எம்.ஜி.ஆர் என்னும் ஜீவ நதி - 11

முனைவர் செ.இராஜேஸ்வரி

எம் ஜி ஆர் வளர்த்த அன்பு குழந்தைகள்

எம்.ஜி.ஆர் வாழ்வில் அவர் வளர்த்த சிறுவர் சிறுமிகளை இங்கு நினைவுகூர்வது இன்றியமையாததாகவும் சுவையானதாகவும் இருக்கும் எம்ஜிஆரும் அவர் அண்ணன் சக்கரபாணியும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தபோது எம்ஜிஆரின் மனைவி சதானந்தவதி ஜானகி அம்மையார் அங்கு வந்து அவரோடு சேர்ந்து வாழ சம்மதித்திருந்தார். அப்போது ஜானகி அம்மையார் அவருடைய சின்ன பாட்டியின் பேரக்குழந்தைகள் இருவரை பெற்றோரை இழந்த ஒரு சிறுவனையும் சிறுமியையும் தன்னுடைய வளர்ப்பு குழந்தைகளாக வளர்த்து வந்தார். அவருடைய மகன் சுரேந்திரனோடு அப்பு, ராதா என்ற இந்த இரு குழந்தைகளும் அந்த வீட்டில் வளர்ந்து வந்தனர். சக்கரபாணியின் பிள்ளைகள் 9 பேருடன் இவர்களும் சேர்ந்து எம்ஜிஆரை சித்தப்பா என்று அழைத்தனர்.
 
அப்பு ஜானகி அம்மையாரின் வளர்ப்பு குழந்தை என்றாலும் எல்லோருடனும் அன்பாக மரியாதையாக பழகுவான். சதானந்தவதி அம்மையாருக்கு குழாய் மூலமாக ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு அவர் மூச்சுத் திணறலோடு சிரமப்பட்டுக் கொண்டிருந்த காலம். அது. 1962 இல் எம்ஜிஆர் தீவிரமாக அரசியல் பணிகளிலும் படப்பிடிப்புகளிலும் ஈடுபட்டிருந்த காலங்களில் வீட்டில் மனைவியின் சுகவீனம் அவருக்கு நிம்மதி இல்லாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியது. அப்போது சதானந்தவதிக்கு மூச்சுக்குழலை ஆக்சிஜன் அளவை சரி செய்வதில் ஜானகி அம்மையாரின் வளர்ப்பு மகன் அப்பு கெட்டிக்காரன். அப்பு சற்று திக்கி பேசுவான் அவ்வாறு அவன் பேசும் போது சதானந்தவதி மிகவும் ரசித்து சிரிப்பார். அவர் சிரிக்கிறார் என்பதற்காகவே அவர் சிரிக்கும்படியாக அவன் இன்னும் சற்று திக்கித்திக்கி பேசுவது உண்டு.

சதானந்தவதியும் அப்புவும் தாயும் மகனுமாக ஒருவர் மீது ஒருவர் பற்றும் பாசமும் அன்பும் நேசமும் வைத்திருந்த வேளையில் ஒருநாள் சதானந்தவதிக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது அருகில் இருந்த எம்ஜிஆர் ஆக்சிஜன் குழாய் சரியாக பொருத்தி அதனுடைய அளவை சரி செய்ய தெரியாமல் திணறினார். நர்சும் அந்நேரம் அங்கு இல்லை. சதானந்தவதி 'அப்பு எங்கே அப்பு அப்பு அவனை கூப்பிடுங்கள் என்றார்.
'உடனே அப்புவை கூப்பிட்டு அவன் வந்து அந்தக் குழாயை சரியாக பொருத்தி அவருக்கு உரிய அளவு ஆக்சிஜன் செல்லும்படி வைத்தான். இவர்கள் இருவரும் தாயும் பிள்ளையும் இறைவனால் படைக்கப் படவில்லை என்றாலும் பாசத்தொஎடு பழகி வந்தது எம்ஜிஆருக்கு மிகுந்த மன நிறைவை கொடுத்தது. அதற்கான சூழ்நிலையும் அவரது வீட்டில் இருந்தது.

