தமிழர் பாரம்பரியமும் பண்பாடும்

திருமதி செல்லையா யோகரத்தினம் M.A


ண்பாடு என்பது ஒரு பரந்த பரப்பளவைக் கொண்டது. ஒரு சமுதாயம் எப்படியெல்லம் ஒழுகுகிறதோ, அந்த ஒழுக்கம் வழக்கமாகிப் பண்பாடாக ஒரு சந்ததியிலிருந்து இன்னொரு சந்ததிக்குக் கொண்டு செல்லப்பட்டு, ஒரு சங்கிலித்தொடராகக் காலம் காலமாகக் காத்து வரப்படும் வாழ்க்கை முறையாகும். அதுவே அவர்கள் பாரம்பரியமுமாகும். ஒரு சமுதாயம் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, வாழும் முறை, செய்யும் தொழில், ஆகியவை அந்தச் சமுதாயத்தின் பண்பாட்டைச் சுட்டி நிற்பவை. தமிழ் சமுதாயத்தில் அமைந்துள்ள கலை, கலாச்சாரம், நம்பிக்கை, பழக்கவழக்கம், விழுமியங்கள் ஆகியவை பண்பாட்டுக் கூறுகளாகும். தமிழர்களுடைய விழுமியங்கள் கதைகள், பழமொழிகள், சமயம்; என்பனவற்றின் ஊடாக வெளிப்படுகின்றன. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், திருக்குறள், பழமொழிகள் போன்ற ஆக்கங்களில் விழுமியங்களைக் காணலாம். இவையெல்லாம் பண்பாட்டுக் கூறுகளாகக் கருதப்படும். ஒரு சமுதாயத்தின் சிந்தனை வளம், எண்ணச் சிறப்பு ஒரு சமுதாயத்தின் பண்பாட்டின் வெளிப்பாடாக அமைகின்றன. உலகளாவிய நிலையிலும், நாட்டளவிலும், சமுதாய அளவிலும் சில வகையான பண்பாடுகள் அமைந்துள்ளன. தற்காலத்தில் பல நாடுகளின் பண்பாடுகள் கலந்து பன்முகப் பண்பாட்டிற்கு வாய்ப்பு அளிக்கிறது. அறிவியல் வளர்ச்சியால் உலகம் ஒரு கிராமம் போலச் சுருங்கிவிட்டது. அதனால் பல பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.

தமிழர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கினர் என்பதைச் சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன. மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர். வாழ்வை அக வாழ்வு புறவாழ்வு என இரண்டாக இலக்கணம் வகுத்து வாழ்ந்தமை பண்பாட்டின் சிகரமாகக் கருதப்படுகிறது. ஆரம்ப காலம் தொட்டே தமிழ் மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, அரசு, அமைச்சு, ஆட்சிமுறை, போர், வீரம், காதல் போன்றவற்றைக் காட்டி நிற்கின்றது. சங்க இலக்கியம் எனப்படுவது கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட மரபு வழிப்பட்ட இலக்கியங்களாகும். அக்கால கட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை நிலைமைகளைப் படம் பிடித்துக்காட்டுவதாய் உள்ளன. சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என நூல்கள் பெரும் பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து தமிழர் பண்பாட்டை நன்கு அறியக்கூடியதாக உள்ளது.

'பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகல்'
என்பது கலித்தொகைச் செய்யுள். மக்களின் சமூக வாழ்க்கையில் வளர்ச்சி கருதி, பாங்கு அறிந்து, பெருமை உணர்ந்து, பயன் தெரிந்து, ஒழுகும் பண்பைத் தான் பண்பாடு என்று தமிழ்ச்சான்றோர் குறிப்பிட்டனர். பண்பு, பண்பாடு, பண்புடைமை ஆகிய சொற்கள் வழக்கில் பயன்பட்டு வருகின்றன. பண்படுதல் அல்லது பண்படுத்துதல் என்பது சீரான சிறந்த உயர்ந்த அழகான அருமையான நலன்பயக்கும் பயன்தரும் உறுதியான ஒரு நிலையை உணர்த்துவதாகும். இது காரணமாகத்தான் பயிர்ச் செய்கைக்குத் தயாராக எரு இட்டு உழுது பக்குவப்படுத்தப்பட்ட நிலத்தை பண்படுத்தப்பட்ட நிலம் என்று கூறுவர். மேலும் எதுவித கசடும் இல்லாத உள்ளம் பண்பட்ட உள்ளம், அப்பழுக்கற்ற பண்பட்ட இனம், சிறந்த பண்பட்ட மொழி, பயிற்சியால் பண்பட்ட கலை, வஞ்சகமில்லாத புனிதமான பண்பட்ட மனிதன் போன்ற சொற்றொடர்கள் வழக்கத்தில் இருந்து வருவதைக் காணலாம். தொல்காப்பியர் காலத்திலிருந்து இன்றுவரை உள்ள இலக்கண இலக்கியங்களில் பைந்தமிழர் பண்பாடுகள் பற்றிய விளக்கம் பரந்து கிடக்கின்றன. தொல்காப்பியப் பொருளதிகாரம், திருக்குறள், நாலடியார், இன்னாநாற்பது. இனியவை நாற்பது, ஏலாதி, ஆசாரக்கோவை, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், அறநெறிச்சாரம், சிறுபஞ்சமூலம். திரிகடுகம், நன்னெறி, வெற்றிவேற்கை போன்ற இலக்கியங்களில் பைந்தமிழர் பண்பாடுகள் தௌ;ளத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

கணியன் பூங்குன்றனார் என்னும் புறநானூற்றுப்புலவர் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்.......' (புறம் - 192) என்னும் பாடலில் 'எந்த ஊராயினும் அந்த ஊர் எமது ஊரே! எந்த மனிதராயினும் அந்த மனிதர் எம் உறவினரே!' என்று உலகப் பொது நோக்குக் கொண்ட பண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அதே பாடலில் 'வாழ்தல் என்பது எப்போதும் இன்பம் பயக்கவல்லது என்று எண்ணி மயங்கி மகிழ்ந்து விடவும் மாட்டோம் அது எப்போதும் துன்பந் தரத்தக்கது என்று நினைத்து மருண்டு அதனை வெறுத்து ஒதுக்கவும் மாட்டோம்' என்று பாகுபாடு காட்டாத ஒரு பண்பாட்டைக் குறிப்பிடுகிறார். மேலும் தொடர்ந்து 'செல்வத்தால் பெரியவர் என்பதற்காக ஒருவரை மதித்துவிடவும் மாட்டோம்! செல்வம் குறைந்த சிறியோர் என்பதற்காக ஒருவரை இகழ்ந்து ஒதுக்கவும் மாட்டோம்.' இந்தப் பாடல் அருமையிலும் அருமை. சிந்தனைக்குரியது. வாழ்வுக்குரியது.

வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோளை அடைவதையே பண்டைத் தமிழர் மிகச் சிறந்த பண்பாட்டுக் கூறாகக் கருதினர்

'யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே.'
- (புறம் - 214) கோப்பெருஞ் சோழன் பாடினான். (குறும்பூழ்---- சிறுபறவை, வறுங்கை ---- வெறும்கை) யானையை வேட்டையாடவேண்டும் என்று போகின்றவன் யானையை எளிதாகப் பெற்று விடக்கூடும். ஒரு சிறிய பறவையை வேட்டையாட வேண்டும் என்று போகின்றவன் அது கிடைக்காமலும் திரும்பக்கூடும். எனவே ஒருவன் உயர்ந்த குறிக்கோளுடன் வாழவேண்டும்.

'நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்'
(புறம் - 195) நரிவெரூஉத்தலையார் பாடியது. பண்டைத் தமிழ்மக்கள் அறம், பொருள், இன்பம் மூன்றையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். அறத்திலிருந்து தவறுதல் கூடாது என்று வாழ்ந்தனர். தவறினால் பழிவரும் என்று நம்பினர். அப்பழியைத் தாங்க முடியாது என்றும் எண்ணினர். எனவே அறம் செய்வதைப் பண்பாட்டின் ஒரு கூறாகக் கருதிச் செயல்ப்பட்டனர்.

