இனிய உளவாக இன்னாத கூறல்

திருமதி செல்லையா யோகரத்தினம் M.A

திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட மனிதனுக்காக மட்டுமல்ல, இருபத்ததோராம் நூற்றாண்டின் புதிய தலை முறையினர்க்கும் மட்டுமல்ல தொடர்ந்தும் காலம் தோறும் வழிகாட்டும் காலத்தை வென்ற புரட்சிநூல். வள்ளுவத்தின் பொருண்மை காலம்தோறும் புதிய பதிய கருத்தாக்கங்களைத் தந்து இனம், மொழி, மதம், நாடு, காலம் என்னும் எல்லைகளைக் கடந்து மனித வாழ்க்கையை வளப்படுத்துகிறது. சங்க காலத்தைத் தொடர்ந்து தமிழுக்கும், தமிழருக்கும் கிடைத்த அரும் பெரும் களஞ்சியமான வள்ளுவத்தில் உலகளாவிய சிந்தனைகளும், மனிதனை உயர்த்தும் உயரிய நோக்கும் காணப்படுகிறது. வள்ளுவம் தமிழனுக்குரியது என்ற நிலை மாறி உலகத்தவர் அனைவருக்கும் உரியதாகிவிட்டது. மனித வாழ்க்கையின் நெறிகளை, வழிமுறைகளைத் தந்து மானிடப் பண்பு, இயல்புகளுக்கு ஓர் உறைவிடமாய் வழிகாட்டியாய் அமைந்துள்ளது. வள்ளுவம் இலக்கியம் என்ற நிலையில் நின்றுவிடாது மனித வாழ்வியல் கூறுகளை, அன்றாட வாழ்க்கையில் ஒழுக வேண்டிய நெறிமுறைகளின் தொகுப்பாக விளங்குகிறது. உயிரினத்தின் உச்சியல் வாழும் இன்றைய மனிதனை, அவனது வாழ்க்கையைப் பகுத்து நோக்கி அறம், பொருள், இன்பம் ஆகிய முதன்மைப் பயனை அறிய வைத்துப் பயனுடைய வாழ்க்கையை வாழ வள்ளுவம் வழிகாட்டுகிறது. எதிலும் விரைவு, அவசரம், ஓட்டம் காட்டும் இந்த நூற்றாண்டு மனிதர்களுக்கு உள்ளத்தை உறுதிப்படுத்திடவும் வாழ்வியல்ப் பொருண்மையைத் தெளிவுபடுத்தவும் வள்ளுவர் வாய்மொழி ஊன்றுகோலாக இருக்கிறது. பன்முகப் பார்வை, தனிமனிதன், குடும்பம், உறவினர், சமூகம், குடிமக்கள் என்னும் தளங்களில் மனிதர்கள் பேணவேண்டிய பண்புகள், ஆற்ற வேண்டிய பணிகள் எனப்பன்முகக் கூறுகளை ஒழுங்குற அமைத்து வாழ ஒரு முழுமையான வாழ்வியலை வள்ளுவம் தந்துள்ளது. தமிழ்ச் சமூகத்தில் காலங்காலமாக இருந்து வந்த மரபுத்தளைகளை உடைத்து, பழக்க வழக்கங்களை மாற்றித் தனி மனிதத் தூய்மையை உருவாக்க வள்ளுவர் முயன்றுள்ளார். மது அருந்துதல், புலால் உண்ணல் போன்றவற்றைச் சமுதாயத் தீமைகளாகச் சுட்டிக் காட்டியுள்ளனார். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இதனை வலியுறுத்தியுள்ளார். அன்பு, பண்பு, நட்புப் போன்ற வாழ்வியல் இலக்குகளை எளிய முறையில் மனித மனம் ஏற்கும் வகையில் உரைத்துத் தனி மனித வாழ்க்கையைப் பண்படுத்தியுள்ளார். வள்ளுவரின் நெம்புகோல் அடிகள் மானுடத்தின் மலர்ச்சி எனலாம். மரபுகளைத் தகர்த்துப் புதுமைகளைப் புகுத்தி நிலைநிறுத்துவது வள்ளுவரின் சமுதாயப் பணியாகக் கொள்ளலாம். வள்ளுவரைத் தமிழ் கூறும் உலகின் முதல் தோன்றிய 'பகுத்தறிவாளன்' எனக் கூறலாம். எந்தவொரு கருத்தையும் சிந்தனையையும் உள்ளவாறு ஏற்காமல் பகுத்து நோக்கி உள்ளத் தெளிவு பெற்று ஏற்க வேண்டும் என்பதே வள்ளுவர் கொள்கை.

