எம் ஜி ஆர் ஒரு ஜீவ நதி - 15

 

முனைவர் செ.இராஜேஸ்வரி


சிறுவருக்கும் செவி கொடுங்கள் – எம் ஜி ஆர்

சின்னப்பயலே சின்னப்பயலே
சேதி கேளடா

என்று அரசிளங்குமரியில் பாடி பகுத்தறிவை ஊட்டிய எம் ஜி ஆர்

கேளம்மா சின்னப்பொண்ணு கேளு - உன்
கேள்விக்கு பதிலை சொல்றேன் கேளு

என்று கன்னித்தாயில் பாடி சமதர்மச் சிந்தனையைப் போதித்த எம் ஜி ஆர் அதே சிறுவர்களின் வார்த்தைக்கு மதிப்பளித்தது உண்டு. தன காலத்துக்குப் பிறகும் தன மீதான ரசனையை தாங்கி நிற்பவர்கள் சிறுவர்கள் என்பதால் திரையுலகில் இருந்தபோது எம்ஜிஆர் இரண்டு வயது சிறுவர்களைத் தம்முடைய ரசிகர்களாக வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஆரம்ப காலம் முதல் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். சிறுவர்கள் தன்னை ஹீரோவாக நம்பத் தொடங்கிய நாள் முதல் அவர் அவரளுக்கான கதாபாத்திரங்களை தெரிவு செய்து நடிக்கவும் ஆரம்பித்தார். உத்தமபுத்திரன் போன்ற மாயாஜாலக் கதைகளில் நடிப்பதை அவர் தவிர்த்துவிட்டார். சிறுவருக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் அவர் தனது படக் கதைகளையும் காட்சிகளையும் அமைத்தார்.

குழந்தைகள் பேசத் தொடங்கியதும் இரண்டு வயதிலேயே தன்னுடைய பாடல்களை பல்லவியை பாடக்கூடிய வகையில் ஆர்வமுடையவர்களாக இச்சிறுவர்கள் இருக்க வேண்டும் என்பதில் எம்ஜிஆர் மிகவும் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டார். பாடல் ஆசிரியரிடம் சொல்லி பல்லவியை எளிமையாக எழுதும்படி கூறுவார் இதனால் சிறுவர்கள் தாங்கள் விளையாடும் போதும் தெருக்களிலும் வீடுகளிலும் எம்ஜிஆரின் பல்லவியை பாடி கைகளை மேலும் கீழுமாக உயர்த்தி வீசி எம்ஜிஆரை போலவே நடித்து மகிழ்வதுண்டு. இந்த பாடல்கள் அவர்களை உற்சாகமாக வைத்திருந்தன. இவ்வாறு தன்னுடைய ரசிகர்களை இரண்டு வயது முன் வயது முதல் வளர்த்து வந்த எம்ஜிஆர் அவர்களின் வார்த்தைகளுக்கும் அவர்களின் ஆசாபாசங்களுக்கும் மிகுந்த மதிப்பளித்தார்

என்ன சாப்பிட்டாய்

ஒருநாள் இரவில் தன் ராமாவரம் தோட்டத்து வீட்டில் இருந்து தன் அறையிலிருந்து வெளியே வந்த எம்ஜிஆர் கையில் டார்ச் லைட்டுடன் தன் வீட்டைச் சுற்றி நடந்து . அங்கு அவருடைய பணியாளர்கள் தங்குவதற்கான பணியாளர் குடியிருப்பில் ஒரு வீட்டு வாசலில் இருந்த திண்ணையில் ஒரு சிறுவன் உறங்கிக் கொண்டிருந்தான். அவனை எழுப்பி ‘’எங்கே படிக்கிறாய் என்ன படிக்கிறாய்’ என்று சில கேள்விகளை . அதன் பின்பு ‘’இரவு சாப்பிட்டாயா என்ன சாப்பிட்டாய்’’ என்று கேட்டார். அவனும் பதில் கூறினான். வேறு ஏதும் சாப்பிட வில்லையா என்று கேட்டார். அவன் இல்லை என்று சொல்லி விட்டான். உடனே விறுவிறுவென்று சமையல் அறைக்கு வந்த எம்ஜிஆர் அங்கு உறங்கிக்கொண்டிருந்த சமையல்காரரை எழுப்பி ‘நீ கிளம்பி போ’’ என்று கோபமாகக் கூறினார். அந்த சமையல்காரர் மணி என்பவர் என்ன ஏது என்று தெரியாமலேயே எம்ஜிஆர் சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக கிளம்பிப் போய்விட்டார்.

