அந்நியர்களும் அறிந்திரா வானவூர்திகளும் (ALIENS & UFO)

கனி விமலநாதன்


அறிவியற் தொடர் - 16


சென்ற தடவையில் அலலு சில தப்புகள் அதாவது குற்றங்கள் செய்திருந்தாரெனக் கூறியிருந்தேன் அல்லவா. அவற்றை அறிந்து கொண்டே தொடர்ந்து செல்வோம்.

புவியினருக்கு அரைமெய்யிரம் (மில்லியன்) ஆண்டு முன்னராக அணுக்குண்டினைக் கண்டு பிடித்திருந்த நிபுறுவினர், அணுக்குண்டின் பாரதூரமான விளைவுகளையும் அறிந்திருந்தனர். அதனால் எவ்விடத்திலும் அணுசக்தியை, அணுக்குண்டு வடிவிற் பெறக்கூடாது, எந்க காரணத்திற்காகவும் அணுக்குண்டுகளைப் பாவிக்கக்கூடாது என்ற சட்டமொன்றினையும் போட்டிருந்தார்கள். இதனை அலலு பதவிக்கு வருமுன்னரே நிபுறுவிற் கொண்டிருந்தார்கள். அச்சட்டத்தை மீறி, சக்தியைப் பெறுவதற்காக, அணுக்குண்டினை யார் பாவித்தாலும் அது மிகவும் பாரதூரமான குற்றமாகக் கருதப்பட்டது. அதற்கு கடுமையான தண்டனையும் வழங்கினார்கள். ஆனால், நிபுறுவின் சுற்றுப்புறச் சூழற் பாதுகாப்பிற்காக, நிபுறுவினரின் அச்சட்டத்தை மீறித்தான், தான் பதவியில் இருக்கையில், அலலு எரிமலைகளை உயிர்ப்பிக்க அணுக்குண்டுகளைப் பாவித்திருந்தார். அதனால்தான் அவர் பதவியிழந்ததும், நிபுறுவை விட்டு ஓடவேண்டி வந்தது.

விண்கற்பட்டையை அண்மித்து விட்ட அலலுவுக்கு அதனைத் தாண்டி உள்ளே நுழைவது சிக்கலாக இருக்கிறது. ஏனெனில் விண்கற்பட்டை மிகப் பெரிய இடத்திற்குப் பரவியிருந்தது. இந்த விண்கற் பட்டையினைப் பற்றி இன்னமும் கொஞ்சம் தெரிந்து கொண்டோமேயானால், அலலு ஏன் அதனைக் கடக்கச் சிக்கற்பட்டர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

(படம் விண்கற்பட்டையில் உள்ள விண்கல் ஒன்றினைக் காட்டுகிறது.)

இந்த விண்கற்பட்டையானது சராசரியாக 150,000,000 கிலோமீற்றர் தடிப்பானது. இத்தூர அளவானது, எங்களது புவியிற்கும் கதிரவனுக்கும் (சூரியன்) இடைப்பட்ட தூரமாகும். இத்தூரம் அளவிற் பெரியதாக இருப்பதால், இதனை 'ஒரு வானியல்அலகு தூரம்' என வானியலாளர்கள் குறிப்பிடுவார்கள். இனி, 4 மெய்யிரம் (மில்லியன்) பாறைகளுக்கும் அதிகமான பாறைகளைக் கொண்ட விண்கற்பட்டையில் 200க்கும் அதிகமானவை 974 கிலோமீற்றர் அகலமான இராட்சதப் பாறைகள். வைரம், காரீயம் போன்ற பல விலைமதிப்பற்ற பெருங்கற்களையும் கொண்ட இப்பாறைகள் ஓவ்வொன்றிக்கும் இடைப்பட்ட சராசரித் தூரம் 600,000 கிலோமீற்றர் என விஞ்ஞானிகள் கணித்துள்ளார்கள். சராசரியாக செக்கனுக்கு 26 கிலோமீற்றர் கதியிற் கதிரவனை வலம்வரும் இக்கற்களிற் கதிரவனுக்கு கிட்டவாக உள்ளவை கூடிய கதியிலும், தூரமாக உள்ளவை குறைவான கதியிலுமாக வலம் வருகின்றன.

இந்த விண்கற்பட்டையைக் கடப்பது, அதிலும் விரைவாகக் கடப்பதென்பதுதான் அலலுவுக்குச் சிக்கலாக இருந்தது. எனவே, விண்கற்பட்டையினுள் தனது விண்கலம் செல்வதற்கான பாதையை உண்டாக்குவதற்கு அணுக்குண்டினைப் பாவிக்கிறார். இதுதான் அவர் மீண்டும் செய்த தப்பாகிறது. ஏனெனில், நிபுறுவினர் அணுக்குண்டினை எங்குமே பாவிக்கக்கூடாது என்ற சட்டத்தைப் போட்டிருந்தார்கள். விண்கற்பட்டை நிபுறுவில் இருந்து வெகுதூரத்தில் இருந்ததாலும், இத்தப்பினைச் செய்கையில் தனக்கு எதிரானவர்கள் எவரும் அவ்விடத்தில் இல்லை என்பதாலும் அலலு தைரியமாக அதனைச் செய்து, விண்கற்பட்டையைத் தாண்டிப் புவியில், பாரசீக வளைகுடாப் பகுதியில் வந்திறங்குகிறார்.

