எம்.ஜி.ஆர் என்னும் ஜீவ நதி - 3

முனைவர் செ.இராஜேஸ்வரி


பெற்றால்தான் பிள்ளையா படம் தரும் பாடம்

ளர்ப்பு தந்தையாக வந்து சொந்த தந்தையாகவே பிள்ளை வளர்க்கும் உரிமையை எம் ஜி ஆர் கன்னித்தாய் மற்றும் பெற்றால்தான் பிள்ளையா படங்களில் பெறுகிறார். இரண்டு கதைகளிலும் கதாநாயகிகளின் தியாகம் போற்றற்குரியதாக கதை அமைக்கப்பட்டிருந்தது. பெற்றால்தான் பிள்ளையா படம் எம் ஜி ஆருக்கு மிகவும் பிடித்த படம் என்று அவர் தனது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுருந்தார். இந்தப்படம் பற்றிய பேச்சு அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனியில் இருந்தபோதும் நீதி திமன்றத்தில் வழக்கு நடந்த போதும் வந்தது. இந்தக் கட்டுரைக்கு அது தேவையில்லாவிட்டாலும் எம் ஜி ஆர் வாழ்வில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் கதை

பெற்றால் தான் பிள்ளையாவில் மண்டபத்தில் கண்டெடுத்த குழந்தையை ஒரு ஏழை தொழிலாளி நன்றாக ஒழுக்கத்துடனும் பண்பாட்டுடனும் வளர்க்கிறான் இடையில் அந்தச் சிறுவனின் பெற்றோஎர் வந்து தன மகனைப் பெற்றுக்கொள்கின்றனர் பின்பு அச்சிறுவன் தன வளர்ப்பு தந்தையை நினைத்து ஏங்குவது கண்டு மனம் பொறுக்காமல் அந்த பெற்றோர் இந்த தொழிலாளியிடமே பிள்ளையை கொடுத்துவிடுகின்றனர். இது தான் கதை இதில் ஏழை தொழிலாளியாக எம் ஜி ஆரும் சிறுவனாக பேபி ஷகிலாவும் நடித்தனர்.

மூலப்படம் - The Kid.

பெற்றால் தான் பிள்ளையா படம் ஆங்கிலத்தில் 1921ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் நாள் வெளிவந்த ஆங்கில படத்தின் தழுவல் ஆகும். தழுவல் என்றால் adaptation அதாவது ஒன்று கலைப்படைப்பின் மூலக்கதையை, கருவை மாற்றாமல் மற்றவற்றை தனது பண்பாட்டுக்கும் மொழிக்கும் இனத்துக்கும் ஏற்றபடி மாற்றி அமைப்பதாகும். சார்லி சாப்ளின் இயக்கி தயாரித்து நடித்து இசையமைத்து முதலில் வெளிவந்த ஊமை படம் The Kid. இப்படம் வசூலில் இரண்டாவது இடத்தை பெற்ற வெற்றிப்படம் ஆகும். ஐம்பது ஆண்டுகள் கழித்து மறு வெளியீட்டின் பொது படம் இன்னும் கொஞ்சம் சுருக்கப்பட்டிருன்தது. இந்த படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் பெற்றால்தான் பிள்ளையா . இதன் திரைக்கதையையும் வசனத்தையும் தமிழுக்கேற்றபப்டி எழுதியவர் ஆரூர் தாஸ் ஆவார்.

தமிழுக்காக செய்யப்பற்ற மாற்றங்கள்

ஆங்கிலக் கதையில் தவறான முறையில் பிள்ளை உண்டாகியதால் அதை பெற்று போட்டுவிட்டு தாய் போய்விடுவாள் தமிழில் ஒரு பணக்காரனால் ஏமாற்றப்பட்ட அபலைப்பெண் அவனிடம் நீதி கேட்டும கிடைக்காமல் கோயில் மண்டபத்தில் பிள்ளையை வைத்துவிட்டு கடலுக்குள் இறங்கிவிடுவாள். ஆங்கிலத்தில் அவள் நடிகையாகி பிரபலமானவுடன் தன பிள்ளையை தேடுவாள் தமிழில் பணக்காரப் பெண் பித்தன் அதுவரை தான் மயங்கி கிடந்த ஒரு பெண் தனக்கு துரோகம் செய்ததால் மனம் வருந்தி ஒரு விபத்தில் சிக்கி கால் ஒடிந்து மகனால் உயித் தண்ணீர் ஊற்றப்பட்டு திருந்தி தான் விரட்டிவிட்ட பெண்ணை ஏற்றுக்கொள்வான். கதாபாத்திரப் படைப்பில் தவறு செய்தவன் ஆணாக மாற்றப்பட்டிருக்கும். சார்லி சாப்ளின் அவரும் மற்றவர்களும் படத்தில் தேவதை வடிவில் இறக்கைகளோடு பறப்பதாக கனவு காண்பர். தமிழில் அது எம் ஜி ஆர் தன காதலியுடன் காரில் பறப்பதாக கனவு காண்பார். ஆங்கிலப்படத்தில் விடுதியில் இருந்த ஒருவன் சன்மானத்துக்கு ஆசைப்பட்டு இவர்கள் பற்றி போலிசுக்கு தகவல் கொடுப்பான் தமிழில் பணத்துக்காக எம் ஆர் ராதா [கதாநாயகியின் அண்ணன்] போலிசுக்கு தகவல் கொடுப்பார்.