எம் ஜி ஆரின் வீட்டில் 24 மணி நேரத்திற்கு ஒரு சமையல்காரர் மாறி மாறி வேலை செய்வார்கள். இன்று காலை ஒருவர் வந்தால் மறுநாள் காலை அவர் வீட்டிற்கு போய் விடுவார். அதிகாலை 6 மணி முதல் மறு நாள் காலை 6 மணி வரை அவர் வேலையில் இருப்பார். எம் ஜி ஆர் மணியை வெளியே அனுப்பியதைக் கேட்ட அடுத்த சமையல்காரர் தனது பணிகளை மிகவும் கவனமாக செய்து வந்தார். நட்ட நடு நிசியில் வெளியேற்றப்பட்ட மணி தினமும் எம்ஜிஆர் கிளம்பும்போது எம்ஜிஆர் கார் அருகே வந்து நிற்பார். ஆனால் அவரை பார்க்க மாட்டார் அவரிடம் பேச மாட்டார். மணி வீட்டுக்கு அவருடைய சம்பளம் மட்டும் முறையாகப் போய்க்கொண்டிருந்தது. இவருக்குத் தண்டனை கொடுத்ததால் அவரது குடும்பம் பசியால் வாடக்கூடாதல்லவா அதனால் அவர் எப்போது யாரை வேலையை விட்டு நிறுத்தினாலும் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை அவர்கள் வீட்டில் கொண்டு போய் கொடுத்து விடும்படி சொல்லி விடுவார்.

இது ராமாவரம் தோட்டத்தில் இருந்த ஒரு பழக்கம்


ஒரு நாள் மணி வேக வேகமாக வந்து எம்ஜிஆர் காலில் விழுந்து ‘’ அண்ணே நான் என்ன தவறு செய்தேன் என்று சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன். ஆனால் தினமும் பாராமுகமாக போகாதீர்கள். என்னால் இந்த அவமானத்தை பொறுத்துக்கொள்ள முடியவில்லை’’ என்று கண்ணீர் விட்டார். அப்போது எம்ஜிஆர் ‘’நாம் எதற்காக அல்லும் பகலும் கடுமையாக உழைத்து வேலை செய்கிறோம். இந்த வயிற்றுக்காக தானே. வயிற்றுக்கு நீ வஞ்சகம் செய்யலாமா. ஒரு சிறுவனுக்கு நீ அன்றைக்கு மீன் வறுவல் வைக்காமல் விட்டு விட்டாயே. அது பாவம் இல்லையா. நாம் எல்லோரும் சாப்பிட்டு விட்டு அவனுக்கு மட்டும் அந்த மீனை தராமல் இருப்பது கொடுமை அல்லவா’’ என்றார். அதன் பிறகுதான் மணிக்கு புரிந்தது. தான் அன்று ஒரு பணியாளர் மகனுக்கு மீன் வைக்க மறந்து விட்டது நினைவுக்கு வந்தது. உடனே அவர் ‘’அண்ணே என்னை மன்னித்து விடுங்கள். நான் அன்றைக்கு மறந்து விட்டேன். இனி நான் கவனமாக பரிமாறுவேன். யாருக்கும் எந்த உணவையும் வைக்க மறக்க மாட்டேன்’’ என்று மன்னிப்பு கேட்டார்.பிறகு எம்ஜிஆர் அவரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டார். அன்று முதல் ராமாவரம் தோட்டத்தில் சிறுவர்களுக்கு பரிமாறும் போது ஒவ்வொரு உணவையும் பெயரையும் சொல்லி சொல்லி பரிமாறுவார்கள். தம்பி இது மட்டன்; இது சிக்கன்; இது முட்டை என்று சொல்லி அவர்கள் நினைவில் இருத்துவார்கள். அவர்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காக அப்படிச் சொல்லி பரிமாறுவார்கள். எல்லோருக்கும் சமமான உணவு பரிமாறப்படுகிறது என்பதில் எம்ஜிஆர் கவனமாக இருப்பார். சிறுவனாக இருந்தாலும் அவனது சொல்லுக்கு மதிப்பளித்தவர் எம் ஜி ஆர். சிறுவன் தாணே என்று விட்டுவிடாமல் அவனது சொல்லை கேட்டு எல்லோருக்கும் சமமாகப் பரிமாறப்படாத போது பணியாளர்களைக் கண்டித்து மீண்டும் முறையாக பரிமாறும்படி அவர்களை திருத்துவார்.

