இரத்த தானம் செய்யுங்கள்

திருமதி செல்லையா யோகரத்தினம் M.A

 
'சூன் 14ம் தேதி, உலக இரத்ததான நாள்.'

'உதிரம் கொடுப்போன் உயிர் கொடுப்போனே.'


'உண்டி கொடுத்தோன் உயிர் கொடுத்தோனே!' என்று அன்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். தானங்களில் சிறந்த தானம் 'அன்ன தானம்' என்றார்கள். ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. மக்களின் தேவைகளும், நிலைகளும் மாறிவிட்டன. இன்று 'உதிரம் கொடுப்போன் உயிர் கொடுப்போனே.' என்று மாறி, 'தானங்களில் சிறந்த தானம் இரத்த தானம்' என்றாகி விட்டது. உலகிலே பட்டினியால் வாடும் மக்களில்ப்; பார்க்க அவசர தேவைக்கு உயிர் காக்கும் இரத்தத் தேவை கூடவே உள்ளது.

நம் உடலில் உள்ள ஒரே திரவ உறுப்பு இரத்தம். 'நீரின்றி அமையாது உலகு' அதே போல 'இரத்தமின்றி அமையாது உடல்.' நம் உடலின் அனைத்து உறுப்புக்களும் சீராக இயங்க இரத்தம் அவசியம். எல்லாத் திசுக்களுக்கும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கிய பணியை இரத்தம் செய்கிறது. இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற ஒரு திரவ வடிவ உறுப்பே இரத்தம். நம் உடலுக்குள் சராசரியாக ஐந்து லிட்டர் இரத்தம் ஒடிக்கொண்டிருக்கிறது. இந்த இரத்தத்தில் சிவப்பு அணுக்கள். வெள்ளை அணுக்கள், இரத்தத் தட்டுகள் என மூன்று முக்கியப் பொருட்கள் உள்ளன. சிவப்பு அணுக்கள் சுவாசத்திற்கான பிராணவாயுவை எடுத்துச் செல்லவும், வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்புச்சக்திக்கும், இரத்தத் தட்டுக்கள் இரத்தத்தை உறைய வைப்பதற்கும் பயன்படுகின்றன. இந்த மூன்று பொருட்களையும் இரத்தத்தில் நீந்திச்செல்ல வைக்கும் படகு போல பிளாஸ்மா செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. நுரையீரலிலிருந்து அனைத்துத் திசுக்களுக்கும் பிராணவாயுவை இரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களிலிருந்து கரியமலவாயுவை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்குவழியே வெளியேற்றுவதும் இரத்தம் தான். இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே 'ஹீமோகளோபின்' என்ற வேதிப் பொருள் உள்ளது. இதுவே இரத்தத்திற்குச் சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. 'ஹீமோகளோபின்'தான் உடலிலுள்ள அனைத்துச் செல்களுக்கும் பிராணவாயுவை எடுத்துச்செல்ல உதவுகிறது. இரத்தத்தில் 'ஹீமோகளோபின்' எண்ணிக்கை குறைந்தால் இரத்த சோகை நோய் ஏற்படும். இரத்த சோகை, இரத்த இழப்பு எற்படும் போது இரத்த சிவப்பு அணுக்களைச் உடலுக்குள் செலுத்துவார்கள். உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் சூன் 14 ந் தேதியை 'உலக இரத்ததான நாள்' என்று கடைப்பிடித்து வருகிறது. 'உங்களால் என்ன செய்ய முடியும்? இரத்த தானம் செய்யுங்கள்! இப்போதும்.... எப்போதும்....'. என்று விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்கள்.

இரத்த தானம் செய்வதென்றால் மனமிருந்தாலும் எல்லோரும் எழுந்தமானத்தில் இரத்ததானம் செய்து கொள்ள முடியாது. இரத்த தானத்திற்கு முன்னரும் பின்னரும் பரிசோதனைகள் செய்ய வேண்டும். இரத்தம் கொடுப்பதற்கு முன்னர் இரத்தப் பிரிவு, இரத்த அழுத்தத்தின் அளவு, உடல் வெப்பநிலை மற்றும் ஹீமோகளோபின் போன்றவை பரிசோதிக்கப்பட வேண்டும். இரத்த தானத்திற்குப் பின் டெங்கு, மலேரியா, டைஃபாய்ட், ஹிப்பாடைட்டிஸ், எச்.ஐ.வி, எயிட்ஸ் போன்ற நோய்கள் உள்ளனவா என்று பரிசோதிக்கப்பட வேண்டும். பரிசோதனையின் முடிபுகளைக் கொண்டே பயன்பாடுகள் தீர்மானிக்கப்படும். இரத்ததானம் செய்வதால் பயன் பெறுவது, இரத்தத்தைப் பெறுபவர் மட்டுமல்லக் கொடுப்பவரும்தான். பெறுபவருக்கு உடனடித் தேவை பூரணமாகும். கொடுப்பவருக்கு உடலில் இயற்கையாகப் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இரத்தத்திலுள்ள 'ஹீமோகளோபின்' அளவு சீராகும். மாரடைப்பு எற்படும் வாய்ப்புக் குறையும். உடலில் அதிக அளவிலுள்ள இரும்புச் சத்து சமன் செய்யப்படும்.