எம்ஜிஆருக்காக செய்யப்பட மாற்றங்கள்

எம் ஜி ஆர் நல்லவர் என்று காட்டுவதற்காக ஒரு மாற்றம் செய்யப்பட்டது. அது சிறுவனை அவர் நல்லவனாக வளர்த்ததாகும். ஆங்கிலத்தில் சார்லி சாப்ளின் ஜன்னலுக்கு கண்ணாடி பொருத்தும் வேலை செய்வார் அதற்காக சிறுவனை முதலில் அனுப்பி வீடுகளில் இருக்கும் கண்ணாடி ஜன்னல்களை கல்லைவிட்டு எறிந்து உடைக்க செய்வார். ஆனால் எம் ஜி ஆர் தன மகனை மிகுந்த பாசத்துடன் ஒழுக்கத்துடன் பிள்ளையை வளர்ப்பார். குழந்தை கண்ணனின் தாய் கணவனால் கைவிடப்பட்ட மனைவி தானே தவிர தவறான முறையில் குழந்தை பெற்றவள் அல்ல. எம் ஜி ஆர் படத்தில் அவருடன் தொடர்புடையவர்களை நல்லவர்களாக காட்டுவது ஒரு மரபு. வில்லன் ஒருவன் மட்டுமே பொல்லாதவனாக இருப்பான்.

எம் ஜி ஆருக்காக புதிதாகச் சேர்க்கப்பட்டவை

அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதற்காக அவருக்கு நடிக்க வாய்ய்புள்ள காட்சிகள் சிலவும் சேர்க்கப்பட்டன. தமிழில் நீதிமன்றத்தில் எம்ஜி ஆர் பெற்றால் தான் பிள்ளையா என்று வாதாடும் வலுவான காட்சி உண்டு. பெற்றோரிடம் பிள்ளையை பறிகொடுத்த துக்கத்தில் தெருவில் பித்து பிடித்து எம் ஜி ஆர் அலைகின்ற காட்சிகள் சோகத்தை வரவழைக்கும். பிள்ளையும் அப்பாவுக்காக ஏங்கி அழுது காய்ச்சல் வந்து பிதற்றும்.

அடுத்து அவர் வல்லவர் என்று காட்டுவதற்காக படத்தின் இறுதியில் ஒரு சண்டை காட்சி சேர்க்கப்பட்டது. நம்பியார் பிள்ளையை கடத்தி கொண்டு போகையில் எம் ஜி ஆர் அவனை காப்பாற்ற சண்டை போடும் காட்சியும் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும். அப்போது சிறுவனை பிரோவுக்குள் அடைத்துவிட்டு அங்கு ஒரு கம்பியின் மீது தேளைவிட்டு அவனை பயமுறுத்தும்போது எம் ஜி ஆர் பதறிப்போய் அந்த தேளை கையி எடுத்து கொள்வார். பிரோவின் சாவியை தர மறுத்து ஜாக்கெட்டுக்குள் போட்டு கொள்ளும் வில்லியின் மீது தேளை எறிவது போல பாவனை காட்டி அந்த சாவியை அவளே தந்துவிடும்படி செய்வார். பின்பு தேளை வெளியே எறிவார். பெண் மீது தேளை எறியாமல் வெறுமனே பயமுறுத்தியதால் அவர் நல்லவர் பெண்களை துன்புறுத்தமாட்டார் என கருதும் பெண் ரசிகைகளின் ஆதரவு அவருக்கு அமோகமாக கிடைத்தது.

