இருளர் பழங்குடி மக்களின் மருத்துவ முறைகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா


மிழ் இலக்கியம் என்று இங்கு குறிப்பிடப்படுவது சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரையிலான எழுத்திலக்கியங்களையேயாகும். நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள், பழமொழிகள், விடுகதைகள், மருத்துவ முறைகள், தொன்மங்கள் போன்றவையும் நாட்டுப்புறத்தில் அடங்கும்.

தமிழகக் கிராமப்புற மக்களின் வழக்காறுகளை ஆராய்ந்தால் அவர்கள் பல்வேறு கால நிலைகளில் வழக்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்வியல் முறைகள் நமக்கு கிடைக்கின்றன. நாட்டுப்புற மக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் புதிய குடியிருப்புகளை அமைத்துக்கொண்டு வாழ்வதுமான போக்கினை உடையவர்கள் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு இடம்பெயரும் மக்கள் தங்களின் பழைய மரபுகளையும் பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் அப்படியே பின்பற்றுவதையும் இடத்துக்குத் தக்க மாற்றங்களையும், வாழ்க்கை முறைகளையும் மருத்துவ முறைகளையும் அப்படியே கையாண்டு வருவதைக் களஆய்வில் சேகரிக்கப்பட்டன. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து சென்ற பழங்குடி மக்களின் வாழ்க்கை முறைகளையும், மருத்துவ முறைகளையும் வாய்மொழிச் செய்திகள் உண்மையானவையா என்பதைக் களஆய்வில் ஆதாரங்களுடன் ஆராய்வதே இவ்வாய்வின் முதல் நோக்கம்.

களமும் ஆய்வும்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் பண்ணைக்காடு கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட களப்பணியின் போது கூறப்பட்ட செய்திகளை இந்தக் கட்டுரையில் காணலாம். இந்தக் கிராமத்தில் இருளர் பழங்குடி மக்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு குடிபெயர்ந்து வந்தனர். தற்போது 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதுபோக பலியர் பழங்குடி மக்களும் வசித்து வருகின்றனர்.

களப்பணி

2018 மே மாதத்தில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது. பழங்குடி மக்கள் மிகுதியாக வாழும் இந்த ஊரில் பிற மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இருளர் மருத்துவம் இனவரைவியல் ஆய்வுகளில்
(Ethnographic Studies) உடல் சார்ந்த மருத்துவமும், நோயின்பால் பண்பாடு ஏற்படுத்தியுள்ள கருத்துருவாக்கங்களும் இன்றியமையாத இடத்தைப் பெறுகின்றன. இவ்வாறாக சில நோய்களும், பழங்குடி சமூகத்தின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் தன்மையுடையன. ஒவ்வொரு காலகட்டங்களிலும், பண்பாட்டிலும் நோய்கள் குறித்த கருத்துருவாக்கங்கள் பல்வேறு மூலங்களைக் கொண்டுள்ளன. இவ்வாறு பல்வேறு கருத்துருவாக்கங்களுடன் உள்ள நோய்களுக்கு மருத்துவம் பார்த்துவரும் இனக்குழுவில் இருளர் பழங்குடிகளும் அடங்குவர். இருளர் பழங்குடி மக்களில் ஆண்களும், பெண்களும், நாட்டுப்புற மருத்துவத்தை அறிந்துள்ளனர். இவர்கள் கைநாடிப் பிடித்தே நோயையும், அதன் தன்மையையும் அறிந்து மூலிகைப் பொருட்களையும், இறைச்சிகளையும் கொடுத்து மருத்துவம் பார்த்து வந்தனர்.

இம்மருத்துவம் மனிதர்களுக்கு மட்டும் செய்யப்படும் மருத்துவம் அல்ல. கால்நடைகளுக்கும், பறவைகளுக்கும் இம்மருத்துவ முறைகள் செய்யப்பட்டு வந்தன என்பது களஆய்வில் கூறப்பட்டன. இருளர் மருத்துவம் மனிதர்களுக்காகவும், மிருகங்களுக்காகவும் தனித்தனியே செய்கின்றனர். இம்மருத்துவ முறைகள் மக்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், சமூக அமைப்போடும் பின்னிப் பிணைந்து காலந்தோறும் நாட்டுப்புற மருத்துவம் பல்வேறு பெயர்களுள் வழங்கி வருவதை நாம் அறிய முடிகிறது. இருளர்கள் தங்கள் மருத்துவ முறைகளை இருளர் மருத்துவம் என்றே அழைத்து வந்தனர்.

