'நம் நினைவில் நிற்கும் நெல்லை சு.பாரதிமுத்து!'

முனைவர் இரா.மோகன்


வித, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராது இருத்தல்' என்னும் 'பாட்டுக்கொரு புலவர்' பாரதியாரின் வாக்கினைப் பொன்னே போல் போற்றி, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொய்வில்லாமல் தொடர்ந்து தமிழ்ப் பணி ஆற்றி வரும் ஓர் ஆற்றல்சால் ஆளுமையாளர் நெல்லை சு.முத்து. இந்திய விண்வெளித் துறையின் முதனிலை விஞ்ஞானியான அவர், தம் பள்ளிப் பருவத்தில் பதினாறாம் வயதில் இலங்கை வானொலி கூட்டுத் தாபன வர்த்தக சேவையில் கவிதை வழங்கிய பெருமைக்கு உரியவர்; பாளையங்-கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் இளம் அறிவியல் (வேதியியல்) இறுதி ஆண்டுப் பட்டப் படிப்பின் போது நடைபெற்ற 'விடுதலை வெள்ளிவிழாக் கவியரங்'கினில் (16.08.1972) முதன்முறையாக மேடை ஏறிஇ 'தேசிய சுதந்திரம் காப்போம்' என்ற தலைப்பில் கவிதை பாடி முதல் பரிசினைத் தட்டிச் சென்றவர். 'வைரப் படிகங்கள்' (1990), 'மானுடம் பாடுவோம்', 'பூமித் தொட்டில்' (2004), 'அறிவியல் கலை வளர்ப்போம்' (2014), 'சாராபாய் காவியம்', 'ஹைக்கூ பதிற்றுப்பத்து' (2014), 'எண்ணும் எழுத்தும்' என்பன நெல்லை சு.முத்து வெளியிட்டுள்ள கவிதைத் தொகுப்புக்கள் ஆகும். மேலும், ஒரு தேர்ந்த மொழி-பெயர்ப்பாளராகவும் அவர் தடம் பதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மலையாள மகாகவி குமாரன் ஆசான், ஞானபீட விருதாளர் கவிஞர் ஓ.என்.வி.குறுப்பு, கவிஞர் இரமேசன் நாயர் மற்றும் யான் கொஹனோவ்ஸ்கி எனும் போலந்துக் கவிஞர் ஆகியோரது படைப்புக்கள் நெல்லை சு.முத்துவின் கை வண்ணத்தில் அழகிய மொழிபெயர்ப்புக்களாக வெளிவந்துள்ளன. 2003-ஆம் ஆண்டில் அறிவியல் பரப்புதலுக்கான தேசிய விருதினைப் பெற்ற விஞ்ஞானி என்பதோடு, தமிழக அரசு வழங்கும் சிறந்த நூலாசிரியருக்கான முதற் பரிசினை ஐந்து முறை பெற்ற ஒரே எழுத்தாளர் என்ற தனிச்சிறப்பும் நெல்லை சு.முத்துவுக்கு உண்டு. எல்லாவற்றுக்கும் சிகரமாக, பாரத மணித்திரு நாட்டின் முன்னைக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்களால் 'தம்மோடு ஒத்த அலை நீளத்தில் சிந்திப்பவர்' என 01.06.2002-இல் சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கினில் நடைபெற்ற 'இந்தியா – 2020' மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா மேடையில் பாராட்டப் பெற்றவர் நெல்ல சு.முத்து. டிசம்பர் 2016-இல் வெளிவந்துள்ள 'பாரதி காவியம்' இவரது இன்னொரு புதிய பரிமாணம் ஆகும். இனி, ஒரு பறவைப் பார்வையில் இக் காவியத்தின் அமைப்பும் அழகும் குறித்து ஈண்டுக் காண்போம்.

சான்றோர் மதிப்பீட்டில் நெல்லை சு.முத்து

நெல்லை சு.முத்துவின் 'வைரப் படிகங்கள்' என்னும் முதல் கவிதைத் தொகுப்பிற்கு எழுதிய அணிந்துரையில், 'கவி வானில் சிறகடித்துப் பறக்கும் ஒரு 'தும்பா'த் தும்பி' என அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் பேராசிரியர் கி.நாச்சிமுத்து.

வானம்பாடி இயக்கத்தின் மூத்த கவிஞரான சிற்பி பாலசுப்பிரமணியம், நெல்லை சு.முத்துவின் 'பூமித் தொட்டில்' என்னும் கவிதை நூலுக்குத் தந்துள்ள அணிந்துரையில், 'மரபின் தொடர்ச்சி, அறிவியல் நேயம் என்னும் இரண்டின் சங்கமமாக இவர் கவிதைகள் துலங்குகின்றன' எனத் தம் மதிப்பீட்டினைப் பதிவு செய்துள்ளார்.

