எம்.ஜி.ஆர் என்னும் ஜீவ நதி - 4

முனைவர் செ.இராஜேஸ்வரி

எம் ஜி ஆரின் சொந்த வாழ்க்கையில் குழந்தை வளர்ப்பு

எம் ஜி ஆரின் முதல் மனைவி பார்கவி திருமணமான ஒரு வருடத்திலேயே உலகப்போருக்கு அஞ்சி அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த வேளையில் அங்கு எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார். அவரது இரண்டாம் மனைவி சதானந்தவதி பல வருடங்கள் அவருடன் சேர்ந்து வசித்தபோதும் அவருக்கு காச நோய் தாக்கியிருந்த காரணத்தினாலும் கருக்குழயில் கருவுற்றதாலும் இனி கருவுற்றால் மரணித்துவிடுவார் என்ர சூழ்நிலையிலேயே பலவருடங்கள் வாழ்ந்து இறந்தார். மூன்றாவதாக திருமணம் செய்த ஜானகி அம்மையார் ஏற்கெனவே திருமணமாகி கணவனின் கொடுமை தாளமுடியாமல் எம்ஜிஆரால் காப்பாற்றப்பட்டு அடைக்கலமாக வந்து சேர்ந்தவர். அவருக்கு ஒரு மகன் சுரேந்திரன் இருந்தார் எம் ஜி ஆர் அவரையே தன மகனாக ஏற்றுக்கொண்டார். இதனால் அவர் மூன்று திருமணம் செய்தும் அவருக்கு ஒரு இயல்பான வாழ்க்கை அமையவில்லை ஆனால் அவரது அண்ணன் மக்கள் ஒன்பது பேரும் ஜானகியம்மையாரின் அண்ணன் மக்கள் ஐந்து பேரும் அவரது வீட்டில் வளர்ந்தனர்.

பிறந்த நாள் கொண்டாட்டம்

எம் ஜி ஆர் தன வீட்டில் வளர்ந்த பிள்ளைகளை தன பிள்ளைகளாகக் கருதி பொறுப்புடன் வளர்த்ததை சில சான்றுகளால் அறியலாம். அவர் வீட்டில் எப்போதும் யாருக்காவது பிறந்த நாள் திருமண நாள் என்று வந்துகொண்டேயிருக்கும் அப்போது அவர் ஆங்கில நாகரிகப்படி கேக் வெட்டுவதை விரும்பமாட்டார். எரியும் மெழுகுவர்த்தியை வாயால் ஊதி அனைப்பதையும் எம் ஜி ஆர் விரும்பியதில்லை. நல்ல விருந்து சாப்பாடு வைத்து அனைவருடன் பகிர்ந்துண்டு மகிழ்வதையே அவர் விரும்பினார். .இத்தகவலை ஜானகி அம்மையாரின் அண்ணன் மகள் சுதா விஜயன் சொல்லி கேட்டிருக்கிறேன். மேலும் நடிகை ஜி சகுந்தலா எம் ஜி ஆரின் நாடகங்களில் அவருடன் நடித்தவர். அவர் ‘’எம் ஜி ஆரும் அவர் அண்ணனும் சேர்ந்து வாழ்ந்த வீட்டுக்கு போய் வரும்போது பெரிய திருகு கூஜாவில் அண்ணி பாயாசம் கொடுத்துவிடுவார்கள்’ அவர்கள் வீட்டில் குழந்தை பிறந்திருக்கும் அல்லது யாருக்காவது பிறந்தநாள் வரும் எப்போதும் ஏதாவது விசேஷம் இருந்துகொண்டே இருக்கும். எனக்கு வீட்டுக்கு கொண்டு போய் கொடு என்று பாயாசம் கொடுத்துவிடுவார்கள்’’ என்று தன பேட்டியில் சொல்லியிருக்கிறார். எம் ஜி ஆர் பேச முடியாமல் இருந்தபோது அவருக்கு பழைய நினைவுகளை கொண்டுவரவும் பேச வைக்கவும் பயிற்சி அளித்தபோது ஜி சகுந்தலாவை அழைத்து அவரிடம் தினமும் நாடக அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்படி மருத்துவர்கள் கூறினர்.