ஒரு சிறுவன் தானே அவன் பேச்சை நம்பி பெரியவர்களை கண்டிப்பதா ‘’ஏதோ சாப்பிட்டான் தூங்குகிறான்’’ என்று எம் ஜி ஆர் கருதவில்லை.. பல முதலாளிகள் தாம் கொடுக்கும் சம்பளத்தை ‘’ஏதோ போனால் போகிறது என்று தர்மம் செய்வது போலவே நினைத்து தருகின்ற இந்த உலகத்தில் தன்னுடைய வேலைக்காரனின் மகனும் தன்னைப் போல் நல்ல உணவு உண்ண வேண்டும் என்பதில் எம்ஜிஆர் அக்கறை கொண்டு இருந்தது வியப்பிற்குரியதாகும்.

இதுபோன்ற ஒரு சம்ப்பவம் பெரிய பணியாளருக்கும் நடந்துள்ளது ஒரு மாடு மேய்க்கிற இளைஞனுக்கு பழைய சோறு போட்டார் சமையல்காரர் என்பதற்காக அவன் சமையல்காரரிடம் சத்தம் போட்டான். அந்த சத்தத்தைக் கேட்ட எம்ஜிஆர் உடனே போய் சமையல்காரரை வேலையை விட்டு அனுப்பி விட்டார். அவன் ‘’எனக்கும் எம்ஜிஆர் தான் முதலாளி உனக்கும் எம்ஜிஆர் தான் முதலாளி’’ என்று அவன் கேட்டான். எம் ஜி ஆர் சமையல்காரரிடம் கோபித்து அவனை மட்டும் ஏன் பாரபட்சமாக நடத்துகிறாய் என்று திட்டினார். சிறுவன் பெரியவர் சமையல்காரர் மாட்டு மேய்ப்பவர் பணியாளர் அவர்களின் பிள்ளைகள் எல்லோருக்கும் ஒரீ மாதிரியான உணவு பரிமாறப்பட வேண்டும் என்பதில் எம் ஜி ஆர் கண்டிப்புடன் செயல்பட்டார்.

