அந்நியர்களும் அறிந்திரா வானவூர்திகளும் (ALIENS & UFO)

கனி விமலநாதன்


அறிவியற் தொடர் - 1

1947ம் ஆண்டு, யூன் 24ம் திகதி. நேரம் பகல் 3 மணியைத் தாண்டிச் சில நிமிடங்களே ஆகியிருந்தது. கெனத் ஆர்னோல்ட்
(Kenneth Arnold)  என்ற அமெரிக்க விமானி வாசிங்ரன் பகுதியில், செகலிஸ் என்ற இடத்திற்கும் யகிமா என்ற இடத்திற்கும் இடையில், றேயினியர் (Rainier) என்ற மலைப்பபகுதியில், Call Air A-2 என்ற தனது விபத்தில் விபத்திற் சிக்கியத் தெலைந்து போன சரக்கு விமானம் ஒன்றினைத் தேடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். தனியார் விமான சேவை ஒன்றின் விமானியான இவர், பல மணித்தியாலங்களாக, மிகக் கவனமாகத் தேடியும், விபத்துக்குள்ளான விமானத்தை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், தன் முயற்சியைக் கைவிட்டு; விட்டு யகிமாவிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். தொலைந்து போன அந்த விமானத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் அவருக்கு 5000 டொலர் வெகுமதி கொடுக்கப்படுமெனக் கூறப்பட்டடிருந்தது.

அன்று அவருக்கு 5000 டொலர்கள் கிடைக்காது போனாலும் உலகின் கவனத்தினை அவரது பக்கமாய்த் திருப்பக் கூடியதான நிகழ்வென்று நிகழப் போகிறதென்பதை அப்போது அவர் அறிந்திருக் நியாயமில்லைத்தான். அதன் மூலம் உலகினருக்கு மிகவும் சுவாரசியமான, இன்னமும் ஒருபடி மேலே கூறுவதென்றால், அறிவியல் விளக்கங்களைக் கொடுக்கக் கூடியதான, விடயமென்று ஆரம்பமாகப் போகிறது என்பதனையும் அறிந்திருக்கமாட்டார்.

தனது முயற்சியில் தோற்றுப்போன ஆர்னோல்ட் விமான நிலையம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார். றேயினியர் மலையில் இருந்து 20 அல்லது 25 மைல் தூரத்தில், தரையில் இருந்து 9200 அடி உயரத்தில் இவரது விமானம் பறந்து கொண்டிருந்த வேளையில், திடீரென இவரது விமானத்தின் முன்னால் தோன்றிய வலிமையான வெளிச்சத் தெறிப்பு ஒன்று, இவரது கண்களைக் கூசவைத்துச் சென்றது. ஒரு கண்ணாடியில் கதிரவ வெளிச்சம் பட்டுத் தெறிப்பது போல அவ்வெளிச்சம் இருந்தது. அருகில் ஏதாவது விமானம் வருகிறதோ? எனது விமானத்துடன் மோதப் போகிறதோ? எனப் பயந்த ஆர்னோட், தனது விமானத்தின் சுற்றிலுமாக ஏதாவது விமானம் வருகிறதா என ஸ்கான் பண்ணிப் பார்த்தார். அப்படி ஒன்றுமே ஆபத்தான தூர எல்லைக்குள் இல்லை. அவரது விமானத்திற்குப் பின்புறமாக 24 மைல் தூரத்தில்;தான் ஒரு விமானம் பறப்பதாக, ஸ்கானர்; காட்டியது.

30 செக்கன்கள் கழிந்திருக்கும், இவரது விமானத்திற்கு இடது புறமாக, அதாவது வடக்குத் திசையில் ஒன்பது பிரகாசமான பொருட்கள் பறப்பதை ஆர்னோல்ட் கண்டார். ஏதாவது ஒளி மயக்கமாக இருக்கலாமென எண்ணியவர் விமானத்தின் கண்ணாடிகளை துடைத்துக் கூர்மையாகப் பார்த்தபோது அந்த ஒன்பது பொருட்களும் தெளிவாகத் தெரிந்தன. அவற்றில் எட்டுப் பொருட்கள் கீழ்ப்புறம் தட்டையாக இருக்க, மேற்புறம் குவிந்து வளைந்து காணப்பட்டன. ஒன்பதாவது பொருள் மட்டும் பிறை வடிவிற் தென்பட்டது. ஒரு நீண்ட வரிசையில் படுவேகமாகப் பறந்து சென்ற அப்பொருட்கள், இவர் பார்த்துக் கொண்டு இருக்கையிலேயே, றெயினியர் மலைக்கு அப்பாற் சென்று மறைந்து விட்டன.