தமிழ்ப்பற்று

எம் ஜி ஆர் தன படங்களில் மட்டும் தமிழின் பெருமை பற்றி பாடுவதில்லை. அவர் மனதளவில் தமிழ் பற்று கொண்டவராகவே இருந்தார் அதை தன வீட்டிலும் நாட்டிலும் கடைப்பிடித்தார், தமிழ் பற்றாளராக வாழ்ந்துகாட்டினார். தாய்த்தமிழுக்கு தனியாக ஒரு பல்கலைக்கழகம் ஒன்றையும் தஞ்சையில் நிறுவினார். உலகத தமிழ் சங்கத்தை மதுரையில் தொடங்க எட்டு கோடி ரூபாய் ஒதுக்கினார். எம் ஜி ஆர் தன வீட்டில் யாரும் காலையில் குட் மார்னிங் என்று சொல்வதை விரும்பமாட்டார் அழகாக காலை வணக்கம் என்று சொல்லும்படி கூறுவார். மேலும் வீட்டில் அனைவரும் தமிழில் தான் பேச வேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருந்தார். அவரும் தமிழில் தான் பேசுவார். அவர் அம்மா இருந்தவரை தமிழ் தெரியாத மருமகளிடமும் தன சம்பந்தக்காரரிடமும் மலையாளத்தில் பேசினார். பின்பு எல்லோரும் தமிழில் நன்றாகப் பேசத் தொடங்கிவிட்டனர்.

ஒரு முறை எம் ஜி ஆர் கேரளாவில் ஒரு கூட்டத்தில் பேசும்போது அவரை மலையாளத்தில் பேசும்படி கூட்டத்தினர் வற்புறுத்தினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். ‘எனக்கு மலையாளம் தெரியாது. எனக்கு தமிழ் மட்டுமே தெரியும் என்னை வாழவைத்த தமிழில் தான் நான் பேசுவேன் பிடிக்காதவர்கள் எழுந்துபோய்விடுங்கள்’ என்று கோபமாக கூறிவிட்டார். அவர் நடித்த ஜெனோவா படத்தை மலையாளத்தில் மொழிமாற்றம் செய்தபோது அவர் பேசிய வசனங்கள் மலையாளம் மாதிரி இல்லை என்பதால் அவருக்கு பதிலாக இன்னொருவரைப் பேச வைத்தனர். அவருக்கு மலையாளம் நன்றாகப் பேச வராது. பேசினால் புரிந்துகொள்வார் சில வாக்கியங்கள் பேசுவார். எம் ஜி ஆர் ஆங்கிலம் நன்றாக பேசக் கற்றிருந்தார் என்று கமலஹாசன் தன பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார், அவரது அண்ணன் நாடகத்தில் ஆங்கில பாடல்களைச் சிறப்பாகப் பாடுவார். வீட்டில் இருவரும் தம் குடும்பத்தினருடன் தமிழில் தான் பேசி வந்தனர்.

