எம்.ஜி.ஆர் என்னும் ஜீவ நதி - 6

முனைவர் செ.இராஜேஸ்வரி

குழந்தை வளர்ப்பில் எம் ஜி ஆரும் இசைப் பாட்டும்

எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடிப்பதை விட்டு நாற்பது ஆண்டுகள் கழிந்த பின்பும் இன்றும் தொலைக்காட்சிகளில் அதிக எண்ணிக்கையில் திரையிடப்படும் படங்கள் அவருடையவையே. திரையரங்குகளில் அதிக எண்ணிக்கையில் மறு வெளியீடாக வருபவையும் அவரது படங்களே ஆகும் . ஏன் மக்கள் இன்னும் அவரை மறக்காமல் அவரது படங்களை பாடல்களை ரசிக்கின்றனர். சன் லைஃப் தொலைக்காட்சியில் தினமும் காலை அல்லது மாலையில் ஒரு எம் ஜி ஆர் படம் வெளியிடுவது சர்வ சாதாரணமான நிகழ்வாகும். சென்னை மதுரை கோவை நெல்லை சேலம் என்று நகரங்களின் திரையரங்குகளில் இப்போதும் ஒன்றிரண்டு எம் ஜி ஆர் படங்கள் திரையிடப்படுகின்றன. இது வேறு எந்த நடிகருக்கும் இல்லாத தனிச் சிறப்பாகும். மற்றவர்களின் படங்கள் மறு வெளியீட்டில் இலாபம் தருவதில்லை. இதற்கு முக்கிய காரணம் எம் ஜி ஆர் இறந்த பிறகு பிறந்தவர்கள் கூட அவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அவரை நேரில் பார்க்காதவர்களும் அவருடைய ரசிகர்களாகி வருகின்றனர். அவருக்கு அவருடைய படத்துக்கு பாடல்களுக்கு புதுப்புது ரசிகர்கள் உருவாகி வருவதே அவரது படங்கள் இன்னும் ரசிக்கப் படுவதற்கு காரணம் ஆகும். இன்றும் கூட பத்து பன்னிரெண்டு வயது சிறுவர்கள் அவருடைய ரசிகர்களாக இருக்கின்றனர். அவர் பாடல்களை ரசிக்கின்றனர். கோகுல் போன்ற புது இயக்குனர்கள் அவர் படக் காட்சிகளை தனது படங்களில் வெற்றியை வேண்டி சேர்க்கின்றனர்.

எம் ஜி ஆர் தனக்கு தனி பாடல் அல்லது தத்துவ பாடல்கள் எழுதும் கவிஞரிடம் ''இரண்டு வயது பிள்ளை என் பாட்டின் பல்லவியை பாடும் அளவுக்கு எளிமையாக எழுதுங்கள்' என்பார். அதாவது ஒரு குழந்தை நன்றாகப் பேசத் தெரிந்தவுடன் அது எம் ஜி ஆர் பாட்டை பாட வேண்டும் அப்போதே பசு மரத்தாணி போல பாட்டு வரிகள் மனதில் பதிய வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக இருந்தது. இதில் தவறொன்றும் இல்லை. அவருடைய நல்ல கருத்து செறிவுள்ள தனி பாடல் அல்லது தத்துவ பாடல்களை பிள்ளைகள் மனதில் பதிய வைப்பது நல்லது தான்.