'கதவு திறக்கும் கதம்ப வனம்!' என்னும் தலைப்பில் 'பாரதி காவிய'த்திற்கு வழங்கியுள்ள வாழ்த்துரையில் கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன், 'சொல்லை அடைகாத்துச் / சுடர்க்கவிதை மலர்விக்கும் / நெல்லை சு.முத்து' எனச் சுட்டுவதோடு, 'எல்லாத் / திசைகளிலும் இயங்கி / இலக்கியம் வளர்ப்பவன்' என்றும, 'இன்றைய / அறிவியல் தமிழ் எழுத்தாளர்களில் / இவனே அகர முதல்வன்' என்றும், 'அப்துல் கலாமின் / கருத்தறிந்தவன்; அவர் எண்ணங்களில் / கருத்தரித்தவன்' என்றும், 'இழைஇழையாய்த் தன்னை / ஹைகூவில் / இணைத்துக் கொண்டவன்' என்றும் நெல்லை சு.முத்துவின் பன்முகத் திறன்களையும் அடையாளம் காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

'கவிராஜன் கதை'யும் 'பாரதி காவிய'மும்

கவிஞர் வைரமுத்து 'சாவி' வார இதழில் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றினைப் புதுக்கவிதை வடிவில் 'கவிராஜன் கதை' என்னும் தலைப்பில் தொடர்ச்சியாக ஓர் ஆண்டுக் காலம் எழுதினார்; பாரதியாரின் நூற்றாண்டு விழாவின் நினைவாக 1982-ஆம் ஆண்டில் பாரதி பதிப்பகம் இந் நூலினை வெளியிட்டுப் பெருமை தேடிக் கொண்டது. இந் நூலுக்கு எழுதிய முகவுரையில் வைரமுத்து, 'ஒரு கவிஞனின் வரலாறு கவிதையால் எழுதப்பட்டமையானும், புதுக்கவிதை நெடுங்கவிதையாக முடியும் என நிரூபித்தமையானும், புதுக்கவிதைக்குக் காப்பியத் தகுதி பெற்றுத் தந்தமையானும் முவ்வழிகளில் இந்நூல் முதனூலாமென்க' (ப.6) எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

சரியாக 35 ஆண்டுக் கால இடைவெளிக்குப் பிறகு நெல்லை சு.முத்து பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றினை மரபுக் கவிதை வடிவில் 'பாரதி காவியம்' என்னும் தலைப்பில் படைத்துள்ளார். 'பாரதி வாழ்க்கைக் குறிப்புகளைக் கால வரிசைப்படுத்தி, வகைப்படுத்தி வெவ்வேறு கவிதை இனங்களில் அதன் பொன் சிறகுகள் படபடத்திடஇ மூன்று பெரும் காண்டங்களில் அவற்றை வெகு கவனமாக வடித்தேன்... மரபில் வேரூன்றி வாமனனுக்கு வானத்தை அளக்கும் வீச்சு வசமாவது போலவே, எளிய அறிவியல் தமிழ்க் கவிஞன் எனக்கும் இந்தக் காவிய முயற்சி சாத்தியமாயிற்று... பாரதி எனும் சூரிய வெளிச்சத்தில் தமிழறிவு நீரும், அனுபவக் கரியமில வாயுவும் கவிதைப் பச்சையத்தில் திரட்டிய ஒளிச்சேர்க்கை மட்டுமே எனது பங்களிப்பு!' ('என்னுரை', பக்.16, 17) என இக் காவியத்திற்கு எழுதிய முன்னுரையில் நெல்லை சு.முத்து ஆழ்ந்திருக்கும் தம் கவியுளத்தினைத் திறந்து காட்டியுள்ளார்.

'யுகக் கவியாம் நெருப்பின் கதை'

'பாரதி காவியம்' தியாகக் காண்டம், யாகக் காண்டம், யோகக் காண்டம் என்னும் முப்பெருங் காண்டங்களால் உருவாக்கப் பெற்றுள்ளது. 'பாட்டுத் திறத்தால் வையகத்தைப் / பாலித்திடவே உறுதிகொண்ட / நாட்டுப் புலவன்' எனத் 'தமிழ்த்தாய் வணக்'கப் பாடலில் பாரதியை அறிமுகம் செய்யும் கவிஞர்,

'வெந்தழல் போல்மிடி வெள்ளையர் மேல்இடி
       வீசிய மின்னொளி நீ!
வேரிடும் சாதிகள் போரிடும் சேதிகள்
       வீழ்த்திய வாள்முனை நீ!
வந்தனை யாய்உயர் பெண்மையின் மேன்மைகள்
       வாழ்த்திய பூங்குயில் நீ!
'வந்தே மாதர' தாரகம் ஓதிய
       மந்திரச் சங்கொலி நீ!
' (பா.கா., ப.22)

எனப் பாரதியின் கவி ஆளுமையைப் பறைசாற்றும் வகையில் வாழ்த்து இசைக்கின்றார்; தொடர்ந்து, 'அவை அடக்க'மாக எழுதிய கவிதையில், 'யுகக்கவியாம் நெருப்பின் – கதை / படைக்கத் துடித்த என் பிழை பொறுப்பீர்!' எனவும் வேண்டுகோள் விடுக்கின்றார்.

