தலைவியின் பண்பட்ட உள்ளத்து உணர்ச்சியைப் புலப்படுத்தும் நற்றிணைப் பாடல்

பேராசிரியர் இரா.மோகன்

ருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாகப் பல தலைமுறையினர் தொடர்ந்து பயின்று பயன்பெற்றுப் போற்றிய விழுமிய கற்பனைச் செல்வம் நிறைந்த நூல்கள் சங்க இலக்கியங்கள். பேராசிரியர் மு.வரதராசனார் குறிப்பிடுவது போல், “உள்ளதைப் புனைந்துரைத்தலும் உள்ளதை ஒழுங்கு-படுத்திக் கூறுதலுமே இவற்றில் உள்ளன… நற்றிணைப் பாட்டுக்களைப் பாடிய புலவர்கள், காதலரின் உடல் வனப்பை எடுத்துக் கூறுவதற்காகத் தம் புலமையைப் பயன்படுத்தவில்லை. காதலரின் பண்பட்ட உள்ளத்து உணர்ச்சியைப் புலப்படுத்துதலே அப் புலவர்களின் நோக்கம். அந்த உள்ளத்தின் இயல்பு புலப்படுத்துவதற்கு, காதலரின் தோற்றம் எந்த அளவிற்கு இன்றியமையாததோ அந்த அளவிற்குக் அவர்களின் உடல் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. பாட்டுக்களைக் கற்பவர்க்கு காதலரின் முகம் விளங்கித் தோன்றுவதை விட, முகக் குறிப்பே மிகத் தெளிவாகத் தோன்றும்” (முன்னுரை, நற்றிணைச் செல்வம், பக். 16,17).

நற்றிணையின் 17-ஆம் பாடல், குறிஞ்சித் திணையில் அமைந்தது. நொச்சி நியமங்கிழார் என்னும் சான்றோர் பாடியது. ‘முன்னிலைப் புறமொழியாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது’ என்பது இப் பாடலின் கூற்று. இப் பாடலில் துலங்கும் நயமும் நுட்பமும் குறித்து ஈண்டுக் காணலாம்.

களவொழுக்கத்தில் பகற்பொழுதில் வந்து தலைவியைச் சந்திப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தான் ஒரு தலைவன். தலைவியும் தோழியும் அவன் அவ்வாறு பலநாளும் வருவதைக் கட்டுப்படுத்த நினைத்தனர்; அவன் உள்ளத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும் என்றும் திட்டமிட்டனர். அதற்கு ஏற்ற வகையில் அவாக்ள் இருவரும் பொய்யான ஒரு நடிப்பினை மேற்கொண்டனர். ஒருநாள் வழக்கம் போல் தலைவியைச் சந்திக்கும் நோக்கத்துடன் தலைவன் வந்து மறைவான இடத்தில் நின்றான். அவன் வந்து நின்றதைக் கண்டும் காணதவர்கள் போல் தலைவியும் தோழியும் நடித்து, களவொழுக்கத்தில் துன்பமே உறுவதாகப் பேசிக் கொண்டனர். தலைவி தோழியிடம் தான் படும் துயரத்தை எடுத்துரைத்தாள். ஒரு நாள் அவள் தலைவனை நினைத்து அழும் போது தாய் பார்த்துவிட்டதாகவும், அன்போடு காரணம் கேட்ட தாயிடம் தான் வாய் தவறி உண்மையை உரைக்க இருந்ததாகவும், நல்ல வேளையாகச் சொல்லாமல் மறைத்துத் தப்பித்துக் கொண்டதாகவும் கூறினாள்.