நமக்குக் கிடைத்திருக்கும் சங்க இலக்கியங்களிலிருந்து தமிழர் பண்பாட்டை நன்கு அறிகிறோம். ஒரு நாட்டில் வாழ்வோர் அவர்கள் வாழும் நிலம். சூழல், பழக்கவழக்கங்கள், நடவடிக்கைகள், நம்பிக்கைகள், உணர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையாக ஒரு தனித்தன்மை வாய்ந்த பண்பாட்டை உருவாக்கிக் கொள்வர். அப்பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டே அவர்களை அடையாளம் காண முடியும். தமிழருக்கென்றே தனிப்பட்ட சில பண்புகள் உள்ளன.

புலவரைப் போற்றும் பண்பு பெரிதும் போற்றப்பட வேண்டியது. சேரமான் கடுங்கோ வாழியாதன் புலவர் கபிலருக்கு 10 பாடல் தொகுதி பாடியமைக்காக நூறாயிரம் பொன்னும், சங்ககாலக்காசு கைச்செலவுக்கும் என்று சொல்லி வழங்கினான். அத்துடன் தன் நாட்டின் 'நன்றா' என்னும் குன்றின்மீது ஏறித் தன் கண்ணுக்கும் புலவர் கண்ணுக்கும் தெரிந்த அத்தனை ஊர்களையும் அவருக்கு உரிமையாக்கினான். மேலும் அவன் கபிலரின் கையைப் பற்றி மென்மையாக உள்ளது என்னும் போது, 'வாள் பிடித்ததால் உன் கை வன்கை, உன் விருந்து உண்டதால் என்கை மென் கை' என்கிறார் புலவர். 'ஞாயிறு ஒரு நாளில் பாதி நேரம் வருவதில்லை, இவன் இரவு பகல் எல்லா நேரமும் பரிசில் வழங்குகிறான்'; என்கிறார் கபிலர். பாரியைப் பாடிய கபிலரும் இவரே தான். பாரி இறந்தான் என்று கபிலர் இவனைப் பாடவிலை. கொடைப் புகழைக் கேள்வியுற்றுப் பத்துப் பாட்டில் இடம்பெறும் பத்துப் பாடல்களைப் பாடியுள்ளார். இவ்வாறு புலவர்கள் அரசர்களின் நிழலில் இனிது வாழ்ந்தனர்.

முரசு கட்டில் அரசர்களின் வீரமுரசத்தை வைப்பதற்குரியது. ஒருமுறை சேரமானின் முரசு நீராட்டுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்தது. அந்த வேளையில் அரசனைப் பார்க்க வந்திருந்த மோசிக்கீரனார் என்ற புலவர், நடந்துவந்த களைப்பால் முரசுகட்டிலில், நிலைமையை அறியாமல் அதில் ஏறிப்படுத்ததுமல்லாமல் உறங்கியும் விட்டார். முரசு வைக்கும் கட்டிலில் வேறு யாராவது உட்காருவதுகூட அம்முரசுக்கு உரிய அரசனை அவமானப்படுத்தும் செயலாகும். தண்டனைக்குரியதும் கூட. முரசு நீராடி வந்தது. அரசனும் வந்தான். யாரோ ஒருவர் முரச கட்டிலில் உறங்குகுவதைக் கண்டான். சினம் கொண்டான். வாளை உருவினான். வெட்டிவிடவும் கருதினான். ஆனால் உறங்குவது புலவர் ஒருவர் என்பதைக் கண்டான். துணுக்குற்றான். மனம் மாறினான். புலவர் தன்னை மறந்து வியர்வையோடு உறங்குவது கண்டு மனம் உருகினான். புலவரின் வியர்வை நீங்க விசிறி எடுத்து விசிறினான். இவை போன்று இன்னும் பல நிகழ்ச்சிகள் பழங்காலத்தில் நடந்துள்ளன. பண்டை இலக்கியங்கள் இவற்றிற்குச் சான்று பகர்கின்றன. இத்தகைய நிகழ்ச்சிகள், மன்னர்கள் புலவர்களைப் போற்றிய பண்பாட்டினை எடுத்து இயம்புகின்றன.

