அதிகாரத்தின் கால வடு

சுப்ரபாரதிமணியன்


தமிழ்மகனின் “வனசாட்சி"  நாவலினை முன் வைத்து...


மிழ்மகன் தனது அய்ந்தாவது நாவலின் பின்னணியை முந்திய நாவல்களின் களமான திராவிட அரசியல், திராவிட ஆளுமைகள், திரைப்படம், அவற்றின் உளவியல் பாதிப்புகள் ஆகியவற்றிலிருந்து வேரோடு பிய்த்துக் கொண்டு இலங்கைப் பின்னணிக்கு நகர்த்தியிருக்கிறார் என்பது ஆரோக்யமான விசயம். படைப்பாளி புதிய களங்களில் இயங்குவது உற்சாகமாக இருக்கும்.வழமையான அனுபவங்களிலிருந்து புது அனுபவ வார்ப்புகள் கிடைக்கும். இன்னொருவரின் ஆவியாக இருந்து கொண்டு செயல்படுவதில் நிறைய சவுகரியங்கள் உண்டு.இந்த சவுகரியத்தை உற்சாகமாக இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கிறார்.அவரின் ஆர்வமான படைப்பு வீச்சிற்கு சவாலாகி சமாளித்திருக்கிறார்.

இந்த நாவலின் மூன்று பாகங்களாக அமைத்திருக்கிறார்.200 ஆண்டுகளுக்கு முன் வேலூர் மாவட்டத் தமிழர்கள் சிலர் இலங்கைக்கு தேயிலைத் தோட்டப்பணிக்காக செல்லுவது. முதல் பாகமாகியிருக்கிறது. இரண்டாம் பாகம் சிறிமாவோபண்டாரநாயகா சாஸ்திரி ஒப்பந்த்தின்படி மலையக வாழ் தமிழர்கள் சிலர் தமிழகம் திரும்புவது என்று அமைந்துள்ளது. மூன்றாம் பாகம் முள்ளி வாய்க்கால் சம்பவத்திற்குப் பிறகு கல்லூரி ஆசிரியர் ஒருவர் தன் அத்தையைத் தேடிஇலங்கைக்குச் செல்வது, திரும்புவது என்றமைந்திருக்கிறது.
இவ்வாண்டு சர்வதேச தேனீர் ஆண்டு . சமீப ஆண்டுகளில் வெளியான “ எரியும் பனிக்காடு “ மொழிபெயர்ப்பு நாவல் முதல் அன்வர் பாலசிங்கத்தின் “ செந்நீர் “ நாவல் வரை இவ்வாண்டை நினைவு கூறுகின்றன. இந்நாவலும் கூட...

அத்தியாயங்களின் ஆரம்பத்தில் படைப்பாளிகள் பொன்மொழிகள், செவ்வியல் இலக்கியஅம்சங்கள், புனித நூல்களிருந்து மேற்கோள்களை எடுத்து காட்டி அமைப்பது வழக்கம். இந்த நாவலில் அவ்வாறு அமைக்கப்பட்டிருப்பவை ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரும் உரையாடல்கள், சில குறிப்புகள் என்பவை. அவை முழுக்க அதிகாரத்தொனி கொண்டவை. மனுநீதி, மனுசாஸ்திரம் முதல் இந்துத்துவா ஏற்பாட்டு சொல்லாடல்கள், முதலாளித்துவத்தின் விரிவாக்கம் வரை கொண்டிருக்கும் அம்சங்களின் வேறு வார்த்தைப் பிரயோகங்கள் அவை. இந்த நாவல் அதிகாரத்திற்கு எதிராக கட்டமைக்கப்பட்டிருக்கும் நிலைகளை தக்ர்த்தெறிய வீசப்படும் சிறு கற்களாய் அமைந்திருக்கிறது. அதிகாரத்தின் மையங்களாக ஆங்கிலேயர்கள், கங்காணிகள், சிங்களவர்கள், கல்வித்துறை சார்ந்தவர்கள் (ஒரு கல்லூரி முதல்வரிடம் கூட எவ்வளவு அதிகாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன) , காவல்துறையினர் (அது எந்த நாட்டு காவல்துறையாக இருந்தாலும்) ,தேசிய இனப்போராட்ட ஒடுக்குமுறையாளர்கள், இராணுவம் என்று வகை வகையாய். கட்டமைக்கப்பட்டிருக்கிறது.இந்தக் கட்டமைபுகளை எதிர்த்து கிளப்படும் சிறு குரலாக இந்த நாவல் அமைந்துள்ளது.புத்த மடம் கூட அப்படித்தான் ஆகி விட்டதை சில இடங்கள் சுட்டுகின்றன.

