தோப்புக்கரணம்: தண்டனையா? தட்டிக்கொடுப்பா?

திருமதி செல்லையா யோகரத்தினம் M.A


ல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே நாம் யோகாசனம் தரும் அத்தனை நன்மைகளையும் அனுபவித்து வந்துள்ளோம். நம் முன்னோர்கள் காலம் காலமாக நம் வழிபாட்டு முறையிலும், கல்வி முறையிலும் வாழ்வியல் முறைகளைக் கலந்து தந்திருக்கிறார்கள். தோப்புக்கரணம் என்னும் ஒரு பயிற்சி யோகாசனத்தின் அத்தனை நன்மைகளையும் தந்திருக்கிறது என்பது ஒரு மகிழ்ச்சிகரமான உண்மை. தோப்புக்கரணம் யோகாசனப் பயிற்சிகள் அத்தனைக்கும் தாய் என்றே கூறிவிடலாம். தோப்புக்கரணம் தான் தண்டனை ஆயிற்றே அது எப்படிப் பயிற்சி ஆகும் என்பது ஒரு பெரிய கேள்வி. நம் நாட்டில் பழம் காலத்தில் பாடசாலை செல்லுமுன் பிள்ளையார் கோவிலுக்குப் போய்த் தலையிலே குட்டித் தோப்புக்கரணம்; போட்டுக் கும்பிட்டு விட்டுத்தான் பாடசாலை செல்வது வழமை. அதே போல வகுப்பிலே தப்புச் செய்தால் ஆசிரியர் சொல்லும் போதெல்லாம் தோப்புக்கரணம் போட வேண்டியது பாடசாலை வழமை. நமக்கு விபரம் தெரியாது அம்மா சொல்கிறார், ஆசிரியர் சொல்கிறார் என்று அவற்றைச் செய்து வந்தோம். ஆனால் அது தண்டனை அல்ல, அது நம் நல்வாழ்வுக்கு ஒரு வழிகாட்டி, ஒரு சிகிச்சை முறை தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தும் ஒரு அற்பதமான, ஆரோக்கியமான ஒளடதம்; என்பது இப்போ தெரிகிறது. பிள்ளையார் கோயிலில்க் குட்டுப் போடுவது பாடசாலையில் மாணவனுக்கு வகுப்பிலே தூக்கம் வராமல் இருக்கவும்;, மூளையைச் சுறுசுறுப்படையச் செய்வதற்குமாகும். அதேபோல தோப்புக்கரணத்திற்கும் காரணம் இருக்கிறது. ஆகவே நாம் எதையும் தப்பாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தற்காலத்தில் இவையெல்லாம் 'மூத்தவர் சொன்னதெல்லாம் மூடநம்பிக்கைகள்' என்று விலத்தி வைக்கப்படுகின்றது. மூன்று நிமிடத் தோப்புக்கரணப் பயிற்சி போதும். உடலுக்கு அரோக்கியமும் உள்ளத்துக்கு உற்சாகமும் கிடைத்துவிடும். மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்யவேண்டிய அவசியமில்லை. ஆனால் இதனைப் பலராலும் செய்ய முடிவதில்லை என்பதே உண்மை. நாம் நமது முன்னோர்கள் சொல்லித்தந்ததை மறந்தும், மறுத்தும் வந்ததனால் வந்த விளைவு தான், நாம் இன்று பல்வேறு ஆரோக்கியச் சீர்கேட்டிற்கும் உள்ளாகி, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி அமைதியாக வாழவேண்டிய வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நிம்மதியற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்.