வள்ளுவர் தந்த திருக்குறளில் அறத்துப்பாலில் இல்லறவியலில் 'இனியவை கூறல்' என்று ஒரு அதிகாரமே ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கே தரப்பட்டுள்ள பத்துக் குறளும் பொருள் பொதிந்தவை. அவற்றைச் சீர் தூக்கிப் பார்ப்பது கூடுதலான பயனைத் தரும்.

'இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்'
( குறள் 91)

திருவள்ளுவர் 'இனியவை கூறல்' என்னும் அதிகாரத்தில் ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும் வஞ்சனை அற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் என்று கூறியுள்ளார்.

'அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.'
( குறள் 92)

முகம் மலரந்து இனிமையாகப் பேசுவது. அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதைவிட மேலான பண்பாகும்.

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கிஅ கத்தானாம்
இன்சொ லினதே அறம்.
( குறள் 93)

முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
( குறள் 94)

இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு நட்பில் வறுமை எனும் துன்பமில்லை.

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற
( குறள் 95)

ஒருவருக்குச் சிறந்த ஆபரணம் பணிவுடனும் இன்சொல்லுடனும் இருப்பதைத் தவிர வேறுஒன்றும் இல்லை.

அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
( குறள் 96)

நன்மை கருதி இனிய சொற்களைப் பேசுவதால் தீமை அகன்று அறம் பெருகும்.

நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
( குறள் 97)

பயன்தரும் பண்பிலிருந்தும் விலகாத இனிய சொற்கள் ஒருவனுக்கு இன்பத்தையும் நன்மையையும் தரும்.

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
( குறள் 98)

பிறருக்குத் துன்பம் தராத முறையில் பேசப்பட்ட இனிய இம்மையிலும் மறுமையிலும் இன்பமே தரும்.

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
( குறள் 99)

இனிய சொற்கள்நல்லபயன் தரகிறது என்பதை அறிந்தும் எதற்காகக் கடுஞ் சொற்களைப் பாவிக்க வேண்டும்!

'இனிய உளவாக இன்னாத கூறல்;
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.'
( குறள் 100)

இனிமையான சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுவிட்டுக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கிவிட்டு விட்டுக் காய்களைப் பறிப்பதற்குச்; சமமாகும்.

இனிய சொற்கள் இருக்கும்போது வன்மையான சொற்களைக் கூறுதல் சுவையான கனிகளைக் கையில் வைத்துக்கொண்டு சுவையற்ற காய்களைத் தேடுவதற்குச் சமானமாகும்.

நம் எல்லோரிடமும் வேறு ஓர் இடம் சென்று தேட வேண்டாதபடி இன்பம் தரும் சொற்கள் இயல்பாகப் பயன்படுத்தும்படியாக நமது நாவகத்தே உள்ளன. ஆனாலும் மக்கள் அழுக்காறு, வெகுளி முதலியவற்றின் உந்துதலால் நற்பயன் தராத இன்னாத சொற்களைக் கூறுகின்றனர். இது யாராலும் விரும்பப்படாத செயலாகும். இக்கருத்தினை ஓர் உவமை மூலம் தெளிவபடுத்துகிறார். இனிய பழங்களும் சுவையற்ற காய்களும் ஒருவர் முன்னால் உள்ளன. அவற்றில் எவற்றை எடுத்து நுகர முடியும்? பழம் என்றுதான் எவரும் கூறவர், அடி முட்டாளைத் தவிர. அதுபோல ஒருவன் தன்னகத்தே உள்ள இன்சொல்லை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