இருளர் மருத்துவ வகைகள்

உலக அரங்கில் பழங்குடி மருத்துவம் பற்றி பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்தந்த இடங்களின் சீதோஷ்ண நிலையில் கிடைக்கக்கூடிய மூலிகைகளைக் கொண்டு இருளர்கள் நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அவரவர் தெய்வ நம்பிக்கையின் அடிப்படையிலும் நோய்களைக் குணப்படுத்தி வருகின்றன. இவ்வாறு மக்களின் நோய் தீர்க்கும் மருத்துவத்தை நாட்டுப்புறவியல் அறிஞர்கள் பல வகையில் வகைப்படுத்தியுள்ளனர். அறிஞர் கூற்று

டான்யோடர்
(Danybder) என்ற மேலைநாட்டறிஞர் நாட்டுப்புற மருத்துவத்தை இரண்டு வகையாக வகைப்படுத்துகிறார்.

 இயற்கை மருத்துவம்
(Natural  Medicine)
 மத மாந்திரீக மருத்துவம்
(Magcb-religbus folk medicine) ஆகும். மேலும்
 மூலிகை மருத்துவம்
 இதர பொருட்கள் என இரண்டாக வகைப்படுத்தி மூலிகை மருத்துவத்தில் வேருக்குத்தான் உலக முழுக்க முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று சாந்தி என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

இருளர் மருத்துவ முறையில்

 செடி கொடிகள்
 தாதுப்பொருட்கள்
 விலங்கின மருத்துவம் என மூன்று வகைப்படுத்துகின்றனர்.

மேலும்

 மூலிகை மருத்துவம்
 நம்பிக்கை மருத்துவம்
 இறைச்சி மருத்துவம் என வகைப்படுத்துகின்றனர். மூலிகை மருத்துவம்(பத்திய முறை)

இருளர் பழங்குடி மக்கள் அதிக அளவில் மூலிகை மருத்துவத்தையே கையாளுகின்றனர். இந்த மருத்துவ முறைகளில் மனிதர்கள், குழந்தைகள், விலங்குகள் என உள், வெளி எனப் பிரித்து பத்தியமாகக் கொண்டு மருந்து கொடுத்து குணப்படுத்துகின்றனர்.

                                           மூலிகை மருத்துவம்


நம்பிக்கை மருத்துவம்

இருளர் பழங்குடி மக்கள் அவரவர் தெய்வங்களை மனதில் நினைத்து மனதார வேண்டி மருத்துவம் செய்கின்றனர். சில மூலிகைகளைப் பத்தியமாகக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு அவர்களின் தெய்வங்களை முணுமுணுத்தபடியே வேண்டுவர். பின் அதனைப் பிறருக்கு கொடுத்து சோதித்து பார்ப்பார்கள். பின் அதனை நோய்களுக்குக் கொடுத்துக் குணப்படுத்துவர்.
 



இருளர் மக்கள் இன்னும் நம்பிக்கை முறைகளைக் கையாண்டு வருவதைக் காண முடிகின்றது.

மந்திரித்தல் (பேய் ஓட்டுதல் முறை)

இருளர்கள் இன்னும் மந்திரித்தல் முறையினைக் கையாளுகின்றனர். இவர்கள் இந்த முறையினை அதிகமாகப் பெண்களுக்குத்தான் பயன்படுத்துகின்றனர்.

சமயச் சடங்குகள்

சமயச் சடங்கு முறைகளை அதிகமாக, பருவமடைந்த பெண்களுக்குத் தான் செய்கின்றனர்.

இறைச்சி மருத்துவம்

இருளர் பழங்குடி மக்கள் இறைச்சி மருத்துவம் என்ற ஒன்றை ஆதிகாலம் தொட்டு கையாண்டு வந்தனர்.
 