அடுத்தபடியாக இந்த அப்பு சதானதவதி அம்மையாரிடம் அன்பாக பழகியது போல அவரது சகோதரி ராதா எம்ஜிஆர் மீது வெறித்தனமான அன்பு வைத்திருந்தார். ஜதந்தை மீது பெண் பிள்ளைகள் தன தாய்க்கு போட்டியாக வெறித்தனமாக காட்டும் அன்பை உளவியல் சிக்கல் என்று விவரிக்கும் சி ஜே யுங் என்ற உளவியலார் இதனை எலெக்ட்ரா காம்ப்ளேக்ஸ் என்று அழைப்பார். இந்த பிள்ளைகள் தனது தந்தையின் அருகில் தாயார் வந்தால் கூட கோபப்டுவார்கள். அப்படி ஒரு வெறித்தனமான அன்பு (போசெசிவ்னேஸ்) வைத்திருப்பார்கள். திருமணமானதும் தன கணவர் தனது தந்தையை போல இருக்க வேண்டும் என்று எதற்கெடுத்தாலும் இருவரையும் ஒப்பிட்டு பேசுவர். அன்புள்ள அப்பா படத்தில் நதியா நடித்த கதப்பத்திரம் ஏறக் குறைய இது போன்றது தான். இந்த உளவியல் சிக்கல் தீவிரமடையும் போது இவர்கள் கணவனை விட்டு பிரிந்துவிடுவார்கள்.

எம் ஜி ஆரை அவருடிய வளர்ப்பு மகள் தன் அன்புச் சிறைக்குள் கட்டிப் போட்டிருந்தார் என்றே சொல்லலாம். எம்ஜிஆருக்கு பெண்கள் அனுப்பிய பொங்கல் வாழ்த்துக்கள் எல்லாம் இந்த சிறு பெண் கிழித்துப் போட்டு விடுவார். தன்னை தவிர வேறு எந்த பெண்ணும் எம்ஜிஆரைச் சொந்தம் கொண்டாடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். சிறு பெண் என்றாலும் தன தந்தையிடம் அவளுக்கு பிரியம் அதிகம். இவருக்குமுணுக் முணுக் என்று கோபம் வரும். அப்போது எம்ஜிஆர் இந்த சிறு குழந்தையிடம் பிரியமாக வந்து ''ராதே உனக்கு கோபம் ஆகாதடி'' என்ற பாடலைப் பாடி அவரைச் சிரிக்க வைப்பார்

மைசூரில் தாலி பாக்கியம் படத்துக்கு படப்பிடிப்பு நடந்தது. எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த இப்பெண் எம்ஜிஆர் ஜானகி அம்மா ஆகியோருடன் படப்பிடிப்பு பார்க்க மைசூருக்கு சென்றார். அப்போது ஒரு நாளில் இச்சிறுமி படப்பிடிப்பை பார்க்க வந்தவர் முழுவதும் பார்க்காமல் வேகமாக தன் அறைக்கு திரும்பி விட்டார். படப்பிடிப்பு முடிந்து மாலையில் ஹோட்டல் அறைக்கு வந்த எம் ஜி ஆர் ''எங்கே அவள் திடீரென்று ஆளை காணோமே; என்ன ஆயிற்று'' என்று கேட்டார். ஜானகி அம்மா அதற்கு சிரித்தபடியே ''அவளிடமே கேளுங்கள்'' என்று சொல்லிவிட்டார். என்னவென்று எம்ஜிஆர் காரணம் கேட்டால் ''நீங்க சரோஜாதேவியை கட்டிப்பிடித்தது எனக்கு பிடிக்கலை'' என்று காட்டமாக பதில் உரைத்தார் . எம் ஜி ஆர் சிரித்துவிட்டார் அவர் இந்த பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் சிரித்தபடியே ''உங்க அம்மாவை கட்டிப் பிடித்தால் எனக்கு யார் பணம் கொடுப்பார்? கதாநாயகியைக் கட்டிப்பிடித்தால் தானே பணம் கிடைக்கும்' என்று சொல்லி விட்டு போய் விட்டார். அவளுடைய கோபம் அவருக்கு விநோதமாக இருந்தது. அவளது கோபத்தை ஜானகி மிகவும் ரசித்தார் .எம்ஜிஆர் மீது அந்த சிறுமிக்கு அப்படி ஒரு வெறித்தனமான அன்பு இருந்தது இன்று பேரன் பேத்தி எடுத்து விட்ட சூழ்நிலையிலும் அவர் எம்ஜிஆரின் வளர்ப்புப் பிள்ளைகழில் மிகவும் முக்கியமானவராகவும் சட்ட உரிமை கொண்டவராகவும் திகழ்கிறார்.

