குறுந்தொகை ஒரு நறுந்தொகை

திருமதி செல்லையா யோகரத்தினம் M.A


'காதல் சுரங்கம் குறுந்தொகை'


வாழ்விலே காதல் ஒருவரைக் கடக்கவில்லை என்றாலும், காதலை ஒருவர் கடக்கவில்லை என்றாலும் வாழ்ந்ததற்கான அர்த்தம் குறைவு. அர்த்தம் இல்லையென்றே சொல்லிவிடலாம். காதல் என்ற சொல் காதுக்கு இனிமையானது, பலரின் வாழ்க்கையில் கசப்பானது. காதல் என்ற சொல்லிலிருந்து தான் கவிதை, காவியம், கருணை, கல்யாணம், கலவி, காமம், கவலை, கண்ணீர், கைகலப்பு, கல்லறை என்ற சொற்களுக்கு வழி செல்கிறது. காதல் உச்சரிக்க, உணரச் சுகமானது. ஆனால் எல்லோருக்கும் அப்படியல்ல. பலருக்கு வாழக் கடினமானது. பட்டாம்பூச்சிகள் பறக்க தேனீக்கள் ரீங்காரம் பாட மலரினும் மென்மையாகத் தொடங்கிப் பல சந்தோசத் தருணங்களை அள்ளித் தருவது காதல். சிறகுகள் இல்லாமல்ப் பறக்கச் செய்வதும் காதல், காயமோ கடிவாயோ இல்லாமல் வலிக்கச் செய்வதும் காதல். இந்தக் காதல்ச் சுவையைச் சொட்டச் சொட்டத் தருவது குறுந்தொகை.

சங்கத் தமிழ் எட்டுத்தொகை நூல்களுள் 'நல்ல குறுந்தொகை' என்று சிறப்பித்துக் கூறப்படுவது குறுந்தொகையாகும். இது ஒரு நறுந்தொகை நூல். உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட பாடல்களைக் கொண்ட நூலும் இதுவே. 401 பாடல்களில் 165 பாடல்கள் மட்டுமே பிறநூல்களில் உரைகளில் மேற்கோளாக எடுத்துக் காட்டப் பெறவில்லை. வர்ணனைகள் குறைந்தும் உணர்வுகள் மிகுந்தும் பொருளுக்கேற்பப் பொருத்தமான உவமைகளைக் கொண்ட கருப் பொருளின் பின்னணியில் மாந்தர்களின் அகத்தெழும் உணர்ச்சிகளைச் சிறந்த முறையில் சித்தரித்துக் காட்டும் பாடல்களைக் கொண்டது குறுந்தொகை. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது.

சங்கப்புலவர்களில் சிலர் சிறப்புப் பெயர் பெறுவதற்குக் காரணமான பாடல்கள் இந்நூலில் உள்ளன. காக்கைபாடினியார், கள்ளில் ஆத்திரையனார். ஓரேருழுவனார், கயமனார், செம்புலப்பெயர்நீரார் போன்ற பெயர்களைப் பெறுவதற்குக் காரணமான பாடல்கள் குறுந்தொகையில் அமைந்துள்ளன. அப்பாடல்களில் உள்ள கருத்தாலும், உவமையாலும் அவற்றைப் பாடிய புலவர்கள் இயற் பெயரை இழந்து சிறப்புப் பெயரைப் பெற்றனர். இச் சிறப்புப் பெயர்களே பின் வந்த தொகை நூல்களில் இடம் பெற்றன.

பாடல்கள் சொல்லும் பொருளுமாய் செறிந்து எளிமையாக உள்ளன. அனைத்தும் திரும்பத் திரும்பக் காதலையும் வீரத்தையுமே பேசுகின்றன. மீண்டும் மீண்டும் காதல், காமம், ஊடல், கூடல், பிரிதல், காத்திருத்தல், என்று மனிதர்கள் காதலித்துக் கொண்டிருக்கும் வரையில் எக்காலத்தும் சலித்து விடாத ஒன்றாய் ஆண் பெண் உறவு தொடர்ந்து வரும் வரையில் உணர்ச்சிகளின் சமுத்திரமாய் விளங்கும் பாடல்கள் தனித்துவமானவை. என்றும் வாழ்பவை. தமிழில் காதல் பற்றிக் கூறும் நூல்கள் ஏராளம். பதினெண் மேல் கணக்கு நூல்களுள் அகப்பாடல்களே அதிகம். அப்படியுள்ள பாடல்களில் காதலின் பல்வேறு கூறுகளைப் பற்றி கூறும் சிறப்பான தொகைநூல் குறுந்தொகை. சுமார் இருநூறு புலவர்களால் பாடப் பெற்ற நானூறு பாடல்களைக் கொண்ட தொகுப்பு நூலாகும். காதலிப்பவர்கள், காதலிக்க நினைப்பவர்கள், காதலால் துன்பப்பட்டவர்கள். காதல் கவிதை எழுதுவோர் என்று அனைவருக்கும் இதில் பாடல்கள் உண்டு.