பல ஆயிரம் ஆண்டு காலமாக சில இந்து மத வழக்கங்கள் தமிழர்களிடையே இன்றளவும் மிகவும் தீவிரமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதனை மூடநம்பிக்கை என்றும் கூறலாம். மற்றவர் மனதில் பயத்தை உண்டாக்குவதற்குச் செய்யப்பட்டதாகவும் இருக்கலாம். நேரடியாகக் கூறினால் ஏற்றுக்கொள்ள வைப்பது கடினமாக இருக்கும். அதனால் இது இப்படித்தான் என்று சொல்லப் பட்டிருக்கும். கடவுள் தண்டிப்பார் என்றும் கூறப்பட்டிருக்கும். ஆனால் ஒவ்வொன்றுக்கும் தகுந்த விஞ்ஞான விளக்கமும் இருக்கும். எதுவாயினும் வழக்கம் பழக்கமாகி விட்டால் அவற்றை மாற்றுவது கடினம். பொதுவாக ஏதாவது தம் எல்லையைத் தாண்டி ஒரு துன்பம் வந்துவிட்டால் 'கடவுளே' என்று கூறுவது வழக்கமாகி பழக்கமாகிவிட்ட ஒரு செயற்பாடு. எத்தனை பகுத்தறிவு பேசினாலும் இதனை மாற்றுவது கடினம். இதுதான் இயல்பு, இயற்கை என்று ஆகிவிடும். இவற்றை இயல்பாகவே பிள்ளைகளும் பெற்றோரைப் பார்த்துப் ;போலச்செய்தல்' பழகிவிடுவார்கள். எனவே காலம் காலமாக நடைபெறும் ஒரு செயற்பாடாகப் பாரம்பரியமாக வந்துவிடும். இது ஒரு சின்ன உதாரணம், ஆனால் பல மூடநம்பிக்கைகள் இந்த அமைப்பிலேயே தமிழர் வாழ்வில் இடம்பெற்றுவருகின்றன.

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமானவை உணவு, உடை, உறையுள். இவற்றை அவனுடைய பண்பாடுதான் கற்றுக் கொடுக்கிறது. எதை, எப்படி, எப்பொழுது உண்ண வேண்டும என்பதை பண்பாடு கற்றுக்கொடுக்கிறது. அதேபோலவே உடையும் உறையுள்ளும். ஆடை அணிதல், உணவுமுறை, நம்பிக்கை, வழிபாடு போன்ற பழக்க வழக்கங்களில் தமிழர்களுக்கு எனச் சில தனித்தன்மைகள் அமைந்துள்ளன. அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவை அவர்கள் காலை மாலை மதியம் என மூன்று வேளை சாப்பிடுவார்கள்;. அவர்களின் சாப்பாட்டு மூலப் பொருள் நெல்- நெல்லிலிருந்து பெறப்படும் அரிசி, மற்றும் சிறுதானியங்கள், இயற்கையிலே பெறப்படும் காய்கறிவகைகள். உண்ணும் முறையில்த் தனித் தன்மை காணப்படுகிறது. தமிழர்கள் எப்பொழுதும் தரையிலேயே பாய் போட்டு உட்கார்ந்து வாழை இலையில் வலக்கையால் உணவைப் பிசைந்து அள்ளி எடுத்துச் சாப்பிடுவார்கள். அணியும் உடையிலும் தனித்தன்மை காணப்படுகிறது. 'ஆள் பாதி ஆடை பாதி;' என்று தமிழில் ஒரு பழமொழியுண்டு. ஒருவர் அணியும் ஆடை அவரின் தராதரத்தையும் அவரது பண்பாட்டையும் வெளிப்படுத்தும். ஆடை என்பது ஒருவரை அடையாளம் காட்டுவதற்குரிய அடையாளமாகும். ஒருவர் அணிந்திருக்கும் ஆடையை அடிப்படையாகக் கொண்டு அவர் எந்த நாட்டைச் சார்ந்தவர், எந்தச் சமயத்தைச் சார்ந்தவர்;, எத்தகைய காலநிலையைச் சார்ந்து வாழ்கின்றவர் என்பன போன்றவற்றை அறிய இயலும். தமிழர்கள் பெரும்பாலும் வெப்பவலய நாட்டில் வாழ்வதால் அந்தக் காலநிலைக் கேற்பவே தங்கள் உடைகளை அமைத்துக் கொள்வர். தட்பவெப்ப நிலைக்கேற்ப உடைகளை அமைப்பதோடு உறையுளையும் அமைப்பர். அனேகமாக வெப்பமண்டலப் பிரதேசங்கள் மழைகாலம் மாரிகாலம் என்றும் மழையற்ற உலர்காலம் கோடைகாலம் என்றும் அழைக்கப்படும். மித வெப்ப மண்டலத்தில் போல முழுமையாக வேறுபடுத்தக்கூடிய நான்கு பருவ காலங்கள் இங்கே காணப்படுவதில்லை.