குழந்தையால் கிடைத்த மகிழ்ச்சி

மகிழ்ச்சியானவனாக அறிமுகமாகும் ஏழை ஆனந்தன் [எம் ஜி ஆர்] தனக்கு ஒரு குழந்தை கிடைத்ததும் வாழ்க்கையில் ஒரு பிடிப்புள்ளவனாகிவிட்டான். ‘’குழந்தையை வளர்க்குறதுக்காக என் சொந்த சுகத்தை கொஞ்ச நாள் ஒத்திப்போட நினைக்குறேன்’ என்று தன காதலியிடம் சொல்கிறான். மகன் தன காலில் நிற்கும் நிலை வந்த பின்பு திருமணம் செய்துகொள்வதாக தன காதலியிடம் சொல்கிறான். தான் எடுத்துக்கொண்ட தந்தை பொறுப்பை செவ்வனே நிறைவேற்றிய பின்பு கணவன் என்ற அடுத்த பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற மன உறுதி பாத்திரப்படைப்பிலும் வசனத்திலும் இங்கு வெளிப்படுகிறது. இதன் வெற்றி படத்தின் இறுதிக் காட்சியில் இருவரும் இணைந்து மகிழ்ச்சியாக கண்ணனுடன் சேர்ந்த தங்கள் வீட்டுக்கு திரும்பும்போது தெரிகிறது.

வளர்ப்பின் பெருமை

ஐந்து வருடம் ஆகிவிட்டது. ஒரு நாள் சிறுவன் கண்ணன் வந்து தன தந்தையிடம் நானும் வேலைக்கு போகிறேன் என்கிறான்.

‘’நீதான சொன்ன. பொய் சொல்லக் கூடாது, திருடக் கூடாது பிச்சை எடுக்கக் கூடாதுன்னு அதுதான் நான் ஏதாவது வேலை பார்க்க போறேன். என்ற வசனம் குழந்தை வளர்ப்பின் பெருமையை காட்டுகின்றது. ஒரு தந்தை தன பிள்ளைக்கு வறுமையிலும் செம்மை என்ற வாழ்க்கை தத்துவத்தை கற்றுக்கொடுக்க வேண்டும்.
பின் ஒரு காட்சியில் சிறுவன் கண்ணன் தன தந்தைக்கு மருந்து வாங்க வந்த போது திருடன் என்று அவனை போலிஸ் பிடித்து கொண்டு போகிறது. அப்போது அந்த போலிஸ் நிலைய காட்சியிலும் எம் ஜி ஆர் தான் அருமையாக பிள்ளை வளர்த்த விதத்தை எடுத்து சொல்வார்.

வீட்டின் வாசலில் பெயர்ப்பலகை

இந்த படத்தில் வீட்டின் வாசலில் பெயிண்டர் ஆனந்தன் என்ற பெயர்ப்பலகை மாட்டப்பட்டிருக்கும். அது தன தொழிலுக்கு அவர் அளிக்கும் மரியாதை ஆகும். இதை பார்த்து அந்தக் காலத்தில் நிறைய பேர் குறிப்பாக எம் ஜி ஆர் ரசிகர்கள் தங்கள் வீடுகளில் தமது தொழிலை குறிப்பிட்டு பெயர்ப் பலகை மாட்டினர். அதுவரை பி ஏ ., எம். ஏ என பட்டப் படிப்பு படித்தவர்கள் மட்டுமே பெயர்ப்பலகை மாட்டிவைத்தனர்.

வீட்டின் உள்ளே பெரியவர்கள் படங்கள்

பொதுவாக எம் ஜி ஆர் படங்களில் வீடு என்றால் அங்கு நம் வாழ்க்கைக்கு முன்மாதிரியாக வாழ்ந்தவர்கள் படங்களை வைக்க வேண்டும் என்பதை காட்சிப்பூர்வமாக விளக்கியிருப்பார். அவர் வீட்டில் அண்ணா, திருவளுவர், புத்தர், இயேசுபிரான் ஆகியோரின் படங்கள் காணப்படும். இந்தப்படத்தில் வீட்டின் உள்ளே தந்தையும் மகனும் சிரித்தபடி சேர்ந்து இருக்கும் குளோசப் புகைப்படம் ஒன்றும் மாட்டப்பட்டிருக்கும் இதிலும் அவர் பலருக்கு முன்மாதிரியாக இருந்தார். இந்த ‘போசில்’ அதன் பிறகு பலரும் படமெடுத்து மாட்டினர் அதுவரை அனைவரும் ‘உம்மென்று’ இருக்கும் குடும்பப் படங்களும் பிள்ளைகள் தனியாக இருக்கும் படங்களும் மட்டுமே வீடுகளின் சுவரில் தொங்கின.