ஏற்கனவே புவியில் உள்ள தங்கம் பற்றிய விபரத்தை அறிந்து வைத்திருந்த அலலு தனது தேடல் முயற்சியைத் தொடங்கி வெற்றியும் பெறுகின்றார். அலலு தனியவே புவியிற்குது; தப்பி வரவில்லை. அவருடன் சேர்ந்து அவரது விமானியும் சிறந்த பொறியியலாளருமான ஒருவரும் வந்திருந்தார். புவியில் ஏராளமான தங்கம் இருப்பதைக் கண்டு பிடித்த அலலு, உடனடியாகவே விபரத்தை நிபுறுவின் அனுவிற்கு; அனுப்புகிறார். அவர் தெரிந்து வைத்திருந்த உடனடித் தொலைதொடர்பு சாதனப் பொறிமுறை அலலுவுக்கு உதவியாக இருந்தது. செய்தியும் அனுவிற்குக் கிட்டுகிறது. நிபுறுவிற்குத் தேவையான தங்கம் பற்றிய தனது செய்தியைப் பேரம் பேசி நிபுறுவிற்கு தான் திரும்பிப் போவதற்கான வழிவகைகளை அலலு தேடினார். அலலுவின் செய்தியைப் பெற்ற அனு, நிபுறுவின் தலமை விஞ்ஞானியான என்கி
(ENKI) என்பவரை, அலலுவின் கண்டுபிடிப்புப் பற்றிய உண்மைகளை அறியும் பொருட்டு புவியிற்கு அனுப்புகிறார்.

என்கியும் புவியிற்கு வரும் வழியில் விண்கற்பட்டையைத் தாண்டித்தான் வருகிறார். ஆனால் அணுசக்தியையோ அல்லது அணுவாயுதங்களையோ தனது பாதையைச் செப்பனிடுவதற்குப் பாவிக்கவில்லை. பதிலாக தன்னாற் கண்டுபிடிக்கப்பட்ட, பக்க விளைவாபத்துகள் இல்லாத நீர்–ஐதரசன் என்ற பொறிமுறையில் இருந்து சக்தியைப் பெற்றுத் தனது பாதையை உருவாக்கிக் கொண்டார். வரும்வழியில் அலலு அணுவாயுதத்தின் மூலமாகவே விண்கற்பட்டையைத் தாண்டினார் என்பதையும் கண்டு கொண்டார்.

புவியில் தனது விண்கலத்தினை தரையிறக்கு முன்னராக, என்கி பல முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை எடுத்திருந்தார். முதலில் செவ்வாயில் தரையிறங்கியிருக்கிறார். பின்னர் சந்திரத் தரையிலும் இறங்கியிருக்கிறார். அதன் பின்னராக புவியைச் சுற்றி வானிலே வலம் வந்து புவியின் விபரங்களை அறிந்து கொண்டார். புவியின் சுற்றளவு, கதிரவனைப் புவி சுற்றி வருவதற்கு எடுக்கும் காலம், புவியின் சுழற்சிக் காலம், புவியிற்கான நாட்காட்டி, புவியைச் சுற்றிய 360 பாகையில் உள்ள வான்வெளி பற்றிய விபரங்கள், போன்ற பலவிடயங்கள் வானவியலாளரான அவரால் அவதானிக்கப்பட்டது. அதன் பின்னரே, புவியில் அலலுவின் விண்கலத்தைக் கண்டு பிடித்து அதனருகில் தனது விண்கலத்தை இறக்கிக் கொண்ட என்கி, அலலுவின் இருப்பிடத்தைச் சுற்றி தனது பாசறைகளை அமைத்துக் கொள்கிறார். புவியில் தங்கத்தின் இருப்பினையும்; கண்டு பிடிக்கிறார். அதைவிட முக்கியமாக, அலலு நிபுறுவில் இருந்து கொண்டு வந்த 7 அதிபயங்கரமான, ஆயுதங்கள் பற்றிய விபரங்களையும் அவை ஒளித்து வைக்கப்பட்டுள்ள இடங்களையும் அறிந்து கொள்கிறார். ஆனால் அவ்விடங்கள் பற்றிய விபரங்களை நிபுறுவினர் சுமேரியர்களுக்குக் கூறவில்லை. அதனால் சுமேரியர்களின் களிமண் தகடுகளில் அவை ஒளித்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் குறிப்பிடப்படவில்லை. (விவிலியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் 'சோதாம் கொமார' பட்டணங்களின் அழிவுக்கு இவ்வாயுதங்களில் ஒன்றே பாவிக்கப்பட்டிருக்கும் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.)