ஆன்மீக ரீதியாகப் பார்த்தாலும் நாம் தோப்புக்கரணம் போடும் போது நமது உடலில் தூங்கிக்; கொண்டிருக்கும் குண்டலினி சக்தி தட்டி எழுப்பப்படுகிறது. குட்டிக் கும்பிடும்போது நம் தலையிலிருக்கும் அமிர்த கலசத்திலிருந்து அமிர்தம் சிந்தி உடல் பூராவம் பரவி நமக்கு சுறுசுறுப்பும் புத்துணர்வும் தருகிறது. இந்தத் தத்துவத்தை இன்றைய அறிவியல் உலகம் ஏற்றுக் கொள்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த உடற்கூற்று வைத்தியர் எரிக் ராபின்ஸ் தோப்புக்கரணப் பயிற்சியால் மூளையிலுள்ள நரம்புக் கலங்கள் சக்தி பெறுகிறது என்கிறார். பரீட்சையில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவன் தோப்பக்கரணப் பயிற்சியின் பின் நல்ல மதிப்பெண்களைப் பெற்றதாகக் கூறுகிறார். பரீட்சைக்குச் செல்லும் முன் விநாயகரைத் தரிசிக்கச் சொல்வதன் காரணமும் இதுவே. மேலும் யேல் பல்கலைக்கழக நரம்பியல் நிபுணர் யூஜினியஸ்அங் கைகளால் காதுகளைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடுவதால், அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுவதுடன் மூளைக் கலங்களும் சக்தி பெறுவதாகக் கூறுகிறார். வெளிநாடுகளில் இது 'சூப்பர் பிரெய்ன் யோகா' என்று அழைக்கப்படுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் இதனை வழிபாட்டின் ஒரு பகுதியாக விநாயகப் பெருமானிடம் ஆசியும் அருளும் பெறுவதாகவும், இது மூளை நரம்புகளைத்; தூண்டுவதாகவும், மனத்தை ஒருமுகப்புடுத்தி ஞாபகசக்தியை அதிகரித்துப் படிப்பில் கவனத்தைக் கூட்டுவதாகவும் கருதினார்கள். பாடசாலை ஆசிரியர்கள் ஒழுங்கு நடவடிக்கையாகத் தோப்புக்கரணம் போடுவதைச் செய்வித்து வந்தனர். அதனால் இது தண்டனை என்று கருதப்பட்டது. மேலும் இவற்றைவிட கிராமப் பஞ்சாயத்துக்களிலும் தோப்புக்கரணம் ஒரு தண்டனையாகக் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. அதனால் கீழத்தேயத்தவர்களுக்கு இது நன்கு தெரிந்த ஒன்றாகும். எனவே 'ஆர் குத்தியும் அரிசியாகட்டும்' என்பது போல தோப்புக்கரணத்தால் கிடைக்கும் நன்மைகளைப் பெற்றுவந்தோம்.

ஒரு பத்து நிமிடம் தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாகக் கொண்டிருந்த ஒரு செயற்பாடு நல்லதொரு உடற்பயிற்சி. முதலில் நம்முடைய தோள்ப்பட்டை அளவுக்குக் கால்களைப் பிரித்து வைத்து நிற்க வேண்டும். தோப்புக்கரணம் போடும்போது நிமிர்;ந்து நின்றபடி காது மடல்களை கைகளால் பிடித்துக் கொள்ள வேண்டும். இடது கையால் வலது காது மடலையும், வலது கையால் இடது காது மடலையும் பிடிக்க வேண்டும். கட்டைவிரல் வெளியேயும் ஆட்காட்டி விரல் உட்பக்கமும் இருக்க வேண்டும். வலது கை கண்டிப்பாக இடது கையின் மேல் இருக்க வேண்டும். தலை நேராய் பார்த்தபடியே மூச்சுக்காற்றை வெளியேவிட்டபடி உட்கார வேண்டும். சிரமமில்லது எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் உட்கார வேண்டு;ம். பாதங்கள் முழுமையாக நிலத்தில்ப் பதிந்தபடி உட்கார்ந்து எழுதல் ஒரு தோப்புக்கரணமாகும். மூச்சை இழுத்துக் கொண்டே எழவேண்டும். வேகமாகச் செய்யக்கூடாது. பொறுமையாகச் செய்ய வேண்டும். முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். தோப்புக்கரணம் இட்டபின் மூச்சுக்காற்று சகச நிலை அடையும் வரை ஒய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் தற்காலத்தில் வழிபாட்டுக்காகத் தோப்புக்கரணம் போடுபவர்கள், 'என்ன பிள்ளையார் பார்க்கவா போகிறார்'; என்ற கருத்தில் கைகளால் காதுகளைப் பிடிப்பதில்லை. வெறுமனே ஆள்காட்டி விரலையும் நீட்டுவிரலையும் காது மடலில் முட்டவைப்பது மாத்திரம் செய்கிறார்கள். இருந்து எழும்புவதும் முற்றாக இருப்பதில்லை. வெறுமனே முழங்காலை மாத்திரம் சிறிது மடித்து எழுந்து பேருக்குச் செய்கிறார்கள். ஆனால் இந்தச் செயலைப் பிள்ளையார் கண்டு கொள்கிறாரோ இல்லையோ, கண்டிப்பாக தோப்புக்கரணத்தின் பயனைத் தரப் போவதில்லை. ஏனென்றால் இது தோப்புக்கரணமே இல்லையே! காது மடலைப் பிடித்துக்கொண்டு நன்றாக இருந்து எழும்புவதே தோப்புக்கரணம். தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொண்டால், காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புக்களையும் இணைக்கும் வர்மப்புள்ளிகள் இருக்கின்றன. அதனால் உடலின் எல்லா உறுப்புக்களும் செயற்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கின்றது. உடல் இயக்கம் சீர்படுகிறது. அதனால் காது மடல்களைப் பிடிக்காவிட்டால் எந்தவிதப் பிரயோசனமும் இல்லை. உட்காரும் போது மூச்சை உள்ளிளுக்க வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும். இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால் தண்டுவடத்தின் மூலாதாரத்தில் சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது காலில் உள்ள 'சோலியஸ்' எனும் தசைக்கு வேலை கொடுக்கப்படுகிறது. உடல் முழுக்க இரத்த ஓட்டத்தைச் சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது இந்தச் சோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராகும். உட்கார்ந்து எழும்போது மூளையின் இருபகுதிகளும் பயனடைகின்றன. இதனால் மூளையின் நரம்பு மண்டலம் வழியாக உடலில்ச் சக்தி வாய்ந்த மாற்றங்கள் நிகழ்கின்றன.