விமானியான அவர் அந்த ஒன்பது வெளிச்சங்களும் சென்ற வேகத்தினைக் கண்டு பிரமித்துப் போய்விட்டார். அந்த வெளிச்சங்களின் வேகம் சுமாராக மணிக்கு 1700 மைல்களாகவாவது இருக்கும் என்று கணித்துக் கொண்டார். அது, அக்காலத்தில் இருந்த அதிவேகமாகப் பறக்கக் கூடிய விமானங்களின் வேகத்தையும் விட, மூன்று மடங்குகளிலும் அதிகமானதாக இருந்தது. அவை என்னவாக இருக்கும் என ஆர்னோட் தனக்குள் கேட்டுக் கொண்டார். அவ்வளவு வேகமாகச் சென்ற அவை, சாதாரண பறவைகளாக இருக்க முடியாது என அவரது மனம் கூறிக் கொண்டது. மேலும் அவை பறந்த உயரம், நிட்சயமாக அவை பறவைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தியது. சாதாரணமான விமானங்களாகவும் அவை இருக்கமுடியாது எனவும் ஆர்னோல்டின் மனம் உறுதியாகக் கூறிக் கொண்டது. இதே சிந்தனையுடன் பறந்து, தரையை வந்தடைந்த ஆர்னோல்ட், இந்த விசித்திர அனுபவத்தைத் தனது சகபாடிகளுடன் பகிர்ந்து கொண்டார்.

மறுநாள், பத்திரிகைகளுக்கு, வானிலே தான் கண்டதைக் கூறினார். தான் அப்படிக் கூறியது எவ்வளவு பெரிய திருப்பத்தினை மக்களிடையே ஏற்படுத்தப் போகிறது என்று அவர் அப்போது அறிந்திருவில்லை. சாதாரணமாகத்தான் அவர் பத்திரிகை நிருபர்களிடம் தனது நம்பமுடியாத அனுபவத்தினை விபரித்திருந்தார். ஆனால் பத்திரிகை நிருபர்களின் விளக்கங்களோ, பார்வைகளோ வேறு விதமாக இருந்து விட்டது.

அசோசியேட் பிரஸ்
(Associate Press) என்ற பத்திரிகையின் நிருபர் இவரது விளக்கத்தினை வைத்துக் கொண்டு, கெனத் ஆர்னோல்ட் வானில் கண்டவை, 'பறக்கும் தட்டுக்கள்' (flying saucers) எனப் பத்திரிகையில் எழுதிவிட, மக்களிடையே ஒருவித பரபரப்பு ஏற்படலாயிற்று. உலகெங்கிலும் பறக்கும் தட்டுகள் என்ற பதமொன்று புதிதாகத் தோன்றிப் பிரபலமாகத் தொடங்கிவிட்டது. ஏறக்குறைய நூற்றி ஐம்பது செய்தித்தாள்களில் இந்தப் பறக்கும் தட்டுகள் என்ற விடயம் அப்பொழுது வெளிவந்தது எனக் கூறுகின்றார்கள்.

அன்றில் இருந்து உலகின் பல பாகங்களிலும் இந்தப் பறக்கும் தட்டுகள் என்ற விடயம் பரபரப்பாகவும், ஆச்சரியமாகவும் பேசப்படத் தொடங்கி விட்டது. கூடவே ஆர்னோட்டின் பெயரும் பிரபலமடையத் தொடங்கியது. ஆய்வாளர்கள் ஆர்னோல்டைச் சும்மா விடவில்லை. அவரைக் கேள்விகளின் மேல் கேள்விகள் கேட்டு துளைத் தெடுத்துவிட்டார்கள். விளைவாக, ஆர்னோல்டின் விடயமானது பல ஆய்வாளர்களினால் தீவிர ஆய்வுக்குள்ளாக்கப்பட்டு பல முடிவுகள் பெறப்பட்டன. பெரும்பாலான முடிவுகள் ஆர்னோல்ட் அன்று வான்பரப்பில் கண்டவை பறக்கும் தட்டுகள் இல்லை என்பதாக இருந்தது. ஆனாலும் ஆர்னோல்ட் வானிலே கண்டவற்றை இன்னதுதான் என அவர்களால் சரியாகக் கூறவும் முடியாதிருந்தது.

இதேநேரம், தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத இன்னொருவரும் இந்த ஒன்பது வெளிச்சங்களைத் தானும் கண்டதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து வேறு பலரும் தாமும் வானிலே பறக்கும் தட்டுகளைக் கண்டோம் எனக் கூறிப் பதிவுகளைப் பல நாடுகளிலும்; செய்ய, பறக்கும் தட்டுகள் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. உலகின் பல நாடுகளும் இந்த விடயம் பற்றிப் பெரிய பெரிய ஆய்வுகளையும், விசாரணைகளையும் செய்யத் தொடங்கின. அமெரிக்கரோ, இதற்கென, புளூ பைல்
(blue file) எனும் விசாரணைக் கோவையையும் திறந்துவிட்டனர்.