இந்த மருத்துவ முறையில் இரண்டுவிதமான மருத்துவத்தை இருளர்கள் பயன்பாட்டில் கொண்டிருந்தனர். ஏனெனில் அவர்கள் இறைச்சிகளைப் பதப்படுத்தியும், காய வைத்தும், அதில் எடுக்கும் எண்ணெயைக் கொண்டும் மருத்துவ முறைகளைச் செய்துவந்தனர். இந்த மருத்துவத்தின் மூலமாக அதிகமான மனிதர்கள் குணமடைந்தனர் என்பது நேரடியாகக் களஆய்வில் அறிந்த உண்மையாகும்.

சோதனைகள்

பழங்குடி மக்களாகிய இருளர் மருத்துவர்கள் ஒரு மூலிகையைச் சுயபரிசோதனை செய்து அதில் தானோ, பிறரோ குணம் அடைந்திருந்தால் மட்டுமே தொடர்ந்து அந்த மூலிகையை மருத்துவத்திற்குப் பயன்படுத்துவர். பிறர் சொல்வதையும், பிறரிடம் கேட்பதையும் கொண்டு உடனே மருத்துவம் பார்ப்பதில்லை. குழந்தை மருத்துவம்

இருளர்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை மூலிகை மருந்துகளைக் கொண்டே குணப்படுத்துவர்.
கவிஞர் சுரதா, பச்சிலை மருந்து தடவியே குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை நாட்டுப்புறங்களில் குணப்படுத்தினார்கள் என்பதை ஒரு கவிதையின் மூலமாகச் சொல்லியிருக்கிறார்.

'கிளிப்பேச்சு பேசும்
குழந்தைகள் ஊர்ந்தும்,
நடந்தும், தவழ்ந்தும்
மண்தரை முதல் வீட்டுப் படிகளில்
காலும் கையும் சேற்றைக் கிளறும்
சொரியும், சிரங்கும் உடம்பெங்கும்
பச்சிலை மருந்து தடவினால்
விரைவாய் நோய்யும் குணமாகும் அன்று'

இந்தக் கவிதைக்கு இணங்க இருளர்களின் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் மருத்துவமனைக்குச் செல்வது கிடையாது. இருளர்களின் வீட்டிலேயே குழந்தைபிறப்பு நிகழ்கிறது. இதனால் குழந்தைக்கு வரும் நோய்களுக்கு இவர்களே மருத்துவம் பார்ப்பர்.

பழங்குடி அல்லாதவர்கள்


இருளர்களின் குழந்தைகள் மட்டுமின்றி பிற சமூகங்களில் உள்ள குழந்தைகளுக்கும் மருத்துவம் பார்ப்பர். மருந்து கொடுக்க முடியாத பிறந்த குழந்தையின் தாய்களுக்கு மருந்து கொடுத்து பத்தியமிருக்க தாய்ப்பாலின் வழியாக நோய் நீங்கும்.

அக்கி

அக்கி நோயால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அக்கியால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இருளர்கள் பின்வரும் மருத்துவ முறைகளை மேற்கொள்கின்றனர்.

அக்கி நோயை இருளர்கள் மாரியம்மன் என்கின்றனர். இந்நோய்க்கு நெய்சட்டிக் கீரை அல்லது அக்கிப்பூண்டு இவற்றில் ஒன்றின் செடியைக் கஸ்தூரி மஞ்சளோடு சேர்த்து அரைத்து அக்கியுள்ள இடத்தில் மூன்று நாட்கள் தடவி வந்தால் அக்கி கொட்டிவிடும். ஏனெனில் பசலைக்கீரை குளிர்ச்சியுடையது. அக்கி சூட்டினால் வருகிறது. உடல் குளிர்ந்தவுடன் அக்கி கொட்டிவிடும்.

