கவியரசு கண்ணதாசன் பாடல்களில் நிலையாமைத் தத்துவங்கள்

முனைவர் பூ.மு.அன்புசிவா


ருபதாம் நூற்றாண்டு கண்ட தமிழ்க் கவிஞர்களில் மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், கவியரசர் கண்ணதாசன் ஆகிய மூவரும் தலைசிறந்த கவிஞர்கள் ஆவர்.இந்தப் புகழ்வரிசையில் மூன்றாவதாகத் தோன்றிய கண்ணதாசன் இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் நிலைத்த புகழுடன் விளங்கிக் கொண்டிருக்கிறார். முன்னவர்கள் இருவரும் தங்களது கவிதைகள் மூலமாகப் படித்தவர்களிடமும் அறிஞர்களிடமும் சென்று சேர்ந்தார்கள். ஆனால் கவியரசர் கண்ணதாசனோ படிக்காத பாமரர்களிடமும் சென்று சேர்ந்தார். நாத்திகராக வளர்ந்து ஆத்திகராக மறைந்த கவியரசர் இலக்கியம், அரசியல், ஆன்மீகம், திரைப்படம் என்று எல்லாத் துறைகளிலும் முத்திரை பதித்தவர். 'போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும்' என எதற்கும் யாவர்க்கும் அஞ்சாமல் கவிதைப்பாதையில் சென்று வெற்றி முரசு கொட்டியவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் திகழ்ந்தவர். அவருடைய படைப்புகள் ஏராளம் இருப்பினும் தமிழ்த் திரையிசை உலகில் தனக்கென தனித்ததோர் இடத்தைப் பெற்று நீண்ட காலம் கோலோச்சி வாழ்ந்தவர். எளிமையும், இனிமையும், ஈர்ப்பும் மிக்க தித்திக்கும் தேன் கவிதைகளைத் திரையிசைப் பாடல்களாகத் தந்து திரையிசைப் பாடல்களுக்கு ஓர் தகுதியைத் தந்தவர். புழந்தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள் நன்கு கற்ற தமிழ் அறிஞர்களுக்கு மட்டுமே புரியும். ஆனால், கவிஞரின் கவிதை படிக்காத பாமர மக்கள் மனதிலும் பசுமரத்தாணிப் போலப் பதியும் வகையில் அமைந்திருப்பதால் தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளிலும் இவர் புகழானது இன்றளவும் பேசப்படுகிறது. இவரது திரையிசைப் பாடல்களில் காணலாகும் நிலையாமைத் தத்துவங்களை ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தத்துவ விளக்கம்

தத்துவம் என்பதை ஆங்கிலத்தில்
Philosophy என்பர். தத்துவம் என்பதற்கு உண்மையை அறிதல் என்றும், வாழ்க்கையில் மனிதனுக்கு ஏற்படுகின்ற ஆழ்ந்த சிந்தனையின் விரிவாக்கம் என்றும் பொருள் கூறுவர். வேதாந்தம், சிந்தாந்தம், தத்துவம் இம்மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாகத் தோன்றினாலும் அடிப்படையில் இவை வௌ;வேறானவை. ஆனால், மெய்ப்பொருளை வெளிக் கொண்டு வரும் களமாகவும் தத்துவம் விளங்குகிறது.

பொருளின் தன்மைகளை ஆராய்ந்து மெய்ம்மையினை நிலைநாட்டும் அறிவுக் கலைக்கு தத்துவம் என்று பொருளாகும். எனவே, உண்மை அல்லது உண்மையின் தன்மை பொருந்திய பொருள் தத்துவம் என்று குறிக்கப் பெறுகிறது. 'தௌ;ளத் தெளிந்த தமிழில் உண்மை தெரிந்துரைப்பது கவிதை' என்று கூறுவார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. உண்மையைக் கண்டு உரைக்கும் இலக்கிய கலையே கவிதை என்பது அவருடைய கருத்தாகும்.

ஆண்டவன் எங்கே இருக்கிறான்


நாத்திகருக்கும் எழும் நியாயமான கேள்வி. ஞானிகள் பலரும் பல விதங்களில் விடையறிந்திருக்கிறார்கள். இந்த மகாப் பெரிய தத்துவத்தை நம்போல் சாதாரணருக்கும் விளங்கும் வண்ணம் தௌ;ளத் தெளிவாக விடையளிக்கிறார் நம் கவியரசர்.