'யுக அருணோதயம்'

'பாரதி காவிய'த்தின் முதல் பகுதியான 'தியாகக் காண்டம்' பாரதியின் பிறப்பினைக் குறிக்கும் 'யுக அருணோதய'த்துடன் தொடங்குகின்றது. அதில் சின்னச்சாமி – இலக்குமணி இணையர்க்குத் திருமகனாகப் பாரதி பிறக்கும் பொன்னான தருணத்தை நெல்லை சு.முத்து கவிச்சுவை நனி சொட்டச் சொட்ட இங்ஙனம் பாடுகின்றார்:

'கற்பினியாள் நெருப்பைத் தன் கருப்பை ஏந்திக்
      கர்ப்பிணியாள் ஆகிசுடர் ஈன்றெ டுத்தாள்!'
(பா.கா., ப.28)

'கற்பினியா'ளான இலக்குமி அம்மையார் 'கர்ப்பிணியாள்' ஆகி, நெருப்பைத் தன் கருப்பையில் ஏந்தி, சுடர்மிகு அறிவு கொண்ட ஆண் மகவினை ஈன்றெடுத்தாராம்! சொல் அழகும் பொருள் ஆழமும் களிநடம் புரிந்து நிற்கும் அற்புதமான வரிகள் இவை!

தொட்டிலில் படுத்துக் கிடந்த 'பிஞ்சுச் சூரிய'னான பாரதி கால் உதைத்தற்குக் கவிஞர் கற்பிக்கும் – காட்டும் – காரணம் தனித்தன்மை வாய்ந்தது:

'படுத்திருந்த மாநிலத்தாய் துயில் உணர்த்த
       படபடத்தோன் தொட்டிலுக்குள் கால் உதைத்தான்!'
(பா.கா., ப.28)

'ஆண்குழந்தை தாலாட்டு' என்றோ, 'பெண்குழந்தை தாலாட்டு' என்றோ பாடாமல், பாரத மாதாவுக்குத் 'திருப்பள்ளி எழுச்சி' பாடியவர் அல்லவா பாரதியார்? இதனைக் கோடிட்டுக் காட்டும் விதத்தில் நெல்லை சு.முத்து பாடி இருப்பது அருமையிலும் அருமை!

பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் அம்புலிப் பருவம் பாடுவது என்பது அரிது என்பர் ஆன்றோர்.

'ஆறாத சுடர்மிகு அறிவுடன் தோன்றினாய்
    அரியதோர் ஞான வீணை!
அற்புத வானிலே அறிவியல் வெளியிலே
     அம்புலி ஆட வாவே!'
(பா.கா., ப.32)

என அம்புலிப் பருவப் பாடலில் நெல்லை சு.முத்து. பாரதியை 'அற்புத வானிலே அறிவியல் வெளியிலே' அம்புலி ஆட அழைப்பது அவர் ஓர் அறிவியல் தமிழ்க் கவிஞர் என்பதற்குக் கட்டியம் கூறி நிற்கின்றது.

'ஞானகுரு நிவேதிதா தேவி'யின் தரிசனம்

பாரதியின் வாழ்வில் மார்கரெட் எலிசபெத் நோபிள் (1867-1911) என்னும் நிவேதிதா தேவி ஏற்படுத்திய தாக்கம் அழுத்தமானது; ஆழமானது. இதனை அழகுறத் தம் காவியத்தில் பதிவு செய்துள்ளார் நெல்லை சு.முத்து.

1905-ஆம் ஆண்டின் இறுதியில் காசி காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற பாரதி, அன்னை நிவேதிதா தேவியைச் சந்திக்கச் செல்கிறார். 'நெஞ்சத்தில் அன்பைப் பேணு! மன்னுலகில் என்றென்றும் பொன் சரிதப் பெட்டகமாய் வாழ்வாய்!' என்று வாழ்த்திய தேவி, 'இல்லறத்து உற்றவரோ?' எனப் பாரதியிடம் வினவுகின்றார். 'மன்றலது கழிந்து இரண்டு வயதினில் ஓர் மகள் உண்டு மனையில்' என மறுமொழி தருகிறார் பாரதி. தொடர்ந்து 'இன்று உமது பத்தினியை இங்கே அழைத்து வந்திலையோ? ஏன்?' என வினவிய தேவிக்குஇ 'அன்புடையீர்! யான் உற்ற காங்கிரசுக்கு அவளை இங்கு அழைத்து வந்தால் என்ன பயன்?' என விடை இறுக்கிறார் பாரதி. இதனைச் செவிமடுத்த தேவி சினம் கொண்டு,

'சொன்ன உரை பிழை அன்றோ என் மகனே? தோகையர் பால்
     சுகமே நாடும்
தன்னலமே ஆடவரின் புன்குணமாம்! பாவையரைத்
     தாதர் என்னும்

புண்ணுடமை குமுகாயத்து உள்ளமட்டும் பிறவாது
     புதிய பூமி!
பெண்ணுரிமைக் கல்வியது பிறங்கிடில்இம் மண்ணகமே
     பெருமை கொள்ளும்!'
(பா.கா., ப.68)

