தமிழ் ஹைக்கூவின் புதிய பரிமாணம்

முனைவர் இரா.மோகன்

கூரிய அறிவியல் புலமையும் சீரிய இலக்கிய உணர்வும் சரி விகிதத்தில் சேர்ந்து அமைந்த ஒரு நேரிய ஆளுமையாளர் நெல்லை சு.முத்து. இவ்விரு அரிய கூட்டுக் களியில் பிறந்த அவரது கவிதைப் படைப்புக்கள் பலவாகும். அவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘வைரப் படிகங்கள்’ (1990). இத் தொகுப்பில் ‘ஹைக்கூ பதினாறு’ என்னும் தலைப்பில் பதினாறு ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து ‘தமிழில் ஹைக்கூ’ (1994) மற்றும் ‘புத்தாயிரம் தமிழ் ஹைக்கூ’ (2003) ஆகிய திறனாய்வு நூல்களை எழுதிய அனுபவம் நெல்லை சு.முத்துவுக்கு ஹைக்கூ படைக்கும் தேர்ச்சியைக் கூர்மைப்படுத்தியது; செழுமைப்படுத்தியது. இதன் விளைவாக, ‘ஹைக்கூ பதிற்றுப்பத்து’ (2014) என்னும் தலைப்பில் வெளியிட்ட நூலின் முதல் பாகத்தில் (‘அறிவியல் சிந்தனை’) பத்து அறிவியல் பிரிவுகளில் 100 குறும்பாக்களும், இரண்டாவதான ‘அறிவியல் விழிப்புணர்’வில் 50 சென்ரியு வகையிலான எள்ளல் பாக்களும் படைத்துள்ளார் நெல்லை சு.முத்து, “வழக்கமான வண்ணத்துப்பூச்சி, வானம், மழை, நிலா, சோளக்காட்டுப் பொம்மை, பறவை என்று மிகப் பலரும் நடந்த சுவட்டிலேயே அலைந்து கொண்டிராமல், மூன்றாம் அடியில் அறிவியல் தெறிப்பினை மொத்த ஹைக்கூவிலும் புகுத்த முயன்றதன் விளைச்சல் இந்தத் தொகுப்பு. குறிப்பாக, அரசியல் சார்ந்த நவீன சமுதாயச் சிந்தனை கருத்துலகிற்கு முதலிடம் தந்து இருக்கிறேன்” (பக்.10-11) எனக் கவிஞரே ‘என்னுரை’யில் தந்திருக்கும் தன்னிலை விளக்கம் ஈண்டு மனங்கொளத் தக்கதாகும்.

அறிவியல் ஹைக்கூக்கள்

கணித மேதை இராமானுஜம் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தார்; நாமோ இன்று ‘காந்தி கணக்கு’ என்ற பெயரில் ஒரு புதுவகைக் கணக்கையே கண்டுபிடித்திருக்கிறோம்.

“உள்நாட்டில் ஒதுக்கு.
வெளிநாட்டில் பதுக்கு.
நல்ல கணக்கு”
(ப.15)

என்பது ‘கணிதம் பத்து’ பகுதியில் நெல்லை சு.முத்து படைத்திருக்கும் ஒரு தெறிப்பான ஹைக்கூ.

‘கறந்த பால் முலை புகா’ என்னும் சித்தர் வாக்கு நெல்லை சு.முத்துவுக்கு இன்றைய நாட்டு நடப்பை எள்ளி நகையாடுவதற்கு உற்றுழி உதவியுள்ளது.

“கறந்த பால் முலை புகா,
அடித்த கொள்ளை
கஜானா புகா”
(ப.20)

என்ற ஹைகூ இவ் வகையில் கருதத்தக்கது.

‘இயற்பியல் பத்து’ என்னும் பகுதியில் நெல்லை சு.முத்து படைத்திருக்கும் ஹைக்கூ ஒன்று:

“மந்திரி குமாரர்களுக்குப்
பிடித்த பாடல்…
‘கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு…”
(ப.24)

இங்கே ‘கருப்பு’ எதைக் குறிக்கின்றது என்பது தெரிந்தவர்களுக்குத் தெரியும்; புரிந்தவர்களுக்குப் புரியும். அரசியலில் அரிச்சுவடிப் பாடமே இன்று இது தான்!

‘வேதியியல் பத்து’ என்னும் பகுதியில் கவிஞர் அறிவுறுத்தும் உணவு வேதியியல் (Food Chemistry) பாடம் இது:

“உணவில் கட்டுப்படுத்துவோம்
வெள்ளை மூதேவிகளை -
உப்பு, சர்க்கரை, கொழுப்பு”
(ப.27)

‘No Salt, No Sugar, No Fat’ என்ற கொள்கை முழக்கத்தின் ஹைகூ வடிவமே இது!

‘வானவியல் பத்து’ என்னும் பகுதியில் உரையாடல் வடிவில் கவிஞர் எழுதி இருக்கும் ஹைக்கூ:

“‘நிலாவில் குடியேறலாம்’ என்றேன்.
அமைச்சர் கேட்டார்: ‘அங்கெல்லாம்
ஏக்கர் என்ன விலைக்குப் போகும்?”
(ப.32)

எதையும் கலை நோக்கில் பார்க்காமல், விலை நோக்கிலேயே பார்ப்பது என்பது அரசியல்வாதிக்கு இரத்தத்தில் ஊறிய பண்பு அல்லவா?