தமிழர்களின் ஆடை, தமிழ்ப் பெண்கள் சேலை அணிவது நீண்ட நெடுங்காலமாகப் பின்பற்றப் பட்டுவரும் ஒரு பழக்கம். இப்பழக்கத்தின் பின்புலம் தமிழர் பண்பாட்டின் ஒரு கூறாகும். பெண்கள் உடலின் பெரும்புகுதியை மறைக்கும் வகையில்ச் சேலையை அணிவார்கள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கு குணங்களும் தமிழ்ப்பெண்களிடம் எதிர்பார்க்கப்படும் பண்புகளாகும். இது தமிழர் பண்பாட்டின் பிரதானமான ஒரு கூறாகத் திகழ்கிறது. ஆண்கள் வேட்டி, சால்வை, தலைப்பாகை என்று அணிந்து கொள்வார்கள். பெண்கள் ஆடவர்போல வெளி உலகத்துடன் தொடர்பு வைப்பவர்கள் அல்ல. வீட்டிற்குள்ளேயே தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழிப்பவர்கள். அவர்களது அன்றாட நடவடிக்கைகள் அடுக்களையில் சமையல் செய்வதில்த் தொடங்கி, வீடு மெழுகுதல், வீடு பெருக்குதல், சுத்தம் செய்தல். மற்றும் பெண்களுடன் உரையாடுவது உணவுப் பொருட்கள் சேகரித்தல், உலரவைத்தல், குத்தல், இடித்தல் போன்ற இன்னோரன்ன வேலைகளாகும். அடுக்களையிலுள்ள அஞ்சறைப்பெட்டி ஒரு மருத்துவரின் முதலுதவிப்பெட்டிக்குச் சமானமானது. பெரும்பாலும் எந்த வகையான நோயானாலும் அதற்கு அதற்குள் மருந்து இருக்கும். தமிழ்ப் பெண்களுக்குக் குழந்தை பிறக்கும் போது வயதில் மூத்தவர் பரிவோடு பிள்ளையைப் பெறும் பெண் அருகில் சுற்றி நின்று அவளுக்கு ஆதரவாக ஒருவர் கைகளைப் பிடித்துக் கொள்வார், மற்றொருவர் காலைவிரித்து குழந்தை எனிதாக வெளிவர உதவி செய்வார், இன்னொருவர் இடுப்பை நீPவி விடுவார், எதற்கும் ஒரு மருத்துவிச்சி உடன் இருப்பார்.

தமிழ் மக்கள் இயல்பான நீரோட்டத்துடன் இணைந்து செயற்படுபவர்கள்;. அவர்களுடைய முக்கியமான தொழில் விவசாயம். விவசாயம் ஒரு பரந்த பரப்பளவைக் கொண்ட தொழில். மாடுகன்று பார்த்தல், பயிர்வகைகளை நடுவது, காய்கறித் தோட்டம் செய்வது, தானியங்களைச் சேமித்து வைப்பது எனப்பலவிதமான தொழிற்பாடும் கொண்டது. தங்கள் பண்பாட்டிற்கு ஏற்ப உறைவிடங்களையும் உருவாக்குவர். வீடு தரை மண் ஆகவும் கூரை பனை அல்லது தென்னம் ஓலையாகவும் இருக்கும். வீட்டு அமைப்பில் உள்முற்றம், வெளிமுற்றம். பின்பக்கம், முன்பக்கம், திண்ணை போன்ற அமைப்புக்கள் அமைந்திருக்கும். வெளி முற்றத்தில்ப் பெண்கள் அரிசி மாக்கொண்டு அழகழகான கோலங்கள் போடுவார்கள். தமிழர்களின் விருந்தோம்பல்ப் பண்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது திண்ணை. முற்காலத்தில் போக்குவரத்து வசதி இல்லை. இரவில் பயணம் செய்ய முடியாது. அத்தகைய சூழ்நிலைகளில் வழிப்போக்கர்கள் போகும் வழியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள வீட்டுத் திண்ணையில் படுத்த உறங்கி ஓய்வெடுத்துக் கொள்வர். மக்கள் பிரயாணம் போகும் போது பொதி சோறு கட்டிக் கொண்டே செல்வர். இது இரண்டு மூன்று நாட்களுக்குப் பழுதடையாது இருக்கும். திண்ணைகள் இவர்களுக்காகவே செய்யப்பட்டன. மேலும் வழிப்போக்கர்களுக்கு உணவு பரிமாறும் விருந்தோம்பல் பண்பும் இருந்திருக்கிறது. வீட்டுத்திண்ணைகள் அமைத்திருப்பது தமிழர்களின் பண்பாட்டுக்கூறுகளில் ஒன்றாகும்.