என மொழிகின்றார். அக் கணமே அன்னை நிவேதிதா தேவியைத் தமது ஞான குருவாக ஏற்றுக் கொள்கிறார் பாரதி. வரலாற்றுச் சிறப்பு மிக்க அன்னை நிவேதிதா தேவியின் இத் தரிசனமே பாரதியின் ஆளுமையில் ஓர் இமாலய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது; 'உயிரின் துணை, அறிவின் இணை, வாழ்வின் மனைக்கிழத்தி / இயற்கை தரும் பரிபூரண சரிபாதி' என உணர்ந்து, பெண் விடுதலைக்காக முழுமூச்சுடனும் முனைப்புடனும் செயலாற்றத் தொடங்கு-கின்றார். இதன் விளைவாகப் பாரதியின் மின்சார வாக்கு நாட்டில் ஏற்படுத்திய தாக்கத்தினை,

''வாரீரோ' என்று அழைத்த பாரதியின் மின்சார
     வாக்கின் தாக்கம்
'ஆரீரோ' என்ற அடிமைத் தாலாட்டில் வாலாட்டி
    அடங்கி வாழும்
சாரீரப் பொன்விலங்கு நாய்கள் எனும் நம் சனத்தைத்
     தலையில் தட்டி
'கோரீரோ விடுதலை' என்று ஆர்ப்பாட்ட உலைக்களத்தில்
       கொதிக்க வைக்கும்!'
(பா.கா., ப.67)

என எடுத்துரைத்துள்ளார் நெல்லை சு.முத்து.

புறநானூற்றுப் பாடலின் அழகிய புத்தாக்கம்


'ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே'

என்னும் பொன்முடியாரின் புகழ் பெற்ற புறநானூற்றுப் பாடல் (312) நெல்லை சு.முத்துவின் கைவண்ணத்தில் இக் காவியத்தில் அழகிய புதுக்கோலம் பூண்டுள்ளது. கவிஞரின் சொற்களில் அப் பாடலின் புத்தாக்கம் வருமாறு:

'அன்னைஎன் கடமை அருந்தவப் புதல்வன்
தந்னையே பெறுதல்! தந்தையின் கடமை
தக்கோன் ஆக்குதல்! தழலின் உலைக்களம்
மிக்கோன் கடமை வேல்அவற்(கு) ஈதல்!
பிள்ளையின் கடனோ பெருங்களப் போரில்
விள்ளரும் யானையைக் கொன்று மீளுதல்!'
(பா.கா.இ ப.82)

இங்கே நெல்லை சு.முத்துவின் புத்தாக்கப் பாடலில், 'நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே' என்னும் பொன்முடியாரின் கருத்தியல் விடுபட்டிருப்பது நோக்கத்தக்கது. பேராசிரியர் மு.இராகவ ஐயங்கார் 'செந்தமிழ்' இதழில் 'வீரத் தாய்மார்' என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையினைப் படித்து 'பிறந்தது மகாபாரதம்' என உளமாரப் பாராட்டி எழுதியதோடுஇ அதனைத் தமது இதழில் மறுபடி வெளியிட்டமை, பாரதியின் ஆழ்ந்த நாட்டுப் பற்றையும் விழுமிய மொழிப் பற்றையும் ஒருசேரப் புலப்படுத்துவதாகும்.

'சமுதாய ரசவாதம்!'

'பாரதி காவிய'த்தின் இரண்டாம் பகுதியான 'யாகக் காண்டம்', 'கூடு மாறிய சுதந்திரக் குயில்' எனப் பாரதி தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு அடைக்கலம் நாடிப் புறப்படுவதைச் சுட்டி, 'குயிலுக்கு விடுதலை' என்பதில் நிறைவடைகின்றது. இக் காண்டத்தில் 'சமுதாய ரசவாதம்!' என்னும் தலைப்பில் பாரதியார் அரிசன இளைஞன் கனகலிங்கத்திற்குப் பூணூல் அணிவித்த நிகழ்ச்சியை நெல்லை சு.முத்து ஆற்றல்சால் மொழியில் பாடியுள்ளார். வ.வே.சு.ஐயர், மண்டயம் சீனிவாசாச்சாரியார், குவளை கிருஷ்ணமாச்சாரியார், என்.நாகசாமி ஆகியோர் முன்னிலையில் நடந்தேறிய இந் நிகழ்வினை,

'சார்த்தும் இளந் திலகமிட்டு தேவி காளிச்
      சக்தியினைத் தொழுதுவிட்டு கனக லிங்க
நேர்த்தியனைக் கிழக்குமுக மாய் அமர்த்தி
      நெற்றியிலும் மார்பிலும் வெண்ணீறு பூசி

மூர்த்தமதில் மண்டியிட வைத்துக் கையில்
     முப்புரிநூல் வழங்கி ஒளிக் கதிர் வாங்கி
தீர்த்தமென அருக்கியமும் தெளித்து மார்பில்
     திருத்தமுறப் பூணூலும் அணிவித் தானே!'
(பா.கா., ப.133)