'ஆசை, கோபம், களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்
அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம் – இதில்
மிருகம் என்பது கள்ள மனம் – உயர்
தெய்வம் என்பது பிள்ளை மனம் – இந்த
ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்..'


ஆசை, கோபம், களவு என்ற விலக்க வேண்டிய மூன்று கட்டளைகளையும் அன்பு, நன்றி மற்றும் கருணை என்ற கொள்ள வேண்டிய மூன்று கட்டளைகளையும் அறிந்து அவற்றைப் பின்பற்றும் மனங்களே ஆண்டவன் குடியிருக்கும் இல்லங்களென்கிறார் கவியரசு.

மனித வாழ்வு எவ்வளவு நிலையற்றது, அந்த நிலையற்ற வாழ்வை முழுவதும் உணர்ந்து கொள்ளாமல் ஒருவன் வாழும் குறுகிய காலத்தில் எவ்வளவு பாவச் செயல்களைப் புரிகிறான்? எவ்வளவு உணர்ச்சிக் கொந்தளிப்பில் தகாத செயல்களைப் புரிகிறான்? எவ்வளவு அழகாக் கேட்கிறார் பாருங்கள்...

'ஆடிய ஆட்டம் என்ன?
பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன?
திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடுவிட்டு ஆவி போனால்
கூடவே வருவது என்ன?'

யாக்கை நிலையாமை குறித்து மற்றுமொரு பொன்னான தத்துவ வரிகள்.

'ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடி வரும் கூட்டம்
கொள்ளி வரை வருமா?
.................................
விட்டு விடும் ஆவி
பட்டு விடும் மேனி
சுட்டு விடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு..
சூனியத்தில் நிலைப்பு..'

என்ன நிதர்சனமான கேள்வி, கருத்து... வாழ்க்கையின் முடிவை எளிமையான வார்த்தைகளில், மனதில் பதியும் வண்ணம் அழகாகக் கூறியுள்ளார் பாருங்கள். இதுவே முடிவு என்றறிந்தும் மனிதன் போடும் ஆட்டத்திற்கு அளவேயில்லாமல் போகிறதே என்ற வருத்தத்தில் உதிர்ந்த கவி முத்துக்கள் அவை.

குடும்பத்தின் மீது வெருப்புக் கொண்ட நாயகன் பாடுவது போன்ற பாடல் 'பழனி' என்ற திரைப்படத்திலிருந்து. விரக்தி ஆறாய்ப் பெருகி ஓடும் இப்பாடலில்

'பெட்டைக் கோழிக்குக் கட்டுச் சேவலைக்
கட்டி வைத்தவன் யாரடா?
அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்
சோறு போட்டவன் யாரடா?
சோறு போட்டவன் யாரடா?'


என்று கேட்கிறார் கவிஞர். எல்லாம் இயற்கையாய் நடக்கையில் நாம் சாதித்து விட்டது போல நடந்து கொள்ளும் மனித இனத்தின் அறியாமையை எளிமையான உதாரணத்தில் எடுத்துரைப்பதாகக் கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து மனித இனத்தின் பல்வேறு துன்பங்களின் முழுமுதற் காரணமாய் கவிஞர் கூறும் விளக்கத்தைப் பாருங்கள்.

'வளர்த்த குஞ்சுகள் பிரிந்த போதிலும்
வருந்தவில்லையே தாயடா..
மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா....
மனதினால் வந்த நோயடா....


மனதைக் கட்டுப்படுத்தும் வித்தை கற்றவர்களுக்கு வாழ்வியல் துன்பங்கள் எதுவும் பெரிதாகத் தெரிவதில்லை என்பதே முற்றும் உணர்ந்த ஞானிகளின் கூற்றாகும். இதனைத் தெளிவாய் எளிமையாய் வழங்கிய கவியரசைத் தத்துவ ஞானி என்றழைப்பதில் பிழையேதும் உள்ளதோ?

காதல் கனி ரசம்


வாழ்க்கைத்தத்துவங்களைச் சொன்ன அதே கவிஞர் வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சாணியாக விளங்கும் காதலின் மகத்துவத்துவத்தைச் சொல்வதையும் பார்ப்போம். பொதுவாகக் காதலர்கள் காதல் வயப்பட்டுக் கூறுபவை, 'உன் மனம் நானறிவேன்', 'என் மனம் நிறைந்தவளே' போன்ற வாக்கியங்கள். கவிஞர் ஒரு படி மேலே சென்று, பண்பட்ட காதலர்கள் வழியாகச் சொல்வதைப் பாருங்கள்.