மலையாள குடும்பங்களில் சில சடங்கு சம்பிரதாயங்களை வாரிசு முறைப்படி செய்வதற்கு பெண்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. அந்த உரிமைக்கு உரியவர் இந்த பெண் தான். மலையாளிகள் சமுதாயம் பாரம்பரியப்படி பெண்ணுரிமைச் சமுதாயமாகும். தமிழ்நாட்டில் ஆண் வாரிசுக்கு இருக்கும் உரிமை கேரள நாட்டில் பெண் வாரிசுக்கு தான் இருக்கிறது. இதனால் ஜானகியம்மா தன்னுடைய குடும்ப வாரிசாக இந்தப் பெண்ணை சட்டப்படி சுவீகாரம் செய்திருந்தார். இவரே குடும்ப சடங்குகளில் ஜானகி அம்மாவுக்கு சாங்கியங்களைச் செய்யும் உரிமை பெற்றவர் ஆவார்.

எம்ஜிஆர் வீட்டில் பெண்களுக்கு துணிமணிகள் வாங்குவதாக இருந்தால் வீட்டுக்கே ஜவுளி கடைக்காரர்கள் சேலைகலைக் கொண்டு வந்து விடுவர். அப்போது ஜானகி அம்மா இவரை தான் முதலில் தேர்ந்தெடுக்க சொல்வார். இவர் முதன்முதலில் தேர்ந்தெடுத்தது போக எஞ்சியவற்றை தான் ஜானகி அம்மா தன் அண்ணன் பிள்ளைகளுக்கு தெரிவு செய்வார். இவருக்கு முன்னுரிமையும் முதல் பங்கும் தலைப்பேறு உரிமையும் அந்தக் குடும்பத்தில் அளிக்கப்பட்டு வந்தது

எம்ஜிஆருடன் சிறுமியும் சாப்பாட்டு அறையில் சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் பொதுவாக எம்ஜிஆர் தனித்து சாப்பிடும்போது தரையில் அமர்ந்து தான் சாப்பிடுவார். ஆனால் அன்று சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் . சிறுமிக்கு ஜானகி அம்மையார் தான் மூன்று வேளையும் சாப்பாடு ஊட்டி விடுவது வழக்கம். மதிய வேளையில் பள்ளிக்கூடத்துக்கு கார் அனுப்பி வீட்டுக்கு வரவழைத்து சாப்பாடு ஊட்டி விட்டு பின்பு பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைப்பார். அவருக்கு அசைவ உணவுகளில் விருப்பம் கிடையாது .குறிப்பாக கோழி இறைச்சி என்றால் அறவே பிடிக்காது. ஆனால் எம்டன் மகன் படத்தில் வந்தது போல அன்று ஒரு நாள் எம்ஜிஆர் கோழி இறைச்சியை எடுத்து வைத்து எலும்புகளை நீக்கி விட்டு இச்சிறுமிக்கு வாயில் ஊட்டி விட்டார் 'உன் அம்மா ஊட்டினால்தான் சாப்பிடுவாய் நான் ஊட்டினால் சாப்பிடமாட்டாயா ?என்று கேட்டபடி அவளது வாயில் ஊட்டிவிட்டார். ஜானகி அம்மையாரும் அவர் ஆசை மகளும் எம் ஜி ஆறும் வகையாகச் க்கிக்கொண்டார்கள் இவளுக்கு கோழி இறைச்சியை மென்று விழுங்க விருப்பமில்லை. வாயில் வைத்துக் கொண்டே இருக்கிறார். எம்ஜிஆர் குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். திடீரென்று தொலைபேசியின் அழைப்பு மணி ஒலித்தது. எம்ஜிஆர் எழுந்து சென்றுவிட்டார். இந்த பெண் அந்த இறைச்சியை துப்பிவிட்டு ஜானகியம்மா அதை தூர எறிந்து விட்டு எம்ஜிஆர் திரும்பி வந்ததும் சாப்பிட்டாயா என்று கேட்டதற்கு நன்றாக சாப்பிட்டு முழுங்கிவிட்டேன் என்று சொல்லிவிட்டார். இப்படியாக எம் ஜி ஆரும் ஜானகியம்மாவும் அந்தக் குழந்தையிடம் மிகவும் அன்பாக பாசமாக நேசமாக இருந்தனர்.