இன்று வழக்கில் இருக்கும் மிகப் பழமையான மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப்பழமையானது தொல்காப்பியம். இது தொல்காப்பியரால் இயற்றப்பட்டது. எள்ளிலிருந்துதான் எண்ணெய் எடுக்க முடியும், ஆதலால் இலக்கியம் இருந்தாற்தான் இலக்கணம் இருக்க முடியும். ஆதலால் தொல்காப்பியத்துக்கு முன்பே பல இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அந்தக் காலத்தில் தமிழில் உரைநடை நூல்கள் இல்லை. தமிழில் இருந்த நூல்கள் எல்லாம் செய்யுள் வடிவிலேதான் இருந்திருக்கின்றன.

மற்ற மொழிகளில் இல்லாத ஒரு பெரும் சிறப்பு தமிழில்க் காணப்படும் திணை இலக்கணமும் அதற்குரிய பாடல் அமைப்பும் தான். பொதுவாக எல்லா மொழிகளிலும் காலம், இறந்த காலம், நிகழ் காலம். எதிர் காலம் என்ற மூன்று கூறுகளும் தான் இடம் பெறும்;. காலம், நேரம், பொறுத்து மாறுவது மனித மனத்தின் குணமாகும். மிகவும் குளிர் உள்ள இடத்தில், பனிக்காலத்தில் இருக்கும் காதல் நெருக்கம் வறண்ட நிலத்தில் வேனிர் காலத்தில் இருப்பதில்லை. இப்படி உள்ள இடம், சூழ்நிலை, காலம், நேரம், ஆகியவைகளைப் பிரித்து ஐந்திணை இலக்கணமாகக் கூறுவது தமிழில் உள்ள தனிப்பெரும் சிறப்பாகும். மேலும் மறை பொருள் அல்லது இறைச்சி என்று கூறப்படும் உள்ளார்ந்த அர்த்தமும் ஆழ்ந்த கருத்துக்களும் அகப்பாடல்களின் சிறப்பு அம்சமாகும். ஐந்திணை என்பது குறிஞ்சி முல்லை, பாலை, மருதம், நெய்தலாகும். மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சித்திணை. காடும் காடு சார்ந்த நிலமும் முல்லைத் திணை. இவை இரண்டிற்கும் இடையில் அமைந்த பாழ் நிலம் பாலையாகும். வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதமாகும். கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தலாகும். இவை மக்கள் வாழ்வியலோடு இணைந்தவையாக அமைந்திருந்தன. திணை என்பது ஒழுக்கம். அகத்திணை என்பது அகவொழுக்கம். புறத்திணை என்பது புற வொழுக்கம். அகத்திணைப் பாடல்களுக்கு ஐந்திணை பாகுபாடு கொள்ளப்படுகிறது.

அகத்திணை என்பது உலகியல் வழக்கத்துக்கும் நாடக வழக்கத்துக்கும் பொருந்தி வருமாறு பின்னப்பட்ட வாழ்க்கைக் களஞ்சியம். ஓர் ஆணும், பெண்ணும் காதலால் இணைந்து தமக்குள் இன்பம் துய்த்து வாழ்தல் அக வாழ்வு ஆகும். இவ்வாறு அவர்கள் தமது உள்ளத்துள் நுகரும் உணர்வுகளைக் குறிப்பவை அகத்திணை இலக்கியமாகும். மக்கள் நிகழ்த்தும் ஒழுக்கமே உரிப்பொருளாகும்.

குறிஞ்சி: புணர்தலும், புணர்தல் நிமித்துமும். ஆண்பெண் உடல் உறவு.

முல்லை: பிரிவை மனத்தில் ஆற்றிக்கொண்டு இருத்தலும், இருத்தல் நிமித்தமும். இது வாழ்க்கை இயல்பு. தலைவன் வருகைக்காக தலைவி காத்திருத்தல்.

