‘துளிப்பா விருந்தும் மருந்தும்

பேராசிரியர் இரா.மோகன்

‘படைப்புப் பல படைத்து பலரோடு உண்ணும் உடைப் பெருஞ்செல்வர்’ என்பது போல, சிறுகதை, புதினம், நாடகம், மரபுக் கவிதை, துளிப்பா, வரலாற்றுக் கவிதை நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, ஆய்வு, தொகுப்பு எனப் பல்துறை சார்ந்த இருபத்தைந்துக்கு மேற்பட்ட திறமான நூல்களை படைத்துத் தந்து அன்னைத் தமிழுக்கு வண்ணமும் வனப்பும், வளமும் வலிமையும் சேர்த்து வரும் ஓர் ஆற்றல்சால் ஆளுமையாளர் முனைவர் ஔவை நிர்மலா. புதுச்சேரி காஞ்சி முனிவர் பட்டமேற்பு மையத்தின் தமிழ்த்துறைத் தலைவராகச் செவ்வனே பணியாற்றி வரும் முனைவர் ஔவை நிர்மலா, ஹைகூ நூற்றாண்டில் தமது நானூறு ஹைகூ கவிதைகளைத் தொகுத்து ‘நற்றமிழ்த் துளிப்பா நானூறு’ (2017) என வெளியிட்டிருப்பது போற்றத்தக்கது. அகநானூறு, புறநானூறு என்னும் முன்னைத் தமிழ் நூல்களை நினைவுபடுத்துவது போல, முனைவர் ஔவை நிர்மலா பின்னைப் புதிய வடிவில் படைத்துள்ள தம் தொகை நூலுக்கு ‘நற்றமிழ்த் துளிப்பா நானூறு’ எனப் பெயர் வைத்திருப்பது பாராட்டத்தக்கது. தமிழ்ப் பத்து தொடங்கி துளிப்பாப் பத்து வரையிலான நாற்பது தலைப்புகளில் ஒவ்வொரு தலைப்பிலும் பத்துப் பத்தாக நானூறு துளிப்பாக்கள் இத் தொகை நூலில் இடம் பெற்றுள்ளன.

“தாத்தா தமிழாசிரியர்
தமிழ் அறியாப் பேரன்
அந்நியமாகும் உறவு!”
(ப.39)

எனத் தொகுப்பின் முதல் துளிப்பாவே தமிழ் கூறு நல்லுலகில் நிலவும் இன்றைய நடப்பினைத் தோலுரித்துக் காட்டுகின்றது.

“ஆங்கிலத் ‘தலை’யெழுத்து
வடமொழிப் ‘பெயர்’
தமிழன்!”
(ப.40)

என்னும் கவிஞர் நிர்மலாவின் துளிப்பா, இருபத்தியோராம் நூற்றாண்டுத் தமிழனைப் பற்றிய கூர்மையான விமர்சனம் ஆகும்.

ஓய்வே இல்லாமல் இமைப்பொழுதும் சோராமல் அல்லும் பகலும் கணவனுக்காக, குழந்தைகளுக்காக, ஏன் ஒட்டுமொத்தக் குடும்பத்திற்காகவே உழைத்துக் கொண்டிருக்கும் தனது மனைவியைக் கணவன் மற்றவரிடம் அறிமுகம் செய்து வைப்பது எப்படித் தெரியுமா? இதோ, நறுக்கான துளிப்பா வடிவில் கவிஞர் நிர்மலாவின் மறுமொழி:

“ஓய்வில்லா வேலை
‘சும்மாத்தான் இருக்கிறாள்’
அறிமுகம் செய்த கணவன்!”
(ப.74)

இன்று பெற்றோர்-பிள்ளைகள் உறவில் – உணர்வில் – ஏற்பட்டிருக்கும் இடைவெளியை – சிக்கலை – விரிசலை நுண்ணிதின் பதிவு செய்துள்ள கவிஞர் நிர்மலாவின் பிறிதொரு துளிப்பா:

“மகன் வருகை
முதல் தேதி அன்பு
முதியோர் இல்லம்!”
(ப.75)

தொலைக்காட்சியால் – குறிப்பாக, இடைவிடாமல் அதில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்களால் – இன்று இல்லங்களிலும் மனித உள்ளங்களிலும் விளையும் கேடுகளுக்குக் கணக்கே இல்லை. இதனை அழகுற எடுத்துரைக்கும் நிர்மலாவின் துளிப்பா:

“இடையறா நெடுந்தொடர்கள்
தனிமையில் புலம்புகின்றன
திண்ணைகள்!”
(ப.94)

கவிஞர் நிர்மலாவின் அழகியல் பார்வைக்குக் கட்டியம் கூறி நிற்கும் துளிப்பா ஒன்று:

“பச்சையம்மாள்
வகிடெடுத்து வாரினாள்
வரப்பு!”
(ப.54)

மின்னலைப் போல் தாக்கும் ஈற்றடி துளிப்பாவின் உயிர்ப் பண்பு. இவ் வகையில் குறிப்பிடத்தக்க கவிஞர் நிர்மலாவின் துளிப்பா:

“ஆற்றில் நீரில்லை
சேற்றில் காலில்லை
சோற்றில் கை?”
(ப.60)

“கற்புநிலை என்று சொல்ல வந்தால் – இரு கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்!” என்ற பாரதியாரின் புரட்சிச் சிந்தனையே நிர்மலாவின் கைவண்ணத்தில்,

“ஆடவர்க்கும்
விதித்திடுவோம்
தீக்குளிக்கும் கற்பு!”
(ப.50)

என்னும் புதிய துளிப்பாக் கோலத்தினைக் கொண்டுள்ளது எனலாம்.

‘கோரிக்கையற்றுக் கிடக்குது அண்ணே – இங்கு, வேரில் பழுத்த பலா!’ என்று கைம்மைத் துயரைக் கசிந்துருகிப் பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். அவரது வாக்கினைப் பொன்னே போல் போற்றும் கவிஞர் நிர்மலா,

“கோரிக்கையற்றுக்
கிடக்கிறது
நூலில் பழுத்த நிலா!”
(ப.104)

என்கிறார். புத்தகக் கடை விரித்துப் பயன் என்ன? கொள்வார் இலையே? கற்பாரும் கற்றபடி நிற்பாரும் மருந்துக்கும் கூட இல்லையே?

புதுவைத் தமிழ்நெஞ்சன் குறிப்பிடுவது போல், “நற்றமிழ்த் துளிப்பா நானூறு நல்விருந்தாகவும் பகுத்தறிவு மருந்தாகவும் பதிவாகி இருக்கிறது” (‘துளிப்பா விருந்து’, நற்றமிழ்த் துளிப்பா நானூறு, ப.25).

 

'தமிழாகரர்' முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்