்டு பரத்தை கூறியது

தலைவன் பிரிவில் கூற்று நிகழ்த்துவது பரத்தை கூற்றில் இரண்டாம் களனாக அமைகிறது. தலைவன் பரத்தையின் பிடியிலிருந்து தன் மனைக்குச் செல்ல விரும்புகிறான். இதைத் தோழி வாயிலாக அறிந்த பரத்தை,

'அம்ம வாழி தோழி மகிழ்நன்
தன் சொல் உணர்ந்தோர் அறியலன் - என்றும்
தண் தளிர் வெளவும் மேனி
ஒண் தொடிமுன்கை யாம் அழப்பிரிந்தே'
(ஐங்.38:1-4)

என்றும் குறிப்பிடுகின்றாள். பரத்தை வீட்டிலிருந்து தலைவன் தன் வீட்டிற்குத் திரும்பிய போது தலைவி, பரத்தையின் பெண்மை நலமெல்லாம் துய்த்து காதல் நீங்;கிப் பிரிந்ததாகக் கூறுகின்றாள். அது கேட்ட பரத்தை தலைவியின் பாங்காயினர் கேட்கும் படி தன் தோழியிடம் 'நம்மை அணைத்துப் பின் நம் தோள்கள் மெலியுமாறு தலைவன் பிரிந்து சென்றான் எனினும் அவன் பிரிந்தவன் அல்லன்' என்று கூறுகிறாள். இதன் மூலம் தலைவன் தன்னிடமே மிக்க அன்புடையவன் என்பதையும,; விரைவில் தன்னிடம் வந்துவிடுவான் என்பதையும் தலைவிக்கு உணர்த்துகிறாள்.

தலைவன் மனைவிக்குப் பெரிதும் அன்பு செய்கிறான் எனக்கேட்ட பரத்தை அவன் வாயிலாக அனுப்பிய பாணனிடம்' தலைவன் தலைவிக்குப் பெரிதும் தலையளி செய்து தன் பெண்டு எனக் கருதியதற்கு அவளிடம் அமைந்த நல்ல பண்புகளும், அவளது பெண்மை நலமும் காரணமாகும்' என்று கூறுகிறாள். தலைவன் தலைவியிடம் அன்பு காட்டுவதற்குக் காரணம் மணந்து கொள்ளப்பட்டவள் என்பதைத் தவிர காதல் இன்பம் தரும் சிறப்பினால் அல்ல என்பது அவளது கருத்தாகும். இதில் தலைவியின் தோர்pயர் கேட்கும்பழ வுறுவதால் படர்க்தை எனும் களன் அமைந்துள்ளது.

பரத்தையின் மனையில் இருந்த தலைவன் தலைவி மகவு ஈன்றது அறிந்து அவளிடம் செல்கின்றான். அது கண்ட பரத்தை 'மைந்தன் பிறந்தமையால் மகிந்து இடையாமத்துக் கள்வன் போல இருளிலே வந்துற்றான்' என்று தலைவியின் பாங்காயினர் கேட்கும்படிக் கூறுகிறாள். மகவு பிறந்ததாலேயே தலைவியின் இல்லம் சென்றான். இல்லாவிட்டால் தன்னைப் பிரிந்து செல்லமாட்டான் என்பதை உட்பொருளாகக் கொண்டு பரத்தையின் கூற்று அமைந்துள்ளது. தலைவன் பரத்தையை விட்டுத் தம் இல்லத்திற்குச் செல்கிறான். இதை அறிந்த பரத்தை தன்னிடம் அவன் செய்ததைத் தலைவி கேட்டு வெறுப்படைய வேண்டும் என்பதற்காகத் தலைவிக்குப் பாங்காயினர். கேட்டுகும்படித் தன் தோழியிடம், 'ஊரன் என் கூந்தலைப் பற்றி வளையல்களைக் கழற்றிக் கொண்டபோது இதை உன் மனைவியிடம் சொல்லுவேன் என்றேன். அப்போது அவன் மத்தளத்தின் மார்ச்சனை வைத்த பக்கம் அதிர்வதுபோல அதிர்ச்சியுற்று நடுங்கினான். அதை நினைக்கும் போதெல்லாம் நான் சிரிப்பேன்' என்று கூறுகின்றாள். தலைவனின் இந்த நடத்தை கேட்டு தலைவி வெறுக்கவேண்டும் என்பதே பரத்தையின் நோக்கமாகும்.