“தோழி! விடியற் காலத்தில் மழைபெய்து, நல்ல நெடிய மலையில் இருந்து கடலின் அலை போல் அருவி விழுந்து ஓடி வந்தது. அகன்ற, பெரிய காடு உள்ள இடம் அது. அங்கே அருவி விழும் அழகைப் பார்த்த படியே நின்று கொண்டு இருந்தேன். யான் முதன்முதலில் காதலரைக் கண்ட இடம் அதுதான். ஆகையால், அருவி விழும் அழகைப் பார்த்த வண்ணம் நின்றிருந்த எனக்கு அவருடைய நினைவு உடன் வந்தது; வரவே, கண்கள் கலங்கி அழுதேன். அழுகையை அடக்கிக் கொள்ள முயன்றேன். அடக்கியும் நிற்காமல் கண்கள் அழுவதைக் கண்ட தாய், ‘என்ன செய்தாய்? அழாதே! உன் அழகிய பற்களோடு முத்தம் கொள்வேன்!’ என்று மென்மையான, இனிய சொற்களைக் கூறியபடியே என்னை நெருங்கினாள். அவள் கூறியதைக் கேட்ட யான், மிக விரைந்து, உயிரைக் காட்டிலும் சிறந்த நாணத்தை மறந்து விட்டு, வாய் தவறி உண்மையைச் சொல்லி விட இருந்தேன். மலைச்சாரலில் உள்ள காந்தளின் தேனை உண்ட நீலமணி போன்ற நிறத்தை உடைய வண்டு, யாழின் நரம்பைப் போல ஒலிக்கும் வானோங்கிய மலையிடத்தே தலைவனுடைய மார்பினைப் பிரிந்து இருப்பதுதான் என் வருத்தத்திற்குக் காரணம் என்று சொல்லிவிட இருந்தேன். பிறகு எப்படியோ நினைவுவர, அவ்வாறு சொல்லாமல் தப்பித்துக் கொண்டேன்”. இங்ஙனம் நயத்தக்க நாகரிகக் குறிப்போடு தன் உள்ளத்து உணர்வினைத் தலைவனுக்குப் புலப்படுத்தும் தலைவியின் கூற்றாக அமைந்த நற்றிணைப் பாடல் வருமாறு:

“நாள்மழை தலைஇய நல்நெடுங் குன்றத்து
மால்கடல் திரையின் இழிதரும் அருவி
அகல்இருங் கானத்து அல்குஅணி நோக்கித்
தாங்கவும் தகைவரை நில்லா நீர்சுழல்பு
ஏந்துஎழில் மழைக்கண் கலுழ்தலின் அன்னை
‘எவன் செய் தனையோ?நின் இலங்குஎயிறு உண்கு’ என
மெல்லிய இனிய கூறலின், வல்விரைந்து,
உயிரினும் சிறந்த நாணும் நனிமறந்து,
உரைக்கல்உய்ந் தனனே தோழி! சாரல்,
காந்தள் ஊதிய மணிநிறத் தும்பி
தீந்தொடை நரம்பின் முரலும்
வான்தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே.”


‘காந்தள் ஊதிய தும்பி மேலும் விருப்பம் கொண்டு ஊதும் என்றது களவு ஒழுக்கத்தை நீட்டிக்க விரும்பும் தலைமகன் செயலை உணர்த்தியது’ (நற்றிணை: மூலமும் உரையும், ப.32) என இப் பாடலில் இறைச்சிப் பொருள் காண்பர் உரையாசிரியர்.

இங்கே ‘எயிறு உண்க!’ என்றது, ‘பற்கள் மகிழ்ச்சியைக் கொண்டு நகுவனவாக’ என்னும் பொருள் தருவது. அன்னை நம் களவு ஒழுக்கத்தை அறிந்தாள் எனக் கூறி விரைவில் வரைவு செய்து கொள்ளத் தலைவனைத் தூண்டுவதாக அமைந்தது இப் பாடல்.

‘ஒரு கடுமையான கருத்தினைக் கூட சொல்லுகிற விதத்தில் நயத்தக்க நாகரிகமான மொழியில் கேட்பவர் மனம் கொள்ளுமாறு குறிப்பாகப் புலப்படுத்தக் கூடும்’ என்பதற்கு நொச்சி நியமங்கிழாரின் இந் நற்றிணைப் பாடல் நல்லதொரு சான்று ஆகும்.

“ஒவ்வொரு சங்கக் கவிதையும் இத்தகைய நோக்குடன் எழுதப்-பட்டுள்ளதால் ‘வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால்’ போன்ற தொழில் நுணுக்கம் நிறைந்து விளங்குகிறது” (சங்கச் சான்றோர் முதல் சிற்பி வரை, ப.27) என மொழிவர் பேராசிரியர் ப.மருதநாயகம்.

'தமிழாகரர்' முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்