பசலைக்கீரை, வேப்பிலைக்கொழுந்து ஆகிய இரண்டையும் அரைத்து தேங்காய் எண்ணெயைக் கலந்து அக்கிமீது தடவி நண்பகலில் குளிர்ந்த தண்ணீரில் சோப்பு, சீயக்காய் உபயோகிக்காமல் மூன்று நாட்கள் குளித்து வந்தால் அக்கி கொட்டிவிடும். பின்பு இந்த நோய் குணமாகிவிடும்.

கக்குவான்

கக்குவான் வந்த இருளர் குழந்தைகளின் இடுப்பில் புங்கன் விதையை மஞ்சள் நூலில் துளையிட்டு கண்ணியம்மனை வேண்டி கட்டினால் கக்குவான் நோய் குணமடையும். அவித்த ஆமையின் வயிற்றுக்கறியைக் கொடுத்து அவ்வோட்டில் இருக்கும் தண்ணீரை அரை டம்ளர் குடித்து வந்தால் இரண்டு நாட்களில் கக்குவான் குணமாகும்.

முதலைக்கறியை மஞ்சள் நூலினால் கட்ட 3-5 நாட்களில் சரியாகும் என்கின்றனர்.

பெண்களுக்கான மருத்துவ முறைகள்

ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் ஏற்படும் நோய்கள் பல பொதுவாக இருக்க பெண்களை மட்டும் சில நோய்கள் தாக்குகின்றன. கர்ப்பம் தரிக்கும் மிக உன்னதமான வாய்ப்பைப் பெற்றதால் பலவகையான நோய்கள் பெண்களைத் தாக்குகின்றன.

பருவம் அடைதல்

தாய்மை அடைதல் ஒரு பெண்ணிற்கு எவ்வளவு முக்கியமானதோ அதைவிடப் பருவம் அடைதல் முக்கியமானதாகும். இருளர்கள் பூப்படையாதப் பெண்களை புந்தியறியவில்லை என்று கூறுவர். பருவம் அடைவதற்கான வயதைக் கடந்தும் ஒரு பெண் பருவம் அடையாமல் இருந்தால் அப்பெண்ணிற்கு மலைவேம்போடு கொம்பு மஞ்சள் சிறிது சேர்த்து அரைத்து அதிகாலையில் பிறர் முகம் பாராமல் கழுத்தளவு தண்ணீரில் நிற்கவைத்து மூன்று நாட்கள் மூன்று உருண்டைக் கொடுக்கப்படும். இவ்வாறு கொடுத்த மாதத்திலிருந்து மாதாமாதம் வயதுக்கு வருவதற்கான வயிற்று வலி தோன்றும். இவ்வாறு வலி தோன்றினால் மீண்டும் மலைவேம்பு கொடுப்பார்கள். மலைவேம்பு கொடுத்த 3-4 மாதங்களில் அந்தப் பெண் பூப்படைவாள்.

கருத்தரித்தல்

இருளர்கள் கருத்தரிக்கப் பின்வரும் மருத்துவ முறையை மேற்கொள்கின்றனர். மாதவிடாய்க் காலங்களில் அதிகாலையில் குளித்துவிட்டு மலைவேம்பு, பூண்டு, மிளகு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காய் அளவுக்கு உருண்டை பிடித்து உண்ண வைப்பர். இவ்வாறு மூன்று நாட்கள் உண்டு வந்தால் கர்ப்பம் தரிக்க அதிக வாய்ப்புண்டு.

வயிற்றில் பூச்சிகள் இருந்தாலும் கர்ப்பம் தரிக்காமல் இருக்கும். கசப்புப் பொருள்களை மேற்கண்டவற்றை உண்டுவந்தால் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழிந்து கர்ப்பம் தரிக்க வாய்ப்புண்டு என்கின்றனர்.
பெண்களுக்கு வயிற்றில் புண் இருந்தாலும் கருத்தரிக்க முடியாது. இதற்கு புங்கன் வேரின் பட்டையைச் சீவி, தேங்காய்ப்பூ போல் வரும் அதை உள்ளங்கையில் பிழிந்து உள்ளுக்குக் கொடுத்தால் வயிற்றில் இருக்கும் புண் ஆறுவதற்குக் கொடுப்பார்கள். புங்கன் பால் ஜன்னி, கை, கால், வலி ஆகியவற்றைக் குணமாக்கும் தன்மை கொண்டது.