தலைவி தான் பூப்பு நீராடியதை உணர்த்த தோழியைச் செவ்வணி செய்து விடுகிறாள். அது கண்ட பரத்தை தலைவியின் பாங்காயினர் கேட்கும்படித் தன் தோழியிடம் 'தலைவனை நாம் கொண்ட பெருந்தன்மை காரணமாக அனுப்பினேன். அவ்வாறு அனுப்பியது அறியாமல் தலைவி மீது கொண்ட அன்பினால் தான் தலைவனை அனுப்பினோம் என்று ஊரார் கூறுகின்றனர். அவ்வாறு கூறின் அவனை மீண்டும் கைக்கொள்வோம்' என்று கூறுகிறாள்.

தன்னிடமிருந்து பிரிந்த தலைவன் புதிய பரத்தையின் வீட்டுக்குச் செல்வதை அறிந்த பரத்தை தலைவனுக்குக் கேட்கும்படி 'திருவிழா இல்லாத காலத்தில் இவனால் விரும்பப்பட்ட இவள் தன்னை அழகுபடுத்திக்கொண்டு தெருவில் சென்றதைக் கண்ட ஊரார் நகைத்தனர். குலமகளிர் தத்தம் கணவரை இவளிடமிருந்து காத்துக்கொண்டனர். அவ்வாறிருக்க இவள் இவனைப்பற்றிக் கொண்டதில் வியப்பில்லை' என்று கூறுகின்றாள். இக்கூற்றுகளில் பலரும் கேட்கும்படிக் கூறுவதால் படர்க்கை எனும் களன் அமைந்துள்ளது.

தலைவனோடு ஊடிக்கூறியது

தலைவனோடு ஊடுதல் பரத்தை கூற்றில் மூன்றாம் களனாகும். தலைவன் சேரிப்பரத்தையிடம் நட்பு கொண்டுள்ளான் என அறிந்த காதல் பரத்தை அவன் தன் இல்லம் வந்தபோது, 'அத்தி என்பானை காவிரிப்பெண் கவர்ந்து கடலில் சென்று மறைத்துக்கொண்டது போல, சேரிப்பரத்தை உன்னைக் கவர்ந்து சென்றதால் என்நெற்றியில் பசலை படர்ந்தது. அதனால் என் அழகினைத் திரும்பத் தந்துவிட்டு நீ செல்வாயாக' என்று கேட்கின்றாள்.

'ஆதிமந்தி நீர் சொரியும் கண்களுடன் எல்லாவற்றையும் வெறுத்திருக்கும்படி காவிரிப் பெண்ணாள் ஆட்டனத்தியைக் கவர்ந்துகொண்டு ஒளித்ததுபோல நின் மனைவியும் நின்னைக் கவர்ந்து கொண்டுபோய் ஒளித்து விடுவாளோ என அஞ்சுகின்றேன். எனவே சேரனுடைய வஞ்சி மாநகர் போன்ற என் மேனி நலத்தினைத் தந்துவிட்டுச் செல்வாயாக' என்று தலைவனிடம் கூறுகின்றாள். தலைவன் தன் இளம் புதல்வன் சொல்லிய சொற்களைத் தன் பாங்காயினர் கூறக்கேட்டு மகிழ்ந்தான் என அறிந்த பரத்தை 'தலைவனே இனி நீ என்னோடு சேர்ந்து வாழ்வது அரிது. எனவே உன் மனைவியோடு சேர்ந்து வாழ்வாயாக' என்று கூறுகின்றாள். தலைவன் பிரியக்கருதும்போது பரத்தை அவனோடு ஊடுகிறாள். அப்போதெல்லாம் 'என் அழகு நலனைத் தந்துவிட்டுப்போ' என்று தலைவனை இரந்து கேட்கின்றாள். தலைவன் தன்னை வெறுத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாள். இதில் தலைவனுடன் நேரடியாகப் பேசுவதால் 'முன்னிலை' என்னும் களன் அமைந்துள்ளது.

