‘பெருவனப் புல் நான்’ எனப் பெருமிதத்துடன் மொழியும் கவிஞர்

பேராசிரியர் இரா.மோகன்


“பெரு வனப் / புல் நான்
என்ற பெருமிதம் / எனக்குண்டு”
(மீனுக்கு நீரெல்லாம் பாதைகள், ப.24)

எனத் தருக்குடன் முழங்கிடும் ராஜா சந்திரசேகர், ‘ஒற்றைக் கனவும் அதை விடாத நானும்’ என்ற தமது கவிதைத் தொகுப்பிற்காக திருப்பூர் தமிழ்ச் சங்க விருதினைப் பெற்றவர்; ‘கைக்குள் பிரபஞ்சம்’, ‘என்னோடு நான்’, ‘அனுபவ சித்தனின் குறிப்புகள்’, ‘நினைவுகளின் நகரம்’, ‘மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்’ என்பன அவர் வெளியிட்டுள்ள பிற கவிதைத் தொகுதிகள் ஆகும். இயக்குநர் பாரதிராஜாவிடம் இணைஇயக்குநராகப் பணியாற்றிய ராஜா சந்திரசேகர், திரைக்கதை, வசனம், பாடல்கள் ஆகிய திரையுலகின் முத்துறைகளுக்கும் தமது பங்களிப்பினை நல்கியுள்ளார்; விளம்பரப் பட உருவாக்கங்களிலும் முனைப்புடன் ஈடுபட்டு முத்திரை பதித்துள்ளார்.

‘கவிதை நுட்பங்களால் தெறிக்கும் கணம்’

‘அதுவாய் நிகழ்கிற நிகழ்வு’ – ‘பலவாய் விரியும் கனவு’ – ‘கனலாய்ப் பற்றும் பொறி’ – ‘நுட்பங்களாய் தெறிக்கும் கணம்’ என இரத்தினச் சுருக்கமான மொழியில் கவிதைக் கலையின் பண்பையும் பயனையும் கோடிட்டுக் காட்டும் ராஜா சந்திரசேகர், “ஒரு புள்ளி போதும் கவிதைக்கு தன்னைச் சமைத்துக் கொள்ள, வீறு கொண்டு எழ, கணங்களோடு உறவாட, பிரியங்களைச் சொல்ல, மனித ஓநாய் குரல்களை நிராகரிக்க, மேன்மையைத் தெரிவிக்க, நம்மை மிதக்கச் செய்ய” (‘அதிர்வின் அதிர்வுகள்’, நினைவுகளின் நகரம், ப.8) எனக் கவிதைக் கலையின் மென்மையையும் மேன்மையையும், வல்லமையையும் வித்தகத்தையும் எடுத்துரைப்பது குறிப்பிடத்தக்கது. ‘தேடுதல்’ என்ற தலைப்பில் கவிஞர் படைத்துள்ள கவிதை இவ்வகையில் நினைவுகூரத்தக்கது.

“மண்புழுவைப் பற்றி
எழுதி வரச் சொன்னார் டீச்சர் / குழந்தையிடம்
மண்ணில் தொலைத்த / மண்புழுவை
‘நெட்’டில் / தேடிக் கொண்டிருந்தார் அப்பா”
(நினைவுகளின் நகரம், ப.117)

இருபத்தியோராம் நூற்றாண்டின் வாழ்வு பற்றிய கூர்மையான விமர்சனம் இக் கவிதை!

தொடர்ந்த இயக்கமும் தேடலும்

‘எதிலும் நேர்த்தி – எப்போதும் உழைப்பும் உற்சாகமும்’ என இயங்கி வரும் படைப்பாளி ராஜா சந்திரசேகர். ‘இயங்குதல் என் இன்னொரு அடையாளம்’, ‘இயங்குவதாலேயே இருக்கிறேன்’ (மைக்ரோ பதிவுகள், பக்.51,79) என்னும் அவரது அனுபவக் கீற்றுகள் இங்கே மனங்கொளத் தக்கன. அவரது ஆளுமையில் ஆழ்ந்த தாக்கத்தினை ஏற்படுத்திய இரு பெருங் கவிஞர்கள் அபியும் கல்யாண்ஜியும் ஆவர். “கவிஞர் அபியும் கவிஞர் கல்யாண்ஜியும் கவிதையைப் போலவே அற்புதமானவர்கள். பேசும் போதெல்லாம் இவர்கள் உருவாக்கும் உலகம் அபாரமானது” (‘அதிர்வுகளின் அதிர்வுகள்’, நினைவுகளின் நகரம், ப.8) என்னும் ராஜா சந்திரசேகரின் கூற்று இவ்வகையில் நினைவு-கூரத்தக்கது.