குழந்தைக்கு இசைப்பாடலின் பயன்

இசை பாடல் கேட்பதால் மூளையில் நியுரான் செல்களின் அடர்த்தி அதிகமாகும். இதனால் தான் குழந்தை கருவில் இருக்கும் போதே தாயை பாட்டு பாடவும் வளைகாப்பின் போது தாய்க்குக் கண்ணாடி வளையல் அணிவித்து அதற்கு கலகலவென்று ஒலி கேட்கும்படி பழக்குகிறோம். குழந்தை பிறந்ததும் தாலாட்டு பாடி தூங்க வைக்கிறோம். 'இசை பாட்டு கேட்டு வளரும் குழந்தைகள் மனநலம் சிறந்த குழந்தைகளாக வளரும். அவற்றின் நினைவாற்றல் பெருகும், அவை புதிர்களை எளிதில் விடுவிக்கும்.' என்பது குழந்தை உளவியலாளரின் கருத்தாகும் ஆக இசைப்பாடல்களை குழந்தைகள் பாடுவது நல்ல பழக்கமே ஆகும். சிலர் தம் குழந்தைகளுக்கு சுலோகம் சொல்லி தருவதும் பைபிள் வசனங்கள் சொல்லி தருவதும் லா இலாஹி எனச் சொல்லி தருவதும் கூட குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உகந்ததே ஆகும். இசையைக் கற்றுக் கொடுப்பதால் மொழி திறன் கணிதத் திறன் செஸ் விளையாடும் திறன் போன்றன வளரும் பொது அறிவு பெருகும். நினைவாற்றல் அதிகரிப்பதால் எதையும் ஒரு முறை பார்த்தாலோ படித்தாலோ அது அப்படியே அந்த குழந்தையின் நினைவு செல்லில் பதிந்துவிடும் இதனால் பொது அறிவும் பெருகும். கணிதத்தில் ஆர்வம் பெருகும். சிக்கலான கணக்குகளையும் எளிதில் போட்டு விடும் வேகம் வளரும்.

கடின உழைப்பு, ஊகித்துணரும் ஆற்றல், தொலை நோக்கு பார்வை ஆகியவற்றை வரமாக பெற்ற எம் ஜி ஆர் தன சிறு வயதில் நாடக் கம்பெர்நியில் இசை பயின்றார். பின் சினிமாவுக்கு வந்ததும் முறைப்படி ஒரு கர்நாடக் சங்கீத வித்வானிடம் இசை பயின்றார். அப்போது ஆரோகண அவரோகண குறிப்புகள் எழுதிய அவரது டைரியை நினைவகத்தில் இன்றும் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இசையின் மகிமையை நன்குணர்ந்த எம் ஜி ஆர் தனது படங்களில் சிறுவர்கள் ரசிக்கும்படியான அவர்களுக்கு நல்ல கருத்து தெரிவிக்கும்படியான பாடல்களை இடம்பெற செய்ததில் வியப்பொன்றும் இல்லை. அவர் தன வீட்டில் தன குழந்தைகளுக்கு என்ன செய்தாரோ அதைத்தான் படங்களிலும் செய்தார்.

எம் ஜி ஆரின் வளர்ப்பு குழந்தைகளுக்கு இசைப்பயிற்சி


எம் ஜி ஆர் தன வீட்டில் பல குழந்தைகளை வளர்த்து வந்தார். அவர்களுக்கு அதிகளவில் இசை பயிற்சி அளித்தார். . ஜானகி அம்மையாரின் பாட்டியின் தங்கையின் பேரக் குழந்தைகளான அப்புவும் ராதாவும் அவர்களின் பெற்றோர் காலராவில் மாண்டதால் எம் ஜி ஆரின் வீட்டில் அவரது தத்து பிள்ளைகளாக வளர்ந்தனர். ராதாவுக்கு திருமணமானதும் இனி விட்டில் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் வந்ததும் ஜானகி அம்மையாரின் தம்பியின் குழந்தைகள் மூவர் இங்கு அழைத்து வரப்பட்டனர். கீதா, சுதா, ஜானு என்ற மூவரும் இங்கு வளர்ந்தனர் அவர்கள் ஜானகி அம்மையாரையே அம்மா என்று அழைக்கின்றனர். இன்று அவர்கள் அன்னை சதயா கல்வி அறக்கட்டளையைச் சேர்ந்த பள்ளிகளில் ஆளுக்கு ஒரு பள்ளிக்கூடத்தின் முதலவராக இருக்கிறார்கள். இவர்களுக்கு எம் ஜி ஆர் தனது வீட்டில் இசை தொடர்பாக என்னென்ன படிக்க வைத்தார் என்று ஒரு பட்டியலே தருகிறார் பள்ளி முதல்வர் கீதா மது மோகன்.