இருநூறு ஆண்டுகளுக்கு முன் ராமேஸ்வரம் மண்டபத்திலிருந்து ஆசை காட்டி கடத்தப்படும் தமிழர்கள் முப்பத்து சொச்சம் பேர் தோணிகளின் மூலம் இலங்கைக்கு போவதில் நாவல் ஆரம்பித்து தேயிலைத் தோட்டப்பகுதிகளுக்கு அனுராதபுரம், மாத்தளை, கண்டி, ஹட்டன் என்று கால்நடைகளாக்க் கொண்டு போகப் படுவதைச் சொல்கிறது. மருத்துவர்களிடம் காட்டப்படுபவர்கள் நோயில்லாதவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு மனித எந்திரம் தயார் செய்யப்படுகிறது. அவர்கள் கறபனைத்தபடி கடற்கரை மணலெல்லாம் தங்கமாக இல்லாமல் ஆத்து மணல் போலத்தான் இருகிறது நடந்து செல்லும் போது தண்ணீர் குடிக்கக் கூட கங்காணியிடம் கேட்க அதிகாரம் முன் வைக்கப்படுகிறது. தண்ணீர் குடிக்க வெள்ளைக்காரர்களின் குதிரைக்கே முன்னுரை வவுனியா காடுகளில் விலக்குகள், பூச்சிகள் உலாவும் இடத்தில் இளைப்பாறல். மக்கள் நடந்து நடந்து உருவாக்கும் பாதைகளுக்கானத் தேடலில் நடை, பண்பாட்டின் வெளிப்பாட்டைத் தொடர்ந்து காப்பாற்றுவது பசியின் கையில்தான் இருக்கிற அனுபவங்கள் இடுப்பில் முடிந்து வைத்திருந்த புகையிலை பரிவர்த்தனை சிறு நட்பாக வழியில் அமிமைறது.குளிருக்கு பய்ந்து போர்த்திக்கொள்ளும் கம்பளியை கொஞ்சம் கிழித்து தலையில் கட்டிக் கொள்ள வேண்டிய அவலம். கூட்டிச்செல்லும்கங்காணி தான் கூடிவந்த ஒவ்வொருவரும் கங்காணியாக வேண்டும் என்கிறார். தேயிலைக் காட்டு பெரட்டுக்களம் கொத்தடிமையாக்குகிறது. வெள்ளைவெளேர் என்று பால் மாதிரி இருக்கும் துரைசானி அம்மாக்களை விட்டு தமிழ்ப்பெண்கள் வெள்ளைக்காரர்களுக்கு பலியாகிறார்கள்.இந்தியாவிற்கு ஆதிலட்சுமி கப்பலில் திரும்பி பலியாகிறவர்களும் இருக்கிறார்கள். கொத்தடிமை வாழ்க்கை தொடர்கிறது. நம்பிக்கை ஊற்றாக் தோட்டத்திற்கு துணி வியாபாரம் செய்ய நடேசய்யர் வருவதோடு முன் பனிக்காலம் என்ற முதல் பாகம் முடிவடைகிறது. நடேசய்யர் காந்தியையின் தொண்டர். வந்தேறிகளான தோட்ட்த் தொழிலாளர்களுக்கு ஓட்டுரிமை இனி இல்லை என்ற சட்டமும் அமுலாகிறது.

அதிகார மையங்களாக கங்காணிகள் திரிகிறார்கள்.சேத்துப்பட்டு ஜமீன் செக்கச் செவப்பு பெண், ரெண்டாயிரம் காணி சொத்து, லண்டன் ராணி வீட்லே பண்ணை உத்தியோகம், ராணுவத்லெ கமேண்டர் என்ற மூன்று தேர்வுகளையும் தள்ளி விட்டு வந்து கங்காணி ஆன வைத்தியும் ஒருவன்.

