தஞ்சை சி.நா.மீ.உபயதுல்லாவின் ‘எண்ணப் பூக்கள்’

பேராசிரியர் இரா.மோகன்

“ஐயகோ! சிறிது உண்மை விளங்குமுன்,
ஆவிநையத் துயருறல் வேண்டுமே!
பையப்பைய ஓர்ஆமை குன்றுஏறல்போல்
பாருளோர் உண்மை கண்டுஇவண் உய்வரால்!”


என்னும் கவியரசர் பாரதியாரின் வாக்கு, வாழ்வில் ஒருவர் உண்மையை விளங்கிக் கொள்வதில் எதிர்கொள்ள நேரும் இடர்ப்பாட்டினைத் தெளிவுபட உணர்த்தும். இங்ஙனம் தம் நீண்ட, நெடிய தனி வாழ்விலும் அரசியல் வாழ்விலும் உணர்ந்து தெளிந்த விழுமிய வாழ்வியல் உண்மைகளைத் தஞ்சை சி.நா.மீ.உபயதுல்லா, ‘எண்ணப் பூக்கள்’ என்னும் அழகிய தலைப்பில் ஒரு நூலாக வடித்துள்ளார். ஓலைச்சுவடி வடிவில் அமைந்த அந்நூல், பயில்வோர் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் வண்ணம் வெளியிடப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

1. பொது வாழ்க்கைக்கான தகுதி

பொது வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைத் தகுதி ஒன்று உண்டு.

“உன் முகத்தில் காறி உமிழ்ந்த போதும்
அதைத் துடைத்து விட்டு / சிரித்துக் கொண்டு செல்வாயானால்
உனக்கு ஞானம் கிட்டிவிட்டது.
நீ பொது வாழ்க்கைக்குத் / தகுதியானவன் ஆவாய்.”
(ப.90)

என அதனைக் குறிப்பிடுகிறார் உபயதுல்லா. இதுவே ‘ஞானம்’ என்கிறார் அவர்.

2. உறவுகள் உடைபடாமல் இருக்க…

வாழ்க்கையில் உறவுகளைப் பேணுவது என்பது மிகவும் இன்றியமை-யாதது. அதற்குப் பெரிதும் தேவைப்படுகின்ற உயிர்ப் பண்பு பொறுமை – சகிப்புத் தன்மை.

“உறவுகள் உடைபடாமல் இருக்க
இசைந்து கொடுக்கும் தன்மை வேண்டும்.
பொறுமை – சகிப்புத் தன்மையால் தான் / இசைவு உண்டாகும்.”
(ப.94)

‘ஒருவர் பொறை இருவர் நட்பு’ என்னும் ஆன்றோர் வாக்கு இங்கே நினைவுகூரத் தக்கது.

3. மனித மனம் மட்டும் மேம்படவில்லை!

மனிதன் புற வளர்ச்சியில் வானளாவ உயர்ந்து விட்டான்; ஆனால், அக வளர்ச்சியிலோ இன்னமும் அவன் அடிமட்டத்திலேயே இருக்கிறான்; அவனது மனம் மட்டும் மேம்பாடு அடைய மாட்டேன் என மறுதலித்து, மல்லுக்கட்டி நிற்கிறது. இந் நிலையை எண்ணி,

“அறிவியல், தொழில் நுட்பம், போக்குவரத்து,
வாழ்க்கை, வசதி, நுகர்வன, துய்ப்பன
எல்லாம் மேம்பட்டுள்ளன. / மனித மனம் மட்டும் மேம்பாடு
அடைய மாட்டேன் என்கிறதே! என் செய்வது?”
(ப.71)

என வருந்துகிறார் உபயதுல்லா.

4. எது சிறந்த வாழ்க்கை?


சி.நா.மீ.உபயதுல்லாவின் கருத்தியலில் சிறந்த வாழ்க்கைக்கான இலக்கணம் இதுதான்:

“அழுது கொண்டே பிறந்து, / மறையும் போது பலர் அழுமாறு
மறைதலே / சிறந்த வாழ்க்கை.”
(ப.79)

5. நல்ல வாழ்வு

ஒருவர் எல்லோருக்கும் நல்லவராக இருந்து விட முடியாது; எல்லோரையும் நிறைவு செய்யவும் இயலாது. வாழ்வில் உற்றார் உறவினரில் நாம் விரும்புகின்றவர்களும் இருப்பர்; நம்மை விரும்புகின்றவர்களும் இருப்பர். எனவே, அவரவர் பண்பினை அறிந்து கொண்டு, அனைவருடனும் இசைந்து வாழ்வதே நல்ல வாழ்வு ஆகும்.

“யாராலும் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது.
நம்மைப் பிடிக்காதவர்களும் இருப்பர்.
எல்லாரோடும் அவர்களின் தன்மைக்கேற்ப புரிந்து - பொருந்தி
வாழ்வதே நல்ல வாழ்வாகும்”
(ப.36)

என்பதே உபயதுல்லாவின் கருத்து.

