எம் ஜி ஆர் ஒரு ஜீவ நதி - 12

 

முனைவர் செ.இராஜேஸ்வரி

குழந்தைகளிடம் எம் ஜி ஆர் காட்டிய அன்பு

எம்ஜிஆர் தன் வீட்டில் பிள்ளைகளை பாசமாக வளர்த்தது போலவே வெளியிலும் வெளியே வரும்போதும் அங்கு காணும் சிறுவர் சிறுமியரிடம் பாசத்தோடும் கண்டிப்போடும் இருப்பது வழக்கம்.

ஓடி வந்த சிறுவர்கள்

ஒரு முறை அவர் ஒரு பொதுக் கூட்டத்திற்கு வந்தபோது இரண்டு சிறுவர்கள் அவர் காரைப் பிடித்துக் கொண்டு ஓடி பின்னால் வந்தனர் அவர்கள் ஓடி வருவதைப் பார்த்ததும் எம்ஜிஆர் ஓட்டுநரை பார்த்து ‘மெதுவாக போ’ என்றார். காரின் வேகம் குறைய குறைய ரசிகர்களின் கூட்டம் காரை சுற்றி அதிகரிக்க ஆரம்பித்தது. கார் நகர முடியாத அளவுக்கு ரசிகர்கள் சுற்றிவளைத்து விட்டனர்.

மெதுவாக காரின் கதவை திறந்து ரசிகர்கள் காயம் படாத வகையில் மெல்ல இறங்கிய எம் ஜி ஆர் அந்த இரண்டு சிறுவர்களையும் தன் இரண்டு கைகளாலும் இறுகப்பிடித்துக் கொண்டார். சிறுவர்கள் பயந்துவிட்டனர். அவரை அடிக்க கையை ஓங்கிய அவர்கள் நடுங்கிவிட்டனர். ஆனால் அவர் அடிக்கவில்லை. அடிப்பதைப் போல நடித்தார் . ‘ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் உங்கள் தாய்மாரின் நிலை என்ன ஆகும்’ என்று அவர்களை சத்தம் போட்டு அதட்டி அனுப்பி வைத்தார்

எம் ஜி ஆர் காரில் வரும்போது பல ரசிகர்கள் அவர் கையைப் பிடிப்பதும் கன்னத்தை தொட்டு பார்ப்பதும் முத்தமிடுவதும் சிலர் கடித்து விடுவதும் உண்டு. ஆனால் எம்ஜிஆர் ஒருபோதும் இதற்கு முகம் சுளிப்பதை இல்லை. அவர்கள் நம்மிடம் மிகுந்த பாசம் வைத்திருக்கிறார்கள் அதை அவர்கள் இவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என் அவர் அதை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டார்.

துப்புரவு தொழிலாளியின் மகள்


என் அண்ணன் படப்பிடிப்புக்காக எம் ஜி ஆர் ஊட்டிக்குப் போயிருந்த சமயம் ஒரு நாள் படப்பிடிப்பு பார்க்க வந்த பொது மக்கள் கூட்டத்தில் இருந்த ஒரு 8 வயது சிறுமி டிச்சுக்குள் விழுந்து விட்டாள். அது ஒரு கழிவு நீர் சாக்கடை. உடனே அந்த இடத்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. அங்கே கூட்டம் கூடிவிட்டது.

படப்பிடிப்பில் இருந்த எம்ஜிஆர் ‘என்ன ஆயிற்று அங்கே போய் பார்த்து விட்டு வா’ என்று தன் உதவியாளரிடம் கூற அவர் போய் பார்த்துவிட்டு வந்து ‘ஒரு சிறுமி ஒரு சாக்கடைக்குள் விழுந்து விட்டாள் அவளை தூக்குவதற்கு சிரமப்படுகிறார்கள்’ என்றார். உடனே எம்ஜிஆர் அந்த இடத்திற்கு வந்து அந்த சிறுமியை அங்கிருந்து எடுப்பதற்கு ஊக்கமளித்து அங்கு இருந்தவர்களுக்கு சில யோசனைகள் சொல்லி அந்தச் சிறுமியை வெளியே தூக்கிக் கொண்டு வர ஆவன செய்தார். பிறகு அவளை குளிக்க வைத்து அவளுக்கு வேறு புத்தாடை வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வையுங்கள் என்று ஒரு 500 ரூபாய் கொடுத்து விட்டு தன் அறைக்கு திரும்பி விட்டார்.