தூதாகவந்த பாணனிடம் கூறியது

காதற்பரத்தையைக் கூடிய தலைவன் பின் அவளைக் கைவிட்டு அயற்பரத்தையிடம் சென்றான். பின் காதற்பரத்தையை அணுகவேண்டி அவள் சினம் தணிக்கப் பாணனைத் தூதாக அனுப்புகின்றான். அவ்வாறு தூதுவந்தவனிடம் 'நின் தலைவன் எம் சேரிக்கு வந்து என் நெஞ்சைப் பற்றிக் கொண்டான். இனி அப்பழி நீங்காது. நீயும் அஞ்சுமாறு என் அன்னை மூங்கிற்கோலைக் கையில் கொண்டவளாய் சினந்த வண்ணம் உள்ளாள். அதனால் நீ இங்கு வராதே' என்று கூறுகின்றாள்.

ஊடல் நீங்கி வாயில் நேர்ந்தது

பல பரத்தையரோடு கூடி மகிழ்ந்த தலைவன் மீண்டும் காமக்கிழத்தியைக் காண வருகின்றான், தலைவனோடு ஊடல் கொண்டிருந்த அவள் 'பிற பரத்தையர் போன்று தலைவனை முயங்கவேண்டாம் எனக்கூறியும், என் தோள்கள் மாறுபட்டு உன்னுடன் முயங்கக் கருதின. நீ குறிப்பிட்ட இடத்திற்கு வராததால் சில பரத்தையர்கள் வந்து எம் இல்லத்தின் கதவைத் தட்டினார்கள். அப்பரத்தையர்களையும் நோகவில்லை. சேரிப்பரத்தையர்களைக் கூடி அவர்கள் வேட்கையை நின் மார்பு தீர்க்கும் என்ற ஊரார் சொல்லையும் நோகவில்லை. நீ பிரிந்ததால் என் தோள்கள் மெலிவுற்றன. பழைய நிலையைப் பெறுவதற்கு மனம் நொந்து நிற்கின்றேன். நீ விரும்பாத முயக்கம் எனக்கு கனவில் வந்த செல்வத்தைப் போல இன்பம் தருவதாகும்'. எனத் தலைவன் வரவை எதிர்நோக்கியிருந்த தன் நிலையைக்கூறி வாயில் நேர்கின்றாள். தலைவன் நேரில் முயங்கவில்லை ஆயினும் கனவிலாவது அதைப்பெற்று மகிழ்வோம் என்று கூறுகின்றாள்.

பரத்தையர் சேரியிலிருந்து வந்து ஊடல் தீர்க்கும் தலைவனிடம் காமக்கிழத்தி 'பரத்தை தன் அழகினால் உன்னைத்தாக்கி தன்வசப்படுத்திக்கொண்டு பின் கைவிட்டுவிட்டாள். நீ அவளை அடைவதற்காகப் பாகனை அவள்பால் அனுப்பியும் வராமையால் எம்மிடம் விருப்பம் உள்ளவன் போல வந்து நிற்கின்றாய். நீ விரும்பிய பரத்தையர் மீது விருப்பம் நீங்கினால்தான் என்னை நினைப்பாய் எனவே நீ விரும்பினாரிடத்தே செய்யக்கருதியதை செய்து முடிப்பாயாக' என்றும், 'உன் ஒருத்தியைத் தவிர தலைவனுக்கு உரிய பிறபெண்டிர் இல்லை என்று சூளுரைத்த பாணன் இங்கு இருந்தால் உன் உடலில் உள்ள பற்குறி, நகக்குறி ஆகியவற்றை அவனிடம் காட்டுவேன். முழுப்பொய்யனாகிய அவனிடம் நின் பரத்தையர்கள் செய்த வளைக்குறியையும் காட்டுவேன். ஆண்டுக்கு ஒரு முறை இங்கு வரும் நின் வரவு வாடிய பயிருக்கு சிறு தூறல் வெப்பத்தைக் கிளப்பிவிட்டது போல வருத்தத்தைத் தருகின்றது. ஆகவே நீ மனந்திருந்தி வரும் வரை யாம் ஆற்றியிருப்போம். நீ பரத்தையர் மனைக்கே செல்வாயாக' என்றும் கூறுகிறாள்.

