‘உவமைக்கோர் பாரதிதாசன்’

முனைவர் இரா.மோகன்


பாரதிதாசனின் பிறந்த நாள்: 29.04.2018
நினைவு நாள்: 21.04.2018

“கவிதையிலே சாதாரணமான சொற்கள் அசாதாரணமான ஆற்றலைப் பெற்று விளங்குகின்றன என்று கூறுவர். அவ்வாறாயின், அது சாத்திய-மாவதற்குச் சில உத்திகள் அவசியமாயுள்ளன. கவிஞன் கையாளும் இவ்விசேட உத்திகளுள் ஒன்று உவமையாகும்” என்பர் அறிஞர். பேசத்தெரிந்த சின்னஞ்சிறு குழந்தை முதல் மாபெரும் கவிஞர் ஈறாக அனைவரும் இயல்பாகக் கையாளு-கின்ற ஒன்று உவமை. இக்கருத்திற்கு ஏற்ப, பாவேந்தர் பாரதிதாசன் கையாண்டுள்ள சில அழகிய உவமைகளைக் கொண்டு அவரது புலமைத் திறத்தினை அறிந்துகொள்ள முயல்வோம்.

தன்னுணர்வு

பாவேந்தர் தம் வாழ்நாளில் சிறிது காலம் ஆசிரியப் பணி ஆற்றியவர். இவ் ஆசிரிய அனுபவம், அழகிய உவமை ஒன்றைக் கையாளுவதற்கு அவருக்குக் கைகொடுத்துள்ளது. கடலலைகளின் துள்ளலையும் எழுச்சியையும் புரளலையும் வீழ்ச்சியையும் பாட முற்படுகிறார் கவிஞர். அப்போது அவருக்குப் பள்ளிக்-கூடத்தில் மாணவர்கள் திரண்டு வீறுகொண்டு எழுவதும், விழுவதும், துள்ளுவதும், கட்டிப்புரண்டு உருளுவதும் நினைவுக்கு வருகின்றன. இரண்டையும் நயமுறை இணைத்து,

“மணல் மெத்தை மேல்
நேரிடும் அலையோ கல்வி
நிலையத்தின் இளைஞர் போலப்

பூரிப்பால் ஏறும்; வீழும்;
புரண்டிடும் பாராய் தம்பி!”


என நெஞ்சை அள்ளும் உவமை ஒன்றை உருவாக்குகின்றார் கவிஞர்.

தமிழுணர்வு

எண்பது வயதுக் கிழவர் ஒருவர் தம் எழுபத்தைந்து வயதுத் துணைவியாருடன் பிரியாமல் இணைந்து வாழும் வாழ்வின் சிறப்பினைப் புலப்படுத்துவதற்குப் பாவேந்தர் கையாண்டிருக்கும் உவமை, பயில்வார் நெஞ்சை அள்ளுவதாகும். அவ்வுவமை இதோ:

“இருவரும் உழைப்பதில் சலிப்பில் லாதவர்
இரட்டைக் கிளவிபோல் பிரியா வாழ்வினர்!”


தமிழை எண்ணும் போது பாவேந்தரின் நெஞ்சம் அடையும் எழுச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை. தமிழுக்கும் தமக்கும் உள்ள உறவை விளக்கும் போது, ஒரு பாடலிலேயே ஐந்து அழகிய உவமைகளை அவர் அடுக்கிக் கையாண்டிருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.

“வெண்ணிலாவும் வானும் போலே
வீரனும் கூர்வாளும் போலே
வண்ணப் பூவும் மணமும் போலே
மகர யாழும் இசையும் போலே
கண்ணும் ஒளியும் போலே எனது
கன்னல் தமிழும் நானும் அல்லவோ!”


என்பது கவிஞரின் ஆழ்ந்த தமிழுணர்வைச் சுமந்து நிற்கும் அழகிய உவமை அடுக்காகும்.

அழகுணர்வு

“காணும் பொருளிலெல்லாம் அழகைக் காணவும், கண்டவாறு தாமேயாகச் சொல்லோவியம் செய்யவும் திறம் பெறுதல் வேண்டும் தமிழர்கள்” என்றும், “நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்! நல்லழகு வசப்பட்டால் துன்பம் இல்லை!” என்றும் ஒல்லும் வகையெல்லாம் அழகுணர்வினை வலியுறுத்தியவர் பாவேந்தர் பாரதிதாசன், ‘உயிருள்ள அழகின் மேய்ச்சல்’ என்னும் அவரது தொடர் அழகுணர்வின் அருமையான படப்பிடிப்பு ஆகும்.

கொள்ளை அழகின் கொள்கலம் குழந்தை. இதனைக் ‘குழந்தை என்னும் கவின் தங்கப் படிவம்’ என்பார் பாவேந்தர். உவப்பூட்டும் பெண் குழந்தை ஒன்றின் கண்ணையும் புருவத்தையும் ‘குடும்ப விளக்’கில் கவிஞர் அழகோவிய-மாக்கியுள்ளார்:

“கரும்பிட்ட கருங்கண் காட்டி
எறும்புகொள் தொடர்ச்சி போலும்
அரும்பிட்ட புருவம் காட்டி
அழகு காட்டும் குழந்தை!”