‘உயிரி அறிவிய’லில் ஒரு பகுதி ‘பரிணாமவியல்’ (Evolution) என்பது. கவிஞரின் கருத்தில், இன்றைய அரசியல் உலகில் காணலாகும் பரிணாம வளர்ச்சி வருமாறு:

“வந்து நின்று வாக்குக் கேள்.
உட்கார்ந்த படி ஊழல் செய்.
படுத்த படி ஜாமீன் கேள்.”
(ப.38)

‘நின்ற கோலம் – அமர்ந்த கோலம் – படுத்த கோலம்’ ஆகியன கடவுளுக்கு மட்டும் தானா உண்டு? அரசியல்வாதிகளுக்கும் உண்டு என்கிறார் கவிஞர்!

‘புவி அறிவியல் பத்து’ என்னும் பகுதியில் ‘பேரிடர் மேலாண்மை’யின் (Disaster Management) துணைக்கொண்டு நெல்லை சு. முத்து புனைந்துள்ள ஒரு நறுக்கான ஹைக்கூ:

“சுனாமியைக் காட்டிலும்
ஆபத்தானது
பினாமி”
(ப.42)

‘சுனாமி’ – ‘பினாமி’: அருமையான சொல் விளையாட்டு!

‘சமூகவியல் பத்து’ என்னும் பகுதியில் அரசியல் அங்கதம் (Political Satire) மிளிரக் கவிஞர் இயற்றியுள்ள ஒரு ஹைக்கூ:

“தென்றலே பார்த்துப் போ
தெரு முக்கில்
அரசியல் கூட்டம்”
(ப.43)

தெரு முக்கில் அரசியல் கூட்டம் நடைபெறுவதால் சுற்றுப்புறச் சூழலே மாசு படிந்து நாசமாகி விடும் எனத் தென்றலுக்கு மென்மையாக எச்சரிக்கின்றார் கவிஞர்.

இன்று, நேருஜி, காந்திஜி, நேத்தாஜி இவர்களைத் தெரிகிறதோ இல்லையோ 2 ஜி குறித்து எல்லோருக்கும் நன்றாகவே தெரிகிறது. இதைக் கிண்டல் செய்யும் ஹைக்கூ:

“நேரு(ஜி), காந்தி(ஜி)
2-ஜி பிரபலம், மறந்த
3-ம் ‘ஜி’ நேதாஜி”

இன்றைய இளைஞர்களின் உதடுகள் உச்சரிக்கும் தேசிய கீதம் எது தெரியுமா? உள்ளது உள்ளபடி கவிஞர் கூறும் மறுமொழி இதோ:

“தேசிய கீதமாய்
இன்றைக்கு
‘கொலை வெறிடீ!’”
(ப.51)

அறிவியல் விழிப்புணர்வு

‘அறிவியல் விழிப்புணர்வு’ என்னும் இரண்டாம் பாகத்தில் நெல்லை சு.முத்து படைத்துள்ள ஹைக்கூ கவிதைகள் அருமையும் எளிமையும், அழகும் ஆற்றலும் தன்னகத்தே கொண்டனவாய்த் திகழ்கின்றன.

“சுதந்திரம் வாங்கித் தந்த
காந்தி இன்றைக்கும்
தலைகுனிந்தே நடக்கிறார்…” (ப.58)

என்னும் ஹைக்கூ, சுதந்திர இந்தியா பற்றிய கவிஞரின் கூர்மையான விமர்சனம் ஆகும்.

“கொள்ளையடி இஷ்டப்படி
பிடிபட்டால் திருப்பி அடி…
‘சந்திப்போம் சட்டப்படி!”
(ப.69)

கவிஞரின் சமூகச் சாடல் எப்படி என்று பார்த்தீர்களா?

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வாக்கினை அடியொற்றி நெல்லை சு.முத்து படைத்திருக்கும் ஒரு புதிய ஹைக்கூ இதோ:

“ஏழையப்பர் எந்நாளும்
கோழையப்பர், அதனால் உயர்ந்தார்
பீழையப்பர்”
(ப.76)

‘ஏழையப்பர்’ – ‘கோழையப்பர்’ – ‘பீழையப்பர்’: திறமான சொல்லாட்சிகளின் அணிவகுப்பு!

“நெல்லை சு.முத்துவின் அங்கதம் தோய்ந்த அறச்சீற்றம் ஒவ்வொரு ஹைக்கூவிலும் காணலாம். இந்த நூல் தமிழ் ஹைக்கூவின் புதிய பரிமாணம்” (‘மனவானில் வட்டமிடும் ஹைக்கூ, ப.9) என்னும் கவிஞர் பா.உதயகண்ணனின் மதிப்பீடு, நெல்லை சு.முத்துவின் ஹைக்கூ கவிதைகளைப் பொறுத்த வரையில் நூற்றுக்கு நூறு சரியே எனலாம்.

 

'தமிழாகரர்' முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்