'ஒழுக்கம் விழுப்பம் தரும்'

திருமதி செல்லையா யோகரத்தினம் MA


'ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.'

'ஒழுக்கம் விழுப்பம் தரும்' என்பது குறள் நெறி. விழுப்பம் என்பது உயர்வு. ஒழுக்கம் வாழ்வில் உயர்வைத் தருவதால் ஒழுக்கத்தை உயிரினும் பெரியதாக மதித்துப் போற்றுதல் வேண்டும் என்பது வள்ளுவர் குறள் நெறி. ஒருவர் வாழ்வில் மிகவும் பேணப்படுவது உயிர். உயிர் போய்விட்டால் வாழ்க்கையே முடிந்ததாகி விடும். ஆகவே உயிரினும் என்று கூறியுள்ளார். ஒருவர் வாழ்வில் மேன்மை அடைய வேண்டுமென்றால் நல் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழ்தல் வேண்டும்.

மனிதன் ஒரு சமூக விலங்கு என்பர் சமூகவியலாளர். மனிதனின் நடத்தை அவன் பெறும் கல்வியாலும் அவன் பெறும் அனுபவத்தாலும் சீர்மை அடைகிறது. அவன் காலத்தின் வளர்ச்சியாலும், சூழலின் பயிர்ச்சியாலும் புதுமைகளையும் புதிர்களையும் எதிர் கொண்டு தானாகவே சமூகத்தின் ஏனைய அங்கத்தவர்கள் போல் நடந்து கொள்கிறான். அது அவனது வாழ்வியலை நெறிப்படுத்தி சமூகத்தின் பிற அங்கத்தவர்களுடன் இணைந்து வாழ வகை செய்கிறது. பெரும்பாலும் அவன் பெறும் கல்வி, அனுபவம் மூலமே பெறப்படுகிறது. நல்லொழுக்கத் தோடு கூடிய உயர்வே நீடு நிலைக்கும், செறிந்து தழைக்கும், வானுயர ஓங்கி நிற்கும்.

நீதி நெறிகளை நமக்கு வலியுறுத்தும் நோக்குடன் நம் முன்னோர்கள் இயற்றிய நீதி நூல்கள் பல நீதிக்கருத்துக்களை நமக்கு எடுத்துரைப்பதாக உள்ளன. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், திருக்குறள், நாலடியார், திரிகடுகம், சிறுபஞ்சமூலம், பழமொழி முதலியன தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்திரை பதித்த நீதிக் களஞ்சியங்கள். இவற்றுள் திருக்குறள் உலகளவில் தமிழர்களின் ஒழுக்க நெறிகளைப் பறை சாற்றும் ஒப்பில்லாத நூலாகப் போற்றப்படுகிறது. மேலும் உலகப் பொதுமறை எனப்போற்றப்படுவதுடன் பல உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டும் பயிலப்பட்டும் வருகிறது.

நல்ல நெறிகளைப் பின்பற்றி நடத்தல் 'ஒழுக்கம்' எனப்படும். ஒழுக்கத்தைத் தமிழர்கள் சிறப்புவாய்ந்த ஒரு பண்பாட்டுக் கூறாகக் கொண்டிருந்தனர். இல்வாழ்க்கையில் ஈடபடுவோரின் ஒழுக்கம் தம் குடும்பத்தை மட்டுமல்லாமல் ஒரு சமுதாயத்தையே மேம்பாடு அடையச் செய்யும். சமுதாயத்தில் ஏற்படும் சீரழிவுகளுக்குக் காரணம் தனிமனிதனின் ஒழுக்கக் கேடாகும். வாழ்க்கையில் பின்பற்றப்படும் நல்ல நெறியே ஒழுக்கம். நல்ல பண்பு நலன்களையுடையவன் நல்ல ஒழுக்கம் உடையவன் என்று குறிப்பிடப்படுகிறான். ஒருவனது நல்ல நடத்தை அவனை ஒழுக்கமுடையவனாகக் காட்டுகிறது. ஒருவன் நடுவு நிலைமை உடையவனாக இருந்தால் அவன் ஒழுக்கமுடையவனாகிறான். பிறன் மனை நயவாத பேராண்மை ஒழுக்கமுடையவனிடம் இருக்கும். கற்புடைய பெண் ஒழுக்கமுடையவள். ஒருவரது நல்ல நடத்தையே அவருடைய ஒழுக்கத்திற்கு உரைகல்லாகிறது.