பாலை: பிரிதலும் பிரிதல் நிமித்தமும். புறப்பொருள் நிமித்தம் தலைவன் பிரிதலும் தலைவி வாடுதலும்.

மருதம்: ஊடலும் ஊடல் நிமித்தமும். அகவொழுக்கப் பிரிவு. வேறொருத்தியோடு வாழ்ந்த தலைவனுடன் தலைவி பிணங்கிக் கொள்ளுதல்.

நெய்தல்: இரங்கலும் இரங்கல் நிமித்தமும். கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வோர் திரும்பி வரும்வரை கவலைப்படுவது.

உலகத்தாருடை பழக்க வழக்கங்களைக் கூறுவது உலகியல் வழக்கு. உலகியல் வழக்கிலிருந்து பெறப்பட்ட உயர்ந்த கருத்துக்களை சுவைபடத் தொகுத்து வழங்குவது நாடக வழக்காகும். அகத்திணைப் பாடல்கள் அனைத்தும் நாடக வழக்கைச் சார்ந்தவை. அவை காதல் வாழ்க்கையின் உயர்ந்த கூறுபாடுகளையும் முதற்பொருள் கருப்பொருள் உரிப் பொருளோடு கலந்து கற்போர் உள்ளத்தைக் கவரும் வகையில் கற்பனையோடும் கவிதை நயத்தோடும் இயற்றப்பட்டவை. ஒவ்வொரு பாடலும் எவராவது ஒருவர் கூற்றாக இருக்கும். அவரு டைய கூற்றுக்கு முதற்பொருள் கருப்பொருள் ஆகியவை ஏற்ற பின்னணியாக அமைந்து பாடலின் உரிப்பொருளை அறிந்து கொள்வதற்கு உதவுகின்றன.

சங்க காலத்துக் காதல் வாழ்க்கையைத் தொல்காப்பியம் களவு கற்பு என்று இரண்டாகப் பிரிக்கிறது. திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் சந்தித்துப் பழகி காதலித்து உள்ளம் ஒருமித்துத் தங்கள் காதல் வாழ்க்கையைத் தொடர்வது களவொழுக்கம் என்றும் திருமணத்திற்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் காதலித்து இல்லறம் நடத்துவது கற்பொழுக்கம் என்றும் தொல்காப்பியம் கூறுகிறது. அகத்திணை இலக்கியங்களில் காதலர்களின் காதல் வாழ்க்கைபற்றிப் பாடும்பொழுது அவர்கள் பெயர் குறிப்பிடப்படுவதில்லை. அவர்கள் தலைவன் தலைவி என்றே அழைக்கப்படுகிறார்கள். தலைவனும் தலைவியும் சந்திப்பதுதான் அவர்களின் களவொழுக்கத்தின் ஆரம்பம். களவொழுக்கத்தின் பொழுது கூற்று நிகழ்த்துவோர் பார்ப்பன், பாங்கன், தோழி, செவிலித்ததாய், தலைவன், தலைவி, ஆகிய அறுவர். கற்பொழுக்கத்தின் போது முன்கூறிய அறுவரோடு பாணன், கூத்தன். விறலி, பரத்தை, அறிவர், கண்டோர், ஆகிய அறுவரும் கூற்று நிகழ்த்துவர். குறுந்தொகையில், இற்பரத்தை, கண்டோர், காதற்பரத்தை, செவிலித்தாய், தலைவன், தலைவி, தோழி, பரத்தை, பாங்கன், ஆகிய ஒன்பது பேரினுடைய கூற்றுக்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