பெண்களுக்கான இடுப்பு வலி, கழுத்து வலி

குழந்தை பெற்ற பெண்களுக்குச் சத்துக் குறைவால் இடுப்புவலி வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இதற்கு முடக்கத்தான் கீரையோடு பூண்டு, மிளகு, கடுக்காய் ஆகியவற்றைச் சேர்த்துக் குழம்பு வைத்து சோற்றில் உண்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

மோடிக்கட்டையோடு புளி, மிளகாய் ஆகியவற்றோடு போதுமான அளவுக்கு வைத்து அரைத்து தக்காளி, கத்தரிக்காய், முருங்கைக்காய் போட்டு குழம்பு வைத்துக் கொடுத்தால் கழுத்து வலி நீங்கும். புதுப்பல்லாவில் தேவையான தண்ணீரில் பொடவநாரின் தழையைக் கொதிக்க வைத்துக் காலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தாலும் கழுத்துவலி குணமாகும்.

கண் தொடர்பான நோய்கள்

மனிதனின் மிகமிக முக்கியமான உறுப்புகளில் கண்களும் ஒன்றாகும். நம்மை உலகத்துக்குக் காட்டும், உலகத்தை நமக்கே காட்டும் கண்ணில் பல வகையான நோய்கள் தாக்குகின்றன. கண்ணில் ஏற்படும் நோய்களுக்கு இருளர் பழங்குடி மக்கள் பலவகையான முறைகளில் மருத்துவம் செய்கின்றனர். கண்வலி
கண்வலி அனைவரையும் தாக்கும் நோயாகும். இந்த நோயை இருளர்கள் அம்மை நோய் போன்றே கண்வலியை மாரியம்மன் நோய் என்பார்கள். இதற்குத் தாய்ப்பாலைக் கண்ணில் நான்கு வேளை விட்டுக் குணமடையச் செய்வார்கள்.

கண்ணில் அதிகமான வலி இருந்தால் வெள்ளாட்டுப் பாலை வடிகட்டி காலை, மாலை என இரண்டு வேளையும் கண்ணில் விட்டு கண்களை மூடி ஓய்வெடுத்தால் கண்வலி குணமடையும் என்பார்கள். மேலும் மஞ்சளை வெள்ளைத் துணியில் நனைத்து கண்மேல் ஒத்தடம் கொடுத்தாலும் கண் வலி நீங்கும். இந்நோயை மாரியம்மன் நோய் என்பதால் மஞ்சள் துணியைக் கண்ணிற்கு ஒத்தடம் கொடுப்பதை ஐதீகம் என்கின்றனர்.

மாலைக்கண் நோய்

கண் நோய் போன்றே வயது பாராமல் அனைவரையும் தாக்குவது மாலைக்கண் நோய் ஆகும். இதற்கு மாதுளம் கொழுந்து, கொய்யாக் கொழுந்து ஆகிய இரண்டையும் காலையில் உண்டுவந்தால் இந்நோய் நீங்கும். ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த நோய் இருந்தால் ஒரு வாரம் உண்டுவருவது நல்லது.
மேலும் முருங்கைப் பூவை நல்லெண்ணெயில் வதக்கி காலையில் வெறும் வயிற்றில் தினமும் நான்கு நாட்கள் உண்டு வந்தால் கண் நன்றாகத் தெரியும். வருடக்கணக்கில் இருந்தால் இரண்டு வாரங்கள் உண்டுவருவது நல்லது.

தலைவலி

தலைவலி வந்தால் தாய்ப்பாலை வெள்ளைத் துணியில் நனைத்துப் பத்துப் போட்டால் தலைவலி குணமாகும். ஆண்களுக்குத் தலைவலி வந்தால் பெண் குழந்தை பெற்றத் தாயிடமும், பெண்களுக்குத் தலைவலி வந்தால் ஆண்குழந்தை பெற்றத் தாயிடமும் தாய்ப்பாலை வெள்ளைத் துணியில் நனைத்து பத்துப் போட்டால் தலைவலி குணமாகும்.