“அற்ப மனிதர்களுக்கு இறைவன் தந்த அன்புப் பரிசுதான் அகந்தை “ என்று ஆரம்பிக்கிறது பின்பனிக்காலம் என்ற இரண்டாம் பாகம். இதுவே மூன்றம் பாகத்தையும் நடத்திச் செல்கிறது. .வடக்கத்திக்காரன், தோட்டத்துக்காரன், பனங்கொட்டை, கள்ளத்தோன்ணி என்று பெயர் வாங்கிக் கொண்ட பத்து லட்சம் தமிழர்களில் பாதிப்பேர் இந்தியாவிற்கு செல்லக் கட்டாயப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்ப்படும் சூழல்கள் இரண்டாம் பாகத்தில். வந்து பத்து தலைமுறைகளானாலும் காந்தி, நேரு என்று படம் மாட்டி தங்கள் வேர்களை நினைவூட்டிக் கொண்டிருப்பவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு விரட்டப்படுகிறார்கள்.இலங்கை பிரஜா உரிமை தமிழர்களில் மூன்றே முக்கால் லட்சம் பேரூக்கெ வாய்க்கிறது.உழைப்பையெல்லாம் தோட்டமாக மாற்றிக் காட்டிய மலையகத் தமிழர்கள் சொத்து வாங்க இடமில்லாமல் போவது மட்டுமின்றி விரட்டவும் படுகிறார்கள். பாட்டன்கள் காலத்திலிருந்து வாழ்ந்தவர்களும் விரட்டப் படுகிறார்கள்.தலைமுறைகளாய் வாழ்ந்த பூமி யாருடயது என்ற கேள்விக்கு பதில் தரப்பட்டு விரட்டப்படுகிறார்கள்.தமிழன் கால்களில் வேர் விட்டிருந்தாலும் அதைப் பிடுங்கி வெளியேற நிர்பந்தம்..தொழிலாளி, முதலாளி பிரச்சினை தமிழன் சிங்களவன் பிரச்சினையாக மாறும் சூழல். கடவுச் சீட்டு வராத காரணத்தால் பிரிக்கப்படும் குடும்ப உறுப்பினர்கள். கணவன் மனைவிகள். சேர்ந்து வாழ்ந்திருந்து விட்டு வேறு வழியில்லாமல் பிரிகிறவர்கள். அப்படி பிரிக்கப்படுகிறவள் லட்சுமி. பெற்றோர் பெரியசாமி, ஜோதியிடமிருந்து பிரிக்கப்படுகிறாள். தங்கியிருக்கும் லயன் வீட்டில் குடிஏற்றப்படும் சிங்களத்தியை அடித்து விட்டு தப்பிக்கிறாள். தமிழர்கள அதிகம் இருக்கும் தமிழர்கள் பகுதிக்கு சென்றால் பாதுகாப்பாக இருக்கும் என்று வ்வுனியாவிற்குப் போய் எம்ஜிஆர் படம் பார்த்துக் கொண்டிருக்கையில் ருதுவாகி சந்திரா என்ற பெண்ணிடம் அடைக்கலமாகீறாள். அதன் பின் அவள் வாழ்க்கை துயரத்தில் மூழ்குகிறது.