சங்க இலக்கியத்தில் உள்ள பாடல்களில் அகத்திணைப் பாடல்களைவிடப் புறத்திணைப் பாடல்கள் புரிந்து கொள்வதற்கு எளியவை. புறப்பாடல்களில் அப்பாடல் யாருக்காகப் பாடப் பட்டது என்ற குறிப்பு இருக்கும். இதைக்கொண்டு தான் நாம் அதியமானை, கபிலரை. வல்வில்ஓரியை, பாரியை அடையாளம் காணமுடிகிறது. ஆனால் தொல்காப்பிய மரபுப்படி அகப்பாடல்களில் இன்னாருக்கு இது பாடப்பட்டது என்ற குறிப்பு இல்லை. இது இவர்களுடைய அந்தரங்க விசயம் என்ற காரணத்தால் பாடப்பட்டவரின் குறிப்பு இல்லாமல் பாடும் நாகரீகம் தமிழ்மரபில் இருந்தது. தலைவன், தலைவி, பாங்கன், தோழி, செவிலி என்ற பாத்திரங்களின் அடிப்படையில்த்தான் பாடல்கள் அமைந்துள்ளன. குறுந்தொகைப் பாடல்கள் எல்லாம் இந்த வகையிலேயே உள்ளன. பாடல்களில் வெளிப்படையாகத் தோன்றும் பொருளுக்கும் அப்பால் ஒரு பொருள் அமைந்திருக்கும். இவ்வாறு பாடலில் மறைமுகமாகப் புலவர் உணர்த்தும் பொருளைப் புரிந்து கொண்டால்த்தான் அப்பாடலில் உள்ள கவிதை நயமும் புலவரின் கற்பனைத் திறனும் அறிந்து பாடலின் முழுமையான சுவையை உணர முடியும். பாடலில் கூறவந்த கருத்தை மறைமுகமாகக் கூறுவதற்குப் புலவர் கையாளும் உத்தி உள்ளுறை உவமம், இறைச்சி என இருவகைப்படும்.

குறிஞ்சி, முல்லை, பாலை, நெய்தல், மருதம், ஆகிய ஐந்திணைப் பாடல்களில் தெய்வம் ஒழிந்த ஏனைய கருப்பொருள்கள் மூலம் உள்ளுறை உவமத்தைப் புலவர்கள் பயன்படுத்துவார்கள். உள்ளுறை உவமத்தில் உவமை மட்டும் வெளிப்படையாகக் கூறப்பட்டு புலவர் கூறக்கருதிய பொருள் குறிப்புப் பொருளாக அமைந்திருக்கும்.

'கான மஞ்ஞை யறையீன் முட்டை...... (38); (குறிஞ்சித்திணை) கபிலரால் பாடப்பட்டது, தலைவிகூற்றாக அமைந்த பாடல். இந்தப்; பாடலில் புலவர் உள்ளுறை உவமத்தைப் பயன்படுத்தி இருப்பதைக் காணலாம். குரங்குக் குட்டிகள் மயிலின் முட்டையை உருட்டி விளையாடுவதால் முட்டை உடைந்து அழியக்கூடும். அதுபோல், தலைவனுடைய பிரிவால் தலைவியின் காதல் முறியக்கூடும் என்று உள்ளுறை உவமமாகப் புலவர் கூறுவது தெரிகிறது. மயிலின் முட்டையை குரங்குக் குட்டிகள் உருட்டி விளையாடுவது போலத் தலைவனின் பிரிவால், அவனுக்கும் தலைவிக்கும் இடையே உள்ள காதல் ஊராரால் நகையாடப் படுகிறது என்றும் கொள்ளலாம்.

'பலவும் கூறுஅஃது அறியாதோரே.......(170). (குறிஞ்சித்திணை) கருவூர்க்கிழார் பாடியது, என்னும் பாடலில் புலவர் உள்ளுறை உவமத்தைப் பயன்படுத்தி இருப்பதைக் காணமுடிகிறது. தலைவனுடைய நட்பு, கெடாப் பெரு நட்பு என்பதை யான் நன்கு அறிவேன். அதன் சிறப்பு அறியாத மக்கள் பற்பல பேசுகிறார்கள். நான் அந்த நட்பை நினைத்தே ஆற்றுகிறேன். தலைவி தோழிக்குக் கூறுவதாக அமைந்த பாடல். குளத்தை நாடிச் செல்லும் யானை எவ்வித முயற்சியுமில்லாமல் அருவியின் நீரால் விளைந்த கொறுக்காந்தட்டையை உண்டதைப் போல விதி வசத்தால் தலைவனும் தலைவியும் காதலித்தார்கள் என்பது உள்ளுறை உவமம். இங்கு அருவி ஊழ்வினைக்கும், அருவியின் நீரால் விளைந்த கொறுக்காந்தட்டை ஊழ்வினையால் தோன்றிய காதலுக்கும், யானை கொறுக்காந்தட்டையை உண்டது தலைவனும் தலைவியும் அந்தக் காதலில் இன்புற்றதற்கும் உவமைகள். ஆனால் இவ்வுவமைகள் வெளிப்படையாகக் கூறப்படவில்லை. எனவே உள்ளுறை உவமம் ஆயிற்று.