தாய்மடி மீது குழந்தை கிடக்கும் காட்சி எப்படி இருக்கும்? ‘பெற்ற தாய் மடியின் மீது, யாழ் கிடப்பது போல் பிள்ளை உற்றிடும்’ என்கிறார் பாவேந்தர். சரி, தாய் தன் குழந்தையை அணைத்துத் தூங்கும் அழகுக் காட்சி எப்படி இருக்கும்? கவிஞரின் சொற்சித்திரம் இதோ:

“உடலினை ஒருக்க ணித்தே
குழந்தையை மார்போடு ஒட்டித்
தடமலர் வலக்கை தன்னைத்
தலைக்கணை மீது வைத்தும்
இடதுகை குழந்தை மேலே
வில்லைப் போல் வளைய இட்டும்
கடுகளவு அசைதல் இன்றிக்
கண்வளர் கின்றாள் அன்னை!”


சமூக உணர்வு

“புதியதோர் உலகு செய்வோம் – கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போடும்” எனப் பொதுவுடைமைக் கொள்கையை மனமார வரவேற்றுப் பாடிய முற்போக்குக் கவிஞர் பாரதிதாசன். அவரது நெஞ்சகத்தின் ஆழத்தே குடிகொண்டிருந்தது சமூக உணர்வே ஆகும். இச் சமூக உணர்வு அவரது உவமைகள் பலவற்றில் அழகுற வெளிப்பட்டுள்ளது. சான்றாக, ‘புரட்சிக் கவி’யில் ஓர் இடத்தைச் சுட்டலாம். அழகிய பூஞ்சோலையில் அமுதவல்லியும் உதாரனும் அருகருகே இருக்கின்றனர். அப்போது வானில் ‘இருட் காட்டை அழித்து எழுந்து உலா வருகிறது முழுநிலவு’. அம் முழுநிலவின் கொள்ளை அழகை அழகொழுக எழுத்தில் வடிக்கிறான் உதாரன்.

“நித்திய தரித்திரராய் உழைத்து உழைத்துத்
தினைத்துணையும் பயனிண்றிப் பசித்த மக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்,
கவின் நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!”


என அவன் வாயிலிருந்து பிறக்கும் உவமை அவனை ஒரு புரட்சிக் கவியாக அடையாளம் காட்டுவதாகும். கவின் நிலவைக் காணும் போது கூட ஒரு புரட்சிக் கவியின் உள்ளத்தில் ஆழ்ந்த சமூக உணர்வே ஊறி வரும் என்பதற்கு இப்பகுதி தக்க சான்றாகும்.

கடற்கறையின் ஓரத்தில் அலைகள் வந்து மோதுவது கலகங்கள் விளைப்பது போலவும், அருகுள்ள அலைகளுக்கு அப்பால் கடலிடை அமைதி நிலவுவது, புரட்சிக்கு அப்பால் அமைதி பொலிவது போலவும் தோன்றுகிறது கவிஞருக்கு:

“புரட்சிக் கப்பால் அமைதி
பொலியுமாம் அதுபோல் ஓரக்
கரையினில் அலைகள் மோதிக்
கலகங்கள் விளைக்கும்; ஆனால்
அருகுள்ள அலைகட்கு அப்பால்
கடலிடை அமைதி அன்றோ!”


‘கேள்வியால் அகலும் மடமை போல், நள்ளிரவு மெதுவாய் நடந்து கொண்டிருந்தது’, ‘பசி வாட்டிய நோயாளி வட்டித்த சோற்றிலே கண் நாட்டுதல் போல், என் மேல் கண் நாட்டினாள் இமைத்தலின்றி’ – சமூக உணர்வு பளிச்சிடும் வண்ணம் பாவேந்தர் கையாண்டுள்ள இன்னும் இரு உவமைகள் இவை:

நுண்ணுணர்வு

‘உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும்’ என்பது தொல்காப்பியர் உணர்த்தும் ஓர் உவமை மரபு. ‘உவமானமும் பொருளும் தம்மின் ஒத்தன என்று உலகத்தார் மகிழ்ச்சி செய்தல் வேண்டும்’ என இதனை விளக்கி உரைப்பார் பேராசிரியர். இங்ஙனம் ஒத்த – பொருந்திய – உவமையையும் பொருளையும் எடுத்தாளுவதற்கு ஒரு கவிஞருக்கு நுண்ணுணர்வு வேண்டும்.

‘அழகின் சிரிப்’பில் கவிஞர் மணலுக்குக் கையாண்டுள்ள இரு நுண்ணிய உவமைகள் வருமாறு:

“பெருங்கடல் ஓரம் எல்லாம்
கீரியின் உடல் வண்ணம் போல்
மணல் மெத்தை”

“உரித்த நற் றாழம்பூவின்
நறும்பொடி உதிர்த்ததைப் போல்
பெருமணல்”

கடற்கரை மணலுக்குக் கீரியின் உடல் வண்ணத்தையும், ஆற்றங்கரை மணலுக்குத் தாழம்பூவின் பொடியையும் கவிஞர் உவமையாக்கியிருப்பது பொருத்தமானதாகும்.

இங்ஙனம் தன்னுணர்வு, தமிழுணர்வு, அழகுணர்வு, சமூக உணர்வு, நுண்ணுணர்வு எனப் பல்லுணர்வுகளும் வெளிப்படும் வகையில் உவமையைக் கையாண்ட பாரதிதாசனை, ‘பரணிக்கோர் செயங்கொண்டான்’ என்பது போல், ‘உவமைக்கோர் பாரதிதாசன்’ எனச் சுட்டுவது பல்லாற்றானும் பொருந்துவதே அன்றோ?.


'தமிழாகரர்' முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்