'யாதும் ஊரே யாவரும் கேளிர்'

திருமதி செல்லையா யோகரத்தினம் M.A

'யார் உழைப்பால் நாம் வாழ்கின்றோமோ அந்த மக்களின் துயரங்கள் நம்மை அலக்கழித்து நமது நாடி நரம்புகளில் எல்லாம் கலந்து நம்மைத் தூங்க விடாமல்ச் செய்கின்றதோ, அதுவே நாட்டுப்பற்றின் ஆரம்பம்.' என்றார் சுவாமி விவேகானந்தர். மனிதன் என்பவன் தனி மரமல்ல. அவன் தானாய் உருவானவன் அல்ல. சமூகத்தினால் உருவாக்கப்பட்டவன். உண்ணும் உணவு, உடுத்தும் உடை, வாழும் வாழ்க்கை இவையெல்லாம் அவனுக்கு முன்னே இருந்தவர்கள் சிந்திய வியர்வைத் துளிகளால் கிடைத்தவையாகும். வியர்வைத் துளிகளைச் சிந்தியவர்களை ஒன்றும் தலையிலே வைத்துக் கொண்டாட வேண்டும் என்றில்லை. ஆனால் வந்த பாதையை ஒரு துளி நேரமாவது நெஞ்சில் நிறுத்திப் பார்க்க வேண்டும். நாம் வாழ்வது ஒரு யந்திர உலகம். இன்று உலகமே ஒரு குடைக்குள் ஒடுங்கிவிட்டது. நாடுகள் தாண்டிக் கண்டங்கள் தாண்டி 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற ஒளவை சொல்லுக்கு அமைய வேலை வாய்ப்புக்கான பயணங்கள் உருவாகிவிட்டன. யார் யாருக்கெல்லாம் வல்லமை உள்ளதோ அவர்களுக்கெல்லாம் அத்தனை நாடுகளின் வாசல்களும் திறக்கப்பட்டுள்ளன.

தமிழில் பேச்சாளர்கள் எவராயினும் வெளியிடங்களுக்கோ அல்லது வெளி நாட்டிற்கோ பேசச் சென்றால் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற இந்தப்பாடல் வரியை எப்பொழுதும் மேற்கோள் காட்டிப் பேசத் தவறுவதில்லை. ஆனால் அனைவரும் இந்தப் பாடலின் முதல் வரியை மட்டுமே எடுத்துக்காட்டிவிட்டு வேறு கருத்துக்களைப் பேசத் தொடங்கிவிடுவார்கள். அதே போல் இந்தப் பழந்தமிழ்ப் பாடலை அவர்கள் முழுமையாகப் படித்திருப்பார்களா அல்லது அதன் பொருளை தெளிவாகத் தெரிந்து கொண்டிருப்பார்களா என்பதும் யாருக்கும் புரியாது. தமிழின் பெருமையே தமிழருக்குப் பெருமை. 'உலகம்' தமிழில் வழங்கும் மங்கலகரமான தமிழ்ச்சொல். இந்த உலகம் வெறும் உலகமல்ல, தமிழ்கூறும் நல்லுலகம். உலக நாடுகளின் ஒருங்கிணைந்த அமைப்பு ஐக்கிய நாடுகள் சபை. அங்கு பொறிக்கப் பட்டுள்ள ஒற்றை வாசகம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழ்க் கவிஞன் கணியன் பூங்குன்றனார் எழுதி வைத்த புறநானூற்றுப் பாடல் வரி 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. தமிழுக்கு இதுமட்டும் தான் பெருமையா? தமிழின் சிறப்பினை உணர்ந்த பல மேனாட்டறிஞர்கள் தமிழகத்திற்கு வந்து தங்கி தமிழை விரும்பிக் கற்றனர். கற்றதோடு மட்டுமன்றி நூல்களையும் இயற்றித் தந்தனர். தமிழ் மாணவர்களாகவே வாழ்ந்து மறைந்துவிட்ட வரலாற்றை தமிழ் இலக்கிய வரலாறு பக்கம் பக்கமாக எடுத்து இயம்புகின்றது. குறிப்பாகச் சொல்வதென்றால். அறிஞர் கால்டுவெல், ஜி.யு.போப், டாக்டர் வின்ஸ்லோ, பெர்ஸிவல் ஐயர், வீரமாமுனிவர் போன்றவர்கள். அவர்தம் இதயங்களில் தமிழ் குடிகொண்டிருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.