இல்வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு தம் குடும்பத்தாலும் தாம் தொடர்பு கொள்ளும் சமூகத்தாலும் பல்வேறு வகையான சோதனைகளும் வேதனைகளும் வரும். அப்பொழுது அவர்கள் ஒழுக்கம் தவறாது நடு நிலையாளர்களாக நடந்து கொள்வார்கள். நன்னடத்தை என்பது ஒருவருடைய பண்பட்ட வாழ்விற்கும் புகழுக்கும் காரணமாக அமைந்து சமுதாயத்திற்குப் பெருமையும் புகழும் சேர்க்கிறது.

பள்ளிப் பருவத்தில் அறம் சார்ந்த ஒழுக்கநெறிகளைப் போதித்து வழிகாட்டுவது நீதி நூல்களாகும். அவற்றிற்கு வழிநடத்துபவனாக ஆசிரியன் திகழ்கிறான். வாழ்க்கைப்பாதையில் வழுக்கி விளாமல் தாங்கிப்பிடிக்கும் ஊன்றுகோல் நீதிநூல்களே. பள்ளிப் பருவத்தில் தவறிவிளாது முன்னேறிவிட்டால் அந்த வெற்றியே வாழ்நாள் முற்றாகப் பயணிக்கும் வல்லமையைத் தந்துவிடும். இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்று சும்மா சொல்லுப்படவில்லை. ஒழுக்கம் என்பது ஒரு சிக்கலான மரபு நிலையாகும். நீதி. சமூகம், பண்பு, கலாச்சாரம், அகியவற்றைக் கொண்ட சமுதாயம் விரும்பக்கூடிய வகையில் ஒத்து வாழும் ஒருகுணமாகும். ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கிட அவரவர் தமது ஒழுக்கத்தில் சிறந்தவராக இருத்தல் அவசியம். அது சிந்தனையில் இருக்குமாயின் சொல்லிலும் செயலிலும் மிளிரும். எண்ணம் நல்லதாக இருக்க வேண்டும். எண்ணம் செயலாகும், செயல் பழக்கமாகும், பழக்கம் வழக்கமாகும், வழக்கம் பயிற்சியாகும், பயிற்சி முதிர்ச்சி எய்தும் போது அதில் ஒரு விசை உருவாகும், அந்த விசை வெற்றியைத் தேடித்தரும்.

மாணவப் பருவத்திலே ஒழுக்கத்தையும் கல்வியையும் இரு கண்களாகக் கடைப்பிடித்து வாழ்க்கைக் கல்வியைப் பயின்று சிறப்புற்று ஒழுக்கத்தைக் காலந்தோறும் பேணிக் காக்க வேண்டும். ஒருவரை நல்வழியில் நெறிப்படுத்தி மேன்மையோடு கூடிய வாழ்வில் தழைக்கச் செய்யும் பண்பே ஒழுக்கம். வாழ்வில் ஒழுங்கைக் கடைப்பிடித்து வாழ்வதே தலை சிறந்த நெறியாகும். ஒழுங்கு என்பது சாட்சிகள் இல்லாத இடத்திலும் தவறிழைக்காமல் நேர்மையாக நடப்பதாகும். இதனை நம் முன்னோர்கள் அறநெறிகள் மூலம் உணர்த்திச் சென்றுள்ளனர். நீதி நூல்களாக எழுதி வைத்துள்ளனர்.

பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் தம் ஒழுக்கத்தில் மிகக் கவனமாக இருத்தல் வேண்டும். கணக்கு வளக்குகள் பார்ப்பவர்கள் மேல் எளிதில் குற்றம் காணப்படலாம். அதற்கு இம்மியும் இடம் தராது இருத்தல் வேண்டும். கணக்கை பிழை காணமுடியாத முறையில் எழுதி வைத்துவிட்டால் தப்பில்லை என்பது அர்த்தம் கிடையாது. திருத்தக்கதேவர் சீவகசிந்தாமணியை அரங்கேற்றிய போது திருமணமே செய்து கொள்ளாத ஒரு சமணத் துறவி எப்படி இப்படி ஓரு நூலைக் காமச்சுவை சொட்டச் சொட்ட எழுத முடியும் என்று அழுக்காறு கொண்ட சில புலவர்கள் குற்றம் சாட்டினர். 'நல்ல முன் அனுபவம் இருந்திருக்க வேண்டும்' என்று சந்தேகம் எழுப்;பினர். அப்பொழுது அவர் கையிலே எரியும் நெருப்பை வைத்து தன்னுடைய தூய்மையை நிலைநாட்டினார். சீவகசிந்தாமணி அரங்கேறியது. திருத்தக்கதேவர் காமம், பொய், களவு, கள், கொலை, சூதாடல், என்ற தீமைகள்; அகற்றியவர். ஓர் ஒழுக்கசீலர். இன்னொருவர், சாதாரணர், கல்விமான், எக் காலத்திலும் ஒழுக்கம் எல்லோருக்கும் பொதுதானே! பொது வாழ்வில் அவர் எழுதிய கணக்;கில் நம்பிக்கை இல்லை யென்றபோது, தன்னுடைய கணக்குத் தப்பென்று நிரூபித்தால் கணக்கு எழுதிய பெருவிரலைத் தான் வெட்டி விடுவேன் என்று சபதம் செய்தார். பொது வாழ்வில் இவை யெல்லாம் சாதாரணம் தான், என்றாலும் ஒழுக்கத்தில்க்; கவனமாக இருக்க வேண்டும். பொது வழ்வில்த் தான், இன்னொருவர் ஏதோ நல்லவர்தான், எப்படியோ கணக்கில் தப்பு வந்துவிட்டது. அந்தத்தப்பைச் சரிசெய்ய, ஒரு பொருளைக் கொடுக்காதவருக்கு கொடுத்ததாக, என்ன ஒரு சிறு சரி தானே என்று சரியைப் போட்டு தலைப்பு எழுத்தையும் போட்டு வைத்துவிட்டார். இவர் எதிர்பாராத நிலையில் அந்த நபர் வந்து அந்தப் பொருளைக் கேட்டிருக்கிறார், ஈடாடிப் போய்விட்டார், எப்படியோ சமாளித்துவிட்டார். பாவம், அந்தப் பொருளைக் கேட்டவர் நிலைமையைப் புரிந்து கொண்டு அமைதியாகி விட்டதனால்த் தப்பித்தார். எப்படியாயினும் தப்புத் தப்புதான். மாட்டுப்படவில்லை யென்றால். நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் போடப்பட்ட கரும்புள்ளி வெண்புள்ளி ஆகிவிடுமா? ஒழுக்கக் கேடு ஒழுக்கக்கேடுதான். அதில் ஒரு மாற்றமும் கிடையாது. ஒரு சுண்ணாம்புக்கட்டி திருடினாலும் திருட்டுத்தான், ஒரு கோட்டையை இடித்தாலும் திருட்டுத் திருட்டுத்தான். எந்தவித மாற்றமும் கிடையாது.

ஒழுக்கம் ஒரு பரந்த பரப்பளவைக்கொண்டது. பெண்களுக்கு எப்பவும் யாரும் எதுவும் கூசாது சொல்லிவிடுவார்கள். சாட்சி தேவையில்லைத் தானே! சொல்லிவிட்டால்ச் சரி. எரிச்சல் பொறாமை காரணமாகவும் இவை நடைபெறும். ஆகவே பெண்கள் மறந்தும் யாரும் எதுவும் சொல்லிவிட முடியாத முறையில் எப்படியும் கவனமாக இருக்கவேண்டும். கயிற்றில் நடப்பது போலத்தான். இதனை முன்வைத்தே ஒரு குடும்பத்தில் பெண்பிள்ளைகளை தந்தை, தாய், சகோதரர்கள், திருமணத்தின் பின் கணவனும் கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றுவார்கள். ஒரு பெண் பிள்ளையின் நடை உடை பாவனைகளைப் பார்த்தால், ஏற்படும்; மதிப்பால் கையெடுத்துப் கும்பிட வேண்டும் என்ற நிலையில் இருக்க வேண்டும் என்பார்கள். ஒழுக்கத்தோடு வாழும் மனிதர்களே உலகில் உலாவரும் உண்மையான தெய்வங்கள். ஒழுக்கம் மிக்கோரை பணிந்து வணங்குவதில் தவறில்லை. ஒழுக்கத்திற்காக உயிரையும் விடுவர் சான்றோர்.