கர்நாடக இசை

இசைக்கருவிகள்

• வீணை
• வயலின்
• தபலா
• ஹார்மோனியம்
• மிருதங்கம்

ஆக எம் ஜி ஆர் தான் வளர்த்த குழந்தைகளுக்கு வீட்டில் ஆசிரியர் ஏற்பாடு செய்து கர்நாடக இசையும் அதனுடன் தொடர்புடைய இசைக்கருவிகளையும் கற்று தந்திருக்கிறார்.. குழந்தைகள் தமது கலை பாரம்பரியம் பற்றிய பெருமிதத்துடன் இருக்க வேண்டும். எனவே அவற்றை பற்றி சிறிதளவாவது தெரிந்துகொண்டிருக்க வேண்டும். இசையில் எல்லோரும் விற்பன்னர்களாகிவிட முடியாது; ஆனால் அடிப்படைகளை தெரிந்துகொள்ளலாம் அல்லவா? அதை இசையறிவை ஊட்டுவது என்ற கடமையை எம் ஜி ஆர் ஒரு தந்தையாக எம் ஜி ஆர் தனது குழந்தைகளுக்கு செய்திருக்கிறார். இதை இன்றும் மகிழ்வோடும் நன்றியோடும் நினைத்து பெருமிதம் அடைகிறார் திருமதி கீதா மதுமோகன்

தந்தையின் கடமைகள்

ஈன்று புறந்தருதல் என்தலை கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே


என்றார் சங்க காலப் பெண்பாற் புலவர் பொன்முடியார். ஒரு குழந்தைக்கு வாழ்வியல் கல்வியும் சமூகக் கல்வியும் ஊட்டுவது தந்தையின் கடமை என்ற கருத்தை அன்று முதல் இன்று வரை தமிழகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இப்போது பள்ளி முதல்வராக இருக்கும் இச்சகோதரிகள் தங்கள் பள்ளிகளில் கலை படிப்புகளிலும்
[extra curricular courses] கலை நிகழ்ச்சிகளிலும் [cultural events] சிறப்பாக செயல்பட எம் ஜி ஆர் அவர்களுக்கு ஊட்டிய இசையறிவு உதவுகிறது.. இன்னும் பலவற்றை அவர் கற்று தர ஏற்பாடு செய்திருக்கிறார் என்றாலும் இந்த கட்டுரையில் இசையைப் பற்றி மட்டும் காண்போம். திருவள்ளுவரும் தந்தையின் கடமையை எடுத்தியம்பும் பொது

தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

என்கிறார். ஒரு அவையில் ஒருவன் பலராலும் பாராட்டும்படி திகழும் வகையில் ஒரு தந்தை தன மக்களை வளர்க்க வேண்டும்என்பது வள்ளுவர் கருத்து. . இதன்படி தனக்கு பிடித்த இசையை தான் உயர்வானது என்று மதித்த இசையை எம் ஜி ஆர் தனது வளர்ப்பு மகள்களுக்கு ஊட்டி வளர்த்திருக்கிறார்.

இசைக்கருவிகளும் எம் ஜி ஆரும்


இசைக்கருவி பயிற்சி என்பது எம் ஜி ஆருக்கு வெகு பிரியமான ஒன்றாகும். அவர் தனது பல படங்களில் இசை வாத்தியாராகவும் ஜதேடி வந்த மாப்பிள்ளைஸ இசைக்கருவிகள் வாசிப்பவராகவும் நடித்திருப்பார். பல படங்களில் பாட்டு காட்சியில் இசைக் கருவிகளை வாசிப்பார். இவை அனைத்தும் அவருக்கு இசையின் மீதான ஈடுபாட்டை உணர்த்துகின்றன. மன்னாதி மன்னன் படத்தில் ஆடாத மனமும் உண்டோ என்ற பாட்டுக்கு நாட்டிய பேரொளி பத்மினி நடனம் ஆடுவார் இவர் பல்வேறு கருவிகளை வாசிபார். இருவர் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடும் அற்புதமாக அமைந்த அக்காட்சியில் அவர் கால் பாதத்தால் தாளம் போட்டபடி அமர்ந்து வாசிப்பது இசையை அவர் ரசித்து நடிப்பதை நமக்கு உணர்த்தும். அந்த காட்சியில் கால் தெரியாது; மிகவும் கவனமாகப் பார்த்தால் மட்டுமே தெரியும். அப்படி ஒரு காட்சியில் அவர் நடிக்கும்போது தன்னை அறியாமல் இசையை ரசித்து காலில் தாளம் போட்டபடி இருப்பார். தபலாஇ புல்லாங்குழல்இ வீணை என பல கருவிகளை வாசிப்பார்.