மேலும் யாரெல்லாம்; எப்போதெல்லாம் இரத்ததானம செய்யலாம், செய்யக்கூடாது என்ற வரைமுறையும் உண்டு. பிரதானமாக ஆரோக்கியமானவராக இருக்கவேண்டும். 45 கிலோவுக்கு மேல், 18 முதல் 60 வயது வரையுள்ள ஒரு ஆண் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும், ஒரு பெண் நான்கு மாதங்களுக்கு ஒரு முறையும் இரத்த தானம் செய்யலாம்.

  • மாதவிடாய் காலங்களிலும், கர்ப்பக் காலங்களிலும் பெண்கள் இரத்ததானம் செய்யக்கூடாது.
     

  • பாலூட்டும் தாய்மார்கள் இரத்ததானம் செய்யக்கூடாது.
     

  • மது அருந்தியவர்கள், புகைப்பழக்கம் உள்ளவர்கள் இரத்ததானம் செய்யக்கூடாது.
     

  • ஏதேனும் தொற்றுநோய் உள்ளவர்கள், காய்ச்சலில் இருப்பவர்கள், எதுவாயினும் நோய்வாய்ப் பட்டவர்கள் இரத்ததானம் செய்யக்கூடாது.
     

  • 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் 45 கிலோவுக்கும் கீழ் எடை உள்ளவர்கள், இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் இரத்ததானம் செய்யக்கூடாது.
     

  • எய்ட்ஸ், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், வலிப்பு உள்ளவர்கள், அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் இரத்ததானம் செய்யக்கூடாது.


இரத்ததானம் செய்யும்போது செய்ய வேண்டியவை:

  • இரத்ததானம் செய்ய விரும்புபவர்கள் மது மற்றும் புகைப்பழக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.
     

  • புகைப் பழக்கம் உள்ளவர்கள் புகைப்பிடித்து மூன்று மணி நேரத்திற்குப்பின் இரத்த தானம் செய்யலாம்.
     

  • உடலுக்குத் தேவையான அளவு இரும்புச் சத்தை அளிக்கும் உணவுப் பொருட்களை உண்ண வேண்டும்.
     

  • இரத்ததானம் செய்யப் போவதற்கு முன் சீரான தூக்கம் வேண்டும்.
     

  • இரத்ததானம் செய்வதற்கு முன் சிறிதளவு தண்ணீர் அல்லது பழச்சாறு அருந்தலாம்.
     

  • இரத்ததானம் செய்வதற்கு முன் ஆரோக்கியமான உணவு உட்கொள்ள வேண்டும்.
     

  • இரத்ததானம் செய்யும் பொழுது வசதியான உடை அணியலாம்.
     

  • இரத்ததானம் செய்யும் போது மன அமைதியுடன் இருக்கவேண்டும்.
     

இரத்ததானம் செய்தபின் செய்ய வேண்டியவை:

  • இரத்ததானம் செய்தபின் பழச்சாறு, ஆரோக்கியமான உணவு எடுக்கலாம்.
     

  • இரத்ததானம் செய்த 24 மணிநேரத்தில் மது அருந்தக்கூடாது.
     

  • இரத்ததானம் செய்தபின் பாரமான பொருட்களைத் தூக்கக்கூடாது.
     

  • இரத்ததானம் செய்தபின் கடுமையான உடற்பயிற்சி செய்யக்கூடாது.


காலம் மாறும். தொழில்நுட்பம் வளர்ச்சி அடையப் புதிய, புதிய கண்டுபிடிப்புக்கள் வர நிலைமைகள் மாறும். அந்தமாதிரி ஒரு நிலைப்பாடு தற்பொழுது வந்துள்ளது. இரத்ததானம் என்பது சற்று விரிவு அடைந்து அணு தானமாக வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே இனி இரத்ததானம் சற்று குறுகி அணுதானமாக மாறியுள்ளது. எனினும் சில சில சமயங்களில் இரத்த தானமும் செயற்படும்.