6. குறை காண்பதில் மட்டும்…

“குறைகளை எங்களிடம் கூறுங்கள்; நிறைகளை மற்றவர்களிடம் கூறுங்கள்” என்ற வாசகம் உணவு விடுதிகளில் எழுதிப் போடப்பட்டிருப்பதைக் காணலாம். ஆனால், நடைமுறை அனுபவமோ பெரும்பாலும் வேறு வகையாக இருக்கும். உபயதுல்லா குறிப்பிடுவது போல்,

“தனி மனிதர்களும் சரி, சமுதாயமும் சரி,
ஒரு மனிதனிடம் உள்ள நிறையைப்
பார்த்து மகிழ்வதில்லை; பாராட்டிப் பேசுவதில்லை.
குறை காண்பதில் மட்டும் / கண்ணும் கருத்துமாக இருக்கிறது.”
(ப.72)

7. கடன் இல்லாத வாழ்வு

‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பார்கள். ‘நண்பர்களுக்குக் கடன் கொடுக்காதீர்கள். கடனும் திரும்ப வராது; நட்பும் முறிந்து விடும்’ என்பது சான்றோர் அனுபவ மொழி. உபயதுல்லாவின் கண்ணோட்டத்திலும் கடன் இல்லாத வாழ்வே சிறந்தது. ஒருவருக்குக் கடன் கொடுப்பதை விட, முடிந்த உதவியைச் செய்வதே என்றும், எப்போதும் நல்லது; பாதுகாப்பானதும் கூட.

“கடன் இல்லாத வாழ்வே / சிறந்தது;
கடன் கொடுப்பதை விட / முடிந்ததை உதவுவது நல்லது”
(ப.57)

8. கவலையை உதறி எறி!


‘கவலைப்படுதலே கருநரகம்; கவலையற்றிருத்தலே முத்தி’ என்பார் கவியரசர் பாரதியார். ‘கவலையே போ, போ, போ!’ என்று மூன்று முறை முழங்கினால் கவலை விட்டு விலகி விடுமா? சரி, கவலையை எப்படித் தான் போக்கிக் கொள்வது? உபயதுல்லா காட்டும் வழி இதோ!

“கவலையைச் சுமந்து / என்ன பயன்?
உதறி எறி! / சவாலாக ஏற்றுக்கொள்!”
(ப.29)

9. மனிதனை மனிதன் ஆக்குவது


அடுத்தவர் செய்யும் உதவிகளாலும் தானே ஏற்படுத்திக் கொள்ளும் வசதிகளாலும் ஒரு மனிதன், மனிதன் ஆவதில்லை; மேம்படுவதில்லை. அவனது ஆளுமையைச் செதுக்குவன, மனத்தைப் பண்படுத்துவன வாழ்வில் அவன் எதிர்கொள்ளும் தடைகளும் துன்பங்களுமே.

“மனிதனை மனிதன் ஆக்குவது, / மேம்படுத்துவது -
உதவிகளும், வசதிகளும் அல்ல.
இடையூறுகளும், துன்பங்களுமே!”
(ப.5)

அதனால் தான், ‘இடுக்கண் வருங்கால் நகுக!’ என அறிவுறுத்தினார் வள்ளுவர் பெருமான்.

10. ‘இன்று என்ன புதிய செய்தி அறிந்து கொண்டோம்?’


வாழ்க்கைக்குப் பொருள் தேவை தான்; ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பதும் நடைமுறை உண்மை தான். ஆனால், வாழ்வதிலும் பொருள் இருக்க வேண்டும். அல்லும் பகலும் பொருள் ஈட்டுவதிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டு இருக்காமல், நாள்தோறும் புதிய புதிய செய்திகளைத் தெரிந்து கொண்டு அறிவை அவ்வப்போது கூர்மைப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

“ ‘இன்று என்ன சம்பாதித்தோம்’ / என்பதில் ஆர்வம் காட்டுகிற நாம்,
‘இன்று என்ன புதிய செய்தி / அறிந்து கொண்டோம்’
என்பதில் காட்டுவதுண்டா?”
(ப.85)

என்பது உபயதுல்லா தொடுக்கும் பொருள் பொதிந்த கேள்விக் கணை.

முத்தாய்ப்பாக, ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோராது இருத்தல்’ எனக் கவியரசர் பாரதியார் பறைசாற்றியது போல, சி.நா.மீ.உபயதுல்லாவும் தமக்குப் பிடித்தவையாக நான்கு விழுமியங்-களைப் பட்டியல் இடுகிறார்:

“எனக்குப் பிடித்தவை…
கடுமையாக உழைத்தல்! / பிறருக்கு உதவுதல்!
பலருக்கு ஊக்கம் தருதல்! / கூடிச் செயல் செய்ய விரும்புதல்!”
(ப.88)

ஒருவர் இந் நான்கு விழுமியங்களையும் வெறும் வார்த்தைகளாக அல்லாமல், வாழ்க்கையில் தாரக மந்திரம் போல் முறையாகப் பின்பற்றிவந்தால் அவர் ‘மந்தை மனித’ரிடம் இருந்து வேறுபட்டு, ‘மாமனிதராக’ உயர்வார் என்பது உறுதி!.



'தமிழாகரர்' முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்