'கொங்குதேர் வாழ்க்கை...'(2) என்ற பாடல் இறையனார்பாடித் தருமி என்ற புலவருக்குப் 'பொற்கிழி' வழங்கச்செய்தமை சிறந்த வரலாற்றுச் சான்றாகும். அவனைப் பார்த்த அவள் நாணி ஒதுங்கினாள். அவன் அவளைத் தொடவேண்டும். அதற்கு ஒரு சாக்குப் போக்குச் சொல்வதாக அமைந்த பாடல். 'தும்பியே! உனக்கு அழகிய சிறகுகள் உள்ளன. உனது வாழ்க்கை தேனைத் தேடி எடுத்துக் கொள்வது. உனக்குத் தெரியும், எந்தப் பூவில் அதிக மணம் உள்ளது என்று. இவள் தலையில் சூடியுள்ள பூவை மொய்க்கும் ஆசையால் சொல்லிவிடாதே. இவள் கூந்தலைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூ நீ அறிந்ததுண்டா?

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு
(1113) எனும் திருக்குறள் போல் அமைந்துள்ளது இப்பாடல்.

'செல்வார் அல்லர்..... 43' பாலைத் திணைப் பாடல் ஒளவையார் பாடியது. தலைவி தனக்கு நேர்ந்த பிரிவுபற்றித் தோழிக்குக் கூறியது. நச்சுப் பாம்பு கடித்தது போல நெஞ்சம் குமுறுகிறாள்;. நல்ல பாம்பு தீண்டியதனால் தோன்றிய கொடுமை முதலில் தெரியாமல் நஞ்சு குருதியில் கலந்து தலைக்கேறிய பிறகே தோன்றுவது போல் தலைவனின் பிரிவினால் ஏற்பட்ட துயரம் அவன் பிரிந்து சென்ற பின்னரே தோன்றிற்று என்று தலைவி கூறுகிறாள்.

'முழி தயிர் பிசைந்த காந்தள்...... 167' முல்லைத் திணைப் பாடல். கூடலூர் கிழார் பாடியது. தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று வந்த செவிலி நற்றாயிடம் கூறுவது 'தலைவி தலைவன் உவக்கும்படி பரிமாறி உண்பிக்கிறாள்' கட்டித்தயிரைப் பிசைந்த காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரலைத் துடைத்துக் கொண்ட ஆடையை அப்படியே உடுத்திக் கொண்டு மையுண்ட கண்களில் தாளித்தபுகை மணக்கத் தானே சமைத்த இனிய குழம்பைத் தலைவன் இனிதென்று உண்பதனால் தலைவியின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. தலைவி தலைவனுக்கு வேண்டியவற்றைத் தானே அவன் மகிழும்படி தன் கையாலே செய்து வருகிறாள். இதனால் தலைவி தற் கொண்டானைப் பேணுந் தகை சிறந்தாளென்பதைச் செவிலி உணர்த்துகிறாள்.

'நசை பெரிதுடையர் நல்கலும்.......' 37 பாடியவர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ. தலைவனது பிரிவாற்றாமல் வருந்தும் தலைவிக்குத் தோழி, கருப்பொருள்களுள் தலைவன் அன்பு செய்தற்குத் தகுந்தனவற்றைக் கூறுதல். உள்ளுறை உவமத்துக்கு அப்பாலும் அதோடு தொடர்புடைய ஒரு பொருள் தங்கி இருக்கும். இது இறைச்சி என்று அழைக்கப்படுகிறது. தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்திருக்கிறான். பிரிவினால் தலைவி வருந்துகிறாள். அதைக் கண்ட தொழி, 'தலைவன் உன்மீது மிகவும் அன்புடையவன். தலைவன் சென்ற வழியில் ஆண்யானைகள் பெண் யானைகளின் பசியைப் போக்கி அவற்றை அன்போடு பாதுகாப்பதைக் கண்ட தலைவன் தன் கடமை உணர்ந்து உன்னிடம் விரைவில் வருவான்.' என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். ஆண்யானை அன்போடு தன் பெண்யானையின் பசியைப் போக்குவது போல் தலைவனும் தலைவியின் விருப்பத்திற்கு இணங்கி விரைவில் வருவான். என்று யானையின் செயலை உவமையாகக் கூறாமல் குறிப்பாகக் கூறியதனால் இது இறைச்சி ஆயிற்று. இறைச்சியும் உள்ளுறை உவமத்தைப் போலவே, அகப்பொருள்; பாடல்களில் தெய்வம் ஒழிந்த ஏனைய கருப்பொருள்கள் மூலம் பிறக்கும். உரிப்பொருளுக்குப் புறத்ததாகிய பறவை, விலங்குகள் போன்ற உயிரினங்களின் செயல்கள் மூலம் உரிப்பொருளுக்குத் தொடர்புடைய ஒரு குறிப்பை இறைச்சி உணர்த்தும். தலைவியும் தோழியும் தலைவனின் கொடுமையைப் பற்றிக் கூறும் இடங்களில், தம் காதல் உணர்வை இயற்கை உயிர்களில் காணும் போதும் இறைச்சி பயன்படுத்தப் படுகிறது.