'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்
நீ காணும் உலகங்கள் நானாக வேண்டும்'


ஒருவர் மற்றவர் உயிரோடு கலந்து விடும் உன்னத உறவை விளக்கிடும் வரிகள் இவை. காதலர்களுக்கென 'பத்துக் கட்டளைகள்' வரைந்தால் முதலாவதாக இருக்க வேண்டிய கட்டளை மேலே கூறப்பட்ட வரிகள்.
இதே பாடலிலிருந்து தாயுணர்வுக்கு அடுத்தபடியாக நெருக்கமுடைய காதலுணர்வை சொல்லும் மேலும் இருவரிகள்

'மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்
நானாக வேண்டும்.
மடிமீது விளையாடும் சேயாக வேண்டும்
நீயாக வேண்டும்.'

பொதுவாகத் தனிக் கவிதைகளில் இருக்கும் சுதந்திரங்கள் திரைப் பாடல்களில் கிடைப்பதில்லை. சந்த நெறிகளுக்குட்பட்டே சொற்கட்டை அமைக்க வேண்டும். வளைந்து நெளியும் சந்தமெட்டிலும், வார்த்தை ஜாலம் புரிந்து, காதல் ரசம் சொட்டச் சொட்ட ஒரு பாடல். வாழ்வியல் சிக்கல்களினால் அவ்வப்போது காதல் உறவில் சலசலப்புகள் ஏற்பட்டால் இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள். காதுகள் வழியாகத் தென்றலென நுழைந்து இதயத்தை மயிலிறகாய் வருடும் வரிகளால் 'நீயா? நானா?' எனும் நிலை மாறி 'நீயும் நானும்' என்றாகிவிடுவீர்கள்.

அடுத்த பாடலும் காதலரிருவர் ஒருவரை ஒருவர் எப்படி அனுசரித்து இருக்கவேண்டும் என்பதைச் சொல்லும் பாடல்.

'கடலானால் நதியாவேன்;
கணையானால் வில்லாவேன்;
உடலானால் உயிராவேன்;
ஒலியானால் இசையாவேன்.
மொழியானால் பொருளாவேன்;
கிளியானால் கனியாவேன்;
கேள்வியென்றால் பதிலாவேன்;'


இப்பாடலை அவ்வப்போது நீங்கள் கேட்டிருந்தாலும், மேலே சொன்ன வரிகளைக் கூர்ந்து பாருங்கள். ஒன்றில்லாமல் மற்றதில்லை என்ற உண்மையை கவிதைச் சுவையில், கருத்து எளிமையில் காதல் இனிமை சேர்த்து கண்ணதாசன் சொல்லியிருப்பதை அறியலாம்.

காலங்காலமாகப் பெண்களின் சிறப்பம்சங்களாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் பண்புகளைச் சொல்லி வருகிறோம். இவற்றில் நாணம் என்பது காதலுக்கே அழகு சேர்ப்பது. கவிஞரின் கற்பனையில் அது மேலும் அழகு பெறுவதைப் பாருங்கள்.

'உன்னை நான் பார்க்கும்போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும்போது
என்னை நீ பார்க்கின்றாயே.
நேரிலே பார்த்தால் என்ன?
நிலவென்ன தேய்ந்தா போகும்?
புன்னகைப் புரிந்தால் என்ன?
பூமுகம் சிவந்தா போகும்?'
(நேற்று வரை நீ யாரோ, நான் யாரோ)

இதெல்லாம் சரி. கவிஞரின் காதல் பாடல் சிறப்பா அல்லது தத்துவப் பாடல்கள் சிறப்பா? காதல், தத்துவம் என இரண்டிலும் திளைத்து முத்தெடுத்த கண்ணதாசன் காதலுக்குள் தத்துவத்தைப் புகுத்திய பாடல் ஒன்றைக் கீழே காணுங்கள்.

ஏற்கனவே காதலில் தோல்வியுற்ற ஒருவருக்கும், அவரை ஒருதலையாய்க் காதலிக்கும் பெண்ணுக்கும் நடக்கும் வாதத்தில் கவிஞரின் இருமுகங்களையும் ஒரு சேர காணலாம்.