ஒரு முறை ஜானகி அம்மா அந்தக் குழந்தைக்கு அவளுடைய நீளமான முடியை கத்தரித்துவிட்டு கிராப் வெட்டி விட்டார் இந்தச் சிறுமிக்கு ஒரே அழுகை. ஐயோ தன் நீளமான முடியை கத்தரித்து விட்டார்களே என்று அன்று முழுவதும் அழுது கொண்டிருந்தார். ஜானகி அம்மா எவ்வளவு சமாதானப்படுத்தியும் அவள் கேட்கவில்லை. இதுதான் உன் முகத்துக்கு நாகரீகமாக அழகாக இருக்கிறது என்று சொல்லிப் பார்த்தார் ஆனால் அச்சிறுமி தான் அதனை விரும்பவில்லை தன அப்பா வரவும் அம்மா இப்படி செய்துவிட்டார்கள் என் முடியை வெட்டி விட்டார்கள் என்று சத்தமாக அழுது விட்டாள் எம்ஜிஆருக்கு மிகவும் வருத்தமாக போய்விட்டது ஐயோ பெண்பிள்ளையின் முடியை ஏன்இப்படி வெட்டி விட்டாய் என்று ஜானகி அம்மையைரை கோபித்துக்கொண்டார். இந்த குழந்தையை பிரியமானதைச் செய்ய கூடாதா? உனக்குப் பிரியமானதைச் செய்யவா அவள் இருக்கிறாள் ?என்று ஜானகி அம்மா விடம் சொல்லிவிட்டு இவளைப் பார்த்து ''இனி உன் முடி மேல் கை வைத்தால் என்னிடம் சொல்லு .நான் அவளை நான் அவளை என்ன செய்கிறேன் பார்'' என்று சிறுமியையும் சமாதானப்படுத்தி இருவரையும் சேர்ந்து பின்பு சிரிக்க வைத்தார் .

இவ்வாறு தாயும் தந்தையும் மகளுமாக இவர்கள் ஒருவர் மீது ஒருவர் பாசமாக இருந்து வந்தாலும் இச்சிறுமி தான் பள்ளிக்கூடம் போகும்போது மட்டும் தன் அப்பா கூட வருவதை விரும்பமாட்டாள். அவர் ''நான் படப்பிடிப்புக்கு கிளம்புகிறேன் நீயும் வா உன்னை பள்ளிக்கூடத்தில் விட்டு செல்கிறேன் ''என்று சொன்னால் 'என்னை சற்று தூரத்திலேயே விட்டுவிட வேண்டும் என்று பள்ளிக் கூடத்திற்குள் நீங்கள் காரை கொண்டு வரக்கூடாது பள்ளிக்கூட வாசலில் நிறுத்தி என்னை இறக்கிவிடக் கூடாது' என்றெல்லாம் பல நிபந்தனைகளை சொல்வாராம். அதன்படி எம்ஜிஆரும் சரி என்று கேட்டுக்கொண்டு சற்று தொலைவில் அந்த குழந்தையை இறக்கி விட்டு அது பள்ளிக்கூடத்துக்குள் வெகு தூரம் செல்லும் வரை காருக்குள்ளேயே இருந்து பார்த்துவிட்டு பின்பு அந்த இடத்தை விட்டு புறப்படுவார். இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அந்தக் காலத்தில் சினிமாக்காரர் என்றால் பள்ளிக்கூடத்தில் யாரும் மதிக்க மாட்டார்கள் எனவே 'நான் என்னை சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று யாரிடமும் சொல்வதில்லை' என்று அச்சிறுமி கூறினார். ப செயின்ட் டோமினிக் செயின்ட் டொமினிக் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது நடந்த இந்த சம்பவத்தை அவர் எடுத்துக் கூறியபோது அந்தக் காலத்தில் சினிமாக்காரர்களின் குடும்பத்தார்அவர்களின் குழந்தைகள் பட்ட கஷ்டம் நம் மனக்கண்ணில் தோன்றுகிறது.