இலையுதிர்காலம் என்ற மூன்றாம் பாகம் தமிழக கல்விசூழலில் தொடங்கிறது. கல்லூரிகள் பணபலத்தை, அதிகாரத்தைக் குவித்து வைத்துக்கொண்டிருக்கின்றன, முதல்வர் ஒரு அதிகாரப் பீடம். தனியார் கல்லூரி முதல்வருக்கு பயப்பட உலகமே உள்ளது, முதல்வர் கூப்பிடுகிறார் என்பதற்காக உயிருக்கு இணையான ஒரு புத்தக்த்தை அப்படியே வ்வைத்து விட்டு ஓடுகிறான் முருகன் என்ற கல்லூரி ஆசிரியர்.முதல்வரைப் பார்க்க காத்திருந்து சலித்த வேளையில் தான் பையிலிருந்து வாழைப்பழம் ஒன்றை எடுத்துச் சாப்பிடும் சிவராமன் முதல்வர் அறையிலிருந்து கேட்ட அழைப்பு மணிச் சப்தம் கேட்டு வேகமாக பழத்தை உள்ளே விழுங்கி விடவும், வெளியே துப்பி விடவும் ஒரே நேரத்தில் முயன்று கையில் துப்பி தோள் பையில் போடும் அவலம். முதல்வரே கங்காணியாகத்தான் கல்லூரி ஆசிரியர்களுக்குத் தெரிகிறார். சரித்திரத்துறை சார்ந்தவராய் இருந்தாலும் அவரின் தமிழ்ப்புலமையைக்காட்டி மிரட்டுகிறார். அவருக்கும் அப்துல் கலாமிற்கும் இருக்கும் நட்பும் உச்சபட்ச நகைமுரணிற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.. முருகன் கல்வித்துறை சாந்த ஒரு ஒப்பந்த்த்தின் படி அனுப்ப்பபடுகிறான் இலங்கைக்கு. அங்கு தன் பெற்றோர்கள் இருந்த இடத்திற்குச் சென்று தன் அத்தை லட்சுமியைத் தேடுகிறான். உறவினர்கள் இருக்கும் கூடலூருக்கு வந்து தனது இலங்கை பயணத்தைப்பற்றியும், அனுபவங்களையும் புகைப்படங்களைக்காட்டிச் சொல்கிறான். லட்சுயைப் பார்க்க இயலாதது பற்றிரியிம். லட்சுமி விடுதலிப் புலிகள் இயக்கத்தில் முன்ண்ணியில் இருந்து முள்ளி வாய்க்கால் சம்பவ்த்தில் பிரபாகரன் சுட்டு தற்கொலை செய்து கொள்ளும் போது சரணடய விரும்பாமல் சயனைடு குப்பியை விழுங்கி செத்து விட்டக் கதையைச் சிலரிடம் சொல்கிறான். ஆனால் லட்சுமி தனிப்பெண்ணாக சிரமப்பட்ட சோகக் கதை சிலருக்கே தெரிகிறது.

இந்நாவலின் முக்கிய கதாபாத்திரம் பெரியசாமி . மாடு மேய்க்கும் பையனாக இருந்து இளமைக்கவர்ச்சியில் அந்த வீட்டுப் பெண்ணை தீண்டி விரட்டப்பட்டு நரகத்திற்கு வருகிறாயா என்று கேட்டாலும் புறப்பட்டு வருகிற நிலையில் இலங்கைக்கு வந்தவன்.கங்காணிகள் முதலாளிகளின் விசுவாச நாய்களாகவும் தொழிலாளிகளின் திருட்டுப் பூனைகளாகவும் இருப்பதை விமர்சிப்பவன்.தன் குழந்தைகள் நாலெழுத்துபடிக்க வேண்டும் என் ஆசைப்பட்டவன். பெயரை எழுதிவிடுகிற வகையில் மட்டுமே அவர்களைப் படிக்க வைக்க முடிகிறது.வாழ்க்கையில் பல சிரமங்கள் சிரிமாவோ ஒப்பந்தத்தில் ஊர் திரும்ப கடவுச்சீட்டும், குடும்பச் சீட்டும் வரும் போதெல்லாம் கங்காணி, தோட்ட கணக்குப்பிள்ளை, மேலாளர் என் எல்லோருடனும் ஒத்தவனாகி விடுகிறான்.தன் மனைவி மானேஜரிடம் நெருக்கமாக இருப்பதை தன் மனைவி இந்த வயதில் வேறு ஒருத்தனுக்கு அழகாகத் தெரிந்து விட்ட வருத்தம் அதிகம் கொள்பவன். அவனுக்கு வந்த வீரமெல்லாம் மனசிலேயே தங்கி விட்டது என்று தன்னிலையை அறிந்து கொள்பவன்.அதுதான் தன் வாழ்க்கையில் நியதி என்ற சமாதானமும் அவனுக்கு வந்து விடுகிறது.