' இடிக்குங் கேளிர் நுங்குறையாக ......' 58 வெள்ளிவீதியார் பாடியது. குறிஞ்சித்திணைப் பாடல். தலைவனின் தோழன் பாங்கன். பாங்கன் தலைவனின் காம நோயைப் பற்றிக் கிண்டல் செய்கிறான். அதற்குத் தலைவன் சொல்கிறான். 'நீ சொல்வது நன்றன்று. இதோடு நிறுத்திக்கொள். கடுமையாகக் காயும் வெயிலில் வெண்ணெய் உருண்டையைப் பாறாங்கல்லின் மேல் வைத்துவிட்டுக் கை இல்லாத ஊமையன் மூங்கையன் ஒருவன் அந்த வெண்ணெய்க்குக் காவல் இருப்பது போல நான் காம நோய்க்குக் காவல் இருந்தேன். அந்தக் காமநோய் அந்த வெண்ணெய் வெயிலில் உருகிப் பாறையில் பரவுவது போலப் பரவிக்கொண்டிருக்கிறது. இதுதான் என் நிலைமை என்கிறான். கையாலும் காட்ட இயலாது வாயாலும் சொல்ல முடியாது. பரிதாபமான நிலை. வெண்ணை போல் உருகுகிறான் தலைவன். சூரியன் காம நோய்க்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. சூரியனின் வெம்மையான ஒளி பட்டு வெப்பமேறிய பாறைக்கல் காமத்தீயால் வருந்துகிற உள்ளத்திற்கு உவமை. சூரியனின் வெப்பமும் இயற்கையானது. காம நோயும் இயற்கையானது. வெண்ணெய் உருகி விடாது காக்க நிழல்வேண்டும். அது போல உள்ளம் காம நோயால் உருகாது இருக்க தலைவியின் ஆதரவு வேண்டும். உள்ளம் பாறையாகவும் உடல் வெண்ணையாகவும் கூறப்பட்டுள்ளது.

'யாயும் ஞாயும் யாராகியரோ......'.40.

குறிஞ்சித் திணைப் பாடல். பாடலால்ப் பெயர் பெற்ற புலவர், செம்புலப் பெயனீரார் பாடியது.

என்னுடைய தாயும் நின் தாயும் ஒருவருக்கொருவர் எந்த முறையில் உறவினராவர்? என் தந்தையும் நின் தந்தையும் எந்த வகையில் உறவினர்? இப்போது பிரிவின்றி இருக்கும் யானும் நீயும் ஒருவரை ஒருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்? இம் மூன்றும் இல்லையாகவும் செம்மண் நிலத்தில்ப் பெய்த மழை நீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை அடைதல் போல அன்புடைய நம் நெஞ்சம் தாமாகவே ஒன்றுபட்டுவிட்டன. பண்படுத்தப்பட்ட வயல் நிலத்தில் பெய்த மழை நீர் வயலுக்குள் ஊறுவது போல், மண்ணும் ஈரமுமாகக் கலந்தவிட்டனவே, என்று தலைவன் தலைவியிடம் கூறுகிறான். நிலத்தின் நிறமும். சுவையும், மணமும் மழை நீருக்குள் கலந்து விடுவது போல உள்ளங்கள் கலந்துவிட்டன. ஒருவருடைய நெஞ்சம் மழை என்றால் மற்றவருடையது வயல் என்று கொள்ள வேண்டும். செம்மண் நிலத்தில் பொழிந்த மழை நீரானது அந்த நிலத்தின் தன்மையை ஏற்றுக் கொள்கிறது. பின்னர் அந்த நிலத்தின் தன்மையை யாராலும் மாற்ற முடியாது அது போல நமக்கும் எப்போதும் பிரிவு இல்லை.