கோயில்கள் நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற சொத்து. அதில் அவர்கள் அனுபவங்களும் ஆராய்ச்சிகளும் உள்ளன. திறந்த கண்களோடும் செவிகளோடும் கொவில்களை அடைந்தால் அங்கே கற்றுக் கொள்ள நிறைய விசயங்கள் உள்ளன. தமிழர்கள் வயதில் மூத்தோரையும், பெரியோரையும். சிறப்புடையோரையும் நேரில் பார்த்தால் எழுந்து நின்று மரியாதை செலுத்துவர். இது அவர்கள் பண்பாட்டுக்கூறுகளில் ஒன்று. இந்நிகழ்ச்சி பார்க்க புறத்தோற்றம் போலக்காணப்பட்டாலும் அவர்களின் அக உணர்வுகளையே வெளிப்படுத்துகிறது. மேலும் இது திடீரென வருவதில்லை. சிறு வயதிலிருந்தே இரத்தத்தில் ஊறிய பண்பாடு. நல்ல சிந்தனைகள் நல்ல மனத்தின் வெளிப்பாடு. நல்ல சிந்தனைகள் ஒரு நாட்டின் உயர்ந்த பண்பாட்டைக் குறிக்கும். இனத்துக்கு இனம், நாட்டுக்கு நாடு வேறுபட்ட சிந்தனைகள் உருவாவது இயல்பு. இது சூழலின் அடிப்படையில் அமையும். வேறுபட்ட சிந்தனைகள் வேறுபட்ட பண்பாட்டை வெளிப்படுத்தும். இத்தகைய சிந்தனைகள் ஒரு மனிதனின் அக உணர்வை வெளிப்படுத்தும். எனவே சிந்தனைகளின் வாயிலாக புலப்படும் அகஉணர்வு பண்பாட்டின் வெளிப்பாடே.

நாடோடிக் கூட்டமாக அலைந்து திரிந்த மக்கள் குடியிருப்பு அமைத்து முடியாட்சி தோற்றுவித்துக் குடியாட்சி மலரச்செய்த காலம் வரை, குழுவாக இனமாகப் பலப்பல பிரிவுகளாகப் பிரிந்து சண்டையிட்டுக் கொண்ட நிகழ்ச்சிகள் பலப்பல. இத்தகைய சூழலில் இந்த உலக மக்கள் அனைவரும் ஓர் இனம் ஒருவருக்கு ஒருவர் உறவுடையவர்கள். எல்லா ஊரும் தம் சொந்த ஊரே என்பதனை 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பல எல்லைகளைக் கடந்த உயர்ந்த சிந்தனையாகத் தமிழர்கள் வெளியிட்டுள்ளனர். இந்தச் சிந்தனை கூறிய காலத்திலும் இன்றைய சூழலிலும் எக்காலத்தும் பொருந்தக்கூடிய வகையில் மிகச் சிறந்த சிந்தனை அகஉணர்வுப் பண்பாட்டின் வெளிப்பாடாகும். புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் உலகின் பல பகுதிகளிலும் வாழ்கிறார்கள், அவர்கள் தங்கள் பண்பாட்டின் தனித்தன்மையைக் காப்பாற்றிப் பாதுகாத்து வருகின்றனர். இன்றளவும் தங்கள் பண்பாட்டின் பெருமையை உணர்ந்து போற்றி வளர்த்து வாழ்ந்து வருகின்றனர்.