 

 

தொழிலாளி, நடோடி படங்களில் ஹார்மோனியமும் மகாதேவி நவரத்தினம் படங்களில் வீணையும் நினைத்ததை முடிப்பவன் படத்தில் சுந்தரம் கதாபாத்திரமாக வரும்போது பலபல இசைக்கருவிகளும் பணம் படைத்தவன் படத்தில் அக்கார்டியன் மற்றும் வயலினும் கண்ணன் என் காதலன் நான் என் பிறந்தேன் படங்களில் பியானோவும் என அவருக்கு இசைக்கருவி மீதான் விருப்பத்தை உணர்த்தும் படங்களும் காட்சிகளும் ஏராளம் ஆகும்.

இசைப்பாட்டும் இனிய கருத்தும்

பொதுவாக குழந்தைகள் ஒன்றரை வயது முதல் மூன்று வயது வரை தான் பாட்டு கேட்பார்கள் அதன் பிறகு அவர்களே பாடத் தொடங்கிவிடுவார்கள் அப்போது குழந்தைகளுக்கு நல்ல கருத்துள்ள பாடல்களை கற்றுத் தரவேண்டும் பாலர் கல்விச்சாலைகளில் இந்த வயதில்
action songs என்றும் rhymes என்றும் கற்றுத் தருவதுண்டு. அந்த வயதில் குழந்தைகள் எம் ஜி ஆரின் பாடல்களை கேட்க வைப்பதும் அவற்றை முணுமுணுக்க வைப்பதும் நல்ல பலனை தரும். சிறுவர்கள் இவ்வாறு கருத்துள்ள பாடல்களைப் பாடி பழகி விட்டால் பின்னர் வளர்ந்த பிறகு ஆபாசப் பாடல்களை பாட அவர்கள் கூச்சப்படுவார்கள். இந்த நாடு அவர்களை தானே நம்பியுள்ளது. குழந்தைகள் பெரியவர்களாகும் போது தமிழ்ப் பண்பாட்டை காக்க வல்லவர்களாக இருந்தால் மட்டுமே நாடு நம் நாடாக இருக்கும். கலை இலக்கிய பண்பாட்டு வளர்ச்சியிலும் பொருளாதார மேம்பாட்டிலும் சரித்திரம் படைக்கும். .

நம் நாடு படத்தில்

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி – இந்த
நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி – ஒரு
சரித்திரம் இருக்குது நம்பி


என்ற பாட்டை பாடும் குழந்தைகளுக்கு தம் தேசிய கடமை தானாகவே புரிந்துவிடும் இதை ஒருவர் தனியாகக் கற்று தர தேவையில்லை.

கிளி போல பேசு நீ குயில் போல பாடு
மலர் போல சிரித்து நீ குறள் போல வாழு
மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்


என்ற வரிகளைப் பாடும் குழந்தைகள் சக குழந்தைகளிடம் கோபப்படாமல் அன்புடன் பழகி வரும். குறள் இன்று உலகப் பொதுமறையாக விளங்குகிறது பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல் என்ற பெருமை திருக்குறளுக்கு உண்டு. மற்றொரு பாடலிலும் குறளின் பெருமையை, பிறக்கப்போகும் தனது மகனின் வாழ்வியல் நெறியாக எடுத்துரைப்பார்.

இரண்டு வரி கொண்டு மூன்று நெறி கண்ட
குறளில் வழி தேடி செல்வான்


இப்பாடல் வரிகள் தமிழகத்தில் வளரும் குழந்தைகளுக்கு தமிழ்மறையாம் திருக்குறளின் பெருமையை பிஞ்சு மனதில் பதிய வைக்கின்றன. பெற்றோரும் ஆசிரியரும் சொல்வதைக் காட்டிலும் இந்த இசைப்பாடல் சொல்வது இன்னும் ஆழமாக பதியும்

இவ்வாறு படங்களில் நல்ல கருத்துக்களை இசையோடு புகுத்திய எம் ஜி ஆர் இசையிலும் இசைக்கருவியிலும் தனக்கிருந்த ஆர்வத்தை தனது வளர்ப்பு குழந்தைகளுக்கும் புகுத்தினார்.