தோட்டி முதல் தொண்டைமான் வரை

எம் ஜி ஆர் தங்கியிருந்த ஓட்டல் வாசலில் மறுநாள் காலையில் சுமார் 150 பேர் வந்து கூடிவிட்டனர். என்னவென்று விசாரித்தால் ‘எம்ஜிஆரை பார்க்க வேண்டும். அவர் எங்கள் பெண்ணை காப்பாற்றி இருக்கிறார். அவருக்கு நன்றி சொல்ல வந்திருக்கிறோம்’ என்றனர். அந்தச் சிறுமி ஒரு தோட்டி மகள் எனவே அங்கு வந்திருந்த அனைவரும் துப்புரவு பணியாளர் அல்லது தோட்டி வேலை செய்பவர்கள். இதைக் கேள்விப்பட்ட எம்ஜிஆர் உடனே தன் அறையில் இருந்து வெளியே அவர்களை பார்க்க கிளம்பினார்.

எம் ஜி ஆர் கிளம்பும் தருணத்தில் அறையில் இருந்த நம்பியார் அசோகன் ஆகியோர் ‘அண்ணே இவர்களை எல்லாம் போய் பார்க்க வேண்டுமா. பேசாமல் இருங்கள் ‘’என்று சொன்னார்கள் .எம் ஜி ஆரோ ‘ஏன் அவர்களைப் போய்ப் பார்த்தால் என்ன என்னை பார்க்க வேண்டும் என்று ஆசையோடு வந்திருக்கிறார்கள். போய் பார்த்தால் என்ன குறைந்து விடவா போகிறேன்’ என்று சொல்லி விட்டு வெளியே வந்துவிட்டார்.

துப்புரவு தொழிலாளர்கள் தங்கள் பெண்ணை காப்பாற்றியதற்காக எம்ஜிஆருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அன்போடு ஒரு ரோஜா பூ மாலை வாங்கி வந்திருந்தார்கள். எம்ஜிஆரிடம் வார்த்தைகளால் நன்றி சொல்லிவிட்டு இந்த மாலையை வாங்கி கொள்வீர்களா என்று பவ்யமாக கேட்டனர். அதற்கு எம் ஜி ஆர் ‘ஓ வாங்கிக் கொள்வேனே. நீங்களே என் கழுத்தில் போட்டு விடுங்கள் ‘என்று சொல்லி தலையை குனிந்து மாலையை பெற்று கொண்டார். அவர்கள் மிகுந்த சங்கடத்துடன் அந்த மாலையை அவருக்கு அணிவித்தனர். பிறகு அந்த மாலையை கழற்றி கையில் வைத்துக் கொண்டு அவர்களிடம் பேசி அவர்களை வழி அனுப்பி வைத்து விட்டு தன் அறைக்கு திரும்பினார்.

அறைக்குள் இருந்த நடிகர்கள் இருவரும் ‘’என்னண்ணே இதப் போயி ரூமுக்குள்ள கொண்டு வந்துகிட்டு, அதை அங்கேயே போட்டுட்டு வர வேண்டியதுதானே’ என்று அந்த மாலையை அருவருப்பாக பார்த்தனர். அப்போது எம்ஜிஆர் ‘ஏன் இந்த மாலை நன்றாகத்தானே இருக்கிறது. இந்த மாலையில் உள்ள பூக்களும் நல்ல வாசனையாகத்தானே இருக்கிறது.. பூவுக்கும் மாலைக்கும் என்ன தோஷம். நான் மாலையை விட அவர்களின் அன்பை நினைத்து பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டு அந்தப் பூ மாலையை தன் மேஜையில் தன் அருகில் வைத்துக் கொண்டார். எம்ஜிஆரைப் பொறுத்தவரை தோட்டியும் ஒன்று
தான்; தொண்டைமானும் ஒன்றுதான்.

வீணை கௌரி

எம் ஜி ஆர் முதலமைச்சரான பிறகு அவருக்கு ஒரு திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சிறுமி கெளரி ஒரு கடிதம் எழுதினாள். அந்தப் பெண் தனக்கு சொந்தமாக வீணையில்லை எனவே தனக்கு ஒரு வீணை வாங்கித் தரவேண்டும் என்று எம்ஜிஆருக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பியிருந்தார். எம்ஜிஆரும் தன் உதவியாளர்களிடம் சொல்லி இந்த முகவரியில் இருக்கும் இந்தச் சிறுமிக்கு உடனே ஒரு வீணை வாங்கி கொடுங்கள் என்று சொல்லிவிட்டார்.