அறிவியல் வளர்ச்சியால் ஏற்பட்ட புதிய சூழலில் நவீன கருவிகள் கொண்டு மேற்கொள்ளும் செயல்களினால் தமிழர்களிடையே பல மரபு வழி பண்பாட்டுக்கூறுகள் மறைந்துவிட்டன. உலகம் இன்று நன்றாகச் சுருங்கி விட்டது. இதனால் நாடுகளிடையேயும் மக்களிடையேயும் இடைவெளி குறைந்துவிட்டது. இவற்றால் மனிதச் சிந்தனைகளிலும், பழக்கவழக்கங்களிலும், நம்பிக்கைகளிலும், சடங்குகளிலும், வாழ்க்கை முறைகளிலும், சமுதாய அமைப்புக்களிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவை கருத்துப் பரிமாற்றம், பண்டப் பரிமாற்றம், ஆகியவற்றோடு, பண்பாட்டுக் கூறுகளிடையேயும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இதனால் நீண்ட நெடுங்காலமாக தனித்தன்மை சிதையாதவாறு பாதுகாக்கப்பட்டுவந்த பண்பாடுகளிடையே பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புதுக்கண்டுபிடிப்புக்கள் தொழிற்புரட்சியை ஏற்படுத்தின. இதனால் தொழில் நிறுவனங்களில் பல பண்பாட்டுப் பிரிவினர் கலந்து பண்யாற்றும் புதிய சூழல் ஏற்பட்டன. இப்புதிய சூழல் மொழிக்கலப்பு, பண்பாட்டுக்கலப்பு, நம்பிக்கைகள், சிந்தனைகளில் மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தின. இம்மாற்றங்கள் பண்பாடுகளிடையேயும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

பண்பாட்டுக்கு ஒரு வரையறை அல்லது எல்லை கூற இயலாது. ஒரு நாட்டுக்கு என ஒரு பண்பாடு அமைவது உண்டு. நாட்டுக்கு நாடு ஊருக்கு ஊர் சில பல மாறுபாடு இருக்கலாம் ஆனால் தமிழருக்கு எனச் சிறப்பான பண்பாடு உண்டு. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளாகிய நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள், சமயச்சடங்குகள் பெருமளவில் தமிழ்ச் சமூகம் குடியேறி எங்கிருந்தாலம் ஓரளவுக்குப் பின்பற்றப்பட்டே வருகின்றன. குடியேற்றம் உலகப் பொதுப் பண்பாட்டை உருவாக்குகின்றது. தற்காலத்தில்ப் பெருகிவரும் தகவல்த் தொடர்புச் சாதனங்கள் பொதுப்பண்பாட்டுக் கூறகளை உருவாக்குவதில் துணை செய்கின்றன. நெற்றியில் பொட்டு வைத்தல். திருமணம் போன்ற விழாக்கனில் விபூதி சந்தனம் கொடுத்தல், ஏன் குறிப்பாகச் சொல்லப் போனால் ஓரளவிற்கு திருமணங்கள் சம்பிரதாய முறைப்படி நடைபெறுவது பெருமைப்பட வேண்டியது. திருமணச் சடங்குகளில் தமிழர் பண்பாடு பெரிதும் போற்றப்படுகிறது. பெண்கள் பாரம்பரிய முறைப்படி மஞ்சள் பூசி குளித்தல், ஆடை அணிதல், குங்குமப் பொட்டு வைத்தல், ஆடவர் வேட்டி கட்டுதல், தலைப்பாகை அணிதல், சிறப்பாகச் சொல்லப்போனால் மணமகளுக்குத் தாலி அணிவித்தல், மெட்டி அணிவித்தல், மாலை மாற்றுதல் முதலியன நிகழ்கின்றன. இக்கூறுகள் தமிழர் தம்பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் சுட்டி நிற்கின்றன.