சாதாரண தோப்புக்கரணத்தைப் போல நூறு மடங்கு பலன் தரக்கூடியது சித்தர்கள் அருளிய 'குசா' தோப்புக்கரணமாகும். வலது காலை முன் வைத்தோ அல்லது இடதுகாலை முன் வைத்தோ இந்தத் தோப்புக்கரணத்தைப் போடலாம். பெண்கள் ஆண்கள் இருபாலாரும் இந்தத் தோப்புக்கரணத்தால் அற்புத பலன் பெறலாம்.

அதிகாலையில் கிழக்கு அல்லது வடக்குத் திசை நோக்கி நின்று, வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொண்டு இரண்டு கைகளாலும் காதுகளை மாறிப் பிடித்துக் கொண்டு மெதுவாக நன்றாக அமர்ந்து, எழுந்து தோப்புக்கரணம் இட வேண்டும். கால்கள் முழுவதுமாக மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது முக்கியம். குறைந்தது மூன்று முறை செய்ய வேண்டும். முடிந்தால் அதற்கு மேலும் இடலாம். உடல், மனம், உள்ளம் அனைத்தையும் அற்புத நிலையில் வைத்திருக்க உதவும் ஒரு சிறந்த உடற்பயிற்சி முறையாகும். வெறும் உடற்பயிற்சியில் கிட்டும் ஆரோக்கியம் நம்மை நீண்ட நாட்கள் உயிருடன் வைத்திருக்கும். உயிருடன் வைத்திருப்பது முக்கியமல்ல, ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். இறை நினைவுடன் இருத்தலே உண்மையான யோகாசனப் பயிற்சி ஆகும். சாதாரணமாகக் கால்கள் இரண்டையும் ஒன்றுடன் ஒன்று இணையாக வைத்தே தோப்புக்கரணம் இடுவது வழமை. ஆனால் இங்கு குறிப்பிட்டதுபோல ஒரு காலுக்கு முன் அடுத்த காலை வைத்துச் செய்வது 'குசா' முறையில் அமைந்த தோப்புக்கரணமாகும். சிறப்பாகக் கர்ப்பமுற்ற பெண்களுக்கு இந்த முறை ஒரு வரப்பிரசாதமாகும் என்று சொல்லப்படுகிறது. பிரசவம் சிரமமின்றி நிகழ்வதுடன் குழந்தையும் ஆரோக்கியமாகவும் சிறந்த மன வளத்தையும் பெற்றிருக்கும். பிரசவத்தின் பின்பும் இதனைச் செய்தால் வயிறு, முதுகுபோன்ற இடங்களின் தசைகள் இறுகி மயக்க மருந்துகளால் ஏற்பட்ட தாக்கங்களும் வேதனைகளும் குறையும்.

இந்துக்களுக்கு விநாயகர் வழிபாடு மிக முக்கியமானது. அதிலும் தலையிலே மூன்றுமுறை குட்டித் தோப்புக்கரணம் போட்டு வணங்குவது பிரதானம். இது தலைமுறை தலைமுறையாக வந்துவிட்ட பழக்கம். இந்தப் பழக்கம் எவ்வாறு வந்தது என்பதற்கு புராணக்கதைகள் பல உண்டு.