இவ்விரு கூற்றுகளிலும் காமக்கிழத்தி தலைவனிடம் அவன் விருப்பம் தீரும் வரை இருந்து விட்டுப் பின் தன்னிடம் வந்தால் போதும் என்றும், அதுவரை தான் காத்திருப்பதாகவும் கூறுகின்றாள். இதன் மூலம் தலைவனின் கூடலை மட்டும் விரும்பாது அவனுடைய உண்மையான அன்பையே அவள் விரும்புகிறாள் என்பது புலனாகின்றது. தலைவனிடம் பரத்தமையை அவன் மீது கொண்ட அன்பின் காரணமாக ஏற்றுக்கொள்வதற்கும் அவள் துணிகின்றாள். கூடல் குறியுடன் தம் இல்லிற்கு வந்த தலைவனிடம் காமக்கிழத்தி 'பரத்தை உகிராலும் பல்லாலும் செய்த குறிகளை என்னிடம் காட்டும்படி பாணன் உன்னை அனுப்பிவைத்தானோ? உன் மகளிர் ஊடி வீசிய சாதிலிங்கக் கறை படிந்த மார்பினை என்னிடம் காட்டும்படி நின் புலைத்தி அனுப்பி வைத்தாளோ? பிறருடன் கூடியதால் மென்மைப்பட்ட உன் கோதையையும் பிறர் கூந்தலிலிருந்து விழுந்த துகள்களையும் என்னிடம் காட்டும் படி உன் அந்தணன் அனுப்பிவைத்தானோ? நீ நெஞ்சழிந்து நின் காமத்திற்கு இசைந்தவரோடு கூடி வாழ்கின்றாய். அதைவிட நாங்கள் காமநோயால் வருந்தவது இழிந்தது கிடையாது' என்று கடிந்துரைக்கின்றாள். இதன் மூலம் தலைவன் இழிசெயல்களைச் செய்கின்றான் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றாள். இதி;ல் தலைவனிடம் காமக்கிழத்தி நேரடியாகப் பேசுவதால் முன்னிலை எனும் களன் அமைந்துள்ளது.

பரத்தையரிடமிருந்து திரும்பிவந்து நீ ஏமுற்றனையோ, என்ற தலைவனிடம் காமக்கிழத்தி 'நின் புகழைப் பாடித்திரியும் பாணனும் பித்தேறினன் ஆவான். நின் பொய்மொழிகளை மெய்மொழிகளாகத் தெளியும் பரத்தையரும் பித்தேறினர். முற்பகலில் ஒருத்தியுடன் கூடியிருந்து, நண்பகலில் வேறோருத்தியிடம் சென்று, பிற்பகலில் மற்றொருத்தியைத் தேடும் உன் நெஞ்சத்தால் நீயும் பித்தேறினாய். பரத்தையரைப் பிடிக்கும் வலை என்று ஊரார் இகழும்படியுள்ள உன்தேரும், பாகனும் பெரிதாகப் பித்துப்பிடித்துத் திரிவர். நிறையுடைய என் நெஞ்சு ஆற்றியிருக்குமே தவிர என்றும் பித்துப்பிடித்து அலையாது' என்று உரைக்கின்றாள், தனக்குத் தலைவனாகிய பித்துதான் பிடித்திருக்கிறது என்று கூறுவதன் மூலம் தலைவன் மீது உள்ள அன்பையும் வெறுப்பையும் ஒருசேரக் காட்டுகிறாள்.