சிறு வயதில் வயிற்று பாட்டுக்காக நாடகக் கம்பெனியில் சேர்ந்து தாயைப் பிரிந்து தவிர்த்து ஏங்கி நடித்துவந்த துக்கத்தை நினைத்து அவர் தன் வாழ்நாளில் கலங்காத நாள் கிடையாது. எந்த சிறுவனோ சிறுமியோ பசியால் வாடினாலும் வயிற்றுப்பாட்டுக்காக சிரமப்பட்டாலும் அவருக்கு மனம் பொறுப்பதில்லை. ஒருமுறை அவர் கே ஆர் விஜயாவின் கணவர் வேலாயுதம் நாயர் கோழிக்கோட்டில் கட்டியிருந்த ஒரு திரையரங்கத்தை திறந்து வைக்க காரில் போய்க்கொண்டிருந்த போது வழியில் ஒரு சிறுமி வளையத்திற்குள் தன்னை நுழைத்து வெளியே வந்து சர்க்கஸ் செய்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் அவருடைய மனம் வருந்தியது. தன சிறு வயது நாட்கள் அவர் நினைவில் எட்டிப்பார்த்தன. அது கேரளப் பகுதி. அவர் காரை விட்டு உடனே இறங்கி அந்த சிறுமியை அருகில் அழைத்து அவள் கையில் நூறு ரூபாயை கொடுத்து அவளை வாழ்த்தி விட்டுப் புறப்பட்டார். எங்கு சிறுவர்கள் சிரமப்பட்டாலும் அவருக்கு தன்னுடைய இளம் பருவ நாட்கள் நினைவிற்கு வந்து மனதை வாட்டும் அந்தச் சிறுவர்களுக்கு ஏதேனும் உதவி செய்தால் ஒழிய அவர் மனம் அமைதி அடையாது.

எம்ஜிஆர் தாய் இருந்தும் இளம் வயதில் தாயை புரிந்திருந்தார். தந்தையைப் பற்றிய எந்த நினைவும் அவரிடமில்லை. இரண்டு வயதிலேயே அவர் தந்தை இறந்துவிட்டதால் தந்தையின் அன்பை அனுபவிக்கும் பாக்கியம் அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே அவர் தந்தையும் குழந்தையும் அல்லது தந்தையும் தாயும் குழந்தையும் என இருப்பதை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைவார். கணவனும் மனைவியும் இணைந்து செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அவர் சைக்கிளில் டபுள்ஸ் போகும் உரிமையை வழங்கினார். அதுவரை சைக்கிளில் டபுள்ஸ் போவது சட்டப்படி குற்றமாகக் கருதப்பட்டது. தனக்குக் கிடைக்காத இளம்பருவக் குடும்ப வாழ்க்கையை மற்றவர்கள் அனுபவிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.

ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் அன்பும் பொறுப்பும் கொண்டிருந்தால் மட்டுமே அந்தக் குடும்பத்தில் பிள்ளைகள் நல்ல அன்புள்ளமும் உடல் பலமும் கொண்டவர்களாக உருவாவார்கள் என்பது சான்றோர் கருத்து.

இதனை எம் ஜி ஆர் தனது படப் பாடலில்

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்


என்று பாடி இருக்கிறார். ஆக ஒரு குடும்பத்தில் அன்னையும் தந்தையும் சம பங்கும் பொறுப்பும் உடையவர் ஆவர். இவர்களில் ஒருவர் இல்லையென்றாலும் அடுத்தவருக்கு அது இரட்டைச் சுமையாகப் போய்விடும். இதை நன்குணர்ந்த எம் ஜி ஆர் தன பதவிக் காலத்தில் மனைவி வேலை பார்க்கும் இடத்துக்கு கணவரும் வேலை மாற்றல் வாங்கி கொள்ளலாம் என்று ஆணை பிறப்பித்தார். குடும்பம் என்பது கூட்டு வாழ்க்கை ,. தனித்தனியாக வாழ்வது குடும்பம் ஆகாது என்ற கருத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டவர் எம் ஜி ஆர்.