“ஆறு வருட உழைப்பைச் சுமந்து வருகிறது ‘நினைவுகளின் நகரம்’. தொடர்ந்த இயக்கமும், வாசிப்பும், தேடலும், அறிந்து கொள்ளுதலும், தெரிந்து செய்தலும் இதைச் சாத்தியமாக்கி இருக்கிறது” (‘அதிர்வின் அதிர்வுகள்’, நினைவுகளின் நகரம், ப.8) என ‘நினைவுகளின் நகரம்’ என்னும் நூலுக்கு எழுதிய அணிந்துரையில் கவிஞர் தந்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம், ஆழ்ந்திருக்கும் அவரது கவி ஆளுமையைக் காட்ட வல்லது.

படித்த உடன் பற்றிக் கொள்ளும் கவிதைகள்

ராஜா சந்திரசேகரின் பெரும்பாலான கவிதைகள் அளவால் சிறியவை; ஆனால், படித்த உடன் பற்றிக் கொள்ளும் சிந்தனைப் பொறிகள் அவை. பதச் சோறாக, ‘சே குவேராவின் கனவில்’ என்னும் தலைப்பில் ராஜா சந்திரசேகர் படைத்திருக்கும் குறுங்கவிதை:

“சே குவேராவின் கனவில்
நான் வருவது போல் / கண்ட கனவு
சொல்லிக் கொண்டே இருக்கிறது
‘விழித்திரு எப்போதும்’”
(நினைவுகளின் நகரம், ப.75)

‘புரட்சி நாயகர்’ சே குவேராவின் வாழ்க்கை இளைய தலைமுறைக்கு உணர்த்தும் செய்தி இதுதான்: ‘விழித்திரு எப்போதும்!’

ராஜா சந்திரசேகர் அண்மையில் ‘குமுதம்’ இதழில் (16.05.2018, பக்.80-81) ‘நீயே விழிச்சுப் பாரு!’ என்னும் தலைப்பில் எழுதிய கவிதையும் இங்கே நினைவுகூரத் தக்கது. “நீயே விழிச்சுப் பாரு / இங்கு எதுவும் சரியில்ல / தம்பி கேளு” எனத் தொடங்கும் கவிதை, தொடர்ந்து ‘தண்ணிய கேட்டா / டாஸ்மாக் காட்டுறான்; கட்டளை கேட்டு / பொம்மைகள் ஆடுது; அரசியல் புனிதர் / ஆயிரம் பேசுறார்; விளைஞ்ச பயிரு வாடிக் கிடக்குது; கார்ப்பரேட் பையில / காசு சேருது; நிம்மதி குறைஞ்சி போச்சு / நினைப்பு கொதி / நிலையாச்சு; நாடு நஞ்சா ஆகுது; ஒழுக்கம் நசுங்கிப் போச்சு / உண்மை ஓட்டை ஆச்சு’ என நாட்டு நடப்பை அம்பலப்படுத்திக் காட்டி, மீண்டும் ‘நீயே விழிச்சுப் பாரு / இங்கு எதுவும் சரியில்ல / தம்பி கேளு!’ என இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வின் தேவையை வலியுறுத்தி நிறைவடைகின்றது. இக் கவிதை ப(h)ட்டுக்கோட்டை–யாரின் ‘சின்னப் பயலே, சின்னப் பயலே, சேதி கேளடா!’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘திருடாதே பாப்பா திருடாதே’ என்ற விழிப்புணர்வுப் பாடல்களை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பது சிறப்பு.