'முனிவன் மனமும் மயங்கும் பூமி
மோக வாசல் தானே
மனம் மூடி மூடிப் பார்க்கும்போதும்
தேடும் பாதை தானே
(பெண்)'

காதல் மோகத்தில் பாடும் காதலிக்கு அவர் கூறும் பதில்

'பாயில் படுத்து நோயில் வீழ்ந்தால்
காதல் கானல் நீரே!
இது மேடு பள்ளம் தேடும் உள்ளம்
போகும் ஞானத்தேரே!
(ஆண்)'

(இது மாலை நேரத்து மயக்கம், இதைக் காதல் என்பது வழக்கம்)

இது போன்ற மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட பாடல் காட்சிகள் தோன்றுவது அரிது. இது போன்ற அரிதான பாடல்களில் தத்துவமும், காதலும் ததும்பும் வரிகளை கண்ணதாசனை விடத் தெளிவுடனும், எளிமையுடனும் சொன்னவரில்லை, இனியும் இருக்கப் போவதுமில்லை.

நிலையாமைத் தத்துவம்


'நிலையாமை' என்பதை மனிதன் தன் இளமைக் காலத்தில் உணர்வதில்லை. அதன் விளைவாகவே அவன் பொன்னும், பொருளும் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறான். அதுவே, ஆசையாகி, வெறியாகி தன் வாழ்நாள் முழுதும் போராடி மாய்கிறான். ஆனால், அறிவார்ந்த அறிவினால் அவன் இவ்வுலகப் பொருளனைத்தும் 'நிலையற்றவை' என்பதை உணரும்போது அறிவில் தெளிவு ஏற்படும்போது, இவ்வுலக ஆசையை விடுத்து வாழ்வில் முக்தி பெற வழி ஏற்படுகிறது. மனிதனின் இளமை, யாக்கை, செல்வம் இவை யாவும் நிலைத்து நிற்பவை அல்ல.

நிலையாமை


'நிலையாமை' என்னும் தத்துவம் இந்து மதத்தில் நிலைத்த ஒன்று. இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை என இம்மூன்றும் வாழ்வில் நிலையில்லாதனவாகும். இத்தத்துவத்தை 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா' என்று 'நீர்க்குமிழி' திரைப்படப் பாடலில் நன்கு உணர்த்தியுள்ளார். இப்பாடல் வரிகளுக்கிணங்க போராடும் மனித சமூகம் இந்த உண்மையை உணர வேண்டும். இந்த உண்மையை உணர்ந்தால்தான் ஒன்றின் இழப்புக்கும், ஒருவரின் இழப்புக்கும் வருந்தும் மனப்பான்மை குறையும். இதுவே, உலக நியதி என்ற தெளிவு பிறக்கும். இத்தகைய தெளிவினை கண்ணதாசனின் தத்துவப்பாடல்கள் உணர்த்துகின்றன. மேலும், பாலும் பழமும் திரைப்படத்தில் 'போனால் போகட்டும் போடா--இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா' என்ற பாடலில் பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும்படி நிலையாமைத் தத்துவத்தை விளக்கியுள்ளார். கவிஞர் பல பாடல்களில் நிலையாமைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். நிலையாமை பற்றி தொல்காப்பியர் காஞ்சித்திணையில் விளக்குகின்றார். 'நில்லா உலகம் புல்லிய தெறித்தே' (தொல்--பொருள் நூ—71) நில உலகம் என்பது நிலையாமைப் பற்றியது ஆகும். இக்கருத்தைப் பல இலக்கியங்களும் வலியுறுத்துகின்றன. மணிமேகலை இளமை, யாக்கை, செல்வம் இவை அனைத்தும் நிலையில்லாதது என்று கூறுகிறது. கால ஓட்டத்தில் மனிதனிடம் எதுவும் நிலைத்து நிற்பதில்லை என்பதே நிலையாமையாகும். இத்தகைய நிலையாமைப் பற்றிய நற்கருத்துகளை திரைப்படப் பாடல்கள் வழி மக்களுக்கு வாழ்க்கைப் பாடத்தை போதித்தவர்.