தாய் தந்தையிடமிருந்து பெறுவன


ஆனந்த ஜோதி படத்தில் எம் ஜி ஆர் உடற்கல்வி ஆசிரியராகவும் கமலஹாசன் அவர் பள்ளியில் படிக்கும் மாணவனாகவும் நடித்திருப்பார். அப்போது ஒரு சிறுவன் பள்ளிக் கட்டணம் செலுத்த பணமில்லை என்று எம் ஜி ஆரிடம் வந்து சொல்வான் . எம் ஜி ஆர் பணம் கொடுப்பார். அவன் இதற்கு முன்பு நீங்கள் கொடுத்ததையும் நான் திருப்பி தரவில்லை என்பான். அந்த சிறுவர்கள் போனதும் கமல் எம் ஜி ஆரிடம் பேசும்போது எம் ஜி ஆர் தன பெற்றோரை பற்றி கூறுவார். ‘’என் அப்பா எவ்வளவோ சம்பாதித்தார் அதெல்லாம் எப்படியோ போச்சு. ஆனால் எங்கம்மா எனக்கு நல்லதை எல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க. அதெல்லாம் என் கிட்ட இருக்கு. நீயும் நல்லதை எல்லாம் கத்துக்கோ. அது உன்கிட்டயே இருக்கும்’’ என்பார். இது அவர் வாழ்வில் நடந்தது தான். பெற்றோர் பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்க வேண்டியது சொத்து சுகம் அல்ல. நல்ல நடத்தையை பிறருக்கு உதவும் மனப்பான்மையை, நல்ல கருத்துக்களை, நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அவை காலத்தால் அழியாமல் அவர்கள் உடனிருந்து அவர்களை நல்வழியில் நம்பிக்கையோடு அழைத்துச் செல்லும். இது அவர் வாழ்வில் கண்டுணர்ந்த உண்மை; அவர் படத்திலும் வசனமாக அமைக்கப்பட்டது.

தந்தையை இடம் மாற்றுங்கள்


எம் ஜி ஆர் முதலமைச்சராக இருந்த போது ஒரு சிறுவன் அவருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தான். அந்தக் கடிதத்தில் தன்னுடைய தந்தை வெகு தொலைவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் அவரை தினமும் பார்க்க முடியவில்லை என்றும் வாரம் ஒரு முறை தான் அவரால் வீட்டுக்கு வர முடியும் என்றும் அதனால் தன் தந்தையைப் பிரிந்து தான் வாடுவதாகவும் அவன் ஒரு இன்லண்ட் காகிதத்தில் கடிதம் எழுதி போட்டான். அவன் அக்கடிதத்தில் எம்ஜிஆர் கோட்டை சென்னை என முகவரி எழுதியிருந்தான். இந்தக் கடிதத்தை தபால்காரர் கோட்டையில் சேர்த்துவிட்டார்; கோட்டையில் உள்ள அதிகாரிகள் எம்ஜிஆர் பார்வைக்கு வைத்து விட்டனர்;

எம் ஜி ஆர் கடிதத்தை படித்து திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த குரும்பலூரில் இருந்து இச்சிறுவனின் தந்தையை கரூர் பக்கத்தில் உள்ள பஞ்சப்பட்டிக்கு மாற்றி விட்ட தகவலை அறிந்தார். அவன் கடிதத்தில் ‘’தினசரி அப்பா ராத்திரி வீட்டுக்கு வர்ற மாதிரி வேலை கொடுத்தால் ரொம்ப நல்லா இருக்கும், நானும் ராத்திரி பயமில்லாமல் அழாமல் இருப்பேன்’’ என்று எழுதியிருந்ததைப் படித்ததும் அவர் மனம் வாடியது. தந்தையைப் பிரிந்து வாழ்வதன் சிரமத்தை எம் ஜி ஆர் நன்கு உணர்ந்தவர் என்பதால் அச்சிறுவனின் வேதனையும் கண்ணீரும் அவருக்குப் புரிந்தது.உடனே அச்சிறுவனின் தந்தையை அவர் ஏற்கனவே வேலை பார்த்து வந்த ஊருக்கு மாற்றி விடும்படி பரிந்துரைத்தார். அத்துடன் அவன் இரவில் தனியாக இருப்பது பயமாய் இருந்தது என்று கூறிய காரணத்தையும் அதிகாரிகளைக் கொண்டு கேட்டறிந்தார் அந்த ஊரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் என்பதால் அங்குள்ள பெண்கள் இரவில் பக்கத்து ஊருக்குப் போய் அங்கு உள்ள கிணறுகளில் தண்ணீர் ஊற ஊற இறைத்துக் கொண்டு வருவார்கள். எனவே இச் சிறுவனின் தாய் இரவில் தண்ணீர் கொண்டுவர பக்கத்து ஊருக்கு போவதால் தன் தாய் திரும்பி வரும்வரை இச்சிறுவன் பயந்துகொண்டே தூங்கிக் கொண்டிருக்கும் தன் தம்பிக்கு காவலாக வீட்டில் இருப்பான். இந்த துன்பத்தையும் விசாரித்தறிந்த எம்ஜிஆர் உடனே அந்த ஊரில் உள்ள எல்லா கிணறுகளையும் தூர்வாரச் செய்து ஆழப்படுத்தி அங்கேயே தண்ணீர் கிடைக்கும்படி செய்தார்.