சில மாதங்கள் கழித்து அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிளம்பிக்கொண்டிருந்தார் அப்போது அந்த நிகழ்ச்சியில் கௌரி என்ற சிறுமி வீணை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றிருந்தார் .அந்தப் பெண்ணுக்கு பரிசு கொடுக்கும் நிகழ்ச்சியும் அன்றைக்கு இருந்தது.

எம்ஜிஆர் தன் உதவியாளரிடம் ‘நாம் வீணை வாங்கிக் கொடுத்தோமே அந்த கௌரி தானா இவள்’ என்று கேட்டார். அப்போது உதவியாளர் ‘ ‘கௌரிக்கு இதுவரை வீணை வாங்கி கொடுக்கவில்லை அது மைசூரில் இருந்து வாங்கிக் கொண்டு வர வேண்டும் அங்கு இன்னும் தயாராகவில்லை’ என்று ஏதோ சாக்கு போக்கு சொல்ல எம்ஜிஆருக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. அந்த அதிகாரியிடம் ஒன்றும் பேசாமல் கிளம்பிவிட்டார்.

எம் ஜி ஆர் விழா மேடைக்கு வந்தார். சிறுமிக்கு பரிசளிக்கும் நேரம் வந்தது. அப்போது அந்த சிறுமி தன கையிலருந்த சின்ன கடிதத்தை எம்ஜிஆரிடம் ரகசியமாக கொடுத்தாள். அந்தக் கடிதத்தைப் பிரித்துப் பார்த்தார். நான் ‘இரவல் வீணையில் பயிற்சி செய்து இந்த பரிசு பெற்றிருக்கிறேன். உங்களிடம் வீணை கேட்டிருந்தேன் எனக்கு இன்னும் வந்து சேரவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். அந்தப் பெண்ணின் மனஉறுதியை எண்ணி எம் ஜி ஆர் புன்னகை புரிந்தார்.

எம் ஜி ஆர் அந்த பெண்ணை தன் அருகில் நிறுத்தி ‘சற்று பொறு நீ கேட்டது கிடைக்கும்’ என்று சொல்லிவிட்டு தன் மெய்க்காப்பாளராக பார்த்தார். அவர் உடனே காரில் இருந்து ஒரு பெரிய வீணை யை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார் வீணை வாங்கித் தராமல் சாக்குப்போக்கு சொன்ன அரசு அதிகாரிக்கு எப்படி திடீரென்று வீணை வந்தது என்று புரியவில்லை. எம்ஜிஆர் ராமாவரம் தோட்டத்தில் இருந்து விழா மேடைக்கு வரும் வழியில் பூம்புகார் கைவினை நிலையத்தில் இருந்து நல்லதோர் வீணை ஒன்றை வாங்கி வந்திருந்தார்

சிலவேளைகளில் அரசாங்க அதிகாரிகள் எம்ஜிஆரின் அன்புள்ளத்தையும் வள்ளல் குணத்தையும் புரிந்து கொள்ளாமல் அலட்சியமாக இருந்து விடுவதுண்டு. அது எம்ஜிஆருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விடுவதும் உண்டு. ஆனால் எம்ஜிஆரின் கவனத்திற்கு அச்செயல் வந்துவிட்டால் அவர் உடனே அதை சரிசெய்யும் முயற்சியில் இறங்கி விடுவார். அவ்வாறு அன்றைக்கு அந்த சிறுமிக்கு வீணை கிடைத்தது .

குட்டி ஜாக்சன்


ஜானகி அம்மையாரின் அண்ணன் மகள் கீதா மது மோகனின் மகன் மூன்று வயது சிறுவனாக இருந்த காலத்திலேயே மைக்கேல் ஜாக்சன் பாட்டுக்கு வீட்டில் நடனம் ஆடுவான் அதைப் பார்த்து எம்ஜிஆர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார். அவரைப் பார்க்க வரும் அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் நண்பர்களிடமும் ‘இதோ இவன் மிகச் சிறப்பாக நடனம் ஆடுவான் பாருங்கள்’ என்று சொல்லி அவனை நடனமாடச் சொல்லுவார்.