மற்றொரு காமக்கிழத்தி பரத்தையர் சேரி சென்று திரும்பிவரும் தலைவனிடம் 'பரத்தையருடன் கூடியதற்குச் சான்று பகரும் கண்ணியுடன் எம் இல்லிற்கு; வந்தனை. நாம் வந்தால் இவள் அழகு பெறுவாள், நீங்கினால் அழகும் நீங்கப் பெறுவாள் என்ற தகைமைதான் நீ அவ்வாறு வருவதற்கு காரணம். கையினால் அழுத்துவதால் முகைஅலர்ந்தாற் போன்று உன் அன்பில்லாத முயக்கம் எனக்குக் குளிர்ந்த பனிக்காலத்தைப் போலக் கொடிதாக இருந்தது. நீ அன்பின்றித் தழுவுதலால் பயன் எதுவும் இல்லை. ஆதலால் நீ பரத்தையரிடம் செல்வாயாக' என்று வருந்திக் கூறுகின்றாள்.

இவ்வாறு காமக்கிழத்தியர் கூறும் கூற்றுக்கள் யாவிலும் தலைவன் மீது அவர்கள் கொண்ட அன்பே வெளிப்படுகின்றது. அன்பு இல்லாத, பிறர்மீது மனம்வைத்த பொய்யான முயக்கத்தை அவர்கள் விரும்பவில்லை, அதற்காகத் தலைவனைக் குறை சொல்லவும் விரும்பவில்லை. அவனது விருப்பம் நீங்கியபின் திரும்பி வந்தால் போதுமென்றும் அதுவரை ஊடாது ஆற்றியிருக்கவும் தயாரென்றும் கூறுகின்றனர். இதன் மூலம் தலைவிக்கு நிகரானவர்களாகக் காமக்கிழத்தியர் படைக்கப்பெற்றுள்ளனர். ஆனால் தலைவிக்கு நிகரான உரிமை இல்லாதவர்களாதலால் ஊடலைத் தலைவியை விடச் சற்று குறைவாகவே கையாளுகின்றனர்.

தலைமகளோடு சேர்த்து வைத்து அறிவுரை கூறுதல்

தலைவனைத் தலைவியோடு சேர்த்து வைத்து அறிவுரை கூறுவது பரத்தை கூற்றின் நான்காம் களனாகும். பரத்தையரிடமிருந்து மீண்ட தலைவன் தன் தலைவியிடம் வருகிறான். தலைவி ஊடல் நீங்காது நிற்க, தலைவன் செய்வதறியாது வருந்துகிறான். அப்போது முதுமைவாய்ந்த அவனது காமக்கிழத்தி 'பயன்படுத்த முடியாத பழைய தோணியைப் புன்னை மரத்தில் கட்டிவைத்திருக்கும் ஊரையுடையவனே! உன் தலைவிமீது கொண்ட அன்பில் குறை இல்லாது அவளைப் புரிந்துகொண்டு நடக்கவேண்டும். அவ்வாறு இல்லையெனில் உன்னை விரும்பும் மகளிர் என்னைப் போலவே தளர்ந்துபோன தோள்களையும், அழுத கண்களையும் உடையவராய் மலர்ந்த உடனேயே கருகிப்போன பூக்களைப்போல ஆகிவிடுவர்' என்று கூறுகின்றாள். தன்னைக் கைவிட்டுத் துன்பத்தில் ஆழ்த்தியது போலத் தலைவியையும் செய்து விடாதே என்று தலைவனுக்கு அறிவுறுத்துகின்றாள்'