பறக்கும் தட்டுகள் பற்றி ஆர்னோல்டிற்கு முன்னரும் சிலர் பரபரப்புடன் பதிவு செய்திருந்த போதிலும் கூட, கெனத் ஆர்னோல்டின் விவகாரமே பறக்கும் தட்டுகளின் விவகாரத்திற்கு உண்மையான ஆரம்பம் எனலாம். ஏனெனில் உலகம் முழவதுமே இவ்விவகாரம் பற்றி கதைத்தது, அறிந்து கொள்ள ஆசைப்பட்டது எல்லாம் ஆர்னோல்டின் சம்பவத்தின் பின்னர்தான். உத்தியோகபூர்வமாக, ஆர்னோல்ட் கண்டது பறக்கும் தட்டுகள் இல்லை எனக் காட்டப்பட்ட(?) போதிலும், சிலர் அம்முடிவினை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், ஆர்னோல்ட் தான் கண்டவை பறக்கும் தட்டுகளேதான் எனத் திரும்பத் திரும்ப உறுதியாகக் கூறிக்கொண்டே இருக்க, பறக்கும் தட்டுகள் என்ற பதத்தினை உலக மக்களிடமிருந்து இல்லாமற் பண்ண முடியாது போய்விட்டது. ஆர்னோல்ட் கூட தான் கண்டவை பறக்கும் தட்டுகள்தான் என்பதில் இருந்து எள்ளளவும் மாற்றுக் கருத்தினைக் கொள்ளவில்லை. 'அவற்றினைக் கண்ட எனக்குத்தான் அவை என்னவென்று தெரியும்' என்பதுபோல் இருந்தது அவரது கூற்று.

இப்பரபரப்பினால் வானிலே பறக்கும் 'பறக்கும் தடடுகள்' தமக்கும் தெரியாதா? என்ற ஏக்கத்துடன் பலர் வான்வெளியை அண்ணாந்து பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். அப்பொழுது, இன்னதுதான் என்பது அறிய முடியாத பலவகையான பறக்கும் பொருட்கள் வான்பரப்பில் மனிதர்களின் கண்களுக்குள் அகப்பட்டுக் கொண்டன. இப்படியாக வானிலே தாம் கண்டதாகக் கூறும் அபூர்வமான விமானங்களின் (பொருட்களின்) வடிவங்களையும் அவர்கள் பதிவு செய்யத் தொடங்கி விட்டார்கள். இப்படியாக அவர்கள் கூறிய, பதிவுகள் செய்து கொண்ட பறக்கும் பொருட்களின் வடிவங்களைப் பார்த்தால், அவை ஒன்றுக்கு ஒன்று வித்தியாசப்படத் தொடங்கின. எல்லாமே தட்டுகளின் வடிவில் இல்லை என்பது பதிவுகளின் ஊடாகவும், விசாரணைகளின் வாயிலாகவும் தெரியவந்தது. சில வடிவங்கள் முக்கோணத் தடடுகள் வடிவில் காணப்பட்டன. வேறு சிலவோ உருண்டையான சுருட்டு வடிவில் தோன்றின. சிறு சிறு வெளிச்சக் கோளங்களாகவும் சில வடிவங்கள் தென்பட்டன. இன்னமும் எத்தனையோ உருவங்களில் அவை காணப்பட்டன. ஆயின் பறக்கும் தட்டுகள் எனச் செல்வது பொருத்தமாக இருக்க முடியாது என்பதால், பறக்கும் தட்டுகள் என்று கூறுவதை விடுத்து 'இனம்தெரியாத பறக்கும் பொருட்கள்'
(Unidentified Flying Objects – UFO’s) என்ற பொதுமையான பெயரொள்று பறக்கும் தடடுகளுக்கு வந்துவிட்டது. இந்நாட்களில் இந்த நீண்ட பெயரின் சுருக்கமான UFO என்பதே இவ்விசிததிரமான பொருட்களுக்கு பொதுமையான பெயராக வந்து விட்டது. சாதாரண மக்களின் விளக்கத்திற்காக இத்துறை வல்லுனர்கள், இந்த இனம்தெரியா பறக்கும் பொருட்களுக்கெல்லாம் விளக்கங்களை, காரணங்களைக் கூறத் தொடங்கினர். இதன் காரணமாக சாதாரண மக்கள் பல விஞ்ஞான அறிவினை எளிதாகப் பெற்றார்கள் என்பது ஒருபுறமிருக்க, இந்த இனம் தெரியாத பறக்கும் பொருட்கள் பற்றி எந்தவொரு தீர்க்கமான முடிவினையும் பெறமுடியவில்லை.

இந்த விவகாரம் பற்றி, வெளிப்பட்ட விஞ்ஞான அறிவியல், பற்றி வரும் நாட்களில் பார்ப்போம்.
 



 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்