இந்த நூற்றாண்டில் வாழ்ந்த அமெரிக்க எழுத்தாளர் வெண்டல் எமிலிக் உலகம் முழுக்க ஒரே படை வரிசை, ஒரே நீதிமன்றம் என்ற ஓர் உலகக் கனவு கண்டார் என்பார்கள். எல்லோருக்கும் இதுபுதுமை ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கணியன் பூங்குன்றனார் எனும் தமிழ்ப் புலவர், உலகம் எல்லாம் ஒரே ஊரே, வாழும் மக்கள் எல்லோரும் ஒரே உறவினரே என்ற அற்புதச் சிந்தனை, நம் தமிழ்ப் புலவர் உள்ளத்தில்த் தோன்றிய தனிப் பெரும் தத்துவமாகும். இதனைச் சிந்தித்துப் பார்த்தால், தமிழர் மதத்தையும், அறிவியலையும் முழுமையாக விளக்குகின்றது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாதது என்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனது
கல்பொழுது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப்படுஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப்படூம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆதலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
(புறநானூறு 192)

பொருள்:

'சொந்த ஊர் என்று எமக்கு எதுவுமில்லை. எல்லாமே எமக்கு ஊர்தான்.

கெடுதலோ நல்லதோ நமக்குப் பிறரால் உண்டாகாது. வருத்தமும், அது தணிந்த பின் வரும் மகிழ்வும் தாமாகவே வருவன, பிறர் தருவன அல்ல.'

'இறப்பு உலகிற்குப் புதியதல்ல. மனிதன் தோன்றிய நாள்த்தொட்டு மரணம் தொடர்ந்தே வருகிறது. அது போல் வாழ்வு இனிமை மிக உடையது அல்ல. ஆனால் துன்பம் மிக உடையது என்று சொல்லத் துடிப்பதுமில்லை.

மின்னல் மின்னி முழங்க, இடி இடித்து வானம் துளித்துளியாய்ப் பெய்யும் குளிர்ந்த மழை நீர் அதோடு இருந்து விடாமல், மலைச்சரிவுகளில் ஒலி எழும்ப அருவியாய்ப் பாய்ந்து தரையில் பெரிய ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும். அதில் மிதக்கும் தெப்பம் போல உயிர்க்குலமும் அது விதித்த வழிச் செல்லும் என்ற உண்மையைக் கற்றறிந்து தெளிந்த அறிவிற் சிறந்த பெரியோர்கள் உணர்ந்து அறிந்து கூறியுள்ளனர். ஆகையால் நாங்கள் பெருமைக்குரிய பெரியோரைக் கண்டு அதிசயப் படுவதுமில்லை அதற்காகச் சிறியோரைப் பழிப்பதும் இல்லை.

புறநானூற்றுப் பாடல்களிலே பெரிதும் அனைவராலும் போற்றிப் புகழப்படும் பாடல் இதுவாகும்.

இந்தப் பாடல் புலம் பெயர்ந்து செல்லும் ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கைப் பாடமாக அமையும். பணிக்காகச் செல்பவர்கள் தம்முடைய நாட்டோடு அந்த நாட்டை ஒப்பிடக்கூடாது. அவர்களைப் பெரியவர்கள் என்று நினைத்தால் தாழ்வு மனப்பான்மை வரும். சிறியவர்கள் என்று நினைத்தால் அவர்கள் மேல் கோபம் வந்து பகையாக மாறும். தன்னம்பிக்கை உடையவர்களுக்கு மட்டுமே வாழ்வினை எதிர்கொள்ள முடியும். அப்படிப்பட்டவர்களே எல்லோரோடும் இயல்பாகப் பழகுவார்கள் என்பது சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.