என நம் மனக்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் நெல்லை சு.முத்து. இத்துடன் நில்லாத, இன்னும் ஒரு படி மேலாக, கனகலிங்கம் தமது அடி தொழுத போது,

'துணிவோடு பிராமணன் நீ என நிமிர்ந்து
     சொல்லமனம் அஞ்சாதே! இன்று தொட்டுப்
பணியற்று எதிரேனும் வினாத்தொ டுத்தால்
      பாரதியைப் போய்க்கேள் என்(று) அதட்டிக்கூறு!'
(பா.கா., ப.133)

என வெடிப்புறப் பேசுகின்றார் பாரதியார். இங்கே 'புரட்சி வீரன்' என்னும் பொருத்தமான சிறப்புப் பெயரால் நெல்லை சு.முத்து பாரதியாரின் ஆளுமைப் பண்பினைப் போற்றியுள்ளார்.

கனகலிங்கத்திற்குப் பூணூல் அணிவித்த கையோடு, பாரதியார் தம் பூணூலைக் கழற்றிவிடுகிறார். இதனை,

''ஊரறிந்த பார்ப்பானுக்கு எதற்குப் பூணூல்?'
       ஓதுமொழி அங்குபுது நீதி தேடும்!'
(பா.கா., ப.134)

எனக் கவிஞர் குறிப்பிடுவது கூர்ந்து நோக்கத் தக்கது. இங்கே 'ஊரறிந்த பார்ப்பானுக்குப் பூணூல் எதற்கு?' எனக் காலங்காலமாக வழங்கி வரும் பழமொழிஇ சமூக நீதியைப் புதுக்கோணத்தில் புலப்படுத்தி நிற்கக் காண்கிறோம்.

'புதுப்பெண்ணுக்குப் புத்திமதிகள்!'


பாரதியாருக்கு உதவி புரிவதையே தம் கடமையாகக் கொண்டு வாழ்ந்தவர் மண்டயம் சீனிவாசாச்சாரியார். அவரது குடும்பத்தைச் சார்ந்த யதுகிரி அம்மையாருக்குச் சில புத்திமதிகள் சொன்னார் பாரதி. அந்தப் புத்திமதிகள் எல்லாப் பெண்மணிகளுக்கும் எல்லாக் காலங்களுக்கும் பொருந்தி வரும் வேத வாக்கியங்கள் ஆகும். 'புதுப்பெண்ணுக்குப் புத்திமதிகள்!' என்னும் தலைப்பில் நெல்லை சு.முத்து அவற்றுக்கு அழகிய கவி வடிவம் தந்துள்ளார். அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க சில வருமாறு:

'பெண்டிர்க்(கு) அழகாம் பெருங்கற்பை நீஉயிராய்
என்றைக்கும் காப்பதுவே எண்ணில் முதற்கடன் ஆம்!
கூண்டுக் கிளியாய்க் குமைந்தும் கிடவாதே!
ஆண்டைக் கணவன்அவன் அன்றிபிற ஆடவர்உம்
சோதரரே! அவர்க்குஅஞ்சி தூர விலகாதே!
மாதர் பயம், வெட்கம் மானக் குறைவு ஆகும்!
படைக்கொள் நேர்ப் பார்வைதனைப் பாய்ச்சுபிற ஆண்மேல்!
கடைக்கண்ணின் பார்வை கணவன்முன் மட்டுமே!
அச்சம், மடம், நாணம், பயிர்ப்புஎனத் தேவைஇல்லாப்
புத்தக பொய்ச்சரக்கைப் போதித்து மூடப்
பழக்கம் பொருத்தினர் பாமர முன்னோர்!
குழந்தை பிறக்கையிலே கோழைத் தனம்ஏனோ?
தூய்மைத்திரு நாடும் தொலைந்ததே அச்சத்தால்
தாய்மைத் துணிவாலே தாரணி முன்னேறும்!
புக்ககம் போயினும் போற்றுவாய் தைரியம்!...
பிறந்தநம் புக்ககம் பீடுறச் செய்யின்
திருந்தும் இருகுடும்பச் சேர்க்கை அறமாம்!
நிமிர்ந்தநடை போடு! நினைவுதள ராதே!
கமழ்ந்த இயற்கையெழில் கண்ணால் பருகு!
நெஞ்சந் துணிவோர்க்கு நீங்காது கற்புநிலை
எஞ்சும் தெளிவோ(டு) இடறா மொழிகூறு!
வீண்வெளி வேடம் விழையாதே!'   
  (பா.கா., பக்.164-165)

'யதுகிரி! உன் மன்றலுக்கு / தேசீய கீதம் ஒன்று செய்திடுவேன் சம்மானம்!' எனச் சொல்லி, பாரதி நிரந்தினிது கூறிய இப் புத்திமதிகள்இ 'தேன்மொழி வேதம் சிறுமிக்கோ பொன்னுரைகள்!' (பா.கா.,, ப.165) எனப் புகழாரம் சூட்டுகின்றார் நெல்லை சு.முத்து.