இரத்ததானம் செய்வதாக இருந்தாலும், பெறுவதாக இருந்தாலும் மொத்த இரத்தத்தையும் கொடுப்பதும் பெறுவதும்தான் வழக்கமாக இருந்தது. இப்போதோ நுட்பமான வழிமுறைகள் பின்பற்றப்பட்டுகின்றன. ஒருவரது உடலில் ஏற்பட்டிருக்கும் ஏதோ ஒரு குறைபாட்டைச் சரி செய்யவே இரத்த தானம் செய்யப்படுகிறது. அது என்ன குறைபாடு என்பதை அறிந்து அதற்கேற்பத் தானம் செய்யும் முறைதான் தற்பொழுது பின்பற்றப்படுகிறது. நோயாளிக்கு ஹீமோகளோபின் குறைபாடு என்றால் சிவப்பு அணுக்களை மட்டும் கொடுத்தாலே போதுமானது. மொத்த இரத்தத்தையும் கொடப்பது வீண் வேலை எனவே குறிப்பிட்ட செல்களை மட்டுமே தானம் அளிப்பதாகும். இந்த நவீன முறைக்கு
Blood component therapy  என்று பெயர். மாதவிலக்குக் காரணமாக ஒரு பெண்ணுக்கு அதீத இரத்த இழப்பு ஏற்பட்டிருக்கும் போது ஹீமோகளோபின் அளவு மிகவும் குறைந்துவிடும். அவருக்கு வெள்ளை அணுக்களும் இரத்தத்தட்டுகளும் தேவையான அளவு இருக்கும். ஆதலால் அவருக்கு ஹீமோகளோபின் மட்டுமே கொடுத்தால் போதுமானது. இழப்பை ஈடு செய்துவிடலாம். இதன் மூலம் ஒருவரிடமிருந்து பெறப்படும் இரத்தம் பலருக்கும் பயன்படக் கூடியதாகிறது.

விபத்து, பிரசவம், அறுவை சிகிச்சை போன்ற நேரங்களில் ஒருவருக்கு நிறைய இரத்த இழப்பு ஏற்படுகிறது. அந்த நேரத்தில்ப் பாதிக்கப்பபட்டவருக்கு முழுமையான இரத்தம் தேவை. இதுபோன்ற அவசர சூழ்நிலைகளில் முழு இரத்தத்தையும் தானமாகக் கொடுக்க வேண்டும். ஜப்பானியர்களால் கண்டு பிடிக்கப்பட்ட
Cells Seperator யந்திரம்தான் இந்த வித்தையைச் செய்கிறது. தானம் செய்பவரின் ஒரு கையிலிருந்து பெறப்படும் இரத்தத்தில் தேவையான அணுக்கள் மட்டுமே பிரித்தெடுக்கப்பபட்ட பின், அடுத்த கைவழியாக அதே உடலுக்குள்ளேயே திருப்பி அனுப்பப் பட்டுவிடும். இதனால் இரத்தம் வீணாகாது. பாட்டிலில் சேகரிக்கப்பட்ட இரத்தமாக இருந்தாலும், இதே போல தேவையான அணுக்களைப் பிரித்தெடுத்துவிடலாம். பக்க விளைவுகள் ஏற்படமாட்டாது. அணுக்கள் தானம் செய்ய வருகிற ஒருவரிடம் எவ்வளவு அணுக்கள் இருக்கிறது என்பதைக் கணித்துத் தேவைக்கு அதிகமாக இருப்பதிலிருந்தே எடுத்துக் கொள்ளப்படும், எந்த விதப் பாதிப்பும் எற்படாது. இரத்த தானத்தில் 250 மி.லி.முதல் 350 வரை இரத்தம் பெறப்படும். இரத்த தானம் செய்வோர் ஒரே நேரத்தில் 300 மி.லி. இரத்தம்வரை தானம் செய்யலாம். இப்படித் தானம் செய்யப்படும் இரத்தம் 2 வாரங்களில் உண்ணும் உணவால் உற்பத்தி செய்யப்பட்டுவிடும். இறைக்கிற கிணற்றில் தண்ணீர் ஊறுவது போல மூன்று வாரத்தில் இந்த அளவு இரத்தம் தானாகவே ஊறிவிடும். இரத்த தானம் செய்வதால் ஒருவருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. அடிக்கடி இரத்ததானம் செய்து வந்தால், உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்குமாயின் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புக் குறையும்.

இரத்த தானம் செய்யுங்கள்! வாழ்க்கையைப் பரிசாகக் கொடுங்கள்!

‘Blood donor is a Life saver.’



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்