எம் ஜி ஆர் ‘’ஒரு சிறுவன் தானே! அவனுடைய கடிதத்தை எல்லாம் பெரிது படுத்த வேண்டுமா என்று கருதாமல் அந்த கடிதத்தில் சொல்லப்பட்டிருந்த விஷயத்தையும் கடிதம் எழுதியவனின் மனம் பட்ட வேதனையும் தன்னுடைய வேதனையை கருதி அதனை மாற்றி அமைத்தார். இன்றைக்கு கேரள முதல்வரின் ஒரு சிறுமி பெயர் சொல்லி அழைத்ததையும் அவரருகில் சென்று பேசிய செய்தியையும் அறிந்து தமிழகத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்; வியந்து போகின்றனர். ஆனால் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் ஒரு சிறுவன் எழுதிய கடிதத்தை படித்துப் பார்த்து அவர் அவனது குறையைத் தீர்த்து வைத்தார் என்பதை அறியும்போது எம்ஜிஆர் ‘’உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க சிறியவர் என்ற பெரியவர் என்ற பேதம் இன்றி அனைவருக்கும் உதவி செய்வார் என்பதை அறிகிறோம்.

எம் ஜி ஆரின் திரைப்படங்களில்வரும் சிறுவர்கள் அவர் நிஜ வாழ்வில் கண்ட சிறுவர்கள் என அனைவரிடமும் அவர்களின் மதிப்புனர்ந்தவராகவே அவர் நடந்து கொண்டார். சிறுவன் தானே என்று அப்போதும் அவர் அலட்சியப்படுத்தியதில்லை எனவே அவர் படங்களை பார்த்த சிறுவர்கள் இன்று பெரியவர்களான பின்பும் தன பிள்ளைகளுக்கு அவர் படத்தின் சிறப்புக்களை எடுத்துச் சொல்லி அப்படங்களைப் பார்க்க ஊக்கம் அளிக்கின்றனர். இவ்வாறு எம் ஜி ஆர் படங்களின் ரசிகர்கள் தலைமுறை தலைமுறையாக தொடர்கின்றனர். இப்போது சென்னைக்கு அருகில் உள்ள திருநின்றவூரில் எம் ஜி ஆருக்கு கோயில் கட்டி நேர்த்தி கடன் செலுத்தும் நிலைக்கு எம் ஜி ஆர் ரசனை எம் ஜி ஆர் வழிபாடாக உயர்ந்துவிட்டது.

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
என்றும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் – அந்த
ஊருக்கும் எனக்கொரு பேர் இருக்கும்

என்றும் எம் ஜி ஆர் பாடியவை தீர்க்க தரிசன வாக்கியங்களாகி விட்டன.


 


முனைவர் செ.இராஜேஸ்வரி

 

 

 

 



 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்