எந்த ஒரு மனிதனும் பிறக்கும்போது பண்பாட்டுக் கூறுகளுடன் பிறப்பதில்லை. எனவே வம்சாவழியாகப் பண்பாடு அவனிடம் வந்த சேராது. அவனாக பெற்றோரோ மற்றோரோ இடத்திலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தை தனது அனுபவத்தினாலும், பிறரைப் பார்த்துப் போலச் செய்வதினாலும் பண்பாட்டைத் தெரிந்து கொள்கிறது. பண்பாட்டுக் கூறுகள் பலவற்றைக் குழந்தை பெற்றோரிடமிருந்து கவனித்தும், கூர்ந்து அவதானித்தும், பெற்றோர் சொல்லிக் கொடுத்தும் சார்ந்த சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளைத் தெரிந்து கொள்கிறது. பல நாடுகளில் தொன்மைக் காலத்திலும் அண்மைக் காலத்திலும் பலர் சென்று வாழ்ந்து வருகின்றனர். தமிழர்களில்ப் பலர் பழைய பண்பாட்டுக் கூறுகளைத் தொடர்ந்தும் பாதுகாத்து வருகின்றனர். ஆனால் சில பண்பாட்டுக்சூறுகளை பிற பண்பாட்டிற்கு ஏற்ப மாற்றிக் கொண்டனர். சிலவற்றை மட்டும் அடையாளமாக போற்றிப் பாது காத்து வருகின்றனர். இத்தகைய செயல்கள் பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இவை பெரும்பாலும் ஆடை அணிதல், பொட்டு வைத்தல் போன்றவை. ஒருசில பழக்கவழக்கங்கள், நவீன சாதனங்களைப் பயன்படுத்துதல், ஒப்பனை செய்தல் போன்ற பண்பாட்டுக் கூறுகள் பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இங்கே தான் குழந்தைக்குச் சிக்கல் வருகிறது. எது சொந்தம்? எது கடன் வாங்கியது என்று புரியாமல்த் தவிக்கிறது. பண்பாட்டில் பிரச்சனை, மொழிப் பிரச்சனை அதனால் தமிழர் பண்பாட்டு நூல்களையாவது கற்றுத் தெரிந்து கொள்ளலாம் என்றால் அதுவும் முடியாது. எனவே இந்தச் சந்ததிக்கு ஒரளவு சரியென்று கூறினாலும் அடுத்த அடுத்த தலைமுறைக்கு என்ன பதில் சொல்ல முடியும் என்பது கேள்விக் குறி. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஒருவர் இளம் வயசிலே புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். அவருக்குத் தான் தமிழன் என்பது மாத்திரம் தெரியும். இலங்கை என்றும் தெரியும். யாழ்ப்பாணம் என்பதும் நினைவிருக்கிறது. அதற்கு மேல் 'கைதடி நோத்' என்பதும் தெரிகிறது, அதற்கு மேல் எதுவும் தெரியவில்லை. இந்த சந்ததியிலேயே இப்படி யென்றால் அடுத்து அடுத்து வரும் சந்ததியினர் என்ன செய்யப் போகிறார்கள்? யாரைக் குற்றம் சொல்வது? ஆனாலும் ஒன்று 2010ல் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் பலர் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிதார்கள். அவர்கள் தமிழை ஆங்கிலத்தில் ஆய்வு செய்து ஆங்கிலத்திலேயே தமது ஆய்வைப் பூரணப் படுத்தியிருந்தனர். அது போல பல நிகழ்வுகளை நாம் எதிர்பார்க்கலாம்.

அந்நிய தேசத்தில் பிறந்தாலும் அன்னைத்தமிழுக்குத் தொண்டாற்றியவர் அறிஞர் இராபர்ட் கால்ட் வெல். இவர் பிரிட்டானயாவில்ப் பிறந்த ஆங்கிலேயர். தமிழ்பற்றி ஆய்ந்து தமிழின் தொன்மையைக் கண்டு வியந்து அதன் பெருமையை நிலைநாட்டினார். தமிழின் தொன்மையை உலகறியச் செய்தார். தமிழ் மண்ணில்ப் பிறந்து தமிழராக இருக்கும் நாம் நம் அன்னை தமிழை எப்படி அறிந்திருக்கிறோம்? இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் தமிழ் மொழியும், தமிழ்ப்பண்பாடும் எதோ ஒருவகையில்க் கடைசித் தமிழன் இருக்கும் வரை காப்பாற்றப்படும் என்று நம்புவோம்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்ப் பண்பாடு! தமிழ்ப் பாரம்பரியம் போற்றுவோம்!



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்