இவ்வேளையில் இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது ஜெயலலிதா சிறுமியாக இருக்கும்போது விமானப் பணிப்பெண்ணாக இருந்த அவருடைய சித்தி இப்படித்தான் அவரது முடியை வெட்டி விட்டு கிராப்பாக்கி விட்டார். நெற்றியில் மங்கி கிராப் வைத்தார். அப்போது ஜெயலலிதாவுக்கு ஒரே அழுகை 'என் நீளமான கூந்தலை வெட்டி விட்டார்கள் 'என்று அழுகையோடு எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அவர் வீட்டில் முன் அறையில் இன்றும் இருக்கிறது அந்தப் புகைப்படத்தில் அவருடைய முகம் சோகமாகவும் அவருடைய கண்கள் கண்ணீரை மறைத்த கண்களாகவும் தோன்றும். இந்த புகைப்படம் தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு படம் என்று ஜெயலலிதா சொல்லி இருக்கிறார்.

பெரியவர்கள் தங்களுடைய ஆசாபாசங்களை பிள்ளைகளின் மீது திணிக்கிறார்கள் என்பதற்கு இந்த சிறுமிகளின் முடி வெட்டப் பட்டது ஒரு உதாரணமாகும்.சாதாரண மக்கள் சினிமாக்காரர்களை பார்த்து தன் பிள்ளைகளுக்கு முடிவெட்டி விடுகிறார்கள் என்று நினைக்கிறோம். ஆனால் சினிமாக்காரர்களும் அதுபோலவே சினிமாவைப் பார்த்து தங்கள் பிள்ளைகளுக்கு முடியை வெட்டி விடுகிறார்கள். சாவித்திரி இவ்வாறு தனக்கு முடி வெட்டிவிட்டதாக கமலா செல்வராஜ் சொல்லியிருக்கிறார். ஆக பெற்றோர் என்ற நிலை உண்டான பிறகு சினிமாக்காரர்கள் ஆக இருந்தாலும் சாதாரண மக்களாக இருந்தாலும் எல்லோரும் பிள்ளைகளைப் பார்க்கும் பார்வையும் நடத்தும் விதமும் ஒன்று போலத்தான் இருக்கிறது

எம்ஜிஆர் அப்பு மற்றும் ராதா ஆகிய குழந்தைகள் மீது மிகுந்த அன்பு காட்டி அவர்களை பாசத்தோடு வளர்த்து வந்தார் ராதாவுக்கு திருமணமானதும் தான் ஜானகி அம்மையாரின் அண்ணன் பிள்ளைகள் மூவர் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து அவர்களுடன் இருந்தனர். பின்பு ராதாவும் அவர் கணவரும் இந்த மூன்று பெண்களையும் கோடை விடுமுறைக்கு வெளியுஉருக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்வார்கள். அவ்வாறு அவர்கள் மதுரை மைசூர் பெங்களூர் என்று பல ஊர்களுக்கு இந்த மூன்று சிறுமிகளை அழைத்துக்கொண்டு சென்று இருக்கின்றனர். ஒரு மூத்த சகோதரி யாக இருந்து ராதா மற்ற மூன்று சகோதரிகளுக்கும் உறுதுணையாக இருந்து வருகிறார் இப்போதும் இவர் ராமாவரம் தோட்டத்தில் கீழ்தளத்தில் ஒரு பகுதியில் வசித்து வருகிறார்.



முனைவர் செ.இராஜேஸ்வரி

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்