மூன்றே சொற்களில் அமைந்த கவிஞரின் முத்திரைக் கவிதை:

“மீனுக்கு
நீரெல்லாம்
பாதைகள்”
(மீனுக்கு நீரெல்லாம் பாதைகள், ப.102)

‘பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும், பார்த்து நடந்தால் பயணம் தொடரும்’ (திரை இசைப் பாடல்கள்: இரண்டாவது தொகுதி, ப.191) என்னும் கவியரசர் கண்ணதாசனின் திரையிசைப் பாடல் வரிகள் இங்கே நினைவுகூரத் தக்கன.

உயிரோவியங்களாய் வலம் வரும் குழந்தைகளும் முதியவர்களும்

ராஜா சந்திரசேகரின் கவிதை உலகில் கள்ளம் கரவு இல்லாத, சூதுவாது அறியாத சிறுவர்-சிறுமியரும், வயது முதிர்ந்த, அன்பு கனிந்த தாத்தா-பாட்டி, தந்தை-தாய் ஆகியோரும் அடிக்கடி வலம் வருகின்றனர். அவர்களது பாசப் பிணைப்பினை அழகொழுகும் உயிரோவியங்களாகத் தம் கவிதைகளில் வடித்துத் தந்துள்ளார் ராஜா சந்திரசேகர்.

“காலையை அழகுபடுத்தி / சென்று கொண்டிருந்தன
பள்ளிக் குழந்தைகள்” (
நினைவுகளின் நகரம், ப.28)

எனக் குழந்தைகளின் கொள்ளை அழகை அழகாக ஆராதித்துத் தொடங்கு-கின்றது ‘மான்யா’ என்னும் கவிதை.

‘குழந்தை அருவி’ என்னும் கவிதையில் வரும் ஒரு சிறுமி, தந்தையிடம் தான் வரைந்ததைக் காட்டி கேட்கிறாள். ‘அருவி’ என்கிறார் தந்தை. ஓவியத்தை மேல்கீழாக்கி, ‘என்ன?’ என்கிறாள் சிறுமி. ‘இது தப்பு’ என்கிறார் தந்தை. சிரித்த படி, “தலைகீழாய் யோகா செய்யும் அருவி” என்கிறாள் சிறுமி.

“தூக்கிக் கொஞ்சுகிறார் தந்தை
குழந்தை அருவியை”
(நினைவுகளின் நகரம், ப.55)

என முடிகிறது கவிதை. குழந்தையின் கள்ளங்கரவற்ற தன்மையை உள்ளது உள்ளபடி சித்திரித்துள்ளது இக் கவிதை.

‘அந்தக் குழந்தையிடம் / பெயர் கேட்கத் / தோன்றவில்லை’யாம் கவிஞருக்கு. ஏன் தெரியுமா? ‘தேவைதைக்குப் பெயர் / தேவையில்லை’ (நினைவுகளின் நகரம், ப.81) என்பதாலாம்!

தாத்தாவுக்கும் அவரது பேரனுக்கும் இடையே நிகழும் சுவையான விளையாட்டு வருமாறு:

“பேரனின் பால்யத்தை / தாத்தாவும்
தாத்தாவின் முதுமையை / பேரனும்
வீசிவீசி / விளையாடுகின்றனர்”
(நினைவுகளின் நகரம், ப.27)

ஒரு வகையில் ‘இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர்’ என்பது இங்கும் பொருந்தி வருவது தான்!

கவிஞர் படைத்துக் காட்டும் முனுசாமி தாத்தா காலில் சக்கரம் மாட்டியது போல் சுற்றி வருவார்; எது கேட்டாலும், ‘அதுக்கெல்லாம் நமக்கு எங்கப்பா நேரம் இருக்கு?’ என்று சொல்லி விட்டுப் பறப்பார், இளமைச் சாரல் அடிக்க, பாட்டி ஒரு நாள் கோபத்தில் கத்திய போது சிரித்த படியே தாத்தா சொல்லிவிட்டுப் போனது இது தானாம்:

“அட, சாவறதுக்கெல்லாம் / நமக்கு எங்க நேரம் இருக்கு?”

(நினைவுகளின் நகரம், ப.43)
பிறிதொரு கவிதையில் ராஜா சந்திரசேகர்,

“இருமல் சத்தம் / மேலேறிப் போய்விட
படியேறுகிறார் முதியவர்”
(மீனுக்கு நீரெல்லாம் பாதைகள், ப.107)

என முதியவர் ஒருவரைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். ‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்பது பழமொழி. ‘முதியவர் வருவார் பின்னே, இருமல் வரும் முன்னே’ என்பது கவிஞர் படைக்கும் ‘முதுமொழி’.

வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஒரு மூதாட்டி பற்றிய கவிஞரின் சொற்சித்திரம் (நினைவுகளின் நகரம், பக்.62-63) படிப்பவர் உள்ளத்தைப் பாகாய் உருக்கும் பான்மையது.

அனைத்து வகை உணர்ச்சிகளுக்கும் ஆட்படுபவர்


“கவித்துவ எழுச்சி தோன்றும் போதெல்லாம் வியந்தும் நெகிழ்ந்தும் கனிந்தும் கிளர்ந்தும் அனைத்து வகை உணர்ச்சிகளுக்கும் ஆட்படுபவர்’ (‘பெருவனப் புல்’, மீனுக்கு நீரெல்லாம் பாதைகள், p.xii) எனக் கவிஞர் அபி, ராஜா சந்திரசேகரின்ஆளுமைப் பண்பு குறித்துக் கூறுவது நூற்றுக்கு நூறு சரியான மதிப்பீடே.

“இறந்து போக
எத்தனையோ தருணங்கள் / இருக்கின்றன
உயிர்த்தெழ / ஒரு வரி போதும்”
(மீனுக்கு நீரெல்லாம் பாதைகள், ப.30)

என்ற கவிதை இவ் வகையில் குறிப்பிடத்தக்கது.

கவிஞரின் கருத்தில் மனிதன் இறந்து போக எத்தனையோ தருணங்கள் இருக்கின்றன; அவன் உயிர்த்தெழ – கிளர்ந்தெழ – ஒரு வரி போதுமானது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் ஒற்றை வரி போதும், தமிழரின் உலகளாவிய பார்வையைப் பறைசாற்ற. ‘பெரிதே உலகம் பேணுநர் பலரே’ என்னும் வைர வரி போதும், படிப்பவர் மனத்தில் நம்பிக்கையை விதைக்க; ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என்னும் அமுத மொழி போதும், மனிதனை உயிர்தெழச் செய்ய; ‘இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை’ என்னும் மணிமொழி போதும், ஒருவரது துன்பத்தினைத் தூர விரட்டி, கிளர்ந்தெழ வைக்க.

பலரது வாழ்விலும் நிகழும் ஒரு பேருந்து அனுபவம், ராஜா சந்திரசேகரின் கைவண்ணத்தில் நல்லதொரு புன்னகைச் சித்திரமாய் வடிவெடுத்திருக்கின்றது. அவரது சொற்களில் அழகிய அச் சித்திரம் வருமாறு:


“மறந்து போய் / இறங்கி விட்டார் / கிளம்புகிறது பேருந்து
‘அங்கிள் நீங்க அவருக்கு / மீதிச் சில்லறை கொடுக்கலை’
ஞாபகப்படுத்துகிறது குழந்தை
விசிலடிக்கிறார் / நிற்கிறது பேருந்து
இறங்கியவர் ஓடி வருகிறார்
நடத்துநர் / சில்லரை கொடுத்து / நன்றியை வாங்கிக் கொள்கிறார்
குழந்தை புன்னகை / தாய் புன்னகை / நடத்துநர் புன்னகை
ஒரு புன்னகைச் சித்திரமாய் விரிய / போகிறது பேருந்து”

                                          (மீனுக்கு நீரெல்லாம் பாதைகள், ப.38)

மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் ‘மின்னல்’ என்ற முத்திரைச் சிறுகதையின் வாமன வடிவமாக இக் கவிதையைக் கருதலாம்.

‘நானுதிர் காலம்!’