'அகரம் இகரம் என்று சொல்லு!'


'இல்லை என்ற கொடுமை இல்லையாக வைப்பேன்!' என முழங்கிய பாரதியின் வாழ்வில் அவரது கடைசி மூச்சு வரை வறுமையின் தாக்கமே மேலாண்மை செலுத்தியது. எனினும், எந்நிலையிலும் தாழாமல், வறுமையில் செம்மையாகவே வாழ்ந்து காட்டினார் அவர். ''அரிசி இல்லை' என்று சொல்லாதே. 'அகரம் இகரம் என்று சொல்லு' என்று சொல்லுவார்' (பாரதி சரித்திரம், ப.76) எனச் செல்லம்மா பாரதி குறிப்பிட்டிருப்பது இங்கே மனங்கொளத் தக்கதாகும். இவ்வரிய வாழ்க்கை நிகழ்ச்சிக் குறிப்பினை நெல்லை சு.முத்து தம் காவியத்தில் தக்க வகையில் பதிவு செய்துள்ளார்:

'இல்லாமை இருந்தாலும், 'அரிசி இல்லை'
      எனும் நிலைமை வந்தாலும் பாரதிக்கோ
'இல்லாமை' எனும் சொல்லே மடமை என்பான்!
      இதமாக அவன் 'அகரம் இகரம்' என்னும்
சொல்லாண்மை அகராதி செல்லம் மாட்கும்
      சொல்லி வைத்தான் ஓர்குழுஉக் குறிபுனைந்தான்!'
(பா.கா., ப.166)

'காவியச் சுடரின் கடைசி நாள்'


பாரதியாரின் கடைசி நாள் குறித்து அவரது இரண்டாவது புதல்வி சகுந்தலா பாரதி, நெருங்கிய நண்பர்கள் நீலகண்ட பிரம்மச்சாரி, பரலி. சு.நெல்லையப்பர் ஆகிய மூவரும் நினைவுக் குறிப்புகள் வடிவில் எழுதிய கட்டுரைகள் ரா.அ.பத்மநாபன் தொகுத்துள்ள 'பாரதியைப் பற்றி நண்பர்கள்' (பக்.200-206) என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன. இம் மூவரும் தெரிவித்துள்ள தகவல்களை உள்வாங்கி, அவற்றிற்கு ஓர் உருக்கமான கவி வடிவம் தந்து 'காவியச் சுடரின் கடைசி நாள்' என்னும் தலைப்பில் ஆவணப்படுத்தியுள்ளார் நெல்லை சு.முத்து.

வயிற்றுக் கடுப்பு நோயால் வருந்திய போதும் பாரதியார் கடைசி வரை மருந்து சாப்பிட மறுத்து விட்டார். மருத்துவர் ஜானகிராம் பாரதியை நெருங்கி 'உடம்புக்கு என்ன செய்கிறது?' என்று கேட்ட போது,

'யார்ஐயா உமைஇங்கு அழைத்தார்? எல்லாம்
     சரிதான்எம் உடம்புக்கு ஏதும் இல்லை!
சௌகரியக் கேடில்லை!'
(பா.கா., ப.397)

எனச் சினந்து கொண்டாராம்!

அன்று முன்னிரவில் பாரதி தமது நண்பர்களிடம், ஆப்கானத்தின் வீர மன்னன் அமானுல்லாகானை வாழ்த்தி 'சுதேச மித்திர'னுக்கு ஒரு கட்டுரை எழுதி எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாராம்! இறப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னால் சொன்ன இந்த வார்த்தைகளே பாரதி பேசிய கடைசி வார்த்தைகளாம்! இரவு சுமார் 1.30 மணிக்கு மயக்க நிலையிலேயே பாரதியின் உயிர் பிரிந்ததாம்!.

'மருளாத கவிப்புயலும் மறைந்த தம்மா!
      மறையாத தமிழியலும் இருண்ட தம்மா!
இருளாத தாரகைகள் இமைத்த தம்மா!
      இமையாத காலக்கண் அடைத்த தம்மா!
குறள், கம்பன், சிலம்பெல்லாம் பதறிற் றம்மா!
       குமையாத வேதங்கள் கதறிற் றம்மா!
வறளாத யுகக்கங்கை வடிந்த தம்மா!
       வாடாத வடவெண்மீன் வதங்கிற் றம்மா!'
(பா.கா., பக்.398-399)

எனப் பாரதியின் மரணம் குறித்து அல்லற்பட்டு ஆற்றாது அழுது புலம்புகின்றார் நெல்லை சு.முத்து. இன்று உலகம் வானளாவப் போற்றும் கவிப்பேரரசர் பாரதியின் உடலுடன் அன்று திருவல்லிக்கேணி மயானத்திற்குச் சென்றவர்கள் இருபது பேருக்கும் குறைவாகவே இருக்குமாம். இக் கொடுமையினைப் பற்றியும்,

' . . . . . . ஊர்வ லத்தில்
      தேசபக்தி யோடு கலந்தோர் எண்ணிக்கை
சொல்லாமல் விடுதல்தான் நாக ரிகம்;
      சொல்வதெனில் இருபதுக்கும் குறைவாம் அந்தோ!'
(பா.கா., ப.400)

என மனம் வெதும்பிப் பாடியுள்ளார் நெல்லை சு.முத்து.