எளிய சொற்கள்; இனிய இசை பொருத்தமான காட்சி;


குழந்தை உளவியலார்
social and emotional learning என்பர். இந்த சமுதாயத்தில் மதிக்கப்படுவன் எவை? இகழப்படுவன எவை? என்பதை எம் ஜி ஆர் பாடல்கள் சிறு வயதிலேயே ஒரு குழந்தைக்கு கற்று கொடுத்துவிடும். எதற்கு மகிழ்ச்சி அடைய வேண்டும்? எதற்கு வருத்தப்பட வேண்டும்? எதற்கு அவமானப்பட வேண்டும்? என்பதை

தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்
தப்பை செய்தவன் வருந்தியாகனும்


போன்ற எம் ஜி ஆர் பாடல்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கின்றன. இவற்றிற்கு உறுதுணையாய் நிற்பன தேர்ந்தெடுத்த சொற்களும் திறமையான இசையும் ஆகும். தனது கருத்தை சொல்வதற்கு ஏற்ற பொருத்தமான சிறந்த சொற்களை கவிஞரிடம் இருந்து எம் ஜி ஆர் பெற்று விடுவார். கவிஞர் எழுதிய பாடலில் தான் நினைத்த கருத்து வரவில்லை என்றால் உடனே மாற்றித் தரும்படி கூறுவார். தனது கருத்துக்களை குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் கொண்டு செல்லும் வாகனமான இசையை இசையமைப்பாளரிடம் இருந்து தெரிவு செய்வார். அவர் எத்தனை மெட்டு போட்டிருந்தாலும் அவற்றை பொறுமையாக கேட்டு அவற்றில் சிறந்ததை தெரிவு செய்யும் இசை அறிவு எம் ஜி ஆருக்கு இருந்ததால் இன்றும் எம் ஜி ஆர் பாடல்கள் மக்கள் மனதில் நிலைத்து வாழ்கின்றன. எளிய சொற்கள் இனிய இசை என அவர் தெரிவு செய்து அவற்றை பொருத்தமான காட்சியில் இடம் பெறச் செய்வார். இதனால் சிறுவர்கள் எம் ஜி ஆருக்கு ரசிகர்களாக அன்றும் இருந்தனர் இன்றும் புதிது புதிதாக உருவாகின்றனர். வீட்டில் பெற்றோர் எம் ஜி ஆர் ரசிகர்களாக இல்லாத போதும் கூட பிள்ளைகள் துணிந்து தங்களை எம் ஜி ஆர் ரசிகர் என்று சொல்லும் துணிச்சல் அன்று முதல் இன்று வரை சிறுவர்களுக்கு இருந்துவருகிறது. சிவாஜியின் மகன் பிரபு எம் ஜி ஆரின் தீவிர ரசிகர். அன்று முதல் இன்று வரை.; பிரபு சென்னையில் இருக்கும்போது எம் ஜி ஆர் படப்பிடிப்பு பார்க்க செட்டுக்கே வந்துவிடுவார் . எம் ஜி ஆர் ஜெயலலிதா ஜோடி நடிக்கிறார்கள் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். வெளியே எம் ஜி ஆர் ரசிகர்களும் சிவாஜி ரசிகர்களும் அடி பிடி சண்டை போட்ட காலத்தில் கூட சிவாஜியின் மகன் பிரபு எம் ஜி ஆரின் ரசிகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம் ஜி ஆர் படங்களில் பாட்டுக்கள் மூலமாக ஊருக்கு சொன்னதும் தனது வீட்டுக்கு சொன்னதும் ஒரே தகவல் அவர் தனது இசை நாட்டத்தை தனது பிள்ளைகளிடமும் செலுத்தி இருக்கிறார். ரசிகர்களிடமும் செலுத்தி இருக்கிறார். அவர் நிஜத்தில் வேறாகவும் படத்தில் வேறாகவும் இருந்ததில்லை அவர் தனது வாழ்வில் கடைப்பிடித்த நெறிகளையே படத்திலும் காட்டியிருக்கிறார் என்பதை அறிய இந்த இசையறிவும் நமக்கு உதவியது. அவர் தான் வளர்த்த பிள்ளைகளுக்கு இன்னும் என்னென்ன கற்று தந்தார் அவர்களின் நன்னடத்தையில் எவ்வாறு கவனம் செலுத்தினார். கல்வியின் முக்கியத்துவத்தை எவ்வாறு உணர்த்தினார். என்ற பல செய்திகளை அடுத்தடுத்து வரும் கட்டுரைகளில் காணலாம்.
 



முனைவர் செ.இராஜேஸ்வரி

 

எம்.ஜி.ஆர் புகைப்படத்தொகுப்பு:

 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்