‘நான்மறையைக் கற்றவனா ஞானி?, தன்னுள் ‘நான்’ மறையக் கற்றவனே ஞானி ஆவான்’ (கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள், ப.309) என்பது கவிஞர் தாராபாரதியின் வாக்கு. ராஜா சந்திரசேகரும் ‘நான் அடங்க’ – ‘நான்’ என்னும் முனைப்பு அடங்க – சிறிய ‘சவப்பெட்டி போதும்’ என்கிறார்; ஆனால், அடுத்த அடியிலேயே கவிஞராக உருமாறி,

“நான் எழுத / பிரபஞ்சம் வேண்டும்”

                              (மீனுக்கு நீரெல்லாம் பாதைகள், ப.97)

என்கிறார்; பரந்து விரிந்த மனத்துடன், ‘பெரிதினும் பெரிது’ கேட்கும் இயல்பு படைத்தவன் அல்லவா கவிஞன்? எனவே, ‘பிரபஞ்சம்’ தேவைப்-படுகின்றது கவிஞருக்கு

“என்னைக் கண்டுகொள்ள
எத்தனை நான்களைக் / கடக்க வேண்டி இருக்கிறது”
(ப.94)

என்னும் கவிஞரின் தத்துவக் கவிதையும் இங்கே நினைவு கூரத் தக்கது.

முடிவை நோக்கி நகரும் மனித வாழ்வில் ஒரு கட்டத்தில் ‘எல்லா நான்களும் உதிர்ந்து போயின’வாம்! எனவே,

‘இது நானுதிர் காலம்’ (ப.63) என்கிறார் கவிஞர்.



“நான்கள் / மொய்த்துக் கிடக்கும் என்னை
விடுவிப்பதெப்படி?”
(அனுபவ சித்தனின் குறிப்புகள், ப.80)

எனத் தத்துவ நோக்கில் கவிஞர் தொடுக்கும் கேள்விக் கணை பொருள் பொதிந்தது; ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுவது.

அழுகையின் பரிமாணங்கள்

மனித வாழ்வில் சிரிக்கும் பொழுதுகளை விட, அழும் தருணங்களுக்கே ஆற்றல் மிகுதி. அவையே ஆளுமையில் ஆழ்ந்த தாக்கத்தினை ஏற்படுத்தும். ராஜா சந்திரசேகர் தம் கவிதைகளில் ஆங்காங்கே அழுகையின் பல்வேறு பரிமாணங்களை நுட்பமாகப் பதிவு செய்துள்ளார்:

“அழுகையிடம் / அனைத்தையும்
சொல்லிவிட்டேன்”
(மீனுக்கு நீரெல்லாம் பாதைகள், ப.56)

“தெரியாமல் அழுதேன்
துடைத்துக் கொண்ட போது / தெரிந்துவிட்டது”
(ப.99)

“அழுவது / என் பழக்கம்
இதற்கெல்லாம் / ஆறுதல் சொல்ல
வந்து விடாதீர்கள்”
(ப.29)

தொல்காப்பியர் மெய்ப்பாடுகளின் வரிசையில் நகையையும் (சிரிப்பையும்) அழுகையும் அடுத்தடுத்து வைத்ததில் ஒரு குறிப்பு உண்டு. நீண்ட நேரம் சிரித்தால் கண்களில் கண்ணீர்த் துளிகள் அரும்பும். அது போல நீண்ட நேரம் அழுதாலும் இதழ்களில் ஒரு வித சிரிப்பு தோன்றும்.

“நீண்ட சிரிப்புக்குப் பின் / அவளுக்கு ஒரு
சின்ன அழுகை / தேவைப்பட்டது”
(ப.40)

என்ற கவிதை இவ் வகையில் குறிப்பிடத்தக்கது.

அழுகையைப் பற்றிய கவிஞரின் பிறிதொரு வித்தியாசமான கவிதை:

“யாருக்கும் தெரியாமல் / அழுதுகொண்டிருந்தவளை
யாருக்கும் தெரியாமல்
பார்த்துக் கொண்டிருந்தேன்”
(நினைவுகளின் நகரம், ப.91)

அன்புக்கும் வாசனை உண்டு!

அன்பு நெறியே தமிழர் நெறி. தொல்காப்பியர் தொடங்கி பாரதியார் வரை இந்நெறியின் உயர்வினைக் கவிஞர் பலரும் போற்றிப் பாடியுள்ளனர். ராஜா சந்திரசேகரும் தம் கவிதைகளில் அன்பின் சீர்மையினை விதந்து போற்றி-யுள்ளார். எதையும் சாதிக்கும் வல்லமை படைத்தது அன்பு. அன்பின் மென்மையான பூ ஒன்றினை மேலே வைத்தால், பாறை போன்ற வன்மையான மனமும் உடைபடும்.