சித்திர மின்னல்கள்

பாரதியாரைக் குறித்து இதுவரை ஆய்வு நோக்கிலும் படைப்பிலக்கியப் பாங்கிலும் வெளிவந்துள்ள நூற்றுக்கணக்கான நூல்களுள் திறமான பத்தினைப் பட்டியல் இட்டோம் என்றால், அதில் இடம்பெறுவதற்கான அனைத்துத் தகுதிப்-பாடுகளும் நெல்லை சு.முத்துவின் 'பாரதி காவிய'த்திற்கு உண்டு. இவ் வகையில் 'பாரதி காவிய'த்தில் இடம்பெற்றிருக்கும் சித்திர மின்னல்கள் சிலவற்றை ஈண்டுக் காணலாம்.

'அண்டுபகை வந்தாலும் அயரா வேந்தன்!
     அன்னைதிரு நாடுஉயர்த்தும் தேச பக்தன்!
தண்டமிழ்க்கே அமுதூட்டும் தாயுள் ளத்தான்!
     தளராத ஊக்கமுடன் உழைத்த பெம்மான்!'
(பா.கா., ப.94)

நான்கே வரிகளில் 'நச்'சென்ற மொழியில் பாரதியின் ஆளுமையைப் படம்பிடித்துக் காட்டும் அற்புதமான வரிகள் இவை!

ஒருமுறை புதுவை நகர் வீதி தன்னில் மண்டயம் சீனிவாசாச்சாரியாரின் இளைய மகன் சாமிநாதனுடன் பாரதி நடந்து சென்று கொண்டிருந்தாராம்; பிரெஞ்சு இலக்கியத்தின் மேன்மை பற்றியும் அம்மொழியின் ஞானி விக்டர் யூகோ பற்றியும் மடை திறந்த வெள்ளம் எனப் பேசிக் கொண்டே வந்தாராம். அப்போது அங்கே நடைபெற்ற நிகழ்வு பற்றிய நெல்லை சு.முத்துவின் அருமையான படப்பிடிப்பு வருமாறு:

'மடைதிறந்த வெள்ளம்எனப் பேசுங் காலம்
மருங்கில் அமர்ந்து ஒருதிண்ணைச் சிறுவன் பாடம்
கடம்புரிந்தான் 'இளமையிற் கல்' என்று ஓதி!
கவிஉடனேஇ 'முதுமையில் மண்' என்றான் வேதம்'
(பா.கா., ப.184)

'இளமையில் கல்' – 'முதுமையில் மண்': மின்னல் போல் அடிக்கும் பாரதியின் சிந்தனைத் திறத்திற்குச் சரியான ஓர் எடுத்துக்காட்டு!

'பெரிய உள்ளம், அன்பு உள்ளம், தொல்லுலக மக்கள் எல்லாம் ஒன்றே' என்னும் தாயுள்ளத்திற்குச் சொந்தக்காரர் பாரதியார். இதனை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்த நிகழ்ச்சிகள் பாரதியின் வாழ்க்கை வரலாற்றில் பற்பல உண்டு. அவற்றுள் தலையாய ஒன்றினைக் கவிஞரின் சொற்களிலே ஈண்டுக் காணலாம்.
நண்பர் விசுவநாதனோடு சுலோசனா முதலிப் பாலத்தில் பேசியவாறே நடந்து சென்று கொண்டிருக்கும் போது, ஏழை பழக்காரி ஒருத்தியின், 'தெய்வமே! இன்று / என் செய்கேன்? எப்படி நான் பிழைப்பேன்? ஐயோ! / யாதொன்றும் விற்கலியே!' என வருந்திப் பேசுவதைக் கேட்க நேரிடுகின்றது. உடனே பாரதி முந்திக் கொண்டு 'மாகாளி, ஓம் சக்தி! தாயே! நாங்கள் / இருக்கையிலே அது என்ன வார்த்தை சொன்னாய்? / எத்தனைதான் பழம் உண்டு? இறக்கு, கூடை!' என உரைக்கிறார். பழக்காரி, 'சாமிஇ நல்ல மாராசா!' என்று உளம் வாழ்த்த, அவளிடம் இருந்து அறுபத்து பழங்கள் வாங்கி நண்பருடன் சம பங்கிட்டு உண்டு பசியாறுகிறார் பாரதி. பழக்காரியின் கூடைக்குள் இருபத்து பழம் இன்னும் பாக்கி இருக்கக் கண்ட அவர்இ 'நசையோடு அவை வாங்கி அவட்கே ஈந்து / நன்மக்கள் உனக்கு உண்டேல் அவர்க்கு அளிப்பாய்!' எனக் கூறி ஆறு ரூபாய் வழங்குகிறார். கூடைக்காரி 'இரண்டு போய் அதிகம் தந்தீர்!' எனச் சொல்லி மீதியைப் பாரதியிடம் தருகிறாள். பாரதியோ அன்புடன், 'அன்பார்ந்த குழந்தை உனக்கு எத்தனையோ? / அறைக' என வினவ அவள் தனக்கு இரண்டு பெண்கள் எனக் கூறவும், 'அப்படியே நமக்கும் அம்மா! / இருவருக்கும் ஒவ்வொரு ரூபாய் இந்தா!' என இன்பார்ந்த மொழி கூறி ஈகையாற்றுகிறார். இந்நிலையில்,