அந்த நியதி தான் லட்சுமியைக்கூட சீரழிக்கிறது. அவளின் அழகை சிலாகிக்கும் சிங்கள அதிகாரியிடம் அவளிம் மோதல் ஆரம்பிக்கிறது . தன் பெற்றோர் இருந்து விட்டுப் போன லைன் வீட்டில் குடியேற்றப்படும் சிங்களத்தியை அடிப்பதால் காவல்துறையால் தேடப்பட்டு தலைமறைவாகிறாள்.. சி.வி. வேலுப்பிள்ளையின் “நாடற்றவர் கதை “ நூலின் ஒரு பக்கத்தில் தன் நிலையை எழுதி சீதனமாய் தருகிறவள்.” வயசுப் பொண்ணு ஒண்ணு, தன்னந்தனியா என்ன பாடுபட்டு இருக்க்குமுன்னு தெரியும்டா.. நீ எதுவும் சொல்லாதே ” என்று அவள் கதை தெரிந்தும் தெரியாத தாக்கப்படுவது தமிழர்களின் குறியீடாகிறது. காந்தி இலங்கைக்குச் செல்கிற போது “ சீனியும் தண்ணியும் மாதிரி தமிழனும், சிங்களவனும் கலந்துடனும்ன்னு ” சொல்ல்லியிருக்கிறார்.ஆனால் சிஙளக்காடையர்களின் அதிகாரத்துவம் பல இடங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது.புத்தமடங்களும் கூட. புத்தமடங்கள் ஆங்கிலேயர்கள் இளைப்பறுகிற இடமாக இருக்கிறது ( பக் . 51 ). பிரமாண்டமாக இருக்கும் புத்தரின் அமைதியைப் போதித்த உருவம் ஏன் அச்சுறுத்தும் விதமாகத் தோன்றுகிறது. ( பக் 247 ) என்ற குறிப்பும் காணப்படுகிறது.

அதிகாரத்துவம் பற்றி இந்த நாவல் எழுப்பும் கேள்விகள் நுட்பமானவை.அதிகாரமையங்கள் ஒவ்வொரு நிலையிலும் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கின்றன என்பதை மாதில் வைத்துக் காட்டிக் கொண்டேயிருக்கிறார்.பொன்னப்பா தாத்தா குறித்த ஒரு சம்பவம் உட்சமாய் இருக்கிறது.

பொன்னப்ப தாத்தாவுக்குத் தசம கூட்டுத் தொகையை மட்டும் ஆங்கிலத்தில் சொல்லத்தெரியும் . துரை ஒருநாள் அவரின் நர்ஸரிக்கு விஜயம் செய்தார். குதிரையில் அமர்ந்தபடி “ இது எத்தனை நாள் செடி “ என்று டீ நாற்றுப்பாத்தியைப் பார்த்துக் கேட்டார். பொன்னப்பன் “ தர்ட்டி “ என்றான்.பொனப்ப தாத்தாவுக்கு ஆங்கிலம் தெரியாது என்று துரை “ சிக்ஸ் .. ஜீரோ.. டேஸ் “ என்றார்.. தலையை அசைத்து மறுத்து விட்டு “ த்ரி.. ஜீரோ.. டேஸ் “ என்றான் பொன்னப்பன். ஜேம்ஸ் துரைக்கு கோபம் தாங்கவில்லை. குதிரையை விட்டு பாய்ந்து இறங்கினார். பொன்னப்ப தாத்தாவின் உடலில் சுளீரென சாட்டையால் அடித்தார்.” ப்ளடி “ பதறிப் போய் ஓடி வந்தான் கே.பி.. “ டேய்.. மடையா. தொர கேக்குறாரு இல்ல. இது எத்தன நாள் நாத்து” “ முப்பது நாள் நாத்து கே.பி, நான் சரியாகத்தான் சொன்னேன். தர்ட்டி டேஸ்ன்னு.. தொர அறுவது நாள்ன்னு தப்பா சொல்றாரு..” கே.பி. திரையைப் பார்த்தான். முப்பது நாள் நாத்துதான் என விளக்கிச் சொல்ல விரும்பினான். துரை ஏற்கனவே அதை அறுபது நாள் நாற்று என நம்புகிறான். துரையின் நம்பிக்கையை விட நாற்று வளர்ச்சி முக்கியமா என்ன.. “ யெஸ் துரை .. இட்ஸ் சிக்ஸ்டி டேஸ் பிளான்ட்” என்றான். பொன்னப்பன் முப்பது நாள் நாற்றை அறுபது நாள் என்று ஏன் இப்படி எல்லோரும் சாதிக்கிறார்கள் என்று திகைத்து போய்ப் பார்த்தான். துரை என்ன நினைத்தாரோ, கேபியிடம் ஆங்கிலத்தில் என்னவோ சொல்லிவிட்டுப் போய் விட்டார், அவர் போனதும் கே.பி சொன்னார்: இன்றிலிருந்து முப்பது நாளௌக்கு உனக்கு துரையின் வீட்டில்தான் வேலை. துரை உனக்கு டீ விதையைத் தருவார். அதை முப்பது நாளுக்குள் இதே அளவுக்கு நீ வளர்த்துக் காட்ட வேண்டும். இல்லையென்றால் துரை உன்னை சுட்டு விடுவாராம்.” பொன்னப்பன் தினமும் துரையின் வீட்டுகுப் போனான். அவ்வீட்டின் பின்னால் பாத்தி அமைத்து விதையை ஊன்றினார். முப்பது நாளும் கண்ணை இமை காப்பது போல் வளர்த்தான். முப்பதாவது நாள் துரையை அழைத்துக் காட்டினான். அவர் கணீத்தது தவறு என்று தெரிந்தது. அவன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறான்.