சென்னையில் எங்கேயாவது மேலைநாட்டு நடன நிகழ்ச்சிகள் நடந்தால் அதற்கு எம் ஜி ஆர் செல்வதாக இருந்தால் கீதாவையும் அவர் மகனையும் கண்டிப்பாக அழைத்துச் செல்வார் .அவனுக்கு விருப்பமும் ஈடுபாடும் இருக்கும் துறையில் அவனுக்கு நிறைய அறிவை ஊட்ட வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருந்தது. கீதா, சுதா, லதா ஆகியோர் நடனம் கற்று வரும் நாட்களில் அவர்களை நடனம் ஆடச் சொல்லி பார்த்து மகிழ்வார். தானும் சில நடன ஸ்டெப்களைஅவர்களுக்கு போட்டு காட்டி அவர்களுக்கு சொல்லித் தருவார். நடனத்தில் எம் ஜி ஆருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அவர் சினிமாவில் அறிமுகமான் புதிதில் குமரன் ஆசான் என்பவரிடம் நடனம் கற்றார். .எம் ஜி ஆரும் மாலதியும் ஆடிய சிவ தாண்டவம் புகழ் பெற்றதாகும். சென்னையில் எம் ஜி ஆர் இரஷ்யக் கலைக்குழுவினரின் நிகழ்ச்சியைக் கண்டு ரசித்த போது இச்சிறுவனை தன் மடியில் வைத்துக் கொண்டார்.

குழந்தைகளுடன் டிவி பார்க்கும் எம் ஜி ஆர்


எம்ஜிஆர் வீட்டில் இருக்கும் நேரங்களில் பகல் வேளையில் தன் அறையில் உள்ள பெரிய டீவியில் தன் பிள்ளைகளை அழைத்து நல்ல நிகழ்ச்சிகளைப் பார்க்கும்படி சொல்லுவார். அந்த நிகழ்ச்சிகள் பெரும்பாலும் விளையாட்டு அல்லது குத்து சண்டையாக [WWF] இருக்கும். விளையாட்டு என்றால் கிரிக்கெட் கால் பந்தாட்டம் போன்றவையாக இருக்கலாம் குத்துச்சண்டை என்றால் டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எஃபாக இருக்கும். இதில் பெண் பிள்ளைகளுக்கு அவ்வளவு சுவாரஸ்யம் இருக்காது என்றாலும் எம்ஜிஆர் அழைத்து காண்பிக்கின்றார் என்ற காரணத்திற்காக அவர்கள் அமைதியாக உட்கார்ந்து அந்த நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவருக்கு மிகவும் பிரியமானது மல்யுத்தம் குஸ்தி போன்றவை என்பதால் அவர் அந்த சண்டைகளை ஆர்வத்தோடு பார்ப்பார். தன்னுடைய ஆர்வத்தை வீட்டில் அந்த சிறுவர்களோடு சிறுமிகளோடு பகிர்ந்து கொள்வதில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி.

சினிமாவில் குழந்தைகளுக்கு எம் ஜி ஆர் தரும் முத்தம்


எம் ஜி ஆர் தன் வீட்டில் பிள்ளைகளிடம் காட்டிய அன்பையும் பாசத்தை அவர் படங்களிலும் காட்டினார். பெற்றால் தான் பிள்ளையா படத்தில் ஒரு சிறுவன் கீழே விழுந்த காசை எடுத்துக் கொடுத்ததும் அவனுக்கு நெற்றியில் முத்தம் கொடுத்து பாராட்டுவார்.

எம் ஜி ஆர் தனது படங்களில் சிறுவர்களுக்கு முத்தம் கொடுப்பதில் கூட ஒரு கண்ணியத்தை பின்பற்றுவார். நம்நாடு படத்தில் சேரியில் வாழும் தன்னை வந்து பார்த்துச் செல்லும் அண்ணன் குழந்தைகளை வழியனுப்பும்போது வளர்ந்த பெண் பிள்ளையான குட்டி பத்மினியை நெற்றியிலும் சிறுவனாக நடித்திருக்கும் ஸ்ரீதேவிக்கு கன்னத்திலும் முத்தம் கொடுப்பார். வளர்ந்த பெண்பிள்ளைக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கக் கூடாது என்ற நல்ல பழக்க வழக்கத்தை அவர் அந்த படத்தில் ரசிகர்களுக்குக் கற்பித்தார்.

இது போன்ற பல சுவையான படிப்பினை தரும் சம்பவங்கள் எம் ஜி ஆர் வாழ்க்கையில் ஏராளமாக நடந்துள்ளன.
 

 


முனைவர் செ.இராஜேஸ்வரி
 



 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்