இவை எல்லாம் இப்படியிருக்க, அலலுவின் வம்சத்தவரும் புவியிற்கு வருகிறார்கள், அனுவின் ஆட்களும் புவியிற்கு வருகிறார்கள். அலலுவின் ஆட்களின் விண்வெளி ஆய்வுகூடமொன்று 300 பேர்களுடன் வானிலே புவியைச்சுற்றி வலம் வந்து புவியிலே நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டு வந்தது. இதனை இஜிஜி
(IGIGI) என்றார்கள். நிபுறுவினரது விண்வெளி ஆய்வுகூடம் இன்னமும் புவியின் வானிலே பறந்து கொண்டிருப்பதாகவும், அதிலிருந்து நிபுறுவினர் புவியினை நோட்டம் விடுவதாகவும் சில வானியல் அவதானிகள் கூறுகின்றார்கள். இந்த ஆய்வுகூடம்தான் நிபுறுவினர் புவியினரின் நடவடிக்கைகளை அறிவதற்கு உதவியாக இருக்கின்றது எனவும் கருதுகின்றனர். இவ்வாய்வுகூடத்தில் நின்றும் இடைக்கிடை இரகசியமாக வந்து போகும் நிபுறுவினரை வேற்றுக்கிரகவாசிகள், அவர்களது விண்கலங்கள்தான் யூஎவ்ஓ என்பதும் அவர்கள் கூறிக் கொள்ளும் விடயங்கள் ஆகும்.

நிபுறுவினரின் புதிய இடமாகிய புவியில், கேட்பாரற்றுக் கிடந்த தங்கத்திற்கான உரிமப் போட்டி இருபிரிவினருக்கும் ஏற்படுகிறது. ஈற்றிலது இருபகுதியினருக்குமான சண்டையாக மாறிவிடுகின்றது. பலகாலமாக நடந்த அச்சண்டையில் இறுதியில் என்கியின் கை ஓங்கி அவர்கள் வென்று விடுகிறார்கள். ஆதன் பின்னர் என்கி புவியில் தன்னை 'அனு'வெனப் பட்டம் சூட்டிக் கொண்டு நடவடிக்கைகளைத் தொடங்குகின்றார்.

இதுவரையில் புவியின் உயிரினங்களின் நிபுறுவினர் கைவைக்கவில்லை என்றே கூறவேண்டும். ஏனெனில் யாருடைய ஆதிக்கத்தின் கீழ், தங்கத்தை எடுப்பது என்ற போட்டியே இருந்தது. என்கியின் ஆட்;களின் வெற்றியின் பின்னர்தான் புவியிலே நிபுறுவினருக்குப் புது அத்தியாயம் தொடங்குகின்றது. இதற்கிடையில் இன்னொரு விடயத்தையும் கூற வேண்டியுள்ளது.

அனுவின் மகன்தான் என்கி. இவர் எப்படிப்பட்டவர் என்பதையும் சுமேரியக் களிமண் தகடுகளில் எழுதியுள்ளனர். பௌதிக விஞ்ஞானியான என்கி, மிகப் பெரிய கணித வல்லுனராக இருந்தார். அத்துடன் நல்லதொரு வானவியலாளர். மேலும் சமூக ஆர்வலராக, அரசியல் ஞானமுடையவராகவும் இருந்து தனது தகப்பனது நடவடிக்கைகளுக்கு பெரும் உறுதுணையாக இருந்தவர். அணுஆயுதங்களுக்குப் பதிலாக, நீரில் இருந்து சக்தியைப் பிறப்பிக்கக் கூடிய, மாசில்லாத செயல்முறையைக் கண்டுபிடித்திருந்தவர். ஆனாலும், நிபுறுவிரைப் பொறுத்தவரையில் உயர் அறிவியல் நிலையில் இருந்த இவரது கண்டுபிடிப்புகளும், திட்டங்களும் தகப்பனான அனுவினாலும், அவரின் முன்னதாக இருந்த நிபுறுவின் அரசாளரான அலலுவாலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவர்களிருவரும் தங்களது வல்லாதிக்கத்தை அணுஆயுதங்களை மையப்படுத்தியே சிந்தித்துக் கொண்டிருந்ததினால், என்கியின் புதிய பாதுகாப்பான கண்டுபிடிப்புக்களை அவர்கள் கண்டுகொள்ள முடியவில்லை. அதைவிட இன்னொரு சுவாரசியமான விடயமும் இருந்தது.

அதனை அடுத்த தடவையிற் கூறட்டா?
அன்புடன்,
கனி.
 



 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்