“பாறை நான் / உடைபட
அன்பின் பூவொன்றை / மேல் வை”
(மீனுக்கு நீரெல்லாம் பாதைகள், ப.3)

என்பது கவிஞர் வாக்கு.

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற கருணை பொங்கும் உள்ளத்திற்குச் சொந்தகாரர் வள்ளலார். அவரது வாக்கைப் பொன்னே போல் போற்றி வாழ்வில் பின்பற்றுவது போல்,

“வன்மம் பாய்ந்து / அன்பு இறந்தது
என்று எழுதிய பின்
படபடப்பு அடங்க / நேரமாயிற்று”
(மீனுக்கு நீரெல்லாம் பாதைகள், ப.31)

எனக் கவிதை படைத்துள்ளார் ராஜா சந்திரசேகர். ‘வன்மம் பாய்ந்து அன்பு இறந்தது’ என்று எழுதிய அளவிலேயே அவரது உள்ளம் அமைதி இழந்து, உணர்வு மேலிடப் படபடக்கின்றதாம்; பதைபதைக்கின்றதாம்!

அன்புக்கு வாசனை உண்டா? உண்டு. அது நெஞ்சில் குடியிருக்கும் காதலியோ, உணர்ச்சி ஒத்த உயிர் நண்பனோ கைகுலுக்கி விடைபெறும் போது உள்ளங்கையில் எல்லாம் மணக்கும்.



“கை குலுக்கி / விடைபெறுகிறாய்
என் உள்ளங்கை எல்லாம்
உன் அன்பின் வாசனை”
(நினைவுகளின் நகரம், ப.17)

‘அனுபவச் சித்தனின் தத்துவச் சிந்தனைகள்’


வாழ்க்கை வேடிக்கை மனிதர்களுக்கு நிகழ்வுகளால் ஆனது; உணர்ச்சி வயப்படுபவர்களுக்கு வலிகளைத் தருவது; ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்குப் படிப்பினைகளைப் புகட்டுவது; சாதனையாளர்களுக்கோ வரலாறாய் அமைவது. ‘அனுபவ சித்தனின் குறிப்புகள்’ என்னும் தலைப்பில் ராஜா சந்திரசேகர் படைத்துள்ள நூல், வாழ்க்கை பற்றிய அற்புதமான அலசல்; உண்மை ஒளி வீசும் அனுபவ உண்மைகளின் அருமையான ஆவணம்; ஆழமான தத்துவச் சிந்தனைகளின் நுண்ணிய பதிவு.

“அனுபவ சித்தன் நான் / கவிதையில் கனிந்து
உருகும் உலகு”
(அனுபவ சித்தனின் குறிப்புகள், ப.85)

என்பது ஆழ்ந்திருக்கும் கவிஞரின் உள்ளப் பதிவு.

கவிஞர் தத்துவமாகச் சொல்வதெல்லாம் சத்தியம்; சத்தியமாகச் சொல்வதெல்லாம் சத்தியம்:

“வாழும் போதே / பழகு
வாழும் போதே / மரணத்தை அள்ளித் / தின்னப் பழகு”
(ப.17)

‘இன்று நீ; நாளை நான்’ என்ற முத்திரை வாசகத்தின் கவிதை வடிவம்:

“நண்பனின் / இறுதிச் சடங்கு
பார்த்துவிட்டுத் / திரும்பினேன்
என் மரணத்தை”
(ப.18)

நடைமுறைச் சிந்தனையாளர் கவிஞர் என்பதற்கான எடுத்துக்காட்டு:

“எங்கு சுற்றினால் என்ன
வந்து சேர வேண்டும் / வாழ்க்கைக்கு”
(ப.40)

கவிஞர் உணர்த்தும் வாழ்க்கைப் பாடம்:

“வலிகளைக் / கொண்டாடு
கண்ணீரில் / நிறங்கள் எடு”
(ப.66)

அன்பை ஆராதிப்பவர் கவிஞர் என்பதற்குக் கட்டியம் கூறி நிற்கும் கவிதை இது:

“மொழிகள் எதற்கு
கண் துளி / சொல்லும் அன்பு”
(ப.111)

வித்தியாசமான பார்வைக்குச் சொந்தக்காரர் கவிஞர் என்பதற்கான சான்று இக் கவிதை:

