அகவை முதிர்ந்தாலும் அன்பு மாறாத காதலைப் போற்றும் நற்றிணைப் பாடல்

பேராசிரியர் இரா.மோகன்

“ச
ங்க இலக்கியத்திற்கு ஈடான கவிதைகள் உலகெங்கணும் இல்லை என்று கூறலாம். காதல் பற்றிய கவிதைகள் கிரேக்க மொழியிலும் காணப்படுகின்றன. அத்தகைய காதற் கவிதைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் தான் சங்கக் கவிதைகளின் உயரிய தரம், திறம், நெறிமுறைகள், பண்பாடுகள், மரபுகள் புலனாகும்… சங்க காலத்துக் காதற் பாடல்கள் அனைத்தும் மனிதப் பண்பாட்டை மையமாக வைத்துப் பாடிய பாடல்களாகும்… இவை மனித குலத்தின் பண்பாட்டைக் காதல் பாடுபொருள் மூலம் நெறிப்படுத்தத் தோன்றியவை; சங்க கால மகளிரின், பெண்ணியத்தின் பெருமையைப் பறைசாற்றத் தோன்றியவை” (நற்றிணை: மக்கள் பதிப்பு, pp.IX; X) என மொழிகுவர் பேராசிரியர் கதிர்.மகாதேவன். அவரது கூற்றினை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்த நயத்தக்க நற்றிணைப் பாடல் ஒன்றினை ஈண்டுக் காணலாம்.

நற்றிணையின் பத்தாம் பாடல், தோழி கூற்றாக அமைந்தது. ‘இஃது உடன்போக்கும் தோழி கையடுத்தது’ என்பது இப்பாடலின் கூற்று. தலைவனும் தலைவியும் பெற்றோர் அறியாமல் வீட்டை விட்டு உடன்போக்கு மேற்கொள்வது என முடிவெடுத்தனர். இந்நிலையில் தோழி நள்ளிரவில் தலைவன் இருந்த இடத்திற்குத் தலைவியைக் கொண்டு வந்து சேர்த்தாள்; இன்று போலவே என்றும், முதுமை எய்தினும் தலைவியைக் கைவிடாமல் பாதுகாத்தல் வேண்டும் என்று வலியுறுத்திக் கூறித் தலைவனிடம் ஒப்படைத்தாள்:

“மலர்கள் மலர்ந்திருக்கும் பொழில் சூழ்ந்த ஊரை உடையவனே! இனிய கடுப்பு மிக்க கள்ளுணவையும் இழையணிந்த நெடிய தேர்களையும் உடைய வலிமை மிக்கவர் சோழ மன்னர். இச் சோழ மன்னர் கொங்கரை அடக்கும் பொருட்டு வெண்மையான கோட்டினை உடைய யானைகளைக் கொண்ட ‘போர்’ என்னும் ஊரின் தலைவனாகிய ‘பழையன்’ என்னும் படைத் தலைவனிடம் இருந்து குறி வைத்து எய்யும் பொது ஒருபோதும் தப்பாத வேற்படையைத் துணையாகப் பெற்று வைத்திருந்தனர். அவ்வேற் படையைப் போன்று பிழைபடாத உன்னுடைய நல்ல சொல்லைக் கேட்டு உண்மை எனத் தெளிந்தவள் இத்தலைவி. இவளுடைய அண்ணாந்து உயர்ந்த அழகிய மார்புகள் தளர்ந்தாலும், பொன் போன்ற மேனியிலே கருமணி போன்று தாழ்ந்து நல்ல, நெடிய கூந்தல் நரையுடனே முடிக்கப் பெற்றாலும், அக்காலத்தும் இவள் நம் தழுவலுக்குப் பயன்படாமல் அகவை முதிர்ந்தாள் என்று கருதிக் கைவிடாது பாதுகாப்பாயாக!”

தோழியின் கூற்றினைத் தன்னகத்தே கொண்ட அழகிய நற்றிணைப் பாடல் வருமாறு:

“அண்ணாந்து ஏந்திய இளமுலை தளரினும்,
பொன்னேர் மேனி மணியின் தாழ்ந்த
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,
நீத்தல் ஓம்புமதி – பூக்கேழ் ஊர!
இன்கடுங் கள்ளின் இழையணி நெடுந்தேர்க்
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்,
வெண்கோட்டு யானைப் போர் கிழவோன்
பழையன் வேல்வாய்த் தன்னநின்
பிழையா நன்மொழி தேறிய இவட்கே.”

இந் நற்றிணைப் பாடலில் குறிக்கப் பெற்றுள்ள பழையன் என்பான், சோழர்க்குப் படைத்தலைவனாக விளங்கிய குறுநில மன்னன். பிழையாத வீரம் மிக்கவன் இவன். ‘வென்வேல், மாரி அம்பின் மழைத்தோல் பழையன், காவிரி வைப்பிற் போஓர்’ (வெற்றிவேல், மாரி போல் பொழியும் அம்புகள், மேகம் போலக் கறுத்த கேடகம் ஆகியவற்றை உடைய பழையன் என்பவனுக்கு உரிய போர் என்னும் ஊர்) என அகநானூற்றுப் பாடல் ஒன்றிலும் (186:14-16) இவனது ஊரும் சீரும் உரைக்கப் பெற்றுள்ளன.

‘மார்புகள் தளர்ந்து, நரையொடு மூத்த காலத்தும் மாறாத அன்போடு இவளைக் கைவிடாது பாதுகாப்பாயாக!’ எனத் தலைவனிடம் தோழி வலியுறுத்திக் கூறுவது குறிப்பிடத்தக்கது.

குறுந்தொகைப் பாடல் ஒன்றில் வரும் தோழியும் ‘இவளுக்கு நின்னையன்றித் துணை பிறிது இல்லை’ என்னும் பொருளில் ‘நன்மலை நாட நின்னலது இவளே’ (115) எனக் கூறுவது இங்கே ஒப்புநோக்கத் தக்கது. கபிலர் பெருமானும் நற்றிணை முதற்பாடலில், ‘நீர் இன்று அமையா உலகம் போலத் தம்இன்று அமையா நம் நயந்து அருளி…’ (‘நீர் இல்லாமல் இவ்வுலகம் அமையாது; அது போல அவர் இல்லாமல் நாம் இல்லை’) எனக் குறிப்பிடுவது மனங்கொளத்தக்கது.

பாவேந்தர் பாரதிதாசனின் ‘குடும்ப விளக்’கில் இருந்து ஓர் ஒப்புநோக்கு: அதில் வரும் தங்கமும் மணவழகரும் முதுமை உற்றனர். நரை திரை மூப்பு எய்தினர் மக்களைப் பெற்றனர். பேரர் பேத்திமார் கண்டனர். அவர்களது புலன்கள் தேய்ந்தன. கருவிகள் ஓய்வு பெற்றன, ஆடிய பம்பரங்கள் போல் ஆயினர். எனினும் அவர்களது நிரம்பிய உள்ளத்தில் செவ்விய காதல் உணர்வு சுடர் விட்டு நின்றது:

“புதுமலர் அல்ல; காய்த்த
       புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்,
       தள்ளாடி விழும் மூதாட்டி!
மதியல்ல முகம், அவட்கு
       வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எது எனக்கு இன்பம் நல்கும்?
       ‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே!”


முதியோர் காதலின் மாண்பினைப் பறைசாற்றும் இப் பாடல், பெயர் தெரியாத நற்றிணைப் புலவர் பாடிய பழம்பாடலின் புதியதொரு விரிவாக்கமே எனலாம்.
 


'தமிழாகரர்' முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்