சமூக நோக்கில் சங்க மகளிர் குறித்து ஆராய்ந்த கே.பி. அழகம்மை 'சங்கஇலக்கியப் பாடல்களில் பரத்தையர், தலைவன் தலைவியர் ஊடலுக்குப் பின்னனியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். பரத்தை என்ற சொல் 13 இடங்களிலும் பரத்தமை என்ற சொல் ஒரே ஒரு இடத்திலும் மட்டுமே பயன்படுத்தியது கொண்டே இதனை உணரலாம்' என்றுரைப்பது இவ்விடத்தில் சுட்டத்தக்கது. மேலும் 'அகத்திணையொழுக்கத்தில் மருதத்திணைப்பகுதி ஒப்புயர்வற்ற குணங்களாற் சிறந்த தலைவன் பெருமைக்கு இழுக்காகவே தோன்றுகிறது. இதனை தலைவியின் ஒழுக்கந்தவறாத கற்புத் திறனைப் புலப்படுத்தல் கருதியும், அவள் ஊடற்குக் காரணமாய் இன்பம் மிகுவித்தல் கருதியும் நாடக வழக்காகப் புலவர்கள் அமைத்த வழக்கு என்று கொள்ளலே ஏற்புடையதாகும். பரத்தமை தமிழர் வாழ்க்கை நாகரிகத்தில் ஒருபகுதி எனக் கோடல் தவறு. இதனால் தமிழகத்தில் பரத்தமையே இல்லை என்று சாதித்தலும் அறிவுடைமையன்று பரத்தமை இல்லாத நாடே இல்லை என்பதுதான் உண்மை' என்ற சுப்புரெட்டியார் கூற்றும் குறிப்பிடற்குரியது.

எனவே சங்க இலக்கியம் குறிப்பிடுவது போல பரத்தமை ஒழுக்கம் இருந்திருக்க முடியாது என்றும், ஓரளவு இருந்த அவ்வொழுக்கத்தை இலக்கியச்சுவையை மிகுவிப்பதற்காகச் சற்று மிகைப்படுத்தி சுங்கப்புலவர்கள் பாடியிருப்பார்கள் என அறிய முடிகிறது. பரத்தமை இல்லை எனில் தலைமக்களிடையே ஊடல் ஏற்படுவதாகக் கூறியிருக்க முடியாது. ஊடல் சமையலுக்கு உப்பு போல, வாழ்க்கைக்கு முக்கியமானது என்பதைத் திருக்குறள் 'உப்பமைந்தற்றால் புலவி.....' என்று குறிப்பிடுகிறது. மேலும் ஊடலின் சிறப்பை.

'புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தோடு
நீரிளைந் தன்ன தகத்து'


என்று ஊடுதலைவிட பெரிய இன்பம் தேவருலகில் கூட இல்லை என்று குறிப்பிடுகிறது.

எனவே இவ்வூடல் இன்பத்தைப் பாடுவதற்கும் அது தொடர்பான பிற கூறுகளைப்பாடுவதற்கும் ஊடல் தோன்றுதற்குக் காரணமான பரத்தமையைப் புலவர்கள் கையாண்டுள்ளனர் எனக் கருத இடமுண்டு இதற்குப் பரத்தையர் கூற்றுகள் களனாகியுள்ளன.

பயன்பட்ட நூல்கள் :

1. தொல். பொருள். கற்பு.நூ.10.
2. மு. சண்முகம்பிள்ளை, (ப.ஆ) தொல். பொருள். கற்பு ப.139.
3. அகப்பொருள் விளக்கம், நூ.114.
4. சு. துரைசாமிப்பிள்ளை, (உ.ஆ) நற்றிணை. ப.96.
5. மு. சண்முகம்பிள்ளை, (ப.ஆ) தொல். பொருள். கற்பு. ப.139.
6. ஆ.பெ.இ. தொல். பொருள். கற்பு. ப.139.
7. ஆ.பெ.இ. அகநானூற்றுச் சொற்பொழிவுகள். பக்.23-24.
8. கே.பி. அழகம்மை, சமூக நோக்கில் சங்கமகளிர், ப.205.
9. ந. சுப்புரெட்டியார், அகத்திணைக்கொள்கைகள், ப.383.
10. மு. வரதராசன், (உ.ஆ) திருக்குறள், 1302.


 

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி, கோவை-641 035

 

 





 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்