'அணிற்பல் அன்ன.... ( குறுந்தொகை – 49) எனும் பாடல் அம்மூவனாரால் பாடப்பட்டது. தலைமகன் பரத்தையிற் பிரிந்து மீண்டு வந்த காலத்து முன்னிருந்த ஆற்றாமை நீங்கி அவனோடு அளவளாவி 'நாம் பிறவிதோறும் அன்புடைய கணவன் மனைவியுமென இருப்போமாக' என்று தலைவி கூறியது.'
'பெண்ணின் பெருந்தக்க யாவுள?' எனும் திருக்குறள்ச் சிறப்பிற்கேற்ப பெண்மையின் சிறப்பினை முழுவதும் கொண்டு விளங்கும் தலைவியின் சிறப்பு வெகுவாகப் பாராட்டப்படுகிறது.

''இம்மை மாறி மறுமை யாயினும்
நீயாகியரென் கணவனை
யானா கியர்நின் நெஞ்சுநேர்பவளே''
என மறுமையிலும் தன்னுடைய தலைவனையே கணவனாகப் பெற விரும்புகிறாள் ஒரு தலைவி. குறுந்தொகையில் மக்களின் பண்பட்ட உள்ளம் நன்கு வெளிப்படுகிறது. தமிழ்மக்களின் அகவாழ்க்கை சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டள்ளது. காதலர்களின் அன்பின் தன்மையும், அதனை அவர்கள் வெளிப்படுத்திய பாங்கும் படித்துச் சுவைக்கத் தக்கன. காதலர்கள் ஒருவருக் கொருவர் பேசும் உரையாடல்களிலிருந்து பண்டைத் தமிழர்கள் பழக்க வழக்கங்கள் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது.
'காமந் தாங்குமதி யென்போர்......'. (குறுந்தொகை 290 ) கல்பொரு சிறநுரையார், பாடலால் பெயர் பெற்ற புலவர் பாடியபாடல் இது. நீர் பாறாங் கல்லில் மோதும் போது நுரை உண்டாகும். அந்த நுரையின் துளி ஒவ்வொன்றாக உடைந்து இல்லாமல்போகும். காமம் எனம் நீர் என்மீது மோதுவதால் நான்நுரை போல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், இல்லாவிட்டால் என் உயிர் இல்லாமல் போய்விடும். காமத்தைப் பொறுத்துக் கொண்டிரு, அவரை நினைக்காதே, என்று கூறுகிறார்களே! அவர்களுக்குக் காமத்தைப் பற்றித் தெரியுமா? என்றாவது காமத்தை மறந்திருக்கும் வலிமை பெற்றிருந்தார்களா? என்று தோழியிடம் வினவுகிறாள் கல்மொதிக் கரையும் உள்ளம் கொண்ட தலைவி. தலைவனைப் பிரிந்த தலைவியின் உள்ளம் பிரிவு என்னும் கல்லில் மோதி சிறிது சிறிதாக உடைந்து அழிகிறது. 'கல்பொரு சிறுநுரை போல' இவ்வுவமை கற்போரின் நெஞ்சில் புதுமையையும் இனிமையையும் கலந்து அவலத்தையும் சுவைக்கும் மனப் பக்குவத்தைத் தருகிறது.
'இருங்கண் ஞாலத் திண்ட பயப் பெருவளம்........'எனும்பாடல் காலெறி கடிகையார் என்னும் புலவரால் பாடப் பெற்றது. இவர் பாடலால் பெயர் பெற்றவர். (குறுந்தொகை பாடல் 267)

'பாலொடு தேன்கலந் தற்றெ பணிமொழி
வாலெயி றூறிய நீர்
(குறள் 1121)

எனம் குறளுடன் பொருந்துவதாக உள்ளது.

அழகு நலம் பொருந்திய, ஒளிவீசும் வரிசையை யுடைய தலைவியின் பற்களுக்கிடையே உள்ள எயிற்றினில் பனிமலரிலிருந்து உதிரும் வெள்ளிய நிரைப் போன்ற இனிய நீர் சுரக்கின்றது. அந்h நீரின் இனிமைக்குக் கரும்பின் அடிப்பாகத்தைச் சுவைத்தால் ஏற்படும் இன்பத்தை உவமையாகக் கூறுகிறார் புலவர்.