இளமை நிலையாமை


இளமைக் காலங்கள் மனித வாழ்வில் நிலைத்து நிற்கும் காலம் அல்ல. அது மட்டுமல்லாமல் கால நேரமென்பது நமக்காக காத்திராது. நாம்தான் கால நேரத்தின் தேவையறிந்து வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை

'கொக்கு பார்த்து கற்றுக் கொள்ளு
வாழ்க்கை என்ன என்பதை
கொத்தும் போது கொத்திக் கொண்டு
போக வேண்டும் நல்லதை'

என்ற பாடல் வரிகளில் அறிய முடிகிறது. மேலும், இளமைக் காலம் என்பது மீண்டும் வராது. காலம் கடந்து போகக் கூடியது என்ற வாழ்வியலை வெளிப்படுத்துகிறார் கவியரசர். நாம் செய்து முடிக்க வேண்டிய அறச் செயலைக் குறித்த காலத்தே செய்து முடிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார். காலம் பற்றிய கவிஞரின் கருத்தாக,

'வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்ந்ததேன்
இளமை மீண்டும் வருமா
மணம் பெறுமா. முதுமையே சுகமா
காலம் போகும் பாதையை இங்கே
யார் காணுவார்'


(கண்ணதாசனின் திரையிசைப் பாடல் தொகுதி-ஐஐ. பாடல் 393)

என்ற பாடல் வரிகள் அமைந்துள்ளது. இதே கருத்தை வள்ளுவரும்

'அன்றறிவாம் என்னாதறம் செய்க மற்றது
பொன்னுங்கால் பொன்றாத் துணை'
(குறள் -- 36)

என்ற இக்குறட்பா மூலம் விளக்குகிறார்.

யாக்கை நிலையாமை


மனித உடல் நிலையில்லாதது என்றும், அது எந்த நேரத்திலும் அழியக்கூடியது என்றும் கூறுவர். இதைத்தான் இந்து மதமும், சித்தர் பாடல்களும் வலியுறுத்துகின்றன. பட்டினத்தாரின்,

'விட்டு விடப் போகுதுயிர்
விட்ட வுடனே உடலை
சுட்டு விடப் போகின்றார் சுற்றத்தார்'
(அர்த்தமுள்ள இந்து மதம் தொகுதி-2.ப.15)

என்ற பாடல்கள் பரவலாக பலரால் அறியப்படவில்லை. ஆயினும் அச்செய்தியை,

'விட்டு விடு ஆவி பட்டு விடும் மேனி
சுட்டு விடும் நெருப்பு
சூனியத்தின் நிலைப்பு'


என்ற கண்ணதாசனின் வரிகள் திரைப்பட பாடலாக அறியப்பட்டு பாமரனாலும் பேசப்படுகிறது. இவ்வுலகில் புகழோடும், செல்வாக்கோடும், ஆணவத்தோடும் வாழ்ந்தாலும் இறுதியில் ஒரு பிடி சாம்பல் என்ற தத்துவத்தை 'காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா' (அர்த்தமுள்ள இந்து மதம் தொகுதி -2) இப்பாடலில் வெளிப்படுத்தியுள்ளார். மனிதன் உயிருடன் இருக்கும்போது மனைவி, மக்கள் என்று சொல்லி மகிழ்ச்சியாக வாழ்கிறான். ஆனால், உடலை விட்டு உயிர் பிரியும் போது உயிருக்கு உயிராக இருந்தவர்கள் உடன் செல்லமாட்டார்கள் என்ற நிலையை,

'மனையாளும் மக்களும் வாழ்வும்
தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றமும் மயானம்
மட்டே வழிக் கேது துணை'
(பட்டினத்தார் பாடல்கள் ப.308)

என்ற பட்டினத்தாரின் பாடல் கூறுகிறது. இந்தக் கருத்தினை கவிஞர்,

'வீடுவரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ
ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
கூட வரும் கூட்டம் கொள்ளை வரை வருமா?
தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்கு கன்னி
பட்டினிக்கு தீனி கெட்ட பின்பு ஞானி'


(கண்ணதாசனின் திரையிசைப் பாடல் தொகுதி-1. பாடல் 376)

என்ற பாடல் மூலம் யாக்கை நிலையாமைப் பற்றி நன்கு விளக்கியுள்ளார்.

செல்வம் நிலையாமை


வெல்வத்தைப் பற்றி குறிப்பிடும் போது, வாழ்க்கையில் வசதி படைத்தவர்களுக்கு அவர் வைத்திருக்கும் செல்வம்தான் உறவாகும். செல்வம் இல்லாதவர்களுக்கு நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் மட்டுமே சொந்தம் என்கிறார். இதனை,

'உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம்
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்'


(கண்ணதாசனின் திரையிசைப் பாடல் தொகுதி-2 பாடல் - 417)