பெரியவருக்கு மரியாதை

எம்.ஜி.ஆர் எல்லோருக்கும் மரியாதை கொடுத்துப் பேசுவார் அது போலவே அவர் தனது வீட்டுப் பிள்ளைகளையும் வளர்த்தார். சில பிரபல நடிகர்கள் எல்லோரையும் போடா வாடா என்றும் பட்டப்பெயர் வைத்தும் மரியாதை இல்லாமல் பேசுவார்கள். ஆனால் எம் ஜி ஆர் வயதில் குறைந்தவர்களை தம்பி வாங்க போங்க என்று தான் பேசுவார் மூத்தவர்களை அண்ணன் என்றும் அம்மா என்றும் அழைத்து பேசுவார். சரோஜாதேவி அண்மையில் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்க வந்த்ருந்தபோது யாரோ கிழவி என்று குறிப்பிட்டதை கேட்டு வருத்தப்பட்டார். அப்போது அவர், ‘’எம்ஜிஆர் இருந்தபோது மூத்த நடிகர் நடிகையருக்கு இந்த மரியாதை குறைவு ஏற்பட்டதில்லை. அவர் யாரையும் மரியாதை இல்லாமல் பேசமாட்டார்; மற்றவர் பேசுவதை கேட்டுகொண்டு அமைதியாகவும் இருக்கமாட்டார். அவர் பெரிசு, கிழவி என்று சொல்லமாட்டார் அந்த ‘பெரிய அம்மாவை கூப்பிடுங்கள்’ எனறு தான் சொல்வார்’ என எம் ஜி ஆர் மற்றவருக்கு தந்த மரியாதையை பற்றிக் கூறி பெருமைப்பட்டார். அவர் ஒரு முன்மாதிரியாக (POSITIVE ROLE MODEL) வாழ்ந்து காட்டினார்.

ஒரு முறை தன வீட்டில் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துப்போக ரிக்ஷா வந்தபோது ‘ஏ ஆறுமுகம் கொஞ்ச இரு வர்றோம்’ என்று பிள்ளைகள் சொன்னதைக் கேட்டு எம் ஜி ஆர் கோபித்துக்கொண்டார். ரிக்க்ஷக்காரரை அண்ணன் என்றே அழைக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார் அன்று முதல் அவர் விட்டு பிள்ளைகள் வேலைக்காரர் வெளியாட்கள் யாரையும் மரியாதை இல்லாமல் பேர் சொல்லி அழைப்பது கிடையாது. Charity begins at home என்பது போல நற்பண்புகளும் பழக்க வழக்கங்களும் வீட்டில் இருந்து தான் வளர்கின்றன. எந்த அதிகாரியையும் எம் ஜி ஆர் மற்ற தலைவர்களை போல வாய்யா போய்யா என்று அழைத்தது கிடையாது.

இலவசப் பள்ளிக்கூடம்

எம் ஜி ஆர் கல்வியின் முக்கியத்துவத்தை பகுத்தறிவின் இன்றியமையாமையை தன பாடல்களில் புகுத்தியிருப்பார். அது சினிமாவுக்காக செய்தது மட்டுமல்ல அவர் தன வாழ்வில் முக்கியம் என்று கருதி செயல்பட்டு வந்த நடைமுறை ஆகும். அவர் கோடம்பாக்கத்தில் சினிமா துறையினரின் பிள்ளைகள் கல்வியறிவு பெற வேண்டும் தனக்கு கிடைக்காத கல்வி இவர்களுக்காவது கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இலவச பள்ளிக்கூடம் ஒன்றை தொடங்கி நடத்தினார். சினிமாக்காரரின் பிள்ளைகள் படிக்க வசதியின்றி சினிமாவிலோ மற்ற ஆபத்தான, தவறான வழிகளிலோ போய்விடக் கூடாது என்ற சமூக அக்கறை அவருக்கு நடிகராக இருக்கும்போதே இருந்தது. அவர் சினிமா துறையினரின் பிள்ளைகளை தன சொந்தப் பிள்ளைகளைப் போல கருதினார். அதனால் இலவசமாக கல்வி அளிக்க பள்ளிக்கூடம் ஒன்றை கட்டினார்.