'நாணில மன்றவெங் கண்ணே நாணேர்பு....... ' எனும் பாடல் (குறுந்தொகை பாடல் 35) கழார்க்கீர னெயிற்றி என்னும் புலவரால் பாடப் பெற்றது. தலைவன் எத்தனை அழகு பொருந்திய தலைவியைக் கொண்டிரந்தாலும் பரத்தையோடு உறவு கொண்டு ஒழுகுவதையே நாட்டமாகக் கொண்டு விளங்ககின்றான். இவ்வாறு பரத்தையும் தலைவனும் ஒன்றுபட்டதற்கு வில்லைப் பிடித்த விரல்களை உவமைகூறுகின்றார் நல்லகப்புலவர். சினைபிடித்த பச்சைப் பாம்பின் உடல் போன்று பருத்த கணுக்களைக் கொண்ட கரும்பின் மடல் அவிழ துகில்போல வான மங்கையின் மேலாடும் முகில் கூட்ட மழைத்துளிகள் சிந்துகின்ற போது வாடையெனும் குளிர் காற்றால் வாடுகின்றாள் தலைவி. தலைவனோ,போர் முனையில் வில், வேல், வாள் எனம் ஏர்பூட்டி வெற்றி விளைச்சல் நடத்தி விட்டு வாடை நாள் தொடங்கும் முன்னரே வந்துவிடவதாக ஓடை மலர் போன்றவளிடம் கூறிச் சென்றவன் இன்னும் வரவில்லை. அவன் பிர்ந்து செல்லும் பொது அவனுக்கு விடை கொடுத்த தலைவியின் கண்கள் இப்போது அழுகிறது. இதோ தன் விழிகளைப் பார்த்துத் தலைவி 'கண்களே நாணம் கொள்க' எனக் கடுமையாக மொழிகிறாள். கரும்பின் கணுக்களிலே காணப்படும் பசுஞ்சோலை, பச்சைப் பாம்பு கருக் கொண்டிருக்கும் காட்சிக்கு உவமையாகக் கூறப்பட்டிருப்பது சிறப்பாகும். புலவரின் கண்களுக்கு இயற்கை யெல்லாம் உவமையாகி விடுகிறது.

சங்க அகப்பாடல்கள் அப்படியே நடப்பியல் வாழ்வைச் சித்திரிப்பவை அல்ல. அழகுபடுத்தப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட, இலட்சியக் காதல் வாழ்வைப் புனைந்து சொல்பவையாகும். எனினும் அவற்றில் கூறப்படும் உணர்வுகள் என்றும் இருக்கும் மானிட உணர்வுகளே. ஆதலால், எக்காலத்தவரும் அவ்வுணர்வுகளோடு தம் தம் உணர்வுகளை நெருக்கிவைத்துப் பார்த்துக் கொள்ள முடிகிறது. உவமைகளால் பாடலுக்குப் பெருமையும். சுவையும், இனிமையும் நிறைகிறது. சங்க அக இலக்கியத்தின் வெற்றிக்குக் காரணம் இதுவே. குறுந்தொகையில் அடங்கியுள்ள செய்யுள்களைப் புனைந்த நல்லிசைப் புலவர்களின் உவமைத்திறன் ஒரு சிறந்த ஓவியன் வண்ணமும் தூரிகையும் கொண்டு காண்போர் உள்ளத்தைக் கவரும் வகையில் ஓவியம் தீட்டுதல் போல நல்லிசைப்புலவர்கள் தாம் உணர்ந்த அழகெல்லாம் செய்யுட்களைப் பயில்வோரும் உணரும்படி செய்துள்ளனர். தம் நுண்மாண் நுழை புலத்தால் அற்புதக் கருத்துக்களைத் தம் புதுமையான உவமைத் திறத்தால் கையாண்டுள்ளமை குறுந்தொகைக்குப் பெருமை சேர்க்கிறது. உவமைகளும் உள்ளுறை உவமங்களும் கொட்டிக் கிடக்கும் குறுந்தொகை நல்ல குறுந்தொகை என்று போற்றப்படுவதில் ஆச்சரியமில்லை. குறுந்தொகை ஒரு நறுந்தொகை என்பது பொருத்தமாக அமைந்துள்ளது என்பது மிகையாகாது.




 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்