''இவ்வுலகில் மனிதர் நோக மனிதர் பார்க்கும்
துன்பார்ந்த வாழ்க்கை இனி உண்டோ?' என்று
துள்ளிஇசை செய்தகவித் துயர் மறுந்தான்!'
(பா.கா., பக்.319-320)

எனப் பாடி கவிதையை நெகிழ்வுடன் முடிக்கின்றார் நெல்லை சு.முத்து.

'நின்றாலும் நடந்தாலும் சிங்க ஏறு!
நெருப்பாகும் அவன்கவிதை தங்கச் சாறு!'
(பா.கா., ப.346)

என இயைபு நலம் மிளிரப் பாரதியின் பாட்டுத் திறத்தினைப் போற்றிப் பாடும் நெல்லை சு.முத்து,

'தரித்திரம் அவனைச் சரித்திட முயன்றும்
சரித்திரம் அவனைத் தாங்கிக் கொண்டது!'
(பா.கா., ப.401)

என இரத்தினச் சுருக்கமான இரண்டே வரிகளில் பாரதியாரின் ஒட்டுமொத்த வாழ்வினையும் பற்றிய தமது மதிப்பீட்டினை வெளிப்படுத்தியுள்ளார்.

நெல்லை சு.முத்துவின் கண்ணோட்டத்தில் பாரதி,

'வெடிபடும் இடியெனக் கவிக்குரல்
மிளிரிடு தமிழ்நடை வடித்தவன்!
பொடிபடு பரங்கியர் வெறிச்செயல்
புகைபட சுடர்என உதித்தவன்!'
(பா.கா., ப.414)

இங்ஙனம் விரிவாகப் பாரதியாரின் பாட்டுத் திறத்தினைப் போற்றிப் பாடுவதோடு, 'ஞாலத்து மாகவி' (பா.கா., ப.22), 'கவிஞருள் மாகவி' (ப.29), 'பகுத்தறிவின் ஒளிவிளக்கு' (ப.117), 'செதுக்கும் இசைக் கவிச்சிற்பி' (ப.136), 'நெறிவழுவாக் கவிப்பெருமான்' (ப.161), 'அல்லலிலும் கையேந்தாக் கவி மானத்தான்' (ப.173), 'மக்கள் கவி' (ப.340), 'யுகக் கவி பாரதி' (ப.414) என்றாற் போல் சின்னஞ்சிறு தொடர்களாலும் சிறப்புப் பெயர்களாலும் பாரதியின் படைப்பாற்றலுக்கு ஆங்காங்கே மணிமகுடத்தினைச் சூட்டியுள்ளார் நெல்லை சு.முத்து. ஓர் அறிவியல் தமிழ்க் கவிஞர் என்பதை நிலை நிறுத்தும் வண்ணம்,

'தொன்றுபடும் மண்ணென்ணெய்ச் சிறைவிட்டு
எடுத்திட்ட சோடியத்தின்
துண்டம் எனத் தீப்பிடித்த குன்றம்எனக்
கற்பூரச் சொற்கோ சொல்வான்'
(பா.கா., ப.325)

எனப் பாரதியின் சொல்லாற்றல் குறித்து நெல்ல சு.முத்து கூறியிருக்கும் பாராட்டு மனங்கொளத் தக்கது. 'வெளிக்காற்றில் ஈரப்பதத்துடன் கூடி வேதிவினை புரிந்து தீப்பற்றும் தீவிர அபாயத்தினால் சோடியம் எனும் தனிமம் மண்ணெண்ணெய்க்குள் பாதுகாக்கப்படும்' எனக் கவிஞரே அடிக்குறிப்பில் தந்திருக்கும் அறிவியல் விளக்கம் ஈண்டுக் கருத்தில் கொள்ளத்தக்கது.

சுருங்கக் கூறின், நெல்லை சு.முத்துவின் தலைசிறந்த படைப்பான
(Masterpiece) 'பாரதி காவிய'த்தினை மனம் கலந்துஇ பொருள் உணர்ந்து பயிலும் எவரும்,

'இனி / நெல்லை சு. பாரதி முத்தாக
நம் நினைவில் நிற்பான் / இப் படைப்பாளி'
('வாழ்த்துரை', பா.கா., ப.8)

என்னும் கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பனின் கூற்றினையே வழிமொழிவர் என்பது உறுதி; உண்மை.
 

'தமிழாகரர்' முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்