ஒரு முறை தவமுனிவரான அகத்தியரை பொன்னி நதி ஏளனம் செய்தது. அதனால்க் கோபம் கொண்ட அவர் தன் கமண்டலத்தில் அந்நீரை அடக்கி வைத்திருந்தார். மக்கள் நீரின்றி வாடினர். அப்போது விநாயகப் பெருமான் காகமாக உருவெடுத்து வந்து அக்கமண்டல நீரைத் தட்டிவிட்டார். கமண்டல நீர் ஆறாகப் பெருகிக் காவிரி எனும் பெயர்பெற்று ஓடியது. அகத்தியர் கோபங்கொண்டு சாபமிடவதற்குத் தட்டிவிட்ட காகத்தைத் திரும்பிப் பார்த்தார். அதனைக் காணவில்லை ஆனால் அந்த இடத்தில் ஒரு சிறுவன் நின்று முனிவரைப் பார்த்துச் சிரித்தான். கோபம் மிகக் கொண்ட முனிவர் அச்சிறுவன் தான் கமண்டல நீரைக கவிழ்த்தான் என்ற எண்ணத்தில் அவன் தலையில் குட்ட முயன்றார். ஆனால் அச்சிறுவன் விநாயகப் பெருமானாக அவர் முன் தோன்றினார். குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர், அப்படியே தன் தலையில்க் குட்டிக் கொண்டு தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். விநாயகரின் சொல்லுக்கு இணங்கி அவர் பொன்னியை மன்னித்து மீண்டும் பொன்னியைக் கமண்டலத்தில் அடைக்கவில்லை. ஆனால் அன்று தொட்டு இன்றுவரை விநாயகரை வணங்கும் ஒவ்வொருவரும் இந்த முறையைப் பின்பற்றத் தொடங்கி விட்டனர். இது குட்டிக் கும்பிடுவதற்கு ஒரு விளக்கம்.

மேலும் ஒரு விளக்கம். கஜமுகாசுரன் என்னும் அசுரன் தேவர்களுக்குக் கொடுமைகள் பல செய்து வந்தான். தன்னைக் காணும் போதெல்லாம் தோப்புக்கரணம் போட வேண்டும் என்று நிற்பந்தித்தான். தேவர்கள் பயம் மிகக் கொண்டு இதனைச் செய்து வந்தனர். இதனை அறிந்த விநாயகர் அவனை அழிக்கக் கிளம்பினார். விநாயகரையும் தோப்புக்கரணம் செய்யுமாறு அசுரன் ஆணையிட்டான். விநாயகர் தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். அவன் அழிந்ததும், அவனுக்குப் போட்டுவந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன் தேவர்கள் விநாயகப் பெருமானுக்குச் செய்யத் தொடங்கினர். அதுமுதல் தோப்புக்கரணம் இடும் முறை தொடங்கியது.

கதைகள் கேட்பது சுவாரஸ்யம். ஆகவே மேலும் ஒரு கதை. தோப்புக்கரணத்தை ஆதியில் உண்டாக்கியவர் மகாவிஷ;ணு. இவர் ஒரு முறை மருகன் கணேசரைப் பார்க்கக் கைலாசம் சென்றிருந்தார். குழந்தைக்கு விளையாட்டுக் காட்டுவதற்காக தன் சக்கரத்தைச் சுளற்றிக் காட்டினார். குழந்தை தன் தும்பிக்கைளை நீட்டிச் சக்கரத்தைப் பிடிங்கித் தன் வாயில் போட்டுக் கொண்டது. என்ன செய்தும் அதனைத் திருப்பிப் பெற முடியவில்லை. கடைசியில் விஷ;ணு தன் நான்கு கைகளினாலும் தன் இரு காதுகளையும் பிடித்தக் கொண்டு தோப்புக்கரணம் போட்டார். இதனை ஒரு வேடிக்கையாகப் பார்த்த குழந்தை விழுந்து விழுந்து சிரிக்க வாயிலிருந்த விஷ;ணுச் சக்கரம் வெளியே விழுந்தது. அதிலிருந்து தோப்புக்கரணம் ஆரம்பமாகியது.