ஒரு சுதந்திர தினத்தன்று எம் ஜி ஆர் தனது பள்ளியில் கொடி ஏற்றுவதாக இருந்தது. அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து விழாவில் கலந்துகொண்டார். ஆனால் கொடி ஏறவில்லை சிக்கிக்கொண்டது. ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன் ஒடிவந்து அந்தச் சிக்கலை எடுத்துவிட்டான் அவர் அவனையே கொடியேற்றும்படி கூறினார். சிறப்புரையாற்றும்போது ‘’நான் மிகுந்த ஆணவத்துடன் வந்துவிட்டேன் என் பள்ளியில் நான் கொடியேற்றப் போகிறேன் என்ற ஆணவத்துக்கு இந்த சிறுவன் பாடம் கற்றுக்கொடுத்துவிட்டான். இனி இந்த பள்ளியில் மாணவர்களே ஆண்டுதோறும் கொடி ஏற்றட்டும்’ என்றார். அன்று முதல் மாணவர்களே கொடி ஏற்றினர். தனது பள்ளியில் தான் கொடி ஏற்றுவதை கூட ஆணவம் என நினைத்து அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்ட எளிய மனிதர் எம் ஜி ஆர். தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை சுய அலசல் [SELF ANALYSIS] செய்து புதிய முடிவுகளுக்கு வரும் அற்புத மனிதர்.

சத்துணவு திட்டம்

எம் ஜி ஆர் காலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு திட்டம் தொடங்கப்பட்டது. இது அரசு பள்ளிகளில் மட்டுமல்ல அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் வரை தொடங்கப்பட்டது. குழந்தை பால்குடி தவிர்த்து திட உணவு உண்ணத்தொடங்கிய நாள் முதல் இத்திட்டம் உணவளித்தது தான் இதன் சிறப்பம்சம் ஆகும். குழ்ந்தை பிறந்து .நான்கு மாதம் முதல் சத்துமாவுருண்டைகள் சத்துணவு மையத்தில் வழங்கப்படும். பள்ளி வகுப்பு முடிக்கும் வரை மதிய உணவு வருடம் முழுக்க வழங்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதனை அவர் தனது பள்ளியில் எப்போதோ தொடங்கிவிட்டார். தான் நடித்து சம்பாதித்த பணத்தில் பள்ளிகூடம் கட்டி அங்கு படித்த மாணவர்களுக்கு இலவச கல்வி அளித்து இலவச உணவும் அளித்து வந்தார். அவர் தன சொந்த வாழ்வில் நடத்தி வந்தவற்றையே ஆட்சிக்கு வந்த பிறகு பெரிய அளவில் அரசின் திட்டமாகக் கொண்டுவந்தார். ஆட்சியும் அரசும் அவர் செய்துவந்த பணிகளை பெரியளவில் செய்ய அவருக்கு நல்லதொரு வாய்ப்பை அளித்தது.

எம் ஜி ஆரின் பள்ளியில் மதிய உணவு முழுமையான சத்துணவாக அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. ஒரு நாள் எம் ஜி ஆர் அங்கு திடீரென மதியம் வந்தார் அப்போது குழந்தைகளுக்கு மோர் வழங்கப்படாதது கண்டு மனம் கொதித்தார். பால்காரர் வரவில்லை என்று தலைமை ஆசிரியர் காரணம் கூறினார் உடனே எம் ஜி ஆர் தன பழைய நண்பரான கேபிகே கேசவனை பள்ளிக்கு அருகில் வீடு பார்த்து அமர்த்தினார். அடிக்கடி பள்ளிக்கு போய் அங்கு சாப்பாடு முறையாக பரிமாறப்படுகின்றதா என்பதை கவனிக்கும்படி பணித்தார். சிறுவனாக இருந்தபோது ஒரு வேளை சாப்பாட்டுக்காக தான் ஐந்து வயதில் தன அன்னையை பிரிந்து நாடக கம்பெனியில் போய் இருந்ததை நினைத்து பார்த்த அவர் தனக்கு வசதி வந்ததும் தன துறை சார்ந்த சிறுவர்களுக்கும் அந்த நிலை வந்துவிடக் கூடாது என்று இலவச பள்ளிக்கூடம், இலவச மதிய உணவு என வழங்கினார்.