நாய்க்கடி

இருளர் பழங்குடி மக்கள் நாய்க்கடி நோய்களுக்கு மிகக் கவனமாக மருத்துவம் பார்த்தனர். ஏனென்றால் நாய்க்கடியைச் சரியாகக் கவனிக்காமல் விட்டுவிட்டால் அதனுடைய விஷம் முற்றி அவர் இறக்கவும் நேரிடும் என்பதால் மிகக் கவனமாக மருத்துவம் பார்த்தனர். நாய்க்கடி, பாம்புக்கடியைப் போன்றே மிகவும் இருளர் மக்களை அச்சப்பட வைத்தன.

இருளர்கள் நாயுருவிக் காயைப் பறித்து வத்து காயவைத்து அதைக் உலுக்கி அதனுள் இருக்கும் மிகச் சிறிய விதையை நுணுக்கி தேவையான அளவு நல்லெண்ணெயில் ஒரு தேக்கரண்டி கலக்கிக் கொடுக்கின்றனர். எருக்கம்பாலை நாய் கடித்தவுடன் கடித்த இடத்தில் அடித்தால் விஷம் உடலில் ஏறாது என்கின்றனர் இருளர் பழங்குடியினர்.

இரத்த சோகை

இருளர் பழங்குடி மக்கள் மூன்று வகையான இரத்தசோகை இருப்பதாகக் கூறுகின்றனர்.

 இரத்த சோகை
இரத்தச்சோகை பெரும்பாலும் சத்துக்குறைவினால் ஏற்படுகின்றது.

 வெள்ளைச் சோகை
வெள்ளைச்சோகை வந்தால் முகம் வெண்மையாகக் காணப்படும்.

 ஊது சோகை
ஊதுசோகை வந்தால் கை, கால் வீங்கி சோகையாகக் காணப்படும்.

இவ்வாறு சோகையோடு உள்ளவர்களுக்கு இருளர் பழங்குடி மக்கள் பின்வரும் மருத்துவ முறைகளைக் கொள்கிறார்கள்.

குணமாக்கும் முறைகள்

நீர்த்துளின் கீரையை அலசி, பூண்டு, மிளகு, வெள்ளை வெங்காயம், பச்சைப்பயிறு, புளி போன்றவற்றைப் புதுச்சட்டியில் வேகவைத்து அரை உப்போடு கடைந்து தாளிக்காமல் உண்பர். முள்ளிச் செடியைக் காயவைத்து புதுச்சட்டியில் கொளுத்தி அந்தச் சாம்பலை வெள்ளாட்டுச் சிறுநீரில் குழைத்து உடம்பு முழுக்கத் தேய்ப்பார்கள்.

இந்தக் காலங்களில் அகத்திக்கீரை, கொள்ளு, பூசணி, சுரைக்காய், மீன், கருவாடு, கோழி ஆகியவற்றை உணவில் சேர்க்காமல் தவிர்த்து அசைவ உணவான வெள்ளாட்டுக் கறியையும் இறாலையும் சேர்த்துக் கொள்வார்கள்.

நம்பிக்கை மருத்துவம்

சமயம் சார்ந்த சடங்குகளை நிகழ்த்துவதன் மூலம், நோய்கள் குணமடைகின்றனர் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் மருத்துவத்தை நம்பிக்கை மருத்துவம் எனலாம். அதன் அடிப்படையில் இருளர்கள் தங்களுக்கும், பிறருக்கும் ஏற்படும் நோய்களைப் போக்கச் செய்யப்படும் சமயம் சார்ந்த மருத்துவமே நம்பிக்கை மருத்துவம் ஆகும். வகைகள்

இருளர்கள் நம்பிக்கை மருத்துவத்தை மூன்று வகையாகப் பிரிக்கின்றனர். அவை,




இருளர் பழங்குடி மக்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு நோய்கள், சோடையாக இருந்தால் மந்திரித்தல் மூலமாக நோய்களைக் குணப்படுத்தி வந்தனர். குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் வருகின்ற காய்ச்சல், பேதி, செரிமானம், மாந்தம், தோஷம் போன்ற நோய்களை மந்திரித்து குணமாக்கி வந்தனர். இருளர் பழங்குடி மக்களில் ஒருவராக இருக்கும் பூசாரியும், சில பெரிய வீட்டுக்காரர்களும் மந்திரிப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் வௌ;வேறு முறைகளில் மந்திரித்து நோய்களைக் குணப்படுத்துவர்.