என்ற பாடல் வரிகளில் கண்ணதாசன் கூறியுள்ளார். பணம் வைத்திருப்பவர் தன் கையிலிருக்கும் பணத்தைக் கொண்டு மகிழ்வுடன் வாழ்வர். அதே சமயத்தில் பிறருடைய துன்பத்தையோ, ஏழைகளின் வறுமையையோ துளியளவும் எண்ணுவதில்லை. அவனுக்குத் தன்னுடைய செல்வம்தான் சொந்தமென்றும், அதுவே உலகமென்றும் நினைக்கிறான். 'பணம் என்னடா பணம்;: குணம்தான் இந்த உலகத்தில் நிரந்தரமாக இருப்பது. நாம் இவ்வுலகை விட்டு பிரியும் போது பணம் நம்முடன் வருவதில்லை. நாம் பிறருக்கு செய்த அறச் செயலின் பயன் மட்டுமே கூட வரும். ஆனால் மாறாக இவ்வுலக வாழ்வில் செல்வம் இருந்தால்தான் அனைத்து உறவுகளும் இருக்கும். இல்லையென்றால் எந்த உறவும் இருப்பதில்லை என்பதே உண்மையாகும். வள்ளுவரும்,

'அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு'
(குறள் - 247)

என்ற குறளடிகளில் அறிவுறுத்தியுள்ளார். இக்குறட் கருத்தினை கவியரசரும்

'குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே பெத்தபுள்ளே சொந்தமில்லே
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையைப் பங்குவெச்சா சொந்தமில்லே பங்குமில்லே'


என்ற பாடலில் தெளிவுபட கூறியுள்ளார். இதனால் பொருள் உள்ளோர்க்குதான் உறவும் நட்பும் உண்டு என்கிறார். செல்வம் நிலையாமையையும் அது சேர்ந்தால் உறவுகள் அனைத்தும,; கனிகள் இருக்கும் மரத்தைத் தேடி வரும் பறவைகள் போல நாடி வருவர் என்பதை எடுத்துரைக்கிறார்.

கவிஞர் மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர். அதனால்தான் மிகவும் வேதனையான சூழல்களில் கூட அவரிடமிருந்து அமுதம் போலத் தமிழ்ப் பாடல்கள் பொங்கி வந்திருக்கின்றன. அதைக் கேட்கும் ரசிகர்கள் அவர் நீந்திய அந்த சோக நதியில் தாமும் நீந்துவது போன்ற உணர்வையடைகிறார்கள். 'நெஞ்சில் ஓர் ஆலயம்' எனும் படத்திற்காகக் கவிஞர் எழுதிய 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்' எனும் பாடலில் இடம்பெறும்,

'எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்?
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது'


என்ற வரிகள் எத்தனை சத்தியமானவை. கவியரசர் பிறந்தது சிறுகூடல்பட்டியில், ஆனால் இந்த உலகை விட்டு மறைந்ததுவோ எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கப்பால் உள்ள சிக்காகோ நகரில். அவர் எழுதிய வரிகளே அவரது வாழ்விற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ன. கவிஞரின் இதுபோன்ற எத்தனையோ பாடல்களும் கவித்துவமான கவிதைகளும் ஆண்டுகள் பல ஆனாலும் அனைவருடைய மனதையும் விட்டு அகலாது. என்றென்றும் அவை மக்களின் மனதில் நிலைத்திருக்கும்.

தொகுப்புரை:

  • கவிஞர் கண்ணதாசன் திரை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த பாடல்களைப்பாடி மக்களின் உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் புத்துயிர் ஊட்டியவர் இவரே ஆவார்.
     

  • கண்ணதாசனின் ஆழ்ந்த அனுபவங்களும் அவருடைய வாழ்க்கைச் சூழலும், வாழ்க்கையில் எற்பட்ட இன்ன துன்பங்களுமே கவிதை என்னும் வடிவில் தத்துவப் பாடல்களாக வெளிவந்துள்ளன.
     

  • தத்துவத்தின் சித்துக்களை நயம்படப்பாடி மக்களின் செவிக்கும், சிந்தனைக்கும் ஊக்கத்தை அளித்தவர் என்பதை உணர முடிகிறது.
     

  • வாழ்வில் ஏற்படும் தோல்விகளையும், துன்பங்களையும் நினைத்து வருந்தாமல் எதையும் எளிதில் எடுத்துக் கொண்டு வாழ வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

  • உலக நிலையாமையைப் புரிந்துக் கொண்டு, நேரிய வாழ்க்கை வாழ நம்பிக்கையும், தெம்பும் ஊட்டக் கூடியவையாக கவியரசரின் வாழ்வியல் தத்துவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

     

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி, கோவை-641 035

 

 





 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்