“பார்க்கத் தொடங்கினேன்
பார்த்தவைகளிலிருந்து / பார்க்காதவைகளை”
(ப.118)

‘வாழ்வில் தருணங்களும் கணங்களும் தந்து கொண்டே இருக்கின்றன என்பதை அவன் பெற்றுக் கொண்டே உணர்ந்தான்… தன்னை ஒரு அனுபவ சித்தனாக்கிய கவிதைகளின் நீட்சியாக நான் என்கிற அவன்…’ (‘நான் என்கிற அவன்…’, அனுபவ சித்தனின் குறிப்புகள், ப.8) என்னும் கவிஞரின் அனுபவப் பகிர்வு கருத்தில் கொள்ளத் தக்கது.

மைக்ரோ பதிவுகள்: சிந்தனை மின்னல்கள்

“இந்தப் புத்தகம் ஐந்து வருட எழுத்துக்களின் சேமிப்பு. ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கீச்சுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. மின்னல் போல் வெட்டும் சிந்தனை எழுத்தில் பாய்ச்சும் சிறு வெளிச்சமே இது” (‘ட்விட்டர் பறவை சத்தமிடுகிறது…’, மைக்ரோ பதிவுகள், p.xii) என்னும் கவிஞரின் அனுபவப் பகிர்வுடன் வெளிவந்திருக்கும் நூல் ‘மைக்ரோ பதிவுகள்’. வாய்விட்டுச் சிரிக்கவும் வித்தியாசமாகச் சிந்திக்கவும் மனமுருகிச் சிலிர்க்கவும் வாழ்வு மேம்பட்டுச் சிறக்கவும் வைக்கும் சிந்தனைகள் அங்கிங்கு எனாதபடி இந் நூல் முழுவதும் மண்டிக் கிடக்கின்றன. அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க சில இதோ.

1. “ வியர்வையின் கட்டளை ‘இன்னும் உழை’.” (ப.45)
2. “ கொட்டிக் கிடக்கிறது உன்னிடம். ஏன் கேட்கிறாய் பிறரிடம்?” (ப.69)
3. “ யாருக்கும் நேரமில்லை. ஆனால் எல்லோரிடமும் நேரமிருக்கிறது.” (ப.119)
4. “ பல்லாங்குழி விளையாட அழைக்கிறாள் பாட்டி.
மடிக்கணினியில் கார் ஓட்டுகிறாள் பேத்தி.” (ப.146)
5. “ என் கடிகாரம் பேசும் இரண்டு வார்த்தைகள்
‘நிற்காமல் ஓடு’.” (ப.162)
6. “ உயிருடன் இருப்பது வேறு. உயிர்ப்புடன் இருப்பது வேறு.” (ப.186)
7. “ திறமை பெற்றுத் தரும். பொறுமை கற்றுத் தரும்.” (ப.200)
8. “மரம் வரைந்த குழந்தை எழுதி வைக்கிறாள்:

‘இந்த மரத்தையாவது வெட்டாதீங்க’.”
(ப.204)

கவிஞரே குறிப்பிடுவது போல், ‘வேறு வேறு தருணங்கள் வேறு வேறு நிகழ்வுகள். எல்லாம் ஒன்றாய்க் குவிந்து சிறுசிறு வாக்கியங்களில் விரிந்திருக்கின்றன” (‘ட்விட்டர் பறவை சத்தமிடுகிறது…’ மைக்ரோ பதிவுகள், p.xiii) இந் நூலில்.

‘நம்மைத் திறக்கும் புத்தகங்கள்!’


ராஜா சந்திரசேகரின் ‘மைக்ரோ பதிவுக’ளில் இடம் பெற்றிருக்கும் ஓர் அழகிய சித்திர மின்னல்:

“புத்தகம் நம்மைத் திறக்கிறது” (ப.45)

கவிஞரின் கூற்று முற்றிலும் சரி தான்; அவரது புத்தகங்களும் நம்மைத் திறக்கின்றன; நம் ஆளுமையைச் செதுக்கி நம்மை மேம்படுத்துகின்றன; மண்ணில் நல்ல வண்ணம் வாழும் வழிமுறையினைப் புலப்படுத்துகின்றன.


'தமிழாகரர்' முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்