புலம் பெயர்ந்து செல்பவர்களுக்கு மட்டுந்தானா? இல்லவே இல்லை. வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. மேலும் ஒரு பெண் திருமணமாகி கட்டிய கணவனுடன் புது வாழ்வு தொடங்குகிறாள். எப்பொழுதும் பெண்பிள்ளைகள் வீட்டிலே செல்லமாகவே வளர்க்கப்படுவார்கள். அதனாலே எப்படியும் புதுவாழ்க்கை சிறிது சிரமமாகவே இருக்கும் அதற்கு இந்தக் கண்ணதாசனின் பாடல் வரிகள் பொருத்தமாக இருக்கும். 'மணமகளே மருமகளே வா வா.....' என்னும் பாடல் அறிவுரை சொல்கிறது. அதோடு கணியனின் பாடலும் துணை போகிறது. எதற்கும் முழுப் பாடலையும் தெரிந்து கொள்வது சிறப்புடையதாகும். மகிழ்ச்சி பொங்கும்.

மணமகளே மருமகளே வா வா - உன்
வலதுகாலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா – தமிழ்க்
கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா.


'பணமிருக்கும் பலமிருக்கும் உங்கள் வாசலில் - நல்ல
குணமிருக்கும் குலமிருக்கும் எங்கள் வாசலில்
பொன்மணமும் பொருள் மணமும் உங்கள் வாசலில் - புதுப்
பூ மணமும் பா மணமும் எங்கள் வாசலில்


கல்வி மகள் வாசம் செய்யும் வாசல் எங்கள் வாசல்
கற்றவர்கள் தலைவணங்கும் கோவில் எங்கள் வாசல்
செல்வமகள் வாசமலர் வாழவந்த வாசல்
செல்வமுடன் பகழ் மணமும் சேரவந்த வாசல்

தங்க நகை வைர நகை நிறைந்திருக்காது - இங்கு
தங்க வரும் பெண்மணிக்கு சுமை இருக்காது
பொங்கி வரும் புன்னகைக்குக் குறைவிருக்காது அதைப்
பொழுதெல்லாம் பார்த்திருந்தால் பசி எடுக்காது.

இலக்கியங்கள் கற்பனையை மட்டும் சொல்லவில்லை. மனிதாபிமானத்தையும் வளர்க்கிறது. மனித மனங்களை மென்மைப் படுத்துகிறது. மேன்மைப் படுத்துகிறது. பண்பாட்டைக் காக்கிறது. உணவு ஒரு மனிதனின் உடலை வளர்த்து உயிரைக் காக்கிறது. இலக்கியம் ஒரு மனிதனின் ஆளுமையை வளர்த்து, வாழும் வாழ்க்கையைக் கற்றுத்தருகிறது. இந்த இலக்கியங்கள் வாழ்வியலின் வெளிப்பாடு. அதனால் சங்க இலக்கியங்கள் காலப் பெட்டகங்களாக இன்றும் திகழ்கின்றன. சங்கத் தமிழ் இன்று உலகத்தமிழ். பல் வேறு காரணங்களுக்காக இன்று புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளின் சட்ட திட்டங்களைப் போற்றி மதித்து அந்நதந்தச் சூழலுக்கேற்பத் தங்களை மாற்றித் தங்கள் தாய்மொழியையும் பண்பாட்டையும் பேணிக் காத்து தத்தம் பணிகளைச் செய்துவருகின்றனர்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியனின் கண்ணியமான வரிகள் உலகத்தையே நினைக்க வைத்தது. உலகமோ இன்று தமிழை நினைத்துக் கொண்டிருக்கிறது. நாம் மொழியையும் இலக்கியத்தையும் பேணிக் காக்கவேண்டும்.

வாழ்க தமிழ்! வெல்க தமிழன் பண்பாடு! வளர்க தமிழ்ப் பாரம்பரியம்!!!



 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்