பதினெண் கிழ்க்கணக்கு நூல்களளுள் ஏலாதி என்பதும் ஒன்று. ஏலாதி என்பது ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்ற ஆறு பொருட்களும் குறிப்பிட்ட அளவில்ச் சேர்க்கப்பட்ட ஒருவகைச் சூரணமாகும். இது உடலுக்கு வலிமை, பொலிவு, தெம்பு ஆகியவற்றைத் தரவல்லது. அதே போல இநநூலில் ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஆற கருத்துக்களும் மக்களின் அறியாமை நோயைப் போக்கி அறிவைத் தர வல்லனவாம். உயிருக்கு உற துணையான அறநெறியை விளக்கி உரைக்கும் ஒப்புமை நீரமையால் இந்நூலுக்கு ஏலாதி என்ற பெயர். மருந்துப் பெயர் பெற்ற மூன்று கீழ்க்கணக்கு நுல்களுள் இது மூன்றவதாகும். இது இல்லற நூலாகவும் துறவற நூலாகவும் வீட்டுநெறி நூலாகவும் உள்ளது. இங்கே இன்சொல் பற்றிக் கூறப்பட்டதை உற்று நோக்குதல் சிறப்பாக இருக்கும்.

'இன்சொல் அளாவல் இடம்இனிதூண் யாவர்க்கும்
வன்சொல் களைந்து வகுப்பானேல் - மென்சொல்
முருந்தேய்க்கும் முட்போல் எயிற்றினாய் நாளும்
விருந்தேற்பர் விண்ணோர் விரைந்து.

கேட்கப் பிரியமில்லாத கடின சொல் சொல்லாமல் இனியசொல் சொல்லுதலோடும் செய்ததை விசாரித்தலோடும் இடம் நற் பொருள் உணவு இவைகளைக் கொடுத்தேனும் பிறரை ஆதரிப்பவனைத் தேவர் விருந்தினனாக ஏற்றுக் கொண்டாடுவார்கள் என்பது பொருள்.

இந்த உலகப் படைப்புக்கள் எல்லாம் பயனை மையமாகக் கொண்டனவேயாம். பயன்படுத்தப் படாதன கழிகின்றன. தவறாகப் பயன் படத்தப்படவன தமையை விளைவிக்கின்றன. இந்த உலகில் ஆற்றல் வாய்ந்தவைகளில் 'சொல்' தலையாயது. சொல்லப்படுவது சொல். அறிந்து ஆராய்ந்து சொல்லப்பெறும் சொற்கள் பயனைத்தரும்.

பயனுடைய சொற்களே சொல். பயனற்றவைகள் 'சொல்' என்று கணக்கில் எடுத்துக் கொளளப் பெறுதல் இல்லை. வறுமை பொருள் சார்ந்தது மட்டுமல்ல, சொற்களிலும் வறுமையுண்டு என்பது இளங்கோவடிகள் கருத்த. 'வறுமொழியார்' என்று சிலம்பு கூறுகிறது. பயன் மிகதியும் இல்லாத சொற்கள் என்பது சிலம்பின் கருத்து.

தீய சொற்கள் அவற்றைச் சொல்வோருக்குத் தீமை விளைவிப்பதும் உண்டு. திருக்குறள் சொற்களில் அதிகக் கவனம் செலுத்துகிறது. 'இனியவை கூறல்' 'புறங்கூறாமை' போன்ற அதிகாரங்கள் மூலம் விளங்ககின்றது. இவை போக 'பயனில் சொல்லாமை' என்றுதனியே விரித்தும் கூறப்பட்டுள்ளது. பயனில்லாத சொற்களையும் சொல்லக் கூடாது என்பதாகும். வாழ்க்கை, பயனைக் குறிக்கோளாக உடையது. வாழ்க்கையின் குறிக்கோளை அடைதற்குரிய கருவிகளில் ஒன்று சமூகம். சமூக அமைப்பும் உறவும் சொற்களால் இயக்குவிக்கப்படுகின்றன. சமூகத்தில் இயங்கி நம்முடைய வாழ்க்கைக்கும் ஆக்கம் தரும் நெறிகளைப்பற்றி அறிவது 'அரும் பயன்' ஆகும். அற்ப மகிழ்ச்சி சிறுபொழுது இன்பக் கிளர்ச்சிகளுக்காகச் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது. நீண்ட நெடிய பயன்வேண்டும். அரிய பயனாக இருந்தால் மட்டும் போதாது. திருவள்ளுவருக்குக் கொள்ளை ஆசை! பெரும் பயன் என்கிறார். வாழ்க்கையின் அருமைக்குரிய பயன்களை ஆராய்ந்து அறிக! அந்த அரிய பயன்களைத் தரக்கூடிய சொற்களைத் தெரிவு செய்க. அச்சொற்களையே சொல்லுக.

'அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்
பெரும் பயனில்லாத சொல்
(குறள்: 198)



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்