பாடல்களில் நற்கருத்துக்கள்

இந்தப்படத்தில் பிள்ளையை கண்டெடுக்கும் முன்பே அவர் சிறுவர்களோடு சேர்ந்து நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்ற பாட்டை பாடுவார். அதில் அவர்களுக்கு அன்னைதந்தையின் பெருமையை கற்றுக்கொடுப்பார். தவறு செய்ய கூடாது என்று புத்திமதி சொல்வார். வாழும் வழியைச சொல்லிகொடுப்பார். பாட்டின் முடிவில் தன சட்டையின் ஒஎட்டை பையில் இருந்து விழுத்த காசை எடுத்துகொடுத்த சிறுவனை பாராட்டும் வகையில் அவனுக்கு ஒரு முத்தம் கொடுப்பார்.

தனி பெற்றோரின் பொறுப்புக்கள்

தாய் தந்தை என இருவருமாக இல்லாமல் தனி ஒருவராக பிள்ளை வளர்க்கும்போது அவர்களுக்கு பொறுப்பு அதிகமாகி விடும் இதை இப்படத்தில் காணலாம் ஒரு போதும் எம் ஜி ஆர் தன் பிள்ளையை தன காதலியிடம் ஒப்படைக்க மாட்டார். குழந்தை வந்ததும் அவனை வளர்க்க ஒரு நிரந்தர வருமான வேண்டுமே என்று தூர் வாரும் வேலைக்கு புறப்படுவார். அப்போதும் குழந்தையை தன தோளில் தூக்கி செல்வார். குழந்தை சிறுநீர் கழித்ததும் பன்னீர் வாஷ் பண்ணிட்டியா இனி துணியை நான் டிரை வாஷுக்கு தான் போடனும் என்று சிரித்தபடி சொல்வார்.

இக்காலத்துக்கு இப்படம் தரும் பாடம்

சிறிது நேரம் அச்சிறுவனுடன் காதலி சரோஜாதேவி பேசிக்கொண்டிருந்தது விபரீதமாக போய்விடும் சிறுவன் கண்ணன் தன உண்மையான தந்தை ஆனந்தன் இல்லை என்று புரிந்துகொள்வான் எனவே தனித்து வாழும் தாய்மாரோ தந்தையரோ பிள்ளைகளை அடுத்தவரிடம் விடாமல் தானே பொறுப்பாக வளர்க்க வேண்டும் என்பது இந்தக் காலத்துக்கு இப்படம் கற்றுத்தரும் பாடம் ஆகும். பெற்ற பிள்ளையோ வளர்ப்பு பிள்ளையோ அதை செம்மையாக வளர்க்க வேண்டிய கட்டாயம் அதன் பெற்றோருக்கு அல்லது பொறுப்பாளருக்கு உண்டு. பிள்ளை வளர்ப்பின் பொது இவர்கள் தன சொந்த சுகங்களை தள்ளிவைக்க வேண்டும் என்பதும் இப்படம் கற்றுத்தரும் பாடம் ஆகும்.

கதைக்கு கால் உண்டா?

பொதுவாக கிராமங்களில் பாட்டிமார் கதை சொல்லும்போது நம்ப முடியாத அதீத கற்பனைகள் வரும். அப்போது அவற்றை கேட்கு குழந்தைகள் கண்டிப்பாக நம்பியாக வேண்டும், என்பர். அத்துடன் கதைக்கு கால் உண்டா என்று கேட்பது வழக்கம். அதாவது கதையில் முழுக்க முழுக்க உண்மை மட்டுமே இருக்காது அது கற்பனையில் மிதக்கும்; பறக்கும் ஏனென்றால் அதற்கு கால் கிடையாது என்று விளக்குவர். ஆனால் எம் ஜி ஆர் இந்த சொலவடையை வேறு விதமாக கையாண்டுள்ளார். அவர் தன படத்துக்கு கதை சொல்ல ஆட்கள் வரும்போது இந்தக் கதையில் கால் [துணை எழுத்து] இருக்கிறதா என்று கேட்பார். கால் இருந்தால் தானே படம் பாடம் ஆகும் என்பாராம் . தனது ஒவ்வொரு படமும் மக்களுக்கு ஒரு பாடமாக விளங்க வேண்டும் என்பதில் அவர் காட்டிய அக்கறையினால் இன்றைக்கும் இப்படம் தனித்து வாழும் பெற்றோருக்கு தமது பொறுப்பின் மகிமையை உணர்த்தும் பாடமாக விளங்குகிறது. படத்திற்கு கால் இருப்பதால் படம் பாடமாகி இன்று வரை தன் சொந்தக் காலில் நிற்கிறது.



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்