எம் ஜி ஆர் முதலமைச்சரான பிறகு ஆட்சிப்பளு காரணமாக அவரால் முன்பு போல இந்த பள்ளியை கவனிக்க இயலவில்லை அப்போது இந்த பள்ளியில் சிறியளவில் கட்டணம் வாங்குவதாக அறிந்து ‘ஒரு ருபாய் கூட வாங்கக் கூடாது’ என தடுத்துவிட்டார். படங்களில் நடித்து வந்த போது அவர் தனக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கும் என நம்பி சிறுவருக்கு புத்திமதி பாடல்களை பாடவில்லை; பள்ளிக்கூடம் கட்டவில்லை இலவச உணவு வழங்கவில்லை..அவர் நடிகராக இருந்தபோதே தன்னால் முடிந்தவரை சிறுவர்களுக்கு உதவினார் இலவச மருத்துவமனை ஒன்றும் ஆரம்பித்திருந்தார். அதை தொடர்ந்து நடத்த இயலவில்லை. அவர் படங்களிலும் சொந்த வாழ்விலும் பெரும்பாலும் ஒன்று போல தான் இருந்தார்.

எம் ஜி ஆரின் தந்தை கோபி சார்

எம் ஜி ஆரின் தந்தை கோபால மேனன் கேரளாவில் மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தபோது ஒரு விதவையில் சொத்தை அவரது குடும்பத்தினர் அபகரிக்க நினைத்தனர் ஆனால் அவர் அதற்கு இடம் கொடுக்காமல் அந்த விதவைக்கே அவரது சொத்து கிடைக்கும்படி தீர்ப்பளித்தார். இதனால் அவர் மீது அவப்பெயர் சுமத்தி ஊரை விட்டு விலக்கி வைத்துவிட்டனர். அதனால் அவர் தன மனைவி சத்தியபாமா மற்றும் நான்கு குழந்தைகளுடன் நாடு விட்டு நாடு சென்றார். இலங்கைக்கு போய் கண்டி நகரில் இருந்த பள்ளிகூடம் ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியமர்ந்தார். அங்கு போன பிறகு காமாட்சி, தங்கமணி என்ற அவரது இரண்டு பெண் குழந்தைகளும் நோய்வாய்ப்பட்டு இறந்து போயின. ஆனால் பூரணச் சந்திரன் போல எம் ஜி ஆர் பிறந்தார். அவர் வைகாசி விசாகத்தனறு பிறந்தார். போயா [புத்தர் பிறந்த நாள்] தினத்தன்று பிறந்ததால் அவர் பெரும் புகழ் அடைவார் என்று புத்த துறவியான ரத்னபாலா அப்போது சொல்லியிருக்கிறார். எம் ஜி ஆரின் தந்தையார் கண்டிப்பான வாத்தியார். ஒரு நாள் ஒரு பணக்காரர் ‘ஏன் என் மகனை அடித்தீர்கள்’ என்று கேட்டதற்கு ‘படிக்காவிட்டால் கண்டிக்க வேண்டியது ஆசிரியரின் கடமை. என் கடமையை தான் நான் செய்தேன். உங்களுக்கு விருப்பமில்லை என்றால் அழைத்து சென்றுவிடுங்கள்’ என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார். அவரது நல்ல பண்புகளுக்காக அவரை அந்த பகுதியினர் கோபி சார் என்று அழைத்து மகிழ்ந்தனர் அவர் அங்கிருக்கும்போதே ஒரு நாள் மாரடைப்பால் இறந்துவிட்டார். அவர் நினைவாக அந்த தெருவுக்கு கோபி சார் தெரு எனப் பெயரிட்டனர். தன் தந்தை வழியில் எம் ஜி ஆரும் பிள்ளைகளிடம் கண்டிப்பாக இருந்திருக்கிறார்.

எம் ஜி ஆர் படங்களில் அவர் சிறுவர்களுக்கு பாடியிருக்கும் பாட்டுக்களின் கருத்துக்கள் யாரோ எழுதி யாரோ பாடியவை அல்ல அவை அனைத்தும் எம் ஜி ஆரின் சொந்த கருத்தின் பிரதிபலிப்புகளே ஆகும்.



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்