தற்கால நாகரீக வளர்ச்சியாலும்;, பெண்களுக்குப் பல வளிகளிலும் சுதந்நிரம் கிடைத்துவிட்டதனாலும், பெண்ணியம் பேசுபவர்களாலும் பெண்கள் ஒழுக்கத்திற்கு வரையறை சொல்வது கடினம். வெளி உலகில் சாதாரணமாக பெண்கள் நடமாடுவது கடினம். பெண்கள் எப்பொழுதும் 'போகப்'; பொருளாகவே பார்க்கப்படுகிறார்கள். வெளி உலகில் ஆண்களின் காமக் கண்கள், கழுகுக் கண்களாகவே உள்ளன. பழுத்த கிழடு என்றாலும் ஆண் ஆண்தான். ஒருமுறை தொட்டால் பரவாயில்லை என்ற நினைப்பு. இது நாகரிக உலகம் தானே! பெண்களின் தொப்புள், மார்பு. தொடை, முதுகு, பிறப்புறுப்பு, இதழ்கள் என ஒவ்வொரு உறுப்பையும் உற்று நோக்கும் நபர்கள் எங்கும் இருக்கவே செய்கிறார்கள். தொப்புள் குழந்தையாய் உலகுக்கு வந்த முதல்த் தொப்புள்க் கொடி, மார்பு ஆரம்ப காலத்தில் உயிர்வாழ்வதற்கு சாப்பிட்ட அமிர்தம் கிடைக்குமிடம், இடுப்பு முதல்முதலில் ஏறி உட்கார்ந்த சிம்மாசனம், உதடு முதல்முதல் முத்தங்கள் பரிமாறப்பட்ட சொற்க பூமி;, தொடை முதல் முதல் படுத்து உறங்கிய சிங்காரத் தொட்டில், பிறப்புறுப்பு இந்த உலகிற்கு வந்த நுளைவாயில், கன்னம் கன்னத்தோட கன்னம் தேய்த்து விளையாடிய விளையாட்டு மைதானம், முதுகு முதல் முதல் உப்பு மூட்டையாக ஏறிய பார வண்டில், இப்படி பெண்களின் ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு சரித்திரம் சொல்லும அங்கமாகும்;. ஒழுக்க சீலர்கள் பெண்களைப் பார்க்கும் போது ஒரு தாயாக, ஒரு சகோதரியாகப் பார்க்கிறார்கள். தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை. ஆனால் உலகம் கெட்டுக் கிடக்கிறது. எனவே பெண்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். தங்களுக்குத் தாங்களே அரணை அமைத்துக் கொள்ள வேண்டும். நடை உடை பாவனைகளில் கவனம் செலுத்த வேண்டும். அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும். அதற்காகப் பயந்து பயந்து சாவதல்ல. உசாராக இருக்க வேண்டும். நெருப்பாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஒழுக்கம் பேணப்படும். 'இரவில் எப்போது ஒரு பெண் தனியாக நடந்து செல்ல முடிகிறதோ அன்றுதான் நாடு உண்மையான சுதந்திரம் பெற்றதாகும்.'; என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். எனவே குடும்பம் தழைக்க நாடு செழிக்க ஒவ்வொருத்தரும் மனங்களில் நல்லவற்றை விதைக்க வேண்டும், நல்ல விளைச்சலை அறுவடை செய்ய வேண்டும். களைகளைப் பிடிங்கி அகற்ற வேண்டும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கடைப்பிடித்துக் காக்க வேண்டும்.

தமிழ்ச் சமூகச்சூழலில் பெண்களின் நிலையை நோக்கினால் மரபு, மதம், பண்பாடு. பழக்கம் என்று ஏதேதோ காரணங்களைச் சொல்லி பெண்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதைக் காணலாம். உலகத்தில் எந்த உரிமையும் எளிதில் கிடைத்துவிடுவதில்லை. ஆண்களுக்கு எளிதாகச் சாத்தியப்படக்கூடியவை பெண்களுக்கு மிகப் பெரும் போராட்டத்திற்குப் பின்பே பெறக்கூடியதாக உள்ளன. ஆண் ஆதிக்கம் இறுக்கமாக உள்ளது. குடும்பங்களில் அன்பு ஆட்சி செலுத்துமாயின் பெண் அடிமைத்தனம் இல்லாது போய்விடும். ஒரு குடும்பத்தில் யார் பெரியவர் என்ற நிலை இருக்காது. சங்ககால மரபு போலத் தலைவன் தலைவி என்றே இருக்கும். இந்தநிலையில் பெண்ணுக்கு ஆண் உதவினால் சிறுமை தெரியாது பெருமையே பேசப்படும்.

ஒழுகுதல் ஒழுக்கம் என்று பாராட்டப் பெறுகிறது. ஒருவருடைய வாழ்க்கை முறைகள் ஒழுக்கம் என்று சொல்லப்படும். ஒருவர் தனக்கும் தன்னுடன் வாழும் உறவுகளுக்கும் கேடு வராது வாழ்வது ஒழுக்கமுடைய வாழ்வாகும். இப்பிறப்பு சிறப்புடையது. இதற்கு இணையானது ஒன்றுமில்லை. கிடைத்த இந்த வாழ்க்கையை ஒழுக்கமாக வாழ்ந்து சிறப்படையச் செய்வது ஒவ்வொருத்தரும் ஆற்ற வேண்டிய கடமையாகும். மீண்டும் இப்படி ஒரு வாழ்வு பெறுவது கடினம். ஆனால் இவ்வாழ்வில் உயர்வு பெறுவது உறுதி.

ஒழுக்கம் உயர்வு தரும் என்பதும் உறுதி.




 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்