வேப்பிலை அடித்தல்

வேப்பிலை அடித்தல் என்பது மந்திரித்தல் முறையில் ஒன்றாகும். பெண்கள், குழந்தைகளுக்கு பேய், பிசாசு, காத்துக்கருப்பு என இருந்தால் வேப்பிலை அடித்து விரட்டுவார்கள். பின் புளியமரத்தில் ஒரு பெரிய ஆணியை அடித்து சிறிது தலைமுடியை சுற்றி வைத்து பேயை அங்கே கட்டி வைப்பதாகச் சொல்லி திரும்பிப் பார்க்காமல் வீட்டை நோக்கி வந்துவிடுவார்கள்.

துணியால் மந்திரித்தல்

இருளர் பழங்குடி மக்களில் ஒருவரான பெரியவர் மேற்சொன்னவாறு பேய், பிசாசு என பிடித்திருந்தால் வெண்மையான துணியின் நுனிப் பகுதிகளை வாய் எச்சிப்படுத்தி அந்த நபரைப் பார்த்து 3,5,7,9 முறைகள் என அடிப்பர். கடைசியில் கருமம் போ எனச் சொல்லி அந்த நபரை திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்கு அழைத்துப் போவார்கள். இவ்வாறு செய்வதன் மூலமாக குணமாக்கப்படுகிறது என்பது ஐதீகம்.

தண்ணீரால் மந்திரித்தல்

இருளர் பழங்குடி மக்களில் ஒருவரான பெரியவர் (அல்லது) பூசாரி என்பவர், பேய், பிசாசு பிடித்த நபரை நிறைசெம்பு தண்ணீர் கொண்டு வந்து அதில் சிறிது தண்ணீரை எடுத்து மூன்று முறை எதிரில் உள்ள நபரின் முகத்தில் தெளிப்பர். பின்பு ஏதோ மந்திரம் செய்வார். பின்பு அந்த நீரை அவரின் வீட்டுக் கூரையில் ஊற்றிவிட்டு அப்படியே வீட்டுக்குள் போய் செம்பை குப்புற வைத்துவிடுவர். இவ்வாறு செய்வதன் மூலமாகக் குணமாக்கப்படுகின்றனர் என்பதை நம்புகின்றனர்.

தொகுப்புரை:

இனவரைவியல் கோட்பாட்டின்படி இருளர் பழங்குடி மக்கள் பலவகையான மருத்துவமுறைகளை மேற்கொண்டிருந்ததைக் களஆய்வின் மூலமாக அறிந்தவையாகும்.
காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப மக்களின் பழக்க வழக்கம், செயல்பாடுகள், வாழ்க்கை முறைகள் எல்லாம் மாறும்போது அவர்களின் அதிகாலை மருத்துவமுறைகளை இன்னும் கையாண்டு வருவதைக் காணும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது.

மாற்றங்கள் எப்படியாக இருந்தாலும் இருளர் பழங்குடி மருத்துவ முறைகளை இன்னும் சேகரித்து ஆவணப்படுத்தினால் நாட்டுப்புற இலக்கியத்திற்கு நாம் செய்யும் பெரும் பேறாகும் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை எனலாம்.

தகவலாளர் பட்டியல்
பெயர் : கென்யர்
வயது : 72
பால் : ஆண்
சாதி : இருளர்
கல்வி : இல்லை
தொழில்: கூலி வேலை
முகவரி: காலனி, பண்ணைக்காடு, கொடைக்கானல் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.

பெயர் : இருளாய்
வயது : 65
பால் : பெண்
சாதி : இருளர்
கல்வி : இல்லை
தொழில்: கூலி வேலை
முகவரி: காலனி, பண்ணைக்காடு, கொடைக்கானல் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்
 

 

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி, கோவை-641 035

 

 





 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்