எப்படி வந்ததோ? எல்லாம் கர்ண பரம்பரைக்கதைகள் தான். மூத்தோர் சொன்னதெல்லாம் மூடநம்பிக்கைகள்தான் ஆனால் ஒவ்வொன்றுக்கும் தகுந்த விஞ்ஞான விளக்கம் இருக்கிறது. நமக்கு நம் மூதாதையர் சொல்லித்தந்ததைக் கேட்டோம். செய்து வருகிறோம். எல்லாம் மூடநம்பிக்கைகள் என்கிறார்கள் ஒருசாரார். ஆனால் அதன் ஆரோக்கிய நலத்தை அறிந்து கொண்டு நாம் செயற்படுவோம். பலன் பெறுவோம். தோப்புக்கரணம் செய்வதால் மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. நாடிகள் சுத்தமடைகின்றன. நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள். தோப்புக்கரணம் செய்யும்போது காதுமடல்கள் அழுத்தப்படுவதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன. தொடுதல், பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல் போன்ற புலன் உணர்வுகள் மூலம் தகவல்கள் மூளைக்கு அனுப்பப்படும். மூளை அந்தந்தத் தகவல்களை ஆராய்ந்து அதற்கேற்ப கட்டளைகளைப் பிறப்பிக்கிறது. இதிலிருந்து உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் மூளையோடு தொடர்பு இருப்பதைத் தெரிந்து கொள்வதோடு உடலில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அது மூளையில் பிரதிபலிக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

பத்து நிமிடம் தோப்புக்கரணம் போட்டாலே போதும், யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். தோப்புக்கரணம் போடுவது அநேகமாக முந்தைய நூற்றாண்டுவரை சாதாரணமாக நடந்த நிகழ்வுகள், ஆனால் தற்பொழுது யாரும் தோப்பக்கரணம் போடுவதைக் காணமுடிவதில்லை. ஆனால் ஒழுங்காக யோகாசனப் பயிற்சி மையங்களுக்குப் போய் வரகிறார்கள். தோப்பக்கரணம் இடும் பழக்கம் படிப்படியாகக் குறைந்து அற்றுப்போய் விட்டது எனலாம். எனினும் இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் செல்களும் மூளைக்குத் தகவல் அனுப்பும் காரணிகளும் வலுப்பெற்றுப் புத்துணர்ச்சி அடைந்து மூளையின் வலது, இடது பக்கங்கள் சமமான சக்திகளைப் பெற்று மூளையின் செயல்பாடு அதிகரித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் விநாயகர் வழிபாட்டில் தோப்புக்கரணம் இடம்பெறுவது முற்றுமுழுதாக உடல்நலத்திற்கு உகந்தது என்பது அறிவியல் பூர்வமான உண்மை என்பது நிருபணமாகியுள்ளது. மேலும் 'ஆட்டிசம்' போன்ற மன இறுக்கம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குக் கூட தோப்புக்கரணப் பயிற்சி வியக்கத்தக்க பலனைத் தரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

எளிய தோப்புக்கரணத்தின் பலன்களோ மிகவும் அற்பதமானவை. இருந்து எழும்புவதால் உடலின் வலிமை அதிகரித்து ஆயுளும் கூடும். இருந்து எழும்பும் போது இரத்த ஓட்டம் சீராகும் அதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். உடலின் ஒவ்வொரு பாகமும் பலனடையும். குறிப்பாக இருந்து எழும்புவதால் முழங்கால் மூட்டுக்களும் இடுப்பு எலும்புகளும் வலுவடைகின்றன. இலகுத்தன்மை அடைகின்றன. காலிலுள்ள தசைகள் வலுப்பெறுவதுடன் உடலிலுள்ள தசைகளும் வலுவடையும். உடலின் சகல உறுப்புக்களும் பயனடையும். உடல் உச்சி முதல் உள்ளம் கால்வரை வலுவடையும். அதனால் நோய்கள் அண்டாமல் தடுக்கப் படுகின்றன. அதிக இரத்த அழுத்தம், சியாட்டிகா என்றழைக்கப்படும் இடுப்புச் சந்து வாதம் போன்ற நோய்களுக்கும் நல்ல பயன் தரும். உடலுக்கு முழு ஆரோக்கியம் பெறுவதற்கு இதைவிட்டால் வேறு வழியே இல்லை எனலாம். வாழ்நாள் முற்றாகப் பூரண ஆரோக்கியத்துடன் வாழ்ந்திடலாம்.

இந்தப் பயிற்சியை எங்கு எப்ப வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஜிம்முக்குப் போக வேண்டியதில்லை. எந்த உபகரணமும் தேவையில்லை. யாருடைய உதவியும் தேவையில்லை. நம்முன்னோர் கற்றுத்தந்த பழக்க வழக்கங்களின் ஆற்றலை அறிந்து அவற்றைக் கவசங்களாகக் கொண்டு, காரணம் அறிந்து அவற்றைப் பின்பற்றி நலமோடும் வளமோடும் வாழமுயல்வோம். வாழ்வோம். வெற்றியும் காண்போம்.

தோப்புக்கரணம் தண்டனை அல்ல, நல்வாழ்வுக்கு வழிகாட்டி.



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்