இது போல் கல்லூரி முதல்வரின் அதிகாரம் தூள் பறக்கும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இந்நாவலில் உள்ளன. ராணுவமும், காவல்துறையும், முதலாளி வர்க்கமும் செலுத்தும் அதிகாரத்துவம் பற்றிய பல குறிப்புகளை இந்நாவல் முழுக்கக் காணலாம்.

முதல் அத்தியாயம் முழுக்க அதிகாரத்தில் திளைக்கும் கங்காணி. ,இலங்கைக்கு கூட்டிவரும் கங்காணி “ என் கூட வர்ற ஒவ்வொருத்தனும் ஒரு கங்காணியா வரணும். அதுதாண்டா எனக்குப் பெருமை ” என்கிறான்.” உன்னையும் கங்காணியாக்குகிறேன்,நாயாட்டம் பின்னாடி வருவானில்ல.. ஒடம்பு நோகாம சாப்படணும்னு புத்திடி “ கங்காணிகளுக்கும் மேனேஜர்களுக்கும் பெண்களும் சுலபமாக ப்பலியாகிறார்கள்.. துரை வீட்டிடிற்கு சமைக்க்கப் போகிற ரத்தினம் அப்படி ஆகிறாள் ” அழகும் இளமையும் போய்க் கொண்டிருப்பது அவளுக்குத்தெரியும் தானே, துறையின் வீட்டில் ஆளுயரக் கண்ணாடி இரண்டு முன்று இடத்தில் உள்ளன” அவள் வயதான காலத்தில் கண்டி சென்று தாசி தொழில் செய்கிறாள் என்றொரு கதை.அவளைச் சுட்டு தோட்ட்த்திலேயே புதைத்து விட்டதாகவும் ஒரு கதை. இது போல் நிறைய மறைந்துடு போன பெண்களின் கதையை இந்த நாவலில் காண முடியும். மல்லிகா உட்பட..

இவர்களின் மீட்சிக்காக சிலரும் வருகிறார்கள். துணி வியாபாரி போல் வந்து தொழிற்சங்க உணர்வு ஊட்டும் நடேசய்யர் .1927ல் இலங்கைக்கு வந்ட காந்தி உங்கள் பிரச்சினையைத்தீர்க்க ஒரு ராமர் வருவார் என்கிறார். ஆனால் அவர்களின் சுதந்திர உணர்வுகளுக்கு கட்டுப்பாடாய் மலையக மக்களுக்கு ஓட்டுரிமை பறிக்கப்படுகிற அவலமும் நடந்தேறுகிறது.

முள்ளிவாய்க்கால் கொடுமைக்குப் பின் நடந்தவை பற்றி ஒரு பகுதி இதில் ஆக்கிரமிக்கிறது.. இது நடந்திருக்கலாம். இது நடந்திருக்கக் கூடாது என்றுநிறைய யூகங்கள் இவ்வகை அதிகார பீடங்களை மீறி தமிழன் பிழைக்க வேண்டிய சூழல். அதுவும் மூடர்களிடம் இவ்வகை அதிகாரங்கள் குவியும் வாய்ப்பு ஏற்படும் போது மனித வேதனையின் விளைவு எவ்வளவு தீவிரமாக இருக்கும் என்பதை இந்நாவல் காட்டுகிறது. தேனீர் சாப்பிட்டுக் கொண்டே இந்த வகை மனித உரிமை மீறல்கள் பற்றி நிறைய யோசிக்க வைக்கும்



( ரூ 225 , 288 பக்கங்கள் ,உயிர்மை பதிப்பகம் வெளியிடு ) .

 


சுப்ரபாரதிமணியன்


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்